சகிப்புத்தன்மையோடு ஓட்டத்தில் ஓடுதல்
“நமக்கு முன்வைத்துள்ள ஓட்டத்தில் சகிப்புத்தன்மையோடு ஓடக்கடவோம்.”—எபிரெயர் 12:1, NW
1. (எ) நாம் நம்மை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுக்கையில் நமக்கு முன் என்ன வைக்கப்படுகிறது? (பி) என்ன வகையான ஓட்டத்துக்குக் கிறிஸ்தவன் ஆயத்தமாக வேண்டும்?
நாம் நம்மை இயேசு கிறிஸ்துவின்மூலம் யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்தபோது, கடவுள் நமக்கு முன், அடையாளக்குறிப்பாகச் சொன்னால், ஒரு பந்தய ஓட்டத்தை வைத்தார். இந்த ஓட்டத்தின் முடிவில், வெற்றிகரமாய் இதை முடிக்கும் எல்லாருக்கும் ஒரு பரிசு அளிக்கப்படும். என்ன பரிசு? நித்திய ஜீவன்! இந்த மகத்தான பரிசைப் பெறுவதற்கு, கிறிஸ்தவ பந்தய ஓட்டக்காரன், வெறும் குறுகிய, விரைவோட்டத்துக்காக மாத்திரமல்ல, நெடுந்தூர ஓட்டத்துக்காக ஆயத்தஞ்செய்ய வேண்டும். ஆகையால் அவனுக்குச் சகிப்புத்தன்மை தேவையாயிருக்கும். அந்த ஓட்டத்தின் நீடித்தக் கடுமுயற்சியைத்தானேயும் மற்றும் அந்த ஓட்டத்தின்போது எதிர்ப்படும் இடையூறுகளையும் சகித்துநிலைத்திருக்க வேண்டும்.
2, 3. (எ) இந்தக் கிறிஸ்தவ ஓட்டத்தை முடிவுவரையாக ஓடிமுடிக்க எது நமக்கு உதவிசெய்யும்? (பி) இயேசுக்கு எவ்வாறு சந்தோஷம் ஓட்டத்தைச் சகிப்புத்தன்மையுடன் ஓட உதவிசெய்தது?
2 அத்தகைய ஓட்டத்தை முடிவுவரையில் ஓடி முடிப்பதற்கு எது நமக்கு உதவிசெய்யும்? இயேசு பூமியில் மனிதனாக இருந்தபோது சகிப்பதற்கு எது அவருக்கு உதவிசெய்தது? சந்தோஷம் என்ற பண்பிலிருந்து உண்டாகும் உள்ளப்பூர்வமான பலத்தை அவர் பெற்றார். எபிரெயர் 12:1-3 வாசிப்பதாவது: “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருகிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே [சகிப்புத்தன்மையோடே, NW] ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் [வாதனையின் கழுமரத்தை, NW] சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.”
3 தம்முடைய வெளி ஊழியத்தின் காலமெல்லாம், இயேசு யெகோவாவின் சந்தோஷத்தினால் தொடர்ந்து ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்க முடிந்தது. (நெகேமியா 8:10-ஐ ஒத்துப்பாருங்கள்.) வாதனையின் கழுமரத்தில் அவமதிப்பான மரணத்தையுங்கூட சகிக்க அவருடைய சந்தோஷம் அவருக்கு உதவிசெய்தது, அதன்பின்பு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழும்பி தம்முடைய பிதாவின் வலதுபாரிசத்துக்கு ஏறிச்சென்று, அங்கே கடவுளுடைய வேலையை அதன் முடிவுவரையாகச் செய்து முடிக்கும் விவரிக்கமுடியாத சந்தோஷத்தை அவர் அனுபவித்தார். கடவுளுடைய சார்பிலுள்ள மனிதனாக அவர் சகித்ததால், நித்திய ஜீவனுக்குரிய தம்முடைய உரிமையை விடாமற் பற்றியிருந்தார். ஆம், லூக்கா 21:19 (தி.மொ.) சொல்லுகிறபிரகாரம்: “நீங்கள் [சகித்து, NW] நிலைத்திருப்பதினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்வீர்கள்.”
4. இயேசு தம்முடைய உடன் ஓட்டக்காரருக்கு என்ன வகையான முன்மாதிரியை வைத்தார், நாம் நம்முடைய மனதை எதன்மீது ஊன்ற வைக்க வேண்டும்?
