உங்கள் சகோதர அன்பு நீடித்திருப்பதாக!
“உங்கள் சகோதர அன்பு நீடித்திருப்பதாக.”—எபிரெயர் 13:1, NW.
1. குளிர் அதிகமான இரவில் நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருப்பதற்கு என்ன செய்வீர்கள், அதைப்போன்ற என்ன பொறுப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது?
வெளியில் பயங்கர குளிர், அதன் தட்பநிலை இன்னும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நெருப்பு கூண்டில் படபடவென்று வெடித்து நெருப்பு எரிந்துகொண்டிருப்பதே உங்கள் வீட்டில் வெப்பமுண்டாக்கும் ஒரே சாதனம். அது அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்படி நீங்கள் பார்த்துக்கொள்வதிலேயே உயிர்கள் சார்ந்திருக்கின்றன. இந்நிலையில் அந்த நெருப்புக் கொழுந்துகள் அணைந்து, அந்தத் தணல்களின் செந்நிற ஒளி மங்கி, சாம்பலாகையில், நீங்கள் வெறுமனே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பீர்களா? நிச்சயமாகவே அவ்வாறு இருக்கமாட்டீர்கள். அதை எரிய வைத்துக்கொண்டிருக்கும்படி நீங்கள் சோர்வடையாமல் எரிபொருள் போட்டுத் தணல் உண்டாக்கிக்கொண்டிருப்பீர்கள். ஒரு கருத்தில், அதைப் பார்க்கிலும் மிக அதிக முக்கியமான ஒரு “நெருப்பை”—நம்முடைய இருதயங்களில் கொழுந்துவிட்டு எரிய வேண்டிய ஒன்றை—அன்பை—நாம் கவனிக்கையில், நம் ஒவ்வொருவருக்கும் அதைப்போன்ற ஒரு வேலை இருக்கிறது.
2. (அ) இந்தக் கடைசி நாட்களில் அன்பு தணிந்துவிட்டிருக்கிறது என்று ஏன் சொல்லலாம்? (ஆ) உண்மை கிறிஸ்தவர்களுக்கு அன்பு எவ்வளவு முக்கியமானது?
2 வெகு காலத்திற்கு முன்பாக இயேசு முன்னறிவித்தபடி, உலகம் முழுவதிலும், கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டுகிறவர்களுக்குள் அன்பு தணிந்து கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். (மத்தேயு 24:12) எல்லாவற்றிலும் மிக அதிக முக்கியமான வகையான அன்பை, அதாவது, யெகோவா தேவன்மீதும், அவருடைய வார்த்தையாகிய பைபிளின்மீதும் உள்ள அன்பை, இயேசு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். அன்பின் மற்ற வகைகளும் தணிந்துகொண்டிருக்கின்றன. “கடைசி நாட்களில்,” “சுபாவ அன்பில்லாதவர்களாயும்” பலர் இருப்பர் என்று பைபிள் முன்னறிவித்தது (2 தீமோத்தேயு 3:1-5) இது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! குடும்பம் சுபாவ அன்பின் ஒரு புகலிடமாக இருக்க வேண்டும், ஆனால் அங்கேயுங்கூட, வன்முறையும் கேடுசெய்வதும்—சில சமயங்களில் பயங்கர கொடுமையும் மிகுந்திருப்பது—சாதாரணமாகிவிட்டிருக்கின்றன. எனினும் இந்த உலகத்தின் அன்பற்ற சூழ்நிலையில், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாக இருக்க வேண்டுமென்று மட்டுமல்லாமல், தங்களைப் பார்க்கிலும் மற்றவர்களை முதலில் வைப்போராய், தன்னலத்தியாக அன்புடையவர்களாய் இருக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கின்றனர். இந்த அன்பை அவ்வளவு தெளிவான வகையில் நாம் வெளிக்காட்ட வேண்டியதால் அதை எல்லாரும் காண முடிந்து, உண்மையான கிறிஸ்தவ சபையை அடையாளம் கண்டுகொள்ளும் குறியாகிறது.—யோவான் 13:34, 35.
3. சகோதர அன்பு என்பது என்ன, அதை நீடித்திருக்கச் செய்ய வேண்டும் என்பதன் அர்த்தமென்ன?
3 “உங்கள் சகோதர அன்பு நீடித்திருப்பதாக” என்று கட்டளையிடும்படி அப்போஸ்தலன் பவுல் தேவாவியால் ஏவப்பட்டார். (எபிரெயர் 13:1, NW) ஒரு அறிவாளரின் பிரசுரத்தின்படி, இங்கு “சகோதர அன்பு” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல் (ஃபிலடெல்ஃபியா), “தயவையும், ஒத்துணர்வையும் காட்டி, உதவியளிக்க முன்வரும், பாசமுள்ள அன்பைக் குறிப்பிடுகிறது.” அத்தகைய அன்பை நாம் நீடித்திருக்கச் செய்யவேண்டும் என்று பவுல் சொன்னபோது என்ன அர்த்தங்கொண்டார்? “அது ஒருபோதும் குளிர்ந்து போகக்கூடாது” என்று அதே புத்தகம் கூறுகிறது. ஆகையால், நம்முடைய சகோதரரிடமாக பாசத்தை உணருவது மட்டுமே போதுமானதல்ல, அதை நாம் வெளிப்படுத்திக் காட்டவேண்டும். மேலும், இந்த அன்பு நீடித்துநிலைத்திருக்கும்படியும் செய்ய வேண்டும், அதை ஒருபோதும் தணியவிடக்கூடாது. சவாலாகத் தோன்றுகிறதா? ஆம், ஆனால் சகோதர பாசத்தை வளர்க்கவும் அதைக் காத்துவரவும் யெகோவாவின் ஆவி நமக்கு உதவிசெய்ய முடியும். நம்முடைய இருதயங்களிலுள்ள இந்த அன்பின் தணலுக்கு எரிபொருள் இடுவதற்கான மூன்று வழிகளை நாம் கவனிக்கலாம்.
