‘தற்காலிகக் குடிகளாக’ நடந்துகொள்ளுங்கள்
“அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாயிருக்கிற நீங்கள், . . . பாவ இச்சைகளிலிருந்து விலகியிருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.”—1 பே. 2:11.
1, 2. ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்’ என பேதுரு யாரைக் குறிப்பிட்டார்? அவர்களை ஏன் ‘தற்காலிகக் குடிகள்’ எனச் சொன்னார்?
இயேசு பரலோகத்திற்குச் சென்று சுமார் 30 வருடங்கள் கடந்துவிட்டிருந்த சமயம் அது. ‘பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய இடங்களுக்குச் சிதறிப்போய்த் தற்காலிகக் குடிகளாய் வாழ்கிறவர்களுக்கு’ அப்போஸ்தலன் பேதுரு கடிதம் எழுதினார். அவர்களை ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்’ என அவர் குறிப்பிட்டார். (1 பே. 1:1, 2) ஏனென்றால், தன்னைப் போலவே அவர்களும் கடவுளுடைய சக்தியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக ‘புதிய பிறப்பை’ பெற்றிருந்தார்கள். (1 பேதுரு 1:3, 4-ஐ வாசியுங்கள்.) பின்பு, அவர்களை ‘அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாயிருக்கிறவர்கள்’ என்று அவர் ஏன் குறிப்பிட்டார்? (1 பே. 2:11) இன்று சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவரும் யெகோவாவின் சாட்சிகளில், 650 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இருக்கும்போது, பேதுரு சொன்னதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
2 பரலோக நம்பிக்கையுள்ள முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை ‘தற்காலிகக் குடிகள்’ என்று சொன்னது பொருத்தமாய் இருந்தது. ஏனென்றால், அவர்கள் பூமியில் நிரந்தரமாகக் குடியிருக்கப் போவதில்லை. அந்த ‘சிறுமந்தையில்’ ஒருவரான அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய குடியுரிமை பரலோகத்தில் இருக்கிறது; அங்குள்ள எஜமானராகிய இயேசு கிறிஸ்து என்ற மீட்பருக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.” (லூக். 12:32; பிலி. 3:20) அவர்களுடைய “குடியுரிமை பரலோகத்தில்” இருப்பதால், இறந்த பிறகு பூமியைவிட்டு பரலோகத்திற்குச் சென்று சாவில்லாத மேன்மையான வாழ்வைப் பெறுவார்கள். (பிலிப்பியர் 1:21-23-ஐ வாசியுங்கள்.) இதனால்தான், சாத்தானின் ஆதிக்கத்திலிருக்கிற இந்தப் பூமியில் அவர்கள் ‘தற்காலிகக் குடிகளாய்’ இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
3. ‘வேறே ஆடுகளை’ பற்றி இப்போது என்ன கேள்வி எழும்புகிறது?
3 ‘வேறே ஆடுகளை’ பற்றி என்ன? (யோவா. 10:16) இவர்கள் பூமியில் நிரந்தரமாகக் குடியிருப்பார்கள் என பைபிள் சொல்கிறது, அல்லவா? ஆம், பூமி இவர்களுடைய நித்திய வீடாக இருக்கும். ஆனால், இப்போது இவர்களும் தற்காலிகக் குடிமக்களாகவே கருதப்படுகிறார்கள். என்ன அர்த்தத்தில்?
‘படைப்புகளெல்லாம் குமுறிக்கொண்டிருக்கிறது’
4. உலகத் தலைவர்களால் எதைத் தடுக்க முடியாது?
4 இந்தப் பொல்லாத உலகம் அனுமதிக்கப்படும் வரையில், கிறிஸ்தவர்கள் உட்பட எல்லோருமே யெகோவாவுக்கு எதிராகச் சாத்தான் செய்த கலகத்தின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். “நாம் அறிந்திருக்கிறபடி, இதுவரை படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று ரோமர் 8:22-ல் வாசிக்கிறோம். உலகத் தலைவர்கள், விஞ்ஞானிகள், மனிதாபிமானிகள் எந்தளவு நேர்மையானவர்களாய் இருந்தாலும் இதையெல்லாம் அவர்களால் தடுக்க முடியாது.
5. லட்சக்கணக்கானோர் 1914 முதற்கொண்டு என்ன படியை எடுத்திருக்கிறார்கள், ஏன்?
