கடவுளுடைய அமைப்பில் பாதுகாப்பாய் இருங்கள்
“யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.”—நீதிமொழிகள் 18:10, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. இயேசுவின் ஜெபத்தின்படி, கிறிஸ்தவர்கள் எத்தகைய கஷ்டமான சூழ்நிலையில் இருந்தார்கள்?
இயேசு இறப்பதற்கு சற்றுமுன்பு தம்முடைய சீஷர்களுக்காக பரலோகத் தந்தையிடம் ஜெபித்தார். அவர்கள் மீதுள்ள அன்பாலும் அக்கறையாலும் அவர் இப்படிச் சொன்னார்: “நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று [“தீயோனிடமிருந்து,” NW] காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.” (யோவான் 17:14, 15) இவ்வுலகம் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தான இடம் என்பதை இயேசு அறிந்திருந்தார். அது அவர்கள்மீது பொய்யாய் குற்றம் சுமத்தி துன்புறுத்தும், அவர்களைப் பகைக்கும். (மத்தேயு 5:11, 12; 10:16, 17) அது ஒழுக்கச் சீர்குலைவுக்கும் ஊற்றுமூலமாய் இருக்கும்.—2 தீமோத்தேயு 4:10; 1 யோவான் 2:15, 16.
2. கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய பாதுகாப்பை எங்கே கண்டடையலாம்?
2 கிறிஸ்தவர்களை பகைக்கும் இவ்வுலகம், கடவுளிடமிருந்து பிரிந்தவர்களாலும் சாத்தானுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறவர்களாலும் ஆனது என அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (1 யோவான் 5:19) கிறிஸ்தவ சபையோடு ஒப்பிட இவ்வுலகம் மலையளவு பெரியது, சாத்தானும் எந்தவொரு மனிதனையும்விட மிகவும் வல்லவன். ஆகையால், இவ்வுலகின் பகைமை பயங்கரமாய் அச்சுறுத்துகிறது. எனவே, இயேசுவைப் பின்பற்றுவோர் ஆவிக்குரிய பாதுகாப்பை எங்கே கண்டடையலாம்? டிசம்பர் 1, 1922 ஆங்கில காவற்கோபுரம் இதற்கான பதிலை தந்தது: “நாம் இப்பொழுது பொல்லாத காலத்தில் வாழ்கிறோம். சாத்தானுடைய அமைப்புக்கும் கடவுளுடைய அமைப்புக்கும் சண்டை நடக்கிறது. அது பயங்கரமான சண்டை.” இந்தச் சண்டையில், கடவுளுடைய அமைப்பு ஓர் ஆவிக்குரிய புகலிடம். “அமைப்பு” என்ற இந்த வார்த்தை பைபிளில் இல்லை; 1920-களில், “கடவுளுடைய அமைப்பு” ஒரு புதிய சொற்றொடராக இருந்தது. அப்படியானால், அது எந்த அமைப்பு? அதில் நாம் எவ்வாறு பாதுகாப்பை கண்டடையலாம்?
யெகோவாவின் அமைப்பு
3, 4. (அ) ஓர் அகராதியின்படியும் காவற்கோபுரத்தின்படியும், அமைப்பு என்றால் என்ன? (ஆ) யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச கூட்டுறவை என்ன அர்த்தத்தில் ஓர் அமைப்பு என அழைக்கலாம்?
