உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு உதவும் மலைப்பிரசங்கத்தை வாசித்துப் பயனடைய தனிப்பட்ட விதமாக நீங்கள் என்ன செய்யலாம்?
ஒவ்வொரு நாளும் அந்த மலைப் பிரசங்கத்திலோ அல்லது சுவிசேஷங்களில் வேறொரு இடத்திலோ காணப்படும் இயேசுவின் அடிப்படை போதனைகளில் ஒன்றை வாசித்துப் பார்க்கலாம். அந்தப் போதனையின் பேரில் தியானித்து அதை உங்கள் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சிக்கையில் மகிழ்ச்சி அதிகமாவதையும் அழுத்தம் குறைவதையும் காண்பீர்கள்.—12/15, பக்கங்கள் 12-14.
• கூடுதலான பொறுப்புக்களை ஏற்கும்படி உதவி ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கு என்ன மூன்று நல்ல காரணங்கள் சபை மூப்பர்களுக்கு இருக்கின்றன?
யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், புதிதாக முழுக்காட்டுதல் பெற்றவர்கள் முன்னேற உதவி செய்வதற்கு பொறுப்புள்ள ஆண்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். பல ஆண்டு காலமாக மூப்பர்களாக சேவித்த சிலர் வயோதிபத்தால் அல்லது சுகவீனத்தால் இப்போது அதிகம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். திறமையுள்ள மூப்பர்கள் சிலர் உள்ளூர் சபை பொறுப்புகளை மட்டுமல்லாமல் மற்ற சபை பொறுப்புகளையும் ஏற்றிருப்பதால் முன்பு போல தங்கள் சபைகளில் அதிகத்தை செய்ய முடியாமல் போய்விடுகிறது.—1/1, பக்கம் 29.
• மக்கள் எவ்வாறு நிஜமல்லாத கடவுட்களில் நம்பிக்கை வைக்கிறார்கள்?
பலர் தங்கள் மதத்திற்குரிய கடவுட்களை வணங்குகிறார்கள், ஆனால் அவை எலியாவின் நாட்களில் வணங்கப்பட்டு வந்த பாகால் தெய்வத்தைப் போலவே இரட்சிக்க முடியாத உயிரற்ற தெய்வங்களாக இருக்கலாம். (1 இராஜாக்கள் 18:26, 29; சங்கீதம் 135:15-17) மற்றவர்கள் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்களை அல்லது விளையாட்டு வீரர்களை இதய தெய்வங்களாக மனதில் வைத்து பூஜிக்கிறார்கள். இவர்களால் எதிர்காலத்திற்கு எந்த உண்மையான நம்பிக்கையையும் அளிக்க முடியாது. மாறாக, யெகோவா நிஜமாகவே இருக்கிறார், தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறார்.—1/15, பக்கங்கள் 3-5.
• கடவுளுடைய எச்சரிப்புக்கு காயீனுடைய பிரதிபலிப்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
தெரிவு செய்யும் சுதந்திரத்தை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார். நன்மை செய்ய விரும்பாத காயீனைப் போல இராமல் சரியானதைச் செய்ய நாம் தெரிவு செய்யலாம். மனந்திரும்பாதவர்களை யெகோவா நியாயந்தீர்க்கிறார் என்பதையும் இந்த பைபிள் பதிவு காண்பிக்கிறது.—1/15, பக்கங்கள் 22-3.
• சுத்தம் ஏன் இப்போது விசேஷமாக முக்கியம்?
சமுதாயத்தில் வாழ்க்கை முறைகள் மாறிவருவதால் அநேகர் வழக்கத்துக்கு மாறாக கொஞ்ச நேரத்தையே வீட்டை சுத்தம் செய்வதற்கு செலவழிக்கின்றனர். உணவு, தண்ணீர் போன்ற விஷயங்களில் சுத்தத்தை அசட்டை செய்வது உடல்நலத்துக்கு ஆபத்து விளைவிக்கலாம். சரீர சுத்தத்தோடு, ஆன்மீக, தார்மீக, மனதின் சுத்தத்துக்கு கவனம் செலுத்தும்படி பைபிள் வலியுறுத்துகிறது.—2/1, பக்கங்கள் 3-6.
