வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எபிரெயர் 12:4-ல் “இரத்தஞ் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே” என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன?
‘இரத்தம் சிந்தப்படத்தக்கதாக எதிர்த்து நிற்பது’ என்ற சொற்றொடர், சாவின் எல்லைக்கே சென்றுவிடுவதை அர்த்தப்படுத்துகிறது.
எபிரெய கிறிஸ்தவர்களில் சிலர் தங்கள் விசுவாசத்திற்காக ஏற்கெனவே “உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்திரு”ந்தது அப்போஸ்தலன் பவுலுக்குத் தெரியும். (எபிரெயர் 10:32, 33) இதைக் குறிப்பிடும்போது பவுல் கிரேக்க போட்டி விளையாட்டுகளில் காணப்படும் போராட்டத்தை உருவகமாக பயன்படுத்துகிறார். இதில் ஓட்டப்பந்தயம், மல்யுத்தம், குத்துச்சண்டை, வட்ட தட்டு வீசுதல், ஈட்டி எறிதல் ஆகியவை இடம் பெற்றன. ஆகவே எபிரெயர் 12:1-ல், ‘பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்’ என்று சக கிறிஸ்தவர்களை அவர் ஊக்குவித்தார்.
ஓட்டப்பந்தயத்தைப் பற்றி பேசியவர், மூன்று வசனங்களுக்குப்பின், எபிரெயர் 12:4-ல் (NW) குத்துச்சண்டையைப் பற்றி குறிப்பிடுகிறார். (இந்த இரண்டு உருவக அணிகளும் 1 கொரிந்தியர் 9:26-ல் [NW] காணப்படுகின்றன.) பண்டைய காலங்களில் குத்துச்சண்டை வீரர்கள் கைமுஷ்டிகளையும் மணிக்கட்டுகளையும் சுற்றி நீண்ட தோல் வாரினால் கட்டுப்போட்டிருந்தார்கள். இந்தத் தோல் வாரில் “ஈயம், இரும்பு அல்லது உலோக ஆணிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் குத்துச்சண்டை வீரர்கள் படுகாயமடைந்தனர்.” இந்தக் கொடூரமான போட்டிகளில் இரத்தம் ஆறாய் ஓடியது, சில சமயம் சாவும் ஏற்பட்டது.
துன்புறுத்துதலையும் ஏராளமான கொடுமைகளையும், ஏன் மரணத்தையும், அதாவது ‘இரத்தம் சிந்தப்படத்தக்க’ மரணத்தையும், சகித்திருந்த கடவுளுடைய உண்மை ஊழியர்களின் முன்மாதிரிகள் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு இருந்தன. பண்டைய உண்மை ஊழியர்கள் எதை அனுபவித்தார்கள் என்பதற்கு கவனத்தைத் திருப்பிய அந்தச் சூழமைவை கவனியுங்கள்:
“கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்.” அதற்குப் பிறகு நம்முடைய விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிற இயேசுவிடம் கவனத்தைத் திருப்பி பவுல் இவ்வாறு கூறுகிறார்: “அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”—எபிரெயர் 11:37; 12:2.
ஆம், அநேகர் சாகும் அளவுக்கு ‘இரத்தம் சிந்தப்படத்தக்கதாக எதிர்த்து நின்றார்கள்.’ விசுவாசக் குறைவு என்ற பாவத்தினால் ஏற்பட்ட ஒரு மனப்போராட்டத்தைவிட இது அதிகமாக இருந்தது. மூர்க்கத்தனமாக, வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டபோதும் அவர்கள் பற்று மாறாதவர்களாக இருந்து மரணம் வரை உண்மைத்தன்மையைக் காத்துக்கொண்டார்கள்.
இந்தக் கொடுமையான துன்புறுத்துதல்கள் எல்லாம் தணிந்த பின்பு, எருசலேம் சபையில் கிறிஸ்தவர்களாக மாறிய புதியவர்கள் இப்படிப்பட்ட கடுமையான பரீட்சைகளை ஒருபோதும் அனுபவிக்கவில்லை. (அப்போஸ்தலர் 7:54-60; 12:1, 2; எபிரெயர் 13:7) ஆனால் அந்தளவுக்கு கடுமையாக இல்லாத சோதனைகளை சந்தித்தபோது இவர்களில் சிலரோ தொடர்ந்து போராடாமல் சோர்ந்துபோனார்கள். அவர்கள் ‘இளைப்புள்ளவர்களாய் தங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோனார்கள்.’ (எபிரெயர் 12:3) அவர்கள் முதிர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டியிருந்தது. அப்போதுதான் எது வந்தாலும் சகித்திருப்பதற்கு தேவையான பலத்தை வளர்த்துக்கொள்வார்கள்; இரத்தம் சிந்தப்படும் அளவுக்கு சரீர உபத்திரவத்தை சந்தித்தாலும் அவர்கள் சகித்திருப்பார்கள்.—எபிரெயர் 6:1, NW; 12:7-11.
நவீன காலங்களிலும் அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவத்தை விட்டுக்கொடுக்காத காரணத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு ‘இரத்தம் சிந்தப்படத்தக்கதாக எதிர்த்து’ நின்றிருக்கிறார்கள். எபிரெயர் 12:4-ல் உள்ள பவுலின் வார்த்தைகளைப் பார்த்து நாம் பயந்துவிடக் கூடாது; மாறாக, கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கு எந்தளவுக்குச் செல்ல நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும் என இது சுட்டிக்காட்டுவதை புரிந்துகொள்ள வேண்டும். எபிரெயர்களுக்கு எழுதிய அதே கடிதத்தில் பிற்பாடு பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.”—எபிரெயர் 12:28.