சரியாக சிந்தியுங்கள்—ஞானமாக நடவுங்கள்
இந்தக் காட்சியை சற்று உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள்: எருசலேமிலிருந்த மத எதிரிகள் தம்மை பயங்கரமாக வேதனைப்படுத்தி கொலை செய்வார்கள் என்பதை இயேசு கிறிஸ்து விளக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பரான அப்போஸ்தலன் பேதுருவால் இதை நம்பவே முடியவில்லை. சொல்லப்போனால், அவர் இயேசுவை தனியே அழைத்துப் போய் அவரை கடிந்துகொள்கிறார். பேதுருவுக்கு எவ்வளவு நல்ல மனதும், உண்மையான அக்கறையும் இருக்கிறதென்று இதிலிருந்து நன்கு தெரிகிறது. ஆனால், பேதுருவின் சிந்தனையை இயேசு எவ்வாறு கருதுகிறார்? “எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே!” என்று சொல்கிறார். “நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்கிறார்.—மத்தேயு 16:21-23.
அந்த வார்த்தைகள் பேதுருவுக்கு எப்பேர்ப்பட்ட அதிர்ச்சியை தந்திருக்கும்! அவருடைய அன்பான எஜமானருக்கு பக்கபலமாக இருப்பதற்கு பதிலாக இந்த முறை அவருக்கு ‘இடறலாயிருந்தார்.’ இது எப்படி ஆயிற்று? மனிதர்கள் சிந்திக்கையில் பொதுவாக எந்த தவறை செய்வார்களோ அதையே பேதுருவும் செய்திருக்கலாம்; அதாவது, தான் நம்ப விரும்பியதை மட்டுமே நம்பியிருக்கலாம்.
மிதமீறிய தன்னம்பிக்கை கொள்ளாதீர்கள்
சரியான விதத்தில் சிந்திக்கும் நம் திறமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மிதமீறிய தன்னம்பிக்கை ஆகும். பூர்வ கொரிந்துவிலிருந்த சக கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எச்சரித்தார்: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:12) பவுல் ஏன் இப்படி சொன்னார்? மனித சிந்தனை எவ்வளவு எளிதாக முறை பிறழும் என்பதை அறிந்ததால் இப்படி சொல்லியிருக்கலாம்; ஏன், கிறிஸ்தவர்களின் மனதும்கூட ‘கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படும்’ என்பதை அவர் அறிந்திருந்தார்.—2 கொரிந்தியர் 11:3.
பவுலுடைய மூதாதையர்களின் ஒரு சந்ததி முழுவதற்கும் இதுதான் நடந்தது. அந்தச் சமயத்தில் யெகோவா அவர்களிடம், “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல” என்று சொன்னார். (ஏசாயா 55:8) அவர்கள் ‘தங்கள் பார்வையில் ஞானிகளாக’ இருந்தார்கள்; அதன் விளைவு விபரீதமாக இருந்தது. (ஏசாயா 5:21) அப்படியென்றால், அதே விபரீத விளைவை தவிர்க்க, நம்முடைய சிந்தனைகள் சரியான பாதையை விட்டு பிறழாதபடிக்கு எவ்வாறு காப்பது என்பதை ஆராய்வது நிச்சயமாக ஞானமானதுதான்.
மாம்ச சிந்தனையை குறித்து ஜாக்கிரதை
கொரிந்துவிலிருந்த சிலர் மாம்ச சிந்தனையால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். (1 கொரிந்தியர் 3:1-3) கடவுளுடைய வார்த்தையைவிட மனித தத்துவங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அன்றைய கிரேக்க தத்துவ ஞானிகள் அதிபுத்திசாலிகளாக இருந்தனர் என்பது உண்மைதான். ஆனால், கடவுளுடைய கண்களில் அவர்கள் பைத்தியக்காரர்களாக இருந்தனர். இதைத்தான் பவுல் சொன்னார்: “அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்க சாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?” (1 கொரிந்தியர் 1:19, 20) அப்படிப்பட்ட நபர்கள் கடவுளுடைய ஆவியால் அல்ல ஆனால் “உலகத்தின் ஆவி”யாலே வழிநடத்தப்பட்டார்கள். (1 கொரிந்தியர் 2:12) அவர்களுடைய தத்துவங்களும் யோசனைகளும் யெகோவாவின் சிந்தனையோடு ஒத்திசைவாக இருக்கவில்லை.
