தோளோடு தோள் சேர்ந்து எப்போதும் சேவியுங்கள்
“ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு [“தோளோடு தோள் சேர்ந்து,” NW] அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.”—செப்பனியா 3:9.
1. செப்பனியா 3:9-ன் நிறைவேற்றமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது?
உலகெங்கும் சுமார் 6,000 மொழிகள் இப்போது பேசப்படுகின்றன. இவை தவிர, பல்வேறு கிளைமொழிகள் அல்லது வட்டார மொழிகள்கூட உண்டு. ஆனால் அரபிக் முதல் ஜூலு வரை மக்கள் எவ்வளவு வித்தியாசமான பாஷைகளை பேசினாலும், கடவுள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றை செய்திருக்கிறார். எங்குமுள்ள மனிதர்கள் ஒரே சுத்தமான பாஷையை கற்றுக்கொள்வதற்கும் பேசுவதற்கும் அவர் வழிசெய்திருக்கிறார். தீர்க்கதரிசியாகிய செப்பனியாவின் மூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் நிறைவேற்றமாகவே இது நடந்துவருகிறது: “ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு [“தோளோடு தோள் சேர்ந்து,” NW] அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் [யெகோவா] அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக [சொல்லர்த்தமாக, “சுத்த உதடாக”] மாறப்பண்ணுவேன்.”—செப்பனியா 3:9.
2. “சுத்தமான பாஷை” என்பது என்ன, அது எதற்கு உதவியிருக்கிறது?
2 “சுத்தமான பாஷை” என்பது, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் சத்தியம். முக்கியமாக அது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியம்; அந்த ராஜ்யமே யெகோவாவின் நாமத்தை பரிசுத்தப்படுத்தி, அவரது பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்து, மனிதவர்க்கத்திற்கு ஆசீர்வாதங்களை பொழியும். (மத்தேயு 6:9, 10) ஆவிக்குரிய கருத்தில் இந்தப் பூமியில் உள்ள பாஷைகளிலேயே ஒரே சுத்தமான பாஷையாக திகழும் அது எல்லா தேசத்தாராலும் இனத்தாராலும் பேசப்படுகிறது. யெகோவாவை “தோளோடு தோள் சேர்ந்து” சேவிக்க, அது அவர்களுக்கு உதவுகிறது. இவ்வாறு அவர்கள் ஒற்றுமையாக, அதாவது “ஒருமனப்பட்டு” அவரை சேவிக்கிறார்கள்.
பட்சபாதத்திற்கு இடமே இல்லை
3. யெகோவாவை ஒற்றுமையோடு சேவிக்க எது நமக்கு உதவுகிறது?
3 கிறிஸ்தவர்களாக, வெவ்வேறு பாஷைகளைப் பேசும் நம்மிடையே நிலவும் ஒற்றுமைக்காக நாம் நன்றியோடு இருக்கிறோம். பல மனித மொழிகளில் நாம் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்தாலும், கடவுளை ஒற்றுமையோடு சேவிக்கிறோம். (சங்கீதம் 133:1) நாம் பூமியில் எங்கு வசித்துவந்தாலும், யெகோவாவிற்கு துதிசேர்க்கும் வண்ணம் ஒரே சுத்தமான பாஷையை பேசுவதாலேயே இது சாத்தியமாகிறது.
4. கடவுளுடைய மக்கள் மத்தியில் பட்சபாதத்திற்கு ஏன் இடமே இல்லை?
4 கடவுளுடைய மக்கள் மத்தியில் எவ்வித பட்சபாதமும் இருக்கக் கூடாது. பொ.ச. 36-ல் புறமத ராணுவ அதிகாரியான கொர்நேலியுவின் வீட்டில் பிரசங்கித்தபோது அப்போஸ்தலனாகிய பேதுரு அதை தெளிவுபடுத்தினார். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்” என சொல்லும்படி அவர் தூண்டப்பட்டார். (அப்போஸ்தலர் 10:34, 35) அவர் சொன்னது உண்மை என்பதால், கிறிஸ்தவ சபையில் பட்சபாதத்திற்கும் பிரிவினைகளுக்கும் இடமே இல்லை.
