விசுவாசிக்கிறவர்களாய் இருப்போமாக
“நாமோ . . . ஆத்துமாவை உயிரோடு காக்கும் விசுவாசமுடையோர்.” —எபிரெயர் 10:39, NW.
1. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவரின் விசுவாசமும் மதிப்புள்ள ஒன்று என ஏன் சொல்லலாம்?
அடுத்த முறை நீங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு செல்கையில், அங்கு வந்திருப்பவர்களை ஒரு நோட்டமிடுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் விசுவாசத்தை காண்பிக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக யெகோவாவை சேவித்துவருகிறோம் என்பதை தோற்றத்திலேயே பறைசாற்றும் ‘முது’முகங்களை நீங்கள் காணலாம். நண்பர்களின் தூண்டுதல்களுக்கு எதிர்த்து நிற்கும் இளங்காளையரையும் கன்னியரையும் காணலாம். அங்குமிங்கும் இளங்கன்றுகளாய் துள்ளித்திரியும் கடவுள் பயமுள்ள பிள்ளைகளையும் அவர்களுக்காக அரும்பாடுபடும் பெற்றோர்களையும் நீங்கள் காணலாம். மேலும், சுறுசுறுப்பாகவும் இன்முகத்துடனும் சபைக்காக இரவுபகல் பாராமல் உழைத்துவரும் மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும்கூட பார்க்கலாம். ஆக, பெரியோர் சிறியோர் என வித்தியாசமின்றி யெகோவாவின் சேவையில் எல்லாவித கஷ்ட நஷ்டங்களையும் வெற்றிகரமாக சமாளித்துவரும் ஆவிக்குரிய சகோதரர்களையும் சகோதரிகளையும் காண்பதில் நீங்கள் அதிக ஆனந்தமடைவீர்கள். ஒவ்வொருவருடைய விசுவாசமும் மெச்சத்தக்கது!—1 பேதுரு 1:7.
2. எபிரெயர் 10, 11 அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ள பவுலின் ஆலோசனை இன்று நமக்கு ஏன் பிரயோஜனமானது?
2 அப்போஸ்தலனாகிய பவுலைப் போல, விசுவாசத்தின் முக்கியத்துவத்தை வெகுசிலரே நன்கு அறிந்திருக்கின்றனர். அதனால்தான் உண்மையான விசுவாசம் ‘உயிரை காத்துக்கொள்ள’ வழிநடத்துகிறது என்பதாக அவர் அதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். (எபிரெயர் 10:39) விசுவாசமற்ற இந்த உலகில் ஒருவருடைய விசுவாசம் அசைக்கப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் என்பதை பவுல் அறிந்திருந்தார். எருசலேமிலும் யூதேயாவிலும் உள்ள எபிரெய கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற மிகுந்த அக்கறை பவுலுக்கு இருந்தது. ஆகவே அவர்களுடைய விசுவாசத்தைப் பேணி வளர்க்க பவுல் பயன்படுத்திய வழிமுறைகளை எபிரெயர் 10, 11 அதிகாரங்களில் நாம் காணலாம். அதேசமயத்தில் இன்று நம்முடைய விசுவாசத்தையும் மற்றவர்களுடைய விசுவாசத்தையும் எப்படி பலப்படுத்தலாம் என்பதையும் காணலாம்.
மற்றவர்கள்மீது நம்பிக்கை வையுங்கள்
3. பவுல் விசுவாசத்திலிருந்த தன்னுடைய சகோதர சகோதரிகள்மீது நம்பிக்கை வைத்ததை எபிரெயர் 10:39-லிருக்கும் அவருடைய வார்த்தைகள் எவ்வாறு காட்டுகின்றன?
