யெகோவாவைச் சேவிக்க தீர்மானமாயிருத்தல்!
“நீ பிரசங்கிக்கப் போகக்கூடாது!” “உன்னுடைய ஆட்கள் இங்கு வரக்கூடாது!” இவற்றை, இப்படிப்பட்ட கூற்றுக்களை பல கிறிஸ்தவப் பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து கேட்கிறார்கள். ஆனால் இந்த மனிதர்கள் பட்டாளத்தில் வேலைசெய்யும்போது, அவர்களுடைய மனைவிகள் தங்களுடைய விசுவாசத்திற்கு விசேஷித்த சவால்களை எதிர்ப்படுகிறார்கள். (ஏசாயா 2:4; யோவான் 17:16) அப்படிப்பட்ட கிறிஸ்தவ மனைவிகள் ஆவிக்குரியவிதத்தில் பலமுள்ளவர்களாகவும் ராஜ்ய சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறவர்களாகவும் தங்களை எப்படிக் காத்துக்கொள்கிறார்கள்?
தனிப்பட்ட தீர்மானத்தோடு யெகோவா தேவனுக்கு உண்மைமாறாதிருப்பது அவர்கள் நிலைத்திருப்பதற்கு உதவிசெய்கிறது. “அது என் தனிப்பட்ட சுய தீர்மானம் என நான் நினைக்கிறேன்,” என்று இவான் என்ற ஒரு படைவீரனின் மனைவி சொல்கிறார். “என் கணவருடைய எதிர்ப்பைச் சமாளிக்க வழிகள் இருக்கவேண்டும் என்று நான் அறிந்திருந்தேன்.” உண்மையில் வழிகள் இருந்தன.
மற்றொரு கிறிஸ்தவப் பெண், ஒரு படை அதிகாரியை மணந்தவர், அவளுடைய தீர்மானமான நிலைநிற்கை எப்படி அவளுடைய கணவனுக்கும்கூட வாழ்க்கையை இலகுவாக்குகிறது என்று குறிப்பிடுகிறாள். “அவர் என்னுடைய கால அட்டவணையையும் அவருடையதையும் அறிந்திருக்கிறார், பட்டாளத்தில் இருப்பவர்கள் அதைப் போற்றுகிறார்கள்,” என்று அவள் விளக்குகிறாள். இருந்தபோதிலும், யெகோவாவுக்கு அவளுடைய தொடர்ச்சியான ஊழியம் எளிதான போக்கல்ல.
தனிமையுணர்வை மேற்கொள்ளுதல்
போர்வீரர்களின் மனைவிகள் வீட்டிலிருந்து அதிக தூரமுள்ள ஒரு புதிய இடத்திற்கு கணவர்களோடு சேர்ந்து அவர்கள் போகவேண்டியதிருந்தால், ஒருசில நாட்கள் அறிவிக்கையின் அடிப்படையில் இடம்மாறி செல்லும் சவாலை அடிக்கடி எதிர்ப்படுகிறார்கள். பின்னர், பழக்கமில்லாத சூழல்களுக்கு வந்திருப்பதால், தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணர்வது எளிதுதான். ஆனால் அவ்வாறு இருக்கவேண்டிய அவசியமில்லை. யெகோவாவைச் சேவிப்பவர்கள் ஓர் அனுகூலத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். அது என்ன? கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பேதுருவின் பிரகாரம், அது “முழு சகோதரக் கூட்டுறவு.” இப்போது லட்சக்கணக்கானவர்களாக இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் 231 நாடுகளில் ஒரு பெரிய கிறிஸ்தவக் குடும்பம்போல், ‘சகோதரத்துவமாக’ செயல்படுகிறார்கள். அவர்களை நிஜமாகவே நீங்கள் எங்கும் காணலாம்.—1 பேதுரு 2:17, அடிக்குறிப்பு, NW.
