உங்கள் மணவாழ்வை மணம்வீச செய்ய முடியும்!
கணவன்மாருக்கும் மனைவிமாருக்கும் நன்மை தரும் நடைமுறையான ஆலோசனைகள் பைபிளில் பொதிந்து காணப்படுகின்றன. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஏனென்றால் பைபிளை தந்தவரே திருமண ஏற்பாட்டையும் துவக்கியவர்!
நிஜ மணவாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை பைபிள் படம்பிடித்துக் காட்டுகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் ‘உபத்திரவம்’—அல்லது, நியூ இங்லீஷ் பைபிள் சொல்கிறபடி, “வேதனையும் வருத்தமும்”—உண்டு என்பதை அது ஒத்துக்கொள்கிறது. (1 கொரிந்தியர் 7:28) ஆனாலும், மணவாழ்க்கை மகிழ்ச்சியையும் பரவசத்தையும் தரும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் அது சொல்கிறது. (நீதிமொழிகள் 5:18, 19) இந்த இரு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. தலையே போகிற பிரச்சினைகள் வந்தாலும், கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான, நேசமான உறவை வைத்துக்கொள்ள முடியும் என்பதையே இது காட்டுகிறது.
உங்களுடைய தாம்பத்தியத்தில் இது குறைவுபடுகிறதா? நெருக்கமான உறவும் சந்தோஷமும் பூத்துக்குலுங்கிய உங்கள் திருமண தோட்டத்தை வேதனையும் சோர்வும் வாடிவதங்கச் செய்துவிட்டதா? பல வருடங்களாகவே உங்களுடைய மண வாழ்வில் அன்பு மணம் கமழாதிருந்தாலும், அதைத் திரும்பவும் மணம் கமழச் செய்ய முடியும். ஆனால் நீங்கள் யதார்த்தமானவர்களாக இருக்க வேண்டும். அபூரணரான எந்த ஆணோ பெண்ணோ ஒரு பூரண மண வாழ்வை அனுபவிக்க முடியாது. இருந்தாலும், பிரச்சினைகளை களைந்தெறிய வழிகள் இருக்கின்றன.
இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்கும்போது, இதில் எந்த குறிப்பு உங்களுடைய மண வாழ்க்கைக்குப் பொருத்தமானது என்பதை கண்டுகொள்ள முயலுங்கள். துணைவரின் குறைபாடுகளையே எப்போதும் துருவித்துருவி பார்த்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, உங்களால் பின்பற்ற முடிகிற சில குறிப்புகளைத் தெரிந்தெடுத்து அந்த வேதப்பூர்வ ஆலோசனையை கடைப்பிடியுங்கள். அப்போது, உங்களுடைய மண வாழ்க்கை மலரும் என்பதற்கு நீங்கள் நினைத்ததைவிட அதிக நம்பிக்கை இருப்பதை காணலாம்.
முதலில் மனப்பான்மையைப் பற்றி சிந்திக்கலாம். ஏனெனில் உங்கள் உறுதிமொழியை எப்படி கருதுகிறீர்கள் என்பதும், துணைவர் மீது உங்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளுமே மிக முக்கியம்.
உறுதிமொழி பற்றிய உங்கள் கண்ணோட்டம்
உங்களுடைய திருமண ஓடத்தை செப்பனிட விரும்பினால், அதை நீங்கள் நீண்டகால கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம். இரண்டு உள்ளங்கள் இணைபிரியாமல் சேர்ந்திருக்க செய்வதற்கே கடவுள் இந்த விவாக ஏற்பாட்டை உருவாக்கினார். (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:4, 5) ஆகவே, உங்கள் கணவனோடு அல்லது மனைவியோடு உங்களுக்கு இருக்கும் பந்தம், ஏதோ ஒரு பிடிக்காத வேலையை வேண்டாம் என்று விட்டுவிடும் சமாச்சாரமோ அல்லது வெறுமனே ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு ஒரு வீட்டை காலிபண்ணி போய்விடும் சமாச்சாரமோ அல்ல. மாறாக, வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் உங்களுடைய துணையோடு சேர்ந்து வாழ்வீர்கள் என்றே திருமணம் செய்துகொண்டபோது மனப்பூர்வமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள். அந்த திருமண உறுதிமொழியை எப்போதும் மனதில்கொள்வது சுமார் 2,000 வருஷங்களுக்குமுன் இயேசு கிறிஸ்து குறிப்பிட்டதற்கு ஒத்திருக்கிறது: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—மத்தேயு 19:6.