5 லட்சக்கணக்கானோர் 1914 முதற்கொண்டு, கடவுள் அரியணையேற்றிய கிறிஸ்து இயேசுவின் குடிமக்களாய் இருக்க முழுமனதாய்த் தீர்மானித்திருக்கிறார்கள். சாத்தானுடைய உலகின் பாகமாயிருக்க அவர்கள் துளியும் விரும்புவதில்லை. அவனுடைய உலகிற்கு ஆதரவளிப்பதுமில்லை. மாறாக, தங்களையும் தங்கள் சொத்துக்களையும் கடவுளுடைய அரசாங்கத்துக்காகவும் அதோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.—ரோ. 14:7, 8.
6. யெகோவாவின் சாட்சிகள் என்ன அர்த்தத்தில் அந்நியராய் இருக்கிறார்கள்?
6 ஆம், 200-க்கும் மேலான நாடுகளில் வாழ்கிற யெகோவாவின் சாட்சிகள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்; அதே சமயத்தில், அந்நியர்களைப் போல வாழ்கிறார்கள். அரசியல், சமுதாய விஷயங்களில் எப்போதும் நடுநிலை வகிக்கிறார்கள். இப்போதே புதிய உலகின் குடிமக்களாக இருப்பதுபோல் உணருகிறார்கள். சீரழிந்த இந்த உலகில் தற்காலிகக் குடிமக்களாய் வாழும் காலம் சீக்கிரத்தில் முடிவுக்கு வரப்போவதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.
7. கடவுளுடைய ஊழியர்கள் எப்படி பூமியின் நிரந்தர குடிமக்களாக ஆவார்கள்?
7 சீக்கிரத்தில், கிறிஸ்து தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாத்தானுடைய பொல்லாத உலகத்தை அழித்துவிடுவார். கிறிஸ்துவின் அரசாங்கம் பூமியிலிருந்து பாவத்தையும் துயரத்தையும் அறவே நீக்கிவிடும். யெகோவாவின் உன்னத பேரரசாட்சிக்கு எதிராகக் கலகம் செய்யும் எவரையும் அது அகற்றிவிடும். கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் பூஞ்சோலை பூமியின் நிரந்தர குடிமக்களாக ஆவார்கள். (வெளிப்படுத்துதல் 21:1-5-ஐ வாசியுங்கள்.) அப்போது, ‘படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும்.’—ரோ. 8:21.
உண்மைக் கிறிஸ்தவர்களிடம் எதிர்பார்க்கப்படுவது
8, 9. ‘பாவ இச்சைகளிலிருந்து விலகியிருங்கள்’ என பேதுரு சொன்னதன் அர்த்தத்தை விளக்குங்கள்.
8 கிறிஸ்தவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை பேதுரு விளக்குகிறார்: “அன்பானவர்களே, இந்த உலகில் அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாயிருக்கிற நீங்கள், உங்களுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருக்கிற பாவ இச்சைகளிலிருந்து விலகியிருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.” (1 பே. 2:11) இது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையாக இருந்தாலும் இயேசுவின் வேறே ஆடுகளுக்கும் பொருந்துகிறது.
9 நம்முடைய சில விருப்பங்களை கடவுளுடைய கட்டளைக்கு இசைவாகத் திருப்தி செய்துகொள்வதில் தவறில்லை. சொல்லப்போனால், அவை நம் வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கின்றன. உதாரணத்திற்கு, அறுசுவை உணவை உண்பது, குடிப்பது, புத்துணர்வளிக்கும் விஷயங்களில் ஈடுபடுவது, நண்பர்களோடு சந்தோஷமாய் நேரம் செலவிடுவது போன்றவற்றை எல்லோருமே விரும்புவார்கள். மணத்துணைகள் தாம்பத்திய உறவில் இன்பம் காண்பதும் இயல்பானதே. (1 கொ. 7:3-5) ஆனால், ‘உங்களுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருக்கிற பாவ இச்சைகள்’ என பேதுரு குறிப்பிடுவதைக் கவனியுங்கள். அப்படியானால், யெகோவாவின் நோக்கத்திற்கும் அவரோடுள்ள நல்லுறவுக்கும் பங்கம் விளைவிக்கிற இச்சைகளை அதாவது விருப்பங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.