சூஸன் தன் வீடு இருந்த இடப்பகுதியிலிருந்து திடீரென்று மாற்றப்பட்டு, அவளுடைய கணவன் நியமிக்கப்பட்ட விமானப் படைத் தளத்தில் வசிப்பதற்கு வந்துசேர்ந்தாள். விசுவாசத்தில் புதியவளாகவும், விசுவாசத்தில் இல்லாத அவளுடைய கணவனிடமிருந்து கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குபெறுவதை நிறுத்திவிடும்படியான அழுத்தத்தில் இருந்த அவள் சொல்கிறாள்: “நான் உடனே உள்ளூர் கூட்டங்களுக்கு போனேன், அங்கு மற்ற சகோதரிகளோடு உட்கார்ந்து பேச முடிந்தது. இந்தக் கூட்டுறவே என்னைத் தொடர்ந்து சத்தியத்திலிருக்கச் செய்தது என்பதை நான் உண்மையுணர்வுடன் சொல்லமுடியும்.”
சில சமயங்களில் தனிமையுணர்வு மனச்சோர்வை உண்டாக்குகிறது. அப்போதும்கூட நற்செய்தி ஒரு நல்ல உற்சாகத்தைத் தருகிறது. க்ளென்யிஸ், ஓர் ஆங்கிலேய சகோதரி, தன் கணவன் வெளிநாட்டில் வேலைக்கு நியமிக்கப்பட்டபோது அவரோடு போயிருந்தாள். அவள் சொல்கிறாள்: “நான் உண்மையாகவே சோர்வடைந்தபோது, எதிர்பாராதவிதத்தில் படைத்துறையில் பணியாற்றுகையில் பலவருடங்களுக்கு முன்பு, நான் அறிந்திருந்த ஒருத்தி, சமீபத்தில் ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் எடுத்திருந்ததாக எழுதியிருந்தாள். அது மிகப் பொருத்தமான சமயத்தில் வந்த உற்சாகமூட்டுதலாக இருந்தது.”
கென்யாவுக்குத் தன் கணவனோடு பிரயாணம் செய்த ஜேன், கிறிஸ்தவக் கூட்டங்கள் அவள் புரிந்துகொள்ள முடியாத மொழிகளில் நடத்தப்பட்டாலும் அவை உயிரூட்டுபவையாக நிரூபித்தன என்று உணர்ந்தாள். “எனக்குத் தெரியும், இங்குதான் நான் இருக்கும்படி யெகோவா விரும்பினார்” என்று அவள் விளக்குகிறாள். “நான் என் ஆவிக்குரிய சகோதரர்களோடு இருந்தேன், அவர்கள் எனக்கு ஒரு சத்துமருந்து (டானிக்) போல இருந்தனர். அவர்கள் என்னை விரும்பிவரவேற்றனர். நாங்கள் ஒரு குடும்பத்தினராக இருந்ததுபோல நான் உணர்ந்தேன்.”
ஜேன் தான் கொண்டிருந்தாளோ என்றுகூட அறியாத, ஆவிக்குரிய சொந்தக்காரர்களைக் கண்டுபிடித்த இந்தச் சூழ்நிலைமைகளிலிருந்த அநேகரில் வெறும் ஒரு நபர்தான்!—மாற்கு 10:29, 30.
எதிர்ப்பின் மத்தியில் நிலைத்திருத்தல்
“பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்,” என இயேசு எச்சரித்தார். “சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.” (மத்தேயு 10:34) அவர் அர்த்தப்படுத்தியது என்ன? சமாதானம் எதிர்பார்க்கப்படுகிற ஒரு குடும்பத்திற்குள்ளும்கூட, ஒருவேளை “திடீர் கத்தி வீச்சு” நடக்கக்கூடும் என்று A. T. ராபர்ட்சன், புதிய ஏற்பாட்டில் சொல் உயிர்ச்சித்திரம் (Word Pictures in the New Testament) என்பதில் குறிப்பிடுகிறார். இயேசு சொன்னார், “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.” (மத்தேயு 10:36) சத்தியத்திற்கு விரோதமாகத் திருமணத் துணை இருக்கிறபோது, இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையாய் நிரூபிக்கின்றன!
