நீங்கள் கடவுளுடைய ‘அளவற்ற கருணையைப் பெற்ற நிர்வாகியா’?
“சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள் [“கனிவான பாசத்தைக் காட்டுங்கள்,” NW]; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.”—ரோ. 12:10.
1. பைபிள் நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது?
சோர்வாயிருக்கையில் அல்லது மனமுடைந்திருக்கையில் நமக்கு யெகோவா உதவிக்கரம் நீட்டுவாரென பைபிள் திரும்பத் திரும்ப உறுதியளிக்கிறது. உதாரணத்திற்கு, ஆறுதலளிக்கும் இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட [அதாவது, தொய்ந்துபோயிருக்கிற] யாவரையும் தூக்கிவிடுகிறார்.” “இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.” (சங். 145:14; 147:3) அதுமட்டுமல்ல, நம் பரலோகத் தகப்பனே இவ்வாறு கூறுகிறார்: “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.”—ஏசா. 41:13.
2. யெகோவா எப்படி நமக்கு ஆதரவளிக்கிறார்?
2 மனித கண்களுக்குப் புலப்படாத இடமாகிய பரலோகத்தில் வாழும் யெகோவா, எப்படி நம் ‘கையைப் பிடிக்கிறார்’? மனவேதனையால் ‘தொய்ந்துபோயிருக்கிற யாவரையும்’ அவர் எப்படி ‘தூக்கிவிடுகிறார்’? இதுபோன்ற ஆதரவை யெகோவா தேவன் நமக்கு பல விதங்களில் அளிக்கிறார். உதாரணத்திற்கு, அவர் தம்முடைய சக்தியின் மூலம் ‘இயல்புக்கு மிஞ்சிய பலத்தை’ அளிக்கிறார். (2 கொ. 4:7, NW; யோவா. 14:16, 17) வல்லமையுள்ள தமது வார்த்தையான பைபிளின் மூலமும் தம்முடைய ஊழியர்களுக்குப் பலத்தைப் அளிக்கிறார். (எபி. 4:12) வேறு ஏதாவது விதத்திலும் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறாரா? இதற்கான பதிலை பேதுரு எழுதிய முதல் கடிதத்தில் பார்க்கலாம்.
கடவுளுடைய ‘அளவற்ற கருணை பலவிதங்களில்’ காட்டப்படுகிறது
3. (அ) சோதனைகளைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு என்ன சொன்னார்? (ஆ) பேதுரு எழுதிய முதல் கடிதத்தின் பிற்பகுதியில் எதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது?
3 பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் தங்களுக்குக் கிடைக்கப்போகிற மாபெரும் வெகுமதியை எண்ணி சந்தோஷமாய் இருக்கலாமென அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். “என்றாலும், துன்பப்பட வேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்” என்றும் அவர் எழுதினார். (1 பே. 1:1–6) ‘பலவிதமான’ என்று பேதுரு குறிப்பிட்டதைக் கவனியுங்கள். சோதனைகள் பலவிதங்களில் வருமென இது காட்டுகிறது. ஆனாலும், இப்படிப்பட்ட பலவிதமான சோதனைகளைத் தங்களால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் தன் சகோதரர்களை பேதுரு விட்டுவிடவில்லை. மாறாக, எப்படிப்பட்ட சோதனைகளைச் சந்தித்தாலும் சரி அவை ஒவ்வொன்றையும் சமாளிக்க யெகோவா பலத்தைத் தருவார் என்பதில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடு இருக்கலாமென பேதுரு சுட்டிக்காட்டினார். இதை பேதுரு தன் கடிதத்தின் பிற்பகுதியில், “எல்லாவற்றிற்கும் முடிவு” வரப்போவது சம்பந்தமாக பேசுகையில் குறிப்பிட்டார்.—1 பே. 4:7.
4. ஒன்று பேதுரு 4:10-லுள்ள வார்த்தைகள் நமக்கு ஏன் ஆறுதலை அளிக்கின்றன?