‘நாங்கள் இன்றுவரை சேர்ந்துதான் வாழ்கிறோம். அப்படியானால், உறுதிமொழியை காத்துக்கொள்கிறோம் என்றுதானே அர்த்தம்?’ என சிலர் சொல்லலாம். ஒருவேளை இருக்கலாம். இருந்தாலும், முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, சேர்ந்து வாழும் தம்பதிகள் சிலர், அன்பற்ற மணவாழ்க்கை எனும் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் மாட்டிக்கொண்டது போல் இருக்கிறார்கள். மண வாழ்க்கையை சகித்துக்கொள்வதல்ல, அதை சந்தோஷமுள்ளதாக்குவதே உங்கள் இலட்சியம். உறுதிமொழிக்கு ஏற்ப வாழ்வது, விவாக ஏற்பாட்டிற்கு மட்டுமல்ல, “பூமியில் வாழும் காலமெல்லாம் நேசித்தும், அருமையானவராக ஆதரித்தும் வருவேன்” என நீங்கள் யாருக்கு வாக்குக் கொடுத்தீர்களோ அவருக்கும் விசுவாசமாக இருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.—எபேசியர் 5:33.
உங்கள் துணைவரிடம் சொல்லும் விஷயங்களெல்லாம், எந்தளவு உறுதிமொழியை மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டும். உதாரணமாக, கோபம் பொங்கியெழுகையில் கணவன்மார் அல்லது மனைவிமார் சிலர், “இனிமே உன்கூட வாழ முடியாது,” அல்லது, “என்னை மதிக்கிற யாரையாவது கட்டிக்கப் போகிறேன்” என முன்பின் யோசிக்காமல் சொல்லலாம். சொன்ன மாதிரியே செய்யப்போவதில்லை என்றாலும், உறுதிமொழியை மதிப்பதில் குறைவுபடுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஏனெனில் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரிந்துவிடலாம் என்பதையும், அப்படிச் சொல்கிறவர் வெளியேற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருக்கிறார் என்பதையுமே இது அர்த்தப்படுத்துகிறது.
மண வாழ்க்கையில் அன்பு மலர் மீண்டும் மலர வேண்டுமென்றால், நீங்கள் பேசும்போது இப்படிப்பட்ட பயமுறுத்தும் வார்த்தைகளை தவிருங்கள். எப்பொழுது வேண்டுமானாலும் காலி செய்ய வேண்டியிருக்கும் என நினைக்கும் ஒரு வீட்டை அலங்கரிப்பீர்களா? அப்படியானால், நிலைக்காத ஒரு மண வாழ்விற்காக உங்கள் துணைவர் உங்களோடு சேர்ந்து உழைக்கும்படி ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? தீர்வு காண ஊக்கமாக உழைப்பீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்.
கொஞ்ச காலமாகவே தன் கணவனின் தொல்லைகளை சகித்துவந்த ஒரு மனைவி இதையே செய்தார். “சில சமயத்துல நான் அவரை அறவே வெறுத்தேன், ஆனால் அவரை விட்டு பிரிஞ்சு வாழ்றதப் பத்தி நான் நினைச்சுக்கூட பார்க்கல. என்னதான் குறை இருந்தாலும், எப்படியாவது அதை சரிபண்ணத்தான் பார்த்தோம். பயங்கர கொந்தளிப்பான அந்த இரண்டு வருஷ காலத்திற்குப்பின், இப்போ என்னால் உறுதியா சொல்ல முடியும், நாங்க ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷமா வாழ்றோம்” என அவர் சொல்கிறார்.
ஆம், உறுதிமொழிக்கு ஏற்ப வாழ்வது இருவர் பங்கிலும் உழைப்பை அர்த்தப்படுத்துகிறது. ஏதோ ஒப்புக்கு ஒன்றுசேர்ந்து வாழ்வதை அல்ல, ஆனால் பொதுவான ஓர் இலக்கை அடைய இருவரும் ஒருமித்து உழைப்பதை அர்த்தப்படுத்துகிறது. இருந்தாலும், ஏதோ கடமையுணர்வு என்று ஒன்று இருப்பதால் மட்டுமே நீங்கள் சேர்ந்து வாழ்கிறீர்கள் என உணரலாம். அப்படியானால், நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். இழந்த அன்பை மீண்டும் நிலைநாட்டலாம். எப்படி?
