தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் தருகிறார்!
“கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.”—எபி. 11:6.
1, 2. (அ) அன்பும் விசுவாசமும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன? (ஆ) என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்?
‘கடவுள் முதலில் நம்மீது அன்பு காட்டியிருக்கிறார்.’ அதனால், நாமும் அவர்மீது அன்பு காட்டுகிறோம். (1 யோ. 4:19) நம்மீது அன்பு இருக்கிறது என்பதை யெகோவா பல வழிகளில் காட்டியிருக்கிறார். தன்னுடைய உண்மை ஊழியர்களை அவர் ஆசீர்வதிப்பது, அதில் ஒரு வழி! யெகோவாமீது நமக்கு இருக்கிற அன்பு வளர வளர, அவர்மீது நமக்கு இருக்கிற விசுவாசமும் பலமாகிறது. அதோடு, தன்னை நேசிக்கிறவர்களுக்கு யெகோவா பலன் கொடுப்பார் என்ற நம்முடைய நம்பிக்கையும் பலப்படுகிறது.—எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.
2 யெகோவா பலன் தருகிற கடவுள்! தனக்கு உண்மையோடு இருக்கிறவர்களுக்குப் பலன் தருவது அவருக்கு ரொம்ப முக்கியமாக இருக்கிறது. தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் தருகிறார் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நமக்கு முழுமையான விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தம்! ஏனென்றால், “விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்.” (எபி. 11:1) நமக்கு விசுவாசம் இருந்தால், கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் விஷயங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவோம். தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் தருகிறார் என்று நம்புவதால் நமக்கு என்ன நன்மை? கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, தன்னுடைய ஊழியர்களுக்கு யெகோவா எப்படிப் பலன் தருகிறார்? இதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
தன்னுடைய ஊழியர்களை ஆசீர்வதிப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார்
3. மல்கியா 3:10-ல் என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது?
3 தனக்கு உண்மையோடு இருக்கிறவர்களை ஆசீர்வதிப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்படி அவர் நம்மை அழைக்கிறார். அவர் நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நாம் நம்ப வேண்டுமென எதிர்பார்க்கிறார். “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று என்னைச் சோதித்துப் பாருங்கள்” என்று அவர் சொல்கிறார். (மல். 3:10) தன்னைச் சோதித்துப் பார்க்கும்படி யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற அழைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாம் அவருக்கு நன்றியோடு இருக்கலாம்.
4. மத்தேயு 6:33-ல் இயேசு கொடுத்திருக்கும் வாக்குறுதியை ஏன் நம்பலாம்?
4 தன்னுடைய சீடர்கள் கடவுளுடைய அரசாங்கத்தை முதலிடத்தில் வைத்தால், கடவுள் அவர்களை ஆதரிப்பார் என்று இயேசு வாக்குக் கொடுத்தார். (மத்தேயு 6:33-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நடக்கும் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்ததால்தான் அவரால் அப்படி வாக்குக் கொடுக்க முடிந்தது. (ஏசா. 55:11) நாமும் யெகோவாமீது முழு விசுவாசம் வைக்கும்போது, “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று யெகோவா கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நம்புவோம். (எபி. 13:5) மத்தேயு 6:33-ல் இயேசு கொடுத்த வாக்குறுதியை நம்புவதற்கு யெகோவாவின் வாக்குறுதி நமக்கு உதவுகிறது.
5. பேதுருவுக்கு இயேசு கொடுத்த பதில் நம்மை உற்சாகப்படுத்துகிறது என்று ஏன் சொல்லலாம்?
5 “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று அப்போஸ்தலன் பேதுரு ஒரு தடவை இயேசுவிடம் கேட்டார். (மத். 19:27) அப்படிக் கேட்டதற்காக இயேசு அவரைக் கண்டிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் தியாகங்களுக்கான பலன் அவர்களுக்குக் கிடைக்கும் என்று சொன்னார். அப்போஸ்தலர்களும் உண்மையுள்ள மற்றவர்களும் எதிர்காலத்தில் இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள். ஆனால், இப்போதே நிறைய பலன்கள் இருக்கின்றன. “என் பெயரை முன்னிட்டு வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தகப்பனையோ தாயையோ பிள்ளைகளையோ நிலங்களையோ தியாகம் செய்கிற எவரும், பல மடங்காக அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள், முடிவில்லா வாழ்வையும் பெற்றுக்கொள்வார்கள்” என்று சொன்னார். (மத். 19:29) இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாருக்கும் சபையில் அப்பாக்களும், அம்மாக்களும், சகோதரர்களும், சகோதரிகளும், பிள்ளைகளும் கிடைப்பார்கள். கடவுளுடைய அரசாங்கத்துக்காக நாம் செய்யும் எந்தத் தியாகத்தையும்விட இது அதிக மதிப்புள்ளது, இல்லையா?
