‘தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடத்தல்’
“நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.”—2 கொரிந்தியர் 5:6.
1. ‘விசுவாசித்து நடத்தல்’ என்பதன் அர்த்தம் என்ன?
கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவுரைக்கு இசைவாக நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு சமயத்திலும், நமக்கு ஓரளவு விசுவாசமாவது இருக்கிறதென்பதை சுட்டிக்காட்டுகிறோம். நாம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் சாட்சி கொடுக்க ஆரம்பிக்கும்போது, அதுவும்கூட விசுவாசம் இருப்பதைக் காட்டுகிறது. நாம் நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, ‘விசுவாசித்து நடப்பதே,’ அதாவது, விசுவாசத்தால் செல்வாக்கு செலுத்தப்படும் வாழ்க்கைப் போக்கை நாடித்தொடருவதே நம்முடைய விருப்பம் என்பதற்கு நாம் அத்தாட்சி அளிக்கிறோம்.—2 கொரிந்தியர் 5:6; கொலோசெயர் 1:9, 10.
2. சபை நடவடிக்கைகளில் பங்கெடுப்பதுதானே ஒருவருக்கு விசுவாசம் இருக்கிறது என்பதற்கு ஏன் அத்தாட்சியல்ல?
2 நாம் உண்மையில் அப்படிப்பட்ட முறையில் வாழப்போகிறோம் என்றால், நன்கு ஆதாரமிடப்பட்டிருக்கும் விசுவாசம் நமக்கு அவசியம். (எபிரெயர் 11:1, 6) யெகோவாவின் சாட்சிகளுடைய உயர்ந்த ஒழுக்க தராதரம், அவர்கள் மத்தியில் காணும் அன்பு ஆகியவற்றின் காரணமாக அநேக மக்கள் அவர்களிடமாக கவர்ந்திழுக்கப்படுகின்றனர். அது ஒரு நல்ல ஆரம்பமே, ஆனால் அப்படிப்பட்ட மக்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை. மற்றவர்களுக்கு விசுவாசத்தில் பலமுள்ளவராக இருக்கும் திருமண துணையோ அல்லது பெற்றோரோ இருக்கலாம். தாங்கள் நேசிக்கிறவர் ஈடுபடும் நடவடிக்கைகள் சிலவற்றில் அவர்களும் பங்குகொள்ளலாம். ஒருவருடைய வீட்டில் அப்படிப்பட்ட செல்வாக்கு இருப்பது உண்மையிலேயே ஆசீர்வாதம்தான். ஆனால் இதுவும்கூட, நாம் கடவுள்மீது வைத்திருக்கும் தனிப்பட்ட அன்பு, தனிப்பட்ட விசுவாசம் ஆகியவற்றின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது.—லூக்கா 10:27, 28.
3. (அ) நன்கு ஆதாரமிடப்பட்ட விசுவாசத்தை நாம் பெற்றிருக்க வேண்டுமென்றால், பைபிளைப் பற்றி தனிப்பட்டவிதமாய் என்ன நம்பிக்கையை நாம் வைத்திருக்க வேண்டும்? (ஆ) பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டது என்பதை ஏன் சிலர் மற்றவர்களைக் காட்டிலும் சீக்கிரத்தில் நம்புகின்றனர்?
