கேட்பதை மறக்கிறவர்களாய் இராதேயுங்கள்
“நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.”—யாக்கோபு 1:22.
1. பூர்வ இஸ்ரவேலர் என்னென்ன அற்புதங்களைக் காணும் பாக்கியம் பெற்றிருந்தனர்?
“மறக்க முடியாதவை.” இவை பூர்வ எகிப்தில் யெகோவா நடப்பித்த அற்புதங்களை விவரிக்க பொருத்தமான வார்த்தைகள். அந்தப் பத்து வாதைகள் ஒவ்வொன்றும் மறுக்க முடியாதளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. அந்தத் தாக்குதல்களுக்குப் பின்பு சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளக்கவே, இஸ்ரவேலர் அதன் வழியே நடந்து சென்று அற்புதமாய் விடுதலை பெற்றனர். (உபாகமம் 34:10-12) நீங்கள் அவற்றை கண்ணாரக் கண்டவர்களாக இருந்திருந்தால், ஒருவேளை அவற்றை நடப்பித்தவரை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். இருந்தாலும், “எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, தங்கள் இரட்சகரான தேவனை [இஸ்ரவேலர்] மறந்தார்கள்” என சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 106:21, 22.
2. கடவுளுடைய வல்லமை வாய்ந்த செயல்களுக்கான இஸ்ரவேலரின் போற்றுதல் நீடித்திருக்கவில்லை என்பதை எது காட்டுகிறது?
2 சிவந்த சமுத்திரத்தைக் கடந்த இஸ்ரவேலர், ‘யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவினிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்.’ (யாத்திராகமம் 14:31, திருத்திய மொழிபெயர்ப்பு) மோசேயுடன் சேர்ந்து இஸ்ரவேல் ஆண்கள் யெகோவாவுக்கு வெற்றி பாடலை பாடினார்கள், அவர்களோடு சேர்ந்து மிரியாமும் மற்ற பெண்களும் தம்புருகளை இசைத்து, நடனமாடினார்கள். (யாத்திராகமம் 15:1, 20) ஆம், யெகோவாவின் வல்லமை வாய்ந்த செயல்களைக் கண்டு கடவுளுடைய ஜனங்கள் நெகிழ்ந்து போனார்கள். ஆனால், அச்செயல்களை நடப்பித்தவரிடம் அவர்களுடைய போற்றுதல் நீடித்திருக்கவில்லை. அதன்பின் சீக்கிரத்திலேயே அவர்களில் பெரும்பான்மையர், பெரும் மறதிக்காரர்களைப் போல் நடந்துகொண்டார்கள். அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக முறுமுறுக்கவும் குறைசொல்லவும் ஆரம்பித்தார்கள். சிலர் விக்கிரக வணக்கத்திலும் பாலுறவு ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபட்டார்கள்.—எண்ணாகமம் 14:27; 25:1-9.
எது நம்மை மறக்க செய்யலாம்?
3. நம்முடைய அபூரண தன்மையால் நாம் எதை மறந்துவிடலாம்?
3 இஸ்ரவேலர் போற்றுதல் காட்ட தவறியது நிச்சயமாகவே ஆச்சரியத்தை அளிக்கிறது. அவ்வாறே நாமும் போற்றுதல் காட்ட தவறலாம். கடவுளுடைய அத்தகைய அற்புதங்களை நாம் நேரில் காணவில்லை என்பது உண்மைதான். ஆனால், கடவுளுடன் கொண்டுள்ள நம் உறவில், மறக்க முடியாத சந்தர்ப்பங்கள் நிச்சயமாகவே இருந்திருக்கின்றன. பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட சமயம் நம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த சமயத்தில் நாம் ஏறெடுத்த ஜெபமும், உண்மை கிறிஸ்தவர்களாக நம்முடைய தண்ணீர் முழுக்காட்டுதலும் அந்த மகிழ்ச்சிக்குரிய சந்தர்ப்பங்களில் அடங்கலாம். நம் வாழ்க்கையில் மற்ற கட்டங்களிலும் யெகோவாவின் கரங்கள் தாங்குவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கிறோம். (சங்கீதம் 118:15) எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பலிக்குரிய மரணத்தின்மூலம், இரட்சிப்பின் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். (யோவான் 3:16) எனினும், தவறான ஆசைகள் எழும்போதும் அன்றாட கவலைகள் வாட்டும்போதும், யெகோவா செய்திருக்கும் நற்காரியங்களை அபூரண தன்மையால் நாமும் வெகு எளிதாக மறந்துவிடலாம்.