உடனொத்த உணர்வைக் காட்டுங்கள்
4. ஒத்துணர்வு என்பது என்ன?
4 உங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் மேலும் அதிக அன்புடையோராக இருக்கும்படி நீங்கள் விரும்பினால், முதலாவது நீங்கள் அவர்களுக்காக உணர்வது அவசியமாயிருக்கலாம், வாழ்க்கையில் அவர்கள் எதிர்ப்படும் சோதனைகளிலும் சவால்களிலும் அவர்களோடு ஒத்துணர்வோராக இருக்க வேண்டும். அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு எழுதினபோது, இதை ஆலோசனையாகக் கூறினார்: “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களாக, உடனொத்த உணர்வைக் காட்டுவோராயும், சகோதர பாசமுடையோராயும், கனிவான இரக்கமுள்ளோராயும், மனத்தாழ்மையுள்ளோராயும் இருங்கள்.” (1 பேதுரு 3:8, NW) “உடனொத்த உணர்வை” காண்பிப்பதற்கு இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல், “உடன் துன்பப்படுதல்” என்பதைக் குறிக்கிறது. பைபிள் எழுதப்பட்ட கிரேக்க மொழியின் நிபுணர் ஒருவர் இந்தச் சொல்லைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்களின் உணர்ச்சிகளுக்குள் நாம் பிரவேசிக்கையில் அவை நம்முடைய சொந்த உணர்ச்சிகள் என்பதுபோல் இருந்துவரும் அந்த மனப்பான்மையை இது விவரிக்கிறது.” ஆகையால் ஒத்துணர்வு தேவைப்படுகிறது. யெகோவாவின் உண்மையுள்ள முதிர்வயதான ஓர் ஊழியர் ஒரு சமயம் இவ்வாறு சொன்னார்: “உன்னுடைய வேதனை என் இருதயத்தில் இருப்பதே ஒத்துணர்வு.”
5. யெகோவா ஒத்துணர்வு உடையோராக இருக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
5 யெகோவாவுக்கு அத்தகைய உடன் ஒத்துணர்வு இருக்கிறதா? நிச்சயமாகவே இருக்கிறது. உதாரணமாக, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலின் துன்பங்களைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர்களுடைய எல்லா துயரங்களின்போதும் அவருக்கு துயரமாயிருந்தது.” (ஏசாயா 63:9, NW) யெகோவா அவர்களுடைய துன்பங்களை வெறுமனே காணவில்லை; அந்த ஜனங்களுக்காக உணர்ந்தார். அவர் எவ்வளவு ஆழமாய் உணருகிறார் என்பது, சகரியா 2:8-ல் (NW) தம்முடைய ஜனங்களிடம் சொன்ன யெகோவாவின் சொந்த வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன: “உங்களைத் தொடுகிறவன் என் கண்விழியைத் தொடுகிறான்.”a இந்த வசனத்தைக் குறித்து விளக்கவுரையாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மனித உடலமைப்பில், மிகச் சிக்கலானதும் மென்மையானதுமான ஒன்றாக கண் உள்ளது; கண்ணின் மணி—பார்வைக்குரிய நோக்கங்களுக்காக வான ஒளி உட்புகும் திறப்பு—அந்த அமைப்பின் மிகக் கூருணர்வுடையதும், அதோடுகூட முக்கியமான பாகமாகவும் உள்ளது. தம்முடைய அன்புக்குரியவர்களுக்குக் காட்டும் யெகோவாவின் மிக மேம்பட்ட கனிவான கவனிப்பைப் பற்றிய எண்ணத்தை வேறு எதுவும் அவ்வளவு நுட்பமாய் அளிக்க முடியாது.”
6. இயேசு கிறிஸ்து எவ்வாறு உடனொத்த உணர்வைக் காட்டியிருக்கிறார்?
6 இயேசுவும்கூட மிக ஆழ்ந்த உடனொத்த உணர்வை எப்போதும் காட்டியிருக்கிறார். நோயுற்று அல்லது துயரமுற்று இருந்த உடன் மனிதரின் நெருக்கடி நிலையின்பேரில் அவர் மறுபடியும் மறுபடியுமாக ‘மனதுருகினார்.’ (மாற்கு 1:41; 6:34) தம்மைப் பின்பற்றும் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களைத் தயவுடன் நடத்த தவறுகிறவர்கள், தம்மையே அவ்வாறு நடத்துவதாகத் தாம் உணருகிறாரென அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 25:41-46) மேலும் இன்று, நம்முடைய பரலோக “பிரதான ஆசாரியராக,” அவரே, “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்” கூடியவராக இருக்கிறார்.—எபிரெயர் 4:15.
