யெகோவா உங்கள் கணக்கை ஏற்கத்தக்கதாகக் காண்பாராக
“என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை [“என் கணக்கில்,” NW] நினைத்தருளி, . . . என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.”—நெகேமியா 13:22, 31.
1. கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறவர்கள் யெகோவாவுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுக்க எது அவர்களுக்கு உதவுகிறது?
யெகோவாவின் ஊழியர்கள் அவருக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுப்பதற்குத் தேவையான எல்லா உதவியையும் உடையவர்களாய் இருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பின் பாகமாக அவருடன் ஒரு நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறார்கள். அவர் தம்முடைய நோக்கங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், மேலும் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக அவர்களுக்கு உதவியையும் ஆவிக்குரிய உட்பார்வையையும் அளித்திருக்கிறார். (சங்கீதம் 51:11; 119:105; 1 கொரிந்தியர் 2:10-13) இந்த விசேஷ சூழ்நிலைகளைக் கருதி, யெகோவாவின் பூமிக்குரிய ஊழியர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவருடைய பலத்தாலும் அவருடைய பரிசுத்த ஆவியின் உதவியாலும் அவர்கள் எதைச் செய்து முடிக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவர்கள் தங்களைப்பற்றி கணக்குக் கொடுக்கும்படிக்கு அவர் அன்பாகக் கேட்கிறார்.
2. (அ) எந்த வழிகளில் நெகேமியா தன்னைக் குறித்து கடவுளுக்கு ஒரு நல்ல கணக்கைக் கொடுத்தார்? (ஆ) தன்னுடைய பெயரைத்தாங்கிய பைபிள் புத்தகத்தை என்ன மன்றாட்டுடன் நெகேமியா நிறைவு செய்தார்?
2 கடவுளிடமாகத் தன்னைப் பற்றி ஒரு நல்ல கணக்கைக் கொடுத்த ஒருவர், பெர்சிய அரசனாகிய அர்தசஷ்டாவுக்கு (லான்ஜிமானஸ்) பானபாத்திரக்காரனாக இருந்த நெகேமியா ஆவார். (நெகேமியா 2:1) நெகேமியா யூதர்களின் அதிபதியாகி, எதிரிகள் மற்றும் ஆபத்துக்களின் மத்தியிலும் எருசலேமின் மதிலைத் திரும்பக் கட்டினார். உண்மை வணக்கத்திற்கான வைராக்கியத்துடன், அவர் கடவுளின் நியாயப்பிரமாணத்தை அமல்படுத்தி, ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கரிசனை காண்பித்தார். (நெகேமியா 5:14-19) லேவியர்கள் ஒழுங்காகத் தங்களைத்தாங்களே சுத்திகரித்துக்கொள்ளும்படியும், வாசல்களைக் காவல் காக்கும்படியும், ஓய்வு நாளைப் பரிசுத்தம் பண்ணும்படியும் நெகேமியா தூண்டுவித்தார். ஆகவே அவரால் இவ்வாறு ஜெபம் செய்ய முடிந்தது: “என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை [“என் கணக்கில்,” NW] நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.” பொருத்தமாகவே, நெகேமியா, கடவுளால் ஏவப்பட்ட அவருடைய புத்தகத்தை இந்த மன்றாட்டுடன் நிறைவுசெய்தார்: “என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.”—நெகேமியா 13:22, 31.
3. (அ) நல்லதைச் செய்யும் ஒருவரை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? (ஆ) நெகேமியாவின் போக்கைக் குறித்துச் சிந்தனை செய்வது நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்கும்படிச் செய்யும்?
3 நல்லதைச் செய்யும் ஒரு நபர், நற்குணமுள்ளவராகவும் மற்றவர்களுக்குப் பயனளிக்கத்தக்க நேர்மையான செயல்களைச் செய்பவராகவும் இருக்கிறார். நெகேமியா அப்படிப்பட்ட ஒரு மனிதன். அவர் கடவுளிடமாக மரியாதை கலந்த பக்திக்குரிய பயத்தையும் உண்மை வணக்கத்திற்காக அதிக வைராக்கியத்தையும் கொண்டிருந்தார். மேலுமாக, கடவுளுடைய சேவையிலுள்ள அவருடைய சிலாக்கியங்களுக்காக அவர் நன்றியுள்ளவராக இருந்து, தன்னைக் குறித்து யெகோவாவிடம் ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்தார். அவருடைய போக்கைக் குறித்துச் சிந்தனை செய்வது, நம்மைநாமேயும் இவ்வாறு கேட்டுக்கொள்ளும்படி தூண்டக்கூடும், ‘கடவுளால் கொடுக்கப்பட்ட சிலாக்கியங்களையும் பொறுப்புகளையும் நான் எவ்வாறு கருதுகிறேன்? யெகோவா தேவனிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் என்னைப்பற்றி எப்படிப்பட்ட கணக்கைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்?’