3 உண்மையிலேயே விசுவாசித்து நடப்போர் பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதை முழுவதுமாக நம்புகின்றனர். பரிசுத்த வேதாகமம் உண்மையிலேயே “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்பதற்கு ஏராளமான அத்தாட்சி உள்ளது. a (2 தீமோத்தேயு 3:16) ஒரு நபரை நம்பவைப்பதற்கு முன்பு இதில் எவ்வளவு அத்தாட்சியை ஆராய வேண்டும்? அது அவருடைய பின்னணியைப் பொறுத்து இருக்கலாம். ஒருவருக்கு முழுவதுமாய் திருப்தியளிக்கும் விஷயம் மற்றவருக்கு நம்ப முடியாததாய் இருக்கலாம். சிலருடைய விஷயத்தில், மறுக்கமுடியாத அத்தாட்சியை ஏராளமாக ஒருவருக்குக் காண்பித்தாலும், அது சுட்டிக்காட்டும் முடிவை அவர் தொடர்ந்து எதிர்க்கிறவராகவே இருக்கலாம். ஏன்? அவருடைய இருதயத்தில் ஆழமாகப் புதைந்துகிடக்கும் விருப்பங்களே அதற்கு காரணம். (எரேமியா 17:9) இவ்வாறு, ஒரு நபர் கடவுளுடைய நோக்கத்தில் தனக்கு ஆர்வம் இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், இவ்வுலகத்தின் அங்கீகாரத்திற்காக அவருடைய இருதயம் ஏங்கலாம். அவர் பைபிள் தராதரங்களோடு முரண்படும் வாழ்க்கைமுறையை விட்டுவிடுவதற்கு விரும்பாமல் இருக்கலாம். இருப்பினும், எவராவது உண்மையிலேயே சத்தியத்திற்காக பசியார்வமுள்ளவராயும் தன்னைக் குறித்து நேர்மையுள்ளவராயும் மனத்தாழ்மையுள்ளவராயும் இருந்தால் பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதை காலப்போக்கில் உணர்ந்துகொள்வார்.
4. விசுவாசத்தை முயன்று பெறுவதற்கு ஒரு நபரின் பங்கில் என்ன தேவைப்படுகிறது?
4 பைபிளைப் படிப்பதற்கு உதவிபெறும் ஆட்கள், அது கடவுளுடைய வார்த்தை என்பதற்கு அவர்கள் ஏற்கெனவே ஏராளமான அத்தாட்சியை படித்திருப்பதை பெரும்பாலும் சில மாதங்களிலேயே மதித்துணருகிறார்கள். இது யெகோவாவால் போதிக்கப்படுவதற்கு தங்கள் இருதயங்களைத் திறக்கும்படி அவர்களை உந்துவித்தால், அப்போது அவர்களுடைய உள்ளான சிந்தனைகள், அவர்களுடைய விருப்பங்கள், அவர்களுடைய உள்ளெண்ணங்கள் ஆகியவை அவர்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களுக்கேற்ப படிப்படியாக உருப்படுத்தி அமைக்கப்படும். (சங்கீதம் 143:10) ஒரு நபர் தன் “இருதயத்திலே” விசுவாசிக்கிறார் என்று ரோமர் 10:10 சொல்கிறது. அந்த நபர் உண்மையிலேயே எப்படி உணருகிறார் என்பதை அப்படிப்பட்ட விசுவாசம் காண்பிக்கிறது; மேலும் அது அவருடைய வாழ்க்கைப்போக்கிலும் தெளிவாக வெளிப்படுத்தப்படும்.
நன்கு ஆதாரமிடப்பட்டிருந்த விசுவாசத்தின் பேரில் நோவா செயல்பட்டார்
5, 6. நோவாவின் விசுவாசம் எதன்பேரில் சார்ந்திருந்தது?
5 நோவாவுக்கு நன்கு ஆதாரமிடப்பட்டிருந்த விசுவாசம் இருந்தது. (எபிரெயர் 11:7) அதற்கான என்ன ஆதாரம் அவரிடம் இருந்தது? நோவாவிடம் கடவுளுடைய வார்த்தை இருந்தது, எழுத்து வடிவில் அல்ல, ஆனால் கடவுள் அவரிடம் பேசின வடிவில் இருந்தது. ஆதியாகமம் 6:13 சொல்கிறது: ‘தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது [என்றார்].’ யெகோவா ஒரு பேழையைக் கட்டும்படி நோவாவுக்கு கட்டளையிட்டார், அதைக் கட்டுவது சம்பந்தமான விவரங்களையும் அவருக்கு கொடுத்தார். பின்பு கடவுள் கூடுதலாக சொன்னார்: “வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.”—ஆதியாகமம் 6:14-17.