7. ஒரு சகோதரனோ சகோதரியோ நமக்குக் கோபமூட்டினால் உடனொத்த உணர்வு எவ்வாறு நமக்கு உதவி செய்யலாம்?
7 ‘நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கிறார்’—இது ஆறுதலான எண்ணமாக இருக்கிறதல்லவா? அப்படியானால், நிச்சயமாகவே, நாம் ஒருவருக்கொருவர் அதையே செய்யும்படி விரும்புவோம். மெய்யாகவே, மற்றவரின் பலவீனங்களைக் காண்பது மிக எளிது. (மத்தேயு 7:3-5) ஆனால், அடுத்தத் தடவை ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ உங்களுக்குக் கோபமூட்டினால், இவ்வாறு முயற்சி செய்து பாருங்களேன்? அந்த நபரின் சூழ்நிலைமைகளில், அதே பின்னமைவுடனும், அதே ஆளுமையுடனும், போராடுவதற்கு அதே சொந்த குற்றங்குறைபாடுகளுடனும் நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதே தவறுகளை—அல்லது ஒருவேளை அவற்றிற்கும் மோசமானவைகளை—நீங்கள் செய்யமாட்டீர்களென்று நிச்சயமாயிருக்க முடியுமா? மற்றவர்களில் மட்டுக்குமீறியவற்றை எதிர்பார்ப்பதற்கு மாறாக, நாம் உடனொத்த உணர்வைக் காட்ட வேண்டும். ‘நாம் மண்ணென்று நினைவுகூருகிற’ யெகோவாவைப்போல் நியாயமாக செயல்பட, இது நமக்கு உதவி செய்யும். (சங்கீதம் 103:14; யாக்கோபு 3:17) நம்முடைய மட்டுப்பாடுகளை அவர் அறிந்திருக்கிறார். நியாயப்படி நம்மால் செய்ய இயலுவதற்கு அதிகமானதை அவர் ஒருபோதும் எதிர்பார்க்கிறதில்லை. (ஒப்பிடுக: 1 இராஜாக்கள் 19:5-7.) நாம் எல்லாரும் இத்தகைய உடனொத்த உணர்வை மற்றவர்களுக்குக் காட்டுவோமாக.
8. ஒரு சகோதரன் அல்லது சகோதரி ஏதோ கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டிருக்கையில் நாம் எவ்வாறு நம்முடைய பாகத்தில் செயல்பட வேண்டும்?
8 ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய பல்வேறு உறுப்பினர்களைக் கொண்ட ஓர் உடலைப்போல், சபை இருக்கிறதென்று பவுல் எழுதினார். “ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்” என்று அவர் மேலும் சொன்னார். (1 கொரிந்தியர் 12:12-26) கடும் சோதனை ஏதோவொன்றை அனுபவித்துக்கொண்டிருப்போருடன் நாம் பாடுபட வேண்டும் அல்லது ஒத்துணர்வை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதில் மூப்பர்கள் வழிகாட்டுகிறார்கள். பவுல் மேலும் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?” (2 கொரிந்தியர் 11:29) இந்தக் காரியத்தில் மூப்பர்களும் பயணக் கண்காணிகளும் பவுலின் மாதிரியைப் பின்பற்றுகின்றனர். தங்கள் பேச்சுகளிலும், தங்கள் மேய்ப்பு ஊழியத்திலும், நியாயவிசாரணை சம்பந்தப்பட்ட காரியங்களைத் தாங்கள் கையாளுவதிலுங்கூட, உடனொத்த உணர்வைக் காட்டுவதற்கு அவர்கள் பிரயாசப்படுகின்றனர். “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்று பவுல் ஆலோசனை கூறினார். (ரோமர் 12:15) மேய்ப்பர்கள் உண்மையில் ஒத்துணர்வுடையோராகத் தங்கள் மட்டுப்பாடுகளைப் புரிந்துகொள்ளுகிறார்கள் என்றும், தாங்கள் எதிர்ப்படுகிற தொல்லைகளை உணர்ந்து இரக்கம் காட்டுகிறார்கள் என்றும் செம்மறியாடுகளைப் போன்றவர்கள் உணருகையில், அறிவுரையையும், வழிநடத்துதலையும், சிட்சையையும் ஏற்பதற்கு அவர்கள் பெரும்பாலும் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். கூட்டங்களில் ‘தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்ற திடநம்பிக்கையுடன், ஆவலோடு அவற்றிற்கு ஆஜராகிறார்கள்.—மத்தேயு 11:29.
மதித்துணர்வைக் காட்டுதல்
9. நம்மில் காணும் நல்ல காரியங்களை தாம் மதித்துணருகிறார் என்று யெகோவா எவ்வாறு காட்டுகிறார்?
