உங்கள்மேல் அதிகாரமுடையவர்களை கனம்பண்ணுங்கள்
“எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.”—1 பேதுரு 2:17.
1, 2. இன்று மக்கள் அதிகாரத்தை எவ்வாறு கருதுகிறார்கள்? ஏன்?
“பிள்ளைகள் நினைத்ததை சாதிக்கிறார்கள். பெற்றோரை கொஞ்சம்கூட மதிப்பதில்லை,” என புலம்புகிறார் ஒரு தாய். சில வாகனங்களில் “அதிகாரத்தை எதிர்த்திடுவீர்” என்ற வாசகம் காணப்படுகிறது. இவ்விரண்டு வேறுபட்ட உதாரணங்களும் இன்று இருக்கும் நிலைமையை சித்தரிக்கின்றன என்பது உங்களுக்கும் தெரியும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதலாளிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அவமதிக்கப்படுவது இன்றைய உலகில் சாதாரண விஷயமாகிவிட்டது.
2 “அதிகாரத்திலிருப்பவர்களுக்கு நான் எதற்கு மரியாதை காட்ட வேண்டும், அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது,” என அசட்டையாக சிலர் சொல்லலாம். உண்மைதான், இதை நாம் சில சமயம் மறுக்கவும் முடியாது. ஊழல் செய்யும் அரசாங்க அதிகாரிகள், பேராசை பிடித்த முதலாளிகள், திறமையில்லாத ஆசிரியர்கள், பிள்ளைகளை கொடுமைப்படுத்தும் பெற்றோர் போன்றவர்களைப் பற்றிய செய்திகளை நாம் தினம் தினம் கேள்விப்படுகிறோம். ஆனால் உண்மை கிறிஸ்தவர்களோ தங்கள் சபையில் அதிகாரமுடையவர்களை அவமதிப்பதில்லை என்பது சந்தோஷமான விஷயம்.—மத்தேயு 24:45-47.
3, 4. அதிகாரத்திலிருப்போருக்கு கிறிஸ்தவர்கள் ஏன் மரியாதை செலுத்த வேண்டும்?
3 கிறிஸ்தவர்களாகிய நாம், இவ்வுலக அதிகாரிகளை ‘கட்டாயம்’ மதித்தே ஆக வேண்டும். “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால் தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது” என அப்போஸ்தலனாகிய பவுல் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஆலோசனை அளித்தார். (ரோமர் 13:1, 2, 5; 1 பேதுரு 2:13-15) குடும்பத்திலும்கூட, அதிகாரமுள்ளவர்களுக்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்பதை பவுல் பின்வருமாறு காட்டினார்: “மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.” (கொலோசெயர் 3:18, 20) சபை மூப்பர்களும்கூட நம் கனத்திற்கு தகுதியானவர்கள், ஏனென்றால் ‘கடவுளுடைய சபையை மேய்ப்பதற்காக பரிசுத்த ஆவி அவர்களை கண்காணிகளாக நியமித்திருக்கிறது.’ (அப்போஸ்தலர் 20:28) யெகோவாவுக்குக் காட்டும் மரியாதையின் நிமித்தம் மற்ற மனித அதிகாரிகளையும் கனம்பண்ணுகிறோம். இருப்பினும், கடவுளுடைய அதிகாரத்தை கனம்பண்ணுவதே நம் வாழ்க்கையில் முதல் இடத்தை வகிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.—அப்போஸ்தலர் 5:29.
4 யெகோவாவின் ஈடிணையற்ற அதிகாரத்தை மனதில் கொண்டு, அதிகாரத்திலுள்ளவர்களை கனம்பண்ணாத மற்றும் கனம்பண்ணிய சிலரின் உதாரணங்களை நாம் இப்போது சிந்திக்கலாம்.
அவமரியாதையால் மிஞ்சுவது அவமானமே
5. மீகாள் தாவீதை எவ்வாறு அவமதித்தாள், அதனால் கிடைத்த தண்டனை யாது?
