இளைஞர் கேட்கின்றனர் . . .
பொய் பேசுவது அவ்வளவு கெட்டதா?
மிகவும் விரும்பி வைக்கப்பட்டிருந்த ஓர் அழகு பொருளை மைக்கலி உடைத்துவிட்டாள், அது தன் வீட்டிலுள்ளோருக்குத் தெரிய வருகையில் அவர்கள் கோபப்படுவார்களென அவளுக்குத் தெரியும். எனினும், தண்டனை பெறுவதற்கோ கண்டிப்பான பேச்சு கேட்பதற்கோ ஏற்ற மனநிலையில் அவள் இல்லை. ஆகவே தன் பெற்றோரின் கோபத்தை விலக்குவதற்கு ஓர் எளிய வழியை அவள் கண்டுபிடித்தாள்: தன் இளைய சகோதரன் அதை உடைத்தானென்று அவன்பேரில் குற்றஞ் சுமத்தினாள்.
பொய்பேசுவது—சில சந்தர்ப்பங்களில் சரிதானென 13-19 வயதுடைய பலர் உணருகின்றனர். ஏதோ குற்ற நடவடிக்கையைத் தடுக்க, குற்றமில்லாதவரைப் பாதுகாக்க, அல்லது ஓர் உயிரைப் பாதுகாக்க தாங்கள் பொய் பேசுவார்களென சிலர் சொல்லுகின்றனர். எனினும் இத்தகைய சந்தர்ப்ப நிலைமைகள் மெய் வாழ்க்கையில் அடிக்கடி நிகழ்வதில்லை. மைக்கலி பொய் பேசின அதே காரணத்துக்காகவே இளைஞர் அடிக்கடி பொய் பேச வகை தேடுகின்றனர். அதாவது: தண்டனையைத் தப்பித்துக்கொள்ள அல்லது ஏதோ சங்கடமான நிலைமையிலிருந்து வெளியேற அவ்வாறு செய்கின்றனர்.
டோனல்ட் தன்னுடைய அறையைத் தான் சுத்தம் செய்துவிட்டதாகத் தன் தாயினிடம் கூறினான், உண்மையில், அவன் எல்லாவற்றையும் படுக்கையின்கீழ் தள்ளிவிட்டிருந்தான். அவ்வாறே ரிச்சர்ட் தான் பரீட்சையில் தவறிவிட்டதன் காரணம் தான் படிக்காததனால் அல்ல, ஆனால் ‘தன்னுடைய ஆசிரியருடன் தான் நல்ல உறவில் இல்லாததனால்’ என்று தன் பெற்றோரிடம் கூறினான். மெய்யென முற்றிலும் ஏற்கமுடியாதது.
எனினும், இவை கேடு நோக்கத்துடன் சொல்லப்பட்ட பொய்கள் அல்லாததனால், எந்தத் தீங்கும் செய்யவில்லையென நீங்கள் ஒருவேளை உணரலாம். வெண் பொய்யில் என்ன தீங்கிருக்கிறது? என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். வெண் பொய்யைப் ‘பண்பட்ட அல்லது தீங்கற்றப் பொய்யென’ அகராதிகள் விளக்குவதனால், வெண் பொய் பேசுவது அவ்வளவு கெட்டதாக ஒருவேளை தோன்றாது.
பொய் பேசுவதன் முக்கியத்துவம் என்ற புத்தகத்தில் H.L. மென்கென், சிலர் ஏன் பொய் பேச நாடுகின்றனர் என்பதற்கு இன்னுமொரு காரணத்தைப் பின்வருமாறு கொடுப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது: “உண்மை பேசுவதன் தொந்தரவு என்னவெனில் அது முக்கியமாய்ச் சங்கடமானது, அடிக்கடி சுவையற்றுமிருக்கிறது. மனித மனம் மேலுமதிகச் சிரிப்பூட்டும் கிளர்ச்சியாகவும், சீராட்டுவதாகவும் இருக்கும் ஒன்றைத் தேடுகிறது.” அப்படியானால், மக்கள் அநேகமாய்ச் சத்தியத்தைக் கேட்க உண்மையில் விரும்பாமல், அதற்குப் பதில் “தங்கள் செவிகளுக்குத் தினவு உண்டாக்குவதையே” மேலாக விரும்புவதில் ஆச்சரியமொன்றுமில்லை. (2 தீமோத்தேயு 4:3, NW) உயிர்வாழ்ந்தவர்களில் மிகப்பெரிய போதகரான இயேசு கிறிஸ்து, இதை உண்மையெனக் கண்டார். “நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.” என்று அவர் தம் நாளிலிருந்த மக்களிடம் கூறினார். (யோவான் 8:46) சில சமயங்களில் விரும்பப்படாத சத்தியத்தைப் பேசுவதற்குப் பதிலாக, ஆட்களைப் பிரியப்படுத்துவதற்காக கேட்பதற்கு இனிமையாகத் தோன்றும் பொய்களைச் சொல்வதற்கு எவ்வளவாக நாம் தூண்டப்படுகிறோம்!