5. சபையில் பிரிவினைகள் உண்டாக்குவது ஏன் தவறு?
5 ராஜ்ய மன்றத்திற்கு சென்று வந்த அனுபவத்தை ஒரு கல்லூரி மாணவி சொன்னாள்: “பொதுவாக சர்ச்சுகள் குறிப்பிட்ட இனத்தவரை அல்லது இனப் பிரிவினரை மட்டுமே வரவேற்கின்றன. . . . யெகோவாவின் சாட்சிகளோ குரூப் குரூப்பாக பிரிந்து உட்காராமல் எல்லாரும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்திருந்தார்கள்.” எனினும் பூர்வ கொரிந்து சபையின் சில அங்கத்தினர்கள் பிரிவினைகளை ஏற்படுத்தினார்கள். இவ்வாறு உட்பூசல் உண்டாக்கியதால், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் செயற்பாட்டை எதிர்த்தார்கள்; ஏனென்றால் ஒற்றுமையையும் சமாதானத்தையுமே பரிசுத்த ஆவி முன்னேற்றுவிக்கிறது. (கலாத்தியர் 5:22) நாம் சபையில் பிரிவினைகள் உண்டாக்கினால் ஆவியின் வழிநடத்துதலுக்கு எதிராக செயல்படுவோம். ஆகவே கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்ன பின்வரும் வார்த்தைகளை நினைவில் வைப்போமாக: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” (1 கொரிந்தியர் 1:10) எபேசியர்களுக்கு கடிதம் எழுதியபோதும் ஒற்றுமையின் அவசியத்தை பவுல் வலியுறுத்தினார்.—எபேசியர் 4:1-6, 16.
6, 7. பட்சபாதத்தைப் பற்றி யாக்கோபு என்ன அறிவுரை வழங்கினார், அவரது வார்த்தைகள் நமக்கு எவ்வாறு பொருந்துகின்றன?
6 கிறிஸ்தவர்கள் பட்சபாதமின்றி இருக்க வேண்டும் என்றே எப்போதும் எதிர்பார்க்கப்பட்டிருக்கிறார்கள். (ரோமர் 2:11) முதல் நூற்றாண்டு சபையிலிருந்த சிலர் செல்வந்தர்கள் பட்சம் சாய்ந்ததால் சீஷராகிய யாக்கோபு பின்வருமாறு எழுதினார்: “என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?”—யாக்கோபு 2:1-4.
7 பணக்காரர்களாக இருந்த அவிசுவாசிகள் பொன் மோதிரங்களோடும் விலையுயர்ந்த வஸ்திரங்களோடும் கிறிஸ்தவ கூட்டத்திற்கு வந்தபோது, கந்தையான உடை உடுத்திய ஏழ்மையான அவிசுவாசிகளைவிட விசேஷ மதிப்பு மரியாதையோடு நடத்தப்பட்டார்கள். உட்கார அவர்களுக்கு ‘நல்ல இடம்’ தரப்பட்டது, ஏழைகளோ நிற்கும்படி அல்லது யாரேனும் ஒருவருடைய காலருகே உட்காரும்படி சொல்லப்பட்டார்கள். ஆனால் பணக்காரர், ஏழை ஆகிய இரு சாராருக்குமே இயேசுவின் கிரய பலியை கடவுள் பட்சபாதமின்றி அளித்தார். (யோபு 34:19; 2 கொரிந்தியர் 5:14) ஆகவே நாம் யெகோவாவை பிரியப்படுத்தி, தோளோடு தோள் சேர்ந்து அவரை சேவிக்க வேண்டுமென்றால், பட்சபாதம் காட்டக்கூடாது அல்லது ‘நம் நலனுக்காகப் பிறரைப் போலியாகப் புகழக்’ கூடாது.—யூதா 4, 16, பொது மொழிபெயர்ப்பு.