4 “பலவிதங்களில் வெளிக்காட்டப்படுகிற கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற்றிருக்கும் நீங்கள் அதன் சிறந்த நிர்வாகிகளாக இருக்கிறீர்கள்; ஆகவே, அவரவர் பெற்ற வரத்திற்கு ஏற்றபடி, அந்த வரத்தை ஒருவருக்கொருவர் சேவை செய்யப் பயன்படுத்துங்கள்” என்று பேதுரு சொன்னார். (1 பே. 4:10, NW) ‘பலவிதம்’ என்ற வார்த்தையை பேதுரு மீண்டும் பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள். ‘சோதனைகள் பல்வேறு விதங்களில் வந்தாலும் கடவுளுடைய அளவற்ற கருணையும் பல்வேறு விதங்களில் காட்டப்படுகிறது’ என்றே பேதுரு அர்த்தப்படுத்தினார். இது ஏன் நமக்கு ஆறுதலை அளிக்கிறது? நமக்கு வரும் சோதனை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதற்கு ஈடுகட்டும் விதத்தில் கடவுளுடைய அளவற்ற கருணையும் எப்போதும் வெளிக்காட்டப்படுகிறது. ஆனால், அந்த அளவற்ற கருணை எவ்விதத்தில் நமக்கு வெளிக்காட்டப்படுகிறதென பேதுரு குறிப்பிட்டதைக் கவனித்தீர்களா? சக கிறிஸ்தவர்கள் மூலமாக அது வெளிக்காட்டப்படுகிறது.
‘ஒருவருக்கொருவர் சேவை செய்யுங்கள்’
5. (அ) ஒவ்வொரு கிறிஸ்தவரும் என்ன செய்ய வேண்டும்? (ஆ) என்ன கேள்விகள் எழும்புகின்றன?
5 “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என்று கிறிஸ்தவ சபையிலுள்ள அனைவருக்கும் பேதுரு சொன்னார்; அதன் பிறகு, “அவரவர் பெற்ற வரத்திற்கு ஏற்றபடி, அந்த வரத்தை ஒருவருக்கொருவர் சேவை செய்யப் பயன்படுத்துங்கள்” என்றும் சொன்னார். (1 பே. 4:8, 10; NW) எனவே, சபையிலுள்ள ஒவ்வொருவரும் சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். யெகோவாவுக்குச் சொந்தமான மதிப்புமிக்க ஒன்று நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது; அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அப்படியானால், நம்மிடம் என்ன ஒப்படைக்கப்பட்டிருக்கிறது? அதை ஒரு ‘வரம்’ என்று பேதுரு குறிப்பிட்டார். அது என்ன வரம்? அதை நாம் ‘ஒருவருக்கொருவர் சேவை செய்ய’ எப்படிப் பயன்படுத்தலாம்?
6. கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சில வரங்கள் யாவை?
6 ‘நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகிறது’ என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (யாக். 1:17) சொல்லப்போனால், யெகோவா தம்முடைய ஜனங்களுக்குக் கொடுத்திருக்கிற எல்லா வரங்களும் அவருடைய அளவற்ற கருணையின் வெளிக்காட்டுகளாக இருக்கின்றன. யெகோவா அளிக்கும் ஒரு சிறந்த வரம் அவருடைய சக்தி. இந்த வரம் அன்பு, நல்மனம், சாந்தம் போன்ற தெய்வீக குணங்களை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகிறது. இந்தக் குணங்கள் சக கிறிஸ்தவர்களிடம் உள்ளப்பூர்வமான பாசத்தைக் காட்டவும் அவர்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளிக்கவும் நம்மைத் தூண்டுகின்றன. மெய் ஞானமும் அறிவும்கூட, கடவுளுடைய சக்தியின் உதவியினால் நாம் பெற்றுக்கொள்கிற நல்ல வரங்களாகும். (1 கொ. 2:10–16; கலா. 5:22, 23) உண்மையில், நம்முடைய சக்தி, ஆற்றல், திறமை ஆகிய அனைத்தையும் நம் பரலோகத் தகப்பனுக்குப் புகழையும் மகிமையையும் சேர்க்க உதவும் வரங்களாகக் கருதலாம். நம்முடைய திறமைகளையும் குணங்களையும் சக கிறிஸ்தவர்களுக்காகப் பயன்படுத்தும் பொறுப்பைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார்; அப்படிப் பயன்படுத்தும்போது அவை கடவுளுடைய அளவற்ற கருணையின் வெளிக்காட்டுகளாக இருக்கும்.
