“தொடர்ந்து என்னைப் பின்பற்றக்கடவன்”
“இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.”—1 பேதுரு 2:21.
1, 2. போதகராக இயேசு வைத்த பரிபூரண முன்மாதிரி நம்மால் பின்பற்ற முடியாதளவு உயர்ந்ததல்ல என்று ஏன் சொல்லலாம்?
பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்தவர்களுள் மிகப் பெரிய போதகர் இயேசு கிறிஸ்துதான். அதுமட்டுமா, அவர் பரிபூரணராக இருந்தார், மனிதனாக வாழ்ந்த காலம் முழுவதும் பாவம் செய்யவேயில்லை. (1 பேதுரு 2:22) அப்படியென்றால், போதகராக இயேசு வைத்த முன்மாதிரி, அபூரணராகிய நம்மால் பின்பற்ற முடியாதளவு மிக உயர்ந்தது என்று அர்த்தமா? இல்லவே இல்லை.
2 முந்தைய கட்டுரையில் பார்த்தபடி, அன்பே இயேசுவுடைய போதனையின் அடிப்படை அம்சமாகும். அது நம் அனைவராலும் வளர்க்க முடிந்த குணமும்கூட. மற்றவர்களை அதிகதிகமாக நேசிக்கவும், அதில் முன்னேறவும் வேண்டுமென கடவுளுடைய வார்த்தை நம்மை அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது. (பிலிப்பியர் 1:9; கொலோசெயர் 3:14) தமது சிருஷ்டிகளால் செய்ய முடியாதவற்றை செய்யும்படி யெகோவா ஒருபோதும் கேட்பதில்லை. உண்மையில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதாலும் நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதாலும் அன்புகாட்டும்படி நம்மை படைத்திருக்கிறார் என்று சொல்வது சரியானது. (1 யோவான் 4:8; ஆதியாகமம் 1:27) ஆகவே, இக்கட்டுரைக்கு அடிப்படையாக அமைந்துள்ள வசனத்தில் காணப்படும் அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகளை வாசிக்கையில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நம்மால் கவனமாக பின்பற்ற முடியும். “தொடர்ந்து என்னைப் பின்பற்றக்கடவன்” என்ற இயேசுவின் கட்டளைக்கு நம்மால் கீழ்ப்படிய முடியும். (லூக்கா 9:23, NW) ஆகவே, முதலில் தாம் போதித்த சத்தியங்களிடமும் அடுத்து தாம் போதித்த மக்களிடமும் அன்பு காட்டிய கிறிஸ்துவை நாம் எப்படி பின்பற்றலாம் என்பதை சிந்திப்போமாக.
கற்றுக்கொள்ளும் சத்தியங்களிடம் அன்பை வளர்த்தல்
3. படிப்பது சிலருக்கு ஏன் கடினமாயிருக்கிறது, ஆனால் நீதிமொழிகள் 2:1-5-ல் என்ன அறிவுரை உள்ளது?
3 மற்றவர்களுக்கு போதிக்கும் சத்தியங்களை நேசிப்பதற்கு அவற்றை கற்றுக்கொள்ள முதலில் நமக்கு விருப்பம் வேண்டும். இன்றைய உலகில் அப்படிப்பட்ட விருப்பத்தை வளர்ப்பது சுலபமல்ல. போதிய கல்வி கற்காததாலும், இளம் வயதில் மோசமான பழக்கங்களுக்கு அடிமையானதாலும் அநேகர் படிப்பதை துளியும் விரும்புவதில்லை. என்றாலும், நாம் யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்” என்று நீதிமொழிகள் 2:1-5 கூறுகிறது.
4.இருதயத்தை “அமையப்பண்ணு” என்பது எதை அர்த்தப்படுத்துகிறது, என்ன நோக்குநிலை அவ்வாறு செய்ய நமக்கு உதவும்?
