உங்களை நீங்கள் எவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்
நடத்தையை நிலைநாட்டுவது, நடத்தையை மாற்றுவது என்பவற்றைப் பற்றி ஏற்கெனவே கலந்தாலோசித்திருந்த வழிமுறைகளில் எது குறைவுபடுகிறது? ஒரு நபரின் சொந்த விருப்பங்களும், மனத்திண்மையை உபயோகித்தலும்! விஷயங்கள் அறிந்து தனிப்பட்ட தேர்ந்தெடுப்பின் மூலம் தன் சொந்த சுயதெரிவை உபயோகித்தல். சுருக்கமாக சொன்னால், அவருடைய தன்னடக்கம் குறைவுபடுகிறது!
சிகிச்சை அளிக்கப்படும் நபருக்கு தன் சொந்த நடத்தை இலக்குகளை வைப்பதில் இறுதியான தீர்மானம் செய்ய அதிகாரம் இருந்தால், நிரந்தரமான விளைவுகளை அடைவதற்கு நல்ல வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதாக நடத்தை-நோய் சிகிச்சையாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். வான்ஸ் பாக்கார்ட் என்பவர் தி பீபில் ஷேபர்ஸ் (The People Shapers) என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “ஓரளவு புத்திசாலித்தனமுள்ள எந்த நபரும் சிறிதளவு ஆலோசனையைக் கொண்டு தன் சொந்த நடத்தையை மாற்றிக்கொள்ளக் கூடியவராகிறார்.” இது சுயமாக-கையாளுதல் என்று அழைக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஓரளவு சுய அடக்கத்தை அப்பியாசிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கவனிக்கப்பட்டுள்ளது.
தன்னடக்கம் தேவைப்படும் சமயத்தில் கிறிஸ்தவர்களுக்கு ஓர் அனுகூலம் இருக்கிறது. ஏனெனில் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஒன்பது கனிகளில் ஒரு கனியாக இதை காண்பிக்க அவர்கள் கற்றுக்கொண்டிருக்கின்றனர். (கலாத்தியர் 5:22, 23) சர்வவல்லமையுள்ள கடவுளின் கிரியை நடப்பிக்கும் சக்தி உங்களுடைய நடத்தையின் மாற்றத்தை சமாளிப்பதற்கு உட்படுத்தப்பட்டு, வெற்றியடைவதற்கு உங்களுக்கு உதவுகிறது.
ஆகையால், உங்களுடைய நடத்தையை குறித்து நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே மாற்றம் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால், எதிலிருந்து? எதற்கு? ஏன்? உங்களுடைய சொந்த கட்டுப்பாட்டை நீங்கள் நம்ப முடியுமா? நன்மைகளை மட்டுமே அளிக்கும் உதவியை நீங்கள் எங்கே காணலாம்?
நடத்தை முறைகளை மாற்றுவதற்கு தேவையான வழிமுறைகளையும், ஆக்கக் கூறுகளையும் நாம் காணலாம்.
படி 1: உண்மையில் நீங்கள் யார் என்பதை கண்டுபிடியுங்கள்
நீங்கள் எவ்விதம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அதற்கு நீங்களே ஆக்கப் பொருளாக இருக்கிறீர்கள். உங்களுடைய பழைய ஆள்தன்மையை மாற்றி, புதிய ஆள்தன்மையை வளர்க்க வேண்டும். ஆகையால் நீங்கள் உங்களையே திருத்தமாக அறிந்திருக்க வேண்டும். உங்களுடைய நடத்தையின் எந்த அம்சங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த முடியுமா?
உங்களுடைய சொந்த நடத்தையை மதிப்பிடுவது கடினமாதலால், ஒரு மதிப்புக்குரிய நம்பத்தக்க தராதரத்தை அறிவுரைக்காக நாட வேண்டும். இதற்கு பரிசுத்த பைபிள் சிபாரிசு செய்யப்படுகிறது. பைபிளை உபயோகியுங்கள். நீங்கள் முன்பு பார்த்திராத உங்களைப் பற்றிய ஒரு காட்சியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அது பிரதிபலிப்பவற்றை காண்பதற்குகூட நீங்கள் விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் அது ஒரு திருத்தமான பிரதிபலிப்பாக இருக்கும் என்று நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம்.