‘சேவை செய்யப் பயன்படுத்துவது’ எப்படி?
7. (அ) “ஏற்றபடி” என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?
7 நாம் பெற்றிருக்கும் வரங்களைப் பற்றி பேதுரு இவ்வாறும் குறிப்பிட்டார்: “அவரவர் பெற்ற வரத்திற்கு ஏற்றபடி, அந்த வரத்தை . . . பயன்படுத்துங்கள்.” வரத்திற்கு “ஏற்றபடி” என இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது, குணங்களும் திறமைகளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்திலும் அளவிலும் இருக்கும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. நாம் என்ன வரத்தைப் பெற்றிருந்தாலும் ‘அந்த வரத்தை ஒருவருக்கொருவர் சேவை செய்யப் பயன்படுத்த’ வேண்டுமென நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. சொல்லப்போனால், “சிறந்த நிர்வாகிகளாக . . . அந்த வரத்தை . . . பயன்படுத்துங்கள்” என நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வரங்களை என்னுடைய சக கிறிஸ்தவர்களைப் பலப்படுத்துவதற்காகப் பயன்படுத்துகிறேனா?’ (1 தீமோத்தேயு 5:9, 10-ஐ ஒப்பிடுங்கள்.) ‘அல்லது, யெகோவாவிடமிருந்து நான் பெற்ற திறமைகளை என் சுயநலத்திற்காகவே பயன்படுத்துகிறேனா? ஒருவேளை பணம் சம்பாதிக்கவோ அந்தஸ்து பெறவோ அவற்றைப் பயன்படுத்துகிறேனா?’ (1 கொ. 4:7) நாம் பெற்றிருக்கிற வரங்களை ‘ஒருவருக்கொருவர் சேவை செய்ய’ பயன்படுத்தினால் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவோம்.—நீதி. 19:17; எபிரெயர் 13:16-ஐ வாசியுங்கள்.
8, 9. (அ) சக கிறிஸ்தவர்களுக்காக உலகெங்குமுள்ள சகோதர சகோதரிகள் சேவை செய்யும் சில வழிகள் என்ன? (ஆ) உங்கள் சபையிலுள்ள சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவி செய்கிறார்கள்?
8 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பல விதங்களில் ஒருவருக்கொருவர் சேவை செய்ததாக பைபிள் குறிப்பிடுகிறது. (ரோமர் 15:25, 26-ஐயும் 2 தீமோத்தேயு 1:16–18-ஐயும் வாசியுங்கள்.) அவ்வாறே இன்றும், உண்மைக் கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் வரத்தை சக கிறிஸ்தவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்ற கட்டளைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிகிறார்கள். அவர்கள் அதைச் செய்யும் சில வழிகளைக் கவனியுங்கள்.
9 அநேக சகோதரர்கள் கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் பல மணிநேரங்களைச் செலவழிக்கிறார்கள். பைபிள் படிப்பின்போது தாங்கள் கற்றுக்கொண்ட முத்தான விஷயங்களைக் கூட்டங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்; அவர்களுடைய ஞானம் பொதிந்த வார்த்தைகள், சோதனைகளைச் சகிக்க சபையார் அனைவரையும் தூண்டுகின்றன. (1 தீ. 5:17) சக கிறிஸ்தவர்களிடம் அன்பையும் பாசத்தையும் காட்டுவதில் பேர்போன சகோதர சகோதரிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். (ரோ. 12:15) மனச்சோர்வினால் திடனற்றுப்போனவர்களைச் சிலர் தவறாமல் சந்தித்து, அவர்களுடன் சேர்ந்து ஜெபம் செய்கிறார்கள். (1 தெ. 5:14) இன்னும் சிலர், கஷ்டத்தில் தவிக்கிற சக கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலளிக்கும் வார்த்தைகளை நேரமெடுத்து எழுதி அனுப்புகிறார்கள். மற்றவர்களோ, உடல்நலக் குறைவினால் அவதிப்படுகிறவர்களை அன்போடு கூட்டங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஆயிரக்கணக்கானோர், நிவாரணப் பணியில் ஈடுபட்டு, சக கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறார்கள்; பேரழிவால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுக்கிறார்கள். அக்கறையுள்ள இந்தச் சகோதர சகோதரிகள் காட்டுகிற பாசமும் செய்கிற உதவியும் கடவுளுடைய ‘அளவற்ற கருணையின் பலவிதமான’ வெளிக்காட்டுகளாக இருக்கின்றன.—1 பேதுரு 4:11-ஐ வாசியுங்கள்.