டையன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தபோது, விமானப்படை அதிகாரியாகிய அவளுடைய கணவன் மிக அதிருப்தியடைந்தார். அவர்களுடைய திருமணவாழ்வில் இது என்ன பாதிப்பைக் கொண்டிருந்தது? “அது எங்களுக்கிடையே வரும் பெரிய பனிக்கட்டிபோல் இருந்தது,” என்று டையன் விளக்குகிறாள். “நாங்கள் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாய் இருந்துவந்தோம். திடீரென்று ஒரே வீட்டில் வெறுமனே வசித்துக்கொண்டிருந்தவர்களாக இருந்தோம்.” அப்படியென்றால், அவள் எப்படிச் சமாளித்தாள்? “யெகோவாவின் மற்றும் அவருடைய ஆவியின் உதவியோடுகூட, தனிப்பட்ட நம்பிக்கையும் தீர்மானமும், உண்மையான செல்வாக்கைக் கொண்டிருந்தது.” தானியேல் தீர்க்கதரிசியின் பைபிள் உதாரணத்தை டையன் முக்கியமானதாக எடுத்துக்கொண்டாள்.
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு, கடவுளுடைய ஊழியக்காரனால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத உணவு அளிக்கப்பட்டபோது, தானியேல் ‘ராஜாவின் போஜனங்களினால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணியிருந்தார்.’ ஆம் தானியேல் மனப்பூர்வமான தீர்மானத்தை எடுத்தார். அவர் அந்த உணவைச் சாப்பிடுவதன்மூலம் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்குத் தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணியிருந்தார். ஆகவே, அவர் “தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் [விடாப்பிடியாய், NW] வேண்டிக்கொண்ட” போது என்னே ஒரு மனவுறுதியை மெய்ப்பித்துக்காட்டினார்! விளைவு? யெகோவா அவருடைய தீர்மானமான நிலைநிற்கையை ஆசீர்வதித்தார்.—தானியேல் 1:8, 9, 17.
அதைப்போலவே, இன்று ஓர் எதிர்க்கும் கணவன் தன் மனைவி சபை கூட்டங்களுக்குப் போவதை நிறுத்தும்படி வற்புறுத்தக்கூடும். அவள் எப்படிப் பிரதிபலிக்கவேண்டும்? ஜேன் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னைக் கண்டாள். அவள் விளக்குகிறாள்: “அழுத்தத்தின் மத்தியில் நான் ஒருபோதும் பின்வாங்கவில்லை. அங்கு இணங்கிவிடுதல் இருக்கமுடியாது என்று எனக்குத் தெரியும். கூட்டங்கள் எனக்கு எவ்வளவு முக்கியத்துவமானவையாக இருந்தன என்று நான் மெய்ப்பிக்கவேண்டியதிருந்தது.” அவள் தொடர்ந்து ஆஜராயிருந்ததால், யெகோவா அவளுடைய தீர்மானத்தை ஆசீர்வதித்தார்.
“என் கணவன் நான் கூட்டங்களுக்குப் போகாதிருக்கும்படி செய்ய முயற்சிசெய்தார், ஆனால் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை,” என்று க்ளென்யிஸ் குறிப்பிடுகிறார். “நான் தொடர்ந்து போனேன். நான் வீடு திரும்பியபோது, அவர் சில சமயங்களில் என்னை அடிப்பார், மற்ற சமயங்களில் மெளனத்தால் வரவேற்கப்படுவேன்.” ஆனாலும், அவள் திரும்பத்திரும்ப ஜெபிப்பதன்மூலம் சமாளித்தாள். மேலுமாக, சபை மூப்பர்களில் இருவர் ஒழுங்காக அவளோடு சேர்ந்து ஜெபம்செய்தனர். இது அவள் தொடர்ந்து ஆஜராயிருப்பதற்கு மிகவும் உதவிசெய்தது.—யாக்கோபு 5:13-15; 1 பேதுரு 2:23.