அறிவு நம்மை கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக ஆக்குகிறது
4. இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு என்ன கட்டளையைக் கொடுத்தார், மேலும் ‘நித்திய ஜீவனைப் பெறுவதற்கேற்ற சரியான மனச்சாய்வு உள்ளவர்கள்’ என்ன செய்தார்கள்?
4 இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) கற்பிப்பதன்மூலம் சீஷர்கள் உண்டாக்கப்பட வேண்டியதாக இருந்தது. அவ்வாறு கற்பிக்கப்பட்டவர்களும் ‘நித்திய ஜீவனைப் பெறுவதற்கேற்ற சரியான மனச்சாய்வுள்ளவர்களும்’ இயேசு செய்ததைப் போல முழுக்காட்டுதல் பெறுவார்கள். (அப்போஸ்தலர் 13:48, NW; மாற்கு 1:9-11) அவர் கட்டளையிட்ட எல்லா காரியங்களையும் கைக்கொள்வதற்கான அவர்களுடைய விருப்பம் இருதயத்திலிருந்து வரும். கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவை உட்கொண்டு அதைப் பொருத்துவதன் மூலமாக அவர்கள் ஒப்புக்கொடுத்தலைச் செய்யும் நிலையை அடைவார்கள்.—யோவான் 17:3.
5, 6. யாக்கோபு 4:17-ஐ நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? அதைப் பொருத்திப் பயன்படுத்தும் விதத்தை விளக்கவும்.
5 நம் வேதப்பூர்வ அறிவு எவ்வளவு ஆழமானதாக இருக்கிறதோ, நம் விசுவாசத்தின் அஸ்திவாரம் அவ்வளவு சிறந்ததாக இருக்கிறது. அதே நேரத்தில், நாம் கடவுளிடம் கணக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் அதிகரிக்கிறது. யாக்கோபு 4:17 சொல்கிறது: “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” முழுமையாகக் கடவுள்மீது சார்ந்திருப்பதற்குப் பதிலாக தற்பெருமையடிப்பதைப் பற்றி சற்றுமுன்னர் சீஷனாகிய யாக்கோபு என்ன சொல்லியிருந்தாரோ அதற்கு இந்தக் கூற்று தெளிவாகவே ஒரு முடிவுரையாக இருக்கிறது. நிலையான எதையும் யெகோவாவின் உதவியின்றி செய்து நிறைவேற்ற முடியாது என்பதை ஒருவர் அறிந்திருந்தும் அதற்கிசைவாக செயல்படவில்லை என்றால், இது ஒரு பாவம். ஆனால், செய்யப்பட வேண்டியவை செய்யாமல் விடப்படும் பாவங்களுக்கும் யாக்கோபின் வார்த்தைகள் பொருந்தலாம். உதாரணமாக, செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமையில், வெள்ளாடுகள், கெட்ட செயல்களைச் செய்ததற்காக அல்ல, ஆனால் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவி செய்யாமல் இருந்ததற்காகக் கண்டனம் செய்யப்பட்டனர்.—மத்தேயு 25:41-46.
6 யெகோவாவின் சாட்சிகள் பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்த ஒரு ஆள் குறைந்த அளவு ஆவிக்குரிய முன்னேற்றத்தையே செய்துகொண்டிருந்தார்; அவர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அறிந்திருந்தபோதிலும் அதை விடாமலிருந்ததே அதற்குக் காரணமாகத் தோன்றியது. யாக்கோபு 4:17-ஐ வாசிக்கும்படி ஒரு மூப்பர் அவரிடம் சொன்னார். இந்த வசனத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, அந்த மூப்பர் சொன்னார்: “நீங்கள் முழுக்காட்டப்படாதபோதிலும், நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டியவராக இருக்கிறீர்கள், ஆகவே உங்கள் தீர்மானத்தைக் குறித்து முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.” மகிழ்ச்சிக்குரியவிதத்தில், அந்த நபர் பிரதிபலித்தார், புகைபிடித்தலை நிறுத்தினார், யெகோவா தேவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக சீக்கிரத்தில் முழுக்காட்டுதலுக்குத் தகுதி பெற்றார்.