3 கன்சைஸ் ஆக்ஸ்ஃபர்டு டிக்ஷ்னரியின்படி, அமைப்பு என்பது “ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் குழு.” இதனால் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ “சகோதரர்களின் கூட்டுறவை” ஓர் அமைப்பு என சொல்வது சரியானதே. ஏனெனில் அப்போஸ்தலர்கள் எருசலேமிலுள்ள ஆளும் குழுவின் மேற்பார்வையில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை உள்ளூர் சபைகளில் ஒழுங்கமைத்தனர். (1 பேதுரு 2:17, NW) யெகோவாவின் சாட்சிகளுக்கு இன்று இதேபோன்ற அமைப்புக்குரிய ஏற்பாடு இருக்கிறது. ‘மனித வடிவிலான வரங்கள்’ அதாவது ‘மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள்’ மூலமாக முதல் நூற்றாண்டு அமைப்பின் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டது. இவர்களில் சிலர் சபை சபையாக பயணம் செய்தனர், மற்றவர்கள் உள்ளூர் சபைகளில் மூப்பர்களாக இருந்தனர். (எபேசியர் 4:8, 11, 12, NW; அப்போஸ்தலர் 20:28) இதுபோன்ற “வரங்கள்” இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஒற்றுமையை பலப்படுத்துகின்றனர்.
4 “அமைப்பு” என்ற வார்த்தையைப் பற்றி நவம்பர் 1922 காவற்கோபுர இதழ் இவ்வாறு சொன்னது: “ஒரு திட்டத்தை நிறைவேற்ற உழைக்கும் ஆட்களாலான ஒரு கூட்டுறவே அமைப்பு.” யெகோவாவின் சாட்சிகளை ஓர் அமைப்பு என்று அழைப்பது, “மதப்பிரிவு என்ற பதம் பயன்படுத்தப்படும் அர்த்தத்தில்” அல்ல. “ஆனால் பைபிள் மாணாக்கர்கள் [யெகோவாவின் சாட்சிகள்] ஒழுங்கான விதத்தில் கடவுளுடைய நோக்கங்களை நிறைவேற்றி, எல்லாவற்றையும் கர்த்தர் செய்கிறபடியே ஒழுங்காக செய்கிறார்கள் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது” என அந்த காவற்கோபுரம் சொன்னது. (1 கொரிந்தியர் 14:33, NW) தன்னுடைய நாளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இதேபோல் ஒழுங்கான விதத்தில் செயல்பட்டார்கள் என்பதை அப்போஸ்தலன் பவுல் காண்பித்தார். அவர் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் கூட்டுறவை மனித சரீரத்திற்கு ஒப்பிட்டார்; சரீரம் அநேக உறுப்புக்களால் ஆனது. அது ஒழுங்காக செயல்பட அவை ஒவ்வொன்றும் அதனதன் வேலையைச் செய்கிறது. (1 கொரிந்தியர் 12:12-26) ஓர் அமைப்புக்கு அது எப்பேர்ப்பட்ட சிறந்த உதாரணம்! கிறிஸ்தவர்கள் ஏன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர்? ‘கடவுளுடைய நோக்கங்களை,’ அதாவது யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கே.
5. கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு எது?
5 இன்று மெய் கிறிஸ்தவர்கள் ஒரே “ஜனமாக” ஒரே “தேசத்திற்குள்” கூட்டிச்சேர்க்கப்பட்டு ஐக்கியப்படுத்தப்படுவார்கள் என பைபிள் முன்னறிவித்தது. அங்கே அவர்கள் ‘உலகின் சுடர்களாய் பிரகாசிப்பார்கள்.’ (ஏசாயா 66:8, NW; பிலிப்பியர் 2:14) ஒழுங்கமைக்கப்பட்ட இந்தத் ‘தேசத்தில்’ இப்பொழுது ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர். (ஏசாயா 60:8-10, 22) என்றபோதிலும், கடவுளுடைய அமைப்பு என்பது இது மாத்திரமே அல்ல. அதில் தேவதூதர்களும் உட்பட்டிருக்கிறார்கள்.
6. அதன் விரிவான கருத்தில், யார் கடவுளுடைய அமைப்பில் இருக்கிறார்கள்?
