தேவனுடைய இளைப்பாறுதலில் நீங்கள் பிரவேசித்திருக்கிறீர்களா?
“[தேவனுடைய] இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், . . . தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.”—எபிரெயர் 4:10.
1. ஓய்வு ஏன் அவ்வளவு விரும்பத்தக்கது?
ஓய்வு என்ற வார்த்தையைக் கேட்டாலே எவ்வளவு இன்பமாக இருக்கிறது! இன்றைய வேகமான அவசரம் நிறைந்த உலகில் வாழும் நாம், ஓய்வு கொஞ்சம் தேவை என ஒப்புக்கொள்வோம். வாலிபரோ வயோதிபரோ, திருமணம் ஆனவரோ ஆகாதவரோ நாம் அனைவருமே அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகளால் சோர்வடையலாம். உடல் ஊனமோ வியாதிகளோ உள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளுமே போராட்டம்தான். வேதவசனம் சொல்லுகிறபடியே, “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது.” (ரோமர் 8:22) ஓய்வெடுக்கும் ஒரு நபர் சோம்பேறி என்று எப்போதுமே அர்த்தமாகாது. ஓய்வு மனிதனுக்கு தேவை, அதைத் திருப்தி செய்தாக வேண்டும்.
2. எப்போதிலிருந்து யெகோவா ஓய்ந்திருக்கிறார்?
2 யெகோவா தேவன்தாமே ஓய்ந்திருந்தார். ஆதியாகமம் புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம்: “வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.” யெகோவா, ‘ஏழாம் நாளுக்கு’ கூடுதலான முக்கியத்துவம் கொடுத்ததனால்தான் ஏவப்பட்ட பதிவு இவ்வாறு தொடர்ந்து சொல்கிறது: “தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.”—ஆதியாகமம் 2:1-3.
தேவன் தம் கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்தார்
3. கடவுள் ஓய்ந்திருந்ததற்கான காரணங்கள் என்னவாக இருக்கமுடியாது?
3 கடவுள் ஏன் “ஏழாம் நாளிலே” ஓய்ந்திருந்தார்? நிச்சயமாகவே, களைப்பாக இருந்ததால் அவர் ஓய்வெடுக்கவில்லை. யெகோவாவுக்கு “மகா பெல[ம்]” இருக்கிறது, அவர் “சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை.” (ஏசாயா 40:26, 28) ஓர் இடைவேளை அல்லது வேலையில் மாற்றம் தேவை என்பதற்காகவும் கடவுள் ஓய்வெடுக்கவில்லை. ஏனென்றால் இயேசு சொன்னார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார், நானும் கிரியை செய்துவருகிறேன்.” (யோவான் 5:17) என்ன இருந்தாலும், “தேவன் ஆவியாயிருக்கிறார்”; ஆகவே மாம்ச சிருஷ்டிகளின் சரீர சுழற்சிகளும் தேவைகளும் அவருக்கு இல்லை.—யோவான் 4:24.
4. முந்தைய ஆறு ‘நாட்களிலிருந்து’ ‘ஏழாம் நாள்’ எப்படி வித்தியாசமாய் இருந்தது?
4 கடவுள் “ஏழாம் நாளிலே” ஏன் ஓய்ந்திருந்தார் என்பதைப் பற்றிய உட்பார்வையை நாம் எப்படி பெறமுடியும்? அதற்கு முந்தைய, நீண்ட காலப்பகுதி உடைய ஆறு சிருஷ்டிப்பு ‘நாட்களிலும்’ தாம் செய்திருந்தவற்றால் கடவுள் சந்தோஷம் அடைந்திருந்தபோதிலும், அவர் முக்கியமாக ‘ஏழாம் நாளை’ ஆசீர்வதித்து, அதைப் “பரிசுத்தமாக்கினார்” என்பதைக் கவனிப்பதன் மூலமே. “பரிசுத்தம்” என்பது “(ஒரு கடவுளுக்கு அல்லது ஏதாவது மத நோக்கத்திற்கு) தனிப்பட்ட விதமாக ஒப்புக்கொடுத்த அல்லது ஒதுக்கி வைக்கப்பட்ட” ஒன்று என்று கண்சைஸ் ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷ்னரி விளக்குகிறது. இவ்வாறாக, அவருக்கு எந்தவிதத்திலும் ஓய்வு தேவையாக இல்லை. மாறாக, யெகோவா “ஏழாம் நாளை” ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார் என்பது, அதுவும் அவருடைய ‘ஓய்வும்’ அவருடைய பரிசுத்த சித்தத்தோடும் நோக்கத்தோடும் ஏதோவொரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அந்தச் சம்பந்தம் என்ன?