4 இயேசு தம் உடன்-ஓட்டக்காரர்களுக்கு எல்லாவற்றிலும் மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தார், மேலும் அவருடைய முன்மாதிரி நாமும் வெற்றிபெறுவோராக முடியுமென நமக்கு உறுதியளிக்கிறது. (1 பேதுரு 2:21) நாம் செய்யும்படி இயேசு சொல்வதை, நாம் செய்ய முடியும். அவர் சகித்ததுபோல், நாமும் சகிக்க முடியும். அவருடைய மாதிரியைப் பின்பற்றி தளரா உறுதியுடன் நாம் விடாது நிலைத்திருக்கையில், சந்தோஷமாய் இருப்பதற்கு நமக்கிருக்கும் காரணங்களின்பேரில் நாம் நம் மனதைத் தொடர்ந்து ஊன்றவைத்திருக்க வேண்டும். (யோவான் 15:11, 20, 21) சந்தோஷம், நாம் நித்திய ஜீவனின் மகிமையான பரிசைப் பெறும் வரையில் யெகோவாவின் சேவையில் விடாது தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதற்கு நம்மைப் பலப்படுத்தும்.—கொலோசெயர் 1:10, 11.
5. நமக்கு முன்வைக்கப்பட்டுள்ள ஓட்டத்துக்கு நாம் எவ்வாறு சந்தோஷமாயும் பலப்படுத்தப்பட்டும் இருக்க முடியும்?
5 ஓட்டத்தில் விடாது தொடர நமக்கு உதவி செய்ய, இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை யெகோவா அளிக்கிறார். நாம் துன்புறுத்தப்படுகையில், அந்த வல்லமையும், துன்புறுத்தலுக்குட்படும் சிலாக்கியம் நமக்கிருப்பதன் காரணத்தைப்பற்றிய அறிவும் நம்மைப் பலப்படுத்துகின்றன. (2 கொரிந்தியர் 4:7-9) கடவுளுடைய பெயரைக் கனப்படுத்தி அவருடைய அரசாட்சியை உறுதியாய்க் கடைப்பிடிப்பதற்காக அனுபவிக்கும் எதுவும் சந்தோஷத்துக்குக் காரணமாயுள்ளது, அதை எவரும் நம்மிடமிருந்து எடுத்துப்போட முடியாது. (யோவான் 16:22) இது, இயேசுவின் சம்பந்தமாக யெகோவா தேவன் நிறைவேற்றின அதிசயமான காரியங்களைக் குறித்து சாட்சி பகர்ந்ததற்காக அப்போஸ்தலரை அடிக்கும்படி யூத ஆலோசனைச் சபை கட்டளையிட்டு அவர்கள் அடிக்கப்பட்ட பின்பு, களிகூர்ந்ததன் காரணத்தை விளக்குகிறது, “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால்,” ஆகும். (அப்போஸ்தலர் 5:41, 42) அவர்களுடைய சந்தோஷம் அந்தத் துன்புறுத்தலினால்தானே உண்டாகவில்லை ஆனால் தாங்கள் யெகோவாவையும் இயேசுவையும் பிரியப்படுத்தினார்களென்று அறிந்து உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்த திருப்தியினால் உண்டாயிற்று.
6, 7. கிறிஸ்தவ ஓட்டக்காரன் தனக்கு உபத்திரவங்கள் உண்டாயிருக்கையிலும் ஏன் களிகூர முடியும், அதன் பலன் என்ன?
6 நம்முடைய வாழ்க்கையில் நம்மைத் தாங்கி நிலைத்திருக்கச் செய்யும் மற்றொரு வல்லமை, கடவுள் நமக்கு முன்வைத்துள்ள நம்பிக்கையாகும். பவுல் சொன்ன பிரகாரம்: “இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டு நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்க் கடவுளோடு சமாதானமுடையவர்களாயிருப்போமாக. நாம் நிலைத்திருக்கிற இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தையும் அவர்மூலமாய் விசுவாசத்தினால் பெற்றிருக்கிறோம். கடவுளின் மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையில் பெருமைபாராட்டுவோமாக. அது மாத்திரமல்ல, உபத்திரவங்களிலும் பெருமைபாராட்டுவோமாக. ஏனெனில், உபத்திரவம் பொறுமையையும் [சகிப்புத்தன்மையையும், NW] பொறுமை அநுபவ நிச்சயத்தையும் நிச்சயம் எதிர்நோக்கும் நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று அறிந்திருக்கிறோம். அந்த நம்பிக்கையோ வெட்கத்துக்குட்படுத்தாது.”—ரோமர் 5:1-5, தி.மொ.