உங்கள் துணையை மதித்தல்
“திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக” என பைபிள் குறிப்பிடுகிறது. (எபிரெயர் 13:4, கத்தோலிக்க பைபிள்; ரோமர் 12:10) ‘மதிக்கப்படுதல்’ என இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை பைபிளின் மற்ற பாகங்களில் “அருமையான,” “கனம்பெற்ற,” “விலையேறப்பெற்ற” என பல வித்தியாசமான வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை உயர்வாக மதிக்கும்போது, அதை பராமரிப்பதற்கு கஷ்டப்பட்டு உழைப்பீர்கள். விலையுயர்ந்த புதிய காரை வைத்திருக்கும் ஒருவரை ஒருவேளை நீங்கள் கவனித்திருக்கலாம். அந்த அருமையான காரை எப்போதும் பளபளவென நல்ல கண்டிஷனில் வைத்துக்கொள்கிறார். அவரைப் பொறுத்தமட்டில் சின்ன கீறல்கூட ஒரு பெரிய விஷயம்தான்! மற்றவர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தை இதுபோல கவனித்துக் கொள்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் தங்களுடைய உடல் நலத்தை உயர்வாக மதிக்கிறார்கள், ஆகவே அதை பேணி பாதுகாக்க விரும்புகிறார்கள்.
உங்கள் மண வாழ்க்கையையும் இதேபோல பேணி பாதுகாத்திடுங்கள். அன்பு, “அனைத்தையும் நம்பும்” என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:7, பொது மொழிபெயர்ப்பு) “நாங்க ஒருநாளும் அன்பா இருந்தது கிடையாது,” “சின்ன வயசிலேயே கலியாணம் பண்ணிக்கிட்டோம்” அல்லது “நாங்க என்ன செய்துட்டிருந்தோம் என்று எங்களுக்கே தெரியல” என்றெல்லாம் சொல்லி முன்னேற்றம் செய்வதற்கான வாய்ப்பையே ஒதுக்கிவிடலாம். இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணத்திற்குப் பதிலாக, முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்து, அதற்காக உழைத்து, பலன் கிடைக்கும் வரை ஏன் பொறுமையோடு இருக்கக்கூடாது? “எங்கிட்ட வருகிற பலபேர், ‘என்னால் இனி சமாளிக்கவே முடியாது!’ என்றுதான் சொல்கிறார்கள்” என திருமண ஆலோசகர் ஒருவர் கூறுகிறார். “எந்தெந்த விஷயங்களில் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதை அலசிப் பார்க்காமல், ஒரேயடியாக கைவிட்டுவிடுகிறார்கள். அதாவது, இதுவரை ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துகொண்ட மதிப்புமிக்க காரியங்களையும், கடந்தகால சம்பவங்களையும், வருங்காலத்திற்கான எதிர்பார்ப்பையும் மறந்துவிட்டு திருமண பந்தத்தை ஒரேடியாக முறித்துவிடுகிறார்கள்.”
கடந்த காலத்தில் நிகழ்ந்த என்ன சம்பவங்களை உங்கள் துணையோடு பகிர்ந்து கொள்கிறீர்கள்? உங்களுடைய மண வாழ்வில் எவ்வளவுதான் சண்டை சச்சரவுகளை பார்த்திருந்தாலும், நீங்கள் அனுபவித்து மகிழ்ந்த சுவையான நிகழ்ச்சிகளை, படைத்த சாதனைகளை, கூட்டாக சந்தித்த சவால்களை—இன்னும் எத்தனை எத்தனையோ இனிய சம்பவங்களை—மறுபடியும் மனத்திரையில் பார்க்கலாம். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, உங்களுடைய உறவு சங்கிலியை உறுதியாக்க மனப்பூர்வமாக பாடுபடுங்கள். இவ்வாறு உழைப்பதன் மூலம் உங்களுடைய திருமணத்தையும் துணைவரையும் மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டும் என்பதில் யெகோவா தேவனுக்கு அதிக அக்கறை இருப்பதை பைபிள் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் நாளில், இஸ்ரவேல் தேசத்தை சேர்ந்த கணவன்மார் அற்பமான விஷயங்களுக்கெல்லாம் தங்களுடைய மனைவிமாரை மணவிலக்கு செய்து அவர்களுக்கு துரோகம் செய்ததை யெகோவா கண்டனம் செய்தார். (மல்கியா 2:13-16) கிறிஸ்தவர்கள் தங்களுடைய மண வாழ்க்கை யெகோவா தேவனுக்கு புகழாரம் கொண்டுவர வேண்டுமென விரும்புகிறார்கள்.
