பகுதி 5—தெரிவுசெய்யும் சுயாதீனத்தின் மிகச்சிறந்த பரிசு
கடவுள் துன்பத்தை ஏன் அனுமதித்திருக்கிறார் மற்றும் அதைக் குறித்து அவர் என்ன செய்வார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, நம்மை அவர் எவ்வாறு உண்டாக்கினார் என்பதை மதித்துணருவது அவசியமாகும். வெறுமனே ஓர் உடலோடும் ஒரு மூளையோடும் நம்மைச் சிருஷ்டிப்பதைக் காட்டிலும் அவர் அதிகம் செய்தார். விசேஷமான மனது மற்றும் உணர்ச்சி சம்பந்தமான பண்புகளோடும்கூட அவர் நம்மைச் சிருஷ்டித்தார்.
2 நம்முடைய மனது மற்றும் உணர்ச்சி சம்பந்தமான உருவமைப்பின் முக்கிய பாகம் தெரிவுசெய்யும் சுயாதீனமாகும். ஆம், தெரிவுசெய்யும் சுதந்திர நாட்டத்தை கடவுள் நம்மில் ஊன்றச்செய்தார். அது உண்மையிலேயே அவரிடமிருந்து வந்த மிகச்சிறந்த பரிசாகும்.
நாம் எவ்விதமாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம்
3 கடவுள் துன்பத்தை அனுமதித்திருப்பதில் தெரிவுசெய்யும் சுயாதீனம் எவ்வாறு உட்பட்டிருக்கிறது என்பதை நாம் சிந்திக்கலாம். முதலாவதாக, இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் என்ன செய்வீர்கள் மற்றும் சொல்வீர்கள், நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள் மற்றும் உடுத்திக்கொள்வீர்கள், என்ன விதமான வேலையை நீங்கள் செய்வீர்கள், நீங்கள் எங்கே, எப்படி வாழ்வீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு உங்களுக்குச் சுயாதீனமிருப்பதை நீங்கள் போற்றுகிறீர்களா? அல்லது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உங்களின் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் எவரோ ஒருவர் உங்களுக்குக் கட்டளையிடுவதை நீங்கள் விரும்புவீர்களா?
4 இயல்பான நிலையிலுள்ள எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கை அவ்வளவு முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து எடுக்கப்படுவதை விரும்பமாட்டான். ஏன் மாட்டான்? கடவுள் நம்மை உண்டாக்கின விதத்தின் காரணமாக. கடவுள் மனிதனை தம்முடைய ‘சாயலிலும் ரூபத்தின்படியும்’ சிருஷ்டித்தார் என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. கடவுள்தாமே கொண்டிருக்கும் விசேஷித்த நாட்டங்களில் ஒன்று தெரிவுசெய்யும் சுயாதீனமாகும். (ஆதியாகமம் 1:26; உபாகமம் 7:6) அவர் மனிதர்களைச் சிருஷ்டித்தபோது, அவர் அதே மிகச்சிறந்த நாட்டத்தை அவர்களுக்குக் கொடுத்தார்—தெரிவுசெய்யும் சுயாதீனம் என்ற பரிசு. கொடுங்கோல் அரசர்களால் அடிமைப்படுத்தப்படுகையில் அது நமக்கு சோர்வூட்டுவதாக இருப்பதைக் காண்பதற்கு இது ஒரு காரணமாகும்.