“நம் உயிருக்கு நங்கூரம் போன்றது”
6. தன்னுடைய ஊழியர்களுக்குப் பலன் தருவதாக யெகோவா ஏன் வாக்குக் கொடுத்திருக்கிறார்?
6 தன்னுடைய ஊழியர்களுக்குப் பலன் தருவதாக யெகோவா ஏன் வாக்குக் கொடுத்திருக்கிறார்? நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படும்போது நாம் சகித்திருக்க வேண்டும் என்பதற்காக அப்படி வாக்குக் கொடுத்திருக்கிறார். இப்போது, நாம் நிறைய ஆன்மீக ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். அதோடு, எதிர்காலத்திலும் பெரிய பெரிய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். (1 தீ. 4:8) ‘தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் அளிக்கிறார்’ என்ற வாக்குறுதியில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. விசுவாசத்தில் உறுதியாக இருக்க இது நமக்கு உதவுகிறது.—எபி. 11:6.
7. நம்பிக்கை எப்படி நங்கூரம் போல இருக்கிறது?
7 “மனமகிழ்ந்து ஆனந்தத்தில் துள்ளிக் குதியுங்கள், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மாபெரும் பலன் கிடைக்கும்; உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் அப்படித்தான் துன்புறுத்தினார்கள்” என்று தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்னார். (மத். 5:12) கடவுளுடைய ஊழியர்களில் சிலர், பரலோகத்தில் தங்களுடைய பலனைப் பெறுவார்கள். மற்றவர்களோ, பூஞ்சோலை பூமியில் தங்களுடைய பலனைப் பெறுவார்கள். ‘மனமகிழ்ந்து ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பதற்கு’ இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது! (சங். 37:11; லூக். 18:30) நமக்குப் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, நம் எல்லாருக்கும் நம்முடைய நம்பிக்கைதான் ‘உயிருக்கு நங்கூரம் போல’ இருக்கிறது. அந்த நம்பிக்கை “உறுதியானது, நம்பகமானது.” (எபி. 6:17-20) ஒரு நங்கூரம் எப்படிப் படகைப் புயல் காற்றிலிருந்து பாதுகாக்கிறதோ, அதே போல, பலமான நம்பிக்கை உணர்ச்சி ரீதியிலும், மன ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் உறுதியாக இருக்க நமக்கு உதவுகிறது. அதோடு, பிரச்சினைகளைச் சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தையும் தருகிறது.
8. கவலைகளைச் சமாளிக்க நம்பிக்கை எப்படி உதவுகிறது?
8 கவலைகளைச் சமாளிக்க நம்பிக்கை நமக்கு உதவுகிறது. தைலம் எப்படி நம்முடைய உடம்புக்கு இதமாக இருக்கிறதோ, அதே போல, கடவுளுடைய வாக்குறுதிகள், கவலையோடு இருக்கிற நம் மனதுக்கு இதமாக இருக்கின்றன. “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என்ற வார்த்தைகள் நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கின்றன! (சங். 55:22) கடவுளால் ‘நாம் கேட்பதைவிட பல மடங்கு அதிகமாக’ செய்ய முடியும் என்று நாம் முழுமையாக நம்பலாம். (எபே. 3:20) யெகோவா நமக்கு எப்படி உதவி செய்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். அதிகமாகவோ அதைவிட அதிகமாகவோ அல்ல, அதையும்விட ‘பல மடங்கு அதிகமாக’ உதவி செய்கிறார்!
9. யெகோவாவின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?