4 “ஏற்றுக் கொண்டு” ‘பத்திரப்படுத்த’ மாத்திரமல்ல ‘நாடவும்’ ‘தேடவும்’ முயற்சி தேவை என்று 1 முதல் 4 வசனங்கள் திரும்பத் திரும்ப உற்சாகப்படுத்துவதை கவனியுங்கள். என்றாலும், இந்த அனைத்தையும் செய்ய எது நம்மை தூண்டுவிக்கும்? “இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணு” என்ற சொற்றொடரை கவனியுங்கள். இந்தப் புத்திமதி, “கவனம் செலுத்த விடுக்கும் அழைப்பு மட்டுமல்ல; போதனையை ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும் என்ற கோரிக்கை ஆகும்” என்று ஒரு புத்தகம் கூறுகிறது. யெகோவா நமக்கு போதிப்பதை ஆர்வத்தோடு கற்கவும், ஏற்றுக்கொள்ளவும் நம்மை தூண்டுவது எது? நமது நோக்குநிலையே. “தேவனை அறியும் அறிவை” நாம் “வெள்ளியை” போலவும் “புதையல்களை” போலவும் கருத வேண்டும்.
5, 6. (அ) காலப்போக்கில் என்ன நேரிடலாம், அதை எவ்வாறு தவிர்க்கலாம்? (ஆ) பைபிளிலிருந்து தோண்டியெடுத்த அறிவு என்ற பொக்கிஷத்தை ஏன் தொடர்ந்து பெருக செய்ய வேண்டும்?
5 அப்படிப்பட்ட நோக்குநிலையை வளர்ப்பது கடினமல்ல. உதாரணமாக, நீங்கள் பெற்ற ‘தேவனை அறியும் அறிவில்,’ உண்மையுள்ள மனிதவர்க்கம் பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழ்வதே யெகோவாவின் நோக்கம் என்ற சத்தியமும் அடங்கியிருக்கலாம். (சங்கீதம் 37:28, 29) அந்தச் சத்தியத்தை நீங்கள் முதன்முதலாக கற்றறிந்தபோது அதை உண்மையில் பொக்கிஷமாக போற்றியிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை; அப்போது அந்த அறிவு உங்கள் மனதையும் இருதயத்தையும் நம்பிக்கையாலும் சந்தோஷத்தாலும் நிரப்பியது. இப்போது நிலைமை என்ன? காலம் செல்லச் செல்ல அந்தப் பொக்கிஷத்திடம் போற்றுதல் குறைந்துவிட்டதா? அப்படியென்றால், இரண்டு காரியங்களை செய்ய முயலுங்கள். முதலாவது, உங்கள் போற்றுதலை புதுப்பியுங்கள். அதாவது, யெகோவா உங்களுக்கு கற்பித்த ஒவ்வொரு சத்தியத்தையும்—பல வருடங்கள் முன்பு கற்றுக்கொண்ட சத்தியங்களையும்கூட—போற்றுவதற்கான காரணத்தை உங்களுக்கு நீங்களே அடிக்கடி நினைப்பூட்டிக் கொள்ளுங்கள்.
6 இரண்டாவது, உங்கள் பொக்கிஷத்தை தொடர்ந்து பெருக செய்யுங்கள். விலைமதிப்புள்ள ஒரு இரத்தினக் கல்லை தற்செயலாக தோண்டி எடுத்தால் அது போதுமென உங்கள் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு திருப்தியோடு சென்றுவிடுவீர்களா? அல்லது இன்னும் அதிகம் கிடைக்குமா என்று பார்க்க தொடர்ந்து தோண்டுவீர்களா? கடவுளுடைய வார்த்தையில் சத்தியம் என்ற ஏராளமான இரத்தினக் கற்களும் வெள்ளிக் கட்டிகளும் புதைந்து கிடக்கின்றன. நீங்கள் ஏராளமானதை கண்டுபிடித்திருந்தால்கூட இன்னும் கிடைக்க வாய்ப்புண்டு. (ரோமர் 11:33) சத்தியத்தின் ஒரு வெள்ளிக் கட்டியை தோண்டி எடுக்கையில் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இதை ஒரு பொக்கிஷமாக்குவது எது? யெகோவாவின் குணங்களை அல்லது நோக்கங்களைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள இது எனக்கு உதவுகிறதா? இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற உதவும் சில நடைமுறையான வழிநடத்துதலை இது கொடுக்கிறதா?’ இப்படிப்பட்ட கேள்விகளைக் குறித்து தியானிப்பது, யெகோவா கற்பித்திருக்கும் சத்தியங்கள் மேல் அன்பை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவும்.
