கஷ்டங்களை சமாளிக்க விதவைகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
விதவைகளைப் பற்றிய மிகச் சிறந்த பைபிள் கதைகளில் ஒன்று ரூத்தையும் அவளுடைய மாமியார் நகோமியையும் பற்றியது. இரண்டு பெண்களும் விதவைகள். ஆனால் நகோமி தன் கணவனை மட்டுமல்ல, தன் இரண்டு மகன்களையும் பறிகொடுத்தவள். அந்த மகன்களில் ஒருவனுடைய மனைவிதான் ரூத். விவசாய சமுதாயத்தில் அவள் வாழ்ந்துவந்தாள். விவசாயத்தை பெரும்பாலும் ஆண்மக்களே செய்துவந்தபடியால் தனிமரமாய் நின்ற நகோமியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது.—ரூத் 1:1-5, 20, 21.
ஆனால் நகோமியை விட்டுப் பிரிய மறுத்துவிட்ட மருமகள் ரூத், அவளுக்கு உற்ற சிநேகிதியாக இருந்து ஆறுதலளித்தாள். காலப்போக்கில், ‘ஏழு குமாரரைப் பார்க்கிலும் அருமையானவளாக’ தன்னை நிரூபித்தாள். அவள் தன் மாமியாரை மட்டுமல்ல, தன் கடவுளையும் மிகவும் நேசித்ததே இதற்குக் காரணம். (ரூத் 4:15) மோவாபிய குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் திரும்பிபோகும்படி ரூத்தை நகோமி கெஞ்சிக் கேட்டபோது அவள் சொன்ன பதில், மாறாத அன்புக்கு தலைசிறந்த இலக்கணம்; அப்படிப்பட்ட அன்பு சம்பந்தமாக இதுவரை பதிவாகியிருப்பதிலேயே நெஞ்சை நெகிழ வைக்கும் ஒன்று: “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் [“யெகோவா,” NW] அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்.”—ரூத் 1:16, 17.
ரூத்தின் மனப்பான்மையை கடவுள் கவனிக்காமல் இல்லை. நகோமியும் ரூத்தும் அடங்கிய அந்தச் சின்னஞ்சிறிய குடும்பத்தை அவர் ஆசீர்வதித்தார், கடைசியாக ரூத் இஸ்ரவேலனாகிய போவாஸை திருமணம் செய்தாள். இப்படி இவர்களுக்குப் பிறந்த பிள்ளை, இயேசு கிறிஸ்துவின் மூதாதையாக ஆனது. நகோமி இவனைத் தன் சொந்த பிள்ளையைப் போல வளர்த்தாள். யெகோவாவிடம் நெருங்கி வந்து அவரே கதி என்று நம்பியிருக்கும் விதவைகளை அவர் எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை காட்டுவதற்கு இது ஒரு உதாரணம். மேலுமாக உபத்திரவப்படுகிற விதவைகளுக்கு அன்புடன் உதவிக்கரம் நீட்டுகிறவர்களை அவர் பெரிதும் பாராட்டுகிறார் என்றும் பைபிள் சொல்கிறது. ஆகவே இன்று நம் மத்தியில் இருக்கும் விதவைகளை எவ்வாறு ஆதரிக்கலாம்?—ரூத் 4:13, 16-22; சங்கீதம் 68:5.
தேவையில்லாமல் தலையிடாதீர்கள்
ஒரு விதவைக்கு திட்டவட்டமான உதவியை செய்ய முன்வருவதே மிகச் சிறந்தது; தேவையில்லாமல் தலையிட வேண்டியதில்லை. “உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா என்கிட்டே சொல்லுங்க” என்றெல்லாம் சொல்லாதீர்கள். இது வஸ்திரமில்லாமலும் ஆகாரமில்லாமலும் இருக்கிறவனிடத்தில் “குளிர்காய்ந்து பசியாறு” என்று சொல்லிவிட்டு பேசாமல் இருப்பதற்கு சமமாக இருக்கும். (யாக்கோபு 2:16) அநேகர், தங்களுக்கு ஏதாவது தேவைப்படும்போதுகூட வாய்திறந்து கேட்க மாட்டார்கள்; அதற்கு பதிலாக மெளனமாகவே கஷ்டப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவ பகுத்துணர்வு வேண்டும்; அவர்களுடைய தேவைகளை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் எல்லாவற்றிலும் அளவுக்கு அதிகமாக தலையிட்டு அவர்களுடைய வாழ்க்கையை கட்டுப்படுத்த முயன்றால் மனம் புண்பட்டுவிடும், சண்டையும் வரலாம். ஆகவே மற்றவர்களோடு பழகும்போது சமநிலை அவசியம் என்று பைபிள் வலியுறுத்துகிறது. சுயநலம் கருதாது மற்றவர்களிடம் தனிப்பட்ட அக்கறையை காண்பிக்கும்படி அது உற்சாகப்படுத்தினாலும் பிறருடைய விஷயங்களில் அநாவசியமாக தலையிடக்கூடாது என்று அது நமக்கு நினைப்பூட்டுகிறது.—பிலிப்பியர் 2:4; 1 பேதுரு 4:15.