எது முக்கியமானது?
10. (அ) கடவுளுக்குச் செய்யும் சேவையில் உட்பட்டிருக்கும் எந்த இரண்டு அம்சங்களுக்கு பவுல் கவனம் செலுத்தினார்? (ஆ) இன்று நாம் எப்படி பவுலைப் பின்பற்றலாம்?
10 சக கிறிஸ்தவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டிய வரம் மட்டுமல்ல, சக மனிதரிடம் சொல்ல வேண்டிய செய்தியும் கடவுளுடைய ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யெகோவாவுக்குச் செய்யும் சேவையில் இந்த இரண்டு அம்சங்களும் உட்பட்டிருப்பதை அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தார். எபேசுவிலிருந்த சபையாருக்கு எழுதுகையில், ‘அவர்களுடைய நன்மைக்காகக் கடவுளின் அளவற்ற கருணையினால் தனக்கு நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்டதை’ பற்றி அவர் குறிப்பிட்டார். (எபே. 3:2, NW) அதே சமயத்தில், ‘சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்று எண்ணினார்’ என்றும் குறிப்பிட்டார். (1 தெ. 2:4) பவுலைப் போல நாமும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை உணருகிறோம். பிரசங்க வேலையை நாம் பக்திவைராக்கியத்துடன் செய்வதன் மூலம், நற்செய்தியை அயராமல் அறிவித்த பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். (அப். 20:20, 21; 1 கொ. 11:1) நற்செய்தியைப் பிரசங்கிப்பது அநேகருடைய உயிரைப் பாதுகாக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதே சமயத்தில், பவுலைப் போலவே நாமும், சக கிறிஸ்தவர்களுக்கு ‘ஆவிக்குரிய சில வரங்களைக் கொடுக்க’ வாய்ப்புகளைத் தேடுகிறோம்.—ரோமர் 1:10, 11-ஐயும் 10:13–15-ஐயும் வாசியுங்கள்.
11. நற்செய்தியைப் பிரசங்கிப்பதையும் சக கிறிஸ்தவர்களுக்கு உதவுவதையும் நாம் எப்படிக் கருத வேண்டும்?
11 இந்த இரண்டு அம்சங்களில் எது முக்கியமானது? இப்படிக் கேட்பது, பறவையின் இரண்டு இறக்கைகளில் எது முக்கியமானது என கேட்பதுபோல் இருக்கிறது. இதற்கான பதில் நன்கு தெரிந்ததே. ஒரு பறவை நன்றாகப் பறப்பதற்கு இரண்டு இறக்கைகளுமே தேவை. அதுபோல, நாம் சிறந்த கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு இந்த இரண்டு அம்சங்களிலுமே ஈடுபடுவது அவசியம். ஆகவே, நற்செய்தியைப் பிரசங்கிப்பதையும் சக கிறிஸ்தவர்களுக்கு உதவுவதையும் இரண்டு தனித்தனிப் பொறுப்புகளாகக் கருதாமல், அப்போஸ்தலராகிய பேதுருவையும் பவுலையும் போல, இவற்றை ஒன்றோடொன்று இணைந்து செல்லும் பொறுப்புகளாக நாம் கருதுகிறோம். எவ்விதத்தில்?