சில சமயங்களில் கணவனின் மேலதிகாரிகள் அவர் தன்னுடைய மனைவியை நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலிருந்து தடுக்கும்படி தூண்டுவர். டையன் தன் கணவரிடம் அவளுடைய முன்னுரிமைகளைத் தெளிவுபடுத்தவேண்டியதிருந்ததை உணர்ந்தாள். அவள் சொன்னாள், “நான் என் தொடர்ச்சியான பிரசங்கித்தலின் விளைவுகளை எதிர்ப்படத் தயார்.” அப்போஸ்தலரின் நிலைநிற்கைக்கு இது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (அப்போஸ்தலர் 4:29-31) ஆனாலும், அவள் தன் பிரசங்கித்தலில் மிக எச்சரிக்கையுடன் ஈடுபட்டாள். அவள் சொல்கிறாள்: “காஃபி குடிப்பதற்கு நான் ஆட்களைக் கூடிவரச் செய்து, வந்திருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சத்திய புத்தகத்தை வழங்குவேன்.”—மத்தேயு 10:16; 24:14.
இணங்குதல் இல்லாமல் கீழ்ப்படிதல்
திருமண வாழ்க்கையிலுள்ள பிரச்னைகளால் மனச்சோர்வுற்றாலும், கிறிஸ்தவ மனைவிகள் எதிர்காலத்திற்காகக் காத்திருந்து, யெகோவாமேல் நம்பிக்கையோடிருக்கிறார்கள். இது அவர்களுக்கு சமநிலையான நோக்குநிலையைக் காத்துக்கொள்வதற்கு உதவிசெய்கிறது. அவர்கள் தங்களுடைய கணவர்களுக்கு தங்கள் விசுவாசத்தை இணங்கச் செய்யாமல் என்ன ஆதரவெல்லாம் தர முடியுமோ அதையெல்லாம் தருகிறார்கள். அவ்வாறு செய்வதன்மூலம், பேதுருவின் ஏவப்பட்டெழுதப்பட்ட புத்திமதியைப் பின்பற்றுகிறார்கள்: “மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.” (1 பேதுரு 3:1) தி ஆம்ப்ளிஃபைடு நியூ டெஸ்டமன்ட்-ல் இந்த அப்போஸ்தல ஆலோசனை இவ்வாறு வாசிக்கிறது: “இரண்டாந்தரமானவர்கள்போல கீழ்ப்படிந்து, அவர்கள்மீது சார்ந்திருங்கள், மேலும் அவர்களுக்காக உங்களை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.” ஜேன் இந்தப் புத்திமதியை எப்படிப் பின்பற்றினாள் என்பதைக் கவனியுங்கள். “நான் செய்ய விரும்புவது, என் கணவரின் வேலைக்குத் தடையாய் இருக்கக்கூடாது என்று அவர் என்னிடம் சொன்னார்,” என்று அவள் விளக்குகிறாள். “ஆகவே, அவருக்கு நான் உதவிசெய்ய முடிந்த வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்தேன்.”
இவ்வாறு சில கிறிஸ்தவ மனைவிகள் தங்களுடைய கணவர்கள் அழைக்கப்பட்டுள்ள சில சமூக நிகழ்ச்சிகளுக்கு ஆஜராயிருப்பதற்கு ஒத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒருபோதும் தங்களுடைய விசுவாசத்தை இணங்கச் செய்யாமலிருப்பதற்கு இன்னும் தீர்மானமாய் இருக்கின்றனர். ஜேன் தன் கணவரிடம் இதைப் பற்றிப் பேசுவதற்கு நேரத்தை எடுத்துக்கொண்டாள். அவள் ஆஜராக விரும்புவதாகவும் ஆனால் அவளுடைய வருகை அவரைத் தர்மசங்கடத்தில் இருக்கும்படி விடுவதற்கு விரும்பவில்லை எனவும் அவள் மனத்தாழ்மையோடு விளக்கினாள். “ஆஜராயிருக்கும் அனைவரும் சில சமயங்களில் வாழ்த்துக்கூறி பருகுதலில் (toast) ஈடுபடும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். பற்றுறுதி யெகோவாவுக்கு உரியது என்று நான் கற்றிருந்தேன். வாழ்த்துக்கூறி பருகுதல் வெறுமனே மரியாதை காட்டுவதைவிட அதிகமானதாக இருந்தது. சூழ்நிலை எவ்வளவு மோசமாயிருக்கும் என்பதை என் கணவர் உணர்ந்துகொண்டார், எனவே அவர் வெறுமனே, ‘வராதே!’ என்று சொன்னார். நானும் கீழ்ப்படிந்தேன்.”