பைபிள் ஒரு கண்ணாடிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. அதற்குள் உற்று நோக்கும்படி ஜனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். “ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத் தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்து விடுவான். சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.” (யாக்கோபு 1:23-25) பைபிளை சரியாக புரிந்துகொண்டு உபயோகித்தால், அதற்கு ஆழமாக ஊடுருவி பகுத்து ஆராய்ச்சி செய்யும் வல்லமை இருக்கிறது. நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறீர்கள் என்பதை மட்டும் அது காண்பிக்காமல், உங்களுடைய உள்நோக்கங்களையும், மனநிலைகளையும் கூட வெளிக்காட்டும். ஆகையால் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், . . . இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” எது உண்மையில் சரி, எது உண்மையில் தவறு என்பதன் பேரில் வழிநடத்துதலை அளிப்பதன் மூலம் கடவுளுடைய வார்த்தை இன்னுமதிகத்தைச் செய்கிறது.—எபிரெயர் 4:12; 5:14.
பைபிள் இந்த எல்லா காரியங்களையும் உங்களுக்காகச் செய்ய முடியும். ஏனென்றால் இது பகுத்தறிவுள்ள மெய்க் கடவுளாகிய யெகோவாவின் வார்த்தையாக இருக்கிறது. சங்கீதம் 139-ன் படி, கடவுள் உங்களை முழுவதுமாக ஊடுருவி நோக்கி, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதை திருத்தமாக பகுத்து ஆராய்கிறார். முதல் வசனம் சொல்லுகிறபடி: “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.” கருத்தரிக்கப்பட்டதிலிருந்து கடவுள் உங்களை கவனித்துக் கொண்டு வருகிறார். அவர் உங்களை முழுவதுமாக அறிந்திருக்கிறார். சகல விதங்களிலும் மனித வாழ்க்கையை பற்றிய குறிப்புரைகளை பைபிளில் எழுதி வைக்கும்படி அவர் செய்திருக்கிறார். அதனுடைய பக்கங்களில் ஏதாவது ஓர் இடத்தில் உடன்பாடானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ உங்களுடைய பிரதிபலிப்பு இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
ஆகையால், நீங்கள் உண்மையில் யாராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கண்டுபிடிக்கலாம்.
படி 2: நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள்
நீங்கள் மாறப் போகிறீர்கள் என்றால், அந்த மாற்றம் தகுதியானதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அதை தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதையும், இப்போது நீங்கள் கொண்டிருப்பதைக் காட்டிலும் மேலானது என்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். எத்தகைய மேம்பட்ட நடத்தை இலக்குகளை நீங்கள் வைக்க வேண்டும்? விரும்பத்தக்க நடத்தை பண்புகள் பற்றி சரியான புத்திமதியை நீங்கள் எங்கே பெறலாம்? மறுபடியும் இதற்கு பைபிள் சிபாரிசு செய்யப்படுகிறது.
ஒரு சிறந்த நபராக மாறும்படி பைபிள் உங்களை ஊக்குவிக்கிறது. ஒரு “புதிய ஆள்தன்மையை” ஏற்றுக் கொள்ளும்படி சொல்கிறது. “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை [ஆள்தன்மையை, NW] நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் [ஆள்தன்மையை, NW] தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 4:22-24) இந்த மேலான பண்புகள் என்னவென்பதை பைபிள் உங்களுக்கு காண்பிக்கிறது. ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டிருந்த பரிபூரணமான உலகை நீங்கள் நினைவுபடுத்திப் பார்க்கிறீர்களா? அந்த உலகத்தின் பாகமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், கொலோசெயர் 3:12-17-ல் விவரிக்கப்பட்டிருக்கும் பரிவு, இரக்கம், மனத்தாழ்மை, சாந்தம், பொறுமை, மன்னிக்கும் தன்மை, அன்பு, சமாதானம், நன்றி போன்ற குணாதிசயங்களை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை நீங்கள் காண வேண்டும்.