முறுமுறுக்காதீர்கள்
8. இஸ்ரவேலர்கள் முறுமுறுத்ததால் என்ன நடந்தது?
8 ஒற்றுமையைக் காத்துக்கொண்டு தெய்வீக தயவை தொடர்ந்து பெற, ‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமல் செய்யுங்கள்’ என்ற பவுலின் அறிவுரைக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். (பிலிப்பியர் 2:14ஆ-16) எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட விசுவாசமற்ற இஸ்ரவேலர்கள் மோசேக்கு எதிராகவும் ஆரோனுக்கு எதிராகவும் அதன் மூலம் யெகோவா தேவனுக்கே எதிராகவும் முறுமுறுத்தார்கள். இதன் காரணமாக, உத்தமர்களான யோசுவாவையும் காலேபையும் லேவியர்களையும் தவிர மற்ற எல்லா ஆண்களும்—20 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும்—வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழையவில்லை; மாறாக வனாந்தரத்தில் 40 வருடங்கள் பயணம் செய்த சமயத்தில் இறந்துபோனார்கள். (எண்ணாகமம் 14:2, 3, 26-30; 1 கொரிந்தியர் 10:10) முறுமுறுத்ததற்காக என்னே விலை செலுத்தினார்கள்!
9. முறுமுறுத்ததால் மிரியாமுக்கு என்ன நேர்ந்தது?
9 முழு தேசமும் முறுமுறுக்கையில் என்ன நடக்குமென இது காட்டுகிறது. ஆனால் தனி நபர்கள் முறுமுறுக்கையில்? மோசேயின் சகோதரியான மிரியாமும் அவளது சகோதரன் ஆரோனும் முறுமுறுத்தார்கள். “யெகோவா பேசினது மோசேயோடு மாத்திரமோ, எங்களோடும் அவர் பேசினதில்லையோ” என்றார்கள். “இதை யெகோவா கேட்டார்” என்றும் பதிவு சொல்கிறது. (எண்ணாகமம் 12:1, 2, திருத்திய மொழிபெயர்ப்பு) விளைவு? இந்த முறுமுறுப்பிற்கு முக்கிய காரணமான மிரியாமை கடவுள் அவமானப்படுத்தினார். எப்படி? குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டு, சுத்தமாகும்வரை பாளயத்திற்கு வெளியே ஏழு நாட்கள் தங்கும் கட்டாய நிலைக்கு அவளை ஆளாக்கினார்.—எண்ணாகமம் 12:9-15.
10, 11. முறுமுறுப்பு தடுக்கப்படாதபோது என்ன நடக்கலாம்? உதாரணம் தருக.
10 ஏதோவொரு தவறைக் குறித்து முறையிடுவது மட்டுமே முறுமுறுப்பதல்ல. சதா முறுமுறுப்பவர்கள், தங்கள் உணர்ச்சிகளுக்கு அல்லது அந்தஸ்திற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; கவனத்தை கடவுளிடம் திருப்புவதற்கு பதிலாக தங்களிடம் திருப்புகிறார்கள். இதை தடுக்கவில்லையென்றால், ஆவிக்குரிய சகோதரர்களுக்கு இடையே பிரிவினைகள் உண்டாகும்; யெகோவாவை தோளோடு தோள் சேர்ந்து சேவிக்கும் அவர்களது முயற்சிகளும் தடைபடும். ஏனென்றால் முறுமுறுப்பவர்கள், மற்றவர்கள் தங்கள் மீது அனுதாபம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் சதா முறையிடுகிறார்கள்.