3 நாம் கவனிக்க வேண்டிய முதல் குறிப்பு, பவுல் அந்த கிறிஸ்தவர்கள்மீது வைத்த நம்பிக்கை. அவர் எழுதினார்: “நாமோ அழிவுக்குப் பின்வாங்கிச் செல்வோர் அல்ல. மாறாக, ஆத்துமாவை உயிரோடு காக்கும் விசுவாசமுடையோர்.” (எபிரெயர் 10:39, NW) பவுல் தன்னுடைய உண்மையுள்ள சக ஊழியர்களைப் பற்றி நல்லதையே நினைத்தார், கெட்டதை அல்ல. அவர் ‘நாம்’ என பயன்படுத்தியிருக்கும் சொல்லில் இருந்தே இதை அறிய முடிகிறது. பவுல் ஒரு நீதிமானாக இருந்தார். இருந்தாலும், தன்னை உயர்த்திக்கொண்டு மற்றவர்களை மட்டந்தட்டி பேசவில்லை. (பிரசங்கி 7:16-ஐ ஒப்பிடுக.) மாறாக, அவர்களோடு தன்னையும் இணைத்துப் பேசினார். அவரும் உண்மையுள்ள மற்ற எபிரெய கிறிஸ்தவர்களும் தைரியத்திற்கு சவால்விடும் பிரச்சனைகளை எதிர்ப்படுவார்கள். ஆனாலும், பின்வாங்குபவர்களாக அல்ல விசுவாசமுள்ளவர்களாக நிரூபித்து அழிவிலிருந்து தங்களை காத்துக்கொள்வார்கள் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
4. என்ன காரணங்களுக்காக பவுல் தன் சக விசுவாசிகளிடம் நம்பிக்கை வைத்தார்?
4 பவுல் அந்தளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தது எப்படி? எபிரெய கிறிஸ்தவர்களின் தவறுகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா? நிச்சயமாகவே இல்லை, அவர்களுடைய ஆவிக்குரிய பலவீனங்களை மேற்கொள்வதற்கு திட்டவட்டமான ஆலோசனைகளை கொடுத்து வந்தார். (எபிரெயர் 3:12; 5:12-14; 6:4-6; 10:26, 27; 12:5, 6) பவுல் தன் சகோதரர்களிடம் நம்பிக்கை வைத்திருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு நல்ல காரணங்கள் இருந்தன. (1) பவுல் யெகோவாவைப் பின்பற்றினார். அதாவது, யெகோவா மக்களை நோக்கும் அதேவிதமாக பவுலும் நோக்க முயற்சி செய்தார். அவர்களுடைய தவறுகளை அல்ல, ஆனால் அவர்களுடைய நல்ல குணங்களையே நோக்கினார். மேலும், எதிர்காலத்திலும் நல்லதையே செய்யும் மனப்பான்மை அவர்களுக்கு இருப்பதாகவே நினைத்தார். (சங்கீதம் 130:3; எபேசியர் 5:1) (2) பரிசுத்த ஆவியின் வல்லமையில் பவுலுக்கு முழு நம்பிக்கை இருந்தது. யெகோவாவை உண்மையுடன் சேவிக்க முயற்சி செய்யும் எந்த கிறிஸ்தவருக்கும் அவர் தம்முடைய ‘மகத்துவமுள்ள வல்லமையை’ தருகிறார். எந்தவித இடையூறுகளோ மனித பலவீனங்களோ அவரை தடுத்து நிறுத்த முடியாது என நம்பினார். (2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:13) ஆகவே, தன்னுடைய சகோதர சகோதரிகளிடம் பவுல் காட்டிய நம்பிக்கை தவறானதோ யதார்த்தமற்றதோ அல்லது கண்மூடித்தனமானதோ அல்ல. அதற்கு பலமான காரணம் இருந்தது, வேதப்பூர்வ நியமங்களின் பேரிலும் ஆதாரமிடப்பட்டிருந்தது.
5. பவுலின் நம்பிக்கையை நாம் எவ்வாறு பின்பற்றலாம், எதை எதிர்பார்த்து?