6 அநேக சந்தர்ப்பங்களில் தேவதூதர்கள் கடவுளுடைய மனித ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். (ஆதியாகமம் 28:12; தானியேல் 10:12-14; 12:1; எபிரெயர் 1:13, 14; வெளிப்படுத்துதல் 14:14-16) அப்படியானால், பொருத்தமாகவே, மே 15, 1925, காவற்கோபுர இதழ் சொன்னது: “பரிசுத்த தேவதூதர்கள் அனைவரும் கடவுளுடைய அமைப்பின் பாகமானவர்கள்.” கூடுதலாக, அது சொன்னது: “கடவுளுடைய அமைப்பின் தலைவராக, முழு வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றிருப்பவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.” (மத்தேயு 28:18) ஆகையால், அதன் விரிவான கருத்தில் பார்த்தால், கடவுளுடைய அமைப்பு என்பது கடவுளுடைய சித்தத்தை ஒன்றுபட்டு செய்கிற பரலோகத்திலும் பூமியிலுமுள்ள அனைவராலும் ஆனது. (பெட்டியைக் காண்க.) இதன் பாகமாயிருப்பது எப்பேர்ப்பட்ட சிறந்த சிலாக்கியம்! பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து உயிரினங்களும் யெகோவாவை ஐக்கியமாய் துதிக்க ஒழுங்கமைக்கப்படும் சமயத்தை எதிர்நோக்கியிருப்பது என்னே மகிழ்ச்சி! (வெளிப்படுத்துதல் 5:13, 14) இருப்பினும், இன்று கடவுளுடைய அமைப்பு என்ன பாதுகாப்பை தருகிறது?
கடவுளுடைய அமைப்பில் பாதுகாக்கப்படுதல்—எப்படி?
7. என்ன வழியில் கடவுளுடைய அமைப்பு நம்மை பாதுகாக்கிறது?
7 சாத்தானுக்கும் அவனுடைய தீய சூழ்ச்சிகளுக்கும் எதிராக நம்மை பாதுகாக்க கடவுளுடைய அமைப்பு உதவுகிறது. (எபேசியர் 6:11) யெகோவாவின் வணக்கத்தாரை சாத்தான் நசுக்குகிறான், துன்பப்படுத்துகிறான், சோதிக்கிறான்; இவற்றிற்கெல்லாம் அவனுடைய மனதிலுள்ள ஒரே இலக்கு: ‘அவர்கள் நடக்கவேண்டிய வழியிலிருந்து’ திசைதிருப்புவதே. (ஏசாயா 48:17; ஒப்பிடுக: மத்தேயு 4:1-11.) இந்தக் காரிய ஒழுங்குமுறையில் அவனுடைய தாக்குதல்களை நாம் ஒருபோதும் தவிர்க்க முடியாது. என்றபோதிலும், கடவுளோடும் அவருடைய அமைப்போடும் உள்ள நெருக்கமான உறவு நம்மை பலப்படுத்தி பாதுகாக்கிறது; இதனால் ‘இந்த வழியில்’ நிலைத்திருக்க உதவுகிறது. இதன் விளைவாக, நம் நம்பிக்கையை பொருத்தவரை நாம் பரிசை இழந்துபோக மாட்டோம்.
8. யெகோவாவின் காணக்கூடாத அமைப்பு எவ்வாறு அவருடைய பூமிக்குரிய ஊழியர்களுக்கு உதவுகிறது?
8 கடவுளுடைய அமைப்பு எவ்வாறு இந்தப் பாதுகாப்பை தருகிறது? முதலாவதாக, யெகோவாவின் தூதர்களுடைய ஆதரவு நமக்கு எப்போதும் இருக்கிறது. இயேசுவானவர் கடும் துன்பத்தில் இருக்கையில், அவருக்கு ஒரு தேவதூதன் பணிவிடை செய்தார். (லூக்கா 22:43) பேதுரு மரண அபாயத்தில் இருக்கையில், தேவதூதனால் அற்புதமாக காப்பாற்றப்பட்டார். (அப்போஸ்தலர் 12:6-11) இன்று அப்படிப்பட்ட அற்புதங்கள் நடப்பதில்லை என்றாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையில் தேவதூதரின் ஆதரவு கிடைக்கும் என்ற வாக்குறுதி உள்ளது. (வெளிப்படுத்துதல் 14:6, 7) இவர்கள் கஷ்டத்தில் இருக்கையில் இயல்புக்கும் அப்பாற்பட்ட வல்லமையை அடிக்கடி பெறுகிறார்கள். (2 கொரிந்தியர் 4:7, NW) அதோடு, “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” என்பதை அறிந்திருக்கின்றனர்.—சங்கீதம் 34:7.