5. முதல் ஆறு சிருஷ்டிப்பு ‘நாட்களில்’ கடவுள் எதை ஆரம்பித்து வைத்தார்?
5 கடவுள், முந்தைய ஆறு சிருஷ்டிப்பு ‘நாட்களில்’ பூமியையும் அதைச் சுற்றி இருப்பவற்றையும் கட்டுப்படுத்தும் சுழற்சிகளையும் சட்டங்களையும் ஏற்படுத்தி செயல்பட வைத்தார். இவையெல்லாம் எவ்வளவு அற்புதகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் இப்பொழுது கற்றுவருகிறார்கள். கடவுள், முதல் மானிட ஜோடியை ‘ஆறாம் நாளின்’ முடிவில் படைத்து, ‘கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே’ வைத்தார். கடைசியாக, மனித குடும்பத்திற்கும் இந்தப் பூமிக்குமான தம்முடைய நோக்கத்தை இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளில் கூறினார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.”—ஆதியாகமம் 1:28, 31; 2:8.
6. (அ) “ஆறாம் நாளி[ன்]” முடிவில், கடவுள் தாம் சிருஷ்டித்திருந்த எல்லாவற்றையும் குறித்து எவ்வாறு உணர்ந்தார்? (ஆ) எந்தக் கருத்தில் ‘ஏழாம் நாள்’ பரிசுத்தமானது?
6 சிருஷ்டிப்பின் ‘ஆறாம் நாள்’ முடிவுக்கு வருகையில், “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” என்று வாசிக்கிறோம். (ஆதியாகமம் 1:31) கடவுள் தாம் உண்டாக்கியிருந்த எல்லாவற்றையும் கண்டு திருப்தியடைந்தார். ஆகவே அவர் ஓய்ந்திருந்தார் அல்லது பூமிக்காக கூடுதலாக எதுவும் சிருஷ்டியாமல் நிறுத்தினார். அந்தப் பரதீஸான பூங்கா அவ்வளவு பரிபூரணமாகவும் அழகாகவும் இருந்தது. என்றாலும் அது சிறிய பகுதியில்தான் இருந்தது, இரண்டு மனிதர்கள் மட்டுமே பூமியில் இருந்தனர். கடவுள் நோக்கங்கொண்ட நிலையை அடைவதற்கு இந்தப் பூமிக்கும் மனித குடும்பத்துக்கும் அவகாசம் தேவைப்படும். இந்த காரணத்திற்காக, முந்தின ஆறு ‘நாட்களில்’ அவர் சிருஷ்டித்த எல்லாம் அவருடைய பரிசுத்த சித்தத்திற்கு இசைவாக செயல்பட காலம் அனுமதிக்கவே “ஏழாம் நாளை” ஏற்படுத்தினார். (எபேசியர் 1:12-ஐ ஒப்பிடுக.) ‘ஏழாம் நாள்’ முடிவுக்கு வருகையில் இந்த முழு பூமியும் ஒரு பரதீஸாக மாறியிருக்கும். அதில் பரிபூரண மனிதர்களின் குடும்பம் என்றென்றுமாக வாழும். (ஏசாயா 45:18) பூமிக்கும் மனிதவர்க்கத்திற்குமான கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதற்காக ‘ஏழாம் நாள்’ ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது அல்லது ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தில் அது ‘பரிசுத்தமானது.’