11 உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட மூப்பர் சபைக் கூட்டங்களில் தன் பகுதிகளை கையாளும் விதத்தை அல்லது தன் பொறுப்புகளை நிறைவேற்றும் விதத்தைக் குறித்து யாராவது குறைகூறலாம். அவர் சொல்வதை நாம் கேட்டால், அவர் யோசிக்கும் விதமாகவே நாமும் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அதிருப்தி என்ற விதை நம் மனதில் விதைக்கப்படுவதற்கு முன்புவரை, அந்த மூப்பரின் செயல்கள் நமக்கு எவ்விதத்திலும் எரிச்சலூட்டியிருக்காது, ஆனால் இப்போதோ அவை எரிச்சலூட்டும். காலம் செல்லச் செல்ல அந்த மூப்பர் செய்வதெல்லாம் நம் பார்வைக்கு குற்றமாக தோன்றும், நாமும் அவரைப் பற்றி குறைகூற ஆரம்பிப்போம். இப்படிப்பட்ட நடத்தை யெகோவாவின் மக்களுடைய சபைக்கு பொருந்தாது.
12. முறுமுறுப்பது கடவுளுடன் உள்ள நம் உறவை எவ்வாறு பாதிக்கும்?
12 கடவுளுடைய மந்தையை மேய்க்கும் பொறுப்புள்ள ஆண்களைப் பற்றி முறுமுறுப்பது பழிதூற்றுவதற்கு வழிநடத்தலாம். அவ்வாறு முறுமுறுப்பது அல்லது நிந்தித்து தூஷிப்பது யெகோவாவுடன் உள்ள நம் உறவுக்கு பங்கம் விளைவிக்கலாம். (யாத்திராகமம் 22:28) மனந்திரும்பாமல் தொடர்ந்து பழிதூற்றுபவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டார்கள். (1 கொரிந்தியர் 5:11, NW; 6:10, NW) ‘கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவமானவர்களை [சபையிலுள்ள பொறுப்புள்ள ஆண்களை] தூஷித்து’ முறுமுறுத்தவர்களைப் பற்றி சீஷராகிய யூதா எழுதினார். (யூதா 8, NW) இப்படி முறுமுறுத்தவர்களை கடவுள் அங்கீகரிக்கவில்லை, அவர்களது பொல்லாத நடத்தையை நாம் அடியோடு தவிர்ப்பது ஞானமானது.
13. ஏன் எல்லாவித முறையீடுகளும் தவறல்ல?
13 இருந்தாலும் எல்லாவிதமான முறையீடுகளையும் கடவுள் வெறுப்பதில்லை. சோதோம் கொமோராவின் பேரில் எழுந்த ‘கூக்குரலை’ அவர் புறக்கணிக்கவில்லை, ஆனால் அந்தப் பொல்லாத நகரங்களை அழித்தார். (ஆதியாகமம் 18:20, 21; 19:24, 25) எருசலேமில், பொ.ச. 33, பெந்தெகொஸ்தே முடிந்து சிறிது காலத்தில், “கிரேக்க யூதர் தங்கள் விதவைகள் அன்றாடகப் பராமரிப்பில் சரியாய்க் கவனிக்கப்படவில்லையென்று எபிரேய யூதருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.” அதன் காரணமாக, “பன்னிருவரும்” அந்த நிலைமையை சரிப்படுத்த ‘நல்லவர்களென்று மதிப்புப் பெற்ற ஏழுபேரை’ உணவு வழங்கும் “வேலைக்கு” நியமித்தார்கள். (அப்போஸ்தலர் 6:1-6, தி.மொ.) இன்றைய மூப்பர்கள் நியாயமான முறையீடுகளுக்கு ‘தங்கள் செவியை அடைத்துக்கொள்ள’ கூடாது. (நீதிமொழிகள் 21:13) உடன் வணக்கத்தாரைக் குறைகூறுவதற்கு பதிலாக அவர்களை மூப்பர்கள் உற்சாகப்படுத்தி கட்டியெழுப்ப வேண்டும்.—1 கொரிந்தியர் 8:1.
14. முறுமுறுக்காதிருக்க எந்தப் பண்பு முக்கியமாக தேவை?