9, 10. “யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம்” என்று எப்படி சொல்லலாம், மொத்தமாக கடவுளுடைய அமைப்புக்கு இந்த நியமம் எவ்வாறு பொருந்துகிறது?
9 யெகோவாவின் காணக்கூடிய அமைப்பும் ஒரு புகலிடமே. எப்படி? நீதிமொழிகள் 18:10-ல் (தி.மொ.) நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம், நீதிமான் அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.” கடவுளுடைய நாமத்தை திரும்பத் திரும்ப சொல்வதுதானே ஒரு பாதுகாப்பு என இது அர்த்தப்படுத்தாது. அதற்குப் பதிலாக, நாம் கடவுளுடைய பெயரில் அடைக்கலம் புகுவது என்பது யெகோவாவில் முழு நம்பிக்கை வைப்பதை குறிக்கிறது. (சங்கீதம் 20:1; 122:4) அவருடைய அரசதிகாரத்தை ஆதரிப்பதையும், அவருடைய சட்டங்களையும் நியமங்களையும் கடைப்பிடிப்பதையும், அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. (சங்கீதம் 8:1-9; ஏசாயா 50:10; எபிரெயர் 11:6) இது, யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை காட்டுவதையும் உட்படுத்துகிறது. இந்த விதத்தில் யெகோவாவை வணங்குபவர்கள் மாத்திரமே சங்கீதக்காரனோடு சேர்ந்து இவ்வாறு சொல்ல முடியும்: “அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் [யெகோவாவுக்குள்] களிகூரும்.”—சங்கீதம் 33:21; 124:8.
10 இப்பொழுது கடவுளுடைய அமைப்பிலுள்ள அனைவரும் மீகாவுடன் சேர்ந்து இவ்வாறு சொல்கின்றனர்: “நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.” (மீகா 4:5) நவீனநாளைய அமைப்பு ‘தேவனுடைய இஸ்ரவேலை’ சுற்றி ஒன்றுதிரட்டப்படுகிறது, அது பைபிளில் ‘அவருடைய நாமத்திற்காக ஒரு ஜனம்’ என்பதாக அழைக்கப்படுகிறது. (கலாத்தியர் 6:16; அப்போஸ்தலர் 15:14; ஏசாயா 43:6, 7; 1 பேதுரு 2:17) ஆகவே, யெகோவாவினுடைய அமைப்பின் பாகமாய் இருப்பது என்பது கடவுளுடைய நாமத்தில் பாதுகாப்பை தேடி, அதைப் பெறுகிற அவருடைய மக்களின் பாகமாயிருப்பதை அர்த்தப்படுத்துகிறது.
11. யெகோவாவின் அமைப்பு, அதில் இருப்பவர்களுக்கு என்ன திட்டவட்டமான வழிகளில் பாதுகாப்பு தருகிறது?
