அதிகாரம் 17
யெகோவாவின் அமைப்போடு நெருங்கியிருங்கள்
சீஷராகிய யாக்கோபு இப்படி எழுதினார்: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக். 4:8) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் நம்முடைய ஜெபங்களை யெகோவா கேட்கிறார். அவற்றைக் கேட்க முடியாத அளவுக்கு அவர் ரொம்பத் தூரத்திலோ உயரத்திலோ இல்லை. (அப். 17:27) அவரிடம் நெருங்கிப்போக நாம் என்ன செய்ய வேண்டும்? அவரோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எப்படி? முதலாவதாக, ஊக்கமாக ஜெபம் செய்ய வேண்டும். (சங். 39:12) இரண்டாவதாக, அவருடைய வார்த்தையாகிய பைபிளைத் தவறாமல் படித்து, அவரைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் விருப்பத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். (2 தீ. 3:16, 17) அப்போது, அவரை நேசிக்கக் கற்றுக்கொள்வோம், அவருடைய மனதைக் கஷ்டப்படுத்திவிடுவோமோ என்ற பயத்தையும் வளர்த்துக்கொள்வோம்.—சங். 25:14.
2 ஆனால், இயேசுவின் மூலமாக மட்டும்தான் நாம் யெகோவாவிடம் நெருங்கிப்போக முடியும். (யோவா. 17:3; ரோ. 5:10) யெகோவாவின் மனதை நன்றாகப் புரிந்துகொள்ள இயேசுவைத் தவிர வேறு யாரால் நமக்கு உதவி செய்ய முடியும்! அவர் தன் தகப்பனை முழுமையாகத் தெரிந்துவைத்திருந்தார். அதனால்தான், “தகப்பனைத் தவிர வேறு யாருக்கும் மகனைத் தெரியாது. மகனுக்கும், மகன் யாருக்கு அவரை வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தவிர வேறு யாருக்கும் தகப்பன் யாரென்று தெரியாது” என்று அவர் சொன்னார். (லூக். 10:22) அதனால், இயேசு எப்படி யோசித்தார் அல்லது உணர்ந்தார் என்று சுவிசேஷப் புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளும்போது, யெகோவா எப்படி யோசிக்கிறார் அல்லது உணருகிறார் என்று தெரிந்துகொள்கிறோம். யெகோவாவிடம் நெருங்கிப்போக அது நமக்கு உதவி செய்கிறது.
3 நாம் கடவுளுடைய மகனின் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம். அதோடு, யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய நமக்கு உதவும் அவருடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தோடு நெருங்கியிருக்கிறோம். யெகோவாவிடம் நெருங்கியிருக்க இவை நமக்கு உதவுகின்றன. மத்தேயு 24:45-47-ல் முன்கூட்டியே சொல்லப்பட்டுள்ளபடி, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து, விசுவாசக் குடும்பத்தாருக்கு ‘ஏற்ற வேளையில் . . . உணவு கொடுக்க’ ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமித்திருக்கிறார். இன்று அந்த அடிமை, ஏராளமான ஆன்மீக உணவை நமக்கு அள்ளி வழங்குகிறது. பைபிளைத் தினமும் படிக்க வேண்டும்... கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்... ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ ஆர்வத்தோடு மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்... என்றெல்லாம் அந்த அடிமை மூலம் யெகோவா நமக்கு அறிவுரை தருகிறார். (மத். 24:14; 28:19, 20; யோசு. 1:8; சங். 1:1-3) அதனால், நாம் அந்த அடிமையை ஒருபோதும் மனிதக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தோடு நெருங்கியிருக்கவும் அதன் அறிவுரைகளைக் கேட்டு நடக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். நம் கடவுளாகிய யெகோவாவிடம் நெருங்கிப்போக இது நமக்கு உதவி செய்யும். அதோடு, சோதனைகள் மத்தியிலும் நமக்குப் பலத்தையும் பாதுகாப்பையும் தரும்.