9 சகோதர அன்பைப் பெருகச் செய்வதற்கு இரண்டாவது வழி, மதித்துணர்வைக் காட்டுவதன் மூலமாகும். மற்றவர்களை மதித்துணருவதற்கு, அவர்களுடைய நற்பண்புகளின்பேரிலும் முயற்சிகளின்பேரிலும் நம் கவனத்தை ஊன்ற வைத்து அவற்றை உயர்வாக மதிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்கையில், யெகோவாவின் மாதிரியைத்தானே நாம் பின்பற்றுகிறோம். (எபேசியர் 5:1) பல சிறிய பாவங்களை அவர் தினந்தோறும் நமக்கு மன்னிக்கிறார். உண்மையான மனந்திரும்புதல் இருக்கும் வரையில், மோசமான பாவங்களையுங்கூட அவர் மன்னிக்கிறார். நம்முடைய பாவங்களை மன்னித்துவிட்ட பின்பு, அவற்றை அவர் மனதில் வைக்கிறதில்லை. (எசேக்கியேல் 33:14-16) சங்கீதக்காரன் இவ்வாறு கேட்டார்: “யெகோவா, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால் நிலைநிற்கக்கூடியவன் யார் ஆண்டவரே?” (சங்கீதம் 130:3, தி.மொ.) யெகோவாவைச் சேவிப்பதில் நாம் செய்கிற நல்ல காரியங்களின்பேரிலேயே அவர் தம் கவனத்தை ஊன்றவைக்கிறார்.—எபிரெயர் 6:10.
10. (அ) மணத்துணைவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள மதித்துணர்வை இழப்பது ஏன் ஆபத்தாக இருக்கிறது? (ஆ) மணத்துணைவரிடமாக மதித்துணர்வை இழக்கிற ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
10 குடும்பத்தில் இந்த முன்மாதிரியைப் பின்பற்றுவது தனிப்பட்ட முறையில் முக்கியமாயிருக்கிறது. பெற்றோர், ஒருவருக்கொருவர் மதித்துணர்வுடையோராகத் தங்களைக் காட்டுகையில், குடும்பத்திற்கு முன்மாதிரி வைக்கிறார்கள். திருமண இணைப்பை, அசட்டையாகக் கருதும் இந்தச் சகாப்தத்தில், வாழ்க்கைத்துணையை ஏதோ அப்போதைக்குரியவர்போல் கருதுவதும், சிறு குறைபாடுகளைப் பெரிதாக்கிக் காட்டுவதும், நற்பண்புகளைக் கருதாமல் விடுவதும் மிக எளிது. இத்தகைய எதிர்மறையான சிந்தனை, மணவாழ்க்கையைப் படிப்படியாகக் கெடுத்து, அதை மகிழ்ச்சியற்ற பாரமாக மாற்றுகிறது. உங்கள் மணத்துணையின்பேரில் உங்கள் மதித்துணர்வு குறையும் நிலையில் இருந்தால், ‘என் துணை உண்மையில் நற்பண்புகள் உடையவராக[ளாக] இல்லையா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் நீங்கள் நேசித்து மணம் செய்துகொண்டதன் காரணங்களின்பேரில் சிந்தனை செலுத்துங்கள். இந்தத் தனிப்பட்ட ஆளை நேசித்ததற்கான அந்த எல்லா காரணங்களும் அகன்று போய்விட்டனவா? நிச்சயமாகவே இல்லை; ஆகையால், உங்கள் துணையிலுள்ள நல்ல தன்மைகளை மதித்துணருவதற்கு கடினமாகப் பிரயாசப்பட்டு, உங்கள் மதித்துணர்வை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.—நீதிமொழிகள் 31:28.
11. மணத்துணைவர்களுக்கிடையே உள்ள அன்பு, பாசாங்குத்தனத்திற்கு விலகியதாக இருக்க வேண்டுமானால், என்ன பழக்கச் செயல்களைத் தவிர்க்க வேண்டும்?
11 நேசிப்பதாகப் பாசாங்கு செய்வதிலிருந்து விலகியிருக்கவும் மணத்துணைவர்களுக்கு மதித்துணர்வு உதவி செய்கிறது. (ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 6:6; 1 பேதுரு 1:22.) இருதயப்பூர்வமான மதித்துணர்வால் பெருகுகிற இத்தகைய அன்பு, தனிமறைவாயிருக்கையில் கொடூரத்திற்கு இடமளிக்காது; புண்படுத்தி இகழும் வார்த்தைகளுக்கு இடமளிக்காது; அசட்டையாய்ப் புறக்கணித்து, தயவான அல்லது மரியாதையான ஒரு வார்த்தையும் பேசப்படாமல் நாட்கள் கடந்து செல்வதற்கு இடமளிக்காது; மேலும் உடல் சம்பந்தமான வன்முறைக்கும் நிச்சயமாகவே இடளிக்காது. (எபேசியர் 5:28, 29) ஒருவரையொருவர் உண்மையில் மதித்துணரும் ஒரு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் கனப்படுத்துகிறார்கள். மற்றவர்கள் முன்னிலையில் தாங்கள் இருக்கும்போது மட்டுமல்ல, யெகோவாவின் பார்வையில் அவர்கள் இருக்கும்போதெல்லாம்—வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், எல்லா சமயங்களிலும்—அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.—நீதிமொழிகள் 5:21.
12. பெற்றோர்கள் ஏன், தங்கள் பிள்ளைகளிலுள்ள நல்ல காரியங்களுக்கு மதித்துணர்வை வெளிப்படுத்திக் கூற வேண்டும்?