நாம் போதிக்கும் சத்தியங்களை நேசித்தல்
7, 8. பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களை நாம் நேசிப்பதை மற்றவர்களுக்கு காட்டும் சில வழிகள் யாவை? ஓர் உதாரணம் கொடுங்கள்.
7 மற்றவர்களுக்கு போதிக்கையில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களை நேசிப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்? இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றும் நாம், பிரசங்கிக்கையிலும் போதிக்கையிலும் பைபிள் மீதே முழுமையாக சார்ந்திருக்கிறோம். சமீப காலங்களில், பொது ஊழியத்தில் பைபிளை அதிகமாக உபயோகிக்கும்படி உலகம் முழுவதிலும் உள்ள கடவுளுடைய மக்களுக்கு உற்சாகமளிக்கப்பட்டுள்ளது. அப்படி உபயோகிக்கையில் பைபிளிலிருந்து சத்தியங்களை பகிர்ந்துகொள்வதை நீங்களே மதிப்பதை வீட்டுக்காரருக்கு புரிய வைக்க வழிகளை தேடுங்கள்.—மத்தேயு 13:52.
8 உதாரணமாக, கடந்த வருடம் நியூ யார்க் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஒரு கிறிஸ்தவ சகோதரி ஊழியத்தில் சந்தித்தவர்களிடம் சங்கீதம் 46:1, 11-ஐ வாசித்து காண்பித்தார். அந்தப் பேராபத்திற்கு பிறகு எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்று முதலாவது கேட்டார். அவர்கள் கூறிய பதிலை கவனமாக கேட்டு அதை ஆமோதித்த பிறகு, “இந்தக் கஷ்ட காலத்தில் எனக்கு பெரும் ஆறுதலாயிருந்த பைபிள் வசனம் ஒன்றை உங்களுக்கு வாசித்து காட்டட்டுமா?” என்று கேட்டார். வேண்டாம் என்று சொன்னவர்கள் வெகு சிலரே; இவை அநேக அருமையான உரையாடல்களுக்கு வழிவகுத்தன. இளைஞரோடு பேசும்போது அதே சகோதரி அடிக்கடி இவ்வாறு கூறுகிறார்: “கடந்த 50 வருடங்களாக பைபிளை போதித்து வருகிறேன். இந்தப் புத்தகத்தின் உதவியால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை இதுவரை நான் சந்தித்ததே இல்லை என்று உறுதியாக கூறுவேன்.” உண்மை மனதோடும் உற்சாகத்தோடும் ஜனங்களை அணுகினால், கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்டவற்றை நாம் மதிக்கிறோம், அதை நேசிக்கிறோம் என்பதை காட்டுவோம்.—சங்கீதம் 119:97, 105.
9, 10. நம் நம்பிக்கைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பைபிளை உபயோகிப்பது ஏன் அவசியம்?