12. நாம் எவ்வாறு யெகோவாவால் பயன்படுத்தப்படுகிறோம்?
12 நற்செய்தியை அறிவிப்பவர்களாகிய நாம், நம்மிடமுள்ள அனைத்து திறமைகளையும் வரங்களையும் பயன்படுத்தி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நம்பிக்கையூட்டும் செய்தியைச் சக மனிதருடைய இருதயத்தைத் தொடும் விதத்தில் சொல்கிறோம். இவ்விதத்தில், அவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு உதவ முடியுமென நம்புகிறோம். அதே சமயத்தில், கடவுளுடைய அளவற்ற கருணையின் வெளிக்காட்டாக, மனதுக்கு தெம்பளிக்கும் வார்த்தைகளைச் சொல்லியும் தேவையான உதவிகளைச் செய்தும் சக கிறிஸ்தவர்களின் உள்ளத்தை உற்சாகப்படுத்துகிறோம். (நீதி. 3:27; 12:25) இவ்விதத்தில், அவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக நிலைத்திருப்பதற்கு உதவ முடியுமென நம்புகிறோம். மக்களுக்குப் பிரசங்கிப்பது, ‘ஒருவருக்கொருவர் சேவை செய்வது’ ஆகிய இரண்டு அம்சங்களிலும் ஈடுபடும்போது நாம் யெகோவாவால் பயன்படுத்தப்படுகிறோம். இது நமக்கு கிடைத்த அரும்பெரும் பாக்கியமல்லவா?—கலா. 6:10.
“கனிவான பாசத்தைக் காட்டுங்கள்”
13. நாம் “ஒருவருக்கொருவர் சேவை” செய்யாமலிருந்தால் என்ன நடக்கும்?
13 “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள் [“கனிவான பாசத்தைக் காட்டுங்கள்,” NW]; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என்று பவுல் தன் சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். (ரோ. 12:10) சகோதரர்கள்மீது நமக்கிருக்கும் பாசத்தால், கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற்ற நிர்வாகிகளாக மனப்பூர்வமாய்ச் சேவை செய்ய நாம் தூண்டப்படுகிறோம். ‘ஒருவருக்கொருவர் சேவை செய்வதை’ தடுக்க சாத்தானுக்கு இடமளித்துவிட்டால் அவன் நம் ஒற்றுமையைக் குலைத்துவிடுவான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (கொலோ. 3:14) இப்படி நம் ஒற்றுமை குலைந்துவிட்டால் பிரசங்க வேலையில் நம் ஆர்வமும் தணிந்துவிடும். நம்முடைய ‘இறக்கைகளில்’ ஒன்றை ஒடித்துவிட்டாலே போதும் நம்மை வீழ்த்திவிடலாம் என்பதை சாத்தான் நன்கு அறிந்திருக்கிறான்.
14. ‘ஒருவருக்கொருவர் சேவை செய்வதால்’ யார் நன்மை அடைகிறார்கள்? ஓர் உதாரணம் கொடுங்கள்.