11 மேலும், கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு விசுவாசிகள் அடங்கிய ஒரு சமுதாயம்; ஒருவரையொருவர் கட்டியெழுப்பி உற்சாகப்படுத்துகிற உடன் வணக்கத்தாராலாகிய ஒரு கூட்டுறவு. (நீதிமொழிகள் 13:20; ரோமர் 1:11) இங்கே கிறிஸ்தவ மேய்ப்பர்கள் செம்மறியாடுகளை போன்ற மக்களை கவனித்துக்கொள்கிறார்கள், நோய்வாய்ப்பட்டவர்களையும் மனச்சோர்வடைந்தவர்களையும் உற்சாகப்படுத்துகிறார்கள், வீழ்ந்துபோனவர்களைத் திரும்ப நிலைநாட்ட முயலுகிறார்கள். (ஏசாயா 32:1, 2; 1 பேதுரு 5:2-4) அந்த அமைப்பின் மூலம் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,” “ஏற்ற வேளையிலே உணவு” அளிக்கிறது. (மத்தேயு 24:45, NW) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலான அந்த “அடிமை” சிறந்த ஆவிக்குரிய உணவை—நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் திருத்தமான, பைபிள் அடிப்படையிலான அறிவை—தருகிறது. (யோவான் 17:3) அந்த “அடிமை”யிடமிருந்து வரும் வழிநடத்துதலின் காரணமாக, கிறிஸ்தவர்கள் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களைக் காத்துக்கொள்வதற்கும் தங்களைச் சுற்றியுள்ள ஆபத்தான சூழ்நிலையில் “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இரு”ப்பதற்கும் உதவிசெய்யப்படுகிறார்கள். (மத்தேயு 10:16) அவர்கள் ‘கர்த்தருடைய வேலையில் [எப்போதும்] மிகுதியாக செய்வதற்கு’ உதவப்படுகிறார்கள்; அவ்விதம் செய்வதே சிறந்த ஒரு பாதுகாப்பு.—1 கொரிந்தியர் 15:58, NW.
கடவுளுடைய அமைப்பில் இருப்போர் யார்?
12. கடவுளுடைய பரலோக அமைப்பில் இருப்பதாக யார் அடையாளம் காட்டப்படுகிறார்கள்?
12 கடவுளுடைய அமைப்பில் இருப்போருக்கு இந்தப் பாதுகாப்பு கிடைப்பதால், இது எவரையெல்லாம் உட்படுத்துகிறது? பரலோக அமைப்பை குறித்ததில், இந்தக் கேள்விக்கான பதிலில் எந்தச் சந்தேகமுமில்லை. சாத்தானும் அவனுடைய தூதர்களும் இனிமேலும் பரலோகத்தில் இல்லை. மறுபட்சத்தில், உண்மையுள்ள தேவதூதர்கள் இன்னும் ‘சர்வ சங்கத்தில்’ இருக்கிறார்கள். கடைசி நாட்களில் ‘ஆட்டுக்குட்டியானவரும்’ கேருபீன்களும் (‘நான்கு ஜீவன்களும்’) ‘அநேக தேவதூதர்களும்’ கடவுளுடைய சிங்காசனத்திற்கு பக்கத்தில் இருப்பதை அப்போஸ்தலன் யோவான் பார்த்தார். அவர்களுடன் 24 மூப்பர்கள்—அதாவது, ஏற்கெனவே மகிமையான பரலோக சுதந்தரத்தைப் பெற்ற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள்—இருப்பார்கள். (எபிரெயர் 12:22, 23; வெளிப்படுத்துதல் 5:6, 11; 12:7-12) அனைவரும் கடவுளுடைய அமைப்பின் பாகமானவர்களே. இருப்பினும், மனிதர்களுடைய விஷயத்தில் காரியங்கள் தெள்ளத் தெளிவாக இல்லை.
13. கடவுளுடைய அமைப்பின் பாகமானவர்களையும் பாகமல்லாதவர்களையும் இயேசு எவ்வாறு அடையாளம் காட்டினார்?
13 தம்மை பின்பற்றுவதாக உரிமைபாராட்டும் சிலரைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள் அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22, 23) யாராவது அக்கிரமக்காரராக இருந்தால், அவர் என்ன உரிமைபாராட்டினாலும்சரி, வணக்கத்திற்கு எங்கு சென்றாலும்சரி, அவர் நிச்சயமாகவே கடவுளுடைய அமைப்பின் பாகமாய் இருக்க முடியாது. கடவுளுடைய அமைப்பின் பாகமாய் இருப்பவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம் என்பதையும் இயேசு காண்பித்தார். அவர் சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”—மத்தேயு 7:21.
14. கடவுளுடைய அமைப்பில் இருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவையாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கடவுளுடைய சித்தத்தின் அம்சங்கள் யாவை?