• கிறிஸ்தவத்துக்கு முன்னான காலங்களில் வாழ்ந்த சாட்சிகளைக் குறித்து பவுல், “அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாத”வர்கள் என்று சொன்னார். ஏன் எப்படி சொன்னார்? (எபிரெயர் 11:40)
ஆயிர வருட ஆட்சியின்போது, கிறிஸ்துவும் பரலோகத்தில் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவிக்கும் அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களும், உயிர்த்தெழுந்து வருகிறவர்களுக்கு கிரய பலியின் நன்மைகளை பகிர்ந்து அளிப்பார்கள். எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களைப் போன்ற உண்மையுள்ளவர்கள் இவ்விதமாக “பூரண”ராவார்கள்.—2/1, பக்கம் 23.
• “இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே” என்று எபிரெயர்களிடம் பவுல் கூறியபோது, என்ன அர்த்தப்படுத்தினார்? (எபிரெயர் 12:4)
மரணமே வந்தாலும் எதிர்த்து நிற்பதை அவர் அர்த்தப்படுத்தினார். மரணம் வரையில் உண்மையுடன் நிலைத்திருந்தவர்களின் உதாரணங்கள் சரித்திரத்தில் இருந்தன. பவுல் கடிதம் எழுதிய எபிரெய கிறிஸ்தவர்கள் அந்த அளவுக்கு இன்னும் சோதிக்கப்படாவிட்டாலும் அவர்கள் முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவது அவசியம். அவர்கள் எதையும் சகித்துக்கொள்ளும் அளவுக்கு தங்கள் விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்வது அவசியம்.—2/15, பக்கம் 29.
• யெகோவாவின் இரக்கம் அவருடைய நீதியை கட்டுப்படுத்துகிறது என்று சொல்வதைத் தவிர்ப்பது ஏன் நல்லது?
சில மொழிகளில், “கட்டுப்படுத்துவது” என்பது மிதப்படுத்துவதை அல்லது செயல்படவிடாமல் தடுப்பதை அர்த்தப்படுத்தலாம். யெகோவா தேவன் நீதியும் இரக்கமுமுள்ள கடவுள். இந்தக் குணங்களை வெளிப்படுத்தும்போது அவை இரண்டும் இசைவாகவே செயல்படுகின்றன. (யாத்திராகமம் 34:6, 7; உபாகமம் 32:4; சங்கீதம் 116:5; 145:9) யெகோவாவின் நீதியை அவருடைய இரக்கத்தால் தணிக்க அல்லது கட்டுப்படுத்த அவசியம் இல்லை.—3/1, பக்கம் 30.
• ஒரு கிறிஸ்தவன் மரித்த அன்பானவரின் சடலத்தைப் பாதுகாத்து வைப்பது சரியானதா?
மரித்தவரின் சடலத்தை பாதுகாப்பதற்குரிய ஒரு வழி மருந்திட்டு அதை பாதுகாப்பதாகும். பண்டைய காலங்களில் மத நம்பிக்கைகளின் காரணமாக சிலர் இந்தப் பழக்கத்தை பின்பற்றினார்கள். உண்மை வணக்கத்தார் அந்த எண்ணத்தில் செய்ய மாட்டார்கள். (பிரசங்கி 9:5; அப்போஸ்தலர் 24:15) மருந்திட்டு அதை பாதுகாப்பது, உடல் மண்ணோடு மண்ணாவதைத் தாமதப்படுத்துகிறது. (ஆதியாகமம் 3:19) ஆனால் சடலத்தைப் பாதுகாப்பது சட்டமாக இருந்து, குடும்பத்தார் யாராவது பிரியப்பட்டால் அல்லது சவ அடக்கத்திற்காக வெகு தூரத்திலிருந்து சிலர் வர வேண்டியிருந்தால் இவ்வாறு செய்வதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.—3/15, பக்கங்கள் 29-31.
• எல்லா தேசத்தாரையும் கடவுள் வரவேற்கிறார் என்பதை என்ன பைபிள் உதாரணங்கள் நமக்கு கற்பிக்கின்றன?
யெகோவா நினிவே பட்டணத்தாரை எச்சரிக்க யோனா தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர்கள் மனந்திரும்பியபோது அதை ஏற்றுக்கொள்ளும்படி யோனாவை கடவுள் ஊக்கப்படுத்தினார். இயேசு தம் சொல்லிலும் செயலிலும் சமாரியர்களை நேசிக்கும்படி உற்சாகப்படுத்தினார். அப்போஸ்தலர்கள் பேதுருவும் பவுலும் யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிப்பதில் பங்களித்தார்கள். இத்தகைய உதாரணங்களிலிருந்து எல்லா விதமான பின்னணியில் உள்ளவர்களுக்கும் உதவ முயற்சிப்பது அவசியம் என்பதை நாம் தெரிந்துகொள்கிறோம்.—4/1, பக்கங்கள் 21-4.