சோதனைகள் அதிகமாவதற்கான காரணம்
4 நீங்கள் ஒருவேளை ரொம்பக் காலமாகச் சத்தியத்தில் இருக்கலாம். அப்படியென்றால், உத்தமத்துக்கு வரும் சோதனைகளைச் சமாளிப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் சமீபத்தில்தான் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய மக்களோடு பழகுகிறீர்கள் என்றாலும், யெகோவாவின் பேரரசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் எல்லாரையும் பிசாசாகிய சாத்தான் எதிர்க்கிறான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். (2 தீ. 3:12) அதனால், நீங்கள் கொஞ்சக் காலம் சகித்திருந்தாலும் சரி, அதிகக் காலம் சகித்திருந்தாலும் சரி, பயப்படவோ சோர்ந்துபோகவோ அவசியம் இல்லை. உங்களைக் காப்பாற்றுவதாகவும், மீட்பதாகவும், முடிவில்லாத வாழ்வைத் தந்து ஆசீர்வதிப்பதாகவும் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்.—எபி. 13:5, 6; வெளி. 2:10.
5 சாத்தானுடைய உலகத்தின் இந்தக் கடைசி நாட்களில் நம் எல்லாருக்குமே சோதனைகள் வரத்தான் செய்யும். 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் நிறுவப்பட்டதுமுதல், சாத்தான் பரலோகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான். இங்குதான் அவனும் அவனுடைய கெட்ட தூதர்களும் சுற்றித்திரிகிறார்கள். அவனுடைய கோபத்தால்தான் யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிராகத் துன்புறுத்தல் அதிகமாகிக்கொண்டு வருகிறது, இந்தப் பூமியில் மற்ற பல பிரச்சினைகளும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. அவனுடைய பொல்லாத ஆட்சியின் முடிவு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு இவை அத்தாட்சிகளாக இருக்கின்றன.—வெளி. 12:1-12.
6 சாத்தான் தன்னுடைய கேவலமான நிலையை நினைத்துக் கொதித்துப்போயிருக்கிறான். தனக்குக் கொஞ்சக் காலமே இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். அதனால், தன் பக்கம் இருக்கும் பேய்களோடு சேர்ந்துகொண்டு, பிரசங்க வேலையைத் தடை செய்யவும் யெகோவாவின் மக்களுடைய ஒற்றுமையைக் குலைத்துப்போடவும் தீவிரமாக முயற்சி செய்கிறான். அப்படியென்றால், நாம் ஆன்மீகப் போர்க்களத்தில் இருக்கிறோம் என்று தெரிகிறது. “மனிதர்களோடு அல்ல, அரசாங்கங்களோடும், அதிகாரிகளோடும், இந்த இருண்ட உலகத்தின் தலைவர்களோடும், பரலோகத்தில் இருக்கிற பொல்லாத தூதர் கூட்டத்தோடும் நாம் போராட வேண்டியிருக்கிறது.” நாம் இந்தப் போராட்டத்தில் தளர்ந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, நம் ஆன்மீகக் கவசத்தை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். ‘பிசாசின் சூழ்ச்சிகளை நாம் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டும்.’ (எபே. 6:10-17) இதற்குச் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வது அவசியம்.
சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வது
7 பொதுவாக, சகிப்புத்தன்மை என்பது, “துன்பதுயரங்களைத் தாங்கிக்கொள்ளும் திறமையை” குறிக்கிறது. ஆனால் பைபிளின்படி, சகிப்புத்தன்மை என்பது எதிர்ப்பு, துன்புறுத்தல் போன்ற கஷ்டமான சூழ்நிலைகளிலும் நம் உத்தமத்தை விட்டுவிடாமல் தொடர்ந்து கடவுளுக்குப் பிரியமாக நடப்பதைக் குறிக்கிறது. சகிப்புத்தன்மை என்பது கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு குணம். இதற்குக் காலம் எடுக்கும். நம் விசுவாசத்தை நாம் வளர்க்க வளர்க்க, சகிப்புத்தன்மையைக் காட்டும் நம்முடைய திறனும் அதிகமாகிறது. ஆரம்பத்தில் நம் விசுவாசத்துக்கு வரும் சின்னச் சின்ன சோதனைகளை நாம் சகித்துக்கொண்டால், பிற்பாடு வரும் பெரியப் பெரிய சோதனைகளை நம்மால் சுலபமாகச் சகித்துக்கொள்ள முடியும். (லூக். 16:10) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை சோதனைகள் வருவதற்கு முன்பே நாம் எடுக்க வேண்டும். பெரிய சோதனைகள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. மற்ற கிறிஸ்தவக் குணங்களோடு சேர்த்து சகிப்புத்தன்மையையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். “உங்கள் விசுவாசத்தோடு ஒழுக்கத்தையும், ஒழுக்கத்தோடு அறிவையும், அறிவோடு சுயக்கட்டுப்பாட்டையும், சுயக்கட்டுப்பாட்டோடு சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடு கடவுள்பக்தியையும், கடவுள்பக்தியோடு சகோதரப் பாசத்தையும், சகோதரப் பாசத்தோடு அன்பையும் சேர்த்து தாராளமாகக் காட்டுவதற்கு அதிக ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்” என்று அவர் எழுதினார்.—2 பே. 1:5-7; 1 தீ. 6:11.
நாம் தினம் தினம் சோதனைகளைச் சமாளிக்கும்போது நம் சகிப்புத்தன்மை வளர்ந்துகொண்டே போகிறது
8 விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்று யாக்கோபு சொல்லியிருக்கிறார். “என் சகோதரர்களே, உங்களுக்குப் பலவிதமான கஷ்டங்கள் வரும்போது அதற்காகச் சந்தோஷப்படுங்கள். இப்படிக் கஷ்டங்கள் மூலம் சோதிக்கப்பட்ட உங்கள் விசுவாசம் சகிப்புத்தன்மையை உண்டாக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையானவர்களாகவும், எந்தக் குறையுமில்லாமல் எல்லா விதத்திலும் நிறைவானவர்களாகவும் இருப்பீர்கள்” என்று அவர் எழுதியிருக்கிறார். (யாக். 1:2-4) அப்படியென்றால், சோதனைகள் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும். அதனால், சோதனைகள் வரும்போது நாம் சோர்ந்துவிடாமல் அதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் எப்போதாவது இந்தக் கோணத்தில் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? யாக்கோபு சொன்னதுபோல், சகிப்புத்தன்மை நம்மில் முழுமையாக வேலை செய்யும்போது, நம் சுபாவம் மெருகேறும், நாம் கடவுளுக்குப் பிரியமானவர்களாகவும் ஆவோம். நாம் தினம் தினம் சோதனைகளைச் சமாளிக்கும்போது நம் சகிப்புத்தன்மை வளர்ந்துகொண்டே போகிறது. இந்தச் சகிப்புத்தன்மை, நமக்குத் தேவையான மற்ற நல்ல குணங்களையும் வளர்த்துக்கொள்ள உதவும்.