சண்டை சச்சரவுகள்—எவ்வளவு மோசமானது?
சண்டை சச்சரவுகளை சமாளிக்கும் திறமை கணவனுக்கும் மனைவிக்கும் இல்லாதிருப்பதே மண வாழ்க்கையில் அன்பு தணிந்துபோவதற்கு முக்கிய காரணமாகும். எந்த இரு நபரும் ஒன்றுபோல் இருப்பதில்லை, ஆகவே எல்லாருடைய மண வாழ்விலும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும். ஆனால் எப்போதும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகாத தம்பதிகள், காலங்கள் செல்லச் செல்ல தங்களுடைய அன்பு தணிந்து போயிருப்பதை காணலாம். “நாங்க எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுகிட்டே இருக்கிறோம். எங்க ரெண்டு பேருக்கும் துளிகூட ஒத்துவராது” என்ற முடிவுக்கும் வரலாம்.
ஆனால், ஏதோ சண்டை சச்சரவுகள் இருப்பதை சாக்காக வைத்து மண வாழ்க்கைக்கு மங்களம் பாடிவிட வேண்டியதில்லை. சண்டை சச்சரவுகளை சமாளிப்பது எப்படி என்பதுதான் கேள்வி. வெற்றிகரமான மண வாழ்க்கையில் கணவனும் மனைவியும் தங்களுடைய பிரச்சினைகளை பேச கற்றுக் கொண்டிருக்கிறார்கள்—ஆனால் ஒரு டாக்டர் சொன்னதுபோல், “அன்னியோன்யமான விரோதிகளாக” ஆவதில்லை.
‘நாவின் அதிகாரம்’
பிரச்சினைகளைக் குறித்து எப்படி பேசுவது என்று உங்களுக்கும் உங்களுடைய துணைவருக்கும் தெரியுமா? பிரச்சினைகளைக் குறித்து பேச இருவருமே மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். உண்மையிலேயே அதை தெரிந்திருப்பது ஒரு கலை, தெரிந்துகொள்வதும் ஒரு சவால். ஏன்? ஏனென்றால் அபூரணத்தின் காரணமாக நாம் அனைவரும் அவ்வப்போது ‘சொல் தவறுகிறோம்.’ (யாக்கோபு 3:2) மேலும், எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென எரிந்துவிழும் பெற்றோரையுடைய குடும்பங்களில் சிலர் வளர்ந்து வந்திருக்கிறார்கள். சீறிவிழுவதும் கண்டபடி திட்டுவதும் சாதாரண விஷயம் என்று சிறு பிராயத்திலேயே அவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த சிறுவன் ‘கோபக்காரனாகவும்’ ‘மூர்க்கனாகவும்’ மாறலாம். (நீதிமொழிகள் 29:22) அது போலவே, இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த சிறுமி, ‘சண்டைக்காரியும் கோபக்காரியுமாக’ இருப்பாள். (நீதிமொழிகள் 21:19) வேரூன்றிய இந்த சிந்தைகளையும் பழக்கங்களையும் பிடுங்கி எறிவது கடினமாக இருக்கலாம்.a
அப்படியானால், சண்டை சச்சரவுகளை சமாளிக்க, ஒருவர் தன்னுடைய எண்ணங்களை புதுவிதமாக தெரியப்படுத்தக் கற்றுக்கொள்வதும் அவசியம். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல, ஏனென்றால் பைபிள் பழமொழி கூறுகிறது: “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்.” (நீதிமொழிகள் 18:21) இது சாதாரண விஷயமாக இருந்தாலும், உங்களுடைய துணைவரோடு நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பது உங்களுடைய திருமண பந்தம் எனும் பாலத்தை பலப்படுத்தவும் முடியும், தகர்த்தெறியவும் முடியும். “பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம் [“புண்களை ஆற்றும்,” பொ.மொ.]” என மற்றொரு பழமொழி சொல்கிறது.—நீதிமொழிகள் 12:18.