9 நம் நம்பிக்கைகளைக் குறித்து ஜனங்கள் அறிந்துகொள்ள விரும்புகையில் கடவுளுடைய வார்த்தையை நேசிப்பதை காண்பிப்பதற்கு மிகச் சிறந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுகிறவர்களாக, பதிலளிக்கையில் நம் சொந்த கருத்துக்களைச் சொல்வதில்லை. (நீதிமொழிகள் 3:5, 6) மாறாக, பதில் சொல்கையில் பைபிளை உபயோகிக்கிறோம். உங்களால் பதிலளிக்க முடியாத கேள்வியை யாராவது கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறீர்களா? நீங்கள் செய்ய முடிந்த நடைமுறையான, இரண்டு காரியங்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
10 தயாராக இருக்க முடிந்தளவு முயற்சி எடுங்கள். “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:15) உங்கள் நம்பிக்கைகளை ஆதரித்து பேச தயாராயிருக்கிறீர்களா? உதாரணமாக, சில வேதப்பூர்வமற்ற பழக்கவழக்கங்களில் நீங்கள் ஏன் கலந்துகொள்வதில்லை என்று யாராவது கேட்டால், “அது என் மதத்திற்கு விரோதமானது” என்று சொல்வதோடு திருப்தி அடைந்துவிடாதீர்கள். அவ்வாறு சொன்னால், உங்களுக்காக மற்றவர்கள் தீர்மானம் செய்கிறார்கள் என்றும் அதனால் நீங்கள் மத உட்பிரிவை சேர்ந்தவர் என்றும் அவர்கள் முடிவுக்கு வரலாம். மாறாக, “கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அதை செய்ய வேண்டாம் என்கிறது” அல்லது “நான் வணங்கும் கடவுளுக்கு அது பிடிக்காது” என்று சொல்வதே சிறந்ததாக இருக்கலாம். பிறகு, ஏன் என்பதற்கான நியாயமான விளக்கத்தை கொடுக்கலாம்.—ரோமர் 12:1.
11. கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க எந்த ஆராய்ச்சி புத்தகம் நமக்கு உதவும்?
11 பதிலளிக்க தயாராயில்லை என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை ஆராய்வதற்கு ஏன் கொஞ்ச நேரத்தை செலவு செய்யக்கூடாது?a ஜனங்கள் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என யோசித்து, சில தலைப்புகளை தேர்ந்தெடுத்து, வேதப்பூர்வ குறிப்புகளில் சிலவற்றை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தையும் பைபிளையும் எப்போதும் கைவசம் வைத்திருங்கள். அவை இரண்டையும் உபயோகிக்க தயங்காதீர்கள், உபயோகிக்கையில் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதிலை கண்டுபிடிக்க உதவும் ஆராய்ச்சி புத்தகம் உங்களிடம் இருப்பதாக கூறுங்கள்.
12. பைபிள் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாதபோது என்ன சொல்லலாம்?
12 அனாவசியமாக கவலைப்படாதீர்கள். அபூரணராக இருப்பதால் எல்லா கேள்விகளுக்குமான பதில் எல்லாருக்கும் தெரியாது. ஆகவே, பைபிள் சம்பந்தப்பட்ட, பதிலளிக்க முடியாத ஒரு கேள்வி கேட்கப்பட்டால் நீங்கள் இவ்வாறு கூறலாம்: “ஆர்வமிக்க கேள்வியை கேட்டதற்காக உங்களுக்கு நன்றி. உண்மையை சொன்னால், எனக்கு அந்தக் கேள்விக்கு பதில் தெரியாது; ஆனால் பைபிளில் நிச்சயம் பதில் இருக்கும். பைபிளை ஆராய்வது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம். உங்கள் கேள்வியைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அடுத்த முறை வரும்போது பதில் சொல்கிறேன்.” இவ்வாறு ஒளிவுமறைவற்ற, அடக்கமான விதத்தில் பதிலளிப்பது தொடர்ந்து உரையாடுவதற்கு வாய்ப்புகளை அளிக்கலாம்.—நீதிமொழிகள் 11:2.
நாம் போதிக்கும் மக்களிடம் அன்பு
13. நாம் பிரசங்கிப்போரைப் பற்றி சாதகமான நோக்குநிலை வைத்திருப்பது ஏன் அவசியம்?