9 பலனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், யெகோவாமீது நாம் முழு விசுவாசம் வைக்க வேண்டும். அதோடு, அவருடைய வழிநடத்துதல்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். ‘இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று மோசே இஸ்ரவேல் மக்களிடம் சொன்னார். (உபா. 15:4-6) யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையோடு சேவை செய்யும்போது, அவருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்குமென்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அப்படி நம்புவதற்கு, உங்களுக்கு நல்ல காரணம் இருக்கிறது.
யெகோவா அவர்களுக்குப் பலன் தந்தார்
10, 11. யோசேப்புக்கு யெகோவா எப்படிப் பலன் தந்தார்?
10 நம்முடைய நன்மைக்காகத்தான் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது. அன்று வாழ்ந்த உண்மை ஊழியர்களுக்குக் கடவுள் எப்படிப் பலன் தந்தார் என்பதைப் புரிந்துகொள்ள பைபிளில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. (ரோ. 15:4) யோசேப்பு, அதில் மிகச் சிறந்த உதாரணம்! முதலில், அவருடைய சகோதரர்கள் அவரை அடிமையாக விற்றார்கள். பிறகு, யோசேப்புடைய எஜமானரின் மனைவி, அவர்மீது அபாண்டமாகப் பழி போட்டாள்; அதனால், அவர் எகிப்திலிருந்த சிறையில் தள்ளப்பட்டார். அவர் சிறையிலிருந்த சமயத்தில், யெகோவாவிடம் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தாரா? இல்லவே இல்லை! ‘கர்த்தர் யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை’ காட்டினார் என்று பைபிள் சொல்கிறது. அதோடு, ‘கர்த்தர் அவனோடே இருந்தார், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார்’ என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதி. 39:21-23) அந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும், யெகோவா தனக்கு உதவுவார் என்று யோசேப்பு பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார்.
11 சில வருடங்களுக்குப் பிறகு, பார்வோன் யோசேப்பைச் சிறையிலிருந்து விடுதலை செய்து, மனத்தாழ்மையான இந்த அடிமையை எகிப்தின் இரண்டாவது ஆட்சியாளராக நியமித்தான். (ஆதி. 41:1, 37-43) யோசேப்புக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. “என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.” (ஆதி. 41:51, 52) யோசேப்பின் உண்மைத்தன்மைக்கு யெகோவா பலன் தந்தார். பஞ்ச காலத்தில், இஸ்ரவேலர்களுடைய உயிரையும் எகிப்தியர்களுடைய உயிரையும் யோசேப்பு காப்பாற்றினார். யெகோவாதான் தனக்குப் பலனையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்தார் என்று யோசேப்பு நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.—ஆதி. 45:5-9.
12. பல சோதனைகளின் மத்தியிலும் இயேசு எப்படி யெகோவாவுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்து நடந்தார்?
12 இயேசுவும் பல சோதனைகளின் மத்தியிலும் யெகோவாவுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்து நடந்தார். அதனால், யெகோவா அவருக்குப் பலன் தந்தார். கடவுளுக்கு உண்மையோடு இருக்க இயேசுவுக்கு எது உதவியது? அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “தம்முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக அவமானத்தைப் பொருட்படுத்தாமல் கழுமர வாதனையைச் சகித்தார்.” (எபி. 12:2) யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த முடிந்ததை நினைத்து இயேசு நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார். தன்னுடைய அப்பாவின் அங்கீகாரமும் அருமையான பல பொறுப்புகளும் அவருக்குக் கிடைத்தன; அதன் மூலம் அவருடைய உண்மைத்தன்மைக்குப் பலன் கிடைத்தது. இயேசு “கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்” என்று பைபிள் சொல்கிறது. அதோடு, “கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தி, மற்றெல்லாப் பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குத் தந்தருளினார்” என்றும் பைபிள் சொல்கிறது.—பிலி. 2:9.
நாம் செய்யும் சேவையை யெகோவா மறப்பதில்லை!
13, 14. யெகோவாவுக்காக நாம் சேவை செய்வதை நினைத்து அவர் எப்படி உணருகிறார்?