4, 5. (அ) கேட்பதை மறப்பவர்களாகும் ஆபத்தைப் பற்றி யாக்கோபு எப்படி எச்சரிக்கிறார்? (ஆ) மனிதனையும் கண்ணாடியையும் பற்றிய யாக்கோபின் உவமையை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
4 கேட்பதை மறப்பவர்களாகும் ஆபத்தைப் பற்றி இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யாக்கோபு உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதின தன் கடிதத்தில் எச்சரித்தார். “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” என அவர் எழுதினார். (யாக்கோபு 1:22-24) இந்த வார்த்தைகளில் யாக்கோபு எதை அர்த்தப்படுத்தினார்?
5 காலையில் எழுந்ததும் நம் தோற்றத்தை சரிசெய்துகொள்ள வழக்கமாய் கண்ணாடியைப் பார்க்கிறோம். பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டிருக்கும்போது நம் மனம் அவற்றில் ஆழ்ந்துவிடுகிறது; கண்ணாடியில் பார்த்த நம் தோற்றத்தை மறந்துவிடுகிறோம். ஆவிக்குரிய விதமாகவும் இதுவே நேரிடலாம். கடவுளுடைய வார்த்தையை வாசிக்கையில் நம் நிலையை யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்போது நம்மிடமுள்ள பலவீனங்களை நாமே கண்டறிகிறோம். அந்த அறிவு, நம் ஆளுமையில் சரிப்படுத்துதல்களைச் செய்ய நம்மை தூண்ட வேண்டும். ஆனால், அன்றாட காரியங்களில் மூழ்கிவிடும்போதும், பிரச்சினைகளை சமாளிக்க முயலும்போதும் ஆவிக்குரிய விஷயங்களை எளிதில் மறந்துவிடலாம். (மத்தேயு 5:3; லூக்கா 21:34) இது, கடவுள் நமக்கு செய்திருக்கும் அன்பான செயல்களை மறந்துவிடுவதைப்போல் உள்ளது. இவ்வாறு சம்பவிக்கையில், பாவ மனச்சாய்வுகளுக்கு எளிதில் நாம் ஆளாகிவிடுவோம்.
6. என்ன பைபிள் கலந்தாலோசிப்பு யெகோவாவின் வார்த்தையை மறந்துவிடாதிருக்க நமக்கு உதவலாம்?
6 தேவாவியின் உதவியால் அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதல் நிருபத்தில், வனாந்தரத்தில் மறதிக்காரர்களாக இருந்த இஸ்ரவேலரைப் பற்றி குறிப்பிடுகிறார். பவுலின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தினால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பயனடைந்ததைப் போலவே நாமும் பயனடைவோம்; அதாவது, யெகோவாவின் வார்த்தையை மறந்துவிடாதிருக்க உதவியைப் பெறுவோம். ஆகையால், 1 கொரிந்தியர் 10:1-12-ஐ நாம் சிந்திக்கலாம்.
உலக ஆசைகளை உதறித்தள்ளுங்கள்
7. யெகோவா அன்பு காட்டியதற்கு மறுக்க முடியாத என்ன அத்தாட்சியை இஸ்ரவேலர் பெற்றார்கள்?