14 நாம் அனைவருமே முறுமுறுப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் குறைகூறும் மனப்பான்மை ஆவிக்குரிய நலனுக்கு பங்கம் விளைவிக்கும். அப்படிப்பட்ட மனநிலை நம் ஒற்றுமையைக் குலைக்கும். ஆகவே பரிசுத்த ஆவியானது நம்மில் அன்பை அபிவிருத்தி செய்ய நாம் எப்போதும் அனுமதிப்போமாக. (கலாத்தியர் 5:22) ‘அன்பென்னும் ராஜரிக பிரமாணத்திற்குக்’ கீழ்ப்படிவது, தொடர்ந்து யெகோவாவை தோளோடு தோள் சேர்ந்து சேவிக்க நமக்கு உதவும்.—யாக்கோபு 2:8; 1 கொரிந்தியர் 13:4-8; 1 பேதுரு 4:8.
புறங்கூறாதீர்கள்
15. கிசுகிசுப்பதற்கும் புறங்கூறுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
15 முறுமுறுப்பது, தீங்கிழைக்கும் கிசுகிசுப்புக்கு வழிநடத்தலாம் என்பதால் நாம் என்ன சொல்கிறோம் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றவர்களையும் அவர்களது சொந்த விவகாரங்களையும் பற்றிய வெட்டிப் பேச்சே கிசுகிசுப்பு. புறங்கூறுவது என்பது மற்றவரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தோடு பொய்யாக பழிசுமத்துவதாகும். அப்படிப்பட்ட பேச்சு குரோதமானது, தெய்வீகமற்றது. ஆகவே, “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக” என்று கடவுள் இஸ்ரவேலரிடம் சொன்னார்.—லேவியராகமம் 19:16.
16. வம்பளந்த சிலரைப் பற்றி பவுல் என்ன சொன்னார், அவரது அறிவுரைக்கு நாம் எவ்வாறு செவிசாய்க்க வேண்டும்?
16 வெட்டிப் பேச்சு புறங்கூறுவதற்கு வழிவகுக்கலாம் என்பதால் வம்பளந்த சில நபர்களை பவுல் கடுமையாக கண்டித்தார். சபையின் உதவியைப் பெற தகுதியான விதவைகளைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, ‘வீடுவீடாய்ச் சுற்றித் திரிந்து சோம்பேறிகளாக இருக்கக் கற்றுக் கொண்ட, சோம்பேறிகளாக இருந்தது மட்டுமின்றி, தகாதவற்றைப் பேசி வம்பளக்கிறவர்களாகவும், பிறர் அலுவல்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்த’ விதவைகளைப் பற்றி அவர் சொன்னார். (1 தீமோத்தேயு 5:11-15, பொ.மொ.) புறங்கூறுவதற்கு வழிநடத்தும் விதமான பேச்சை பேசுகிற பலவீனம் தனக்கு இருப்பதை ஒரு கிறிஸ்தவ பெண் உணர்ந்தால், பவுலின் அறிவுரைக்கு இணங்க, ‘நல்லொழுக்கத்தோடும், அவதூறுபண்ணாமலும்’ இருப்பது சிறந்தது. (1 தீமோத்தேயு 3:11) தீங்கிழைக்கும் கிசுகிசுப்பை கிறிஸ்தவ ஆண்களும் தவிர்க்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.—நீதிமொழிகள் 10:19.
நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்!
17, 18. (அ) நம் சகோதரரை நியாயந்தீர்ப்பதைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? (ஆ) நியாயந்தீர்ப்பதைப் பற்றி இயேசுவின் வார்த்தைகளை நாம் எப்படி கடைப்பிடிக்கலாம்?
17 நாம் ஒருவரையும் புறங்கூறாவிட்டாலும், மற்றவர்களை நியாயந்தீர்க்காதிருக்க கடினமாக முயல வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட மனப்பான்மையை இயேசு இவ்வாறு கண்டனம் செய்தார்: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.”—மத்தேயு 7:1-5.