5 பவுல் காட்டிய இந்த நம்பிக்கையை அநேகர் பின்பற்றினர். பவுலின் ஊக்கமூட்டும் பேச்சு எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்த சபைகளில் நல்ல பலனை தந்தது. யூத எதிரிகள் எபிரெய கிறிஸ்தவர்களை துச்சமாகவும் ஏளனமாகவும் உற்சாகத்தை இழக்கச் செய்யும் விதத்திலும் நடத்தினர். இதன் மத்தியில் விசுவாசத்தை காத்துக்கொள்ள தீர்மானமாயிருக்க பவுலின் வார்த்தைகள் அந்த சபையாருக்கு ஏற்ற சமயத்தில் உதவின. இன்று நாமும்கூட ஒருவருக்கொருவர் இவ்விதமாக செய்வோமா? மற்றவர்களின் குறைகளையும் நமக்குப் பிடிக்காத சுபாவங்களையும் பட்டியல் போட்டுக்கொண்டே போவது எளிது. (மத்தேயு 7:1-5) நாம் ஒவ்வொருவருடைய விசுவாசத்தையும் மதித்து நடந்தோமானால் விசுவாசத்தை வளர்ப்பதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம்.—ரோமர் 1:10, 11.
கடவுளுடைய வார்த்தையின் பொருத்தமான உபயோகம்
6. எபிரெயர் 10:38-ல் உள்ள வசனத்தை பவுல் எதிலிருந்து மேற்கோள் எடுத்துக் காட்டினார்?
6 வேதவசனங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலமும் பவுல் தன் சக விசுவாசிகளின் விசுவாசத்தை வளர்த்தார். உதாரணமாக, அவர் இவ்வாறு எழுதினார்: “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது.” (எபிரெயர் 10:38) பவுல் இங்கு தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் வார்த்தைகளை மேற்கோளாக குறிப்பிடுகிறார். a இந்த வார்த்தைகள் பவுலின் வாசகர்களாகிய எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். இத்தீர்க்கதரிசன புத்தகத்தை இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். எருசலேமிலும் அதன் அருகிலும் உள்ள கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பலப்படுத்தவே ஏறக்குறைய பொ.ச. 61-ல் பவுல் இக்கடிதத்தை அவர்களுக்கு எழுதினார். ஆகவே, ஆபகூக்கின் உதாரணம் பொருத்தமானதாக இருந்தது. ஏன்?
7. ஆபகூக் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை எப்போது பதிவு செய்தார், அப்போது யூதாவிலிருந்த நிலைமை என்ன?
7 பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிந்ததற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆபகூக் அவருடைய புத்தகத்தை எழுதினார். ‘கொடிதும் வேகமுமான ஜாதியான’ கல்தேயர்கள் (அல்லது பாபிலோனியர்கள்) யூதாவின்மீது பாய்ந்து வந்து எருசலேமை அழித்ததையும், ஜனங்களையும் தேசங்களையும் அழித்ததையும் தரிசனத்தில் தீர்க்கதரிசி கண்டார். (ஆபகூக் 1:5-11) ஆனால் இந்த அழிவு ஏசாயாவின் நாளிலிருந்தே, அதாவது ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாகவே முன்னறிவிக்கப்பட்டு வந்தது. ஆபகூக்கின் நாளில் சிறந்த அரசனாக இருந்த யோசியாவிற்குப் பின் யோயாக்கீம் அரசாண்டார். அவருடைய ஆட்சியின்போது யூதாவில் துன்மார்க்கம் மீண்டும் செழித்தோங்கியது. யெகோவாவின் பெயரில் பேசுபவர்களை யோயாக்கீம் துன்புறுத்தி கொலை செய்தான். (2 நாளாகமம் 36:5; எரேமியா 22:17; 26:20-24) “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு யெகோவாவே?” என தீர்க்கதரிசியாகிய ஆபகூக் கடும் வேதனையோடு கேட்டதில் ஆச்சரியமேதுமில்லை.—ஆபகூக் 1:2, NW.
8. ஆபகூக்கின் உதாரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் உதவியாக இருப்பது ஏன்?