13 இயேசு தாம் போதித்த மக்களை நேசித்தார். இந்த விஷயத்தில் நாம் எவ்வாறு அவரை பின்பற்றலாம்? நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களைப் பற்றி உணர்ச்சியற்ற மனநிலையை ஒருபோதும் வளர்த்துக்கொள்ளக் கூடாது. “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்த[ம்]” மிக விரைவில் நடக்கவிருப்பதும், நூறு கோடிக்கணக்கான மனிதர்களில் அநேகர் அழிக்கப்படவிருப்பதும் உண்மையே. (வெளிப்படுத்துதல் 16:14; எரேமியா 25:33) இருந்தாலும், யார் உயிரோடிருப்பார்கள், யார் இறப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. எதிர்காலத்தில், இந்த நியாயத்தீர்ப்பு யெகோவா நியமித்த இயேசு கிறிஸ்து மூலம் நடக்கும். அது வரை, ஒவ்வொருவரையும் யெகோவாவின் எதிர்கால ஊழியராகும் சாத்தியம் உள்ளவராகவே கருத வேண்டும்.—மத்தேயு 19:24-26; 25:31-33; அப்போஸ்தலர் 17:31.
14. (அ) ஜனங்களிடம் பரிவிரக்கம் காட்டுகிறோமா இல்லையா என்பதைப் பற்றி நம்மை நாமே எவ்வாறு ஆராயலாம்? (ஆ) என்ன நடைமுறையான வழிகளில் மற்றவர்களிடம் பரிவிரக்கத்தையும் தனிப்பட்ட அக்கறையையும் காட்டலாம்?
14 ஆகவே, இயேசுவைப் போல நாம் மக்களிடம் ஒற்றுணர்வு காட்ட விரும்புகிறோம். நம்மை நாமே இவ்வாறு கேட்டுக் கொள்ளலாம்: ‘இந்த உலகின் மத, அரசியல், வியாபார அமைப்புகளின் தந்திரமான பொய்களாலும், மோசடிகளாலும் ஏமாற்றப்படும் ஜனங்களைக் கண்டு மனம் வருந்துகிறேனா? நாம் சொல்லும் செய்தியை அவர்கள் அசட்டை செய்வதாக தோன்றினால் அதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முயலுகிறேனா? நானோ, இப்போது யெகோவாவை உண்மையோடு சேவிக்கிற மற்றவர்களோ முன்பு இப்படித்தான் உணர்ந்தோம் என்பதை புரிந்துகொள்கிறேனா? என்னுடைய பிரசங்கத்தை அதற்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறேனா? அல்லது இவர்கள் மாறவே மாட்டார்கள் என்று ஒதுக்கிவிடுகிறேனா?’ (வெளிப்படுத்துதல் 12:9) நாம் உண்மையான பரிவிரக்கம் காட்டுவதை ஜனங்கள் உணர்ந்தால் நம் செய்தியை ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. (1 பேதுரு 3:8) ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் அதிக அக்கறை காட்டவும் பரிவிரக்கம் நம்மை தூண்டலாம். அவர்களுடைய கேள்விகளையும் கவலைகளையும் எழுதி வைத்துக்கொள்ளலாம். மறுசந்திப்பு செய்கையில், முதல் சந்திப்பில் அவர்களுடன் உரையாடிய சில விஷயங்களை பின்னர் யோசித்து பார்த்ததாக அவர்களிடம் கூறலாம். தற்சமயம் அவர்களுக்கு ஏதாவது அவசர தேவையிருந்தால், நடைமுறை உதவியை நம்மால் அவர்களுக்கு அளிக்க முடியும் என்பதையும் தெரிவியுங்கள்.
15. நாம் ஏன் ஜனங்களிலுள்ள நல்ல குணங்களை பார்க்க வேண்டும், அதை எவ்வாறு செய்யலாம்?