நம்முடைய ஊழியத்திற்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்
7. ‘தேவனை அறியும் அறிவிற்காக’ நம் நன்றியைக் காண்பிப்பதற்கான ஒரு வழி என்ன?
7 நம்முடைய படைப்பாளரைப் பிரியப்படுத்துவதே நம்முடைய இருதயப்பூர்வமான விருப்பமாக இருக்க வேண்டும். ‘தேவனை அறியும் அறிவிற்காக’ நம்முடைய நன்றியைக் காண்பிப்பதற்கான ஒரு வழி என்னவென்றால், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு சீஷர்களை உண்டுபண்ணுவதற்கான கட்டளையை நிறைவேற்றுவதாகும். கடவுளுக்கும் அயலானுக்கும் நம்முடைய அன்பைக் காட்டுவதற்கும் இது ஒரு வழியாக இருக்கிறது. (நீதிமொழிகள் 2:1-5; மத்தேயு 22:35-40) ஆம், கடவுளைப் பற்றிய நம் அறிவு நம்மை அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக வைக்கிறது; மேலும் நம் உடன் மானிடர்களை, சீஷர்களாகும் சாத்தியமுள்ளவர்களாக நாம் கருதுவது அவசியம்.
8. பவுல் தன்னுடைய ஊழியத்திற்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவராக உணர்ந்தார் என்று நாம் ஏன் சொல்லலாம்?
8 நற்செய்தியை முழு இருதயத்துடன் ஏற்றுக்கொள்வதும் அதற்குக் கீழ்ப்படிவதும் இரட்சிப்பில் விளைவடைகிறது என்றும், அதை ஏற்க மறுத்தல் அழிவைக் கொண்டு வரலாம் என்றும் அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தார். (2 தெசலோனிக்கேயர் 1:6-8) ஆகவே அவர் தன்னுடைய ஊழியத்திற்காக யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவராக உணர்ந்தார். உண்மையில், பவுலும் அவருடைய கூட்டாளிகளும் அந்தளவுக்கு தங்கள் ஊழியத்தை உயர்வாக மதித்ததால், அதிலிருந்து பொருளாதார லாபத்தைப் பெறுவதைப் போன்ற அபிப்பிராயத்தைக்கூட மக்களுக்கு கொடுத்துவிடுவதை ஜாக்கிரதையாகத் தவிர்த்தனர். மேலுமாக, இவ்வாறு சொல்லும்படி பவுலின் இருதயம் அவரை உந்துவித்தது: “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.”—1 கொரிந்தியர் 9:11-16.
9. என்ன முக்கியமான கடனை எல்லா கிறிஸ்தவர்களும் செலுத்தித் தீர்க்க வேண்டும்?
9 யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக நாம் இருப்பதால், ‘சுவிசேஷத்தை அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது.’ ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பது நம்முடைய பொறுப்பாக இருக்கிறது. நம்மைக் கடவுளுக்கு நாம் ஒப்புக்கொடுத்தபோது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். (லூக்கா 9:23, 24-ஐ ஒப்பிடுக.) மேலுமாக, நாம் செலுத்தித் தீர்க்கவேண்டிய கடன் ஒன்றிருக்கிறது. பவுல் சொன்னார்: “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.” (ரோமர் 1:14, 15) பவுல் ஒரு கடனாளியாக இருந்தார், ஏனென்றால், மக்கள் நற்செய்தியைக் கேட்டு இரட்சிக்கப்படும்படி பிரசங்கிப்பது தன்னுடைய கடமை என்று அவர் அறிந்திருந்தார். (1 தீமோத்தேயு 1:12-16; 2:3, 4) ஆகவே அவர் தன் பொறுப்பை நிறைவேற்றி உடன் மானிடரிடமான தன் கடனைச் செலுத்தித் தீர்ப்பதற்காக உழைத்தார். கிறிஸ்தவர்களாக, செலுத்தித் தீர்க்கவேண்டிய அப்படிப்பட்ட கடன் ஒன்று நமக்கும் இருக்கிறது. கடவுளுக்கும், அவருடைய குமாரனுக்கும், நம் அயலாருக்கும் அன்பை வெளிக்காட்டுவதற்கான ஒரு முக்கியமான வழியாகவும் ராஜ்ய பிரசங்க வேலை இருக்கிறது.—லூக்கா 10:25-28.