7 இஸ்ரவேலரைப் பற்றி பவுல் சொல்வது கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகிறது. அதில் ஒரு பகுதியை பவுல் பின்வருமாறு எழுதியுள்ளார்: “இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறிய வேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்.” (1 கொரிந்தியர் 10:1-4) மோசேயின் நாட்களில் இருந்த இஸ்ரவேலர், கடவுளுடைய அதிசயிக்கத்தக்க மேக ஸ்தம்பம் உட்பட, கடவுளுடைய வல்லமையின் பெரும் வெளிக்காட்டுதல்களைக் கண்டிருந்தார்கள். இந்த மேக ஸ்தம்பம் பகலில் அவர்களை வழிநடத்தியது, சிவந்த சமுத்திரத்தின் வழியாக தப்பிச்செல்ல அவர்களுக்கு உதவியது. (யாத்திராகமம் 13:21; 14:21, 22) ஆம், யெகோவா அன்பு காட்டியதற்கு மறுக்க முடியாத அத்தாட்சியை அந்த இஸ்ரவேலர் பெற்றார்கள்.
8. இஸ்ரவேலரின் ஆவிக்குரிய மறதியினால் என்ன பாதிப்புகள் ஏற்பட்டன?
8 “அப்படியிருந்தும், அவர்களில் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்” என பவுல் தொடர்ந்து சொல்கிறார். (1 கொரிந்தியர் 10:5) எவ்வளவு விசனகரமானது! எகிப்தை விட்டு வெளியேறிய இஸ்ரவேலரில் பெரும்பான்மையர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க தங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொண்டனரே. விசுவாச குறைவினிமித்தம் கடவுள் அவர்களை அங்கீகரிக்காததால் வனாந்தரத்தில் செத்தார்கள். (எபிரெயர் 3:16-19) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? “அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது” என பவுல் சொல்லுகிறார்.—1 கொரிந்தியர் 10:6.
9. எவ்வாறு யெகோவா தம் ஜனங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார், இஸ்ரவேலர் எப்படி நடந்துகொண்டனர்?
9 வனாந்தரத்தில் இருக்கையில், ஆவிக்குரிய காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்த எத்தனையோ விஷயங்கள் இஸ்ரவேலருக்கு இருந்தன. அவர்கள் யெகோவாவுடன் உடன்படிக்கை செய்து, அவருக்கு ஒப்புக்கொடுத்த ஜனம் ஆனார்கள். மேலும், அவர்களுக்கு ஆசாரியத்துவம் அளிக்கப்பட்டது, வணக்க மையமாக ஆசரிப்பு கூடாரம் திகழ்ந்தது, யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தும் ஏற்பாடும் இருந்தது. எனினும், இந்த ஆவிக்குரிய பரிசுகளைக் குறித்து சந்தோஷப்படுவதற்கு பதிலாக, அவர்கள் பொருள் சம்பந்தமான கடவுளுடைய ஏற்பாடுகளில் அதிருப்தி அடைந்தார்கள்.—எண்ணாகமம் 11:4-6.
10. நாம் ஏன் கடவுளை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்?
10 வனாந்தரத்தில் இஸ்ரவேலர் நடந்துகொண்டதைப் போல் அல்லாமல், யெகோவாவின் ஜனங்கள் இன்று கடவுளுடைய அங்கீகாரத்தை அனுபவிக்கிறார்கள். எனினும் தனிப்பட்டவர்களாக கடவுளை எப்போதும் நம் நினைவில் வைத்திருப்பது முக்கியம். அவ்வாறு செய்வது, நம் ஆவிக்குரிய காட்சியை மறைத்துப்போடும் தன்னல ஆசைகளை விட்டொழிக்க நமக்கு உதவும். ‘நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணும்படி’ தீர்மானித்திருக்க வேண்டும். (தீத்து 2:12) பச்சிளம் பருவத்திலிருந்தே கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவை அனுபவித்திருக்கும் நம்மில் சிலர், நன்மையான ஏதோவொன்றை அனுபவிக்க தவறுவதாக சிந்திக்கவே கூடாது. அத்தகைய எண்ணங்கள் நம் மனதில் எப்போதாவது எழுந்தால் யெகோவாவையும், நமக்காக அவர் ஏற்பாடு செய்திருக்கும் அற்புதமான ஆசீர்வாதங்களையும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.—எபிரெயர் 12:2, 3.
யெகோவாவுக்கு முழுமையான கீழ்ப்படிதல்
11, 12. சிலைகளை வணங்காமலே, ஒருவர் எவ்வாறு விக்கிரகத்தை வணங்கும் பாவத்தை செய்யலாம்?