7. (அ) என்ன அர்த்தத்தில் கடவுள் “ஏழாம் நாளில்” ஓய்ந்திருந்தார்? (ஆ) அந்த ‘ஏழாம் நாள்’ முடிவுக்கு வருகையில் எல்லா காரியங்களும் எவ்வாறு நடந்துமுடிந்திருக்கும்?
7 ஆகவே, ‘ஏழாம் நாளில்’ சிருஷ்டிப்பு வேலையிலிருந்து கடவுள் ஓய்ந்திருந்தார். தாம் ஆரம்பித்து வைத்தவை முழுமையடைய அனுமதிப்பதற்காக அவர் ஒதுங்கி நின்றதைப்போல் இருக்கிறது. ‘ஏழாம் நாளின்’ முடிவிற்குள் எல்லாம் அவருடைய நோக்கத்திற்கு இசைவாக நிறைவேறியிருக்கும் என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஏதாவது தடைகள் இருந்திருந்தாலும் அவை மேற்கொள்ளப்பட்டிருக்கும். கடவுளுடைய சித்தம் முழுமையாக நிறைவேறும்போது கீழ்ப்படியும் மனிதர்கள் யாவரும் பயனடைவர். இதை எதுவும் தடுக்க முடியாது, ஏனென்றால் கடவுள் “ஏழாம் நாளை” ஆசீர்வதித்து அதை “பரிசுத்தமாக்கினார்.” கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு என்னே மகிமையான எதிர்பார்ப்பு!
கடவுளுடைய இளைப்பாறுதலில் நுழைய இஸ்ரவேல் தவறியது
8. இஸ்ரவேலர் எப்போது மற்றும் எப்படி ஓய்வு நாளை அனுசரித்தனர்?
8 வேலைக்கும் ஓய்வுக்குமான யெகோவாவின் ஏற்பாட்டால் இஸ்ரவேல் தேசம் பயனடைந்தது. சீனாய் மலையில் இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முன்பே மோசே மூலம் கடவுள் அவர்களிடம் கூறினார்: “பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம் நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும்.” அதன் விளைவாக “ஜனங்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்கள்.”—யாத்திராகமம் 16:22-30.
9. இஸ்ரவேலருக்கு, ஓய்வு நாள் சட்டம் விரும்பத்தக்க மாற்றமாக இருந்ததற்கு காரணம் என்ன?
9 எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து அப்போதுதான் விடுதலையாகியிருந்த இஸ்ரவேலருக்கு இந்த ஏற்பாடு புதிதான ஒன்று. வாரத்திற்கு ஐந்து முதல் பத்து நாட்கள் என எகிப்தியர்களும் மற்றவர்களும் கணக்கிட்டபோதிலும், அடிமையாய் இருந்த இஸ்ரவேலருக்கு ஒரு நாள்கூட ஓய்வு கிடைத்திருக்காது. (யாத்திராகமம் 5:1-9-ஐ ஒப்பிடுக.) ஆகவே இந்த மாற்றம் இஸ்ரவேல் மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை. ஓய்வு நாளை ஒரு பாரமாக அல்லது தடையாக கருதுவதற்கு பதிலாக அதைப் பின்பற்ற அவர்கள் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். எகிப்தில் அவர்கள் அடிமைகளாக இருந்ததையும், தாம் அவர்களை விடுவித்ததையும் நினைவுகூரும் ஒன்றாக ஓய்வு நாள் இருக்கும் என்று கடவுள் பின்னர் அவர்களிடம் கூறினார்.—உபாகமம் 5:15.
10, 11. (அ) இஸ்ரவேலர் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருந்திருந்தால் எதை அனுபவித்திருக்கலாம்? (ஆ) இஸ்ரவேலர் கடவுளுடைய ஓய்வில் நுழைய ஏன் தவறினர்?