10. என்ன செய்வதன்மூலம் சிலர் தங்கள் ஊழியத்தை விரிவாக்கி இருக்கிறார்கள்?
10 கடவுளுக்கு ஏற்கத்தக்க கணக்கைக் கொடுப்பதற்கு ஒரு வழி என்னவென்றால், நம் ஊழியத்தை விரிவாக்குவதற்கு நம் திறமைகளைப் பயன்படுத்துவதாகும். உதாரணத்திற்கு: சமீப வருடங்களில் அநேக தேச தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்கு வருவதில் அதிகரிப்பு இருந்துவந்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களை நற்செய்தியுடன் சென்றெட்டுவதற்காக, 800-க்கும் அதிகமான பயனியர்களும் (முழு நேர ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள்) நூற்றுக்கணக்கான மற்ற சாட்சிகளும் வித்தியாசமான மொழிகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஊழியத்திற்கு ஒரு சிறந்த தூண்டுவிப்பில் இது விளைவடைந்திருக்கிறது. சீன மொழி வகுப்பு ஒன்றில் கற்பிக்கும் ஒரு பயனியர் சொன்னார்: “இந்த முறையில் சத்தியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காக, என்னுடைய மொழியை மற்ற சாட்சிகளுக்கு நான் எப்போதாவது கற்றுக்கொடுப்பேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அது அவ்வளவு திருப்திகரமாக இருக்கிறது!” இதுபோன்ற விதத்தில் உங்கள் ஊழியத்தை உங்களால் விரிவாக்க முடியுமா?
11. ஒரு கிறிஸ்தவர் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது என்ன விளைவடைந்தது?
11 நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்றுவதற்கு நம்மால் முடிந்ததைப் பெரும்பாலும் நம்மில் ஒவ்வொருவரும் செய்வோம். அதைப்போலவே, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாட்சி கொடுப்பதற்காகத் தங்கள் திறமைகளைப் பயன்படுத்துவதற்கு யெகோவாவின் ஊழியர்கள் ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பெண் சாட்சி, பேருந்தில் ஒரு பெண்ணின் அருகில் உட்கார்ந்தார்; அவரிடம் வேதவார்த்தைகளைப்பற்றி பேசினார். தான் கேட்டவற்றைக் குறித்துக் கிளர்ச்சி அடைந்தவராய் அந்தப் பெண் அநேக கேள்விகளைக் கேட்டார். அந்தச் சாட்சி, பேருந்தை விட்டு இறங்கப்போகும் சமயத்தில், அந்தப் பெண், தனக்கு இன்னும் அநேக கேள்விகள் இருந்ததால், அங்கு இறங்குவதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அந்தச் சாட்சியிடம் கெஞ்சிக்கேட்டார். அந்தச் சாட்சியும் ஒத்துக்கொண்டார். அதன் விளைவு? ஒரு பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது, ஆறு மாதங்கள் கழித்து அந்தப் பெண், முழுக்காட்டப்படாத ராஜ்ய பிரஸ்தாபி ஆனார். விரைவில் அவர் சொந்தமாக ஆறு வீட்டு பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தார். ஒருவருடைய திறமைகளை ராஜ்ய சேவையில் பயன்படுத்தியதற்காக என்னே ஒரு கிளர்ச்சியூட்டும் வெகுமதி!
12. ஊழியர்களாக நம் திறமைகள் எப்படி வெளி ஊழியத்தில் பயன்தரத்தக்க விதத்தில் உபயோகிக்கப்பட முடியும்?