11 “ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள்” என எழுதுகையில் பவுல் நமக்கு மற்றொரு எச்சரிக்கையை அளிக்கிறார். (1 கொரிந்தியர் 10:7) ஒரு பொன் கன்றுக்குட்டியை உண்டாக்கும்படி இஸ்ரவேலர் ஆரோனை இணங்க செய்த சந்தர்ப்பத்தை பவுல் குறிப்பிடுகிறார். (யாத்திராகமம் 32:1-4) நாம் நேரடியாக விக்கிரகங்களை வணங்க மாட்டோம் என்றாலும், யெகோவாவை முழு ஆத்துமாவோடு வணங்குவதிலிருந்து கவனத்தை சிதறடிக்க நம் தன்னல ஆசைகளை அனுமதிப்பதன் மூலம் விக்கிரகங்களை வணங்குகிறவர்கள் ஆகலாம்.—கொலோசெயர் 3:5.
12 மற்றொரு சந்தர்ப்பத்தில், ஆவிக்குரிய காரியங்களைவிட பொருள் சம்பந்தமானவற்றிடம் அதிக அக்கறை காட்டிய சிலரைப் பற்றி பவுல் எழுதினார். ‘கிறிஸ்துவினுடைய வாதனையின் கழுமரத்திற்குப் பகைஞராக நடப்போரைக்’ குறித்து, “அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய கடவுள் வயிறு” என அவர் எழுதினார். (பிலிப்பியர் 3:18, 19, NW) விக்கிரக வணக்கத்திற்கு அவர்கள் செதுக்கப்பட்ட சிலையை பயன்படுத்தவில்லை. பொருள் சம்பந்தப்பட்ட அவர்களுடைய ஆசையே அவர்களுடைய விக்கிரகமானது. எல்லா ஆசைகளும் தவறானவை என சொல்லிவிட முடியாதுதான். மனித தேவைகளுடனும் பல்வேறு இன்பங்களை அனுபவித்து மகிழும் திறனுடனும் யெகோவா நம்மை படைத்தார். ஆனால், கடவுளுடன் வைத்திருக்கும் உறவுக்கு மேலாக இன்பத்தை நாட இடமளிப்பவர்கள் நிச்சயமாகவே விக்கிரக வணக்கத்தார் ஆகின்றனர்.—2 தீமோத்தேயு 3:1-5.
13. பொன் கன்றுக்குட்டியைப் பற்றிய விவரப்பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13 இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறிய பின், வணக்கத்துக்காக பொன் கன்றுக்குட்டியை உண்டாக்கினார்கள். விக்கிரக வணக்கத்திற்கு எதிரான எச்சரிக்கையோடு, மற்றொரு முக்கிய பாடமும் இந்த விவரப்பதிவில் உள்ளது. யெகோவாவின் தெளிவான கட்டளைக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படியாமல் போனார்கள். (யாத்திராகமம் 20:4-6) எனினும், யெகோவாவைத் தங்கள் கடவுள் அல்ல என அவர்கள் ஒதுக்கிவிடவும் இல்லை. அந்தப் பொன் கன்றுக்குட்டிக்கு அவர்கள் பலிகளைச் செலுத்தி, அதை “யெகோவாவுக்கு பண்டிகை” என்று அழைத்தார்கள். தங்கள் கீழ்ப்படியாமையை கடவுள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவார் என நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்கள். இது யெகோவாவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தி, அவருக்கு அதிக கோபத்தை மூட்டியது.—யாத்திராகமம் 32:5, 7-10, NW; சங்கீதம் 106:19, 20.
14, 15. (அ) கேட்பதை மறக்கிறவர்களாய் ஆவதற்கு ஏன் இஸ்ரவேலருக்கு எந்தச் சாக்குப்போக்கும் இருக்கவில்லை? (ஆ) கேட்பதை மறக்காமலிருக்க நாம் தீர்மானமாய் இருந்தால், யெகோவாவின் கட்டளைகளைக் குறித்து என்ன செய்வோம்?