5 ஆகவே சுயாதீனத்துக்கான விருப்பம் ஒரு விபத்தல்ல, ஏனென்றால் கடவுள் சுயாதீனத்தின் கடவுளாக இருக்கிறார். பைபிள் சொல்கிறது: “கர்த்தருடைய ஆவி எங்கயோ அங்கே விடுதலையுமுண்டு.” (2 கொரிந்தியர் 3:17) ஆகவே, கடவுள் தெரிவுசெய்யும் சுயாதீனத்தை உண்மையில் நம்முடைய உருவமைப்பின் ஒரு பாகமாகவே கொடுத்திருக்கிறார். நம்முடைய மனங்களும் உணர்ச்சிகளும் செயல்படும் வகையை அவர் அறிந்திருந்தபடியால், தெரிவுசெய்யும் சுயாதீனத்தோடு மாத்திரமே நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
6 தெரிவுசெய்யும் சுயாதீனத்தோடு இணைந்துசெல்ல, கடவுள் நமக்கு சிந்திக்கவும், காரியங்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும், தீர்மானங்களைச் செய்யவும், சரி தவறு ஆகியவற்றை அறிந்துகொள்ளவும் திறமையை கொடுத்திருக்கிறார். (எபிரெயர் 5:14) இவ்விதமாக, தெரிவுசெய்யும் சுயாதீனம் புத்திக்கூர்மையுள்ள தெரிவின்பேரில் சார்ந்திருக்க வேண்டியதாக இருந்தது. சொந்தமாக எந்த விருப்பத்தையும் கொண்டில்லாத மனதில்லாத இயந்திர மனிதர்களைப் போல நாம் உண்டாக்கப்பட்டில்லை. அல்லது விலங்குகளைப் போல இயல்புணர்ச்சியினால் செயல்படும்படியாகவும் நாம் சிருஷ்டிக்கப்படவில்லை. மாறாக, நம்முடைய மகத்தான மூளை தெரிவுசெய்யும் சுயாதீனத்திற்கிசைவாக வேலைசெய்யும்படி வடிவமைக்கப்பட்டது.
மிகச் சிறந்த ஆரம்பம்
7 கடவுள் எவ்வளவு அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதைக் காண்பிப்பதற்கு, தெரிவுசெய்யும் சுயாதீனப் பரிசோடுகூட நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் எவரும் நியாயமாக விரும்பக்கூடிய அனைத்துமே கொடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒரு பெரிய, பூங்காபோன்ற பரதீஸில் வைக்கப்பட்டார்கள். பொருள்சம்பந்தமாக ஏராளமானதை அவர்கள் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பரிபூரணமான மனங்களும் சரீரங்களும் இருந்தன. ஆகவே அவர்கள் முதுமை அடைந்து அல்லது வியாதிப்பட்டு அல்லது மரிக்கவேண்டியதாயிருக்கவில்லை—அவர்கள் என்றுமாக வாழ்ந்திருக்கலாம். அவர்கள் பரிபூரணமான பிள்ளைகளைக் கொண்டிருக்கலாம். இவர்களும்கூட ஒரு மகிழ்ச்சியான, நித்திய எதிர்காலத்தைக் கொண்டிருக்கலாம். விரிவாகிவரும் மக்கள்தொகை, கடைசியாக முழு பூமியையும் ஒரு பரதீஸாக மாற்றக்கூடிய மனநிறைவளிக்கும் வேலையை கொண்டிருந்திருப்பார்கள்.—ஆதியாகமம் 1:26-30; 2:15.
8 அளிக்கப்பட்டிருந்ததைக் குறித்து, பைபிள் சொல்கிறது: “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31) கடவுளைக் குறித்து பைபிள் பின்வருமாறும்கூட சொல்கிறது: “அவர் கிரியை உத்தமமானது.” (உபாகமம் 32:4) ஆம், சிருஷ்டிகர் மனித குடும்பத்துக்குப் பரிபூரணமான ஆரம்பத்தைக் கொடுத்தார். அதைவிட மேலானது இருந்திருக்க முடியாது. என்னே அக்கறையுள்ள கடவுளாக அவர் நிரூபித்தார்!