12 நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற 192-பக்க புத்தகத்தைப் போன்ற பிரசுரங்களைப் பயன்படுத்துவதன்மூலம் ஊழியர்களாக நம் திறமைகள் பயன்தரத்தக்க விதத்தில் உபயோகிக்கப்படலாம். ஏப்ரல் 1996-ற்குள், அறிவு புத்தகம் 140-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரிக்கப்படுவதை யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் எழுத்து ஆலோசனைக்குழு அங்கீகரித்திருக்கிறது; மேலும் அந்தத் தேதிக்குள் அதன் 3,05,00,000 பிரதிகள் ஏற்கெனவே 111 மொழிகளில் அச்சிடப்பட்டிருந்தன. யெகோவாவிடம் ஒப்புக்கொடுத்தலைச் செய்து முழுக்காட்டுதலைப் பெறுவதற்கேதுவாக கடவுளுடைய வார்த்தையையும் அவருடைய நோக்கங்களையும்பற்றி போதுமானதைக் கற்றுக்கொள்ள பைபிள் மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. ஒரே மாணவருடன் அநேக வருடங்களுக்கு ராஜ்ய பிரஸ்தாபிகள் ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதால், அவர்கள் அநேகருடன் படிப்புகளை நடத்தலாம் அல்லது வீட்டுக்கு வீடு வேலையிலும் ஊழியத்தின் மற்ற வகைகளிலும் தங்கள் பங்கை அதிகரிக்கலாம். (அப்போஸ்தலர் 5:42; 20:20, 21) கடவுளிடம் கணக்குக் கொடுக்க வேண்டிய தங்கள் பொறுப்பை உணர்ந்தவர்களாய், கடவுளால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு அவர்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள். (எசேக்கியேல் 33:7-9) ஆனால் அவர்களுடைய பிரதான நோக்கம் என்னவென்றால், யெகோவாவைக் கனம்பண்ணுவதும், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறைக்கு இன்னும் இருக்கும் கொஞ்ச காலத்திற்குள் நற்செய்தியைப் பற்றி கற்றுக்கொள்ள முடிந்தளவு அதிகம் பேருக்கு உதவுவதுமே ஆகும்.
குடும்பங்களாக ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்தல்
13. கடவுள் பக்தியுள்ள குடும்பங்கள் ஏன் ஓர் ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்பைக் கொண்டிருக்க வேண்டும்?
13 உண்மைக் கிறிஸ்தவத்தைத் தழுவும் ஒவ்வொரு தனி நபரும் குடும்பமும் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்; ஆகையால் ‘முதிர்ச்சியை நோக்கி முன்னேறி,’ ‘விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய்’ ஆக வேண்டும். (எபிரெயர் 6:1-3, NW; 1 பேதுரு 5:8, 9) உதாரணமாக, அறிவு புத்தகத்தைப் படித்து, முழுக்காட்டுதல் பெற்றிருப்பவர்கள், ஒழுங்காகக் கூட்டங்களுக்கு ஆஜராவதன்மூலமும் பைபிளையும் மற்ற கிறிஸ்தவ பிரசுரங்களையும் வாசிப்பதன் மூலமும் தங்கள் வேதப்பூர்வ அறிவை முழுமைபெறச் செய்ய வேண்டும். கடவுள் பக்தியுள்ள குடும்பங்கள், ஒழுங்கான குடும்பப் படிப்பையும் கொண்டிருக்க வேண்டும்; ஏனென்றால், ‘விழித்திருந்து, விசுவாசத்தில் நிலைத்திருந்து, புருஷராயிருந்து, திடன்கொள்ளுவதற்கு’ அது ஒரு முக்கியமான வழியாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 16:13) நீங்கள் ஒரு குடும்பத்தலைவனாக இருந்தால், உங்கள் குடும்பம் ஆவிக்குரிய விதத்தில் நன்கு போஷிக்கப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதில் நீங்கள் விசேஷமாக கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஊட்டச்சத்துள்ள சரீரப்பிரகாரமான உணவு இயல்பான உடல்நலத்துக்கு உதவுவதுபோல, நீங்களும் உங்கள் குடும்பமும் “விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி” பேரளவாகவும் ஒழுங்காகவும் ஆவிக்குரிய உணவு தேவைப்படுகிறது.—தீத்து 1:13.
14. நன்கு போதிக்கப்பட்ட ஓர் இஸ்ரவேல பெண்ணால் கொடுக்கப்பட்ட சாட்சியிலிருந்து என்ன விளைவடைந்தது?