பொய் ஒருவேளை கவர்ச்சிகரமாயிருப்பதனால் அல்லது அற்ப காரியத்தின் பேரிலேயே பொய் பேசப்பட்டதனால் அல்லது நன்மை கருதியே பேசப்பட்டதனால் அது சரியென பொருள்படுமா?
பொய் பேசுவதைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்
முன்னால் பைபிள் காலங்களில் மனிதரின் பொய் பேசும் மனப்போக்கு கவனிக்கப்பட்டது. சங்கீதக்காரன் பின்வருமாறு கூறினான்: “அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.” அவர்களுடைய பொய்களுக்குப் பின்னால் தன்னல அக்கறை பதுங்கியிருந்தது. “எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் [பொய் பேசும்] உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன்?” என்று அவர்கள் சொன்னார்கள். எனினும் அவர்களுடைய பொய் பேசும் வழிகளைப் பற்றி கடவுள் எவ்வாறு உணர்ந்தார் என்பதைக் கவனியுங்கள்: “இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் [யெகோவா, தி.மொ.] அறுத்துப்போடுவார்.”—சங்கீதம் 12:2-4.
ஆம், அப்பொழுதும் இப்பொழுதும் “யெகோவா வெறுக்கின்றவைகளில்” ஒன்று “பொய்நாவு” (நீதிமொழிகள் 6:16, 17) எப்படியிருந்தாலும், பிசாசாகிய சாத்தான்தானே “பொய்க்குப் பிதா.” எனினும், பொய்களுக்கும் ‘வெண் பொய்களுக்கும்’ பைபிள் எந்த வேறுபாடும் செய்கிறதில்லை. “சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராது,” என்று அது தெளிவாய்க் கூறுகிறது. (1 யோவான் 2:21) இதனிமித்தமே, “யெகோவா மாறுபாடுள்ளவனை அருவருப்பார், நேர்மையாளரோடு அவரின் அந்தரங்க சிநேகமுண்டு.” (நீதிமொழிகள் 3:32, தி.மொ.) ஆம், நேர்மையற்றிருக்கும் ஒருவரோடு யெகோவா நிச்சயமாக நெருங்கிய உறவுகொள்ள மாட்டார்.
இவ்வாறு, கடவுள்-பயமுள்ள இளைஞர் எந்த வகையான பொய் பேசுதலையும் ஏற்கத்தகுந்ததாகக் கருதமுடியாது. டைரோன் என்ற ஓர் இளைஞன் சொல்லுகிற பிரகாரம்: “இது மெய்-அல்லது-பொய் சோதனையைப் போல் இருக்கிறது. ஏதாவது சரி-அல்லது-தவறு இரண்டில் ஒன்றாகவே இருக்கிறது.”
பொய் பேசுவது—ஏன் தீங்குள்ளது
எனினும், பொய் பேசுவது ஏன் அவ்வளவு தவறு? தண்டனை பெறுவதிலிருந்து அது உங்களைக் காப்பாற்றுமல்லவா? இருக்கலாம். ஆனால் அந்தப் பொய் வெளியாகுகையில் என்ன நடக்கிறது? அப்பொழுது அது தண்டனையை வெறுமென தள்ளி வைக்கவே செய்தது. இளைஞன் ஆண்ட்ரியும் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: “எவராவது உங்களுக்கு ஏதாவது சொல்லியிருந்து பின்னால் அது பொய்யென்று நீங்கள் கண்டுபிடிக்கையில் அது உங்களைக் கடுங்கோபமடையச் செய்கிறது.” ஆம், பொய் பேசுவது கோபத்தையும் மனக்கசப்பையும் கிளறிவிடுகிறது. உங்கள் பெற்றோரிடம் பொய் பேசியிருந்தால்—கண்டிப்பான சிட்சையில் விளைவடையலாம்.
பைபிளில் பின்வருமாறு சொல்லியிருப்பது ஆச்சரியமில்லை: “பொய் நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும்.” (நீதிமொழிகள் 21:6) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஒரு பொய் கொண்டுவரக்கூடிய எந்த அனுகூலங்களும் நீராவியைப் போல் சொற்ப காலத்துக்கே நிலைக்கும்.