7 உபத்திரவங்கள்தாமே சந்தோஷத்தை உண்டாக்குவதல்ல, எனினும் அவை பின்னால் கொடுக்கும் சமாதான பலன்கள் சந்தோஷமுண்டாக்குகின்றன. இந்தப் பலன்கள் சகிப்புத்தன்மை, அங்கீகரிக்கப்பட்ட நிலை, நம்பிக்கை, மற்றும் அந்த நம்பிக்கையின் நிறைவேற்றம் (NW) ஆகும். நாம் சகித்திருப்பது தெய்வீக அங்கீகாரத்தைப் பெறுவதற்கு வழிநடத்தும். கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு இருக்கையில், அவர் செய்திருக்கும் வாக்குகளின் நிறைவேற்றத்துக்காக நாம் உறுதியான நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம். இந்த நம்பிக்கை, அது நிறைவேறும் வரையில், உபத்திரவத்தின்கீழ் நம்மைச் சரியான போக்கில் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்து நம்மை ஊக்குவிக்கிறது.—2 கொரிந்தியர் 4:16-18.
சகிப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்!
8. காத்திருக்கும் இந்தக் காலப்பகுதி நமக்கு ஏன் காலத்தை வீணாக்குவதில்லை?
8 ஓட்டக்காரர்களுக்குப் பரிசுகளைப் பகிர்ந்தளிப்பதற்குக் கடவுள் குறித்திருக்கும் காலத்துக்காகக் காத்திருக்கையில், நாம் மாற்றங்களை அனுபவிக்கிறோம். இவை பரீட்சைகளை வெற்றிகரமாய் மேற்கொண்டதன் பலனாக நம்மில் உண்டான ஆவிக்குரிய முன்னேற்றங்களாகும், இந்த முன்னேற்றங்கள் கடவுளிடம் மிகுந்த கிருபையை நாம் பெறச் செய்கின்றன. இந்த ஆவிக்குரிய முன்னேற்றங்கள் நாம் எத்தகையோரென நிரூபித்து பூர்வ காலத்திலிருந்த உண்மையுள்ளவர்கள், முக்கியமாய் நம்முடைய முன்மாதிரியான இயேசு கிறிஸ்து காட்டின அதே நல்ல பண்புகளைக் காட்டுவதற்கு நமக்கு வாய்ப்பளிக்கின்றன. சீஷனாகிய யாக்கோபு பின்வருமாறு சொல்லுகிறான்: “என் சகோதரரே, நீங்கள் பல்வேறு பரீட்சைகளை அனுபவிக்கையில், உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, உங்கள் விசுவாசத்தின் இந்தப் பரீட்சிக்கப்பட்ட தன்மை சகிப்புத்தன்மையை உண்டாக்குகிறதென்றறிந்து, அந்த எல்லாவற்றையும் சந்தோஷமாகக் கருதுங்கள். ஆனால், நீங்கள் எதிலும் குறைவுபடாமல், எல்லா அம்சங்களிலும் நிறைவும் முழுநலமும் உள்ளவர்களாய் இருக்கும்படி, சகிப்புத்தன்மை அதன் செயலைச் செய்துமுடிக்கட்டும்.” (யாக்கோபு 1:2-4, NW) ஆம், நாம் பல்வேறு பரீட்சைகளுக்கு உட்படும்படி எதிர்பார்க்கலாம். ஆனால் இவை தகுந்த பண்புகளை நம்மில் தொடர்ந்து வளர்த்துவரச்செய்வதற்குச் சேவிக்கும். இவ்வாறு, நாம் என்ன இடையூறுகளை எதிர்ப்பட்டாலும் கலலையில்லாமல், பரிசைப் பெறும் வரையில் இந்த ஓட்டத்தில் நிலைத்திருப்போமென மெய்ப்பித்துக் காட்டுகிறோம்.
9, 10. (எ) பரீட்சைகளைச் சகித்து நிலைத்திருப்பவர்கள் ஏன் சந்தோஷமுள்ளவர்கள், பரீட்சைகளை நாம் எவ்வாறு எதிர்ப்பட வேண்டும்? (பி) சந்தோஷமுள்ள பூர்வ காலத்தினர் யாவர், நாமும் அவர்களோடு சேர்ந்தோராக எவ்வாறு எண்ணப்படக்கூடும்?