15 இயேசுவைப் போல ஜனங்களிலுள்ள நல்ல குணங்களையே நாமும் பார்க்கிறோம். தனிமரமான தாய் தன் பிள்ளைகளை வளர்க்க மெச்சத்தக்க முயற்சி செய்யலாம். தன் குடும்ப நலனுக்காக ஒருவர் பெரும்பாடுபட்டு உழைக்கலாம். ஒரு முதியவர் ஆவிக்குரிய காரியங்களில் அக்கறை காட்டலாம். நாம் சந்திப்பவர்களிடம் இப்படிப்பட்ட குணங்கள் இருப்பதைக் கண்டுணர்ந்து அதற்காக அவர்களை பாராட்டுகிறோமா? அவ்வாறு செய்கையில் அவர்களுக்கும் நமக்கும் மத்தியிலுள்ள பொதுவான விஷயங்களை வலியுறுத்துகிறோம். அது, ராஜ்யத்தைப் பற்றி சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பைத் திறந்து வைக்கலாம்.—அப்போஸ்தலர் 26:2, 3.
அன்பு காட்ட மனத்தாழ்மை அவசியம்
16. நாம் பிரசங்கிப்பவர்களிடம் கனிவோடும் மரியாதையோடும் இருப்பது ஏன் முக்கியம்?
16 நாம் போதிக்கும் மக்களை நேசித்தால், “அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்” என்ற பைபிளின் ஞானமான எச்சரிப்புக்கு செவிகொடுக்க தூண்டப்படுவோம். (1 கொரிந்தியர் 8:1) இயேசு ஏராளமான அறிவு படைத்தவராக இருந்தும் அவர் துளியும் கர்வப்படவில்லை. ஆகவே, உங்கள் நம்பிக்கைகளை பகிர்ந்துகொள்கையில் சண்டை செய்யும் விதமாகவோ இறுமாப்புடனோ நடந்துகொள்ளாதீர்கள். மக்களின் இருதயத்தை எட்டுவதும் நாம் அதிகமாக நேசிக்கும் சத்தியங்களிடம் அவர்களை கவர்ந்திழுப்பதுமே நம் இலக்கு. (கொலோசெயர் 4:6) பதில் சொல்ல தயாராயிருக்கும்படி அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை அளிக்கையில் அதை “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” செய்யும்படி நினைப்பூட்டியதையும் மறந்துவிடாதீர்கள். (1 பேதுரு 3:15) கனிவோடும் மரியாதையோடும் பேசினால், நாம் வணங்கும் கடவுளிடம் மக்களை கவர்ந்திழுப்பதில் அதிக வெற்றி பெறுவோம்.
17, 18. (அ) ஊழியர்களாக நமது தகுதிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? (ஆ) பைபிளின் மூல மொழிகளைப் பற்றிய அறிவு பைபிள் மாணாக்கர்களுக்கு ஏன் அவசியமில்லை?
17 அறிவுத் திறனாலோ படித்த படிப்பாலோ மக்களை கவர வேண்டிய அவசியம் நமக்கில்லை. உங்கள் பிராந்தியத்திலுள்ள சிலர், படித்து பட்டம் பெறாதவர்களிடமோ கௌரவ பட்டப்பெயர்களைப் பெறாதவர்களிடமோ பேச மறுத்தால் அவர்களுடைய மனநிலை கண்டு நீங்கள் சோர்ந்துவிடாதீர்கள். அக்காலத்திய ரபீக்களின் பிரசித்தி பெற்ற பள்ளிகளுக்கு செல்லவில்லை என்ற மறுப்பை இயேசு ஒதுக்கித்தள்ளினார். அதோடு, அன்று பொதுவாக நிலவிய தப்பெண்ணங்களுக்கு அடிபணிந்து தமது பெரும் அறிவாற்றலால் மக்களை கவரவும் அவர் நினைக்கவில்லை.—யோவான் 7:15.
