சகோதர அன்பைக் காட்ட தீர்மானமாக இருங்கள்
“தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள்.”—எபி. 13:1.
1, 2. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் ஏன் ஒரு கடிதத்தை எழுதினார்?
அது கி.பி. 61-வது வருஷம். இஸ்ரவேலில் இருந்த கிறிஸ்தவ சபைகள் ஓரளவு சமாதானமான சூழலில் இருந்தன. அப்போஸ்தலன் பவுல் ரோமிலுள்ள சிறையிலிருந்தாலும், சீக்கிரத்தில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்த்தார். அவரோடு மிஷனரி சேவை செய்த தீமோத்தேயு அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலையாகி இருந்தார். அவர்கள் இருவரும் யூதேயாவில் இருந்த சகோதரர்களைச் சந்திக்க இருந்தார்கள். (எபி. 13:23) இன்னும் 5 வருஷத்தில் யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள், முக்கியமாக எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்கள், ஒரு விஷயத்தை உடனடியாக செய்ய வேண்டியிருந்தது. அது என்ன? இயேசு சொன்னது போலவே ‘எருசலேம் படைகளால் சூழப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டியிருந்தது.’—லூக். 21:20-24.
2 இயேசு அந்த எச்சரிப்பைக் கொடுத்து 28 வருஷங்கள் ஆகியிருந்தது. அப்போது இஸ்ரவேலில் இருந்த கிறிஸ்தவர்கள் எவ்வளவோ பிரச்சினைகளையும் துன்புறுத்தல்களையும் அனுபவித்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். (எபி. 10:32-34) ஆனால், அவர்கள் அதுவரை அனுபவிக்காத சோதனைகளை சீக்கிரத்தில் அனுபவிக்க இருந்தார்கள். அதற்காக பவுல் அவர்களைத் தயார்படுத்த விரும்பினார். (மத். 24:20, 21; எபி. 12:4) இயேசு சொன்ன எச்சரிப்புக்கு கீழ்ப்படிய இன்னும் அதிகமான விசுவாசமும் சகிப்புத்தன்மையும் அந்த கிறிஸ்தவர்களுக்கு தேவைப்பட்டது. அப்போதுதான் அவர்களால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். (எபிரெயர் 10:36-39-ஐ வாசியுங்கள்.) அந்த சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதற்காக ஒரு கடிதத்தை எழுதும்படி யெகோவா பவுலைத் தூண்டினார். அந்தக் கடிதம்தான் பைபிளில் இருக்கும் எபிரெய புத்தகம்.
3. எபிரெய புத்தகம் நமக்கு ஏன் பிரயோஜனமாக இருக்கிறது?
3 எபிரெய புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள் இன்று நமக்கும் பிரயோஜனமாக இருக்கிறது. ஏனென்றால், யூத கிறிஸ்தவர்கள் இருந்த அதே சூழ்நிலையில்தான் நாமும் இருக்கிறோம். ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்கிறோம். நிறையப் பேர் பயங்கரமான துன்புறுத்தல்கள், பிரச்சினைகள் மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்திருக்கிறார்கள். (2 தீ. 3:1, 12) ஆனால், நாம் எல்லாருமே அந்தளவு துன்புறுத்தல்களை அனுபவிப்பதில்லை; ஓரளவு சமாதானமான சூழலில்தான் இருக்கிறோம். இருந்தாலும், பவுலுடைய காலத்திலிருந்த கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் இதுவரை அனுபவிக்காத சோதனைகளை சீக்கிரத்தில் அனுபவிக்க போகிறோம்.—லூக்கா 21:34-36-ஐ வாசியுங்கள்.
4. இந்த வருஷத்துக்கான வசனம் என்ன, அது ஏன் பொருத்தமாக இருக்கிறது?
4 சீக்கிரத்தில் வரப்போகிற சோதனைகளைச் சமாளிக்க எது நமக்கு உதவும்? நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும் நிறைய விஷயங்களை எபிரெய புத்தகத்தில் பவுல் எழுதியிருக்கிறார். அதில் ஒரு விஷயம் எபிரெயர் 13:1-ல் இருக்கிறது. “தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள்” என்று அந்த வசனம் சொல்கிறது. இதுதான் 2016-ன் வருடாந்தர வசனம்.