இந்த விஷயத்தில் புண்படுத்துவது உங்களுடைய துணைவராகவே இருந்தாலும், கருத்து வேறுபாடு வரும்போது நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய வார்த்தைகள் புண்படுத்துகிறதா அல்லது புண்ணை ஆற்றுகிறதா? அவை கோபத்தை தூண்டுகின்றனவா அல்லது தணிக்கின்றனவா? “கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” என பைபிள் சொல்கிறது. அதற்கு நேர்மாறாக, “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.” (நீதிமொழிகள் 15:1) கடுஞ்சொற்கள்—அதை அமைதியாக சொன்னாலும்கூட—எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கும்.
உண்மைதான், ஏதாவது ஒரு விஷயம் உங்களுடைய மனதை நெருடினால் அதை எடுத்துச் சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. (ஆதியாகமம் 21:9-12) ஆனால் அப்படிச் சொல்லும்போது நக்கலாகவோ குத்தலாகவோ இழிவாகவோ பேசக் கூடாது. உங்களுக்கு கண்டிப்பான சில வரம்புகளை வைத்துக்கொள்ளுங்கள், அதாவது, “‘உங்கள எனக்குப் பிடிக்கல’ அல்லது ‘நான் உங்கள கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது’” போன்ற வார்த்தைகளை இனிமேல் உங்கள் துணையிடம் பேசக்கூடாது என நீங்கள் முடிவு எடுக்கலாம். “சொற்போர்கள்,” “அற்ப விஷயங்களுக்காக கடும் வாக்குவாதங்கள்” என்று பவுல் சொன்னபோது குறிப்பாக திருமணத்தைப் பற்றி பேசவில்லையென்றாலும், இப்படிப்பட்ட தர்க்கங்களில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருப்பது ஞானமான காரியம்.b (1 தீமோத்தேயு 6:4, 5, NW) உங்களுடைய துணைவர் இதுபோன்ற முறைகளை கையாளுவதால் நீங்களும் அப்படியே செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களை பொறுத்தவரை சமாதானத்தை நாடுங்கள்.—ரோமர் 12:17, 18; பிலிப்பியர் 2:16.
கோபக்கனல் பறக்கும்போது ஒருவருடைய சொற்களைக் கட்டுப்படுத்துவது கடினமே. “நாவும் நெருப்புத்தான்” என பைபிள் எழுத்தாளர் யாக்கோபு சொல்கிறார். “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.” (யாக்கோபு 3:6, 8) கோபம் வருகிறது என தெரிந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இல்லாமல் நீர் வார்க்கும் விதமாக உங்கள் துணையிடம் நீங்கள் எப்படி பேசலாம்?
வெடிக்கும் விவாதங்களை தணித்தல்
தங்களுடைய துணையின் செயல்களை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக தங்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை முக்கியப்படுத்திக் காட்டுவதே கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் எளிய வழி என்பதை சிலர் கண்டிருக்கிறார்கள். உதாரணமாக, ‘“என் மனச ரொம்ப நோகடிச்சுட்ட” அல்லது “எப்படிப் பேசணும்னு உனக்குக் கொஞ்சம்கூட தெரியல”’ என்று சொல்வதைவிட ‘“நீ சொன்னது எனக்கு ரொம்ப வேதனையா இருக்குது”’ என சொல்வதே சிறந்தது. அதேசமயம், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை கோபமாகவோ வெறுப்புடனோ சொல்லக்கூடாது. உங்களுடைய நோக்கம் அந்த நபரை தாக்குவதற்குப் பதிலாக பிரச்சினை என்ன என்பதற்கு கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும்.—ஆதியாகமம் 27:46–28:1.