18 கிறிஸ்தவ ஊழியர்களுக்கு, படித்து எத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும் மனத்தாழ்மையும் அன்புமே அதிமுக்கியம். ஊழியத்திற்கு நம்மை தகுதியுள்ளவர்களாக ஆக்குவது மிகப் பெரிய போதகராகிய யெகோவாவே. (2 கொரிந்தியர் 3:5, 6) கடவுளுடைய வார்த்தையை போதிக்க பைபிளின் மூல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என கிறிஸ்தவமண்டல பாதிரியார்கள் சிலர் கூறினாலும் அது அவசியமில்லை. தெளிவான, திட்டவட்டமான வார்த்தைகளில் பைபிள் எழுதப்படும்படி யெகோவா ஏவியிருக்கிறார்; ஆகவே அதன் மதிப்புமிக்க சத்தியங்களை எல்லாருமே சுலபமாக புரிந்துகொள்ள முடியும். பல நூற்றுக்கணக்கான மொழிகளில் அதை மொழிபெயர்த்தாலும் அந்த சத்தியங்கள் மாறுவதில்லை. எனவே, பூர்வ கால மொழிகளை அறிந்திருப்பது எப்போதாவது பயன்படலாம்; என்றாலும் அதற்கு அவசியமில்லை. மேலும், மொழித்திறமை காரணமாக பெருமைப்படுவது உண்மை கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக தேவைப்படும் ஒரு குணத்தை—கற்பிக்கப்படத்தக்க குணத்தை—இழப்பதில் விளைவடையலாம்.—1 தீமோத்தேயு 6:4.
19. நமது கிறிஸ்தவ ஊழியத்தை எந்த அர்த்தத்தில் சேவை எனலாம்?
19 நமது கிறிஸ்தவ ஊழியத்திற்கு மனத்தாழ்மை தேவை என்பதில் சந்தேகமேயில்லை. எதிர்ப்பு, அசட்டை, ஏன் துன்புறுத்துதலைக்கூட நாம் அடிக்கடி சந்திக்கிறோம். (யோவான் 15:20) இருந்தாலும், உண்மையோடு நம் ஊழியத்தில் ஈடுபடுகையில் ஒரு முக்கிய சேவையை செய்கிறோம். இந்த வேலையில் மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு தொடர்ந்து சேவை செய்து வந்தால் இயேசு கிறிஸ்து மக்களிடம் காண்பித்த விதமான அன்பை நாமும் காட்டுவோம். இதை சிந்தித்துப் பாருங்கள்: செம்மறியாடு போன்ற ஒருவரை கண்டுபிடிப்பதற்காக, பாரா முகம் காட்டுகிற அல்லது எதிர்க்கிற ஆயிரம் பேருக்கு பிரசங்கிக்க நேர்ந்தாலும் அந்த முயற்சி பலனுள்ளதுதான் அல்லவா? அதில் சந்தேகமேயில்லை! ஆகவே, இந்த வேலையை விட்டுவிடாமல், தொடரும்போது நாம் இன்னும் சந்திக்க வேண்டிய செம்மறியாடு போன்றவர்களுக்கு உண்மையோடு சேவை செய்கிறோம். முடிவு வருவதற்கு முன் இப்படிப்பட்ட மதிப்புமிக்கவர்களில் இன்னும் அநேகர் கண்டுபிடிக்கப்பட்டு உதவப்படும்படி யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் பார்த்துக்கொள்வார்கள் என நம்பலாம்.—ஆகாய் 2:7, NW.
20. முன்மாதிரியால் போதிக்க முடிந்த சில வழிகள் யாவை?
20 மற்றவர்களுக்கு சேவை செய்ய நமக்கு ஆர்வம் இருப்பதைக் காட்டுவதற்கு மற்றொரு வழி முன்மாதிரியால் போதிப்பதாகும். உதாரணமாக, “நித்தியானந்த தேவ”னாகிய யெகோவாவை சேவிப்பதே மிகவும் சிறந்த, பெரும் திருப்தியளிக்கும் வாழ்க்கை என மக்களுக்கு போதிக்க விரும்புகிறோம். (1 தீமோத்தேயு 1:11) நம் நடத்தையிலும் அயலாரோடும், சக மாணவர்களோடும், சக பணியாளர்களோடும் நாம் நடந்துகொள்ளும் விதத்திலும் நாம் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பதை அவர்களால் காண முடிகிறதா? அவ்வாறே, உணர்ச்சியற்ற, கொடுமை நிறைந்த இந்த உலகில் கிறிஸ்தவ சபையே அன்பின் இருப்பிடம் என்று நம்மோடு பைபிளை படிப்பவர்களுக்கு போதிக்கிறோம். சபையிலுள்ள எல்லாரையும் நாம் நேசிப்பதையும் ஒருவரோடு ஒருவர் சமாதானத்தோடிருக்க கடினமாக உழைப்பதையும் அவர்களால் தெளிவாக காண முடிகிறதா?—1 பேதுரு 4:8.