14 உங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் இருந்து, அவர்களுக்கு முழுநிறைவான ஆவிக்குரிய போதனையை நீங்கள் அளித்தால், கடவுள் உங்கள் கணக்கை ஏற்கத்தக்கதாகக் காண்பார். கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலிசாவின் நாட்களில் சீரியர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டதோர் இஸ்ரவேல சிறு பெண்ணுக்கு பயனளிப்பதாக இருந்ததுபோல அப்படிப்பட்ட போதனை அவர்களுக்கும் பயனளிக்கும். அந்தப் பெண், சீரிய படைத்தலைவனாகிய குஷ்டரோகமுள்ள நாகமானுடைய மனைவியின் பணிப்பெண்ணானாள். அவள் இளம் பெண்ணாக இருந்தபோதிலும், தன்னுடைய எஜமானியிடம் கூறினாள்: “என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்.” அவள் கொடுத்த சாட்சியின் காரணமாக, நாகமான் இஸ்ரவேலுக்குச் சென்றார்; யோர்தான் நதியில் ஏழு முறை ஸ்நானம் பண்ணவேண்டும் என்ற எலிசாவின் கட்டளைக்கு கடைசியாக இணங்கி, குஷ்டம் நீங்கி சுத்தமாக்கப்பட்டார். மேலுமாக, நாகமான் யெகோவாவை வணங்குகிறவரானார். அது அந்தச் சிறு பெண்ணுக்கு எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாக இருந்திருக்கும்!—2 இராஜாக்கள் 5:1-3, 13-19.
15. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த ஆவிக்குரிய பயிற்றுவிப்பைக் கொடுப்பது ஏன் முக்கியமானதாக இருக்கிறது? விளக்குங்கள்.
15 சாத்தானுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கும் ஒழுக்கத்தில் குறைவுபட்ட இந்த உலகில் கடவுள்-பயமுள்ள பிள்ளைகளை வளர்ப்பது சுலபமானதல்ல. (1 யோவான் 5:19) என்றாலும், தீமோத்தேயுவின் சிசு பருவம் முதற்கொண்டு, அவனுடைய பாட்டியாகிய லோவிசாளும் அவனுடைய தாயாகிய ஐனிக்கேயாளும், வேதவார்த்தைகளை அவனுக்கு வெற்றிகரமாகக் கற்பித்தனர். (2 தீமோத்தேயு 1:5; 3:14, 15) உங்கள் பிள்ளைகளுடன் பைபிளைப் படிப்பது, அவர்களைக் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஒழுங்காகக் கொண்டுசெல்வது, காலப்போக்கில் ஊழியத்தில் அவர்களை உங்களுடன் கொண்டுசெல்வது ஆகிய யாவும் பயிற்றுவிப்பு மாதிரியின் பாகமாக இருக்கின்றன; இவற்றைக் குறித்து நீங்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். தற்போது தன்னுடைய மத்திப-80களில் இருக்கும் வேல்சிலுள்ள ஒரு கிறிஸ்தவ பெண், 1920-களின் ஆரம்பத்தில், அடுத்த பள்ளத்தாக்கிலுள்ள கிராமவாசிகளுக்கு பைபிள் துண்டுப்பிரதிகளை விநியோகிப்பதற்காகத் தன் தந்தை ஒரு மலையின்மீதாக பத்து கிலோமீட்டர் (போகவர மொத்தமாக 20 கிலோமீட்டர்) நடந்தபோது தன்னையும் கொண்டுசென்றதை இப்போது நினைவுகூருகிறார். “அந்த நடைகளின்போதுதான் அப்பா என் உள்ளத்தில் சத்தியத்தைப் பதிய வைத்தார்,” என்று நன்றியுணர்வுடன் கூறுகிறார்.
மூப்பர்கள் ஒரு கணக்கைக் கொடுக்கிறார்கள்—எப்படி?
16, 17. (அ) பண்டைய இஸ்ரவேலில் ஆவிக்குரிய விதத்தில் முதிர்ந்த ஆண்களால் என்ன சிலாக்கியங்கள் அனுபவிக்கப்பட்டன? (ஆ) பண்டைய இஸ்ரவேலிலுள்ள நிலைமையுடன் ஒப்பிடுகையில், இன்று கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து ஏன் அதிகம் கேட்கப்படுகிறது?