அதோடு, “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்பதையும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். (பிரசங்கி 3:7) ஒருவர்கூட செவிகொடுத்துக் கேட்காமல் இருவரும் ஒரே சமயத்தில் பேசிக்கொண்டே இருந்தால், எதையும் சாதிக்க முடியாது. நீங்கள் கேட்பதற்கான சமயம் வரும்போது, “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருங்கள். “கோபிக்கிறதற்குத் தாமதமா[க]” இருப்பதும் முக்கியமானது. (யாக்கோபு 1:19) உங்கள் துணைவர் சொல்லுகிற, கேட்க சகிக்காத ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே எடுத்துக்கொள்ளவும் வேண்டாம், ‘உங்கள் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளவும்’ வேண்டாம். (பிரசங்கி 7:9) அதற்குப் பதிலாக, உங்கள் துணைவர் அப்படி பேசுவதற்கு காரணமாயிருக்கும் உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முயலுங்கள். “மனுஷனுடைய விவேகம் [“உட்பார்வை,” NW] அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 19:11) கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ உட்பார்வை இருந்தால் கருத்து வேறுபாடுகளுக்கு காரணம் என்ன என்பதை காண்பதற்கு உதவலாம்.
உதாரணமாக, கணவன் தன்னோடு நேரம் செலவழிப்பதே இல்லை என மனைவி குறைபட்டுக் கொள்ளலாம். பிரச்சினைக்கு காரணம் எவ்வளவு மணிநேரம் அல்லது நிமிஷம் செலவழிக்கிறார் என்பது அல்ல, அவளை புறக்கணிப்பதாக அல்லது மதிக்காததாக அவள் உணருவதே ஆகும். அது போலவே மனைவி தன்னைக் கேட்காமல் திடீரென எதையோ வாங்கி வந்துவிட்டதாக புகார் செய்யும் கணவனுக்கு, அவள் எவ்வளவு ரூபாய் அல்லது காசு செலவழித்தாள் என்பது உண்மையில் பிரச்சினையல்ல. ஆனால் தீர்மானம் எடுக்கும் விஷயத்தில் அவருடைய உணர்ச்சியை உதறித் தள்ளிவிட்டதே மனதை புண்படுத்தியிருக்கலாம். கணவன் அல்லது மனைவி இந்த விஷயத்தில் உட்பார்வையை காண்பிப்பது பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து நீக்குவதற்கு உதவும்.—நீதிமொழிகள் 16:23.
இதையெல்லாம் செய்வதைக் காட்டிலும் சொல்வது எளிது என நீங்கள் நினைக்கிறீர்களா? செய்வது கடினம்தான். எவ்வளவோ முயன்றும் சில சமயங்களில் அன்பற்ற வார்த்தைகளை பேசிவிடலாம், கோபமும் பற்றிக்கொண்டு வரலாம். இப்படி நடக்கப்போவதாக நீங்கள் உணர்ந்தால், நீதிமொழிகள் 17:14-ல் (NW) உள்ள ஆலோசனையை பின்பற்றுங்கள்: “விவாதம் எழும்புமுன் அவ்விடத்தை விட்டுப் புறப்படு.” கோபம் தணியும்வரை அதைப் பற்றி பேசுவதை ஒத்திப்போடுவதில் தவறில்லை. கோபப்படாமல் அமைதியாக பேசுவது கடினம் எனும்போது, முதிர்ச்சியுள்ள நண்பர் ஒருவரை உங்களோடு உட்கார வைத்து உங்களுடைய கருத்து வேறுபாடுகளை தீர்க்க உதவுமாறு கேட்பது பொருத்தமானதாக இருக்கும்.c
யதார்த்தமாக இருங்கள்
திருமணத்திற்குமுன் நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கையில் நினைத்த மாதிரி மணவாழ்க்கை இல்லையென்றால் நீங்கள் சோர்ந்துபோய்விட வேண்டாம். திருமண வல்லுநர் குழு ஒன்று இவ்வாறு சொல்கிறது: “திருமணம் என்பது பலருக்கு எப்பொழுதும் இன்பமான வாழ்க்கையாக இல்லை. சில சமயங்களில் இன்பம் பொங்குகிறது சில சமயங்களில் துன்பம் பொங்குகிறது.”
உங்கள் மண வாழ்க்கை காதல் காவியமாக இல்லாமல் இருக்கலாம், அதேசமயத்தில் சோகக் கதையாக ஆகிவிட வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் ஒருவருக்கொருவர் பொறுத்துப்போக வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும், அதே சமயத்தில் உங்களுடைய மன வேறுபாடுகளை மறந்து, ஒருவருக்கொருவர் சந்தோஷமாக, ஜாலியாக, நண்பர்களைப் போல பேசி மகிழும் சந்தர்ப்பங்களும் வரும். (எபேசியர் 4:2; கொலோசெயர் 3:13) அணைந்துவிட்ட அன்பெனும் விளக்கை மீண்டும் பிரகாசிக்கச் செய்வதற்கு இவைதான் சந்தர்ப்பங்கள்.