9 அப்படியானால், யாக்கோபு பின்வருமாறு சொன்னது ஆச்சரியமல்ல: “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW]; அவன் பரீக்ஷிக்கப்பட்டுத் தேறினபின் தம்மிடம் அன்புகூருகிறவர்களுக்கு ஆண்டவர் [யெகோவா, NW] வாக்குப்பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்.” (யாக்கோபு 1:12, தி.மொ.) சோதனைகளை வெல்லும்படி நம்மைப் பலப்படுத்தும் தெய்வீகப் பண்புகளைப் போராயுதங்களாகத் தரித்து தளராமல் பரீட்சைகளைத் தைரியமாய் எதிர்ப்பட்டு நிலைத்திருப்போமாக.—2 பேதுரு 1:5-8.
10 கடவுள் நம்மைக் கையாளும் முறை புதியதோ முன் அறிந்திராததோ அல்ல என்பதை நினைவில் வையுங்கள். பூர்வகாலங்களில் உண்மையுள்ளோராயிருந்த ‘மேகம்போன்ற சாட்சிகள்’ கடவுளுக்குத் தங்கள் திடப்பற்றை நிரூபிக்கையில் அவர்கள் இதே முறையில் கையாளப்பட்டனர். (எபிரெயர் 12:1) கடவுள் அவர்களை அங்கீகரித்தது அவருடைய வார்த்தையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, அவர்கள் பரீட்சையின்கீழ் சகித்துநிலைத்திருந்ததால் அவர்களெல்லாரையும் சந்தோஷமுள்ளவர்களென நாம் கருதுகிறோம். யாக்கோபு பின்வருமாறு சொல்லுகிறான்: “சகோதரரே, யெகோவாவின் பெயரில் பேசின தீர்க்கதரிசிகளை, தீமையை அனுபவிப்பதற்கும் பொறுமையைக் காட்டுவதற்குமுரிய மாதிரியாக எடுத்துக்கொள்ளுங்கள். இதோ! சகித்துநிலைத்திருந்தவர்களைச் சந்தோஷமுள்ளவர்களாக அறிவிக்கிறோம். யோபின் சகிப்புத்தன்மையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் யெகோவா அளித்த பலனையும் கண்டிருக்கிறீர்கள், யெகோவா உள்ளன்பில் மிகக் கனிவுள்ளவர் மற்றும் இரக்கமுள்ளவர்.” (யாக்கோபு 5:10, 11, NW) இந்த நெருக்கடியான கடைசி நாட்களின்போது, சிலர் உலகக் காட்சியில் தோன்றி, பூர்வ நூற்றாண்டுகளில் அந்தத் தீர்க்கதரிசிகள் செய்ததைப்போல், யெகோவாவை உத்தமத்துடன் சேவிப்பார்கள் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வோராக இருப்பதில் நாம் சந்தோஷமடைகிறோமல்லவா?—தானியேல் 12:3; வெளிப்படுத்துதல் 7:9.
யெகோவாவின் ஊக்கமூட்டும் வார்த்தையிலிருந்து உதவி பெறுதல்
11. சகிப்பதற்குக் கடவுளுடைய வார்த்தை எவ்வாறு நமக்கு உதவிசெய்ய முடியும், நாம் ஏன் இயேசுவின் உவமையின் கற்பாறை நிலத்தைப்போல் இருக்கக்கூடாது?
11 “பொறுமையாய்ச் சகிப்பதன்மூலமும், வேதவார்த்தைகளிலிருந்து பெறும் ஊக்கமூட்டுதலின்மூலமும், நாம் நம்முடைய நம்பிக்கையை உறுதியாய்ப் பற்றியிருக்கலாம்,” என்று பவுல் சொன்னபோது சகிப்பதற்கு மற்றொரு உதவியை அவன் குறிப்பிட்டுக் காட்டினான். (ரோமர் 15:4, The Twentieth Century New Testament இருபதாம் நூற்றாண்டு புதிய ஏற்பாடு) எல்லா சமயங்களிலும் சரியான பதிலை நம்முடைய உள்ளத்திலிருந்து வெளிவரச் செய்வதற்கு சத்தியமாகிய, கடவுளுடைய வார்த்தை நம் உள்ளத்தில் ஆழமாய் வேரூன்றியிருக்க வேண்டும். விதைக்கிறவனைப்பற்றிக் கூறின இயேசுவின் உவமையில் பின்வருமாறு விவரித்துள்ள கற்பாறை நிலத்தைப்போல் இருப்பதால் நாம் ஒரு நன்மையும் அடைவதில்லை: “கற்பாறை இடங்களில் விதைக்கப்பெறுகிறவர்களோ வசனத்தைக் கேட்கும்போதெல்லாம் அதை உடனே சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறார்கள். ஆகிலும் தங்களில் வேர் இல்லாதவர்களாய்க் கொஞ்சக்கால மாத்திரம் நிலைத்திருப்பார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் இம்சையும் உண்டானவுடனே இடறிவிழுகிறார்கள்.” (மாற்கு 4:16, 17, தி.மொ.) கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் சத்தியம் அத்தகையோரில் ஆழமாய் வேரூன்றுவதில்லை; ஆகையால், உபத்திரவ காலங்களில், பலத்துக்கும் நம்பிக்கைக்கும் உண்மையான ஊற்றுமூலமாக அதிலிருந்து பயன்பெற முடியாதிருக்கின்றனர்.