இத்தகைய மாம்ச சிந்தனைகளுக்கெல்லாம் மூல காரணமாக இருப்பது பிசாசாகிய சாத்தான்; ஒரு சர்ப்பத்தை பயன்படுத்தி ஏவாளை வஞ்சித்தது இவனே. (ஆதியாகமம் 3:1-6; 2 கொரிந்தியர் 11:3) இன்றும் அவனால் நமக்கு ஆபத்தா? ஆம்! கடவுளுடைய வார்த்தை சொல்கிறபடி, சாத்தான் இப்போது “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற” அளவுக்கு மக்களுடைய ‘மனதை குருடாக்கியிருக்கிறான்.’ (2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:9) அவனுடைய தந்திரங்களைக் குறித்து நாம் விழிப்போடு இருப்பது எவ்வளவு முக்கியம்!—2 கொரிந்தியர் 2:11.
‘மனுஷருடைய தந்திரத்தைக்’ குறித்து விழிப்பாயிருங்கள்
‘மனுஷருடைய தந்திரத்தைக்’ குறித்தும் அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (எபேசியர் 4:14) சத்தியத்தை சொல்வதைப் போல நடித்து, உண்மையில் அதை திரித்துக் கூறின ‘கபடமுள்ள வேலையாட்களை’ பவுல் எதிர்ப்பட்டார். (2 கொரிந்தியர் 11:12-15) அப்படிப்பட்ட ஆட்கள் தங்களுடைய தந்திரமான திட்டங்களை நிறைவேற்ற தங்களுக்கு சாதகமாக இருக்கும் ஆதாரங்களை மட்டுமே பயன்படுத்தலாம்; உணர்ச்சிவசப்பட வைக்கும் வார்த்தைகளை பேசலாம்; தவறாக வழிநடத்தும் அரைகுறை உண்மைகளை சொல்லலாம்; சூழ்ச்சியோடு மறைமுகமாக பேசலாம்; அதோடு, அப்பட்டமான பொய்களையும் அவிழ்த்துவிடலாம்.
பிரச்சாரம் செய்பவர்கள் மற்றவர்களை புண்படுத்துவதற்காக அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தை “மத உட்பிரிவு.” புதிய மதங்களை அலசி ஆராயும் அதிகாரிகள் “இந்த வார்த்தையை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது” என்று ஐரோப்பாவிலுள்ள ஆலோசனை சங்கக் குழுவின் பாராளுமன்ற கூட்டத்தில் சொல்லப்பட்டது. ஏன்? “மத உட்பிரிவு” என்ற வார்த்தை எப்போதும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது என கருதப்பட்டதால் அவ்வாறு சொல்லப்பட்டது. இதே போன்றுதான், கிரேக்க ஞானிகள் அப்போஸ்தலன் பவுலை “வாயாடி,” அல்லது சொல்லர்த்தமாக, “விதைகளை பொறுக்குகிறவன்” என்று தவறாக குற்றம் சாட்டினார்கள். அதாவது, அவர் வெட்டியாக பிதற்றிக் கொண்டிருப்பவர் என்றும், மற்றவர்கள் சொன்ன விஷயங்களை இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமென பொறுக்கியெடுத்து அவற்றை திரும்பக் கூறுபவர் என்றும் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நிஜத்தில், “இயேசுவையும் உயிர்த்தெழுதலையும்” பற்றிய நற்செய்தியைத்தான் பவுல் பிரசங்கித்து வந்தார்.—அப்போஸ்தலர் 17:18.