10. கிறிஸ்தவர்களைத் தன்னுடைய உலகின் பாகமாக ஆக்குவதற்கு சாத்தான் என்ன கண்ணிகளை வைக்கிறான்?
10 இந்த உலகத்தில் ‘தற்காலிகக் குடிகளாய்’ தங்களைக் கருத வேண்டுமென்று உண்மைக் கிறிஸ்தவர்கள் எடுத்த தீர்மானத்தைக் குலைத்துப் போடுவதே சாத்தானின் நோக்கம். பணம்-பொருளுக்கான கவர்ச்சி, ஒழுக்கக்கேட்டிற்கான வசீகரம், பேர்-புகழுக்கான பேராசை, “நான்” என்ற தற்பெருமை, தேசப்பற்று இவை யாவும் சாத்தான் வைக்கும் கண்ணிகள். இவற்றை அடையாளம் கண்டுகொள்வது அவசியம். இந்தப் பாவ இச்சைகளை முற்றிலுமாய் விட்டொழிக்கும்போது, நாம் சாத்தானுடைய உலகத்தின் பாகமாக இருக்க விரும்பவில்லை என்றும் அதில் தற்காலிகமாகவே வாழ்கிறோம் என்றும் தெளிவாகக் காட்டுகிறோம். நீதி குடிகொள்ளும் புதிய பூமியில் நிரந்தர குடிமக்களாய் வாழவே நாம் உண்மையில் விரும்புகிறோம், அதற்காகவே பாடுபடுகிறோம்.
நன்னடத்தையில்
11, 12. அந்நியர்களாக வாழ்வோரை சில சமயங்களில் மற்றவர்கள் எப்படிக் கருதுகிறார்கள், ஆனால் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி என்ன சொல்லலாம்?
11 ‘தற்காலிகக் குடிகளான’ கிறிஸ்தவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை 12-ஆம் வசனத்தில் பேதுரு தொடர்ந்து சொல்கிறார்: “உலகத்தார் மத்தியில் எப்போதும் நன்னடத்தை உள்ளவர்களாக இருங்கள்; அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று சொன்னாலும், உங்களுடைய நற்செயல்களைக் கண்ணாரக் கண்டு, கடவுள் பரீட்சிக்கிற நாளில் அவரை மகிமைப்படுத்துவார்கள்.” வேறு நாட்டில் அந்நியர்களாக, தற்காலிகக் குடிமக்களாக வாழ்பவர்களை சில சமயங்களில் அந்நாட்டவர் குறை சொல்லலாம். அவர்களுடைய பேச்சு, செயல், உடை, தோற்றம்கூட வித்தியாசமாக இருப்பதால், அவர்களை மோசமான ஆட்களாகக் கருதலாம். ஆனால், அவர்கள் செய்கிற நற்காரியங்களைப் பார்க்கும்போது, அதாவது அவர்களுடைய நன்னடத்தையைப் பார்க்கும்போது அவர்களைப் பற்றிய தவறான கருத்துகள் எல்லாம் அடிபட்டு போய்விடும்.
12 பேசுவதிலும் பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் உண்மை கிறிஸ்தவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்களுடைய உடையும் தோற்றமுமே அவர்களைத் தனியாகக் காட்டிவிடுகிறது. அவர்களைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டவர்கள் இந்த வித்தியாசங்களை எல்லாம் பார்த்து அவர்களைத் தீயவர்கள் எனப் பழித்துப் பேசுகிறார்கள். அதே சமயத்தில், அவர்கள் வாழும் விதத்தைப் பார்த்து மெச்சுவோரும் உண்டு.
13, 14. ‘ஒருவருடைய நீதியான செயல்கள் அவரை ஞானமுள்ளவர் என நிரூபிப்பது’ எப்படி? உதாரணம் கொடுங்கள்.