14 ஆகவே, கடவுளுடைய அமைப்பில் இருப்பதற்கு, அதாவது ‘பரலோக ராஜ்யத்தின்’ முக்கிய பாகமாயிருப்பதற்கு, ஒருவர் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வேண்டும். அவருடைய சித்தம் என்ன? ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், [கடவுள்] சித்தமுள்ளவராயிருக்கிறார்’ என்று சொன்னபோது, அதன் இன்றியமையாத அம்சத்தை பவுல் அடையாளம் காட்டினார். (1 தீமோத்தேயு 2:4) பைபிளின் திருத்தமான அறிவை பெற்றுக்கொள்வதற்கும் அதை தன்னுடைய வாழ்க்கையில் பொருத்துவதற்கும், ‘எல்லா மனுஷருக்கும்’ பரப்புவதற்கும் ஒரு நபர் உண்மையிலேயே முயற்சி செய்வாராகில், அவர் கடவுளுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருக்கிறார். (மத்தேயு 28:19, 20; ரோமர் 10:13-15) யெகோவாவின் ஆடுகள் போஷிக்கப்படுவதும் கவனிக்கப்படுவதும்கூட கடவுளுடைய சித்தமாகும். (யோவான் 21:15-17) இதில் கிறிஸ்தவ கூட்டங்கள் இன்றியமையா பங்கை வகிக்கின்றன. இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு ஆஜராக எந்தத் தடையுமில்லாத ஒரு நபர் அதை அசட்டை செய்வாராகில், கடவுளுடைய அமைப்பில் தான் வகிக்கும் இடத்திற்கு போற்றுதல் இல்லாதவராக இருக்கிறார்.—எபிரெயர் 10:23-25.
உலக நட்பு
15. தன்னுடைய நாளில் இருந்த சபைகளுக்கு யாக்கோபு என்ன எச்சரிப்பை கொடுத்தார்?
15 இயேசு இறந்து சுமார் 30 வருடங்களுக்குப்பின், கடவுளுடைய அமைப்பில் ஒருவர் தொடர்ந்து இருப்பதை ஆபத்திற்குள்ளாக்கும் சில அம்சங்களை அவருடைய ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு அடையாளம் காட்டினார். அவர் எழுதினார்: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக்கோபு 4:4) கடவுளுடைய பகைஞன் அவருடைய அமைப்பில் இருக்கவே முடியாது. அப்படியானால், உலக நட்பு என்றால் என்ன? கெட்ட கூட்டுறவுகளை வளர்த்துக்கொள்வது அல்லது அதில் ஈடுபடுவது போன்ற பல்வகையான அம்சங்களின் மூலம் விவரிக்கப்படுகிறது. அதோடுகூட, குறிப்பிட்ட ஒன்றிற்கு, அதாவது தகாத நடத்தைக்கு வழிநடத்தும் தவறான மனப்பான்மைகளுக்கு யாக்கோபு கவனத்தை ஒருமுகப்படுத்தினார்.
16. உலக நட்பு கடவுளுக்குப் பகை என்ற யாக்கோபின் எச்சரிப்பு எந்தச் சூழமைவில் கொடுக்கப்பட்டது?
16 யாக்கோபு 4:1-3-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.” உலக நட்பைப் பற்றி யாக்கோபு எச்சரித்தது இந்த வார்த்தைகளை எழுதிய பிறகே.
17. எந்த விதத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் ‘யுத்தங்களும்’ ‘சண்டைகளும்’ இருந்தன?