12 பிள்ளைகளுங்கூட மதிக்கப்படுவோராக உணர வேண்டும். வெறும் பசப்பான போலிப் புகழ்ச்சியால், பெற்றோர் அவர்களை விடாமல் புகழ்ந்துகொண்டு இருக்கவேண்டும் என்பதல்ல, ஆனால், பிள்ளைகளின் புகழத்தக்க பண்புகளையும், அவர்கள் செய்யும் உண்மையான நல்ல காரியங்களையும் அவர்கள் போற்றவேண்டும். இயேசுவின்பேரில் தம்முடைய அங்கீகாரத்தை வெளிப்படுத்திக் கூறின யெகோவாவின் முன்மாதிரியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (மாற்கு 1:11) ஒரு உவமையில் ‘எஜமானராகக்’ குறிக்கப்பட்ட இயேசுவின் முன்மாதிரியையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டதில் வேறுபாடு இருந்தபோதிலும், அதற்கேற்றவாறு ஒவ்வொருவரும் சம்பாதித்ததிலும் வேறுபாடு இருந்தபோதிலும், இருவரையும் ‘உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரர்’ என்று ஒன்றுபோல் அவர் புகழ்ந்தார். (மத்தேயு 25:20-23; ஒப்பிடுக: மத்தேயு 13:23.) ஞானமுள்ள பெற்றோர், அவ்வாறே, ஒவ்வொரு பிள்ளையையும் அவரவருடைய தனிப்பட்ட பண்புகளுக்காகவும், திறமைகளுக்காகவும், நிறைவேற்றும் செயல்களுக்காகவும் அவரவருக்கு மதித்துணர்வை வெளிப்படுத்திக் கூறுவதற்கு வழிகளைக் காண்பார்கள். அதே சமயத்தில், தங்கள் பிள்ளைகள் மற்றவர்களைப் பார்க்கிலும் மேம்பட்டு தோன்றும்படி இடைவிடாது உந்தப்படுவோராக உணராதபடி, அவ்வளவு அதிகமாக நிறைவேற்றும் செயல்களின்பேரில் அழுத்தம் வைக்காமலிருக்க பெற்றோர் பிரயாசப்படுவார்கள். தங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போக, அல்லது மனந்தளர்ந்துபோக அவர்கள் விரும்புகிறதில்லை.—எபேசியர் 6:4; கொலோசெயர் 3:21.
13. சபையிலுள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மதித்துணர்வைக் காட்டுவதில் யார் தலைமை தாங்குகிறார்கள்?
13 கிறிஸ்தவ சபையில், கடவுளுடைய மந்தையின் ஒவ்வொரு தனி உறுப்பினருக்கும் மதித்துணர்வைக் காட்டுவதில், மூப்பர்களும் பயணக் கண்காணிகளும் தலைமை தாங்குகிறார்கள். நீதியில் சிட்சிப்பதற்கும், தவறு செய்வோரை சாந்த மனநிலையோடு திரும்ப சீர்திருந்த பண்ணுவதற்கும், சாந்த மனநிலையோடு, தேவைப்படுவோருக்கு கண்டிப்பான அறிவுரை கொடுப்பதற்கும் கனத்த உத்தரவாதம் அவர்களுக்கு இருப்பதால், அவர்களுடைய ஸ்தானம் கடினமானது. இந்தப் பல்வேறு பொறுப்புகளை அவர்கள் எவ்வாறு சரிசமமாய்த் தாங்குகிறார்கள்?—கலாத்தியர் 6:1 2 தீமோத்தேயு 3:16.
14, 15. (அ) கண்டிப்பான அறிவுரை கொடுக்கும் காரியத்தில் பவுல் எவ்வாறு சமநிலையைக் காட்டினார்? (ஆ) தவறுகளைத் திருத்துவதற்கான தேவையோடு போற்றுதலை அளிப்பதற்கானத் தேவையை, கிறிஸ்தவ கண்காணிகள் எவ்வாறு சமநிலைப்படுத்தலாம்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
14 பவுலின் முன்மாதிரி பெரும் உதவியாயிருக்கிறது. அவர், மேன்மையாய்ச் சிறந்த போதகராகவும், மூப்பராகவும், மேய்ப்பராகவும் இருந்தார். கடும் பிரச்சினைகளை உடைய சபைகளை அவர் கையாள வேண்டியிருந்தது; கண்டிப்பான அறிவுரை தேவைப்பட்டபோது அவர் பயந்து, அதைக் கொடுக்காமல் இருந்துவிடவில்லை. (2 கொரிந்தியர் 7:8-11) பவுலின் ஊழியத்தைப் பொதுவாகக் கவனிக்கையில், கடிந்துபேசும் முறையை எப்போதாவது—சந்தர்ப்பநிலை அதை அவசியமாக்கினபோது அல்லது பொருத்தமாக்கினபோது மாத்திரமே—அவர் பயன்படுத்தினார் என்று காட்டுகிறது. இதில் தேவ ஞானத்தை அவர் காட்டினார்.