6 அதற்கு முன்பு மழை பெய்திருந்ததா? அதைப் பற்றி பைபிள் சொல்கிறதில்லை. ஆதியாகமம் 2:5 சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர் . . . இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை.” இருப்பினும், நோவாவின் நாளைப் பற்றியல்லாமல், அதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்த காலத்தைப் பற்றி பேசுகையில் பல நூற்றாண்டுகளுக்குப்பின் வாழ்ந்த மோசே இவ்வாறுதான் விஷயங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆதியாகமம் 7:4-ல் காண்பிக்கப்பட்டுள்ளபடி, யெகோவா நோவாவிடம் பேசுகையில் மழையைப் பற்றி குறிப்பிட்டார்; அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை நோவா தெளிவாகவே புரிந்துகொண்டார். எனினும், நோவாவின் விசுவாசம் அவரால் பார்க்க முடிந்தவற்றின்மீதே சார்ந்திருக்கவில்லை. ‘இன்னும் காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்பு’ நோவாவுக்கு கொடுக்கப்பட்டது என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். பூமியின்மீது ‘ஜலப்பிரளயத்தை’ அல்லது, ஆதியாகமம் 6:17-ல் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் அடிக்குறிப்பு சொல்லுகிறபடி, ‘வான சமுத்திரத்தை’ கொண்டுவரப்போவதாக கடவுள் நோவாவிடம் சொன்னார். அந்த நாள் வரையாக அப்படிப்பட்ட காரியம் ஒருபோதும் சம்பவிக்கவில்லை. ஆனால் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்திய ஜலப்பிரளயத்தை கடவுள் உண்மையிலேயே கொண்டுவர முடியும் என்பதற்கு கண்ணுக்குத் தெரிந்த அனைத்து சிருஷ்டிப்பும் நோவாவுக்கு காணப்படாதவைகளின் நிச்சயமாய் இருந்தது. நோவா விசுவாசத்தால் தூண்டப்பட்டு பேழையைக் கட்டினார்.
7. (அ) கடவுள் கட்டளையிட்டிருந்தவற்றை செய்வதற்கு நோவாவுக்கு எது தேவைப்படவில்லை? (ஆ) நோவாவின் விசுவாசத்தை சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் நாம் எவ்வாறு பயனடைகிறோம், நம்முடைய விசுவாசம் எவ்வாறு மற்றவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கக்கூடும்?
7 ஜலப்பிரளயம் எப்போது தொடங்கும் என்ற தேதியை கடவுள் நோவாவிடம் கொடுக்கவில்லை. ஆனால் நோவா அதையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற மனநிலையோடு பேழைக் கட்டுவதையும் பிரசங்கிப்பதையும் தன்னுடைய வாழ்க்கையில் இரண்டாவது இடத்தில் வைக்கவில்லை. போதுமான நேரத்தைக் கொடுத்து, பேழைக்குள் எப்போது செல்ல வேண்டும் என்பதை கடவுள் நோவாவிடம் சொன்னார். இதற்கிடையில், “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.” (ஆதியாகமம் 6:22) நோவா தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடந்தார். அவர் அவ்வாறு நடந்ததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அவருடைய விசுவாசத்தின் காரணமாக நாம் இன்று உயிரோடிருக்கிறோம். நம்முடைய விஷயத்திலும்கூட, நாம் காண்பிக்கும் விசுவாசம், நமக்கு மட்டுமல்ல நம்முடைய பிள்ளைகளுக்கும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் எதிர்காலம் எதை வைத்திருக்கிறது என்பதன் பேரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
ஆபிரகாமின் விசுவாசம்
8, 9. (அ) ஆபிரகாம் தன் விசுவாசத்தை எதன்மீது ஆதாரமாக வைத்திருந்தார்? (ஆ) எந்த விதத்தில் யெகோவா ஆபிரகாமுக்கு ‘தரிசனமானார்’?
8 மற்றொரு உதாரணத்திற்கு, ஆபிரகாமைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். (எபிரெயர் 11:8-10) ஆபிரகாம் எதன்மீது தன் விசுவாசத்தை ஆதாரமாக வைத்திருந்தார்? கல்தேயர் தேசத்தில் அவர் வளர்ந்துவந்த ஊர் என்ற இடத்தில் விக்கிரக ஆராதனையும் பொருளாசைமிக்க சூழ்நிலையும் இருந்தன. ஆனால், மற்ற செல்வாக்குகள் ஆபிரகாமுடைய நோக்குநிலையை உருப்படுத்தி அமைத்தன. நோவாவின் குமாரனாகிய சேம் என்பவரோடு ஆபிரகாம் தொடர்பு வைத்திருந்திருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை; ஆபிரகாமும் சேமும் 150 வருடங்களுக்கு சமகாலத்தவர்களாக இருந்தவர்கள். யெகோவாவே ‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவராகிய உன்னதமான தேவன்’ என்பதை ஆபிரகாம் உறுதியாக நம்பினார்.—ஆதியாகமம் 14:23.