12. நற்செய்தியை ஏற்கையில் எதைப் பற்றி நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது?
12 இராஜ்ய நற்செய்தியை ஏற்கும் எவரும் அதைப் பின்தொடர்ந்து வரவிருக்கும் காரியங்களைப்பற்றி தன்னை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. உபத்திரவத்துக்கு அல்லது துன்புறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு வாழ்க்கைப் போக்கை அவன் ஏற்கிறான். (2 தீமோத்தேயு 3:12) ஆனால் அவன் கடவுளுடைய வார்த்தையை விடாது உறுதியாய்க் கடைப்பிடிப்பதற்காகவும் அதைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்காகவும் பல்வேறு பரீட்சைகளுக்கு உட்படுவதன் சிலாக்கியத்தைக் கொண்டிருப்பதை “மிகுந்த சந்தோஷமாக” எண்ணவேண்டும்.—யாக்கோபு 1:2, 3.
13. பவுல் எவ்வாறு மற்றும் ஏன் தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களின்பேரில் களிகூர்ந்தான்?
13 முதல் நூற்றாண்டில், பவுல் பிரசங்கித்ததனால், தெசலோனிக்கேயில் எதிரிகள் அமளியுண்டாக்கினார்கள். புவுல் பெரோயாவுக்குச் சென்றபோது, இந்தத் துன்புறுத்துவோர் மேலுமதிகக் கலகத்தைக் கிளப்பிவிடும்படி அவனைப் பின்தொடர்ந்து அங்கேயும் சென்றனர். துன்புறுத்தப்பட்ட அப்போஸ்தலன் தெசலோனிக்கேயில் பின்தங்கியிருந்த விசுவாசிகளுக்குப் பின்வருமாறு எழுதினான்: “சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகக் கடவுளுக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டவர்கள்; உங்கள் விசுவாசம் மிகுதியாய் ஓங்கி வளருகிறதினாலும் நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும் அப்படிச் செய்வது தகுதியாம். அதில் நீங்கள் சகிக்கிற சகல இம்சைகளிலும் உபத்திரவங்களிலும் விளங்கும் உங்கள் பொறுமையையும் [சகிப்புத்தன்மையும், NW] விசுவாசத்தையும் பற்றி நாங்கள் உங்கள் நிமித்தம் கடவுளின் சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம். கடவுளின் ராஜ்யத்தினிமித்தம் பாடனுபவிக்கிற நீங்கள் அந்த ராஜ்யத்திற்குப் பாத்திரராக எண்ணப்படும்படி கடவுள் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு அதுவே அத்தாட்சி.” (2 தெசலோனிக்கேயர் 1:3-5, தி.மொ.) சத்துருவின் கைகளில் துன்பங்கள் அனுபவித்துக்கொண்டிருந்தபோதிலும், தெசலோனிக்கேயரான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப்போன்ற தன்மையிலும் எண்ணிக்கைகளிலும் வளர்ந்தனர். இது எவ்வாறு கூடியதாயிற்று? எவ்வாறெனில், அவர்கள் யெகோவாவின் ஊக்கமூட்டும் வார்த்தையிலிருந்து பலத்தைப் பெற்றுவந்தனர். கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அந்த ஓட்டத்தில் சகிப்புத்தன்மையோடு ஓடினர்.—2 தெசலோனிக்கேயர் 2:13,-17.
மற்றவர்களின் இரட்சிப்புக்காக
14. (எ) என்ன காரணங்களுக்காக நாம் உபத்திரவங்களின் மத்தியிலும் ஊழியத்தில் சந்தோஷமாய் நிலைத்திருக்கிறோம்? (பி) நாம் எதற்காக ஜெபிக்கிறோம், ஏன்?