15 சபைக்கு முன்பாக ஒரு மூப்பரின் ஊழியத்தை ஒரு இன்னிசைக்கு ஒப்பிட்டால், கடிந்துகொண்டு கண்டனம் தெரிவிப்பது, முழு இசைக்குள் பொருந்துகிற ஒரு சுரம் போன்று இருக்கும். அதற்குரிய இடத்தில் அந்தச் சுரம் சிறந்ததாக இருக்கிறது. (லூக்கா 17:3; 2 தீமோத்தேயு 4;2) அந்த ஒரே சுரத்தை மாத்திரமே உடையதாக, திரும்பத்திரும்ப அதுவே ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பாட்டை கற்பனை செய்து பாருங்கள். அது நம்முடைய செவிகளுக்கு விரைவில் வெறுப்புண்டாக்கும். ஆகவே, கிறிஸ்தவ மூப்பர்கள் தங்கள் போதகத்தை பல்வேறு கவர்ந்திழுக்கும் பண்புகளைக்கொண்டு ஊக்குவிப்பதாக்குவதற்குப் பிரயாசப்படுகிறார்கள். பிரச்சினைகளைத் திருத்துவதற்கு மாத்திரமே தங்கள் போதகத்தை அவர்கள் மட்டுப்படுத்துவதில்லை. மாறாக, எல்லாம் அடங்கிய அதன் பொதுவான தொனி, உடன்பாடான முறையில் கட்டியெழுப்புவதாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவைப்போல். அன்புள்ள மூப்பர்கள், போற்றத்தக்க நல்ல காரியங்களுக்காக முதலாவது நோக்குகிறார்கள், குற்றங்குறை கூறுவதற்கான தவறுக்கல்ல. தங்கள் உடன் கிறிஸ்தவர்கள் செய்துவரும் கடின உழைப்பை அவர்கள் மதிக்கிறார்கள். யெகோவாவைச் சேவிப்பதற்கு ஒவ்வொருவரும், பொதுவாக, தங்கள் மிகச் சிறந்ததை செய்து வருகிறார்களென்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த உணர்ச்சியை வார்த்தைகளில் தடையின்றி வெளிப்படுத்துகிறார்கள்.—ஒப்பிடுக: 2 தெசலோனிக்கேயர் 3:4.
16. பவுலின் மதித்துணர்வும் ஒத்துணர்வுமுள்ள மனப்பான்மை அவருடைய உடன் கிறிஸ்தவர்களின்மீது என்ன பாதிப்பை உடையதாக இருந்தது?
16 சந்தேகமில்லாமல், பவுல் போதகம் செய்திருந்த கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையர், அவர் தங்களை மதித்தார் என்றும் அவர்களுக்காக உடனொத்த உணர்வுடையவராக இருந்தார் என்றும் உணர்ந்தார்கள். இது நமக்கு எப்படித் தெரியும்? பவுலைக் குறித்து அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்பதைப் பாருங்கள். அவருக்கு மிகுந்த அதிகாரம் இருந்தபோதிலும், அவர்கள் அவருக்குப் பயந்து ஒதுங்கவில்லை. இல்லை, அவர் அன்புமிகுந்தவரும் அணுகக்கூடியவருமாக இருந்தார். ஓர் இடப்பகுதியை விட்டு அவர் செல்லுகையில் மூப்பர்கள், ‘பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவரை முத்தஞ்செய்தார்கள்!’ (அப்போஸ்தலர் 20:17, 38) கவனித்துப் பின்பற்றுவதற்கு, பவுலின் முன்மாதிரி நமக்கு இருப்பதால் மூப்பர்கள்—நாம் எல்லாருங்கூட—எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! ஆம், நாம் ஒருவருக்கொருவர் மதித்துணர்வைக் காட்டுவோமாக.
அன்புள்ள இரக்கச் செயல்கள்
17. சபையில் தயவான செயல்களிலிருந்து உண்டாகும் நல்ல பாதிப்புகள் சில யாவை?
17 சகோதர அன்பைப் பெருகச் செய்வதற்கான மிக அதிக ஆற்றல்வாய்ந்த எரிபொருட்களில் ஒன்று, தயவான ஒரு எளியச் செயலேயாகும். இயேசு சொன்ன பிரகாரம், “பெற்றுக்கொள்வதில் இருப்பதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சியுள்ளது” (அப்போஸ்தலர் 20:35, NW) ஆவிக்குரியப்பிரகாரமோ, பொருள் சம்பந்தமாகவோ, அல்லது நம்முடைய நேரத்தையும் சக்தியையுமோ, எதை நாம் கொடுத்தாலும், மற்றவர்களைமட்டுமேயல்ல நம்மையுங்கூட மகிழ்விக்கிறோம். சபையில் தொற்றிப் பரவும் ஆற்றலுடையதாக தயவு இருக்கிறது. ஒரு தயவானச் செயல், ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ச்சியாக அதைப்போன்ற பல செயல்களைத் தோற்றுவிக்கிறது. விரைவில், சகோதர பாசம் செழித்தோங்குகிறது!—லூக்கா 6:38.
18. மீகா 6:8-ல் குறிப்பிடப்பட்டுள்ள “தயவு” என்பதன் அர்த்தம் என்ன?