10 மோசேயோடுகூட எகிப்தைவிட்டு வெளியேவந்த இஸ்ரவேலர் கீழ்ப்படிந்திருந்தார்கள் என்றால், “பாலும் தேனும் ஓடுகிற” வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழையும் சிலாக்கியத்தைப் பெற்றிருப்பார்கள். (யாத்திராகமம் 3:8) அங்கே அவர்கள், ஓய்வு நாளில் மட்டுமல்ல காலம் முழுவதும் உண்மையான ஓய்வை அனுபவித்திருப்பார்கள். (உபாகமம் 12:9, 10) ஆனாலும் அவ்வாறு நடக்கவில்லை. அவர்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்.”—எபிரெயர் 3:16-19.
11 நமக்கு எப்பேர்ப்பட்ட ஒரு பாடம்! யெகோவாவில் அவர்களுக்கு விசுவாசம் இல்லாததன் காரணமாக அவர் வாக்குக் கொடுத்திருந்த ஓய்வை அந்தச் சந்ததி அடையவில்லை. அதற்கு மாறாக அவர்கள் வனாந்தரத்திலே மரித்தார்கள். ஆபிரகாமின் சந்ததியினராக, பூமியின் எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதங்களை அளிக்கும் கடவுளுடைய சித்தத்தில் தங்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை மதித்துணர தவறினர். (ஆதியாகமம் 17:7, 8; 22:18) தெய்வீக சித்தத்திற்கு இசைவாக செயல்படுவதற்கு மாறாக தங்கள் அன்றாட சுயநல விருப்பங்களால் அவர்கள் முற்றிலுமாக திசை திருப்பப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்குள் நாம் விழுந்துவிடாதிருப்போமாக!—1 கொரிந்தியர் 10:6, 10.
ஒரு ஓய்வு இன்னும் இருக்கிறது
12. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு முன் என்ன எதிர்பார்ப்பு இன்னும் இருந்தது, அதை அவர்கள் எவ்வாறு அடைய முடியும்?
12 இஸ்ரவேலர், அவிசுவாசத்தின் காரணமாக கடவுளுடைய ஓய்விற்குள் நுழைய தவறினார்கள் என்று கூறிய பிறகு பவுல் தன் உடன் விசுவாசிகளுக்கு கவனம் செலுத்தினார். எபிரெயர் 4:1-5-ல் காணப்படுவதுபோல, “[கடவுளுடைய] இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம்” இன்னமும் இருக்கிறதென பவுல் அவர்களுக்கு உறுதியளித்தார். “சுவிசேஷ[த்தில்]” விசுவாசம் வைக்கும்படி பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார்; ஏனென்றால், “விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்.” இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில் நியாயப்பிரமாணம் ஏற்கெனவே நீக்கப்பட்டிருந்தபடியால், ஓய்வு நாள் மூலம் கிடைக்கும் சரீர ஓய்வைப் பற்றி பவுல் இங்கு குறிப்பிடவில்லை. (கொலோசெயர் 2:13, 14) ஆதியாகமம் 2:2-ஐயும் சங்கீதம் 95:11-ஐயும் மேற்கோள் காட்டுவதன் மூலம், எபிரெய கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ஓய்வில் நுழையும்படி பவுல் உற்சாகப்படுத்தினார்.
13. சங்கீதம் 95-ஐ மேற்கோள் காட்டுகையில், பவுல் “இன்று” என்ற வார்த்தைக்கு ஏன் கவனத்தைத் திருப்பினார்?