9 நம் சகிப்புத்தன்மையைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். அதனால், முடிவில்லாத வாழ்வை நமக்குப் பரிசாகத் தரப்போகிறார். “சோதனைகளைச் சகித்துக்கொண்டே இருக்கும் மனிதன் சந்தோஷமானவன்; ஏனென்றால், யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, வாழ்வு என்ற கிரீடம் அவனுக்குக் கிடைக்கும். தன்னிடம் தொடர்ந்து அன்பு காட்டுகிறவர்களுக்கு அதைத் தருவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்” என்றும் யாக்கோபு சொன்னார். (யாக். 1:12) அவர் சொன்னபடி, வாழ்வு என்ற கிரீடத்தைப் பெறுவதற்காக நாம் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறோம். சகிப்புத்தன்மை இல்லாமல் நம்மால் சத்தியத்தில் நிலைத்திருக்கவே முடியாது. இந்த உலகம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நாம் இடம்கொடுத்தால் மறுபடியும் இந்த உலகத்துக்கே திரும்பிப் போய்விடுவோம். நாம் சகிப்புத்தன்மையைக் காட்டவில்லையென்றால், யெகோவாவின் சக்தியைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியாது. அதனால், அந்தச் சக்தியினால் உண்டாகிற குணங்களை நம்மால் வெளிக்காட்ட முடியாது.
10 இந்தக் கஷ்ட காலங்களில் நாம் தொடர்ந்து சகிப்புத்தன்மை காட்டுவதற்கு, சோதனைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியது அவசியம். கஷ்டங்கள் வரும்போது “அதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்று யாக்கோபு எழுதியதை நினைத்துப் பாருங்கள். இதைச் செய்வது எப்போதுமே சுலபம் அல்ல. ஏனென்றால், சோதனைகள் வரும்போது உடலளவிலும் மனதளவிலும் நாம் வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், சோதனைகளைச் சகித்தால்தான் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். கஷ்டங்களை நாம் எப்படிச் சந்தோஷத்தோடு சகிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள, அப்போஸ்தலர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு உதவி செய்கிறது. அந்தப் பதிவு அப்போஸ்தலர் புத்தகத்தில் இருக்கிறது. “அப்போஸ்தலர்களை வரவழைத்து, அவர்களை அடித்து, இயேசுவின் பெயரில் பேசுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டு அனுப்பினார்கள். ஆனால், அவருடைய பெயருக்காகத் தாங்கள் அவமானப்படத் தகுதியுள்ளவர்களெனக் கருதப்பட்டதை நினைத்து அப்போஸ்தலர்கள் சந்தோஷமாக நியாயசங்கத்தைவிட்டுப் போனார்கள்.” (அப். 5:40, 41) தங்களுக்கு வந்த கஷ்டங்கள் எதற்கு அத்தாட்சியாக இருந்ததென்று அவர்கள் புரிந்துகொண்டார்கள்; அதாவது, தாங்கள் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததாலும் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்ததாலும்தான் கஷ்டங்கள் வந்தன என்பதைப் புரிந்துகொண்டார்கள். பல வருஷங்களுக்குப் பிறகு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பேதுரு தன்னுடைய முதல் கடிதத்தை எழுதியபோது, நீதிக்காகத் துன்பப்படுவது எந்தளவு நன்மை தரும் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டார்.—1 பே. 4:12-16.
11 பவுல் மற்றும் சீலாவின் விஷயத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம். பிலிப்பியில் அவர்கள் மிஷனரி ஊழியம் செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்கள். நகரத்தில் பயங்கர குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், மக்கள் கடைப்பிடிக்கக் கூடாத சம்பிரதாயங்களைக் கற்றுக்கொடுத்ததாகவும் பொய்க் குற்றம் சுமத்தப்பட்டார்கள். பிறகு, அவர்களைப் பயங்கரமாக அடித்துச் சிறையில் தள்ளினார்கள். காயங்களோடு சிறையில் அடைப்பட்டுக் கிடந்தபோதிலும், “ஏறக்குறைய நடுராத்திரியில் பவுலும் சீலாவும் ஜெபம் செய்துகொண்டும் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.” (அப். 