8 எருசலேமின் அழிவு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை ஆபகூக் அறியவில்லை. அதைப் போலவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் யூத ஒழுங்குமுறையின் முடிவு எப்போது வரும் என்பதை அறியவில்லை. இன்றும்கூட இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின்மீது யெகோவா கொண்டுவரும் நியாயத்தீர்ப்பின் “அந்த நாளையும் அந்த நாழிகையையும்” நாம் அறியோம். (மத்தேயு 24:36) அப்படியானால், ஆபகூக்கிடம் யெகோவா கொடுத்த இரட்டை விடையை கவனிக்கலாம். முதலாவதாக, குறித்த காலத்தில் முடிவு வரும் என்பதாக தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். மனிதருடைய நோக்குநிலையில் இது தாமதிப்பதைப்போல் தோன்றினாலும் “அது தாமதிப்பதில்லை” என்பதாக கடவுள் சொன்னார். (ஆபகூக் 2:3) இரண்டாவதாக, ஆபகூக்குக்கு யெகோவா இவ்வாறு நினைப்பூட்டினார்: “தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” (ஆபகூக் 2:4) எவ்வளவு அழகான, எளிமையான உண்மைகள்! இதில் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், முடிவு எப்போது வரும் என்பதல்ல, ஆனால் விசுவாசத்துடன் வாழ்க்கையை தொடருகிறோமா என்பதே.
9. யெகோவாவின் கீழ்ப்படிதலுள்ள ஊழியர்கள் (அ) பொ.ச.மு. 607-ல் (ஆ) பொ.ச. 66-க்குப்பின் தங்களுடைய விசுவாசத்தால் பிழைத்தது எவ்வாறு? (இ) நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவது ஏன் முக்கியம்?
9 பொ.ச.மு. 607-ல் எருசலேம் சூறையாடப்பட்டபோது, எரேமியா, அவருடைய செயலாளர் பாரூக், எபெத்மெலேக், உண்மையுள்ள ரேகாபியர் போன்றோர் ஆபகூக்குக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கண்டனர். அவர்கள் எருசலேமின் பயங்கர அழிவிலிருந்து ‘பிழைத்தனர்.’ காரணம்? யெகோவா அவர்களுடைய விசுவாசத்திற்கு பலனளித்ததாலே. (எரேமியா 35:1-19; 39:15-18; 43:4-7; 45:1-5) அதேபோல, பொ.ச. 66-ல் ரோம சேனை எருசலேமை தாக்கியபோது, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பவுலின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். எவ்வித காரணமுமின்றி ரோம சேனை பின்வாங்கியதும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் எச்சரிப்புக்கு உண்மையோடு செவிகொடுத்து ஓடிப் போனார்கள். (லூக்கா 21:20, 21) அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக தப்பிப் பிழைத்தனர். அதேபோல் நாமும் முடிவு வரும்வரை விசுவாசத்தைக் காட்டுவோமானால் தப்பிப் பிழைப்போம். நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு என்னே ஓர் இன்றியமையாத காரணம்!
விசுவாசத்தைக் காண்பித்தவர்களின் மாதிரிகளை உயிரோட்டத்தோடு சித்தரித்தல்
10. மோசேயின் விசுவாசத்தை பவுல் எப்படி விவரிக்கிறார், இந்த விஷயத்தில் நாம் எவ்வாறு மோசேயை பின்பற்றலாம்?
