பலிபீடம்—வழிபாட்டில் அது வகிக்கும் இடம் என்ன?
உங்கள் வழிபாட்டிற்கு பலிபீடம் ஓர் அடிப்படை என நீங்கள் நினைக்கிறீர்களா? கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்குப் போகிற அநேகருக்கு பீடம் முக்கியமானதாக தோன்றலாம். வழிபாட்டில் பலிபீடத்தை பயன்படுத்துவதைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
புகலிடமாய் திகழ்ந்த பேழையிலிருந்து ஜலப்பிரளயத்திற்குப் பிறகு வெளியே வந்தவுடன் மிருகங்களைப் பலிகொடுக்க நோவா கட்டிய பலிபீடமே பைபிள் குறிப்பிடும் முதல் பலிபீடம் ஆகும்.a—ஆதியாகமம் 8:20.
பாபேலில் பாஷைகள் தாறுமாறாக்கப்பட்ட பின்பு, மனிதகுலம் பூமியின் நாலாபுறமும் சிதறிப் பரவியது. (ஆதியாகமம் 11:1-9) வணங்குவதற்கான மனமார்ந்த ஆசையால் மனிதர்கள் கடவுளிடம் நெருங்கி வர வழிதேடினார்கள்; அவரைப் பற்றி அற்பசொற்பமாக அறிந்திருந்ததால் குருடரைப் போல் அவரை ‘தேடினார்கள்.’ (அப்போஸ்தலர் 17:27; ரோமர் 2:14, 15) நோவாவின் காலம் முதற்கொண்டு பல்வேறு இனத் தொகுதிகள் தங்கள் தெய்வங்களுக்கு பலிபீடங்களைக் கட்டியிருக்கின்றன. பலதரப்பட்ட மதத்தை சேர்ந்த வெவ்வேறு கலாச்சாரத்தவர்கள் பொய் வணக்கத்தில் பலிபீடங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். மெய்க் கடவுளிடமிருந்து வெகுதூரம் விலகியிருந்த ஜனங்கள் சிலர் மனித பலிகளை, ஏன் பச்சிளங்குழந்தைகளைக்கூட நரபலி கொடுக்கும் கொடூரமான சடங்குகளுக்கு பெரும்பாலும் பலிபீடங்களைப் பயன்படுத்தினார்கள். இஸ்ரவேல் ராஜாக்களில் சிலர் யெகோவாவை விட்டுவிலகிய போது பாகால் போன்ற புறமத தெய்வங்களுக்கு பலிபீடங்களைக் கட்டினார்கள். (1 இராஜாக்கள் 16:29-32) ஆனால், உண்மை வணக்கத்தில் பலிபீடங்களைப் பயன்படுத்துவதைக் குறித்து என்ன சொல்லலாம்?
இஸ்ரவேலில் பலிபீடங்களும் உண்மை வணக்கமும்
நோவாவுக்குப் பிறகு விசுவாசமுள்ள மனிதர்கள் மெய்க் கடவுளான யெகோவாவை வணங்குவதற்கு பலிபீடங்களைக் கட்டினார்கள். ஆபிரகாம் சீகேமில், பெத்தேலுக்கு அருகில், எபிரோனில், மோரியா மலையில் பலிபீடங்களைக் கட்டினார்; மோரியா மலையில்தான் ஈசாக்குக்கு பதிலாக கடவுள் கொடுத்த ஆட்டுக்கடாவை அவர் பலிசெலுத்தினார். பின்னர் ஈசாக்கு, யாக்கோபு, மோசே ஆகியோரின் இருதயம் தூண்டுவித்ததால் கடவுளை வணங்க பலிபீடங்களைக் கட்டினார்கள்.—ஆதியாகமம் 12:6-8; 13:3, 18; 22:9-13; 26:23-25; 33:18-20; 35:1, 3, 7; யாத்திராகமம் 17:15, 16; 24:4-8.
இஸ்ரவேலருக்கு கடவுள் தம்முடைய நியாயப்பிரமாண சட்டத்தைக் கொடுத்தபோது, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வணக்க ஸ்தலத்தை அவர்கள் கட்டும்படி கட்டளையிட்டார். அது ‘ஆசரிப்புக்கூடாரம்’ எனவும் அழைக்கப்பட்டது; அதுவே, கடவுளை அணுகுவதற்கான வழியின் முக்கிய அம்சமாக திகழ்ந்தது. (யாத்திராகமம் 39:32, 40) அந்த வணக்க ஸ்தலத்தில் அல்லது கூடாரத்தில் இரண்டு பலிபீடங்கள் இருந்தன. சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு, தாமிர தகடால் மூடப்பட்ட பலிபீடம் தகனபலிகள் செலுத்துவதற்காக வாசலுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்தது; அதில் மிருக பலிகள் செலுத்தப்பட்டன. (யாத்திராகமம் 27:1-8, NW; 39:39; 40:6, 29) தூபபீடம் ஒன்றும் இருந்தது; வணக்க ஸ்தலத்திற்குள் மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இந்தப் பீடமும் சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு, பசும்பொன் தகட்டால் மூடப்பட்டிருந்தது. (யாத்திராகமம் 30:1-6; 39:38; 40:5, 26, 27) தினமும் இருமுறை காலையிலும் மாலையிலும் விசேஷித்த தூபவர்க்கம் இதில் எரிக்கப்பட்டது. (யாத்திராகமம் 30:7-9) சாலொமோன் ராஜா கட்டிய நிலையான ஆலயம், இரண்டு பலிபீடங்கள் உடைய இந்த வாசஸ்தலத்தைப் போலவே கட்டப்பட்டது.