14 முக்கியமாய் கடவுள் சரியென நிரூபிக்கப்படுவதற்காக, நாம் இக்கட்டுகளையும் துன்புறுத்தல்களையும் உண்மையுடனும் முணுமுணுக்காமலும் சகிக்கிறோம். ஆனால் அத்தகைய காரியங்களுக்கு நம்மை உட்படுத்துவதற்குத் தன்னலமற்ற மற்றொரு காரணமும் இருக்கிறது, அதாவது: “இரட்சிப்புண்டாக வாயினால் அறிக்கை” செய்யும்படி, கடவுளுடைய ராஜ்ய பிரஸ்தாபிகள் மேலுமதிகமானோர் எழும்பும்படி ராஜ்ய நற்செய்திகளை நாம் கடத்துவதற்காகவே. (ரோமர் 10:10) கடவுளுடைய சேவையில் வேலைசெய்வோர், அறுப்பின் எஜமானர் மேலுமதிக ராஜ்ய பிரஸ்தாபிகளை அளிப்பதன்மூலம் தங்கள் வேலையை ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்க வேண்டும். (மத்தேயு 9:38) பவுல் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு எழுதினான்: “அநேக சாட்சிகள் முன்னிலையில் நீ என்னிடங் கேட்டவைகளை மற்றவர்களுக்கும் போதிக்கக்கூடிய உண்மையுள்ள மனுஷரிடம் ஒப்புவி. கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்ச்சேவகனாய் நீயும் துன்பத்தைச் சகித்திரு.—2 தீமோத்தேயு 2:2, 3, (தி.மொ.).
15. நாம் ஏன் போர்ச்சேவகரைப் போலவும் “பந்தய ஆட்டத்தில்” பங்குகொள்வோரைப்போலவும் நம்மை நடத்திக்கொள்ள வேண்டும்?
15 ஒரு போர்ச்சேவகன் இராணுவத்துறை சாராத குறைந்த கட்டுப்பாடுடைய வாழ்க்கையிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்கிறான். அவ்வாறே, நாம், கர்த்தருடைய சேனையில் இராத ஆனால், உண்மையில், எதிரி சார்பில் இருப்போரின் விவகாரங்களில் நம்மை சிக்கவைத்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு, பவுல் மேலுமாகத் தீமோத்தேயுவுக்கு எழுதினதாவது: “தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும் தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு உகந்தவனாயிருக்கும்படி பிழைப்புக்கடுத்த வேறு அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான். அன்றியும் பந்தய ஆட்டத்தில் ஒருவன் சட்டப்படி ஆடினாலன்றி முடிசூட்டப்படான்.” (2 தீமோத்தேயு 2:4, 5, தி.மொ.) “ஜீவகிரீடத்”துக்காக ஓடும் பந்தய ஓட்டத்தில் வெற்றிக்காக முயற்சி செய்வதில் ஓட்டக்காரர்கள் தன்னடக்கத்தைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் பயனற்ற பாரங்களையும் சிக்கல்களையும் தவிர்க்க வேண்டும். இம்முறையில் இரட்சிப்புக்குரிய நற்செய்தியை மற்றவர்களுக்குக் கொண்டுவருவதில் அவர்கள் மனதை ஒருமுகமாய் ஊன்றவைக்க முடியும்.—யாக்கோபு 1:12; 1 கொரிந்தியர் 9:24, 25-ஐ ஒத்துப்பாருங்கள்.
16. எதைக் கட்டுவிக்க முடியாது, யாருடைய நன்மைக்காக நாம் சகிக்கிறோம்?