10 விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு பவுல் சக்திவாய்ந்த உதாரணங்களையும் பயன்படுத்தினார். நீங்கள் எபிரெயர் 11-ம் அதிகாரத்தை வாசிக்கையில் பைபிள் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்தோடு சித்தரிக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். எடுத்துக்காட்டாக, அவர் மோசேயைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: ‘அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தார்.’ (எபிரெயர் 11:27) வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், அதரிசனமான கடவுளை மோசே பார்த்தார் என்று சொல்லும் அளவுக்கு யெகோவா அவருக்கு நிஜமானவராகவே இருந்தார். நாமும் அந்தளவு நிஜமானவராகவே அவரை நோக்குகிறோமா? யெகோவாவுடன் உள்ள உறவைப் பற்றி பேசுவது எளிது. ஆனால் அந்த உறவை வளர்ப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் உழைப்பு அவசியம். இதைத்தான் நாம் செய்ய வேண்டும்! சிறிய விஷயங்களாக இருந்தாலும் தீர்மானமெடுக்கையில், யெகோவாவை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவர் நமக்கு நிஜமானவராக இருக்கிறாரா? பலமான இந்த விசுவாசம் கொடிய எதிர்ப்பையும்கூட சகித்து நிற்க உதவும்.
11, 12. (அ) எப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் ஏனோக்கின் விசுவாசம் சோதிக்கப்பட்டிருக்கலாம்? (ஆ) என்ன உற்சாகமூட்டும் பரிசை ஏனோக்கு பெற்றார்?
11 ஏனோக்கின் விசுவாசத்தையும் ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவு எதிர்ப்பை அவர் சமாளித்தார். அப்போது வாழ்ந்துவந்த மக்களுக்கு எதிரான சுருக்கென கொட்டும் செய்தியை ஏனோக் சொல்ல வேண்டியிருந்தது. (யூதா 14, 15) இந்த உண்மையுள்ள மனிதரை பயமுறுத்திய துன்புறுத்தல் மிகக் கடுமையானதும் கொடியதாயும் இருந்தது. எனவே, விரோதிகளின் கையில் அகப்படாதபடிக்கு யெகோவா அவருடைய உயிரை ‘எடுத்துக்கொண்டார்.’ ஆகையால், தான் உரைத்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை ஏனோக்கு காண முடியாதபோதிலும் ஒருவிதத்தில் அதைவிட மேலான பரிசைப் பெற்றார்.—எபிரெயர் 11:5; ஆதியாகமம் 5:22-24.
12 பவுல் இவ்விதமாக விளக்குகிறார்: “[ஏனோக்கு] எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே கடவுளுக்கு மிகவும் பிரியமானவர் என்று நற்சான்று பெற்றார்.” (எபிரெயர் 11:5, NW) இது எதை அர்த்தப்படுத்தியது? அவர் நித்திய நித்திரைக்குச் செல்லுவதற்கு முன்பு ஒரு தரிசனத்தை கண்டார். அது ஒருவேளை பரதீஸான பூமியை பற்றியதாக இருக்கலாம். அப்படிப்பட்ட பூமியில்தான் அவரும் ஒரு நாள் உயிரோடு எழுந்திருப்பார். எதுவாயினும், அவருடைய விசுவாசமுள்ள செயல்களால் தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்ததை யெகோவா அவருக்கு தெரியப்படுத்தினார். ஏனோக்கு யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தியிருந்தார். (நீதிமொழிகள் 27:11-ஐ ஒப்பிடுக.) ஏனோக்கின் வாழ்க்கையை சிந்திப்பது மனதைத் தொடுவதாக இல்லையா? அப்படிப்பட்ட விசுவாச வாழ்க்கையை வாழ நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் இப்படிப்பட்டவர்களின் உதாரணங்களை சிந்தித்துப் பாருங்கள். அவர்களை நிஜமான நபர்களாக உங்கள் மனக்கண்முன் கொண்டுவந்து பாருங்கள். எப்போதும் விசுவாசமுள்ள வாழ்க்கையை வாழ தீர்மானமாக இருங்கள். இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காட்டுபவர்கள் கடவுள் எந்த நாளில் அல்லது எப்போது தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதன் அடிப்படையில் யெகோவாவை சேவிப்பதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். மாறாக, நாமோ யெகோவாவை என்றென்றும் சேவிக்க தீர்மானித்திருக்கிறோம்! இப்படிச் செய்தால், இந்தக் காரிய ஒழுங்குமுறையிலும், அதற்கு பின்பும் மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வோம்.