16 “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்,” என்பதாக ஞானமுள்ள மனிதனாகிய சாலொமோன் சொன்னார். (நீதிமொழிகள் 16:31) ஆனால் கடவுளுடைய மக்களின் சபையில் பொறுப்பு வகிப்பதற்கு ஒருவரை ஆயத்தம் செய்வது அவருடைய சரீரப்பிரகாரமான வயது மட்டும் அல்ல. பண்டைய இஸ்ரவேலில் ஆவிக்குரிய விதத்தில் முதிர்ந்த ஆண்கள், நியாயம் வழங்குவதற்கும் சமாதானம், நல்ல ஒழுங்கு, மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வதற்கும் நியாயாதிபதிகளாகவும் அதிகாரிகளாகவும் சேவித்தனர். (உபாகமம் 16:18-20) கிறிஸ்தவ சபையைக் குறித்ததிலும் அதுவே உண்மையாக இருக்கிறபோதிலும், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு நெருங்குகையில் மூப்பர்களிடமிருந்து அதிகம் கேட்கப்படுகிறது. ஏன்?
17 இஸ்ரவேலர், கடவுள் பண்டைய எகிப்திலிருந்து விடுவித்த ‘தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாக’ இருந்தனர். அவர்கள் தங்களுடைய மத்தியஸ்தராகிய மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக்கொண்டபடியால், அவர்களுடைய சந்ததியார் ஓர் ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசத்திற்குள் பிறந்து, யெகோவாவின் கட்டளைகளை நன்கு அறிந்தவர்களாக இருந்தனர். (உபாகமம் 7:6, 11) என்றபோதிலும், இன்று எவரும் அப்படிப்பட்டதோர் ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசத்தாரில் ஒருவராகப் பிறப்பதில்லை; மேலும், ஒப்பிடுகையில் ஒருசிலரே, வேதப்பூர்வ சத்தியத்தை நன்கு அறிந்திருக்கிற கடவுள் பக்தியுள்ள குடும்பங்களில் வளர்க்கப்பட்டிருக்கின்றனர். விசேஷமாக, சமீபத்தில் ‘சத்தியத்தில் நடக்க’ தொடங்கியிருக்கிறவர்களுக்கு, வேதப்பூர்வ நியமங்களுக்கு இசைவாக எப்படி நடப்பது என்பதைக்குறித்து அறிவுரை தேவைப்படக்கூடும். (3 யோவான் 4) ஆகையால், உண்மையுள்ள மூப்பர்கள், ‘ஆரோக்கியமுள்ள வார்த்தைகளின் மாதிரியைப் பற்றிக்கொண்டு,’ யெகோவாவின் மக்களுக்கு உதவி வருகையில் எப்பேர்ப்பட்ட பொறுப்பு அவர்கள்மேல் இருக்கிறது!—2 தீமோத்தேயு 1:13, 14.
18. சபை மூப்பர்கள் என்ன வகையான உதவியை அளிக்க தயாராக இருக்க வேண்டும், ஏன்?
18 நடக்க கற்றுக்கொள்ளும் ஒரு சிறு பிள்ளை தடுமாறி விழுந்துவிடக்கூடும். அவன் பாதுகாப்பற்றவனாக உணர்கிறான்; பெற்றோரிடமிருந்து உதவியும் மீண்டும் உறுதியளிப்பும் அவனுக்குத் தேவைப்படுகிறது. இதேவிதமாகவே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு நபர் ஆவிக்குரியவிதத்தில் தடுமாறலாம் அல்லது விழுந்துவிடலாம். கடவுளுடைய பார்வையில் சரியானதை அல்லது நல்லதைச் செய்வதற்காகப் போராடுவதை அப்போஸ்தலன் பவுல்கூட அவசியமானதாகக் கண்டார். (ரோமர் 7:21-25) தவறு செய்திருந்து, ஆனால் உண்மையிலேயே மனந்திரும்புகிற கிறிஸ்தவர்களுக்கு கடவுளுடைய மந்தையின் மேய்ப்பர்கள் அன்பான உதவியை அளிப்பது அவசியம். பெரிய தவறு ஒன்றைச் செய்திருந்த ஒப்புக்கொடுத்த ஒரு பெண்ணை மூப்பர்கள் சந்திக்கச் சென்றபோது, அந்தப் பெண், ஒப்புக்கொடுத்த தன் கணவனின் முன்னிலையில் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் என்னை சபைநீக்கம் செய்துவிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்!” ஆனால் அந்தக் குடும்பத்தை ஆவிக்குரிய விதத்தில் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்று அறிய விரும்புவதாக அந்த மூப்பர்கள் சொன்னபோது அந்தப் பெண்ணுக்குக் கண்ணீர் பீறிட்டுக்கொண்டு வந்தது. மூப்பர்கள், தாங்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தவர்களாய், மனந்திரும்பிய உடன் விசுவாசிக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைந்தனர்.—எபிரெயர் 13:17.