‘மெய்யான கூடாரமும்’ அடையாள அர்த்தமுள்ள பலிபீடமும்
இஸ்ரவேலருக்கு யெகோவா நியாயப்பிரமாண சட்டத்தைக் கொடுத்தபோது வெறுமென தம் மக்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் சட்டதிட்டங்களை மட்டும் அதில் கொடுக்கவில்லை; அல்லது தம்மை அணுகுவதற்கு பலிசெலுத்துவதைப் பற்றியும் ஜெபத்தைப் பற்றியுமே அதில் சொல்லவில்லை. இன்னும் அதிகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன் ஏற்பாடுகளில் அநேகம் ‘பரலோகத்திலுள்ளவைகளின் சாயலாக,’ ‘உபமானமாக,’ ‘நிழலாக’ உருவாக்கப்பட்டிருந்ததாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபிரெயர் 8:3-5; 9:9, திருத்திய மொழிபெயர்ப்பு; 10:1; கொலோசெயர் 2:17) வேறு வார்த்தைகளில் சொன்னால், நியாயப்பிரமாண சட்டத்தின் அநேக அம்சங்கள் கிறிஸ்து வரும்வரை இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்றதோடு, இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேறவிருந்த கடவுளுடைய நோக்கங்களின் முன்நிழலாகவும் அமைந்தன. (கலாத்தியர் 3:24) ஆம், நியாயப்பிரமாண சட்டத்தின் அம்சங்கள் தீர்க்கதரிசன அர்த்தமுடையவை. உதாரணமாக, இஸ்ரவேலரின் இரட்சிப்புக்கு அடையாளமாக பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் பயன்படுத்தப்பட்டது; அந்த ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவை முன்குறித்துக் காட்டியது. அவர் “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி”; அவருடைய இரத்தம், பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காக சிந்தப்பட்டது.—யோவான் 1:29; எபேசியர் 1:7.
வாசஸ்தலம், ஆலய சேவை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட பல காரியங்கள் ஆவிக்குரிய மெய்மைக்கு படமாக இருந்தன. (எபிரெயர் 8:5; 9:23) சொல்லப்போனால், ‘மனுஷரால் அல்ல, யெகோவாவால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்தைப்’ பற்றி பவுல் எழுதுகிறார். “கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும் [பிரவேசித்தார்]” என தொடர்ந்து அவர் எழுதுகிறார். (எபிரெயர் 8:2; 9:11) ‘பெரிதும் உத்தமமுமான கூடாரம்,’ யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலய ஏற்பாடாகும். இயேசு கிறிஸ்துவின் கிருபாதார பலியின் அடிப்படையில் மனிதர்கள் யெகோவாவை அணுகுவதற்குரிய ஏற்பாடே பெரிய ஆவிக்குரிய ஆலயம் என வேதாகம மொழிநடை சுட்டிக்காட்டுகிறது.—எபிரெயர் 9:2-10, 23-28.
நியாயப்பிரமாண சட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட சில காரியங்களும் தராதரங்களும் உயர்வானதாகவும், அதிக அர்த்தம் நிறைந்ததாகவும், ஆவிக்குரிய மெய்மைக்குப் படமாகவும் உள்ளன; இதை கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்கையில், பைபிள் கடவுளுடைய ஆவியால் எழுதப்பட்டது என்பதன் பேரிலுள்ள விசுவாசத்தை உண்மையிலேயே பலப்படுத்துகிறது. விசேஷமாக, அது பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய ஒப்பற்ற ஞானத்திற்கான போற்றுதலை அதிகரிக்கவும் செய்கிறது.—ரோமர் 11:33; 2 தீமோத்தேயு 3:16, 17.
தகன பலிபீடத்திற்கும் தீர்க்கதரிசன அர்த்தமுள்ளது. அது கடவுளுடைய ‘சித்தத்தை’ அல்லது இயேசுவின் பரிபூரண மனித பலியை ஏற்றுக்கொள்ள அவர் மனமுள்ளவராக இருப்பதை அர்த்தப்படுத்துவதாக தோன்றுகிறது.—எபிரெயர் 10:1-10.