விசுவாசத்தில் பலப்படுவது எப்படி
13, 14. (அ) எபிரெயர் 10:24, 25-ல் உள்ள பவுலின் வார்த்தைகள், நம்முடைய கூட்டங்களை சந்தோஷமான சமயங்களாக்க எப்படி உதவுகின்றன? (ஆ) கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதற்கான முக்கிய காரணம் என்ன?
13 எபிரெய கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் பலப்படுவதற்கு பவுல் அநேக நடைமுறையான வழிகளை காட்டினார். இரண்டு வழிகளை மட்டும் இப்போது சிந்திக்கலாம். முதல் வழி எபிரெயர் 10:24, 25-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள அறிவுரை நமக்கு தெரிந்தபடி, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் ஒன்றுகூடி வருவதை உற்சாகப்படுத்துகிறது. வெறுமனே கூட்டங்களுக்கு வந்து கேட்பதை மட்டும் பவுலின் ஏவப்பட்ட வார்த்தைகள் குறிப்பதில்லை. மாறாக, ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்கும் கடவுளை முழுமையாக சேவிக்க ஒருவரையொருவர் உற்சாகமூட்டுவதற்குமான சந்தர்ப்பங்கள் கூட்டங்களில் கிடைக்கின்றன என்று பவுல் இங்கு விவரிக்கிறார். நாம் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமல்ல, கொடுப்பதற்காகவும் அங்கு செல்கிறோம். மேற்சொல்லப்பட்ட செயல்களே கூட்டங்களை மகிழ்ச்சிக்குரிய சந்தர்ப்பங்களாக்குகின்றன.—அப்போஸ்தலர் 20:35.
14 அதேசமயம், கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்து கொள்வதன் முக்கிய நோக்கம் யெகோவா தேவனை வணங்குவதற்கே. ஜெபத்திலும் பாட்டிலும் கலந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக கவனித்துக் கேட்டு, ‘உதடுகளின் கனியை’ செலுத்துகிறோம். அதாவது, கூட்டங்களில் நம்முடைய குறிப்புகளைச் சொல்லி யெகோவாவுக்கு நம்முடைய துதியை செலுத்துகிறோம். (எபிரெயர் 13:15) இந்த இலக்குகளை மனதில் வைத்து ஒவ்வொரு கூட்டத்திலும் இதை செயலில் காட்டுவோமானால் ஒவ்வொரு முறையும் நம்முடைய விசுவாசம் வளரும் என்பதில் சந்தேகமில்லை.
15. ஊழியத்தை விடாது பற்றியிருக்கும்படி எபிரெய கிறிஸ்தவர்களை பவுல் ஏன் துரிதப்படுத்தினார், அந்த ஆலோசனை இன்றும் ஏன் பொருந்துகிறது?
15 நம்முடைய விசுவாசத்தை வளர்ப்பதற்கு மற்றொரு வழி பிரசங்க வேலையாகும். பவுல் எழுதினார்: “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக் கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.” (எபிரெயர் 10:23) மற்றவர்கள் பிரசங்க வேலையில் மந்தமாக இருக்கக் கண்டால் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நீங்கள் உதவலாம். எபிரெய கிறிஸ்தவர்கள்மீது சாத்தான் நெருக்கடிகளைக் கொண்டுவந்து அவர்கள் ஊழியம் செய்வதை நிறுத்திவிடத் தூண்டினான். இன்றும் கடவுளது மக்களை அவ்வாறே தூண்டுகிறான். அப்படிப்பட்ட நெருக்கடிகளின்போது நாம் என்ன செய்ய வேண்டும்? பவுல் என்ன செய்தார் என்பதை கவனிக்கலாம்.
16, 17. (அ) ஊழியத்தில் பவுல் தைரியத்தைப் பெற்றுக்கொண்டது எவ்வாறு? (ஆ) கிறிஸ்தவ ஊழியத்தின் சில அம்சங்களைக் குறித்து நாம் பயப்பட்டால் என்ன படிகளை மேற்கொள்ள வேண்டும்?