தொடர்ந்து ஒரு சிறந்த கணக்கைக் கொடுங்கள்
19. நாம் எவ்வாறு தொடர்ந்து நம்மைக்குறித்து கடவுளுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்துக்கொண்டிருக்க முடியும்?
19 சபை மூப்பர்களும் கடவுளின் மற்ற எல்லா ஊழியர்களும் தொடர்ந்து தங்களைப்பற்றி யெகோவாவுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுப்பது அவசியம். கடவுளுடைய வார்த்தையை நிலையாகப் பற்றிக்கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்தால் இது சாத்தியமாகும். (நீதிமொழிகள் 3:5, 6; ரோமர் 12:1, 2, 9) விசேஷமாக விசுவாசத்தில் நம்முடன் தொடர்புடையவர்களுக்கு நன்மையானதைச் செய்ய நாம் விரும்புகிறோம். (கலாத்தியர் 6:10) என்றபோதிலும், அறுப்பு இன்னும் மிகுதியாகவே இருக்கிறது, வேலையாட்கள் கொஞ்சமாகவே இருக்கின்றனர். (மத்தேயு 9:37, 38) ஆகவே ராஜ்ய செய்தியை மற்றவர்களுக்கு ஊக்கமாக அறிவிப்பதன்மூலம் மற்றவர்களுக்கு நன்மையானவற்றைச் செய்வோமாக. நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றி, யெகோவாவின் சித்தத்தைச் செய்து, நற்செய்தியை உண்மையாக அறிவித்து வந்தால், யெகோவா நம்முடைய கணக்கை ஏற்கத்தக்கதாகக் காண்பார்.
20. நெகேமியாவின் போக்கைக் குறித்துச் சிந்திப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
20 ஆகவே நாம் எப்போதும் கர்த்தருடைய வேலையில் தொடர்ந்து செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருப்போமாக. (1 கொரிந்தியர் 15:58, NW) எருசலேமின் மதிலைத் திரும்பக் கட்டி, கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை அமல்படுத்தி, உண்மை வணக்கத்தை வைராக்கியமாக முன்னேற்றுவித்த நெகேமியாவைப் பற்றி சிந்திப்பது நமக்கு நலமானதாக இருக்கும். அவர் தான் செய்திருந்த நல்லவற்றிற்காக யெகோவா தேவன் அவரை நினைவுகூர வேண்டுமென ஜெபம் செய்தார். நீங்களும் யெகோவாவிடம் அந்தளவு பக்தியுள்ளவர்களாக நிரூபிப்பீர்களாக; மேலும் யெகோவா உங்கள் கணக்கை ஏற்கத்தக்கதாகக் காண்பாராக.
உங்கள் பதில்கள் என்ன?
◻ நெகேமியாவால் என்ன முன்மாதிரி வைக்கப்பட்டது?
◻ அறிவு ஏன் நம்மை கடவுளிடம் கணக்குக் கொடுக்கும் பொறுப்புள்ளவர்களாக ஆக்குகிறது?
◻ நம்முடைய ஊழியத்தில் நாம் எப்படி யெகோவாவுக்கு ஏற்கத்தக்க கணக்கைக் கொடுக்க முடியும்?
◻ கடவுளுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுப்பதற்காகக் குடும்பங்கள் என்ன செய்யலாம்?
◻ கிறிஸ்தவ மூப்பர்கள் எப்படி கணக்குக் கொடுக்கிறார்கள்?
[பக்கம் 18-ன் படங்கள்]
பவுலைப் போல, ராஜ்ய அறிவிப்பாளர்களாக நாம் கடவுளுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுக்க முடியும்
[பக்கம் 19-ன் படம்]
நாகமானின் வீட்டிலிருந்த சிறு இஸ்ரவேல பெண்ணைப் போல உங்கள் பிள்ளைகள் விசுவாசத்தில் பலமுள்ளவர்களாக இருக்கிறார்களா?