9 ஆபிரகாமின்மீது வேறு ஏதோவொன்று பலமான செல்வாக்கு செலுத்தியது. ‘ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது . . . [யெகோவா] அவனுக்கு தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.’ (அப்போஸ்தலர் 7:2, 3) எந்த முறையில் யெகோவா ஆபிரகாமுக்கு ‘தரிசனமானார்’? ஆபிரகாம் கடவுளை நேரடியாக பார்க்கவில்லை. (யாத்திராகமம் 33:20) என்றபோதிலும், யெகோவா ஆபிரகாமுக்கு ஒரு சொப்பனத்தில், இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மகிமையை வெளிக்காட்டி தரிசனமாகியிருக்க வேண்டும் அல்லது தேவதூதர்களை அனுப்பி தம்மை பிரதிநிதித்துவம் செய்திருக்க வேண்டும். (ஒப்பிடுக: ஆதியாகமம் 18:1-3; 28:10-15; லேவியராகமம் 9:4, 6, 23, 24.) யெகோவா ஆபிரகாமுக்கு தரிசனமளித்த விதம் எதுவாக இருந்தாலும், தனக்கு முன் ஓர் அருமையான சிலாக்கியத்தை கடவுள் வைத்திருந்ததில் அந்த உண்மையுள்ள மனிதருக்கு நம்பிக்கை இருந்தது. ஆபிரகாம் விசுவாசத்துடன் செயல்பட்டார்.
10. யெகோவா எவ்வாறு ஆபிரகாமின் விசுவாசத்தை பலப்படுத்தினார்?
10 கடவுள் அவரை வழிநடத்திக்கொண்டுபோன தேசத்தைப் பற்றிய விவரங்களை அவர் பெற்றிருந்ததன் பேரில் ஆபிரகாமுடைய விசுவாசம் சார்ந்திருக்கவில்லை. அந்தத் தேசம் எப்போது அவருக்கு கொடுக்கப்படும் என்பதை அறிந்துகொள்வதன் பேரிலும் அது சார்ந்திருக்கவில்லை. யெகோவா சர்வவல்லமையுள்ள கடவுள் என்பதை அவர் அறிந்திருந்ததன் காரணமாக அவருக்கு விசுவாசம் இருந்தது. (யாத்திராகமம் 6:3) ஆபிரகாமுக்கு பிள்ளை பிறக்குமென யெகோவா அவரிடம் சொல்லியிருந்தார், ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்று ஆபிரகாம் சில சமயங்களில் ஆச்சரியப்பட்டார். அவருக்கு வயதாகிக்கொண்டிருந்தது. (ஆதியாகமம் 15:3, 4) நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்து, கூடுமானால் அவற்றை எண்ணும்படி சொல்வதன் மூலம் யெகோவா ஆபிரகாமுடைய விசுவாசத்தை பலப்படுத்தினார். “உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” என்று கடவுள் சொன்னார். ஆபிரகாமின் உணர்ச்சிகள் மிகவும் ஆழமாய் தூண்டப்பட்டது. அந்த வியப்பூட்டும் வான்வெளி கோளங்களைப் படைத்தவர் தாம் வாக்குறுதியளித்ததை நிறைவேற்ற முடியும் என்பது வெளிப்படையாய் தெரிந்தது. ஆபிரகாம் “யெகோவாவில் விசுவாசம் வைத்தார்.” (ஆதியாகமம் 15:5, 6, தி.மொ.) ஆபிரகாம் தான் கேட்டுக்கொண்டிருந்ததை வெறுமனே விரும்பினதன் காரணமாக நம்பவில்லை; அவருக்கு நன்கு ஆதாரமிடப்பட்ட விசுவாசம் இருந்தது.