17 யாக்கோபு இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பொய் கிறிஸ்தவர்கள் நிஜமாகவே யுத்தம் செய்தார்கள், ஒருவரையொருவர் கொலை செய்தார்கள். இருப்பினும், ‘தேவனுடைய இஸ்ரவேலருக்கு,’ அதாவது பரலோகத்தில் ‘ஆசாரியர்களாகவும் ராஜாக்களாகவும்’ ஆகப்போகும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ அங்கத்தினர்களுக்கு யாக்கோபு எழுதிக்கொண்டிருந்தார். (வெளிப்படுத்துதல் 20:6) அவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யவில்லை அல்லது யுத்தங்களில் பங்குகொள்ளவுமில்லை. ஆகவே, கிறிஸ்தவர்கள் மத்தியில் யாக்கோபு ஏன் இப்படிப்பட்ட காரியங்களைப் பேசினார்? தன் சகோதரனை பகைக்கிற எவனையும் கொலைபாதகன் என அப்போஸ்தலன் யோவான் அழைத்தார். குணநலன்களில் வேறுபாடுகள், சபையில் ‘யுத்தங்களையும், சண்டைகளையும்’ ஓயாமல் போட்டுக்கொண்டிருந்தவர்கள் பற்றி பவுல் பேசினார். (தீத்து 3:9; 2 தீமோத்தேயு 2:14; 1 யோவான் 3:15-17) உலகத்திலுள்ளவர்கள் பெரும்பாலும் ஒருவரையொருவர் நடத்துவது போன்ற முறையில் கிறிஸ்தவர்கள் தங்கள் மத்தியில் நடந்துகொண்டிருந்தார்கள்.
18. கிறிஸ்தவர்கள் மத்தியில் அன்பற்ற செயல்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் எது வழிநடத்தக்கூடும்?
18 கிறிஸ்தவ சபைகளில் ஏன் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்தன? பேராசை, ‘மாம்ச இன்பங்களுக்கான வெறி’ போன்ற தவறான மனப்பான்மைகளின் காரணமாகவே. பெருமை, பொறாமை, புகழார்வம் ஆகியவையும் சபையில் அன்பான கிறிஸ்தவ கூட்டுறவை கெடுக்கக்கூடும். (யாக்கோபு 3:6, 14) இப்படிப்பட்ட மனப்பான்மைகள் ஒருவரை உலகத்தின் சிநேகிதனாக்கி கடவுளுக்கு பகைஞனாக்குகிறது. இதுபோன்ற மனப்பான்மைகளை மனதில் பேணிவளர்க்கிற எவரும் கடவுளுடைய அமைப்பின் பாகமாய் இருக்கும்படி எதிர்பார்க்க முடியாது.
19. (அ) தவறான சிந்தை தன்னுடைய இருதயத்தில் வேரூன்றுவதை ஒரு கிறிஸ்தவன் கண்டால் முக்கியமாக யாரை குறைகூற வேண்டும்? (ஆ) தவறான சிந்தையை ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு மேற்கொள்ளலாம்?
19 நம் இருதயத்தில் தவறான சிந்தை வேரூன்றுவதை கண்டறிந்தால், நாம் யாரை குறைகூறலாம்? சாத்தானையா? ஆம், ஆனால் ஓரளவுக்கே. அவனே இந்த உலகத்தின் ‘ஆகாயத்து அதிகாரப் பிரபு.’ அங்கே இப்படிப்பட்ட மனப்பான்மைகள் பரவலாக காணப்படுகின்றன. (எபேசியர் 2:1, 2; தீத்து 2:12) இருப்பினும், பொதுவாக தவறான சிந்தை நம்முடைய அபூரண மாம்சத்திலேயே இருக்கிறது. உலகத்தோடு சிநேகிதம் வைத்துக்கொள்வதற்கு எதிராக எச்சரித்தப் பிறகு, யாக்கோபு எழுதினார்: “நம்மில் குடிகொண்டிருக்கிற ஆவி பொறாமை மனப்பான்மையுடன் ஏங்கிக்கொண்டேயிருக்கிறது என்று வேதவாக்கியம் சொல்வது உங்களுக்கு வீணாய் தோன்றுகிறதா?” (யாக்கோபு 4:5, NW) தவறு செய்வதற்கான மனச்சாய்வு நம் அனைவருக்கும் பிறவியிலேயே இருக்கிறது. (ஆதியாகமம் 8:21; ரோமர் 7:18-20) என்றபோதிலும், நம்முடைய பலவீனங்களை ஒப்புக்கொண்டு அவற்றை மேற்கொள்வதற்கு யெகோவாவின் உதவியில் சார்ந்திருந்தால் அதை மேற்கொள்ள முடியும். யாக்கோபு சொல்கிறார்: ‘[கடவுள்] அளிக்கும் தகுதியற்ற தயவு [பொறாமைப்படுவதற்கான நம்முடைய பிறவி குணத்தைக் காட்டிலும்] பெரியது.’ (யாக்கோபு 4:6, NW) கடவுளுடைய பரிசுத்த ஆவி, உண்மையுள்ள கிறிஸ்தவ சகோதரர்களுடைய ஆதரவு, இயேசுவின் கிரய பலி ஆகியவற்றின் நிமித்தமாக உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் மாம்ச பலவீனங்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. (ரோமர் 7:24, 25) அவர்கள் உலகத்தின் சிநேகிதர்களாக அல்ல, கடவுளுடைய சிநேகிதர்களாக அவருடைய அமைப்பில் பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.