2016-ன் வருடாந்தர வசனம்: “தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள்.”—எபிரெயர் 13:1
சகோதர அன்பு என்றால் என்ன?
5. சகோதர அன்பு என்றால் என்ன?
5 கிரேக்க மொழியில் ‘சகோதர அன்பு’ என்ற வார்த்தை, “கூடப்பிறந்த சகோதரர்கள்மீது காட்டுகிற பாசத்தை” குறிக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்கள்மீதும் நெருங்கிய நண்பர்கள்மீதும் இருக்கிற ஆழமான அன்பை, பந்தபாசத்தை இந்த வார்த்தை குறிக்கிறது. (யோவா. 11:36) அப்படியென்றால், சபையில் இருப்பவர்களை பெயருக்காக சகோதர சகோதரிகள் என்று சொல்லக் கூடாது. அவர்களை உண்மையிலேயே நம் கூடப்பிறந்த சகோதர சகோதரிகளாக பார்க்க வேண்டும். (மத். 23:8) “ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று பவுல் சொல்கிறார். (ரோ. 12:10) நம் சகோதரர்கள்மீது ஆழமான அன்பைக் காட்ட வேண்டும் என்று இந்த வசனத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். சகோதர அன்போடு சேர்த்து கிறிஸ்தவ அன்பை (அகாப்பே அன்பை) காட்டும்போது, நாம் நெருங்கிய நண்பர்களாகவும் ஒற்றுமையாகவும் இருப்போம்.
6. உண்மை கிறிஸ்தவர்கள் யாரைச் சகோதரர்களாகப் பார்க்கிறார்கள்?
6 பொதுவாக, ‘சகோதர அன்பு’ என்ற வார்த்தையை கிறிஸ்தவர்கள் வெளியிடுகிற புத்தகங்களில்தான் பார்க்கிறோம். அன்று வாழ்ந்த யூதர்கள், தங்கள் சொந்தபந்தங்களையும் மற்ற யூதர்களையும்தான் “சகோதரர்களாக” பார்த்தார்கள். யூதராக இல்லாதவர்களை சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால், உண்மை கிறிஸ்தவர்கள் அப்படியில்லை. யெகோவாவை வணங்கும் மக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை சகோதரர்களாகவே பார்க்கிறார்கள். (ரோ. 10:12) ஒருவருக்கு ஒருவர் சகோதர அன்பைக் காட்ட வேண்டுமென்று யெகோவா நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். (1 தெ. 4:9) ஆனால், சகோதர அன்பைத் தொடர்ந்து காட்டுவது ஏன் முக்கியம்?
சகோதர அன்பைத் தொடர்ந்து காட்டுவது ஏன் முக்கியம்?
7. நாம் ஏன் சகோதர அன்பைக் காட்ட வேண்டும்?
7 சகோதர அன்பைக் காட்ட 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நாம் அந்த அன்பைக் காட்ட வேண்டுமென்று யெகோவாவே எதிர்பார்க்கிறார். ஏனென்றால், சகோதரர்கள்மீது அன்பு காட்டாதவர்களால் யெகோவாமீதும் அன்பு காட்ட முடியாது. (1 யோ. 4:7, 20, 21) இரண்டாவது காரணம், கஷ்ட காலங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டுமென்றால் நாம் இப்போதே சகோதர அன்பைக் காட்ட வேண்டும். எபிரெய கிறிஸ்தவர்களில் சிலர் சீக்கிரத்தில் தங்கள் வீடுகளையும் சொத்து சுகங்களையும் விட்டுவிட்டு போக வேண்டியிருந்தது. அது ரொம்ப கஷ்டமான காலப்பகுதியாக இருக்கும் என்று இயேசு சொன்னார். (மாற். 13:14-18; லூக். 21:21-23) அதனால், கஷ்டகாலம் வருவதற்கு முன்பே அவர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த அன்பைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.—ரோ. 12:9.
8. மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நாம் என்ன செய்ய வேண்டும்?