13 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். சில சமயங்களில், நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். அல்லது நம்மையே நாம் குறைவாக எடை போடலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், யெகோவா நம்மை நன்றாகப் புரிந்துகொள்கிறார். நமக்குப் பணப் பிரச்சினையோ உடல்நலப் பிரச்சினையோ வரலாம். அவருடைய சேவையை முன்பு செய்ததுபோல் இப்போது செய்ய முடியவில்லையே என்று நினைத்து நாம் கவலைப்படலாம். இந்த மாதிரியான சமயங்களில், யெகோவா நமக்கு இரக்கம் காட்டுகிறார். என்ன பிரச்சினை வந்தாலும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று நாம் தீர்மானமாக இருக்கிறோம். இதை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—எபிரெயர் 6:10, 11-ஐ வாசியுங்கள்.
14 யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’ நாம் அவரிடம் ஜெபம் செய்யும்போது, அவர் அதைக் கேட்கிறார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். (சங். 65:2) அவர் ‘கனிவும் இரக்கமும் உள்ள தகப்பனாகவும் எல்லா விதமான ஆறுதலின் கடவுளாகவும்’ இருக்கிறார். அவரோடு நெருங்கி இருப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் நமக்குச் செய்கிறார். சில சமயங்களில், நம்முடைய சகோதர சகோதரிகளை அதற்காகப் பயன்படுத்துகிறார். (2 கொ. 1:3) நாம் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 19:17; மத். 6:3, 4) அதனால், நாம் தாராள குணத்தைக் காட்டுவதையும், சகோதர சகோதரிகளுக்கு உதவுவதையும், தனக்குக் கொடுக்கப்பட்ட கடனாக அவர் நினைக்கிறார். நாம் இப்படித் தயவு காட்டும்போது, அதற்கான பலனைக் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார்.
பலன்கள் இன்றும், என்றும்!
15. என்ன பலனைப் பெறுவதற்காக நீங்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? (ஆரம்பப் படம்)
15 இயேசுவிடமிருந்து ‘நீதியின் கிரீடத்தை’ பலனாகப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை, பரலோகத்தில் வாழும் நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. (2 தீ. 4:7, 8) ஆனால், உங்களுக்குப் பூமியில் வாழும் நம்பிக்கை இருப்பதால், நீங்கள் கடவுளுடைய பார்வையில் மதிப்பு குறைவானவர்கள் என்று அர்த்தம் இல்லை! ஏனென்றால், இயேசுவின் லட்சக்கணக்கான ‘வேறே ஆடுகளுக்கு’ எதிர்காலத்தில் பூஞ்சோலை பூமியில் முடிவில்லாத வாழ்க்கை கிடைக்கப் போகிறது. அந்த அருமையான பலனுக்காக ‘வேறே ஆடுகள்’ ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கே, அவர்கள் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—யோவா. 10:16; சங். 37:11.
16. ஒன்று யோவான் 3:19, 20-ல் என்ன ஆறுதலான வார்த்தைகள் இருக்கின்றன?
16 ‘நான் ஒண்ணும் யெகோவாவுக்கு அவ்வளவா செய்றதில்ல. என்னோட சேவைய எல்லாம் யெகோவா ஏத்துக்க மாட்டார், யெகோவா கொடுக்கிற பலனை அனுபவிக்கிறதுக்கு எனக்கு எந்த தகுதியும் இல்ல’ என்றெல்லாம் நாம் ஒருவேளை நினைக்கலாம். ஆனால், “கடவுள் நம் இருதயத்தைவிட உயர்ந்தவராகவும், எல்லாவற்றையும் அறிந்தவராகவும் இருக்கிறார்” என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. (1 யோவான் 3:19, 20-ஐ வாசியுங்கள்.) யெகோவாமீது இருக்கிற விசுவாசத்தாலும், அன்பாலும் நாம் செய்யும் ஒவ்வொரு சேவையையும் அவர் உயர்வாக மதிக்கிறார், அதற்குப் பலன் தருகிறார். நாம் செய்யும் சேவை நம்முடைய பார்வையில் மதிப்பு குறைவானதாக இருந்தாலும், யெகோவா அதற்குப் பலன் தருகிறார்.—மாற். 12:41-44.
17. என்னென்ன பலன்களை நாம் இப்போதே அனுபவிக்கிறோம்?