14 யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், பொய் மதத்தில் சேருவது வெகு அசாதாரண சம்பவம். எனினும், சபையில் இருந்துகொண்டே சிலர் வேறு வழிகளில் யெகோவாவின் வழிநடத்துதலை புறக்கணிக்கலாம். கேட்பதை மறக்கிறவர்களாக ஆனதற்கு சாக்குப்போக்கு சொல்ல இஸ்ரவேலருக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. பத்துக் கட்டளைகளை அவர்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள்; “நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்” என்ற கடவுளின் கட்டளையை மோசே கொடுக்கையில் அவர்கள் அங்கிருந்தார்கள். (யாத்திராகமம் 20:18, 19, 22, 23) இருந்தாலும் இஸ்ரவேலர் பொன் கன்றுக்குட்டியை வணங்கினார்கள்.
15 கேட்பதை மறக்கிறவர்களாக ஆவோமென்றால், சாக்குப்போக்கு சொல்ல நமக்கும் நியாயமான காரணம் எதுவும் இராது. வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் கடவுளின் வழிநடத்துதல் நமக்கு பைபிளில் உள்ளது. உதாரணமாக, கடன் வாங்கிவிட்டு திரும்பிக் கொடுக்காமல் இருக்கும் பழக்கத்தை யெகோவாவின் வார்த்தை குறிப்பாக கண்டிக்கிறது. (சங்கீதம் 37:21) பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படி பிள்ளைகளுக்கு கட்டளையிடுகிறது. பிள்ளைகளை ‘யெகோவாவின் மனக்கட்டுப்பாட்டில்’ வளர்க்கும்படி தகப்பன்மாரிடம் எதிர்பார்க்கிறது. (எபேசியர் 6:1-4, NW) மணமாகாத கிறிஸ்தவர்கள், ‘கர்த்தருக்குட்பட்ட’ ஒருவரையே மணம் முடிக்கும்படி கட்டளையிடுகிறது. மணம் முடித்த கடவுளுடைய ஊழியர்களிடம், “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்” என சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:39; எபிரெயர் 13:4) கேட்பதை மறக்காமலிருக்க நாம் தீர்மானமாய் இருந்தால் கடவுளின் இந்தக் கட்டளைகளுக்கும் மற்றவற்றிற்கும் அதிக கவனம் செலுத்துவோம், அவற்றிற்கு இசைவாய் நடப்போம்.
16. பொன் கன்றுக்குட்டியை வணங்கியதால் வந்த விளைவுகள் யாவை?
16 இஸ்ரவேலர் தங்கள் சொந்த நிபந்தனைகளின்படி தம்மை வணங்க முயற்சி செய்ததை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, 3,000 பேர் அழிக்கப்பட்டார்கள். அந்தப் பொன் கன்றுக்குட்டியை வணங்கும் கலகத்தனத்தில் அவர்கள் முதன்மையானவர்களாக ஒருவேளை இருந்திருக்கலாம். யெகோவா அனுப்பிய வாதை தவறுசெய்த மற்றவர்களை வாதித்தது. (யாத்திராகமம் 32:28, 35) கடவுளுடைய வார்த்தையை வாசித்து, அவற்றுள் எவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று தாங்களாகவே தீர்மானிக்கும் எவருக்கும் எத்தகைய படிப்பினை!
“வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்”
17. எந்தச் சம்பவத்தை 1 கொரிந்தியர் 10:8 குறிப்பிட்டது?
17 மாம்ச இச்சைகள் ஆவிக்குரிய காரியங்களை மறந்துவிட தூண்டிவிடும் ஓர் அம்சத்தைக் குறித்து பவுல் சொல்கிறார்: “அவர்களில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம் பண்ணாதிருப்போமாக.” (1 கொரிந்தியர் 10:8) வனாந்தரத்தில் இஸ்ரவேலர் 40 ஆண்டுகள் பயணம் செய்து மோவாப் சமவெளியை அடைந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை பவுல் இங்கு குறிப்பிடுகிறார். யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள தேசங்களை கைப்பற்ற யெகோவா சமீபத்தில்தான் இஸ்ரவேலர்களுக்கு உதவியிருந்தார்; ஆனால் அதைப் பலர் மறந்து அதற்குப் போற்றுதல் காட்ட தவறினார்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையில் பாலுறவு ஒழுக்கக்கேட்டினிடமும் பாகால்பேயோரின் அசுத்தமான வணக்கத்திடமும் அவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். ஏறக்குறைய 24,000 பேர் அழிக்கப்பட்டார்கள்; அவர்களில் 1,000 பேர் அதற்கு தலைமை தாங்கியவர்கள்.—எண்ணாகமம் 25:9.