13 இஸ்ரவேலருக்கு ஓய்வு நாள் ஒரு ‘நற்செய்தியாக’ இருந்ததைப்போலவே, கடவுளுடைய ஓய்வில் நுழையும் வாய்ப்பு எபிரெய கிறிஸ்தவர்களுக்கும் ‘நற்செய்தியாக’ இருந்திருக்கும். ஆகவே, வனாந்தரத்தில் இஸ்ரவேலர் செய்த அதே தவறை அவர்களும் செய்யாதபடிக்கு பவுல் தன் உடன் விசுவாசிகளுக்கு ஆலோசனை கூறினார். சிருஷ்டிப்பிலிருந்து கடவுள் ஓய்ந்து வெகுகாலம் ஆகியிருந்தும்கூட சங்கீதம் 95:7, 8-ஆக இப்போது இருக்கும் வசனங்களை மேற்கோள் காட்டி, அதில் “இன்று” என சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைக்கு கவனத்தைத் திருப்பினார். (எபிரெயர் 4:6, 7) பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? இந்தப் பூமி மற்றும் மனிதவர்க்கம் சம்பந்தமான கடவுளுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறுவதற்காக அவர் ஒதுக்கி வைத்திருந்த ‘ஏழாம் நாள்’ இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்பதையே அர்த்தப்படுத்தினார். ஆகவே, அந்தக் கிறிஸ்தவர்கள் சுயநல காரியங்களைப் பின்தொடருவதற்கு பதிலாக அந்த நோக்கத்திற்கு இசைவாக செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். மறுபடியுமாக அவர் எச்சரிக்கை கொடுத்தார்: “உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.”
14. கடவுளுடைய ‘இளைப்பாறுதல்’ இன்னமும் இருக்கிறது என்று பவுல் எப்படி காட்டினார்?
14 கூடுதலாக, வாக்குப்பண்ணப்பட்ட அந்த ‘இளைப்பாறுதல்,’ யோசுவாவின் தலைமையில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வெறுமனே குடியேறுவதை அர்த்தப்படுத்தவில்லை என பவுல் கூறினார். (யோசுவா 21:44) “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே” என்று பவுல் வாதாடினார். அதன் காரணமாக பவுல் மேலும் கூறினார்: “ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.” (எபிரெயர் 4:8, 9) அந்த “இளைப்பாறுகிற காலம்” எது?
கடவுளுடைய ஓய்வில் நுழையுங்கள்
15, 16. (அ) “இளைப்பாறுகிற காலம்” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன? (ஆ) ‘தன் வேலையிலிருந்து ஓய்ந்திருப்பது’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
15 “இளைப்பாறுகிற காலம்” என்ற சொற்றொடர், “ஓய்வெடுத்தல்” என்று அர்த்தப்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (கிங்டம் இன்டர்லீனியர்) பேராசிரியர் வில்லியம் லேன் கூறுகிறார்: “ஓய்வும் துதியும் சேர்ந்திருக்க வேண்டும் என்று அழுத்திக் கூறிய யாத்திராகமம் 20:8-10-ன் அடிப்படையில், யூத மதத்தில் தோன்றிய ஓய்வு நாள் பற்றிய போதனையிலிருந்து இந்த வார்த்தை அதன் தனிப்பட்ட அர்த்தத்தைப் பெற்றது . . . கடவுளை மகிமைப்படுத்துவதிலும் துதிப்பதிலும் வெளிக்காட்டப்படும் விசேஷித்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் [அது] வலியுறுத்துகிறது.” ஆகவே, வாக்குப்பண்ணப்பட்ட ஓய்வு வெறுமனே வேலையிலிருந்து விடுபடுவது அல்ல. அது, களைப்பு ஏற்படுத்தும், நோக்கமற்ற வேலையிலிருந்து கடவுளை மகிமைப்படுத்தும் சந்தோஷமான சேவைக்கு மாறுவதாகும்.