18 சரியாக நியாயந்தீர்ப்பதற்கான நம் திறனே அடையாளப்பூர்வ ‘உத்திரத்தால்’ பழுதடைந்திருக்கும்போது, நம் சகோதரனுக்கு உதவுவதற்காக அவனுடைய கண்ணிலிருக்கிற வெறும் “துரும்பை” எடுத்துப் போட முயலக் கூடாது. சொல்லப்போனால், கடவுள் எந்தளவு இரக்கமுள்ளவர் என நாம் உண்மையிலேயே புரிந்திருந்தால், நம் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளை நியாயந்தீர்க்க முயல மாட்டோம். நம் பரலோக தகப்பன் அவர்களை நன்கு புரிந்திருக்கும் அளவுக்கு நம்மால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? ‘நாம் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்ப்பதை’ நிறுத்தும்படி இயேசு எச்சரித்ததில் ஆச்சரியமில்லை. நம் சொந்த அபூரணங்களை நேர்மையாக மதிப்பிடுவது, கடவுள் பார்வையில் அநீதியான நியாயத்தீர்ப்புகளை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்க வேண்டும்.
பலவீனமானவர்கள், ஆனால் மதிப்புவாய்ந்தவர்கள்
19. உடன் விசுவாசிகளை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
19 உடன் வணக்கத்தாருடன் தோளோடு தோள் சேர்ந்து கடவுளை சேவிக்க நாம் தீர்மானமாக இருந்தால், மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை தவிர்ப்பதோடு, அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவும் முந்திக்கொள்வோம். (ரோமர் 12:10) சொல்லப்போனால் அவர்களது நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்போம், நம்முடையதற்கு அல்ல; மேலும் அவர்களுக்காக பணிவான வேலைகளை சந்தோஷமாக செய்வோம். (யோவான் 13:12-17; 1 கொரிந்தியர் 10:24) அப்படிப்பட்ட அருமையான மனப்பான்மையை நாம் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்? விசுவாசத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் யெகோவாவிற்கு மதிப்புவாய்ந்தவர் என்பதையும் உடலின் ஒவ்வொரு அங்கமும் மற்றவற்றை சார்ந்திருப்பது போலவே நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையும் ஞாபகம் வைப்பதன் மூலமாகும்.—1 கொரிந்தியர் 12:14-27.
20, 21. இரண்டு தீமோத்தேயு 2:20, 21-ல் உள்ள வார்த்தைகள் நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?
20 கிறிஸ்தவர்கள் ஊழியம் என்ற அரும் பொக்கிஷத்தை பெற்ற பலவீனமான மண்பாண்டங்கள் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. (2 கொரிந்தியர் 4:7) யெகோவாவிற்கு துதியுண்டாகும் விதத்தில் இந்தப் பரிசுத்த சேவையை நாம் செய்ய வேண்டுமானால், அவருக்கும் அவரது குமாரனுக்கும் முன்பாக மதிப்புள்ள நிலைநிற்கையை காத்துக்கொள்ள வேண்டும். ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமானவர்களாக இருந்தால் மட்டுமே கடவுள் பயன்படுத்தத்தக்க மதிப்புள்ள பாத்திரங்களாக தொடர்ந்து இருப்போம். இது சம்பந்தமாக பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.”—2 தீமோத்தேயு 2:20, 21.
21 தெய்வீக தராதரங்களுக்கு ஏற்ப நடந்துகொள்ளாத நபர்கள் ‘கனவீனத்திற்குரிய பாத்திரங்களாக’ இருக்கிறார்கள். ஆனால் தெய்வீக வழியில் நடக்கும்போது நாம் ‘கனத்திற்குரிய, யெகோவாவின் சேவைக்காக பரிசுத்தமாக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட, எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்களாக’ இருப்போம். ஆகவே, ‘நான் “கனத்துக்குரிய பாத்திரமா”? உடன் விசுவாசிகள் மீது நான் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறேனா? நான் உடன் வணக்கத்தாருடன் தோளோடு தோள் சேர்ந்து சேவை செய்யும் சபை அங்கத்தினனா?’ என்றெல்லாம் நம்மைநாமே கேட்டுக்கொள்வது நல்லது.