பைபிளின் அறிவுரையை பார்த்த பிறகு, உங்களுடைய இலக்குகளை வையுங்கள். அவைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு இலக்குக்கும் முதலிடம் கொடுங்கள். அதை அடைய உழையுங்கள்!
படி 3: தகுதியான முன்மாதிரிகளை நாடுங்கள்
உங்களுடைய நடத்தையின் பெரும்பகுதி மற்றவர்களைப் பார்த்து—நண்பர்கள், கூட்டாளிகள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் போன்றவரை—பின்பற்றியதன் பேரில் நிலைநாட்டப்பட்டது.
அப்படியென்றால், நீங்கள் விரும்பும் நடத்தை இலக்குகளை தீர்மானித்த பிறகு, நீங்கள் பார்த்து பின்பற்ற விரும்பும் நடத்தையையுடைய யாராவது ஒருவரை ஏன் பார்க்கக் கூடாது? பின்பு அந்த நபரின் உதவியை நாடுங்கள். ஒரு பைபிள் நீதிமொழி ஞானமாக குறிப்பிட்டுக் காட்டுகிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
நம் அனைவருக்கும் மிகச் சிறந்த உதாரணமாயிருக்கும் இயேசு கிறிஸ்துவை பற்றிய வாழ்க்கை விவரம் பைபிளில் அடங்கியிருக்கிறது. எல்லா சூழ்நிலைமைகளின் கீழும் அவர் எவ்வாறு நடந்து கொண்டார், அவருடைய ஒழுக்க நடத்தை, அவருடைய பகுத்தறிவும் ஞானமும், அவருடைய கண்ணியம், பிறர்நிலை எண்ணிப் பார்க்கும் தன்மை, அளவு கடந்த தயவு, அயலான் பேரில் அக்கறை போன்றவற்றை வாசியுங்கள். பின்வருமாறு சொல்லும்போது அவர் எவ்வாறு புத்துணர்ச்சி அளிப்பவராய் தொனிக்கிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது”!—மத்தேயு 11:28-30.
எல்லா தேசங்களிலும் இருக்கும் லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே கிறிஸ்து இயேசுவிடம் திரும்பியிருக்கின்றனர். அவர் தாமே தன் பரலோக தகப்பனாகிய யெகோவா தேவன் போதித்த வழியில் நடந்தது போல, அவரை அவர்கள் தங்கள் முன்மாதிரியாக வைத்து, அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்கு தங்களால் செய்ய முடிந்த சிறந்ததைச் செய்கின்றனர். இந்த லட்சக்கணக்கானோர் இன்று உலகில் ஏராளமாயுள்ள கெட்ட நடத்தையை விட்டு உதவிக்காகவும், வழிநடத்துதலுக்காகவும் யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் சபைக்கு சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் ஏமாற்றமடையவில்லை. அவர்களுடைய ராஜ்ய மன்றங்களில் கிறிஸ்துவைப் போன்ற மிகச் சிறந்த முன்மாதிரிகள் ஏராளமாக இருக்கின்றனர். மேம்பட்டவர்களாக ஆவதற்கு தங்களுடைய தனிப்பட்ட நடத்தையை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு மிகுந்த உதவி அளிக்கப்படுகிறது. அபூரண மனிதவர்க்கத்துக்கு பொதுவாக இருக்கும் குறைபாடுகள் சாட்சிகளுக்கு இருக்கிறது; ஆனால் மனதை உந்துவிக்கும் உடன்பாடான ஆவிக்குரிய சக்தியையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர்.—எபேசியர் 4:23.
படி 4: வெற்றி காண்பதற்கு உங்களுக்கு தேவைப்படும் பலத்தை பெற்றுக் கொள்ளுங்கள்
தங்களுடைய வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு உதவி கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது ஆறுதலாயிருக்கும். “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது” என்று “புதிய ஆள்தன்மை” விவரிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர் 4:24) மனித ஆற்றலுக்கு மேற்பட்ட உதவியை விரும்புபவர்களுக்கு கடவுளிடமிருந்தே அது கிடைக்கக்கூடியதாயிருக்கிறது என்பதை இது உறுதி அளிக்கிறது. யெகோவா தேவனின் உதவியை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?