நகோமியுடன் ரூத் சமநிலையோடு நடந்துகொண்டாள். தன் மாமியாரை உண்மையோடு பற்றிக்கொண்டிருந்தாலும், எல்லா விஷயங்களிலும் அவளை அதிகாரம்செய்ய அல்லது கட்டுப்படுத்த முயலவில்லை. அவள் எப்போதும் புத்திசாலித்தனமாக நடவடிக்கை எடுத்தாள்; உதாரணமாக, தனக்கும் நகோமிக்கும் சாப்பாட்டுக்கு வழிசெய்ய அவளே முதலில் முயற்சி எடுத்தாள், அதேசமயம் நகோமி சொன்னபடியே நடந்துகொண்டாள்.—ரூத் 2:2, 22, 23; 3:1-6.
உண்மைதான், தேவை என்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும். முன்பு குறிப்பிட்ட சன்ட்ரா இவ்வாறு கூறுகிறாள்: “நான் துக்கத்தில் மூழ்கியிருந்த சமயத்தில் எனக்குத் தேவையானது கிடைத்தது—அருமையான, அன்பான நண்பர்கள் என் அருகில் இருந்தார்கள்.” ஆனால் இலேனுக்கு தேவைப்பட்டதோ தனிமை. ஆகவே உதவ விரும்பினால் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும்; மற்றவரின் தனிமையை மதித்து, தேவைப்படும்போது உதவ தயாராக இருக்க வேண்டும்.
குடும்பத்தாரின் ஆதரவு
குடும்பத்திலுள்ளவர்கள் கனிவாகவும் அன்பாகவும் இருந்தால், விதவையாக தன் வாழ்க்கையை சமாளித்து வெற்றியும் பெறலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு பிறந்துவிடும். சில குடும்பத்தினரால் மற்றவர்களைவிட அதிகம் உதவிசெய்ய முடிந்தாலும் எல்லாருமே உதவலாம். “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.”—1 தீமோத்தேயு 5:4.
பெரும்பாலானவர்களுக்கு பண உதவி அல்லது ‘பதில் நன்மை’ அவசியமில்லாமல் இருக்கலாம். சில விதவைகளுக்கு தங்களை கவனித்துக்கொள்ள போதுமான பணமிருக்கிறது. இன்னும் மற்றவர்கள், சில நாடுகளில் அரசு தரும் ஓய்வூதியம், உதவித்தொகை, இன்சூரன்ஸ் போன்ற சலுகைகளைப் பெறவும் முடியும். ஆனால் இதுபோன்ற சலுகைக்கு வாய்ப்பற்ற விதவைகளுக்கு குடும்பத்தினர் கட்டாயமாக உதவ வேண்டும். ஒரு விதவைக்கு உதவிசெய்ய சொந்தபந்தங்கள் இல்லையென்றால் அல்லது இருந்தும் உதவிசெய்யும் நிலையில் இல்லையென்றால் உடன் விசுவாசிகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது: ‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது . . . பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.’—யாக்கோபு 1:27.