பிரச்சாரம் செய்பவர்கள் கையாளும் உத்திகள் நன்றாக வேலை செய்கின்றனவா? ஆம். இத்தகைய உத்திகள், மற்ற தேசங்களைப் பற்றியோ மதங்களைப் பற்றியோ மக்களுடைய உணர்வுகளை உருக்குலைப்பதால் இனம் மற்றும் மத வெறுப்புகளை தூண்டிவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரபலமற்ற சிறுபான்மை தொகுதிகளை ஓரங்கட்டிவிடுவதற்கு அநேகர் அவற்றை உபயோகித்திருக்கின்றனர். யூதர்களையும் மற்ற தொகுதியினரையும் “சீர்கேடானவர்கள்,” “பொல்லாதவர்கள்,” நாட்டை “அச்சுறுத்துபவர்கள்” என்றெல்லாம் அடால்ஃப் ஹிட்லர் சொன்ன போது இப்படிப்பட்ட உத்திகளைத்தான் திறமையாக பயன்படுத்தினான். இம்மாதிரியான தந்திரங்கள் உங்கள் சிந்தையை பாழாக்கிட அனுமதிக்காதீர்கள்.—அப்போஸ்தலர் 28:19-22.
உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதும் சுலபமான காரியமே. உண்மையைச் சொன்னால், நாம் உயிருக்குயிராக நேசிக்கும் கருத்துக்களை விட்டுவிடுவதோ அவற்றை குறித்து சந்தேகிப்பதோ ரொம்பவும் கஷ்டமாக இருக்கலாம். ஏன்? ஏனெனில் நம் சொந்த கருத்துக்களிடமாக நாம் உணர்ச்சி ரீதியில் ஒன்றிப்போய் விடுகிறோம். பிறகு, தவறாக புரிந்துகொண்ட நம்பிக்கைகளையும் தவறாக வழிநடத்தும் நம்பிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்காக புதுப்புது காரணங்களை உருவாக்குவதன் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வோம்.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலருக்கு இப்படித்தான் நடந்தது. கடவுளுடைய வார்த்தையை அவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அந்த வார்த்தை அவர்களுடைய சிந்தனையை செதுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக, அவர்கள் ‘தவறாக நியாயப்படுத்தி தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டார்கள்.’ (யாக்கோபு 1:22, 26, NW) நம் நம்பிக்கைகளைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பும்போது நாம் கோபப்படுகிறோமா? அப்படியென்றால், இத்தகைய சுய வஞ்சனையெனும் வலையில் நாம் சிக்கியிருப்பதை இது குறிக்கலாம். கோபப்படுவதற்கு பதிலாக, பரந்த மனப்பான்மையோடு மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காதுகொடுத்து கேட்பது ஞானமாகும்; நம் கருத்துக்களே சரியானவை என்று நாம் ஆணித்தரமாக நம்பினாலும்கூட அவ்வாறு நாம் செய்ய வேண்டும்.—நீதிமொழிகள் 18:17.
“தேவனை அறியும் அறிவை” தோண்டி எடுங்கள்
நம் சிந்தனை சரியானதாக இருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? ஏராளமான உதவி இருக்கிறது, ஆனால் அதற்காக பிரயாசப்பட நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஞானியான சாலொமோன் ராஜா இவ்வாறு சொன்னார்: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப் போல் நாடி, புதையல்களைத் தேடுகிறது போல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.” (நீதிமொழிகள் 2:1-5) ஆம், நம் மனதையும் இருதயத்தையும் கடவுளுடைய வார்த்தையிலிருக்கும் சத்தியங்களால் நிரப்புவதற்கு தனிப்பட்ட முயற்சி எடுப்போமானால், உண்மையான ஞானம், உட்பார்வை, பகுத்துணர்வு ஆகியவற்றை நாம் பெற்றுக்கொள்வோம். இதை செய்யும்போது, வெள்ளியையோ மற்ற எந்த பொக்கிஷங்களையோ காட்டிலும் அதிக விலைமதிப்புள்ள விஷயங்களை நாம் தோண்டி எடுத்துக் கொண்டிருப்போம்.—நீதிமொழிகள் 3:13-15.
ஆகவே, சரியாக சிந்திப்பதற்கு ஞானமும் புத்தியும் அவசியம் தேவை. கடவுளுடைய வார்த்தை சொல்கிறது, ‘ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதி நெறிகளை விட்டுவிடுகிறவர்களுக்கும் . . . தப்புவிக்கப்படுவாய்.’—நீதிமொழிகள் 2:10-13, 15.
