எல்லா ஜெபங்களுக்கும் கடவுள் ஏன் பதிலளிப்பதில்லை?
இதயத்திலிருந்து நாம் செய்யும் ஜெபங்களைக் கேட்க நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவா ரொம்ப ஆசையாக இருக்கிறார். ஆனால், சில விஷயங்களுக்காக நாம் செய்யும் ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்க மாட்டார். ஏன்? ஜெபம் செய்யும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்? பைபிள் சொல்லும் சில ஆலோசனைகளைக் கவனியுங்கள்.
“ஜெபம் செய்யும்போது . . . சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்.”—மத்தேயு 6:7.
மனப்பாடம் செய்த ஜெபங்களைத் திரும்பத் திரும்ப சொல்வதையோ ஒரு ஜெபப் புத்தகத்திலிருந்து அவற்றை வாசிப்பதையோ யெகோவா விரும்புவதில்லை. இதயத்திலிருந்து நாம் பேச வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உங்கள் நண்பர், சொன்னதையே திரும்பத் திரும்ப உங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? கேட்கவே வெறுப்பாக இருக்கும், இல்லையா? உண்மையான நண்பர்கள் மனந்திறந்து பேசுவார்கள். நம் பரலோகத் தகப்பனிடம் நம் சொந்த வார்த்தைகளில் ஜெபம் செய்யும்போது, அவரை நம்முடைய நண்பராகப் பார்க்க முடியும்.
“நீங்கள் வேண்டிக்கொண்டாலும் கிடைப்பதில்லை; ஏனென்றால், தவறான நோக்கத்துக்காக . . . வேண்டிக்கொள்கிறீர்கள்.”—யாக்கோபு 4:3.
ஒரு விஷயம் கடவுளுக்குப் பிடிக்காது என்று தெரிந்திருந்தும், அதற்காக நாம் ஜெபம் செய்தால், அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. உதாரணத்துக்கு, பேராசைப்படுவதையும், அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைப்பதையும் பற்றித் தெளிவான எச்சரிப்பைக் கடவுள் கொடுத்திருக்கிறார். அப்படியானால், ஒரு சூதாட்டக்காரர் தனக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமென்று ஜெபம் செய்தால், யெகோவா பதில் கொடுப்பாரா? (ஏசாயா 65:11; லூக்கா 12:15) அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிப்பார் என்று கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. நம் ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்க வேண்டுமென்றால், பைபிள் சொல்கிற விஷயங்களுக்கு ஏற்றபடி ஜெபம் செய்ய வேண்டும்.
“ஒருவன் சட்டத்தைக் கேட்க விரும்பாவிட்டால், அவனுடைய ஜெபம் அருவருப்பானதாக இருக்கும்.”—நீதிமொழிகள் 28:9.
பழங்காலத்தில், தன்னுடைய நீதியான சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் செய்த ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்கவில்லை. (ஏசாயா 1:15, 16) இன்றும், இந்த விஷயத்தில் கடவுள் மாறவில்லை. (மல்கியா 3:6) நம் ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்க வேண்டுமென்றால், நாம் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ஒருவேளை, முன்பு ஏதாவது தவறு செய்திருந்தால் யெகோவா நம் ஜெபங்களைக் கேட்க மாட்டாரா? அப்படியில்லை. நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க முயற்சி செய்யும்போது அவர் நம்மை மன்னிப்பார்.—அப்போஸ்தலர் 3:19.