அபூரணரான இரண்டு நபர்களால் பூரணமான மண வாழ்க்கையை வாழ முடியாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். ஆனால் ஓரளவுக்கு சந்தோஷமாக வாழ முடியும். சொல்லப்போனால், கஷ்டங்கள் மத்தியிலும்கூட, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உள்ள உறவு அதிக திருப்தியை சுரக்கும் ஊற்றாக விளங்க முடியும். ஒரு விஷயம் நிச்சயம்: நீங்களும் உங்களுடைய துணையும் ஒன்று சேர்ந்து உழைத்தால், விட்டுக்கொடுக்க மனமுள்ளவர்களாக இருந்தால், பிறருடைய நன்மையையே நாடினால் உங்களுடைய மண வாழ்வு மணம் வீசும் மலர்ச்சோலையாக மாறும் என்பது திண்ணம்.—1 கொரிந்தியர் 10:24.
(g01 1/8)
[அடிக்குறிப்புகள்]
a வளர்ப்பு சூழலை சாக்காக வைத்து துணைவரிடம் கடுகடுப்பாக பேசுவதை நியாயப்படுத்த முடியாது. இருந்தாலும், இப்படிப்பட்ட குணம் மிகவும் சிரமப்பட்டு களைந்தெறிய வேண்டிய அளவுக்கு எப்படி ஆழமாக வேர்கொண்டு விடுகிறது என்பதை இது விளக்கலாம்.
b “அற்ப விஷயங்களுக்காக கடும் வாக்குவாதங்கள்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல கிரேக்க வார்த்தையை “ஒருவருக்கொருவர் சினமூட்டுதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
c யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவ சபையில் நிறைய மூப்பர்கள் இருக்கிறார்கள். கணவன் மனைவிக்கிடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினைகளில் தலையிடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லையென்றாலும், மனவேதனையில் தத்தளிக்கும் தம்பதிகளுக்கு புத்துணர்ச்சியளிக்கும் உதவியை அவர்களால் அளிக்க முடியும்.—யாக்கோபு 5:14, 15.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
உங்களுடைய வார்த்தைகள் புண்படுத்துகிறதா அல்லது புண்ணை ஆற்றுகிறதா?
[பக்கம் 10-ன் பெட்டி/படங்கள்]
பந்தை மெதுவாக போடுங்கள்
“அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் [“இனியதாயும்,” பொ.மொ.] உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 4:6) திருமணத்தில் இது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இதை விளக்க: பந்தை தூக்கிப்போட்டு பிடிக்கும் விளையாட்டில், அதை எளிதாக பிடிப்பதற்காக நீங்கள் மெதுவாக போடுகிறீர்கள். உங்களோடு விளையாடுபவரை காயப்படுத்தும் அளவுக்கு காட்டுத்தனமாக வீச மாட்டீர்கள். உங்களுடைய துணையிடம் பேசும்போதும் இதே நியமத்தைப் பொருத்துங்கள். கடுகடுப்பான வார்த்தைகளை வீசுவது புண்படுத்தத்தான் செய்யும். மாறாக, உங்களுடைய துணை உங்களுடைய குறிப்பை கப்பென்று பிடித்துக்கொள்வதற்கு மென்மையாக, இனிமையாக பேசுங்கள்.
[பக்கம் 11-ன் பெட்டி/படம்]
நினைவலைகள்!
கடந்தகால கடிதங்களையும் ‘கார்டு’களையும் வாசியுங்கள். போட்டோக்களை எடுத்துப் பாருங்கள். ‘என் மனைவியிடம்/கணவனிடம் என்னைக் கவர்ந்தது எது? என்னென்ன குணங்களை நான் ரொம்ப மெச்சினேன்? நாங்கள் ஒன்று சேர்ந்து என்னென்ன செய்தோம்? எது எங்களை சிரிக்க வைத்தது?’ போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். பின்பு, நெஞ்சை விட்டு நீங்கா இந்த நினைவுகளை மனைவியிடம்/கணவனிடம் பேசுங்கள். “ஞாபகமிருக்கா, நாம . . .?” என்ற வார்த்தைகளோடு பேச்சை ஆரம்பிப்பது, ஒருகாலத்தில் நீங்கள் பகிர்ந்துகொண்ட உணர்ச்சிகளை புதுப்பிப்பதற்கு உங்களுக்கும் உதவும், உங்களுடைய மனைவிக்கும்/கணவனுக்கும் உதவும்.