11. (அ) ஆபிரகாம் 100 வயதை நெருங்குகையில், வயதான சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்ற கடவுளின் வாக்குறுதிக்கு அவர் எவ்வாறு பிரதிபலித்தார்? (ஆ) ஆபிரகாம் தன் குமாரனை மோரியா மலைக்கு அழைத்துச்சென்று, அவனை பலியாக கொடுப்பதில் உட்பட்டிருந்த பரீட்சையை எத்தகைய விசுவாசத்தோடு அவர் எதிர்ப்பட்டார்?
11 ஆபிரகாம் 100 வயதையும் அவர் மனைவியாகிய சாராள் 90 வயதையும் நெருங்கியபோது, ஆபிரகாமுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும் சாராள் தாயாவாள் என்றும் தாம் கொடுத்த வாக்குறுதியை யெகோவா மீண்டும் தெரிவித்தார். ஆபிரகாம் தங்களுடைய நிலைமையை யதார்த்தமாக சிந்தித்துப் பார்த்தார். “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.” (ரோமர் 4:19-21) கடவுளுடைய வாக்குறுதி தவறாமல் நிறைவேறும் என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தார். பின்னர், தன் குமாரனாகிய ஈசாக்கை மோரியா தேசத்திற்கு கூட்டிக்கொண்டு போய் அவனை பலியாக கொடுக்கும்படி கடவுள் அவரிடம் சொன்னபோது, தன் விசுவாசத்தின் காரணமாக ஆபிரகாம் கீழ்ப்படிந்தார். (ஆதியாகமம் 22:1-12) அந்த மகன் அற்புதமாய் பிறக்கும்படி செய்த கடவுள், ஆபிரகாமின் சம்பந்தமாக கொடுத்த கூடுதலான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அவனை மீண்டும் உயிரடையச் செய்யமுடியும் என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது.—எபிரெயர் 11:17-19.
12. எவ்வளவு காலம் ஆபிரகாம் தொடர்ந்து விசுவாசித்து நடந்தார், பலமான விசுவாசத்தை வெளிக்காட்டிய அவருக்கும் அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கும் என்ன வெகுமதி காத்திருக்கிறது?
12 ஆபிரகாம் தான் விசுவாசத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருப்பதை வெளிப்படையாய் காண்பித்தார்; வெறுமனே சில சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் காண்பித்தார். ஆபிரகாம் தன் வாழ்நாட்காலத்தின்போது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எந்தவொரு பாகத்தையும் கடவுளிடமிருந்து சுதந்தரமாக பெறவில்லை. (அப்போஸ்தலர் 7:5) இருப்பினும், ஆபிரகாம் சோர்வுற்று கல்தேயருடைய ஊர் நகரத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. கடவுள் வழிநடத்திக்கொண்டு போன தேசத்தில் தன் மரணம் வரை 100 ஆண்டுகள் கூடாரங்களில் வாழ்ந்துவந்தார். (ஆதியாகமம் 25:7) அவரையும் அவருடைய மனைவி சாராளையும் அவர்களுடைய மகன் ஈசாக்கையும் அவர்களுடைய பேரன் யாக்கோபையும் பற்றி எபிரெயர் 11:16 இவ்வாறு சொல்கிறது: “தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.” ஆம், யெகோவா தம் மேசியானிய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியில் அவர்களுக்காக ஓர் இடத்தை வைத்திருக்கிறார்.
13. இன்று யெகோவாவின் ஊழியர்களின் மத்தியில் யார் ஆபிரகாமைப் போன்று விசுவாசத்தைப் பெற்றிருப்பதற்கான அத்தாட்சியை காண்பிக்கின்றனர்?
13 இன்று யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் ஆபிரகாமைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அநேக ஆண்டுகளாக விசுவாசித்து நடந்திருக்கிறார்கள். கடவுள் தரும் பலத்தின் மூலம் அவர்கள் மலைபோன்ற தடைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். (மத்தேயு 17:20) கடவுள் வாக்குறுதியளித்திருக்கும் சுதந்தரத்தை எப்போது அவர் கொடுக்கப்போகிறார் என்பதை அவர்கள் அறியாத காரணத்தால் அவர்கள் விசுவாசத்தில் உறுதியற்று தடுமாறிக்கொண்டில்லை. யெகோவாவின் வார்த்தை தவறாமல் நிறைவேறும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், அவருடைய சாட்சிகள் மத்தியில் இருப்பதை மதிப்புமிக்க சிலாக்கியமாய் கருதுகிறார்கள். நீங்களும் அப்படித்தான் உணருகிறீர்களா?