பொய் பேசுவதும் உங்கள் மனச்சாட்சியும்
பொய் பேசுவது அந்தப் பொய்யனுக்குத்தானே தீங்கு செய்கிறது. (தொடக்கத்தில் குறிப்பிட்ட) மைக்கலி, அந்த அழகு பொருளை உடைத்தவன் தன் சகோதரனே என தன் பெற்றோரை நம்ப வைக்க முடிந்தது. எனினும், தான் செய்தத் தவறை பின்னால் அவர்களுக்குத் தெரிவித்துவிடும்படி வற்புறுத்தப்பட்டவளாய் உணர்ந்தாள். மைக்கலி பின்வருமாறு விளக்குகிறாள்: “பெரும்பான்மையான நேரம் நான் உண்மையில் மனசங்கட உணர்ச்சியைக் கொண்டிருந்தேன், என் பெற்றோர் என்னை நம்பினார்கள், நான் அவர்கள் எதிர்பார்த்தபடி நடவாமல் துரோகம் செய்துவிட்டேன்.”
மைக்கலியின் குற்றமுள்ள மனச்சாட்சி அப்போஸ்தலன் பவுல் கூறின நியமத்தை நன்றாய் விளக்கிக் காட்டுகிறது. கடவுள் மனிதனுக்குள் மனச்சாட்சியின் நுட்பத்திறமையை வைத்தாரென ரோமர் 2:14, 15-ல் அவன் குறிப்பிட்டுக் காட்டுகிறான். இது எவ்வாறு வேலை செய்கிறதென்பதைப் பவுல் பின்வருமாறு கூறி விளக்குகிறான்: “அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறது, குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறது.” மைக்கிலியின் காரியத்தில் பொய் பேசுவது தவறு என்பதற்கு அவளுடைய மனச்சாட்சி ‘சாட்சி பகர்ந்து’ ‘குற்றமுண்டென’ அவளைக் குற்றஞ்சாட்டி—குற்ற உணர்ச்சிகளால் அவளை வாதித்தது.
நிச்சயமாகவே, ஒருவன் தன் மனச்சாட்சியைப் பொருட்படுத்தாமல் விட்டு, அதைக் கடினப்படுத்தலாம். உதாரணமாக, வளரிளமை என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு கட்டுரை, 13-19 வயதினருக்குள் தொடக்கப் பகுதியிலுள்ள இளைஞர், பொய் பேசுவது தவறெனக் கருதும் மனப்போக்கைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் பெரியவர்களாக வளருகையில் பொய் பேசுவதைப் பற்றிய அவர்கள் கருத்து கடினப்படுகிறது என்று குறிப்பிட்டுக் காட்டினது. மேலும், “பொய் பேசுவது சில சமயங்களில் தவறல்லவென பதினைந்து வயதினர், பன்னிரண்டு வயதினரைப் பார்க்கிலும் மிக அடிக்கடி உணருகின்றனர்” என்றும் அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறது. ஒருவன் எவ்வளவு அதிகம் பழக்கமாய்ப் பொய் பேசுகிறானோ, அவ்வளவு அதிகம் ‘சூட்டுக்கோலால் தன் மனச்சாட்சியில் சூடுபோடப்பட்டவனாகும்’ அபாயத்தில் அவன் இருக்கிறானென்பது தெளிவாயிருக்கிறது.—1 தீமோத்தேயு 4:1, NW.
‘நேர்மையான மனச்சாட்சியை’ வளர்த்தல்
வேறுபடுத்திக் காட்டும் முறையில், அப்போஸ்தலனாகிய பவுல் தன்னையும் தன் உடன் தோழரையுங் குறித்து: “எங்களுக்கு நேர்மையான மனச்சாட்சி உண்டென்று நாங்கள் நம்புகிறோம்” என்று சொல்ல முடிந்தது. (எபிரெயர் 13:18, NW) பொய்களையோ பாதி உண்மைகளையோ வழிமுறையாக ஏற்க பவுலின் மனச்சாட்சி அவனை அனுமதிக்காது. அதைப்போல் உங்கள் மனச்சாட்சி சத்தியமல்லாததை வெறுக்கும் கூருணர்ச்சியைக் கொண்டிருக்கிறதா? இல்லையென்றால், பைபிளையும், இந்தப் பத்திரிகையை மற்றும் இதன் கூட்டுப் பத்திரிகையான காவற்கோபுரத்தைப் போன்ற பைபிள் ஆதாரங்கொண்ட புத்தகங்களையும் படிப்பதன் மூலம் அதைப் பயிற்றுவியுங்கள்.