இந்த பைபிள் நியமங்களின்படி வாழ்கிறவர்கள் உண்மையாகவே “விதவைகளைக் கனம்பண்ணு”கிறார்கள். (1 தீமோத்தேயு 5:3) ஒருவரை கனம்பண்ணுவதென்றால் அவருக்கு மரியாதை காண்பிப்பதாகும். மரியாதையாக நடத்தப்படுபவர், பிறர் தன்னை மதிப்பதாகவும், நெஞ்சார நேசிப்பதாகவும், கண்ணியமாய் நடத்துவதாகவும் உணருகிறார். மற்றவர்கள் கடமைக்காக மட்டுமே தனக்கு உதவுகிறார்கள் என்று நினைக்கமாட்டார். கொஞ்ச நாட்கள் ரூத்தும் விதவையாகத்தான் இருந்தாள். இருந்தபோதிலும் நகோமியின் சரீர தேவைகளையும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளையும் புரிந்துகொண்டு மனமுவந்து அன்பாக கவனித்ததன் மூலம் அவளுக்கு மரியாதை காட்டினாள். ரூத்தின் மனப்பான்மை அவளுக்கு சீக்கிரத்தில் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. அதன் காரணமாகவே அவளுக்கு கணவராக வர இருந்தவர் அவளைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.” (ரூத் 3:11) அதே சமயத்தில் நகோமியும் கடவுளை நேசித்தாள், எதையும் அதிகாரத்தோடு கேட்கவில்லை, ரூத் தனக்காக செய்த எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றியுள்ளவளாக இருந்தாள். ஆகவே இவை எல்லாவற்றின் நிமித்தமும் அவளுக்கு உதவியாக இருப்பது ரூத்துக்கு இன்பமாக இருந்தது. இன்றுள்ள விதவைகளுக்கு நகோமி என்னே சிறந்த முன்மாதிரி!
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
துணைவரின் இழப்பை நிச்சயமாகவே குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் ஈடுசெய்ய முடியாது. இந்த காரணத்துக்காகவே துயரப்படுபவர் “இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிற”வரிடம் விசேஷமாக நெருங்கி வருவது முக்கியம். (2 கொரிந்தியர் 1:3, 4) இயேசு பிறந்த சமயத்தில் இருந்த 84 வயதான பக்தியுள்ள விதவை அன்னாளின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஏழே வருடங்கள் கணவனோடு சேர்ந்து வாழ்ந்த அன்னாள், தன் கணவனின் பிரிவுக்குப் பின்பு, ஆறுதலுக்காக யெகோவாவை நாடினாள். “[அவள்] தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.” (லூக்கா 2:36, 37) அன்னாளின் தேவபக்திக்கு கடவுள் பலனளித்தாரா? ஆம்! அவளை நேசிப்பதை விசேஷித்த விதத்தில் அவர் காண்பித்தார். உலக இரட்சகராகவிருந்த குழந்தையைக் காண அவளுக்கு அனுக்கிரகம் பண்ணினார். இதனால் அன்னாள் எவ்வளவாய் இன்பத்தையும் ஆறுதலையும் பெற்றாள்! சங்கீதம் 37:4-லுள்ள வார்த்தைகளின் உண்மையை அவள் அனுபவத்தில் கண்டாள்: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”
உடன் கிறிஸ்தவர்கள் மூலம் கடவுள் உதவுகிறார்
முன்னர் குறிப்பிடப்பட்ட இலேன் இவ்வாறு கூறுகிறாள்: “டேவிட் இறந்து அதிக நாட்கள் ஆன பின்னும் என்னை யாரோ விலாவில் ஈட்டியால் குத்துவது போன்ற வலியில் துடித்துப்போனேன். அஜீரணமாயிருக்குமோ என்று நினைத்தேன். ஒரு நாள், வலி தாங்க முடிவில்லை, டாக்டரிடம் போகத்தான் வேண்டும் என்று நினைத்தேன். என் பிரச்சினையை புரிந்துகொண்ட என் சிநேகிதியான கிறிஸ்தவ சகோதரி, என் துக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லி யெகோவாவிடம் உதவிக்காகவும் ஆறுதலுக்காகவும் ஜெபிக்கும்படி உற்சாகப்படுத்தினாள். உடனடியாக அவள் சொன்னபடி செய்தேன், துக்கத்தில் துவண்டுபோன என்னைத் தாங்கி, தூக்கி நிறுத்தும்படி மனதுக்குள் மிக ஊக்கமாக ஜெபித்தேன். அவர் கேட்டதை அருளினார்!” இலேனுக்கு தெம்பு கிடைக்க ஆரம்பித்தது, விரைவில் அவளுக்கு இருந்த அந்த வலியும் மாயமாய் மறைந்தது.