மிக முக்கியமான உதவிகளில் ஒன்று தனிப்பட்ட ஜெபம் ஆகும். உங்களுடைய வழிகளை மாற்றுவதற்குத் தேவையான வல்லமையின் ஊற்றுமூலத்தோடு ஓர் இன்றியமையாத தொடர்பை ஜெபம் அளிக்கிறது. தடையின்றி வெளிப்படையாக எந்த நேரத்திலும், நெருக்கடியான நிலையின் மத்தியிலும் கூட பேசுவதற்கு ஜெபம் உங்களை அனுமதிக்கிறது. உண்மையான, அக்கறையுள்ள கடவுளிடம் தொடர்புகொள்ள இப்படிப்பட்ட வாய்ப்பைக் கொண்டிருப்பது எந்த மானிட உதவியைக் காட்டிலும் மிகவும் மேம்பட்டதாயிருக்கிறது. மேலும், அது உடனடியாக பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. ஆகையால், அப்போஸ்தலனாகிய யோவானால் இவ்வாறு எழுத முடிந்தது: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (1 யோவான் 5:14) ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.”—ஏசாயா 55:6, 7.
பைபிள் படிப்பும் கூட பலம் அளிக்கிறது. புத்துணர்ச்சியை உங்களுக்கு கொடுத்து உங்களுடைய இலக்குகளின் பேரில் தினந்தோறும் உங்களுடைய கவனத்தை மீண்டும் ஒருமுகப்படுத்துவதற்கு உங்களுக்கு உதவி செய்கிறது. நீங்கள் தெரிந்துகொண்ட நடத்தைச் சார்ந்த குறிக்கோளை அடைய முயற்சி செய்யும்போது பைபிள் சாதகமான வலுவூட்டுதலை அளிக்கிறது. மேலும், உங்களுடைய முந்தைய வழிகளின் பேரில் அது ஒரு வெறுப்புணர்ச்சியை தூண்டுகிறது. பைபிளைப் பற்றியும், அதில் அடங்கியுள்ளவற்றைப் பற்றியும் தினந்தோறும் அறிவை எடுத்துக் கொள்வது, உலக செய்திமூலங்களிலிருந்தும் அதன் கல்வி அமைப்புகளிலிருந்தும் வெளிவரும் எந்தத் தவறான தகவலையும் தள்ளிவிடுவதற்கு உதவி செய்யும்.
யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் ராஜ்ய மன்ற கிறிஸ்தவ கூட்டங்கள் பைபிள் தராதரங்களின் பேரில் கல்வி புகட்டுவது மட்டுமல்லாமல், மேம்பட்ட நடத்தைக்கு தேவையான தொகுதியான ஆதரவையும், பரஸ்பர தூண்டுதலையும் அளிக்கின்றன. சபையின் மூலம் அளிக்கப்படும் இந்த ஆதரவு, வெற்றிகரமான நடத்தை மாற்றத்தைச் செய்வதற்கு அநேகருக்கு உதவியிருக்கிறது. நீங்கள் இந்தப் பத்திரிகையை பெற்றுக்கொண்ட நபருடன் இப்படிப்பட்ட உதவியை பற்றி ஏன் கலந்தாலோசிக்கக் கூடாது?
படி 5: தவறுகளை மீண்டும் இழைத்துவிடும் சந்தர்ப்பங்களை சமாளியுங்கள்
அநேகர் தங்கள் வழிகளை மேம்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் மீண்டும் தவறுகளை செய்து உற்சாகமிழந்தவர்களாக ஆகிவிடுகின்றனர். இதன் காரணமாக சிலர் முழுவதுமாக விட்டுவிடுகின்றனர். தங்களுடைய ஒரே நம்பிக்கை என்று அவர்கள் கருதிய காரியம் இப்போது தோல்வியடைந்துவிட்டதால், நம்பிக்கையே இல்லை என்று அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் நினைக்கின்றனர். அதனால் அவர்கள் அதற்குப் பிறகு உலகத்தின் செல்வாக்குகளுக்கு தங்களை கொடுத்து விடுகின்றனர். மாறுவதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்ததற்கு முன்பு இருந்ததை விட அவர்கள் அதிக மோசமாக ஆகின்றனர்.