பாபி என்ற ஓர் இளைஞன், அவ்வாறு செய்து நல்ல பலன்களை அடைந்தான். அவ்வப்போது இந்தப் பிரசுரங்கள் அவனுக்கிருந்த ஒரு பிரச்னையின் பேரில் கட்டுரைகளைக் கொண்டிருந்தன. பொய்களைக் கொண்டு அந்தப் பிரச்னையை மூடிவைத்துக் கொள்வதற்கு மாறாக, தன் பெற்றோரை அணுகி நேர்மையுடன் அந்தக் காரியத்தைக் கலந்து பேசும்படி அவனுடைய மனச்சாட்சி அவனைத் தூண்டியது. இது சில சமயங்களில் அவன் சிட்சை பெறுவதில் முடிவடைந்தது. எனினும் அவன், தான் நேர்மையுடனிருந்ததனால் ‘உள்ளத்தில் நல்ல உணர்ச்சி’ தனக்கு இருக்கிறதென ஒப்புக்கொள்கிறான்.
மெய்தான், ஓர் இளைஞன் சொன்ன பிரகாரம்: “நீ உண்மையைச் சொன்னால், அது உன் பெற்றோருக்கு வருத்தமுண்டாக்கும்.” எனினும், நீ அவர்களிடம் உண்மை சொன்னதை அவர்கள் மதிப்பார்கள். நீ முதிர்வை நோக்கி முன்னேறுகிறாய் உன் செயல்களுக்கு நீ பொறுப்புடையவனாய் உணருகிறாயென அது அவர்களுக்கு மெய்ப்பித்துக் காட்டும்.
நேர்மையான மனச்சாட்சியை வளர்ப்பதற்கு மற்றொரு உதவி, நண்பர்களைத் தெரிந்துகொள்வதில் கவனமாயிருப்பதாகும். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்,” என்று நீதிமொழிகள் 13:20-ல் சொல்லியிருக்கிறது. பாபி பின்வருமாறு கூறுகிறான்: “உன்னோடு சேர்ந்து பொய் பேசும் நண்பன் உன்னைத் தொந்தரவுக்குள் உட்பட செய்வான். அவன் நீ நம்பக்கூடிய நண்பனல்ல.” சங்கீதக்காரன் பின்வருமாறு ஞானமாய்ச் சொன்னான்: “உண்மையற்ற மனிதரோடே நான் உட்காரவில்லை.” (சங்கீதம் 26:4, NW) தெய்வீகத் தராதரங்களை மதிக்கிற நண்பர்களைக் கண்டடைய முயற்சி செய்யுங்கள்.
கடைசியாக, பொய் சொல்லத் தூண்டப்பட்டால், யெகோவா தேவன் தம்முடைய சொந்த நண்பர்களுக்கு வைக்கிற தராதரங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். “யெகோவாவே, உமது கூடாரத்தில் தங்குபவன் யார்?” என சங்கீதக்காரன் கேட்டான். “மனதார [தன் இருதயத்தில், NW] சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.” (சங்கீதம் 15:1, 2, தி.மொ.) கடவுளுடன் உறவுகொண்டிருப்பது எத்தகைய சிலாக்கியமென்பதை ஆழ்ந்து சிந்தனை செய்வது நேர்மையாயிருக்கும்படி ஒருவனை உள்ளத்தில் தூண்டுவிக்கிறது.
சத்தியத்தைப் பேசுவது எப்பொழுதும் எளிதாயில்லை. மாற்கு என்ற ஓர் இளைஞன் சொன்ன பிரகாரம்: “ஒரு தொகுதியான ஆட்கள் பொய் சொல்லுவார்கள், நீயோ உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கும் ஒரு சூழ்நிலைமையிலும் இருக்கலாம். ஆனால் உண்மையையே பேசவேண்டுமென்று தீர்மானஞ் செய்கிறவன் நல் மனச்சாட்சியையும், தன் உண்மையான நண்பர்களுடன் நல்ல உறவயும், எல்லாவற்றிற்கும் மிக மேன்மையாக தன் சிருஷ்டிகருடன் நல்ல உறவையும் காத்து வருவான்.” ஸ்டீஃபன் என்ற ஓர் இளைஞன் பின்வருமாறு சொல்லுகையில் இந்தக் காரியத்தை நன்றாகச் சுருக்கமாய்த் தொகுத்துரைக்கிறான்: “மற்றவர்கள் பொய் பேசுவதானது நீயும் பொய் பேச வேண்டுமெனக் குறிக்கிறதில்லை!” (g87 10⁄8)
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
பொய்கள் பெரும்பாலும் மெய்யென பொருத்தமாகத் தோன்றுவதில்லை, மேலும் அவை வெளியாக்கப்படும் வரையில்தானே தண்டனையை வெறுமென தாமதிக்கச் செய்யலாம்
[பக்கம் 17-ன் படம்]
தவறை வெளியிட்டுக் கூறுவது எளிதல்ல, ஆனால் உன் பெற்றோர் உன் நேர்மையை மதிப்பார்கள்