துக்கத்திலிருக்கும் விதவைகளிடம், முக்கியமாய் சபை மூப்பர்கள் தயவாய் நடந்துகொண்டு நட்போடு பழகலாம். சாதுரியத்தோடும் பகுத்துணர்வோடும், ஆன்மீக உதவியையும் ஆறுதலையும் தவறாமல் கொடுப்பதன் மூலம் கஷ்டங்கள் மத்தியிலும் யெகோவாவிடம் நெருங்கி வர அவர்களுக்கு உதவலாம். தேவைப்பட்டால் பொருளாதார உதவி அவர்களுக்குக் கிடைக்க மூப்பர்கள் வழி செய்யலாம். இரக்கத்தோடும் புரிந்துகொள்ளுதலோடும் செயல்படும் மூப்பர்கள் உண்மையில் ‘காற்றுக்கு ஒதுக்காக’ இருக்கின்றனர்.—ஏசாயா 32:2; அப்போஸ்தலர் 6:1-3.
பூமியின் புதிய அரசர் தரும் நிலையான ஆறுதல்
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வயதான அன்னாள் யாரை கண்குளிர கண்டாளோ, அவர் இன்று கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் மேசியானிய ராஜா. இவருடைய அரசாங்கம், மரணம் உட்பட, துயரத்திற்கு காரணமாயிருக்கும் அனைத்தையும் நீக்கிவிடும். இதன் சம்பந்தமாக வெளிப்படுத்துதல் 21:3, 4 இவ்வாறு கூறுகிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” இந்தப் பகுதி ‘மனுஷர்களைப்’ பற்றி பேசுவதை கவனித்தீர்களா? ஆம், மனிதர்கள் மரணத்திலிருந்தும் அதன் துக்கத்திலிருந்தும் அலறுதலிலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள்.
ஆனால் இன்னொரு முக்கியமான நற்செய்தியை பைபிள் வாக்குறுதி அளிக்கிறது: மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்! “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.” (யோவான் 5:28, 29) இயேசு உயிர்த்தெழுப்பிய லாசருவைப் போல் அவர்களும் உயிரோடு வருவார்கள், அதாவது ஆவி சிருஷ்டிகளாக அல்ல, மனிதர்களாகவே வருவார்கள். (யோவான் 11:43, 44) அதன் பிறகு ‘நன்மை செய்கிறவர்கள்’ மனித பரிபூரணத்துக்கு வழிநடத்தப்படுவார்கள், தனிப்பட்ட முறையில் யெகோவா அவர்களுக்கு தகப்பனைப் போல இருந்து ‘தமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்.’—சங்கீதம் 145:16.
மரணத்தில் தங்கள் துணைவரை பறிகொடுத்தவர்கள் இந்த உறுதியான நம்பிக்கையில் விசுவாசம் வைக்கும்போது அது அவர்களுக்கு பெரும் ஆறுதலைத் தருகிறது. (1 தெசலோனிக்கேயர் 4:13) நீங்கள் ஒரு விதவையா? அப்படியென்றால், ஆறுதலுக்கும், உணர்ச்சிப்பூர்வமான சுமைகளைச் சுமப்பதற்கும், பல்வேறு பொறுப்புகளை செய்து முடிப்பதற்கும் தினந்தோறும் தேவைப்படும் உதவிக்கும் கட்டாயம் “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:17; 1 பேதுரு 5:7) கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் படிப்பதற்கு நேரமெடுத்துக் கொள்ளுங்கள், அப்போது கடவுளுடைய சிந்தனைகள் உங்களை ஆறுதல்படுத்தும். இவற்றையெல்லாம் செய்வீர்களானால், ஒரு விதவையாக கஷ்டங்களையும் சவால்களையும் சந்தித்தாலும் சமாதானத்தைக் கண்டடைய யெகோவா உங்களுக்கு உதவுவதை உண்மையில் நீங்களே சொந்த அனுபவத்தில் காண்பீர்கள்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
தவ விரும்பினால் மற்றவரின் தனிமையை மதித்து, தேவைப்படுகையில் உதவ வேண்டும்
[பக்கம் 7-ன் படம்]
வயதான விதவை அன்னாளை கடவுள் ஆசீர்வதித்தார்