16 தெசலோனிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பி பட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி,” “நம்முடைய தேவனுடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டோம்.” (NW) (1 தெசலோனிக்கேயர் 2:2) பிலிப்பியில் பவுலும் அவருடைய கூட்டாளிகளும் எவ்வாறு ‘நிந்தையடைந்திருப்பார்கள்’? சில கல்விமான்களின் கருத்துப்படி, பவுல் இங்கு பயன்படுத்தியிருக்கும் கிரேக்க பதம் அவமதிப்பாக, வெட்கக்கேடாக, அல்லது கொடூரமாக நடத்தப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. பிலிப்பி பட்டணத்து அதிகாரிகள் அவர்களை தடிகளால் அடித்து, சிறைச்சாலைக்குள் தள்ளி தொழுமரத்தில் மாட்டி வைத்தார்கள். (அப்போஸ்தலர் 16:16-24) அந்த வேதனைமிக்க அனுபவம் பவுலை எவ்வாறு பாதித்தது? அவர் சென்ற அடுத்த பட்டணமான தெசலோனிக்கேயில் பிரசங்கிக்காமல் பயந்து பின்வாங்கினாரா? இல்லை, அவர் ‘தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.’ அவர் பயத்தை மேற்கொண்டு தொடர்ந்து தைரியத்துடன் பிரசங்கித்தார்.
17 பவுலுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது? அவருக்குள்ளிருந்தே வந்ததா? இல்லை, “நம்முடைய தேவனுடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டோம்” என்று அவர் சொன்னார். “தேவன் அவர்களுடைய இருதயத்திலிருந்து பயத்தை எடுத்துப்போட்டார்” என இந்தச் சொற்றொடரை மொழிபெயர்க்கலாம் என்று பைபிள் மொழிபெயர்ப்பாளர்களின் ஒரு நூல் சொல்கிறது. அப்படியானால், உங்களுடைய ஊழியத்தில் பயம் வந்தாலோ அல்லது ஊழியத்தின் சில அம்சங்களில் பயப்பட்டாலோ தைரியமாக தொடர்ந்து ஊழியத்தை செய்வதற்கு மனவலிமையைத் தரும்படி யெகோவாவிடம் ஏன் கேட்கக்கூடாது? உங்கள் இருதயத்திலிருந்து பயத்தை எடுத்துப்போடுவதற்கு அவரிடம் கேளுங்கள். அதோடு நீங்கள் செய்ய வேண்டியவையும் சில இருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் பயப்படும் ஊழியத்தின் அம்சத்தில் அனுபவமுள்ள ஒருவரோடு ஊழியம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். கடைகளுள்ள பகுதியில் ஊழியம் செய்தல், தெரு ஊழியம், சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல், அல்லது தொலைபேசி மூலம் சாட்சி கொடுத்தலை இது உட்படுத்தலாம். எப்படி செய்வது என்பதை உங்களுக்கு உதவிசெய்பவரே முதலில் செய்துகாட்டலாம். அப்படி செய்யும்போது நன்றாக கூர்ந்து கவனித்து, அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அதற்குப்பின் நீங்கள் தைரியத்தோடு பேச முயற்சி செய்யுங்கள்.
18. நம்முடைய ஊழியத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொள்கையில் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்?
18 இவ்வாறு, தைரியத்தை வரவழைத்துக் கொள்கையில் கிடைக்கும் பலனை சிந்தித்துப் பாருங்கள். விட்டுக்கொடுத்துவிடாமல் தொடர்ந்து சோர்வை எதிர்த்து நிற்கும்போது ஊழியத்தில் நல்ல அனுபவங்களை அடைவீர்கள். இல்லையெனில் இவை உங்கள் கைநழுவிப்போகும். (பக்கம் 25-ஐக் காண்க.) உங்களுக்குக் சவாலாக தோன்றிய ஒன்றை செய்து முடிக்கையில் யெகோவாவை பிரியப்படுத்தியிருக்கிறோம் என்ற திருப்தியை அடைவீர்கள். அதுமட்டுமல்ல, பயத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கான உதவியையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள். உங்களுடைய விசுவாசமும் பலப்படும். உங்களுடைய சொந்த விசுவாசத்தை வளர்க்காமல் மற்றவர்களுடைய விசுவாசத்தை வளர்ப்பது முடியாத காரியம்.—யூதா 20, 21.