விரும்பத்தகாத எந்த முந்தைய போக்கிலிருந்தும் வெளியேறுவது பயனுள்ளது என்பதை நீங்கள் உங்களுக்குத் தானே உறுதிசெய்து கொண்டேயிருங்கள். தன்னுடைய முந்தைய நடத்தையையும், வாழ்க்கை-பாணியையும் குப்பை கூளம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். (பிலிப்பியர் 3:8, NW) ஆகையால் நீங்கள் மாற்றம் செய்கையில், தடங்கலினால் அல்லது இடறினால், மீண்டும் தவறு செய்தால், மறுபடியும் எழுந்திருங்கள். முன்னோக்கி சென்றுகொண்டேயிருங்கள். தொடர்ந்து செல்லுங்கள்! முடிவு வரை போராடுங்கள்! அவ்வாறு செய்வது பயனுள்ளதாய் இருக்கும்!
உங்களுடைய தேர்ந்தெடுப்பையும் அல்லது கட்டுப்பாட்டையும் மீறி செயல்பட்ட புறம்பான சக்திகள் மூலம் அந்த சமயத்தில் உங்களுடைய பெரும்பாலான வழிகளும், பண்புகளும் உங்கள் மீது வலிந்து சுமத்தப்பட்டன என்பதை நினைவில் வையுங்கள். இப்படிப்பட்ட சக்திகள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகள் உங்களை அவைகளுடைய வார்ப்புக்குள் திணித்து விட நீங்கள் அனுமதிப்பீர்களா? இல்லை? அப்படியென்றால் முயற்சியை விட்டுவிடாதீர்கள்!
பல்வேறு வகைப்பட்ட கலாச்சாரங்களிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான ஜனங்கள்—குற்றவாளிகளும், ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஆழமாக உட்பட்டிருந்த ஆட்களும் கூட—தங்கள் நடத்தையை வெற்றிகரமாக மாற்றியிருக்கின்றனர். அவர்கள் தங்கள் மேம்பட்ட தராதரங்களை இந்நாள் வரை காத்து வந்திருக்கின்றனர். அநேகர் தாங்களாகவே மனமுவந்து உண்மைத்தன்மையுடன் போற்றத்தக்க விதத்தில் பல பத்தாண்டுகளாக தங்கள் மேலான வழிகளை கைவிடாதிருக்கின்றனர். ஆனால் அதை செய்வதற்கு பலத்துக்காகவும் ஊக்கத்துக்காகவும் கடவுளுக்கு அவர்கள் நன்றி சொல்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னபடி: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.”—பிலிப்பியர் 4:13.
சரியானதைச் செய்ய வேண்டும் என்ற போராட்டத்தில் அவர்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், நீங்களும்கூட மாற்றம் செய்யலாம். கடவுளுடைய புதிய உலகில் வாழ்க்கையை நீங்கள் அனுபவித்துக் களிக்கலாம்.—சங்கீதம் 37:29; 2 பேதுரு 3:13. (g91 7⁄8)
[பக்கம் 7-ன் படம்]
படி 1: உண்மையில் நீங்கள் யார் என்பதை கண்டுபிடியுங்கள்
[பக்கம் 8-ன் படம்]
படி 2: நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள்
[பக்கம் 8-ன் படம்]
படி 3: தகுதியான முன்மாதிரிகளை நாடுங்கள்
[பக்கம் 9-ன் படம்]
படி 4: வெற்றி காண்பதற்கு உங்களுக்கு தேவைப்படும் பலத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
[பக்கம் 9-ன் படம்]
படி 5: தவறுகளை மீண்டும் இழைத்துவிடும் சந்தர்ப்பங்களை சமாளியுங்கள்
[பக்கம் 10-ன் படம்]
மாற்றம் செய்யும் ஆட்களுங்கூட மாற்றியமைக்கப்பட்ட பூமியை சுதந்தரித்துக் கொள்ளலாம்