16 பவுலின் அடுத்த வார்த்தைகளால் இது சுட்டிக்காட்டப்படுகிறது: “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.” (எபிரெயர் 4:10) கடவுள் களைப்பாய் இருந்ததால் ஏழாவது சிருஷ்டிப்பு நாளில் ஓய்வெடுக்கவில்லை. மாறாக, அவருக்கு துதியும் மகிமையும் உண்டாக, அவர் படைத்தவை விருத்தியடைவதற்காகவும் முழுமையான மகிமை அடைவதற்காகவும் பூமிக்குரிய சிருஷ்டிப்பு வேலையை நிறுத்தினார். கடவுளுடைய சிருஷ்டிப்பின் பாகமாக நாமும் அந்த ஏற்பாட்டில் பொருந்த வேண்டும். ‘நாமும் நம் கிரியைகளிலிருந்து ஓய்ந்திருக்க வேண்டும்;’ அதாவது, இரட்சிப்பைப் பெறுவதற்காக கடவுளுக்கு முன்பு நம்மை நாமே நியாயப்படுத்த முயற்சிக்கக்கூடாது. மாறாக, நம் இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் சார்ந்திருக்கிறது என்பதில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும். ஏனென்றால் அவர் மூலமாகவே எல்லா காரியங்களும் கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக மறுபடியும் கொண்டுவரப்படும்.—எபேசியர் 1:8-14; கொலோசெயர் 1:19, 20.
கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது
17. மாம்சப் பிரகாரமான இஸ்ரவேல் பின்தொடர்ந்த எந்தப் போக்கை நாம் தவிர்க்கவேண்டும்?
17 இஸ்ரவேலர், தங்கள் கீழ்ப்படியாமை மற்றும் அவிசுவாசத்தின் காரணமாக கடவுள் வாக்குக் கொடுத்திருந்த ஓய்வில் நுழைய தவறினர். அதன் காரணமாக பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார்: “ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.” (எபிரெயர் 4:11) முதல் நூற்றாண்டிலிருந்த பெரும்பாலான யூதர்கள் இயேசுவில் விசுவாசம் வைக்கவில்லை. பொ.ச. 70-ல் யூத ஒழுங்குமுறை அதன் முடிவுக்கு வந்தபோது அநேகர் பெருமளவு துன்பப்பட்டனர். கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் வார்த்தையில் இன்று நாம் விசுவாசம் வைப்பது எவ்வளவு முக்கியமானது!
18. (அ) கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பதற்கான என்ன காரணங்களைப் பவுல் கொடுத்தார்? (ஆ) கடவுளுடைய வார்த்தை எப்படி, “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதா[ய்]” இருக்கிறது?
18 யெகோவாவுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பதற்கு நமக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. பவுல் எழுதினார்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) ஆம், கடவுளுடைய வார்த்தை அல்லது செய்தி, “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கான[து].” தங்கள் முற்பிதாக்களுக்கு என்ன நடந்தது என்பதை எபிரெய கிறிஸ்தவர்கள் நினைவில் வைக்கவேண்டும். வனாந்தரத்தில் மரித்துப்போவார்கள் என்ற யெகோவாவின் நியாயத்தீர்ப்பை அவர்கள் அசட்டைசெய்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய முயற்சித்தனர். ஆனால், “அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்கு முன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்” என்று மோசே அவர்களை எச்சரித்தார். “இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் முன்னேறியபோது, அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கி வந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மா மட்டும் துரத்தினார்கள்.” (எண்ணாகமம் 14:39-45) இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்தையும்விட யெகோவாவின் வார்த்தை அதிக கூர்மையானது. அதை வேண்டுமென்றே அசட்டை செய்யும் யாவரும் அதன் விளைவுகளை நிச்சயம் எதிர்ப்படுவார்கள்.—கலாத்தியர் 6:7-9.
