உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • விசுவாசிக்கிறவர்களாய் இருப்போமாக
    காவற்கோபுரம்—1999 | டிசம்பர் 15
    • கடவுளுடைய வார்த்தையின் பொருத்தமான உபயோகம்

      6. எபிரெயர் 10:38-ல் உள்ள வசனத்தை பவுல் எதிலிருந்து மேற்கோள் எடுத்துக் காட்டினார்?

      6 வேதவசனங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலமும் பவுல் தன் சக விசுவாசிகளின் விசுவாசத்தை வளர்த்தார். உதாரணமாக, அவர் இவ்வாறு எழுதினார்: “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது.” (எபிரெயர் 10:38) பவுல் இங்கு தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் வார்த்தைகளை மேற்கோளாக குறிப்பிடுகிறார். a இந்த வார்த்தைகள் பவுலின் வாசகர்களாகிய எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். இத்தீர்க்கதரிசன புத்தகத்தை இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். எருசலேமிலும் அதன் அருகிலும் உள்ள கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பலப்படுத்தவே ஏறக்குறைய பொ.ச. 61-ல் பவுல் இக்கடிதத்தை அவர்களுக்கு எழுதினார். ஆகவே, ஆபகூக்கின் உதாரணம் பொருத்தமானதாக இருந்தது. ஏன்?

      7. ஆபகூக் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை எப்போது பதிவு செய்தார், அப்போது யூதாவிலிருந்த நிலைமை என்ன?

      7 பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிந்ததற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆபகூக் அவருடைய புத்தகத்தை எழுதினார். ‘கொடிதும் வேகமுமான ஜாதியான’ கல்தேயர்கள் (அல்லது பாபிலோனியர்கள்) யூதாவின்மீது பாய்ந்து வந்து எருசலேமை அழித்ததையும், ஜனங்களையும் தேசங்களையும் அழித்ததையும் தரிசனத்தில் தீர்க்கதரிசி கண்டார். (ஆபகூக் 1:5-11) ஆனால் இந்த அழிவு ஏசாயாவின் நாளிலிருந்தே, அதாவது ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாகவே முன்னறிவிக்கப்பட்டு வந்தது. ஆபகூக்கின் நாளில் சிறந்த அரசனாக இருந்த யோசியாவிற்குப் பின் யோயாக்கீம் அரசாண்டார். அவருடைய ஆட்சியின்போது யூதாவில் துன்மார்க்கம் மீண்டும் செழித்தோங்கியது. யெகோவாவின் பெயரில் பேசுபவர்களை யோயாக்கீம் துன்புறுத்தி கொலை செய்தான். (2 நாளாகமம் 36:5; எரேமியா 22:17; 26:20-24) “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு யெகோவாவே?” என தீர்க்கதரிசியாகிய ஆபகூக் கடும் வேதனையோடு கேட்டதில் ஆச்சரியமேதுமில்லை.​—ஆபகூக் 1:2, NW.

      8. ஆபகூக்கின் உதாரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் உதவியாக இருப்பது ஏன்?

      8 எருசலேமின் அழிவு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை ஆபகூக் அறியவில்லை. அதைப் போலவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் யூத ஒழுங்குமுறையின் முடிவு எப்போது வரும் என்பதை அறியவில்லை. இன்றும்கூட இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின்மீது யெகோவா கொண்டுவரும் நியாயத்தீர்ப்பின் “அந்த நாளையும் அந்த நாழிகையையும்” நாம் அறியோம். (மத்தேயு 24:36) அப்படியானால், ஆபகூக்கிடம் யெகோவா கொடுத்த இரட்டை விடையை கவனிக்கலாம். முதலாவதாக, குறித்த காலத்தில் முடிவு வரும் என்பதாக தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். மனிதருடைய நோக்குநிலையில் இது தாமதிப்பதைப்போல் தோன்றினாலும் “அது தாமதிப்பதில்லை” என்பதாக கடவுள் சொன்னார். (ஆபகூக் 2:3) இரண்டாவதாக, ஆபகூக்குக்கு யெகோவா இவ்வாறு நினைப்பூட்டினார்: “தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” (ஆபகூக் 2:4) எவ்வளவு அழகான, எளிமையான உண்மைகள்! இதில் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், முடிவு எப்போது வரும் என்பதல்ல, ஆனால் விசுவாசத்துடன் வாழ்க்கையை தொடருகிறோமா என்பதே.

      9. யெகோவாவின் கீழ்ப்படிதலுள்ள ஊழியர்கள் (அ) பொ.ச.மு. 607-ல் (ஆ) பொ.ச. 66-க்குப்பின் தங்களுடைய விசுவாசத்தால் பிழைத்தது எவ்வாறு? (இ) நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவது ஏன் முக்கியம்?

      9 பொ.ச.மு. 607-ல் எருசலேம் சூறையாடப்பட்டபோது, எரேமியா, அவருடைய செயலாளர் பாரூக், எபெத்மெலேக், உண்மையுள்ள ரேகாபியர் போன்றோர் ஆபகூக்குக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கண்டனர். அவர்கள் எருசலேமின் பயங்கர அழிவிலிருந்து ‘பிழைத்தனர்.’ காரணம்? யெகோவா அவர்களுடைய விசுவாசத்திற்கு பலனளித்ததாலே. (எரேமியா 35:1-19; 39:15-18; 43:4-7; 45:1-5) அதேபோல, பொ.ச. 66-ல் ரோம சேனை எருசலேமை தாக்கியபோது, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பவுலின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். எவ்வித காரணமுமின்றி ரோம சேனை பின்வாங்கியதும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் எச்சரிப்புக்கு உண்மையோடு செவிகொடுத்து ஓடிப் போனார்கள். (லூக்கா 21:20, 21) அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக தப்பிப் பிழைத்தனர். அதேபோல் நாமும் முடிவு வரும்வரை விசுவாசத்தைக் காட்டுவோமானால் தப்பிப் பிழைப்போம். நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு என்னே ஓர் இன்றியமையாத காரணம்!

  • விசுவாசிக்கிறவர்களாய் இருப்போமாக
    காவற்கோபுரம்—1999 | டிசம்பர் 15
    • a ஆபகூக் 2:4-ன் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை பவுல் மேற்கோளாக குறிப்பிட்டார். அதில் “எவனாகிலும் பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது” என்ற வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகள் தற்போதுள்ள எந்த எபிரெய கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறதில்லை. செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு இப்பொழுது மறைந்து போய்விட்ட எபிரெய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதாக சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எப்படியிருந்தாலும், கடவுளின் பரிசுத்த ஆவியின் உந்துதலால்தான் பவுல் இந்த வார்த்தைகளை எழுதினார். ஆகவே இது தெய்வீக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்