13 ஆம், நன்னடத்தை தவறான கருத்துகளை முறியடித்துவிடுகிறது. கடவுளுக்கு உண்மையோடு இருப்பதில் மணிமகுடமாய்த் திகழ்ந்த இயேசுவைப் பற்றிக்கூட மக்கள் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னார்கள். சிலர் அவரை “பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்றெல்லாம் சொன்னார்கள். ஆனாலும், கடவுளுடைய சேவையில் அவர் ஞானமாக நடந்துகொண்ட விதம் இந்தப் பழிப்பேச்சையெல்லாம் பொய் என நிரூபித்தது. “ஒருவருடைய நீதியான செயல்கள் அவரை ஞானமுள்ளவர் என்று நிரூபிக்கும்” என்று அவர் சொன்னார். (மத். 11:19) இன்றும் இதுவே உண்மை. உதாரணத்திற்கு, ஜெர்மனியில் செல்ட்டர்ஸிலுள்ள பெத்தேல் ஊழியர்களை சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள். ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த மேயர் பெத்தேல் ஊழியர்களுக்கு ஆதரவாக இவ்வாறு சொன்னார்: “அங்கு வேலை செய்கிறவர்களுடைய வாழ்க்கை வித்தியாசமானதுதான். ஆனால், சுற்றுவட்டாரத்தில் இருக்கிற மக்களுக்கு அவர்கள் எந்தத் தொல்லையும் கொடுக்கிறதில்லை.”
14 இதேபோல், ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் வாழும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் நடந்தது. சில விஷயங்களில் அவர்கள் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். பிறகு, ஜூன் 2010-ல் பிரான்சில் ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு கூறியது: “வழிபாடு, கூட்டங்கள் சம்பந்தமாக மனுதாரருக்கு இருக்கும் சுதந்திரத்தில் [மாஸ்கோ] தலையிட்டது நியாயமற்றது. மனுதாரரின் மதம் குற்றமுள்ளது என்பதை நிரூபிக்க உள்ளூர் நீதிமன்றங்கள் ‘பொருத்தமான, போதிய’ சான்றுகளைத் தரவில்லை.” உதாரணத்திற்கு, குடும்பங்களைப் பிரிக்கிறது, தற்கொலையை ஊக்குவிக்கிறது, அல்லது மருத்துவ சிகிச்சையை மறுக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகளைத் தரவில்லை. ஆகவே “நல்ல நோக்கத்தோடு வழங்கப்பட்டிருந்தாலும் சரி குடியுரிமை சட்டத்திலுள்ள வரம்புகளை வைத்துப் பார்த்தாலும் சரி உள்ளூர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு நேர்மாறானது, மிகக் கடுமையானது.”
கட்டுப்பட்டு நடப்பதில்
15. உலகெங்குமுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் என்ன பைபிள் நியமத்தைப் பின்பற்றுகிறார்கள்?
15 மாஸ்கோவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் பேதுரு குறிப்பிட்ட மற்றொரு விஷயத்திற்கும் கீழ்ப்படிகிறார்கள். “அதிகாரத்திலுள்ள எல்லாருக்கும் எஜமானரின் பொருட்டு கட்டுப்பட்டு நடங்கள்: உயர்ந்த ஸ்தானத்திலுள்ள ராஜாவாக இருந்தாலும் சரி . . . ஆளுநராக இருந்தாலும் சரி, கட்டுப்பட்டு நடங்கள்” என்று அவர் எழுதினார். (1 பே. 2:13, 14) பவுலும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதன்படி, உண்மைக் கிறிஸ்தவர்கள் இந்தப் பொல்லாத உலகின் பாகமாக இல்லாதிருந்தாலும், கடவுளுக்கு ‘கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கிற’ அரசாங்க அதிகாரிகளுக்கு மனதார கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.—ரோமர் 13:1, 5-7-ஐ வாசியுங்கள்.
16, 17. (அ) நாம் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் அல்ல என்பதை எது நிரூபிக்கிறது? (ஆ) அரசியல் தலைவர்கள் சிலர் எதை ஒப்புக்கொள்கிறார்கள்?
16 இந்த உலகில் ‘தற்காலிகக் குடிகளாக’ வாழ்கிற யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுவதுமில்லை, மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதுமில்லை. சில மதத்தவரைப் போல அரசியலில் தலையிடுவதில்லை, ‘இப்படிச் செய்யுங்கள்,’ ‘அப்படிச் செய்யுங்கள்’ என அரசாங்க அதிகாரிகளுக்குக் கட்டளையிடுவதுமில்லை. யெகோவாவின் சாட்சிகள் சமுதாய ஒழுங்கைக் குலைப்பவர்கள் அல்லது அரசாங்கத்துக்கு உலைவைப்பவர்கள் என்பதெல்லாம் சுத்தப் பொய்!