14 ‘ஒருவருக்கொருவர் சேவை செய்வதால்,’ கடவுளுடைய அளவற்ற கருணை யாருக்குக் காட்டப்படுகிறதோ அவர் மட்டுமல்ல, யார் மூலமாகக் காட்டப்படுகிறதோ அவரும் நன்மை அடைகிறார். (நீதி. 11:25) அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸில் வசிக்கும் ரையன், ரோனி தம்பதியரை எடுத்துக்கொள்ளுங்கள். கட்ரீனா சூறாவளி நூற்றுக்கணக்கான சக கிறிஸ்தவர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கியபோது, சகோதரர்கள் மீதுள்ள அன்பினால் அவர்கள் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு, வீட்டை விற்றுவிட்டு, ஒரு பழைய குடியிருப்பு வண்டியை வாங்கி, அதைச் சரிசெய்து, 1,400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லூயிஸியானாவிற்குச் சென்றார்கள். ஒரு வருஷத்திற்கும் மேல் அங்கு தங்கி சகோதரர்களுக்காகத் தங்களுடைய நேரத்தையும், சக்தியையும், வளங்களையும் செலவழித்தார்கள். 29 வயது ரையன் இவ்வாறு சொல்கிறார்: “நிவாரண வேலையில் ஈடுபட்டது என்னைக் கடவுளிடம் இன்னும் நெருங்கி வரச் செய்தது. யெகோவா எந்தளவுக்குத் தம் ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை நான் கண்ணாரக் கண்டேன். வயதில் மூத்த சகோதரர்களோடு சேர்ந்து வேலை செய்தபோது, சக கிறிஸ்தவர்களை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். எங்களைப் போன்ற இளம் சகோதர சகோதரிகளுக்கு யெகோவாவின் அமைப்பில் அநேக வேலைகள் இருப்பதையும் தெரிந்துகொண்டேன்.” 25 வயது ரோனி இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்களுக்கு உதவி செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என் வாழ்க்கையிலே இதுவரை இப்படிப்பட்ட சந்தோஷத்தை நான் கண்டதில்லை. இதில் கிடைத்த அனுபவம் எதிர்காலத்திலும் எனக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”
15. கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற்ற நிர்வாகிகளாகத் தொடர்ந்து சேவை செய்ய என்னென்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன?
15 கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நற்செய்தியைப் பிரசங்கிப்பதாலும் சக கிறிஸ்தவர்களுக்கு உதவுவதாலும் எல்லாருமே பயனடைகிறார்கள். நாம் யாருக்கு உதவுகிறோமோ அவர்கள் ஆன்மீக ரீதியில் பலப்படுத்தப்படுகிறார்கள்; அதே சமயத்தில் நாமும், கொடுப்பதால் மட்டுமே கிடைக்கிற உள்ளப்பூர்வமான சந்தோஷத்தைப் பெறுகிறோம். (அப். 20:35, NW) சபையிலுள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்டும்போது, சபை முழுவதும் அன்பில் தழைத்தோங்குகிறது. அதோடு, நாம் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் காட்டுவது நாம் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என இயேசு சொன்னார். (யோவா. 13:35) மிக முக்கியமாக, அக்கறையுள்ள நம் தந்தையாகிய யெகோவாவின் விருப்பத்தை, அதாவது தேவையிலுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற விருப்பத்தை, அவருடைய பூமிக்குரிய ஊழியர்களும் காட்டும்போது அவருக்கு மகிமை சேருகிறது. ஆகவே, ‘அளவற்ற கருணையைப் பெற்ற சிறந்த நிர்வாகிகளாக ஒருவருக்கொருவர் சேவை செய்ய’ நம் வரங்களைப் பயன்படுத்துவதற்கு எத்தனை நல்ல காரணங்கள்! நீங்கள் அதைத் தொடர்ந்து செய்வீர்களா?—எபிரெயர் 6:10-ஐ வாசியுங்கள்.
சிந்திப்பதற்கு
• யெகோவா என்ன வழிகளில் தம் ஊழியர்களைப் பலப்படுத்துகிறார்?
• நம்மிடம் என்ன ஒப்படைக்கப்பட்டிருக்கிறது?
• என்ன சில வழிகளில் நம் சக கிறிஸ்தவர்களுக்குச் சேவை செய்யலாம்?
• “ஒருவருக்கொருவர் சேவை செய்ய” நம் வரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு எது நம்மைத் தூண்டும்?
[பக்கம் 13-ன் படம்]
உங்கள் ‘வரங்களை’ மற்றவர்களுக்குச் சேவை செய்யப் பயன்படுத்துகிறீர்களா அல்லது உங்கள் சந்தோஷத்திற்காகப் பயன்படுத்துகிறீர்களா?
[பக்கம் 15-ன் படம்]
நாம் மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கிறோம், சக கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறோம்
[பக்கம் 16-ன் படம்]
நிவாரணப் பணியில் ஈடுபடுகிறவர்களின் தியாக மனப்பான்மை பாராட்டுக்குரியது