தொடர்ந்து தோளோடு தோள் சேர்ந்து சேவியுங்கள்
22. கிறிஸ்தவ சபை எதனுடன் ஒப்பிடப்படலாம்?
22 கிறிஸ்தவ சபை என்பது குடும்பம் போன்ற ஏற்பாடாகும். குடும்பத்திலுள்ள எல்லா அங்கத்தினர்களுமே யெகோவாவை வணங்கும்போது அன்பான, ஒருவருக்கொருவர் உதவும், இனிய சூழல் நிலவுகிறது. ஒரு குடும்பத்தில், பல்வேறு குணாதியசங்கள் பெற்ற அநேக நபர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மதிப்புள்ள ஓர் இடமுண்டு. சபையின் விஷயத்திலும் இதுவே உண்மை. நாம் அனைவரும் வித்தியாசமானவர்களாகவும் அபூரணர்களாகவும் இருந்தாலும் நம்மை கிறிஸ்துவின் மூலம் கடவுள் தம்மிடமாக ஈர்த்திருக்கிறார். (யோவான் 6:44; 14:6) யெகோவாவும் இயேசுவும் நம்மை நேசிக்கிறார்கள், ஒன்றுபட்ட குடும்பத்தைப் போல் நாமும் கண்டிப்பாக ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்.—1 யோவான் 4:7-11.
23. நாம் எதை நினைவில் வைக்க வேண்டும், எதைச் செய்ய தீர்மானமாயிருக்க வேண்டும்?
23 குடும்பம் போன்ற கிறிஸ்தவ சபையில் நாம் உண்மைப் பற்றுறுதியையும் நியாயமாகவே எதிர்பார்க்கிறோம். “அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான [“உண்மைப் பற்றுறுதியுள்ள,” NW] கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 2:8) கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடும் “எல்லா இடங்களிலேயும்” செய்யப்படும் பொது ஜெபத்தோடு உண்மைப் பற்றுறுதியை பவுல் தொடர்புபடுத்தினார். உண்மைப் பற்றுறுதியுள்ள ஆண்கள் மட்டுமே பொது ஜெபத்தில் சபையை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். நாம் அனைவருமே கடவுளுக்கும் ஒருவருக்கொருவருக்கும் உண்மைப் பற்றுறுதியுடன் இருக்க வேண்டுமென கடவுள் எதிர்பார்ப்பதில் சந்தேகமில்லை. (பிரசங்கி 12:13, 14) ஆகவே மனித உடலின் அங்கங்களைப் போல் ஒன்றுபட்டு செயல்பட நாம் தீர்மானமாக இருப்போமாக. யெகோவாவின் வணக்கத்தாருடைய குடும்பத்தின் பாகமாகவும் ஒற்றுமையாக சேவிப்போமாக. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் ஒருவருக்கொருவர் தேவை என்பதையும் யெகோவாவை தொடர்ந்து தோளோடு தோள் சேர்ந்து சேவித்தால் அவரது அங்கீகாரத்தையும் ஆசீர்வாதங்களையும் பெறுவோம் என்பதையும் நினைவில் வைப்போமாக.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• யெகோவாவை தோளோடு தோள் சேர்ந்து சேவிக்க அவருடைய மக்களுக்கு உதவுவது எது?
• கிறிஸ்தவர்கள் ஏன் பட்சபாதமாக நடந்துகொள்வதைத் தவிர்க்கிறார்கள்?
• முறுமுறுப்பதில் என்ன தவறு என நினைக்கிறீர்கள்?
• உடன் வணக்கத்தாரை நாம் ஏன் மதிக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்று பேதுரு அறிந்திருந்தார்
[பக்கம் 16-ன் படம்]
மிரியாமை கடவுள் ஏன் அவமானப்படுத்தினார் என்று தெரியுமா?
[பக்கம் 18-ன் படம்]
உண்மைப் பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் தோளோடு தோள் சேர்ந்து யெகோவாவை சந்தோஷமாக சேவிக்கிறார்கள்