வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
‘சகல தேசங்களாலும் விரும்பப்பட்டவர்கள்’ மெய் வணக்கம் என்ற ‘ஆலயத்திற்கு’ வரக் காரணம் என்ன?—ஆகாய் 2:7.
‘சகல ஜாதிகளையும் [தேசங்களையும்] அசையப் பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் [தேசங்களாலும்] விரும்பப்பட்டவர்கள் வருவார்கள்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன்’ என்று யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஆகாய் மூலமாக முன்னறிவித்தார். (ஆகாய் 2:7) ‘சகல தேசங்களையும் அசையப் பண்ணுவதன்’ காரணமாகத்தான் அதில் இருக்கும் விரும்பப்பட்டவர்கள், அதாவது நல்மனமுள்ள ஆட்கள், மெய் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? இல்லை.
தேசங்களை எது அசைவிக்கிறது, அதாவது ஆடிப்போகச் செய்கிறது, இது என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள். ‘ஜாதிகள் [தேசங்கள்] கொந்தளித்து, ஜனங்கள் விருதாக் காரியத்தைச் சிந்திக்கிறார்கள்’ என்று பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 2:1) அவர்கள் எந்நேரமும் ‘சிந்திக்கிற விருதாக் காரியம்,’ தங்களுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதைப் பற்றியதே. அப்படியிருக்க, அவர்களுடைய ஆட்சிக்கு எதிரான அச்சுறுத்தல்தான் வேறு எதைக் காட்டிலும் அதிகமாக அவர்களை ஆடிப்போகச் செய்கிறது.
அவர்களுடைய ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பது எது தெரியுமா? கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கும் பிரசங்கிப்பதாகும். ஆம், இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் மேசியானிய அரசாங்கம் ‘[மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கப் போகிறது’ என்ற செய்தியை அவர்கள் அறிவிக்கிறார்கள். (தானியேல் 2:44) பிரசங்க வேலையின் வாயிலாக அறிவிக்கப்படும் இந்த நியாயத்தீர்ப்பு செய்தி தேசங்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. (ஏசாயா 61:2) இந்தப் பிரசங்க வேலை உலகெங்கும் விரிவாகவும் விறுவிறுப்பாகவும் செய்யப்பட்டு வருவதால், தேசங்களுக்கு நடுக்கம் இன்னும் அதிகமாகிறது. ஆகாய் 2:7-ல் முன்னறிவிக்கப்பட்டபடி தேசங்களை அசையப் பண்ணுவது எதிர்காலத்தில் நடக்கப்போகும் எதைச் சுட்டிக்காட்டுகிறது?
ஆகாய் 2:6 இவ்வாறு கூறுகிறது: “சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக் காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப் பண்ணுவேன்.” இந்த வசனத்தை மேற்கோள்காட்டி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப் பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப் பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் [கடவுளுடைய அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும்] நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் [சாத்தானுடைய உலகமும் அதன் ஆதரவாளர்களும்] . . . மாறிப்போம் [“ஒழிக்கப்படும்,” NW] என்பதைக் குறிக்கிறது.” (எபிரெயர் 12:26, 27) ஆம், இன்றைய பொல்லாத உலகம் சீக்கிரத்திலேயே மிகப் பெரிய அளவில் அசைக்கப்படப் போகிறது; அச்சமயத்தில் அது ஒரேயடியாக ஒழிக்கப்படும். கடவுளுடைய புதிய உலகம் அதன் இடத்தை ஏற்கும்.
நல்மனமுள்ள ஜனங்கள் மெய் வணக்கத்திடமாக கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். இதற்கு தேசங்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் நடுக்கம் காரணமல்ல. மாறாக, கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதைப் பற்றிய நற்செய்தி உலகம் முழுவதிலும் பிரசங்கிக்கப்படுவதே காரணம். இந்தச் செய்தி, மக்களை யெகோவாவிடமும் மெய் வணக்கத்திடமும் கவர்ந்திழுக்கிறது. அதோடு, தேசங்களை நடுநடுங்கவும் வைத்திருக்கிறது. ‘நித்திய சுவிசேஷம்’ அறிவிக்கப்படுவது நல்மனமுள்ள ஆட்களை மெய் வணக்கத்திடம் கவர்ந்திழுக்கிறது.—வெளிப்படுத்துதல் 14:6, 7.
ராஜ்ய நற்செய்தியில் நியாயத்தீர்ப்பின் செய்தியும், இரட்சிப்பின் செய்தியும் உள்ளன. (ஏசாயா 61:1, 2) ஆகவே, இந்த நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிப்பதால் இரண்டு விதமான விளைவுகள் ஏற்படுகின்றன. ஒன்று, அது தேசங்களை அசைவிக்கிறது; மற்றொன்று, யெகோவாவுக்கு மகிமை உண்டாக தேசங்களில் இருந்து விரும்பப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்க்கிறது.