மோசேயை உந்துவித்த விசுவாசம்
14. மோசேயின் விசுவாசத்திற்கான ஆதாரம் எவ்வாறு போடப்பட்டது?
14 விசுவாசத்திற்கு மற்றொரு முன்மாதிரி மோசே. அவருடைய விசுவாசத்திற்கு ஆதாரமாய் இருந்தது எது? அது சிசுப்பருவத்தில் ஆரம்பமானது. பார்வோனின் மகள், மோசேயை நைல் நதியில் ஒரு நாணல் பெட்டியிலிருந்து கண்டெடுத்து தன் மகனாக ஏற்றபோதிலும், மோசேயின் சொந்த எபிரெய தாயாகிய யோகெபேத், அந்தப் பிள்ளைக்கு பாலூட்டி, அவனுடைய இளம்பிராயத்தில் அவனை பராமரித்து வளர்த்து வந்தார். யோகெபேத் அவனுக்கு நன்றாய் கற்றுக்கொடுத்து, யெகோவாவின் பேரில் அன்பு காட்டுதல், ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதிகளின் பேரில் போற்றுதல் ஆகியவற்றை மனதில் ஆழப்பதிய வைத்தார் என்பது தெளிவாயிருக்கிறது. பின்னர், பார்வோனுடைய வீட்டின் ஓர் அங்கத்தினராக இருந்த மோசேக்கு, ‘எகிப்தியரின் எல்லா ஞானமும் . . . கற்பிக்கப்பட்டது.’ (அப்போஸ்தலர் 7:20-22, தி.மொ.; யாத்திராகமம் 2:1-10; 6:20; எபிரெயர் 11:23, தி.மொ.) மோசேக்கு சிறப்பான ஸ்தானம் இருந்தபோதிலும், அவருடைய இருதயம் கடவுளுடைய அடிமைப்பட்டிருந்த ஜனங்களிடமே இருந்தது.
15. யெகோவாவின் மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் காண்பித்தது மோசேக்கு எதை அர்த்தப்படுத்தியது?
15 மோசே 40 வயதாயிருக்கையில், அநியாயமாக நடத்தப்பட்ட இஸ்ரவேலன் ஒருவனை விடுவிப்பதற்காக ஒரு எகிப்தியனைக் கொன்றுபோட்டார். மோசே எவ்வாறு கடவுளுடைய ஜனங்களை கருதினார் என்பதை இந்தச் சம்பவம் காண்பித்தது. உண்மையாகவே, ‘விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தார்.’ எகிப்து அரண்மனையின் ஓர் அங்கத்தினராக, “அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதை” விடாது தொடருவதற்குப் பதிலாக, தேவனுடைய ஜனங்களோடே துன்பம் அனுபவிப்பதையே தெரிந்துகொள்ள விசுவாசத்தால் தூண்டப்பட்டார்.—எபிரெயர் 11:24, 25; அப்போஸ்தலர் 7:23-25.
16. (அ) யெகோவா மோசேக்கு என்ன பொறுப்பான வேலையைக் கொடுத்தார், கடவுள் எவ்வாறு அவருக்கு உதவி செய்தார்? (ஆ) தன் பொறுப்பை நிறைவேற்றுகையில், மோசே எவ்வாறு விசுவாசத்தைக் காண்பித்தார்?