17 “ராஜாவுக்கு மதிப்புக் கொடுங்கள்” என்ற பேதுருவின் ஆலோசனைக்கு இசைவாக, உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மதிப்பு மரியாதை கொடுக்கிறார்கள். (1 பே. 2:17) யெகோவாவின் சாட்சிகளைக் குற்றப்படுத்துவதற்கு தகுந்த காரணம் எதுவுமில்லை என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ப்ரான்டன்பர்க் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரவையைச் சேர்ந்தவரும் பின்னர் ஜெர்மன் சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவருமான ஸ்டெஃபான் ரைக்கா சொன்னார்: “நாசி துன்புறுத்தலின்போது சிறையில் அடைக்கப்பட்ட “யெகோவாவின் சாட்சிகள் முகாம்களிலும் சிறைகளிலும் நன்னெறிகளைக் கடைப்பிடித்தார்கள். உதாரணத்திற்கு, நாசி படையினருக்கு முன் அவர்கள் நிலைதடுமாறாமல் உறுதியுடன் நின்றது, சக கைதிகளிடம் பரிவுடன் நடந்துகொண்டது எல்லாம் இன்று ஒரு நாட்டின் அரசாங்கம் நீடித்திருப்பதற்கு அத்தியாவசியம். வெளிநாட்டவருக்கும் அரசியலில் அல்லது கொள்கைகளில் கருத்து வேறுபாடு உள்ளவர்களுக்கும் எதிராகச் செய்யப்படும் கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்த நன்னெறிகளைக் கடைப்பிடிப்பது முக்கியம்.”
அன்பு காட்டுவதில்
18. (அ) நாம் ஏன் சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுகிறோம்? (ஆ) சாட்சிகளல்லாத சிலர் எதை கவனித்திருக்கிறார்கள்?
18 “சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்; கடவுளுக்குப் பயந்திருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பே. 2:17) கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற நியாயமான பயம் யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கிறது. இதனால் அவருடைய சித்தத்தைச் செய்ய அவர்கள் ஊக்கம் பெறுகிறார்கள். உலகெங்கும் இதே ஆர்வத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்கிற சகோதர சகோதரிகளோடு இணைந்திருப்பதில் அவர்கள் அகமகிழ்கிறார்கள். அதனால்தான், ‘சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுகிறார்கள்.’ சுயநலம் பிடித்த மக்கள் மத்தியில் மருந்துக்குக்கூட கிடைக்காத இந்தச் சகோதர அன்பைப் பார்த்து சாட்சிகளல்லாதவர்கள் சில சமயங்களில் வியந்துபோகிறார்கள். உதாரணத்திற்கு, 2009-ல் ஜெர்மனியில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டவரிடம் யெகோவாவின் சாட்சிகள் காட்டிய பாசத்தையும் செய்த உதவியையும் பார்த்து அமெரிக்க ட்ராவல் ஏஜென்ஸியில் பணிபுரியும் சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டி ஒருவர் அசந்துபோனார். தன்னுடைய இத்தனை வருட பணிக் காலத்தில் இதுபோன்ற அன்பைப் பார்த்ததே இல்லை என அந்தப் பெண்மணி சொன்னார். பிற்பாடு, ஒரு சகோதரர் சொன்னார்: “அந்தப் பெண்மணி எங்களைப் பார்த்து வியந்துபோய், உற்சாகம்பொங்க பாராட்டினார்.” இதேபோல், மாநாட்டில் சாட்சிகளைக் கண்டு வியந்துபோனவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
19. எதைச் செய்ய நீங்கள் திடத்தீர்மானமாக இருக்கிறீர்கள், ஏன்?
19 இதுவரை பார்த்த எல்லா விஷயங்களிலும் யெகோவாவின் சாட்சிகள் சாத்தானுடைய இந்த உலகில் தங்களை ‘தற்காலிகக் குடிகளாக’ நிரூபித்துவருகிறார்கள். தொடர்ந்து அவ்வாறு நிலைத்திருக்க அவர்கள் முழு தீர்மானமாய் இருக்கிறார்கள். நீதி நிலவும் புதிய உலகில் நிரந்தர குடிமக்களாக ஆகப்போவதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் அதை ஆவலோடு எதிர்பார்க்கிறீர்களா?