16 நாம் கடவுளையும் அவரைக் கண்டடைய தேடும் செம்மறியாட்டைப்போன்றவர்களையும் நேசிப்பதால், இரட்சிப்புக்குரிய நற்செய்தி மற்றவர்களுக்கு எட்டும்படி செய்வதில் மிகுதியானதைச் சந்தோஷமாய்ச் சகிக்கிறோம். கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்காகச் சத்துருக்கள் நம்மைக் கட்டுவிக்கலாம். ஆனால் கடவுளுடைய வார்த்தையைக் கட்டுவிக்க முடியாது, மற்றும் மற்றவர்களின் இரட்சிப்புக்காக அதைப் பேசுவதைச் சங்கிலியால் கட்ட முடியாது. பவுல் தான் பரீட்சையை எதிர்ப்பட அவ்வளவாய் மனங்கொண்டிருந்ததன் காரணத்தைத் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு விவரித்தான்: “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்துவை என் சுவிசேஷத்திற்கிசைய மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவராக நினைத்துக்கொள். இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டுக்குள்ளாகுந் துன்பத்தைச் சகிக்கிறேன், ஆயினும் கடவுளின் வார்த்தையோ கட்டப்பட்டிருக்கவில்லை, இதினிமித்தம், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவுக்குள்ளானதும் நித்திய மகிமையோடு கூடியதுமான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்கள் பொருட்டாக எல்லாவற்றையுஞ் சகிக்கிறேன்.” (2 தீமோத்தேயு 2:8-10, தி.மொ.) இன்று நாம் பரலோக ராஜ்யத்துக்குரியோரான சொற்பமாயுள்ள மீதிபேரை மட்டுமல்ல ஆனால் நல்ல மேய்ப்பர், இயேசு கிறிஸ்துவின் மற்றச் செம்மறியாடுகளான திரள் கூட்டத்தாரையும், அதாவது, கிறிஸ்துவின் ராஜ்யத்தின்கீழ் பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனை அடையவிருக்கும் திரள் கூட்டத்தாரையும் மனதில் வைத்திருக்கிறோம்.—வெளிப்படுத்துதல் 7:9-17.
17 நாம் விட்டுவிலகிவிடுவோராக இருந்தால், இரட்சிப்படைய நமக்கோ வேறு எவருக்கோ உதவிசெய்வதில்லை. எதிர்ப்படும் இடையூறுகள் என்னவாயினும், கிறிஸ்தவ ஓட்டத்தில் சகித்துநிலைத்திருப்பதன்மூலம், பரிசுபெறுவதற்கு உகந்த நிலையில் நம்மை இடைவிடாமல் வைத்து வருகிறோம் மேலும் மற்றவர்கள் இரட்சிப்படைவதற்கு நேரடியாக உதவிசெய்யவும் முடியும், அதேசமயத்தில் மற்றவர்களுக்கு பலமூட்டுவதற்கேதுவான ஊக்கமிகுந்த முன்மாதிரியாயும் இருக்கிறோம். நம்முடைய நம்பிக்கை, பரலோகத்துக்குரியதோ பூமிக்குரியதோ, என்னவாயினும், “பந்தயப்பொருளைப் பெறுவதற்கு இலக்கை நோக்கித் தொடருகிறேன்,” என்ற பவுலின் மனப்பான்மை பின்பற்றுவதற்குச் சிறந்த ஒன்றாகும்.—பிலிப்பியர் 3:14, 15, தி.மொ.
ஓட்டத்தில் தளரா உறுதியுடன் விடாது தொடருதல்
18. பரிசைப் பெறுவது எதன்பேரில் சார்ந்திருக்கிறது, ஆனால் முடிவுவரை விடாது நிலைத்திருக்க எதைத் தவிர்க்க வேண்டும்?
18 யெகோவா சரியென நிரூபித்து அவர் நமக்காக வைத்திருக்கும் பரிசைப் பெறுவதற்கு நம்முடைய கிறிஸ்தவ ஓட்டத்தை வெற்றியோடு முடிப்பது, அந்த ஓட்டத்தின் முழு நீடிப்பினூடேயும் தளரா உறுதியுடன் நாம் விடாது தொடருவதன்பேரில் சார்ந்திருக்கிறது. ஆகையால், நீதிக்குரிய நோக்கத்துக்குப் பயன்படாத காரியங்களைக் கொண்ட பாரச்சுமைகளை நாம் நம்மீது ஏற்றிக்கொண்டால், நாம் முடிவுவரை விடாது நிலைத்திருக்க முடியாது. இத்தகைய காரியங்களை அகற்றிவிடுகையிலும், தேவைப்படுபவை இன்னும் கடுமையாயிருப்பதால், நாம் எழுப்பக்கூடிய எல்லா மனவுரத்தையும் முழுமையாய்ப் பயன்படுத்தும்படி கேட்பதாயிருக்கிறது. ஆகையால் பவுல் பின்வருமாறு அறிவுரை கூறுகிறான்: “பாரமான யாவற்றையும் நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவத்தையுந் தள்ளிவிட்டு . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு [சகிப்புத்தன்மையோடு, NW] ஓடக்கடவோம்.” (எபிரெயர் 12:1, தி.மொ.) இயேசுவைப்போல் நாமும், சகிக்க வேண்டிய துன்பங்களின்பேரில் மட்டுக்குமீறி மனதை ஊன்றவைக்காமல் அவற்றைச் சந்தோஷமான பரிசுக்குச் செலுத்தும் சிறு விலையேயெனக் கருதவேண்டும்.—ரோமர் 8:18-ஐ ஒத்துப்பாருங்கள்.