16 மோசே தன்னுடைய மக்களுக்கு விடுதலையைக் கொண்டுவருவதற்காக நடவடிக்கையெடுக்க ஆவலோடிருந்தார், ஆனால் அவர்களை மீட்பதற்கான கடவுளுடைய நேரம் இன்னும் வரவில்லை. மோசே எகிப்தைவிட்டு ஓடிப்போக வேண்டியதாயிருந்தது. சுமார் 40 வருடங்களுக்குப் பின்பு, இஸ்ரவேலரை அந்தத் தேசத்திலிருந்து அழைத்துவர எகிப்துக்குத் திரும்பிச் செல்லும்படி ஒரு தேவதூதனின் மூலம் யெகோவா மோசேக்கு கட்டளையிடும்வரை அந்த நேரம் வரவில்லை. (யாத்திராகமம் 3:2-10) மோசே எவ்வாறு பிரதிபலித்தார்? இஸ்ரவேலரை விடுவிப்பதற்கு யெகோவாவுக்கு இருந்த வல்லமையை அவர் சந்தேகிக்கவில்லை, ஆனால், கடவுள் தனக்கு கொடுத்திருந்த வேலையை செய்துமுடிப்பதற்கு தகுதியற்றவராய் உணர்ந்தார். மோசேக்குத் தேவைப்பட்ட உற்சாகத்தை யெகோவா அன்புடன் கொடுத்தார். (யாத்திராகமம் 3:11–4:17) மோசேயின் விசுவாசம் பலமடைந்தது. அவர் எகிப்துக்குத் திரும்பிச்சென்று பார்வோனை நேருக்கு நேர் சந்தித்தார்; யெகோவாவை வணங்குவதற்காக இஸ்ரவேலரைப் போகவிட அந்த அரசன் மறுத்தால் எகிப்தின்மீது வாதைகள் வரப்போவதைக் குறித்து திரும்பத் திரும்ப எச்சரித்தார். அந்த வாதைகளைக் கொண்டுவருவதற்கு மோசேயிடம் தனிப்பட்ட வல்லமை இல்லை. அவர் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடந்தார். அவருடைய விசுவாசம் யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் இருந்தது. பார்வோன் மோசேயை மிரட்டினான். ஆனால் மோசே விடாமுயற்சியுடன் இருந்தார். “விசுவாசத்தினாலே அவன், காணமுடியாதவரைக் காண்கிறவன் போல் உறுதியாய்ப் பற்றிக்கொண்டு ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.” (எபிரெயர் 11:27, தி.மொ.) மோசே பரிபூரணமானவராக இல்லை. அவர் தவறுகள் செய்தார். (எண்ணாகமம் 20:7-12) இருப்பினும், கடவுள் அவரிடம் பொறுப்பு ஒப்படைத்த பிறகு, அவருடைய முழு வாழ்க்கைப்போக்கிலும் விசுவாசம் செல்வாக்கு செலுத்தியது.
17. நோவா, ஆபிரகாம், மோசே ஆகியோர் கடவுளுடைய புதிய உலகை காண உயிரோடிருக்கவில்லை என்றாலும், விசுவாசித்து நடப்பது அவர்களுக்கு எதில் விளைவடைந்தது?
17 நோவா, ஆபிரகாம், மோசே ஆகியோரின் விசுவாசம் போன்றே உங்கள் விசுவாசமும் இருப்பதாக. கடவுளுடைய புதிய உலகை அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் காணவில்லை என்பது உண்மைதான். (எபிரெயர் 11:39) அப்போது கடவுளுடைய குறித்த காலம் இன்னும் வராமல் இருந்தது; அவருடைய நோக்கத்தில் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய மற்ற அம்சங்களும் இருந்தன. இருப்பினும், கடவுளுடைய வார்த்தையின்மீது அவர்களுக்கு இருந்த விசுவாசம் தடுமாற்றம் அடையவில்லை, அவர்களுடைய பெயர்கள் கடவுளுடைய ஜீவபுஸ்தகத்தில் இருக்கின்றன.
18. பரலோக வாழ்க்கைக்காக அழைக்கப்பட்டிருப்போருக்கு, விசுவாசித்து நடப்பது ஏன் அவசியமாய் இருந்திருக்கிறது?