18. என்ன விதமான நடத்தை பாலுறவு ஒழுக்கக்கேட்டுக்கு வழிநடத்தலாம்?
18 இன்று யெகோவாவின் ஜனங்கள் உயர்ந்த ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றுவது யாவரும் அறிந்ததே. ஆனால், பாலுறவு ஒழுக்கக்கேட்டிற்கு கவர்ந்திழுக்கப்படுகையில், கிறிஸ்தவர்களில் சிலர், கடவுளையும் அவருடைய நியமங்களையும் பற்றி சிந்திப்பதே இல்லை. அவர்கள் கேட்பதை மறக்கிறவர்களாக ஆகியிருக்கின்றனர். அவ்வாறு கவர்ந்திழுக்கப்படுபவர்கள் எடுத்தவுடன் வேசித்தனம் செய்யாதிருக்கலாம். ஆனால் ஆபாசமான படங்களை பார்க்க ஆர்வம் கொள்ளலாம்; மோசமான கேலி பரிகாசங்களிலோ காதலீடுபாட்டிலோ நாட்டம் கொள்ளலாம்; அல்லது ஒழுக்க விஷயத்தில் பலவீனப்பட்டவர்களுடன் நெருங்கிய கூட்டுறவை அனுபவிக்க முற்படலாம். இவை யாவும் பாவம் செய்ய கிறிஸ்தவர்களை வழிநடத்தியிருக்கின்றன.—1 கொரிந்தியர் 15:33; யாக்கோபு 4:4.
19. என்ன வேதப்பூர்வ அறிவுரை ‘வேசித்தனத்திற்கு விலகியோட’ நமக்கு உதவுகிறது?
19 ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபட தூண்டப்பட்டால், யெகோவாவைப் பற்றி சிந்திக்காமல் இருந்துவிடக்கூடாது. மாறாக, அவருடைய வார்த்தையிலுள்ள நினைப்பூட்டுதல்களை நாம் பின்பற்ற வேண்டும். (சங்கீதம் 119:1, 2) கிறிஸ்தவர்களாக நம்மில் பெரும்பான்மையர் ஒழுக்க ரீதியில் சுத்தமாய் நிலைத்திருக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்; ஆனால் கடவுளுடைய பார்வையில் சரியானதை செய்வதற்கு எப்போதும் முயற்சி செய்வது அவசியம். (1 கொரிந்தியர் 9:27) ரோமில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக் குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.” (ரோமர் 16:19) தங்கள் பாவங்களினிமித்தம் 24,000 இஸ்ரவேலர்கள் அழிக்கப்பட்டதுபோல், விபச்சாரக்காரர்களும் தவறு செய்த மற்றவர்களும் யெகோவாவிடமிருந்து வரும் ஆக்கினைத் தீர்ப்பை சீக்கிரத்தில் அனுபவிப்பார்கள். (எபேசியர் 5:3-6) அப்படியானால், கேட்பதை மறக்கிறவர்களாக இராமல், எப்போதும் ‘வேசித்தனத்திற்கு விலகியோட’ வேண்டும்.—1 கொரிந்தியர் 6:18.
யெகோவா தருபவற்றை எப்போதும் போற்றுங்கள்
20. இஸ்ரவேலர் எவ்வாறு யெகோவாவை சோதித்தார்கள், அதன் விளைவென்ன?