வரம்புக்குள்ளான சுயாதீனம்
9 என்றபோதிலும், தெரிவுசெய்யும் சுயாதீனம் வரம்புகள் இல்லாதிருக்க கடவுள் நோக்கங்கொண்டிருந்தாரா? அனைவரும் எந்தத் திசையிலும் எந்த வேகத்திலும் ஓட்டக்கூடிய போக்குவரத்து விதிகள் எதுவுமில்லாத சுறுசுறுப்பான நகரை கற்பனை செய்துபாருங்கள். அப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் நீங்கள் ஓட்டிச்செல்ல விரும்புவீர்களா? இல்லை, அது போக்குவரத்து குழப்பமாக, நிச்சயமாகவே பல விபத்துக்களில் விளைவடைவதாக இருக்கும்.
10 கடவுளுடைய பரிசாகிய தெரிவுசெய்யும் சுயாதீனமும்கூட அவ்விதமாகவே இருக்கிறது. வரம்பற்ற சுயாதீனம் சமுதாயத்தில் குழப்பத்தை அர்த்தப்படுத்தும். மனித செயல்நடவடிக்கைகளை வழிநடத்த சட்டங்கள் இருக்கவேண்டும். கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “சுயாதீனமுள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள், உங்கள் சுயாதீனத்தை பொல்லாப்புக்கு சாக்குப்போக்காக ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.” (1 பேதுரு 2:16, JB) தெரிவுசெய்யும் சுயாதீனம் பொதுநன்மைக்காக ஒழுங்குபடுத்தப்படுவதை கடவுள் விரும்புகிறார். முழுமையான சுயாதீனத்தை அல்ல, ஆனால் சட்டத்தின் விதிக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட சுயாதீனத்தை நாம் கொண்டிருக்கவே அவர் நோக்கங்கொண்டிருந்தார்.
யாருடைய சட்டங்கள்?
11 யாருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்? ஒன்று பேதுரு 2:16 (JB) வசனத்தின் மற்றொரு பகுதி சொல்கிறது: “நீங்கள் வேறு எவருக்குமன்றி தேவனுக்கே அடிமைகளாயிருக்கிறீர்கள்.” இது ஒடுக்குகின்ற அடிமைத்தனத்தை அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் மாறாக, கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கையில் நாம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. (மத்தேயு 22:35-40) மனிதர்களால் உருவாக்கப்பட்ட எந்தச் சட்டங்களையும்விட அவருடைய சட்டங்களே, மிகச்சிறந்த வழிகாட்டியாக செயலாற்றுகிறது: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் (யெகோவா, NW) நானே.”—ஏசாயா 48:17.
12 அதே சமயத்தில், கடவுளுடைய சட்டங்கள் அவற்றின் எல்லைக்குள்ளே, மிகுதியாக தெரிவுசெய்யும் சுயாதீனத்துக்கு இடமளிக்கிறது. இது வேறுபாடுகளில் விளைவடைந்து மனித குடும்பத்தைக் கவர்ச்சியுள்ளதாக்குகிறது. உலகம் முழுவதிலுமுள்ள வித்தியாசமான உணவுவகைகள், உடைகள், இசை, கலை, மற்றும் வீடுகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாகவே இப்படிப்பட்ட காரியங்களில் நமக்காக வேறொருவர் தீர்மானிப்பதற்கு பதிலாக நம்முடைய தெரிவை கொண்டிருக்கவே நாம் விரும்புகிறோம்.
13 இவ்விதமாக மனித நடத்தைக்கான கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கையில் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கும்படியே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். இது கடவுளுடைய இயற்பியல் சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதைப் போலவே இருக்கிறது. உதாரணமாக, ஈர்ப்பு சக்தி விதியை அசட்டைசெய்து ஓர் உயர்ந்த இடத்திலிருந்து குதிப்போமானால், நாம் காயமடைவோம் அல்லது கொல்லப்படுவோம். நம்முடைய சரீரத்தின் உட்புற சட்டங்களை அசட்டைசெய்து உணவு உண்பதை, தண்ணீர் குடிப்பதை அல்லது காற்றை சுவாசிப்பதை நாம் நிறுத்திவிடுவோமானால், நாம் மடிந்துபோவோம்.