பின்னர் எபிரெயர் புத்தகத்தில், ஆர்வத்தைத் தூண்டும் இந்தக் குறிப்பை பவுல் சொல்கிறார்: “நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.” (எபிரெயர் 13:10) அவர் எந்த பலிபீடத்தைப் பற்றி குறிப்பிட்டார்?
எபிரெயர் 13:10-ல் குறிப்பிடப்பட்டுள்ள பலிபீடம், திவ்விய நற்கருணைக்கு (Eucharist), “புனித சடங்கு”க்குப் பயன்படுத்தப்பட்டதாக அநேக கத்தோலிக்க மொழிபெயர்ப்பாளர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்; பூசையின் போது இந்தப் பீடத்தில் கிறிஸ்துவின் பலி புதுப்பிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பவுல் இங்கு குறிப்பிடும் பலிபீடம் அடையாள அர்த்தமுள்ளது என்பதை அதன் சூழமைவிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘பலிபீடம்’ அடையாள அர்த்தமுள்ளதுதான் என அநேக கல்விமான்கள் ஒப்புக்கொள்கிறார்கள். “[எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட] கடிதத்தில் அடையாள அர்த்தத்தில் பேசப்பட்ட எல்லாவற்றுடனும் இது வெகு கச்சிதமாக ஒத்துப்போகிறது” என்கிறார் ஜெஸ்யூட்டான ஜியூசெப்பே பான்சீர்வன். “கிறிஸ்தவ வழக்கில் ‘பலிபீடம்’ என்ற வார்த்தை ஆரம்பத்தில் ஆவிக்குரிய அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டது; ஐரினீயஸுக்குப் பிறகு, அதிலும் முக்கியமாக டெர்டுல்லியனுக்கும் செ. ஸைப்ரியனுக்கும் பிறகு இது திவ்விய நற்கருணைக்கு, குறிப்பாக திவ்விய நற்கருணை வைக்கப்பட்ட மேஜைக்கு பயன்படுத்தப்பட்டது” என அவர் குறிப்பிடுகிறார்.
ஒரு கத்தோலிக்க பத்திரிகை குறிப்பிட்டபடி, “கான்ஸ்டன்டீன் காலத்தில்” “விண்ணைத் தொடுமளவான தேவாலயங்கள் கட்டப்பட்டபோது” பீடங்களைப் பயன்படுத்தும் பழக்கம் பரவியது. ரீவீஸ்டா டி ஆர்கேயோலோஷியா கிறீஸ்டியானா (கிறிஸ்டியன் ஆர்கியாலஜி ரிவ்யூ) இவ்வாறு கூறியது: “முதல் இரண்டு நூற்றாண்டுகளின் போது வணக்கத்திற்கென நிரந்தரமாக எந்த இடமும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை; ஆனால் தனியார் வீடுகளிலுள்ள அறைகளில் வணக்கத்திற்காக கூடிவந்தார்கள் . . . , நிகழ்ச்சி முடிந்த உடனேயே அந்த அறைகள் பழையபடி பயன்படுத்தப்பட்டன.”
கிறிஸ்தவமண்டலம் பீடத்தை பயன்படுத்துவது
கத்தோலிக்க பத்திரிகையான லா சீவீல்டா காட்டலீக்கா சொல்வதாவது: “சர்ச் கட்டடத்திற்கு மட்டுமல்ல ஆனால் உயிருள்ள அதன் அங்கத்தினர்களுக்கும் அந்த பீடம் மிக முக்கியமானதாக இருக்கிறது.” ஆனால் பீடத்துடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு மத ஆசரிப்பையும் இயேசு கிறிஸ்து ஆரம்பித்து வைக்கவில்லை; எந்த ஆசரிப்புக்காவது அதைப் பயன்படுத்தும்படியும் தம்முடைய சீஷர்களுக்கு அவர் கட்டளையிடவுமில்லை. மத்தேயு 5:23, 24-லும் சரி வேறு இடங்களிலும் சரி, பலிபீடத்தைப் பற்றி இயேசு சொல்வது யூதர்களின் மத்தியில் நிலவிய மத பழக்கவழக்கங்களையே காட்டுகிறது; ஆனால் தம்மைப் பின்பற்றுகிறவர்கள் கடவுளை வணங்குவதற்குப் பலிபீடத்தைப் பயன்படுத்த வேண்டுமென அவர் சொல்லவே இல்லை.