மன அழுத்தத்தில் இருக்கும்போதோ ஆபத்தில் இருக்கும்போதோ, கடவுளுடைய யோசனைகள் நம் சிந்தனைகளை வழிநடத்த அனுமதிப்பது மிக மிக முக்கியம். கோபம், பயம் போன்ற வலிமையான உணர்ச்சிகள் நம்மை சரியாக சிந்திக்க விடாமல் செய்யலாம். “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்” என சாலொமோன் சொல்கிறார். (பிரசங்கி 7:7) நாம் ‘யெகோவாவின் மீதே கோபமடையவும்’ வாய்ப்பிருக்கிறது. (நீதிமொழிகள் 19:3, NW) எவ்வாறு? நம்முடைய பிரச்சினைகளுக்கு கடவுளை குற்றம்சாட்டுவதன் மூலமும், அப்பிரச்சினைகளைக் காரணங்காட்டி அவருடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் எதிரான காரியங்கள் செய்வதை நியாயப்படுத்துவதன் மூலமும் ஆகும். எல்லாமே நமக்குத்தான் நன்றாக தெரியும் என்று நினைக்காமல், வசனங்களை பயன்படுத்தி நமக்கு உதவ முயலும் ஞானமான ஆலோசகர்களுக்கு நாம் மனத்தாழ்மையோடு செவிகொடுப்போமாக. தேவைப்பட்டால், நாம் ஆணித்தரமாக நம்பியிருக்கும் கருத்துக்கள் தவறானவை என நிரூபிக்கப்பட்டதுமே அவற்றை மாற்றிக்கொள்ளவும் நாம் தயாராக இருப்போமாக.—நீதிமொழிகள் 1:1-5; 15:22.
‘கடவுளிடம் தொடர்ந்து கேளுங்கள்’
குழப்பமும் ஆபத்தும் நிறைந்த காலங்களில் நாம் வாழ்ந்து வருகிறோம். சரியாக சிந்திக்கவும் ஞானமாக நடக்கவும் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக தவறாமல் ஜெபிப்பது மிக அத்தியாவசியம். பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) மனதை அலைக்கழிக்கும் பிரச்சினைகளையோ சோதனைகளையோ எப்படி சமாளிப்பதென்றே தெரியாதபோது, “யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில்” ஞானத்திற்காக தொடர்ந்து “கேட்க” வேண்டும்.—யாக்கோபு 1:5-8.
சக கிறிஸ்தவர்கள் ஞானமாக செயல்பட வேண்டுமென்பதை அறிந்தவராக அப்போஸ்தலன் பேதுரு, ‘தெளிவாக சிந்திக்கும் [அவர்களுடைய] திறனை தூண்டி எழுப்புவதற்கு’ (NW) முயன்றார். ‘பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலரின் கட்டளைகளையும் நினைவுகூரும்படி’ அவர் கேட்டுக்கொண்டார். (2 பேதுரு 3:1, 2) இப்படியெல்லாம் செய்து, நம் மனதை யெகோவாவின் வார்த்தைக்கு இசைவாக கொண்டு வருவோமானால், சரியாக சிந்திப்போம், ஞானமாகவும் நடப்போம்.
[பக்கம் 21-ன் படங்கள்]
ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், தங்கள் சிந்தனையை செதுக்க தத்துவ ஞானத்தை அல்ல, ஆனால் கடவுளுடைய ஞானத்தை அனுமதித்தார்கள்
[படங்களுக்கான நன்றி]
தத்துவ ஞானிகள் இடமிருந்து வலம்: எப்பிக்கூரஸ்: Photograph taken by courtesy of the British Museum; சிசரோ: Reproduced from The Lives of the Twelve Caesars; பிளேட்டோ: Roma, Musei Capitolini
[பக்கம் 23-ன் படங்கள்]
ஜெபம் செய்வதும் கடவுளுடைய வார்த்தையை படிப்பதும் அத்தியாவசியமானவை