மறுபட்சத்தில் க்ளென்யிஸ், அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்குத் தன் கணவரோடு போனாள். ஆனால் அவள் அதிகாரிகளை மேஜையின் தலைப் பகுதியில் கவனித்தாள். அவர்கள் வாழ்த்துக்கூறி பருக ஏற்பாடுசெய்து கொண்டிருக்கையில், அவள் ஞானமாக கழிவறைக்குச் சென்றாள்! ஆம், இந்தப் பெண்கள் தங்களைத்தாங்களே மாற்றிக்கொண்டார்கள், ஆனால் ஒருபோதும் இணங்கிச் செல்லவில்லை.
‘போதனையின்றி ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்’
“நான் ஒரு மனைவியாக என் திறமையை வளர்த்தால், சத்தியம் என்னை மாற்றுகிறது என்று என் கணவர் காண்பார்,” என இவான் சிந்தித்தாள். எனவே அவள் குடும்ப வாழ்க்கை புத்தகத்திலுள்ள “அருமையாய் நேசிக்கப்படுகிற மனைவி” என்று தலைப்பிடப்பட்ட அதிகாரத்தைத் திரும்பத்திரும்ப படித்தாள்.a “‘அழுகிறவர்களும் ஓயாது நச்சுப்படுத்துகிறவர்களும்’ என்ற உபதலைப்பிலுள்ள பொருளிற்கு நான் விசேஷித்த கவனத்தைச் செலுத்தினேன்! ஆனால் நான் என் கணவரோடு பேச முயன்றபோதெல்லாம், காரியங்கள் மோசமாயின.” இறுதியில், யெகோவாவைச் சேவிப்பதற்கு அவளுடைய கணவனுக்கு உதவிசெய்வதில் அவள் வெற்றியடைந்தாள். எப்படி? 1 பேதுரு 3:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள நியமத்தை, அதாவது கணவர்கள் ‘போதனையின்றி ஆதாயப்படுத்தப்படலாம்,’ என்பதைப் பொருத்திப் பிரயோகிப்பதன்மூலமாகும்.
கிறிஸ்தவப் பெண்கள் தங்களுடைய குடும்பத்தைக் கவனிக்கும் வழிமுறையானது கிறிஸ்தவத்தை மற்றவர்களுக்கு பரிந்துரைப்பதற்கு அதிகத்தைச் செய்கிறது. “சத்தியத்தை எவ்வளவு கவர்ச்சியுடையதாக்கமுடியுமோ அவ்வளவிற்கு கவர்ச்சியுள்ளதாக்குவதற்கு முயற்சிசெய்தேன்,” என்று டையன் சொல்கிறாள். “நான் கூட்டங்களுக்குப் போனபோது, என் கணவர் அதிகமாகத் தனிப்படுத்தப்பட்டதுபோல உணர்ந்தார், எனவே நாங்கள் வீட்டிற்கு வந்துசேர்ந்தபோது பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்ளும்படி அறிவுறுத்துவேன். நாங்கள் திரும்பி வந்தபோது, அவருக்குக் கூடுதலான கவனிப்பைக் கொடுக்கவும் முயற்சிசெய்தேன்.” அவருடைய குடும்பத்தின் அன்பான கவனிப்பிற்கு அவளுடைய கணவர் பிரதிபலித்ததால், அவருடைய மனநிலை சிறிதுசிறிதாக மாறியது.