18 தயவு காட்டும்படி, யெகோவா தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை ஊக்குவித்தார். மீகா 6:8-ல், (தி.மொ.) நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மனிதனே, நலமானது இன்னதென்று அவர் உனக்குத் தெரிவித்திருக்கிறார், நியாயஞ்செய்து மனதார இரக்கத்தைப் பாராட்டி [தயவை நேசித்து, NW] உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டுமெனக் கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்.” “தயவை நேசித்து” என்பதன் அர்த்தம் என்ன? ‘தயவு’ என்பதற்கு இங்கே பயன்படுத்தப்பட்ட எபிரெயச் சொல் (கேசெட்) ஆங்கிலத்தில் ‘இரக்கம்’ என்றுங்கூட மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஸோன்ஸினோ புக்ஸ் ஆஃப் தி பைபிள் என்ற புத்தகத்தின் பிரகாரம், இந்தச் சொல் “இரக்கம் என்ற பண்பியலான ஆங்கிலச் சொல்லைப் பார்க்கிலும் அதிக செயல்திறமுடையதாக இருக்கிறது. ‘செயல்களாக மாற்றப்படும் இரக்கம்’ என்று அது அர்த்தப்படுகிறது; ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் மட்டுமல்ல, ஒருவரின் உடனொத்த மனிதர் எல்லாருக்குமே செய்யும் அன்புள்ள-தயவுக்குரிய தனிப்பட்ட செயல்களென அர்த்தப்படுகிறது.” இதனால், கேசெட் என்பது “செயலாக மாற்றப்படும் அன்பு” என்று அர்த்தப்படுகிறதென மற்றொரு அறிவாளர் சொல்லுகிறார்.
19. (அ) சபையிலுள்ள மற்றவர்களுக்கு தயவுகாண்பிக்க, என்ன வழிகளில் நாம் முன்முயற்சி எடுக்கலாம்? (ஆ) சகோதர அன்பு உங்களுக்கு எவ்வாறு காட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்.
19 நம்முடைய சகோதர அன்பு, செயல்முறை சாராததோ, அல்லது வெறும் பண்பியலானதோ அல்ல. அது மெய்த்திடமானது. ஆகையால், உங்கள் சகோதர சகோதரிகளுக்குத் தயவானக் காரியங்களைச் செய்வதற்குரிய வழிகளைத் தேடுங்கள். இயேசுவைப் போல் இருங்கள்; உதவிக்காக ஜனங்கள் தம்மை அணுகி கேட்கட்டும் என்று அவர் வெறுமனே காத்திருக்கவில்லை, பலதடவைகள் தாமே முன்முயற்சி எடுத்தார். (லூக்கா 7:12-16) மிக அதிகத் தேவையிலிருப்போரை முக்கியமாய் நினையுங்கள். முதிர்வயதான அல்லது உடல் வலிமையற்ற ஒருவரைப் போய்ப் பார்ப்பது அல்லது ஏதோ செய்திகொண்டு செல்லும் உதவியை அவருக்குத் அளிப்பது தேவைப்படுகிறதா? ‘திக்கற்ற ஒரு பிள்ளையினிடம்’ சிறிது நேரம் செலவிடுவதும் கவனிப்பும் தேவைப்படுகிறதா? மனச்சோர்வுற்றிருக்கும் ஒருவருக்கு செவிகொடுத்துக் கேட்பது அல்லது சில ஆறுதலான வார்த்தைகள் சொல்வது தேவைப்படுகிறதா? இத்தகையான தயவுள்ள செயல்களுக்கு, நம்மால் கூடியவரை நேரம் ஒதுக்கிவைப்போமாக. (யோபு 29:12; 1 தெசலோனிக்கேயர் 5:14; யாக்கோபு 1:27) அபூரண ஆட்கள் நிறைந்திருக்கிற சபையில், தயவுக்குரிய மிக முக்கிய செயல்களில் ஒன்று மன்னிப்பது—முறையிடுவதற்கு நியாயமானக் காரணம் இருக்கிறபோதுங்கூட—கோபத்தை மனதில் பேணி வைக்காமல் மன்னிப்பது—தயவுக்குரிய மிக முக்கிய செயல்களில் ஒன்று என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (கொலோசெயர் 3:13) மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருப்பது, பிரிவினைகளும், உட்பகைகளையும், ஓயாச் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் சபையைக் காத்து வைப்பதற்கு உதவி செய்கிறது; இத்தகைய காரியங்கள் சகோதர அன்பின் தணலை அணைத்துப்போடுகின்றன.
20. நாம் எல்லாரும் எவ்வாறு நம்மைநாமே தொடர்ந்து ஆராய்ந்து வரவேண்டும்?
20 இந்த இன்றியமையாத அன்பின் தணல் நம்முடைய இருதயங்களில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்படி வைப்பதற்கு நாம் எல்லாரும் தீர்மானித்திருப்போமாக. நம்மைநாமே தொடர்ந்து ஆராய்ந்து வருவோமாக. மற்றவர்களுக்காக உடனொத்த உணர்ச்சியை நாம் காட்டுகிறோமா? மற்றவர்களுக்கு மதித்துணர்வு காட்டுகிறோமா? மற்றவர்களிடமாக தயவான செயல்களை நடப்பிக்கிறோமா? இவற்றை நாம் செய்துவரும் வரையில், இந்த உலகம் எவ்வளவு கடும் மோசமாக உணர்ச்சியற்றதானாலும் கவலைப்படவேண்டியதில்லை, அன்பின் தணலே நம் சகோதரத்துவத்துக்கு அனல் மூட்டிக்கொண்டிருக்கும். அப்படியானால், நிச்சயமாகவே, “உங்கள் சகோதர அன்பு நீடித்திருப்பதாக.”—இப்போதும் என்றென்றுமாக!—எபிரெயர் 13:1, NW.