16:16-25) கிறிஸ்துவுக்காகப் பாடுகளைச் சகித்துக்கொள்ளும்போது, கடவுளுக்கு முன்பாகவும் மனுஷர்களுக்கு முன்பாகவும் தங்கள் உத்தமத்தை நிரூபித்துக் காட்ட முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதோடு, ஆர்வமுள்ள மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்க முடியும் என்பதையும், அவர்களுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதையும் புரிந்துகொண்டார்கள். அதே ராத்திரி, சிறைக்காவலனும் அவனுடைய வீட்டிலிருந்த எல்லாரும் நல்ல செய்தியைக் கேட்டு சீஷர்களானார்கள். (அப். 16:26-34) பவுலும் சீலாவும் யெகோவாமீதும் அவருடைய சக்திமீதும் நம்பிக்கை வைத்தார்கள்; கஷ்டங்களில் கைகொடுக்க அவர் தயாராக இருக்கிறார் என்றும் நம்பினார்கள். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
12 இன்றும், சோதனையைத் தாங்கிக்கொள்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா நமக்குத் தந்திருக்கிறார். ஏனென்றால், நாம் சகித்திருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய நோக்கத்தைப் பற்றி நாம் திருத்தமாகத் தெரிந்துகொள்வதற்காக அவருடைய வார்த்தையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. சகோதர சகோதரிகளோடு பழகுவதற்கும், பரிசுத்த சேவை செய்வதற்கும் அவர் நமக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். ஜெபத்தின் மூலமாகத் தன்னிடம் நெருங்கியிருப்பதற்கான பாக்கியத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். நாம் அவரைப் புகழ்ந்து பேசுவதையும், உண்மையோடு நிலைத்திருக்க உதவி செய்யும்படி கெஞ்சுவதையும் அவர் கேட்கிறார். (பிலி. 4:13) அதுமட்டுமல்ல, நம் முன்னால் வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையைப் பற்றி யோசிக்கும்போது நமக்குப் பலம் கிடைக்கிறது.—மத். 24:13; எபி. 6:18; வெளி. 21:1-4.
பலவிதமான கஷ்டங்களைச் சகித்துக்கொள்வது
13 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் சந்தித்ததைப் போன்ற சோதனைகளை இன்று நாமும் சகிக்க வேண்டியிருக்கிறது. நவீன காலங்களில், நம்மைப் பற்றித் தவறான செய்திகளைக் கேள்விப்படுகிறவர்கள் நம்மை வார்த்தைகளால் தாக்கலாம் அல்லது அடிக்கவும் செய்யலாம். அப்போஸ்தலர்களின் காலத்தைப் போலவே இன்றும் மதவெறியர்கள்தான் முக்கியமாக இப்படிப்பட்ட எதிர்ப்பைத் தூண்டிவிடுகிறார்கள். ஏனென்றால், அவர்களுடைய நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் பொய் என்பதை நாம் பைபிளிலிருந்து காட்டுகிறோம். (அப். 17:5-9, 13) சிலசமயங்களில், அரசாங்கம் தரும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்வதால் நமக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. (அப். 22:25; 25:11) ஆனால், சில ஆட்சியாளர்கள் நம்முடைய ஊழியத்துக்கு முடிவுகட்ட வேண்டுமென்று நினைத்து நம் வேலையைத் தடை செய்திருக்கிறார்கள். (சங். 2:1-3) அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று சொன்ன உண்மையுள்ள அப்போஸ்தலர்களின் முன்மாதிரியை நாம் தைரியமாகப் பின்பற்றுகிறோம்.—அப். 5:29.
14 உலகம் முழுவதும் தேசப்பற்று அதிகமாகிக்கொண்டே போவதால், நம் பிரசங்க வேலைக்கு எதிர்ப்பும் அதிகமாகிறது. “மூர்க்க மிருகத்தையும் அதன் உருவத்தையும்” வணங்குவதைப் பற்றி வெளிப்படுத்துதல் 14:9-12-ல் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிப்பைக் கடவுளுடைய ஊழியர்களான நாம் எல்லாரும் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறோம். “கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுமீது வைத்திருக்கிற விசுவாசத்தைக் காத்துக்கொள்கிற பரிசுத்தவான்களுக்குச் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது” என்று யோவான் சொன்னதன் முக்கியத்துவத்தையும் புரிந்துவைத்திருக்கிறோம்.