அமெரிக்க சரித்திராசிரியர் ஜார்ஜ் ஃபுட் மோர் (1851-1931) இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்தவ வணக்க முறையிலிருந்த முக்கிய அம்சங்கள் எப்போதும் மாறாமல் ஒரே மாதிரி இருந்தன; ஆனால் காலப்போக்கில், இரண்டாம் நூற்றாண்டின் மத்திபத்தில் ஜஸ்டின் என்ற புனிதர் விவரித்திருந்த சாதாரண சமய சடங்குகள், பகட்டான, வசீகரிக்கும் தன்மை படைத்த வணக்க முறையாக பிற்பாடு விரிவுபடுத்தப்பட்டன.” கத்தோலிக்க சடங்காச்சாரங்களும், பொது மதச் சடங்குகளும் ஏராளமானவையாகவும் பின்பற்ற கடினமானவையாகவும் இருப்பதால், அவை பொது வழிபாட்டு முறை என்ற தலைப்பில் கத்தோலிக்க இறையியல் கல்லூரிகளில் பாடமாகவே கற்பிக்கப்படுகின்றன. மோர் தொடர்ந்து கூறுவதாவது: “பழைய ஏற்பாட்டின் செல்வாக்கினால் யூத மதத்திலிருந்த ஆசாரியத்துவத்தின் இடத்தை கிறிஸ்தவ குருவர்க்கம் ஏற்றதாக கருதப்பட்டபோது எல்லா சடங்காச்சாரத்தையும் பகட்டாக செய்யும் பழக்கம் இன்னும் வலுவடைந்தது. பிரதான ஆசாரியருடைய அழகிய அங்கி, மற்ற ஆசாரியர்களின் சம்பிரதாய முறைப்படியான அங்கிகள், பிரமிக்க வைக்கும் ஊர்வலங்கள், பாடல்களை இசையுடன் பாடும் லேவிய பாடகர்களின் அணிகள், ஊசலாடும் தூபகலசங்களிலிருந்து புறப்படும் நறுமணப் புகை ஆகிய அனைத்துமே மத வணக்கத்திற்கு கடவுளே கொடுத்த மாதிரியாக தோன்றின; இவற்றையெல்லாம் செய்தால்தான் பண்டைய பொய் மதங்களின் பகட்டோடு போட்டிபோட முடியும் என்று சர்ச் நியாயப்படுத்துகிறது.”
பல்வேறு சர்ச்சுகள் பின்பற்றும் அநேக சடங்குகளும் ஆசார முறைகளும், அங்கிகளும், வணக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களும் சுவிசேஷங்களில் காணப்படும் கிறிஸ்தவ போதனைகள் அல்ல, மாறாக யூதர்களும் புறமதத்தாரும் பின்பற்றிய பழக்கவழக்கங்களும் சடங்குகளுமே என்பதை அறிகையில் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். கத்தோலிக்க மதம் “பலிபீடத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை யூத மதத்திலிருந்தும் இன்னும் சிலவற்றை புறமதத்திலிருந்தும் பெற்றிருக்கிறது” என என்ஸிக்ளோப்பீடியா காட்டாலிக்கா குறிப்பிடுகிறது. பொ.ச. மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மினூகியுஸ் ஃபீலிக்ஸ் என்ற மதவாதி, கிறிஸ்தவர்களுக்கு ‘ஆலயங்களும் இல்லை, பலிபீடங்களும் இல்லை’ என எழுதினார். ரெலீஜோனி ஏ மீட்டீ (மதங்களும் கட்டுக்கதைகளும்) என்ற என்ஸைக்ளோப்பீடிக் அகராதியும் அதேவிதமாக குறிப்பிடுகிறது: “யூதர்களிலிருந்தும் புறமதத்தாரிலிருந்தும் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் பலிபீடத்தை உபயோகிக்கவில்லை.”
எல்லா நாடுகளிலும் வாழ்க்கையில் எல்லா நாளிலும், கிறிஸ்தவ மதத்தின் நியமங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைப்பிடிக்கப்படுவதால், பூமியில் ஒரேவொரு பரிசுத்த ஸ்தலத்திற்கு இனி அவசியமில்லை அல்லது பீடங்களுள்ள நிஜமான ஒரு ஆலயத்திற்கும், பிரத்தியேக அங்கிகளைத் தரித்து, விசேஷ பதவி வகிக்கும் மனித குருக்களுக்கும் இனி அவசியமில்லை. “இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்”வார்கள் என இயேசு சொன்னார். (யோவான் 4:21, 23) ஆனால், மெய்க் கடவுளை எப்படி வணங்க வேண்டுமென அவர் சொன்னாரோ, அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அநேக சர்ச்சுகள் சிக்கலான சடங்குகளையும் பீடங்களையும்தான் இன்றும் உபயோகித்து வருகின்றன.
[அடிக்குறிப்பு]
a ஆரம்பத்தில் காயீனும் ஆபேலும் பலிபீடங்களில் தங்கள் காணிக்கைகளை யெகோவாவுக்கு செலுத்தியிருக்கலாம்.—ஆதியாகமம் 4:3, 4.