20 கிறிஸ்தவர்களில் மிகப் பெரும்பான்மையர் ஒருபோதும் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும்படி கவர்ந்திழுக்கப்படுவதில்லை. எனினும், எப்போதும் முறுமுறுப்பதன் மூலம் கடவுளுடைய அங்கீகாரத்தை இழக்கச் செய்யும் போக்கை தொடராமலிருக்க நாம் கவனமாயிருக்க வேண்டும். “அவர்களில் [இஸ்ரவேலரில்] சிலர் ஆண்டவரைச் [“யெகோவாவை,” NW] சோதித்துப்பார்த்துப் பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள். அதுபோல் நாமும் ஆண்டவரைச் [“யெகோவாவை,” NW] சோதித்துப் பார்க்காமல் இருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்துச் சங்காரக்காரனால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல் நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்” என பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார். (1 கொரிந்தியர் 10:9, 10, தி.மொ.) இஸ்ரவேலர் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக, சொல்லப்போனால் கடவுளுக்கு விரோதமாகவே முறுமுறுத்து, அற்புதமாய் அருளப்பட்ட மன்னாவை குறைகூறினார்கள். (எண்ணாகமம் 16:41; 21:5) வேசித்தனம் செய்தவர்களுடைய விஷயத்தில் கோபப்பட்ட அளவுக்கு இவர்களுடைய முறுமுறுப்பால் யெகோவா கோபப்படவில்லையா? முறுமுறுத்தவர்கள் பலர் பாம்புகளால் கொல்லப்பட்டதாக பைபிள் விவரப்பதிவு காட்டுகிறது. (எண்ணாகமம் 21:6) முந்தின ஒரு சந்தர்ப்பத்தில், முறுமுறுத்த கலகக்காரர்களில் 14,700-க்கும் அதிகமானோர் அழிக்கப்பட்டார்கள். (எண்ணாகமம் 16:49) ஆகையால், யெகோவா தருபவற்றை அவமதிப்பதன் மூலம் யெகோவாவின் பொறுமையைச் சோதிக்காமல் இருப்போமாக.
21. (அ) என்ன அறிவுரையை தேவாவியின் தூண்டுதலால் பவுல் எழுதினார்? (ஆ) யாக்கோபு 1:25-ன்படி, நாம் எவ்வாறு உண்மையில் சந்தோஷமாய் இருக்கலாம்?
21 உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் எச்சரிக்கைகளின் பட்டியலை பவுல் இந்த அறிவுரையோடு முடிக்கிறார்: “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:11, 12) இஸ்ரவேலரைப் போல், நாம் யெகோவாவிடமிருந்து அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறோம். எனினும், அவர்களைப் போல் அல்லாமல் கடவுள் நமக்குச் செய்துவரும் நல்ல காரியங்களை ஒருபோதும் மறக்காமலும் போற்றுதல் காட்ட தவறாமலும் இருப்போமாக. வாழ்க்கையின் கவலைகள் நமக்கு சோர்வை ஏற்படுத்துகையில், அவருடைய வார்த்தையில் காணப்படும் வியத்தகு வாக்குறுதிகளை தியானிப்போமாக. யெகோவாவுடன் நமக்கிருக்கும் ஒப்பற்ற உறவை நினைத்துப் பார்த்து நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ராஜ்ய பிரசங்க வேலையை தொடர்ந்து செய்து வருவோமாக. (மத்தேயு 24:14; 28:19, 20) இது உண்மையான சந்தோஷத்தை நமக்கு அளிக்கும்; ஏனெனில், “சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான் [“சந்தோஷமுள்ளவனாயிருப்பான்,” NW]” என வேதவசனங்கள் வாக்குறுதி அளிக்கின்றன.—யாக்கோபு 1:25.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• எது கேட்பதை மறக்கும்படி செய்யலாம்?
• கடவுளுக்கு முழுமையாக கீழ்ப்படிதல் ஏன் அவசியம்?
• எவ்வாறு நாம் ‘வேசித்தனத்திற்கு விலகியோடலாம்’?
• யெகோவா தந்திருப்பவற்றிடம் நமக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
தங்களுக்காக யெகோவா நடப்பித்த வல்லமையான செயல்களை இஸ்ரவேலர் மறந்துவிட்டார்கள்
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவின் ஜனங்கள் உயர் ஒழுக்க தராதரங்களை காத்துக்கொள்ள தீர்மானமாய் இருக்கிறார்கள்