17 சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களிலும்கூட தன்னுடைய மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கிற எல்லாரும் ஆன்மீக செழுமையை அனுபவிக்கும்படி அவர் பார்த்துக்கொள்கிறார். (ஏசா. 54:13) இயேசு கொடுத்த வாக்குறுதியின்படி, சகோதர சகோதரிகள் அடங்கிய உலகளாவிய குடும்பத்தை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்; இதன் மூலம் அவர் இப்போதே நம்மை ஆசீர்வதிக்கிறார். (மாற். 10:29, 30) அதோடு, மன சமாதானத்தையும் திருப்தியையும் சந்தோஷத்தையும் கொடுப்பதன் மூலம், கடவுளை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு அவர் பலன் தருகிறார்.—பிலி. 4:4-7.
18, 19. தங்களுக்குக் கிடைக்கிற பலன்களைப் பற்றி யெகோவாவின் ஊழியர்கள் எப்படி உணருகிறார்கள்?
18 உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் ஊழியர்கள், அவரிடமிருந்து வரும் அருமையான பலன்களை அனுபவித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஜெர்மனியைச் சேர்ந்த பியங்க்கா இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுனே தெரியல. என்னோட கவலைகள சமாளிக்கிறதுக்கு அவர் உதவி செய்றார். ஒவ்வொரு நாளும் என்கூடவே இருக்கார். இன்னைக்கு இந்த உலகத்துல எங்க பார்த்தாலும் பிரச்சனையும் குழப்பமும்தான் இருக்கு. ஆனா, நான் யெகோவாவோடு நெருக்கமா இருக்கிறதுனால பாதுகாப்பா உணர்றேன். நான் அவருக்காக தியாகம் செய்றப்போ அவர் என்னை பல மடங்கு ஆசீர்வதிக்கிறாரு.”
19 கனடாவில் இருக்கிற 70 வயதான ப்போலே என்ற சகோதரி, முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் அவ்வளவாக நடமாட முடியாது. இருந்தாலும், அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “அவ்வளவா நடமாட முடியாதுங்கிறதுனால அதிகமா ஊழியம் செய்ய முடியாதுனு அர்த்தம் இல்ல. ஃபோன் மூலமா சாட்சி கொடுக்குறது... சந்தர்ப்ப சாட்சி கொடுக்குறது... போன்ற வித்தியாசமான விதங்கள்ல நான் ஊழியம் செய்றேன். என்னை நானே உற்சாகப்படுத்திக்கிறதுக்காக, நான் ஒரு நோட்டு வைச்சிருக்கேன். அதுல வசனங்களையும், நம்ம பிரசுரங்கள்ல வந்த சில குறிப்புகளையும் எழுதி வைச்சிருக்கேன். நான் அதை அப்பப்போ எடுத்துப் பார்ப்பேன். அந்த நோட்டுக்கு, ‘என்னுடைய உயிரைக் காப்பாற்றும் நோட் புக்’னு பேர் வைச்சிருக்கேன். யெகோவாவோட வாக்குறுதிகளை பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தா பிரச்சினையெல்லாம் தற்காலிகமாதான் இருக்கும். நாம எப்படிப்பட்ட சூழ்நிலையில இருந்தாலும், யெகோவா எப்பவும் நம்மகூட இருப்பார், நமக்கு உதவி செய்வார்.” ஆனால், உங்களுடைய சூழ்நிலை, பியங்க்கா அல்லது ப்போலேவின் சூழ்நிலையைப் போல இல்லாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும் சரி, உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கும் யெகோவா எப்படியெல்லாம் பலன் தந்திருக்கிறார் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். இப்போது யெகோவா உங்களுக்கு எப்படிப் பலன் தருகிறார் என்றும், எதிர்காலத்தில் எப்படிப் பலன் தரப்போகிறார் என்றும் யோசித்துப் பார்ப்பது எவ்வளவு நல்லது!
20. யெகோவாவுடைய சேவையில் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது, நாம் எதை எதிர்பார்க்கலாம்?
20 நீங்கள் இதயப்பூர்வமாக செய்கிற ஜெபங்களுக்கு “மாபெரும் பலன் உண்டு” என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். ‘நீங்கள் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றினால், அவர் வாக்குறுதி அளித்ததைப் பெறுவீர்கள்.’ (எபி. 10:35, 36) அதனால், நம்முடைய விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொண்டே இருக்கலாம். யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, யெகோவா நமக்குப் பலன் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு இருக்க முடியும்!—கொலோசெயர் 3:23, 24-ஐ வாசிக்கலாம்.