18 “மேலான நன்மையொன்றைக் கடவுள் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். அதாவது, பவுலைப் போல் கிறிஸ்துவோடு பரலோக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டிருப்போருக்கு கடவுள் மேலான நன்மையொன்றை முன்னதாக நியமித்திருந்தார். (எபிரெயர் 11:40, தி.மொ.) “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” என்று 2 கொரிந்தியர் 5:6-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வார்த்தைகளை பவுல் எழுதியபோது, முக்கியமாய் அவருடைய மனதில் இருந்தவர்கள் இவர்களே. அது எழுதப்பட்ட சமயத்தில், அவர்களில் ஒருவரும் தங்கள் பரலோக வெகுமதியை அடைந்திருக்கவில்லை. அவர்கள் அதை தங்கள் மாம்ச கண்களால் காணமுடியவில்லை, ஆனால் அதன்மீது அவர்களுக்கு இருந்த விசுவாசம் நன்கு ஆதாரமிடப்பட்டிருந்தது. பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படப் போகிறவர்களில் கிறிஸ்து முதற்பலனாக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தார். அவர் பரலோகத்திற்கு ஏறிச்செல்வதற்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட சாட்சிகள் அவரைப் பார்த்திருந்தனர். (1 கொரிந்தியர் 15:3-8) அந்த விசுவாசத்தால் அவர்களுடைய முழு வாழ்க்கைப்போக்கும் செல்வாக்கு செலுத்தப்பட அவர்களுக்கு போதுமான காரணங்கள் இருந்தன. விசுவாசித்து நடப்பதற்கு நமக்கும்கூட முழுமையான அறிவு மற்றும் அனுபவத்தின் பேரில் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன.
19. எபிரெயர் 1:1, 2 காண்பிக்கிறபடி, கடவுள் யார் மூலம் நம்மிடம் பேசியிருக்கிறார்?
19 எரிந்துகொண்டிருந்த முட்செடியில் ஒரு தேவதூதன் மூலம் மோசேயிடம் பேசியது போல் இன்று யெகோவா தம் மக்களிடம் பேசுவதில்லை. கடவுள் தம்முடைய குமாரனின் மூலம் பேசியிருக்கிறார். (எபிரெயர் 1:1, 2) கடவுள் தம்முடைய குமாரனின் மூலம் சொன்ன காரியங்களை பைபிளில் பதிவுசெய்து வைத்தார்; அது உலகமுழுவதிலுமுள்ள ஜனங்களின் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
20. நோவா, ஆபிரகாம், மோசே ஆகியோருடைய நிலைமையைக் காட்டிலும் நம் நிலைமை ஏன் அதிக சாதகமாயுள்ளது?
20 நோவா, ஆபிரகாம், மோசே ஆகியோரிடம் இருந்ததைவிட நம்மிடம் அதிகம் உள்ளது. நம்மிடம் கடவுளுடைய வார்த்தை முழுமையாக இருக்கிறது—அதில் பெரும்பாலானவை ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. எல்லாவித சோதனைகளை எதிர்ப்படுகையிலும் யெகோவாவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாய் தங்களை நிரூபித்த ஆண்களையும் பெண்களையும் பற்றி பைபிள் சொல்கிற அனைத்தையும் கவனிக்கையில், எபிரெயர் 12:1 இவ்வாறு தூண்டுகிறது: “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” நம்முடைய விசுவாசம் ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. விசுவாசக்குறைவே ‘நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவம்.’ நாம் தொடர்ந்து ‘விசுவாசித்து நடக்கவேண்டுமென்றால்’ கடினமான போராட்டம் தேவைப்படுகிறது.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் பைபிள் கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைப் பாருங்கள்.
உங்கள் குறிப்பு என்ன?
◻ ‘விசுவாசித்து நடப்பதில்’ என்ன உட்பட்டிருக்கிறது?
◻ நோவா விசுவாசம் காண்பித்த விதத்திலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
◻ ஆபிரகாம் விசுவாசத்தை காண்பித்த விதம் நமக்கு எவ்வாறு உதவிசெய்கிறது?
◻ மோசேயை விசுவாசத்துக்கு முன்மாதிரியாக பைபிள் ஏன் சுட்டிக்காட்டுகிறது?
[பக்கம் 10-ன் படம்]
ஆபிரகாம் விசுவாசித்து நடந்தார்
[பக்கம் 10-ன் படம்]
மோசேயும் ஆரோனும் பார்வோனின் முன்பு விசுவாசத்தை வெளிக்காட்டினர்