[பக்கம் 12-ன் பெட்டி]
புதுத் துணை, அதே பிரச்சினைகள்
அன்பற்ற மணவாழ்வில் சிக்கித் தவிப்பதாக நினைக்கும் கணவன்மார் அல்லது மனைவிமார் சிலர், புதுத் துணையுடன் புதுவாழ்வை ஆரம்பிக்க தூண்டப்படுகின்றனர். ஆனால் பைபிளோ விபச்சாரத்தை கண்டனம் செய்கிறது, இப்படிப்பட்ட பாவத்தில் ஈடுபடுபவர் “மதிகெட்டவன்;” “அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்” என சொல்கிறது. (நீதிமொழிகள் 6:32) கடைசியில், மனந்திரும்பாத அந்த விபச்சாரக்காரர் கடவுளுடைய தயவை இழந்துவிடுவார், இது எல்லாவற்றையும்விட பெரிய அழிவு.—எபிரெயர் 13:4.
விபச்சாரத்தின் அடிமுட்டாள்தனம் மற்ற விதங்களிலும் வெளிப்படுகிறது. புதுத் துணையை கட்டிக்கொள்கிற விபச்சாரக்காரர் முதல் கலியாணத்தில் எதிர்ப்பட்ட அதே பிரச்சினைகளை இப்பொழுதும் ஒருவேளை எதிர்ப்படலாம். சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயத்தையும் டாக்டர் டையன் மெட்வெட் சொல்கிறார்: “உங்களுடைய புதிய துணைவர் அறிந்துகொண்ட முதல் காரியம் நீங்கள் துரோகம் செய்ய தயாராக இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடும் என்பதை அவரோ அல்லது அவளோ அறிந்துகொள்கிறார். சாக்குப்போக்கு சொல்வதில் சகலகலா வல்லவர், இணைபிரிய மாட்டோம் என்ற ஒப்பந்தத்தை எளிதில் தகர்த்துவிடுபவர் என்பதை தெரிந்துகொள்கிறார்(ள்). தன்னல இன்பத்தையும் சுகத்தையுமே நாடிச் செல்பவர் என்பதையும் அறிந்துகொள்கிறார். . . . நீங்கள் மீண்டும் யார் பின்னாடியும் போகமாட்டீர்கள் என்பதில் இரண்டாவது மனைவிக்கு அல்லது கணவருக்கு என்ன நிச்சயம்?”
[பக்கம் 14-ன் பெட்டி]
பைபிள் நீதிமொழிகள் தரும் ஞானம்
• நீதிமொழிகள் 10:19: “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.”
நீங்கள் நிலைகுலைந்து போயிருக்கும் சமயத்தில், உங்களையே மீறி பேசக் கூடாததை எல்லாம் பேசிவிடலாம்—அதற்காக பின்னால் வருந்தலாம்.
• நீதிமொழிகள் 15:18: “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.”
தேள்போல கொட்டுகிற குற்றச்சாட்டுகள், உங்களுடைய துணை எதிர்க்கும்படி செய்யலாம். ஆனால் பொறுமையாக செவிகொடுத்துக் கேட்பதோ தீர்வுகாண உங்கள் இருவருக்குமே உதவும்.
• நீதிமொழிகள் 17:27: “அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.”
உங்கள் கோபம் தலைக்கேறுவதை உணரும்போது, பூகம்பமாக வெடிப்பதை தவிர்ப்பதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பது சாலச்சிறந்தது.
• நீதிமொழிகள் 29:11 (பொ.மொ.): “அறிவில்லாதவர் தன் சினத்தை அடக்கமாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோடிருப்பதால், அவர் சினம் ஆறும்.”
சுயக்கட்டுப்பாடு அவசியம். உணர்ச்சி வேகத்தில் கடுகடுப்பான வார்த்தைகளை அள்ளி வீசுவது உங்களுடைய துணை உங்களை விட்டு விலகவே வழிவகுக்கும்.