8 இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய உபத்திரவம் சீக்கிரத்தில் வரப்போகிறது. (மாற். 13:19; வெளி. 7:1-3) “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்” என்ற வசனத்திற்கு நாம் அப்போது கீழ்ப்படிய வேண்டும். (ஏசா. 26:20) அந்த ‘அறைகள்’ ஒருவேளை சபைகளைக் குறிக்கலாம். சகோதர சகோதரிகளோடு சேர்ந்து சபைகளில்தான் நாம் யெகோவாவை வணங்குகிறோம். ஆனால், நாம் சபைகளுக்கு வந்தால் மட்டும் போதாது. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்னது போல் அன்பு காட்டவும் நல்ல செயல்களைச் செய்யவும் நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த வேண்டும். (எபி. 10:24, 25) சகோதரர்கள்மீது இருக்கும் அன்பை நாம் இப்போதே பலப்படுத்தினால்தான் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதை நம்மால் சமாளிக்க முடியும்.
9. (அ) சகோதர அன்பைக் காட்டுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன? (ஆ) யெகோவாவின் மக்கள் சகோதர அன்பை எப்படிக் காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் கொடுங்கள். (பின்குறிப்பைப் பாருங்கள்.)
9 மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பும் சகோதர அன்பைக் காட்ட நமக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு பூமியதிர்ச்சி, பெருவெள்ளம், சுனாமி, சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளால் நிறைய சகோதர சகோதரிகள் கஷ்டப்படுகிறார்கள். இன்னும் சிலர், துன்புறுத்துதல்களை அனுபவிக்கிறார்கள். (மத். 24:6-9) ஊழல் நிறைந்த இந்த உலகத்தில் சிலர் பணப் பிரச்சினையால் கஷ்டப்படுகிறார்கள். (வெளி. 6:5, 6) நம் சகோதரர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போவதால் அவர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பும் நமக்கு நிறைய கிடைக்கிறது. இந்த உலகத்தில் அன்பு குறைந்துகொண்டே போனாலும் நம்மால் சகோதர அன்பைக் காட்ட முடியும். (மத். 24:12)[1]—பின்குறிப்பு.
சகோதர அன்பை எப்படித் தொடர்ந்து காட்டலாம்?
10. எதைப் பற்றி நாம் இப்போது பார்க்கப் போகிறோம்?
10 நமக்குப் பிரச்சினைகள் இருந்தாலும் சகோதர அன்பைத் தொடர்ந்து காட்டுகிறோம் என்று எப்படிச் சொல்லலாம்? அந்த அன்பை என்னென்ன வழிகளில் காட்டலாம்? “தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள்” என்று பவுல் சொன்ன பிறகு அதைக் காட்டுவதற்கான வழிகளையும் சொன்னார். சகோதர அன்பைக் காட்டுவதற்கான 6 வழிகளை இப்போது பார்க்கலாம்.
11, 12. உபசரிப்பது என்றால் என்ன? (ஆரம்பப் படம்)
11 “உபசரிக்கும் குணத்தைக் காட்ட மறந்துவிடாதீர்கள்.” (எபிரெயர் 13:2-ஐ வாசியுங்கள்.) உபசரிப்பது என்றால் முன்பின் தெரியாதவர்கள்மீதும் அன்பு காட்டுவதைக் குறிக்கிறது. இந்த வசனத்தைப் படிக்கும்போது நமக்கு ஆபிரகாமும் லோத்துவும்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். முன்பின் தெரியாதவர்களைக்கூட இவர்கள் உபசரித்தார்கள். பிறகுதான் அவர்கள் தேவதூதர்கள் என்று அவர்களுக்குத் தெரிய வந்தது. (ஆதி. 18:2-5; 19:1-3) உபசரிப்பதன் மூலமாக சகோதர அன்பைக் காட்ட இந்த உதாரணங்கள் எபிரெய கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியது.
12 நாம் எப்படி மற்றவர்களை உபசரிக்கலாம்? சாப்பிடுவதற்காக அல்லது உற்சாகப்படுத்துவதற்காக நம் சகோதர சகோதரிகளை வீட்டுக்குக் கூப்பிடலாம். நம் சபைக்கு வருகிற வட்டாரக் கண்காணியையும் அவருடைய மனைவியையும் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியவில்லை என்றாலும் அவர்களை நம் வீட்டுக்குக் கூப்பிடலாம். (3 யோ. 5-8) அதற்காக நிறைய பணம் செலவு செய்து பெரிய விருந்தை வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எவ்வளவு வசதியாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக அல்ல நம் சகோதரர்களை உற்சாகப்படுத்தவே நம் வீட்டுக்கு அழைக்கிறோம். அதேசமயம், சகோதரர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் நாம் உபசரிக்க வேண்டும். (லூக். 10:42; 14:12-14) நமக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, உபசரிக்கும் குணத்தை நாம் காட்ட வேண்டும்.