15 போர், புரட்சி, துன்புறுத்தல், அரசாங்கத் தடை போன்றவற்றின் காரணமாக உங்களால் யெகோவாவை வெளிப்படையாக வணங்க முடியாமல் போய்விடலாம். ஒருவேளை, சபையாக ஒன்றுகூடி வர முடியாமல் போய்விடலாம். கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முடியாமல் போய்விடலாம். வட்டாரக் கண்காணியால் உங்கள் சபையைச் சந்திக்க முடியாமல் போய்விடலாம். பிரசுரங்கள் கிடைக்காமல் போகலாம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
16 அந்தச் சூழ்நிலையில் உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, எந்தளவுக்குச் செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். பொதுவாக, தனிப்பட்ட படிப்பு படிக்க உங்களுக்கு வாய்ப்பு இருக்கும். சகோதர சகோதரிகளுடைய வீடுகளில் சின்னச் சின்னத் தொகுதிகளாக ஒன்றுகூடி வந்து படிக்கலாம். கூட்டங்களில் படிப்பதற்கு, ஏற்கெனவே படித்த பிரசுரங்களையோ பைபிளையோகூட பயன்படுத்தலாம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். பொதுவாக, ஆளும் குழு கொஞ்ச நாளிலேயே பொறுப்புள்ள சகோதரர்களை ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புகொள்ளும்.
17 ஒருவேளை, நீங்கள் மற்ற எல்லா சகோதர சகோதரிகளிடமிருந்தும் பிரிக்கப்பட்டால்கூட, யெகோவாவிடமிருந்தும் அவருடைய மகன் இயேசுவிடமிருந்தும் யாராலும் உங்களைப் பிரிக்க முடியாது என்பதை மனதில் வையுங்கள். அந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல் இருக்க முடியும். நீங்கள் தனியாக இருந்தாலும் யெகோவாவினால் உங்கள் ஜெபத்தைக் கேட்க முடியும், தன்னுடைய சக்தியைக் கொடுத்து உங்களைப் பலப்படுத்தவும் முடியும். அதனால், உங்களுக்கு வழிகாட்டும்படி அவரிடம் கேளுங்கள். நீங்கள் யெகோவாவின் ஊழியர் என்பதையும் இயேசுவின் சீஷர் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அதனால், சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். யெகோவா உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். சீக்கிரத்தில், புதியவர்களும் உங்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவார்கள்.—அப். 4:13-31; 5:27-42; பிலி. 1:27-30; 4:6, 7; 2 தீ. 4:16-18.
18 அப்போஸ்தலர்களையும் மற்றவர்களையும் போல நீங்களும் ஒருவேளை உயிருக்கே ஆபத்தான ஒரு சூழ்நிலையில் சிக்கிவிடலாம். அப்போது, “இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிற கடவுள்மேல்” நம்பிக்கையாக இருங்கள். (2 கொ. 1:8-10) அவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புவார் என்பதில் நீங்கள் விசுவாசம் வைக்கும்போது, எப்பேர்ப்பட்ட எதிர்ப்பையும் உங்களால் சகித்துக்கொள்ள முடியும். (லூக். 21:19) இயேசு கிறிஸ்து நமக்கு நல்ல முன்மாதிரி; தான் சோதனையைச் சகித்துக்கொண்டால் மற்றவர்களும் தன்னைப் பார்த்து சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொள்வார்கள் என்று அவர் புரிந்துவைத்திருந்தார். அதேபோல், உங்கள் சகிப்புத்தன்மையைப் பார்த்து மற்ற சகோதரர்களும் கற்றுக்கொள்ள முடியும்.—யோவா. 16:33; எபி. 12:2, 3; 1 பே. 2:21.