19. (எ) பவுல் தன் வாழ்க்கையின் முடிவு நெருங்கும் காலப்பகுதியின்போது என்ன திடநம்பிக்கையை வெளிப்படுத்திக் கூறினான்? (பி) சகிப்புத்தன்மைக்குரிய ஓட்டத்தின் முடிவை நாம் நெருங்குகையில், வாக்குக் கொடுத்துள்ள பரிசைப்பற்றி என்ன திடநம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்?
19 பவுல் தன் வாழ்க்கையின் முடிவு நெருங்கும் காலப்பகுதியின்போது, பின்வருமாறு சொல்ல முடிந்தது: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 4:7, 8) நித்திய ஜீவனின் பரிசைப் பெறுவதற்கு நாம் சகிப்புத்தன்மைக்குரிய இந்த ஓட்டத்தில் இருக்கிறோம். இதில் ஓடத் தொடங்கினபோது நாம் எதிர்பார்த்ததைவிட இந்த ஓட்டம் சிறிதளவு அதிகம் நீண்டதாயிருப்பதனால்தானே நம்முடைய சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால், வாக்குப்பண்ணப்பட்ட அந்தப் பரிசைப் பெறுவதற்கு நெருங்கியிருக்கையில், நாம் தோல்வியடைவோம். நம்பிக்கையோடு உறுதியாயிருங்கள். பரிசு அங்கிருப்பதில் சந்தேகமில்லை.
20. இந்த ஓட்டத்தின் முடிவை எட்டும் வரையில் நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
20 ஆகையால், முதலாவது மகா பாபிலோனுக்கும் பின்பு பிசாசின் மீதியான அமைப்பு முழுவதற்கும் அழிவைக் கொண்டுவரும்படி, மிகுந்த உபத்திரவம் தொடங்குவதற்காக எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருப்பதில் நம்முடைய கண்கள் சோர்வடையாதிருப்பதாக. (2 பேதுரு 3:11, 12) நம்மைச் சுற்றியுள்ள அறிகுறியான அடையாளங்கள் எல்லாவற்றையும் கருதுகையில், நாம் விசுவாசத்துடன் முன் நோக்குவோமாக. யெகோவா சரியென இயேசு கிறிஸ்துவின் மூலம் மெய்ப்பித்துக்காட்டப்படும்படி, நாம் நம்முடைய சகிப்புத்தன்மையின் வல்லமைகளைத் திடப்படுத்தி தயாராகி, யெகோவா தேவன் நமக்கு முன்னால் வைத்திருக்கிற இந்த ஓட்டத்தில், முடிவை எட்டி சந்தோஷமான பரிசைப் பெறும் வரையில், தளரா ஊக்கத்தோடு தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்போமாக. (w91 11/1)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ என்ன வகையான ஓட்டத்துக்காகக் கிறிஸ்தவன் ஆயத்தஞ்செய்ய வேண்டும்?
◻ இந்தப் பந்தயத்தில் ஓடுவதில் சந்தோஷம் ஏன் அவ்வளவு முக்கியம்?
◻ என்ன முக்கிய காரணங்களுக்காக நாம் உபத்திரவங்களின் மத்தியிலும் ஊழியத்தில் நிலைத்திருக்கிறோம்?
◻ நாம் ஏன், கடவுள் நமக்கு முன்வைத்துள்ள இந்த ஓட்டத்தைவிட்டு விலகிவிடக்கூடாது?
17. நாம் ஏன் ஓட்டத்தை விட்டு விலகிவிடக்கூடாது, நாம் முடிவுவரை ஓட்டத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
[பக்கம் 15-ன் படம்]
நெடுந்தூர பந்தய ஓட்டத்தில் ஓடுவதுபோல், கிறிஸ்தவர்கள் சகித்துநிலைத்திருக்க வேண்டும்
[பக்கம் 17-ன் படம்]
“ஜீவகிரீடத்”தைப் பெறும்படி ஓடும் ஓட்டத்தில், வெற்றிக்காக ஓட்டக்காரர்கள் தன்னடக்கத்தைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்