19. கடவுளுடைய வார்த்தை எவ்வளவு வல்லமையுடன் ‘குத்துகிறது,’ கடவுளுக்கு நாம் கணக்கு கொடுக்கவேண்டும் என்ற நம் பொறுப்பை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
19 கடவுளுடைய வார்த்தை எவ்வளவு வல்லமையுடன் “ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிற[து]”! அது தனிப்பட்டவர்களின் எண்ணங்களையும் உள்நோக்கங்களையும் ஊடுருவுகிறது; அடையாளப்பூர்வமாக, எலும்புகளின் உட்பகுதியில் இருக்கும் எலும்பு மச்சைவரை செல்கிறது! எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும், அவர்கள் இருதயத்தின் ஆழத்தில் யெகோவாவின் ஏற்பாடுகளையும் தேவைகளையும் மதித்துணரவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 95:7-11) அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு பதிலாக தங்கள் சுயநல விருப்பங்களை திருப்தி செய்வதிலேயே அவர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆகவே, கடவுள் வாக்குக் கொடுத்த ஓய்வில் அவர்கள் நுழையவில்லை மாறாக வனாந்தரத்தில் மரித்தனர். நாம் அதை மனதில் கொள்ளவேண்டும். ஏனென்றால், “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.” (எபிரெயர் 4:13) ஆகவே, யெகோவாவுக்கு நாம் ஒப்புக்கொடுத்திருப்பதை நிறைவேற்றி, “கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல்” இருப்போமாக.—எபிரெயர் 10:39.
20. நமக்கு முன் என்ன இருக்கிறது, மேலும் கடவுளுடைய ஓய்வில் நுழைய நாம் இப்போது என்ன செய்யவேண்டும்?
20 கடவுளுடைய இளைப்பாறுதலாகிய ‘ஏழாம் நாள்’ இன்னும் நடந்துகொண்டிருந்தாலும், இந்தப் பூமியையும் மனிதவர்க்கத்தையும் பற்றிய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதைப் பொருத்தவரையில் அவர் விழிப்பாக இருக்கிறார். வெகு சீக்கிரத்தில் மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, பிசாசாகிய சாத்தான் உட்பட கடவுளுடைய சித்தத்தை எதிர்க்கும் அனைவரையும் இந்தப் பூமியிலிருந்து நீக்கிப்போட நடவடிக்கை எடுப்பார். கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது, இயேசுவும் அவருடைய உடன் ஆட்சியாளர்களான 1,44,000 பேரும் சேர்ந்து இந்தப் பூமியையும் மனிதவர்க்கத்தையும் கடவுளுடைய ஆரம்ப நோக்கத்திற்கு இசைவாக கொண்டுவருவார்கள். (வெளிப்படுத்துதல் 14:1; 20:1-6) யெகோவா தேவனுடைய சித்தத்திற்கு இசைவாகவே நம்முடைய வாழ்க்கை இருக்கிறது என நிரூபிப்பதற்கு சமயம் இதுவே. கடவுளுக்கு முன்பாக நம்மை நியாயப்படுத்த முயற்சிப்பதையும் நம்முடைய சொந்த விருப்பங்களையுமே முன்னேற்றுவிப்பதற்கு பதிலாக ‘நம்முடைய கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்து’ இராஜ்ய அக்கறைகளை முழுமனதோடு முன்னேற்றுவிப்பதற்கான காலம் இதுவே. அவ்வாறு செய்வதன் மூலமும் நம்முடைய பரலோக தகப்பனாகிய யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருப்பதன் மூலமும், இப்போதும் நித்திய காலத்திற்கும் கடவுளுடைய ஓய்வின் நன்மைகளை அனுபவிக்கும் சிலாக்கியத்தைப் பெறுவோம்.
உங்களால் விளக்க முடியுமா?
◻ கடவுள் ஏன் “ஏழாம் நாளில்” ஓய்ந்திருந்தார்?
◻ இஸ்ரவேலர் என்ன ஓய்வை அனுபவித்திருக்கலாம், ஆனால் ஏன் அதற்குள் நுழைய தவறினர்?
◻ கடவுளுடைய ஓய்வில் நுழைய நாம் என்ன செய்யவேண்டும்?
◻ கடவுளுடைய வார்த்தை எவ்வாறு ஜீவனும் வல்லமையும் உள்ளதாய், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது?
[பக்கம் 16, 17-ன் படம்]
இஸ்ரவேலர் ஓய்வு நாளை அனுசரித்தனர், ஆனால் கடவுளுடைய ஓய்வில் நுழையவில்லை. ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?