[அடிக்குறிப்புகள்]
a கடவுளுடைய ஜனங்களைத் தொடுகிறவன் கடவுளுடைய கண்ணை அல்ல, இஸ்ரவேலின் கண்ணை அல்லது தன் சொந்த கண்ணையே தொடுகிறான் என்று சில மொழிபெயர்ப்புகள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. இந்தப் பிழை, இடைக்கால வேதபாரகர்கள் சிலரிடமிருந்து வந்தது; இவர்கள், மதிப்பற்றவையாகத் தாங்கள் கருதிய பகுதிகளைத் திருத்தும் தங்கள் முயற்சிகளில் தவறாக வழிநடத்தப்பட்டு, இந்த வசனத்தை மாற்றினார்கள். அவ்வாறு அவர்கள் யெகோவாவின் சொந்த ஒத்துணர்வின் உள்ளாழத்தைத் தெளிவாகத் தெரியாதபடி மறைத்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
◻ சகோதர அன்பு என்பது என்ன, அதை ஏன் நாம் நீடித்திருக்கச் செய்ய வேண்டும்?
◻ உடனொத்த உணர்வுடையோராக இருப்பது, நம் சகோதர அன்பைக் காத்துவர நமக்கு எவ்வாறு உதவி செய்கிறது?
◻ சகோதர அன்பில் மதித்துணர்வு என்ன பாகத்தை வகிக்கிறது?
◻ எவ்வாறு தயவுள்ள செயல்கள், கிறிஸ்தவ சபையில் சகோதர அன்பு செழித்தோங்கும்படி செய்கின்றன?
[பக்கம் 18-ன் படம்]
அன்பு செயல்படுதல்
சில ஆண்டுகளுக்கு முன்பாக, யெகோவாவின் சாட்சிகளுடன் சிறிது காலம் பைபிள் படித்திருந்த ஒருவர், சகோதர அன்பைப் பற்றி இன்னும் ஒருவாறு சந்தேக மனப்பான்மையுடையவராக இருந்தார். இயேசு இவ்வாறு சொன்னார் என்பதை அவர் அறிந்திருந்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) ஆனால் இதை நம்புவது கடினமாக இருப்பதாய் அவர் கண்டார். ஒருநாள், கிறிஸ்தவ அன்பு செயல்படுவதை அவர் காண நேரிட்டது.
சக்கர நாற்காலியில் கட்டுப்பட்ட தன் நிலையின் மத்தியிலும் தாய்நாட்டைவிட்டு வெகுதூரம் பயணப்பட்டுக்கொண்டிருந்தார். இஸ்ரேலிலுள்ள பெத்லகேமில், சபை கூட்டம் ஒன்றுக்கு அவர் சென்றார். அங்கு, அரபியரான ஒரு சாட்சி, சுற்றுப்பயணியான மற்றொரு சாட்சியை, அந்த இரவு தன் குடும்பத்துடன் தங்கும்படி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார், இந்த பைபிள் மாணாக்கரையும் அவரோடு வரும்படி அழைத்தார். படுக்கைக்குச் செல்லும் முன், விடியற்காலையில் சூரிய உதயத்தைக் காண வெளித் தாழ்வாரத்துக்கு செல்ல வீட்டுக்காரரிடம் அந்த மாணாக்கர் அனுமதி கேட்டார். அதைச் செய்யக்கூடாது என்று அவரை உபசரிப்பவர் கண்டிப்பாய் எச்சரித்தார். அதற்கான காரணத்தை, அடுத்த நாள் இந்த அரபிய சகோதரன் விளக்கிக்கூறினார். யூத பரம்பரையுடையவர்களை—இந்த பைபிள் மாணாக்கர் அவ்வாறு இருந்தார்—விருந்தாளிகளாகத் தான் வைத்திருந்தது தன் அயலாருக்குத் தெரியவந்தால், அவர்கள் அவரையும் வீட்டிலிருந்த குடும்பத்தாரையும் சேர்த்து வீட்டை எரித்து வீழ்த்தியிருப்பார்கள் என்று மொழிபெயர்த்துச் சொல்லும் ஒருவர் மூலமாய் அவர் சொன்னார். குழப்பமடைந்தவராய், அந்த பைபிள் மாணாக்கர், “அப்படியானால். ஏன் இத்தகைய ஆபத்தான பொறுப்பை ஏற்றீர்கள்?” என்று அவரைக் கேட்டார். மொழிபெயர்ப்பவர் மூலமாகப் பேசாமல், அந்த அரபிய சகோதரர் அவரை ஏறிட்டுப் பார்த்து, “யோவான் 13:35” என்று மாத்திரம் சொன்னார்.
அந்த பைபிள் மாணாக்கர், சகோதர அன்பின் அந்த உண்மையான வெளிக்காட்டால் ஆழ்ந்த முறையில் மனம் கவரப்பட்டவரானார். அதன்பின் அவர் சீக்கிரத்திலேயே முழுக்காட்டப்பட்டார்.
[பக்கம் 18-ன் படம்]
அப்போஸ்தலன் பவுலின் சிநேகப்பான்மையும் மதித்துணர்வுமுள்ள உள்ளார்ந்த பண்பு அவரை அணுகக்கூடியவராக்கினது