வாசகர் கேட்கும் கேள்விகள்
எப்போது இயேசு தலைமைக் குருவாக ஆனார், புதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதற்கும், அது அமலுக்கு வந்ததற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
கி.பி. 29-ல் இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, தலைமைக் குருவாக ஆனார். இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இதைக் கொஞ்சம் கவனியுங்கள்: இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, கடவுளுடைய ‘விருப்பம்’ என்கிற அடையாளப்பூர்வ பலிபீடத்தில் தன்னைப் பலியாகக் கொடுப்பதற்கு, தான் தயாராக இருப்பதைக் காட்டினார். (கலா. 1:4; எபி. 10:5-10) இந்த அடையாளப்பூர்வ பலிபீடம், இயேசு ஞானஸ்நானம் எடுத்ததுமுதல் உருவாகியிருந்ததால், ஆன்மீக ஆலயமும் அதுமுதல் உருவாகியிருக்க வேண்டும். (மீட்புவிலையின் அடிப்படையில் தூய்மை வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைத்தான் ஆன்மீக ஆலயம் என்று சொல்கிறோம்.) கடவுளுடைய ‘விருப்பம்’ என்கிற அடையாளப்பூர்வ பலிபீடம்தான், ஆன்மீக ஆலயத்தின் முக்கியமான அம்சம்!—மத். 3:16, 17; எபி. 5:4-6.
அப்படியென்றால், இந்த ஆன்மீக ஆலயத்துக்கு தலைமைக் குரு தேவைப்படுகிறார். அதனால், “கடவுள் தன்னுடைய சக்தியாலும் வல்லமையாலும்” இயேசுவை அபிஷேகம் செய்தார். (அப். 10:37, 38; மாற். 1:9-11) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதற்கு முன்பே தலைமைக் குருவாக அவர் அபிஷேகம் செய்யப்பட்டார் என்று நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்? ஆரோனுடைய உதாரணமும், அவருக்குப் பிறகு தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டவர்களுடைய உதாரணங்களும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்.
திருச்சட்டத்தின்படி, தலைமைக் குரு மட்டும்தான் சந்திப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த அறைக்குள் நுழைந்தார். ஆலயம் கட்டப்பட்டதற்குப் பிறகும், அவர் மட்டும்தான் மகா பரிசுத்த அறைக்குள் நுழைந்தார். இந்த அறைக்கும் பரிசுத்த அறைக்கும் இடையே ஒரு திரைச்சீலை இருந்தது. பாவப் பரிகார நாளில் மட்டும்தான் அந்தத் திரைச்சீலையைத் தாண்டி மகா பரிசுத்த அறைக்குள் தலைமைக் குரு போக முடியும். (எபி. 9:1-3, 6, 7) ஆரோனும், அவருக்குப் பிறகு தலைமைக் குருவாக இருந்தவர்களும், சந்திப்புக் கூடாரத்தில் இருந்த ‘திரைச்சீலையைக் கடந்து’ மகா பரிசுத்த அறைக்குள் போவதற்கு முன்பாகவே அபிஷேகம் செய்யப்பட்டார்கள். அதேபோல், இயேசுவும், தான் இறந்து ‘தன்னுடைய உடலாகிய திரைச்சீலையைக் கடந்து’ பரலோகத்துக்குப் போவதற்கு முன்பாகவே யெகோவாவுடைய ஆன்மீக ஆலயத்தின் தலைமைக் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். (எபி. 10:19) அதனால்தான், இயேசுவை ‘தலைமைக் குரு’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அதோடு, அவர் ‘கையால் செய்யப்பட்ட பூமிக்குரிய கூடாரத்துக்குள் போகவில்லை; அதைவிட பரிபூரணமான பெரிய கூடாரத்துக்குள்ளும்,’ ‘பரலோகத்துக்குள்ளும்’ போயிருக்கிறார் என்றும் சொன்னார்.—எபி. 9:11, 24.
புதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதற்கும், அது அமலுக்கு வந்ததற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? இல்லை! ஏனென்றால், இயேசு பரலோகத்துக்குப் போய் நமக்காகத் தன்னுடைய பரிபூரண மனித உயிரின் மதிப்பைச் சமர்ப்பித்தபோது, புதிய ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக, அதாவது அதைச் சட்டப்பூர்வமாக்குவதற்காக, எடுக்க வேண்டிய மூன்று படிகளில் முதல் படியை எடுத்தார். அதே படிகள்தான், புதிய ஒப்பந்தத்தை அமலுக்கும் கொண்டுவந்தன. அந்த மூன்று படிகள் என்ன?
முதல் படி: யெகோவாவுக்கு முன்னிலையில் இயேசு போனார். இரண்டாம் படி: தன்னுடைய பலியின் மதிப்பை யெகோவாவிடம் சமர்ப்பித்தார். மூன்றாம் படி: இயேசுவின் பலியை யெகோவா ஏற்றுக்கொண்டார். இந்த எல்லா படிகளும் எடுக்கப்பட்டதற்குப் பின்புதான் புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
இயேசுவுடைய பலியின் மதிப்பை யெகோவா எப்போது ஏற்றுக்கொண்டார் என்பதைப் பற்றி பைபிள் திட்டவட்டமாக எதுவும் சொல்வதில்லை. அதனால், புதிய உடன்படிக்கை உறுதி செய்யப்பட்டதும் அமலுக்கு வந்ததும் எப்போது என்பதை நம்மால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆனால், பெந்தெகொஸ்தே நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பே இயேசு பரலோகத்துக்குப் போனார் என்பது நமக்குத் தெரியும். (அப். 1:3) இந்த இடைப்பட்ட காலத்தின் ஏதோவொரு கட்டத்தில் இயேசு தன்னுடைய பலியின் மதிப்பை யெகோவாவிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும், யெகோவாவும் அதை ஏற்றுக்கொண்டார். (எபி. 9:12) புதிய ஒப்பந்தம் ஏற்கெனவே செயல்பட ஆரம்பித்துவிட்டது என்பதற்கான அத்தாட்சியை பெந்தெகொஸ்தே நாளில் தெளிவாகப் பார்க்க முடிந்தது.—அப். 2:1-4, 32, 33.
சுருக்கம்: தலைமைக் குருவான இயேசுவுடைய பலியின் மதிப்பை யெகோவா ஏற்றுக்கொண்டதற்குப் பிறகு, புதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது; அமலுக்கும் வந்தது. அதற்குப் பிறகு, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இந்தப் புதிய ஒப்பந்தத்தின் பாகமாக ஆனார்கள். இயேசுதான் இந்த ஒப்பந்தத்தின் மத்தியஸ்தராக இருக்கிறார்.—எபி. 7:25; 8:1-3, 6; 9:13-15.