14 கடவுளுடைய இயற்பியல் சட்டங்களுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டிய அவசியத்தோடு நாம் சிருஷ்டிக்கப்பட்டிருப்பது போலவே, கடவுளுடைய ஒழுக்க மற்றும் சமுதாய சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டிய அவசியத்தோடு நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். (மத்தேயு 4:4) மனிதர்கள் தங்களை உண்டுபண்ணினவர் மீது சார்ந்திராமல் வெற்றிகரமாயிருப்பதற்காக சிருஷ்டிக்கப்படவில்லை. எரேமியா தீர்க்கதரிசி சொல்கிறார்: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்று அறிவேன், யெகோவாவே என்னைத் திருத்தும்.” (எரேமியா 10:23, 24, NW) எல்லா வகையிலும் மனிதர்கள் தங்களுடைய சொந்த ஆட்சியின் கீழ் அல்ல, ஆனால் கடவுளுடைய ஆட்சியின் கீழ்தானே வாழும்படி சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
15 கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பது நம்முடைய முதல் பெற்றோருக்கு பாரமாயிருந்திருக்காது. மாறாக, அது அவர்களுடைய நலனுக்கும் முழு மனிதகுடும்பத்தின் நலனுக்குமே செயல்பட்டிருக்கும். முதல்ஜோடி கடவுளுடைய சட்டங்களின் வரம்புகளுக்குள் தங்கியிருந்திருப்பார்களேயானால் அனைத்துமே நலமாயிருந்திருக்கும். உண்மையில் நாம் இப்பொழுது அன்புள்ள, ஐக்கியப்பட்ட ஒரு மனிதகுடும்பமாக அதிசயமான இன்பமான ஒரு பரதீஸில் வாழ்ந்துகொண்டிருப்போம்! பொல்லாப்பும், துன்பமும், மரணமும் அங்கே இருந்திருக்காது.
[கேள்விகள்]
1, 2. என்ன மிகச்சிறந்த பரிசு நம்முடைய உருவமைப்பின் ஒரு பாகமாக இருக்கிறது?
3-5. தெரிவுசெய்யும் சுயாதீனத்தை நாம் ஏன் போற்றுகிறோம்?
6. கடவுள் எவ்விதமாக தெரிவுசெய்யும் சுயாதீனத்திற்கிசைவாக வேலைசெய்யும்படி நம்முடைய மூளையை சிருஷ்டித்தார்?
7, 8. கடவுள் நம்முடைய முதல் பெற்றோருக்கு என்ன நேர்த்தியான ஓர் ஆரம்பத்தைக்கொடுத்தார்?
9, 10. தெரிவுசெய்யும் சுயாதீனம் ஏன் சரிவர ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்?
11. யாருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படியாக நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்?
12. கடவுளுடைய சட்டங்களுக்கு உட்பட்டு தெரிவுசெய்யும் என்ன சுயாதீனம் நமக்கிருக்கிறது?
13. நம்முடைய சொந்த நன்மைக்காக என்ன இயற்பியல் சட்டங்களுக்கு நாம் கட்டாயமாக கீழ்ப்படியவேண்டும்?
14. மனிதர்கள் கடவுள்மீது சார்ந்திராமல் இருக்கும்படி சிருஷ்டிக்கப்படவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
15. கடவுளுடைய சட்டங்கள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பாரமாக இருந்திருக்குமா?
[பக்கம் 11-ன் படம்]
சிருஷ்டிகர் மனிதர்களுக்கு பரிபூரணமான ஓர் ஆரம்பத்தைக் கொடுத்தார்
[பக்கம் 12-ன் படம்]
போக்குவரத்து சட்டங்கள் இல்லையென்றால் போக்குவரத்து நெரிசலில் நீங்கள் ஓட்டிச்செல்ல விரும்புவீர்களா?