13, 14. சிறையில் இருப்பவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?
13 சிறையில் ‘விலங்கிடப்பட்டவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.’ (எபிரெயர் 13:3-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததன் காரணமாக சிறைக்கு போன சகோதரர்களை மனதில் வைத்துத்தான் பவுல் இந்த வார்த்தைகளைச் சொன்னார். சிறையில் இருந்தவர்கள்மீது ‘அனுதாபம் காட்டியதற்காக’ எபிரெய கிறிஸ்தவர்களை பவுல் பாராட்டினார். (எபி. 10:34) பவுல் 4 வருஷங்கள் சிறையில் இருந்தபோது அந்தப் பகுதியில் இருந்த சில சகோதரர்கள் அவருக்கு உதவி செய்தார்கள். ஆனால், தூரத்தில் இருந்த எபிரெய கிறிஸ்தவர்கள் பவுலுக்கு எப்படி உதவி செய்தார்கள்? அவர்கள் பவுலுக்காக உருக்கமாக ஜெபம் செய்தார்கள்.—பிலி. 1:12-14; எபி. 13:18, 19.
14 இன்றும் நிறைய யெகோவாவின் சாட்சிகள் சிறையில் இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் சகோதரர்கள் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். ஆனால், நாம் தூரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். எப்படி? அவர்களுக்காக உருக்கமாக ஜெபம் செய்யலாம், அவர்களைப் பற்றி அடிக்கடி யோசித்து பார்க்கலாம். உதாரணத்துக்கு, எரிட்ரியாவில் சிறையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் ஜெபம் செய்யலாம். முக்கியமாக, 20 வருஷங்களாக சிறையில் இருக்கும் பவுலோஸ் ஈயாசு, ஈசாக் மோகோஸ், நிகிடி டெக்லிமாரியாம் ஆகிய 3 சகோதரர்களுக்காக ஜெபம் செய்யலாம்.
15. திருமண ஏற்பாட்டை நாம் எப்படி மதிக்கலாம்?
15 ‘திருமண ஏற்பாட்டை மதியுங்கள்.’ (எபிரெயர் 13:4-ஐ வாசியுங்கள்.) ஒழுக்கமாக இருப்பதன் மூலமாகவும் நம்மால் சகோதர அன்பைக் காட்ட முடியும். (1 தீ. 5:1, 2) நாம் ஒரு சகோதரரோடு அல்லது சகோதரியோடு தவறான உறவு வைத்துக்கொண்டால் அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் நாம் துரோகம் செய்கிறோம். சகோதரர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கெடுக்கிறோம். (1 தெ. 4:3-8) கணவர் ஆபாசமான படங்களைப் பார்ப்பது மனைவிக்குத் தெரிய வந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்? தன்மீது கணவருக்கு அன்பு இருக்கிறது என்று மனைவி நம்புவாளா? திருமண ஏற்பாட்டை அவர் மதிக்கிறார் என்று நினைப்பாளா?—மத். 5:28.
16. போதுமென்ற மனதோடு இருப்பது சகோதர அன்பைக் காட்ட எப்படி உதவும்?
16 “உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்.” (எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.) யெகோவாமீது நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால், இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ்வோம். ஆனால், சகோதர அன்பைக் காட்ட இது எப்படி உதவும்? போதுமென்ற மனம் இருந்தால்தான் பணத்தைவிட சகோதர சகோதரிகள் முக்கியம் என்று நினைப்போம். (1 தீ. 6:6-8) நம் சகோதரர்களைப் பற்றி குறைசொல்ல மாட்டோம். நமக்கு வரும் கஷ்டங்களை நினைத்து புலம்ப மாட்டோம். பேராசைப்படவோ மற்றவர்களை பார்த்து பொறாமைப்படவோ மாட்டோம். அதற்கு பதிலாக, இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ்வோம், தாராள குணத்தைக் காட்டுவோம்.—1 தீ. 6:17-19.