21, 22. (அ) நம் ஊழியத்தைக் குறித்ததில் நம்மையே ஆராய்ந்து பார்ப்பது என்ன வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வழிநடத்தலாம்? (ஆ) காவற்கோபுரத்தின் அடுத்த இதழில் வரும் கட்டுரைகள் எதை கலந்தாலோசிக்கும்?
21 ஊழியத்திடம் ஆர்வம் இருந்தால் சில சமயம் நம்மையே ஆராய்ந்து பார்க்க தூண்டப்படுவோம். இதை நேர்மையோடு செய்த அநேகர், முழுநேர ஊழியம் செய்வது அல்லது அதிக தேவையுள்ள இடத்திற்கு மாறிச் செல்வது போன்ற வழிகளில் தங்கள் சேவையை விஸ்தரிக்க வாய்ப்பிருப்பதை கண்டிருக்கிறார்கள். மற்றவர்களோ தங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கு சேவை செய்வதற்காக மற்றொரு மொழியை கற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தால் அதை கவனமாகவும் ஜெபத்தோடும் சிந்தித்துப் பாருங்கள். சேவை செய்யும் வாழ்க்கையே பெருமகிழ்ச்சியையும், திருப்தியையும், மன சமாதானத்தையும் தரும்.—பிரசங்கி 5:12.
22 ஆகவே, நாம் போதிக்கும் சத்தியங்களிடமும், மக்களிடமும் அன்பை வளர்த்துக்கொள்வதன் மூலம் எல்லா வழிகளிலும் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவோமாக. இந்த இரண்டு வழிகளில் நம் அன்பை வளர்த்து, அதை வெளிக்காட்டுகையில் கிறிஸ்துவைப் போன்ற போதகர்களாயிருக்க நல்லதொரு அஸ்திவாரத்தைப் போட நமக்கு உதவும். ஆனால், அந்த அஸ்திவாரத்தின் மீது எவ்வாறு கட்டுவது? காவற்கோபுரத்தின் அடுத்த இதழில் வரும் தொடர் கட்டுரைகள், இயேசு உபயோகித்த சில குறிப்பிட்ட போதிக்கும் முறைகளை கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• போதகராக இயேசு வைத்த முன்மாதிரி நாம் பின்பற்ற முடியாதளவு உயர்ந்ததல்ல என்பதற்கு என்ன உறுதி நமக்குள்ளது?
• நாம் பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட சத்தியங்களை நேசிப்பதை எவ்வாறு காண்பிக்கலாம்?
• அறிவில் வளருகையில் மனத்தாழ்மையோடு நிலைத்திருப்பது ஏன் முக்கியம்?
• நாம் போதிக்க விரும்புகிறவர்களுக்கு என்ன சில வழிகளில் அன்பு காட்டலாம்?
[பக்கம் 16-ன் படங்கள்]
தயாராக இருக்க முடிந்தளவு முயற்சி எடுங்கள்
[பக்கம் 17-ன் படங்கள்]
“தேவனை அறியும் அறிவை” பொக்கிஷமாக கருதினால் நீங்கள் பைபிளை திறம்பட்ட விதத்தில் உபயோகிக்கலாம்
[பக்கம் 18-ன் படம்]
நற்செய்தியை பகிர்ந்துகொள்வதால் மக்களிடம் அன்பு காட்டுகிறோம்