19 துன்புறுத்தலையும் எதிர்ப்பையும் தவிர, மற்ற பிரச்சினைகளையும் நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு, ஊழியத்தில் யாரும் ஆர்வம் காட்டாதபோது சிலர் சோர்ந்துபோய்விடுகிறார்கள். சிலர் உடல்நலப் பிரச்சினைகளையோ மனநலப் பிரச்சினைகளையோ பாவ இயல்பினால் வரும் பிரச்சினைகளையோ சகிக்க வேண்டியிருக்கிறது. அப்போஸ்தலன் பவுலும்கூட தன்னுடைய ஊழியத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஏதோவொரு விதமான பிரச்சினையைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது; சிலசமயங்களில் அது அவருக்குப் பெரிய சவாலாக இருந்தது. (2 கொ. 12:7) பிலிப்பியைச் சேர்ந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவரான எப்பாப்பிரோதீத்து, தான் ‘நோய்வாய்ப்பட்ட விஷயம் [தன் நண்பர்களுக்கு] தெரிந்துவிட்டதை நினைத்து மனச்சோர்வடைந்தார்.’ (பிலி. 2:25-27) சிலசமயங்களில், நம்முடைய பாவ இயல்பினாலும் மற்றவர்களுடைய பாவ இயல்பினாலும் ஏற்படும் பிரச்சினைகளைச் சகித்துக்கொள்வது ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். ஒருவேளை, சக கிறிஸ்தவர்களோடு அல்லது குடும்ப அங்கத்தினர்களோடு நம்மால் ஒத்துப்போக முடியாமல் இருக்கலாம். ஆனால், யெகோவாவின் வார்த்தையிலுள்ள அறிவுரைப்படி நடக்கிறவர்களால் அப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ளவும் தீர்த்துக்கொள்ளவும் முடியும்.—எசே. 2:3-5; 1 கொ. 9:27; 13:8; கொலோ. 3:12-14; 1 பே. 4:8.
உண்மையாக நிலைத்திருக்கத் தீர்மானமாக இருப்பது
20 சபையின் தலைவராக யெகோவாவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்துவை நாம் உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். (கொலோ. 2:18, 19) ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையோடும்’ கண்காணிகளாக நியமிக்கப்படுகிற சகோதரர்களோடும் நாம் ஒற்றுமையாகச் சேவை செய்ய வேண்டும். (எபி. 13:7, 17) அமைப்பின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியும்போதும், முன்நின்று வழிநடத்துகிறவர்களோடு ஒத்துழைக்கும்போதும் யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய நாம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்போம். கடவுளிடம் ஜெபம் செய்யும் பாக்கியத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறைக் கம்பிகளோ தனிச் சிறையோகூட நம் அன்பான பரலோகத் தகப்பனோடு நாம் பேசுவதைத் தடை செய்ய முடியாது, சக வணக்கத்தாரோடு நமக்கு இருக்கும் ஒற்றுமையைக் குலைத்துப்போடவும் முடியாது!
21 ஊழியத்தை விடாமல் செய்வதில் நாம் தீர்மானமாக இருக்க வேண்டும், அதில் சகித்திருக்க வேண்டும். ஏனென்றால், இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம், “நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று கட்டளையிட்டார். (மத். 28:19, 20) இயேசுவைப் போலவே நாமும் சகித்திருக்க வேண்டும். கடவுளுடைய அரசாங்கத்தில் நாம் முடிவில்லாமல் வாழ்வோம் என்ற நம்பிக்கையை எப்போதும் நம் கண்முன் நிறுத்த வேண்டும். (எபி. 12:2) நாம் ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்களாக இருப்பதால், ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தை’ பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறுவதில் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது. “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று அவர் சொன்னார். (மத். 24:3, 14) இந்த வேலையை நாம் இன்று முழுமூச்சோடு செய்தால், யெகோவாவின் நீதியான புதிய உலகத்தில் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வோம்!