20. கடவுளுடைய அமைப்பில் இருப்பவர்கள் என்ன செழிப்பான ஆசீர்வாதங்களை அறுவடை செய்கிறார்கள்?
20 பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 29:11) நாம் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பாகிய அவருடைய நவீனநாளைய “ஜனத்தின்” பாகமாக இருந்தால், அவர் தரும் பலத்தைப் பெறுவோம், அவருடைய மக்கள் அனுபவிக்கும் சமாதானத்தை ஆசீர்வாதமாக பெறுவோம். யெகோவாவின் காணக்கூடிய அமைப்பைவிட சாத்தானுடைய அமைப்பு மிகவும் பெரியது என்பது உண்மையே. சாத்தானும் நம்மைவிட அதிக பலசாலி. ஆனால் யெகோவா சர்வ வல்லமையுள்ளவர். அவருடைய பரிசுத்த ஆவி வெல்ல முடியாதது. அவருடைய பலமிக்க தேவதூதர்களும்கூட கடவுளை சேவிப்பதில் நம்முடன் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். எனவே, நாம் எதிர்ப்படும் பகைமையின் மத்தியிலும் உறுதியுடன் நிலைத்து நிற்கலாம். இயேசுவைப் போல, இந்த உலகை நாம் ஜெயிக்கலாம்.—யோவான் 16:33; 1 யோவான் 4:4.
உங்களால் விளக்க முடியுமா?
◻ கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு எது?
◻ எந்த விதங்களில் கடவுளுடைய அமைப்பு பாதுகாப்பை தருகிறது?
◻ கடவுளுடைய அமைப்பின் பாகமானவர்கள் யார்?
◻ இவ்வுலகத்தின் சிநேகிதர்களாய் இருப்பதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
[பக்கம் 9-ன் பெட்டி]
கடவுளுடைய அமைப்பு என்றால் என்ன?
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களில், “கடவுளுடைய அமைப்பு” என்ற சொற்றொடர் மூன்று விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
1 ஆவி சிருஷ்டிகளாலான யெகோவாவின் பரலோக, காணக்கூடாத அமைப்பு. இது ‘மேலான எருசலேம்’ என பைபிளில் அழைக்கப்படுகிறது.—கலாத்தியர் 4:26.
2 மனிதர்களாலான, யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு. இன்று, இதில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரும் திரள் கூட்டத்தினரும் இருக்கின்றனர்.
3 யெகோவாவின் சர்வலோக அமைப்பு. இன்று, யெகோவாவின் பரலோக அமைப்பும் புத்திர சுவீகாரம் பெற்ற ஆவிக்குரிய நம்பிக்கையுடைய பூமியில் உள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் அடங்குவர். காலப்போக்கில், பூமியில் வாழும் பரிபூரணமாக்கப்பட்ட மானிடர்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
[பக்கம் 10-ன் படம்]
யெகோவாவின் அமைப்பு மிகச் சிறந்த ஆவிக்குரிய உணவை தருகிறது