17. நாம் தைரியமாக இருப்பதன் மூலம் சகோதர அன்பை எப்படிக் காட்ட முடியும்?
17 “மிகுந்த தைரியத்துடன்” இருங்கள். (எபிரெயர் 13:6-ஐ வாசியுங்கள்.) யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்கும்போது நமக்கு எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் சோர்ந்துபோக மாட்டோம், தைரியமாக இருப்போம். இப்படி தைரியமாக இருந்தால் நம் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த முடியும், அவர்களுக்கு ஆறுதலாக இருக்க முடியும். இந்த விதத்திலும் நம்மால் சகோதர அன்பைக் காட்ட முடியும். (1 தெ. 5:14, 15) மிகுந்த உபத்திரவம் சமயத்திலும் நம்மால் தைரியமாக இருக்க முடியும். ஏனென்றால், விடுதலை நெருங்கிவிட்டது என்று நமக்குத் தெரியும்.—லூக். 21:25-28.
18. மூப்பர்களிடம் நாம் எப்படிச் சகோதர அன்பைக் காட்டலாம்?
18 “உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்.” (எபிரெயர் 13:7, 17-ஐ வாசியுங்கள்.) மூப்பர்கள் நமக்கு உதவி செய்வதற்காக அவர்களுடைய நேரத்தை தாராளமாக செலவு செய்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார்கள். இதை நினைத்துப் பார்க்கும்போது நமக்கு அவர்கள்மீது இருக்கும் அன்பும் மரியாதையும் அதிகமாகிறது. அவர்கள் எதையும் வேண்டாவெறுப்பாக செய்யாமல் சந்தோஷத்தோடு செய்ய வேண்டும் என்றால் நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் ‘அவர்களை மிக உயர்வாய்க் கருதி, அவர்கள்மீது அன்பு காட்டுகிறோம்’ என்று சொல்ல முடியும்.—1 தெ. 5:13.
சகோதர அன்பை இன்னும் அதிகமாகக் காட்டுங்கள்
19, 20. சகோதர அன்பை நாம் எப்படி இன்னும் அதிகமாக காட்டலாம்?
19 யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்கள்மீது உண்மையான அன்பைக் காட்டுகிறார்கள். பவுல் காலத்திலும் சகோதரர்கள் இதுபோன்ற அன்பைத்தான் காட்டினார்கள். இருந்தாலும், “இன்னும் அதிகமாக” அன்பு காட்ட வேண்டும் என்று பவுல் உற்சாகப்படுத்தினார். (1 தெ. 4:9, 10) இன்னும் அதிகமாக அன்பு காட்ட நமக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
20 இந்த வருஷத்துக்கான வசனத்தை ராஜ்ய மன்றத்தில் பார்க்கும்போதெல்லாம் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘உபசரிக்கும் குணத்தை நான் எப்படி இன்னும் அதிகமா காட்டலாம்? சிறையில இருக்குற சகோதரர்களுக்கு நான் எப்படி உதவி செய்யலாம்? யெகோவா ஆரம்பிச்சு வைச்ச திருமண ஏற்பாட்டை நான் மதிக்கிறேனா? இருக்கிறதை வைச்சு திருப்தியா வாழ நான் என்ன செய்யலாம்? நான் யெகோவாவை எப்படி இன்னும் முழுசா நம்பலாம்? மூப்பர்களுக்கு முழுமையா கீழ்ப்படிய நான் இன்னும் என்ன செய்யணும்?’ இந்த எல்லா விஷயங்களிலும் முன்னேறுவதற்கு நாம் முயற்சி செய்தால், “தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள்” என்ற வசனம் நம் ராஜ்ய மன்ற சுவரில் மட்டுமல்ல நம் மனதிலும் பதிந்திருக்கும்.—எபி. 13:1.
^ [1] (பாரா 9) இயற்கை பேரழிவின்போது யெகோவாவின் சாட்சிகள் எப்படி சகோதர அன்பைக் காட்டினார்கள் என்பதை ஜூலை 15, 2002 காவற்கோபுரத்தில் பக்கம் 8-9-ஐ பாருங்கள். யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் (Proclaimers) என்ற ஆங்கில புத்தகத்தில் 19-வது அதிகாரத்தையும் பாருங்கள்.