யெகோவாவின் உடன் ஊழியர்களும்கூட உதவிசெய்யலாம். ஜேனுடைய கணவர் தான் கென்யாவில் சந்தித்த சாட்சி மிஷனரிகளின் கூட்டுறவை அனுபவித்ததாக ஜேன் சொல்கிறாள். “அவர்கள் அவரோடு நண்பர்களாகிக் கொண்டனர். கால்பந்தாட்டத்தைப் பற்றிப் பேசினர். அவர்கள் மிகவும் உபசரிக்கும் குணமுடையோராக இருந்தனர். நாங்கள் வித்தியாசமான மிஷனரி இல்லங்களுக்கு பல தடவைகள் விருந்துகளுக்காக அழைக்கப்பட்டிருந்தோம்.” அவளுடைய கணவன் பின்னர் சொன்னார்: “ஜேனின் விசுவாசத்தை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன். அவளுடைய நண்பர்கள் அதிக புத்திகூர்மையுள்ளவர்களாக இருந்தார்கள். பலதரப்பட்ட தலைப்புப்பொருள்களில் அவர்களால் பேசமுடிந்தது.” இதைப்போலவே, டையனின் கணவரும் சத்தியம் சம்பந்தமான தன்னுடைய நோக்குநிலையை மாற்றிக்கொண்டார். அவர் ஓட்டி வந்த கார் பழுதானபோது, ஓர் இளம் சாட்சி அவருக்கு உதவ முன்வந்தார். “அது என்னை நிஜமாகவே கவர்ந்தது,” என்று அவர் சொல்கிறார்.
நிச்சயமாகவே, எல்லா திருமண துணைகளும் சத்தியத்திற்குள் வந்துவிடுவதில்லை. அப்போது என்ன செய்வது? உண்மையுள்ளோர் சகித்திருக்க முடியும்படி யெகோவா உதவியளிக்கிறார். (1 கொரிந்தியர் 10:13) க்ளென்யிஸைப் போன்ற சூழ்நிலைகளில் இருப்போருக்கு அவளுடைய உற்சாகத்தைக் கவனியுங்கள்: “யெகோவா திருமணத்தை ஆரம்பித்து வைத்தார் என்பதையும், தம்பதிகள் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதையும் ஒருபோதும், ஒருக்காலும் மறக்காதீர்கள். எனவே, கணவர் எதைச் செய்தாலும் அல்லது உங்களைச் சுற்றி இருப்போரிலிருந்து என்ன எதிர்ப்பு வந்தாலும், யெகோவா ஒருபோதும் உங்களைத் தள்ளாட விடமாட்டார்.” அவளுடைய கணவன் யெகோவாவை இன்னும் வணங்காதிருக்கிறபோதிலும், அவளைப் பற்றியும் சத்தியத்தைப் பற்றியும் அவருடைய மனநிலை மென்மையாகியிருக்கிறது.
‘அழுகையோடு விதையுங்கள்; சந்தோஷத்தோடு அறுவடைசெய்யுங்கள்’
உண்மையில், இத்தகைய கிறிஸ்தவப் பெண்கள் யெகோவாவைச் சேவிக்க தீர்மானமாயிருக்கிறார்கள். நீங்கள் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தால், இதையே உங்கள் தீர்மானமாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த எச்சரிப்பை மனதில் வையுங்கள்: ‘உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருப்பாயாக.’—உபாகமம் 10:20.
“அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்,” என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறார். (சங்கீதம் 126:6) “உங்கள் துணைக்கு சத்தியத்தைக் காண்பிப்பதற்காக எவ்வளவோ கண்ணீரை அமைதியின் வடிவத்தில் அல்லது வார்த்தைகளின் வடிவத்தில் நீங்கள் சிந்துகிறீர்கள்,” என்று ஒரு சாட்சி ஒத்துக்கொள்கிறாள். “ஆனால் முடிவில் நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள், ஏனென்றால் அவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, நீங்கள் எடுக்கும் முயற்சியை யெகோவா ஆசீர்வதிக்கிறார்.”
வீட்டில் எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவை உண்மையுடன் சேவிக்கிற யாவரும் பாராட்டுதலுக்குரியவர்கள். அவர்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் தகுதியுள்ளவர்கள். அவர்கள் தங்களுடைய இணங்கிப்போகாத நிலைநிற்கையைத் தொடர்ந்து காத்துக்கொண்டு, யெகோவாவைச் சேவிக்க தீர்மானமாய் இருப்பார்களாக!
[அடிக்குறிப்புகள்]
a உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் (1979) பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 28-ன் படம்]
ஜெபசிந்தையான படிப்பு கிறிஸ்தவத் தீர்மானத்தைப் பலப்படுத்துகிறது