19. ‘விசுவாசம் உடையவர்களுக்கு’ என்ன மதிப்புமிக்க பரிசு காத்திருக்கிறது?
19 உங்களுடைய விசுவாசத்தையும் மற்றவர்களின் விசுவாசத்தையும் வளர்க்க தொடர்ந்து உழையுங்கள். கடவுளுடைய வார்த்தையை திறமையாக பயன்படுத்துவது, விசுவாசத்திற்கு பேர்பெற்ற பைபிள் உதாரணங்களை படித்து அதை மனத்திரையில் காட்சியாக கண்டு ரசிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தயாரித்து அதில் பங்கு பெறுவது, அதோடு மதிப்புமிக்க சிலாக்கியமாகிய வெளி ஊழியத்தில் தொடர்ந்து பங்கு கொள்வது ஆகியவை விசுவாசத்தை வளர்க்க நமக்கு உதவுகின்றன. இவ்வாறு செய்கையில் நீங்கள் உண்மையில் ‘விசுவாசிக்கிறவர்களாய்’ இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட விசுவாசத்தை காட்டுவோருக்கு மதிப்புமிக்க பலன் காத்திருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். அவர்கள் ‘ஆத்துமாவை உயிரோடு காக்கும் விசுவாசமுடையோர்’ ஆவர். b உங்கள் விசுவாசம் தொடர்ந்து வளரட்டும். யெகோவா தேவன் என்றென்றைக்குமாக உங்களை உயிரோடு காத்துக்கொள்வாராக!
[அடிக்குறிப்புகள்]
a ஆபகூக் 2:4-ன் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை பவுல் மேற்கோளாக குறிப்பிட்டார். அதில் “எவனாகிலும் பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது” என்ற வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகள் தற்போதுள்ள எந்த எபிரெய கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறதில்லை. செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு இப்பொழுது மறைந்து போய்விட்ட எபிரெய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதாக சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எப்படியிருந்தாலும், கடவுளின் பரிசுத்த ஆவியின் உந்துதலால்தான் பவுல் இந்த வார்த்தைகளை எழுதினார். ஆகவே இது தெய்வீக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
b யெகோவாவின் சாட்சிகளுடைய 2000-வது ஆண்டின் வருடாந்தர வசனம் இதுவே: ‘நாம் பின்வாங்குகிறவர்களல்ல, . . . விசுவாசிக்கிறவர்களே.’—எபிரெயர் 10:39.
படித்தது பதிந்திருக்கிறதா?
◻ எபிரெய கிறிஸ்தவர்களிடம் பவுல் எவ்வாறு நம்பிக்கை காட்டினார், இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன?
◻ தீர்க்கதரிசியான ஆபகூக்கின் வார்த்தைகளை பவுல் குறிப்பிட்டது ஏன் பொருத்தமானது?
◻ விசுவாசத்தின் எந்த வேதப்பூர்வ உதாரணங்களை பவுல் உயிரோட்டத்தோடு சித்தரித்தார்?
◻ விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு பவுல் சொன்ன நடைமுறையான ஆலோசனைகள் யாவை?
[பக்கம் 23-ன் படம்]
பிலிப்பியில் பவுலுக்கு ஏற்பட்ட வேதனைமிக்க அனுபவித்திற்குப் பின்பும் தொடர்ந்து பிரசங்கிக்க தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்
[பக்கம் 24-ன் படங்கள்]
வித்தியாசப்பட்ட முறைகளில் சாட்சிகொடுக்க நீங்களும் தைரியத்தை வரவழைத்துக்கொள்ள முடியுமா?