5 யெகோவா கொடுத்த அதிகாரத்தை யாராவது அவமதித்தால், யெகோவா அந்த நபரை எவ்வாறு கருதுவார்? பதிலை அரசனாகிய தாவீதின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். தாவீது உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமிற்கு கொண்டுவந்தார்; அப்போது, அவர் மனைவி மீகாள் “தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம் பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.” தாவீதை ஒரு குடும்பத் தலைவனாக மட்டுமல்ல அந்த தேசத்தின் ராஜாவாகவும் மீகாள் மதித்திருக்க வேண்டும். ஆனால் அவளோ குத்தலாக தாவீதிடம் இவ்வாறு சொன்னாள்: “இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல, இஸ்ரயேலின் அரசர் தம் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளை கழற்றி இன்று பெருமை கொண்டாரே!” அதன் விளைவாக அவள் குழந்தை பாக்கியம் இல்லாமலேயே இறந்தாள்.—2 சாமுவேல் 6:14-23, பொ.மொ.
6. யெகோவா, தம்மால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை கோராகு அவமதித்த விஷயத்தை எவ்வாறு கருதினார்?
6 தேவனால் நியமிக்கப்பட்ட தேவராஜ்ய தலைமை ஸ்தானத்தை வெளிப்படையாக அவமதித்ததற்கு ஓர் உதாரணம் கோராகு. அவன் சாதாரண நிலையிலா இருந்தான்? கோகாத்தியனாக, யெகோவாவின் ஆலயத்திலேயே சேவை செய்யும் எவ்வளவு பெரிய பாக்கியத்தைப் பெற்றிருந்தான்! இருந்தும், இஸ்ரவேலர்களின் தலைவர்களாக கடவுளால் நியமிக்கப்பட்டிருந்த மோசேயிடமும் ஆரோனிடமுமே அவன் குற்றம் கண்டுபிடித்தான். கோராகு, மற்ற இஸ்ரவேல் தலைவர்களுடன் சேர்ந்துகொண்டு, மோசே மற்றும் ஆரோனை நோக்கி துணிச்சலுடன் இவ்வாறு சொன்னான்: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்.” கோராகு மற்றும் அவனுடைய கூட்டாளிகளின் மனப்பான்மையை யெகோவா எவ்வாறு கருதினார்? அவர்கள் தம்மையே அவமதித்ததாக யெகோவா கருதினார். கோராகும் அவனை ஆதரித்த 250 தலைவர்களும், தங்கள் பக்கம் இருந்த அனைவரையும் பூமி விழுங்குவதை கண்ணால் கண்டார்கள். பின்பு, அவர்களும் யெகோவாவிடமிருந்து வந்த அக்கினியால் அழிக்கப்பட்டனர்.—எண்ணாகமம் 16:1-3, 28-35.
7. பவுலின் அதிகாரத்தைக் குறைசொல்வதற்கு ‘மகா பிரதான அப்போஸ்தலர்களுக்கு’ ஏதாவது காரணம் இருந்ததா?
7 தேவராஜ்ய அதிகாரங்களை அவமதித்தவர்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையிலும் இருந்தனர். கொரிந்து சபையிலிருந்த ‘மகா பிரதான அப்போஸ்தலர்கள்’ பவுலை இழிவாகக் கருதினர். அவருடைய பேச்சு திறமையை குறைகூறினர். “சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறது” என்று அவர்கள் சொன்னார்கள். (2 கொரிந்தியர் 10:10; 11:5) பவுல் திறமைவாய்ந்த பேச்சாளரோ இல்லையோ, அவர் அப்போஸ்தலராக இருந்ததால் நிச்சயம் அவர்கள் மதித்திருக்க வேண்டும். உண்மையிலேயே பவுலின் பேச்சு அற்பமானதா? அவர் எந்தளவுக்கு நியாயங்காட்டி பேசி உண்மைகளை புரியவைப்பவர் என்பதை பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவருடைய பொதுப்பேச்சுகள் எடுத்துக் காண்பிக்கின்றன. உதாரணத்திற்கு, “யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரான” இரண்டாவது ஏரோது அகரிப்பாவிடம் அவர் சுருக்கமாக கலந்துரையாடினார். அப்போது அந்த அரசரே “இன்னும் கொஞ்ச நேரம் பேசினால் என்னையும் கிறிஸ்தவனாக்கி விடுவாய் போலிருக்கிறதே”! என சொல்லும் அளவிற்கு பவுலுக்கு பேச்சு திறமை இருந்தது. (அப்போஸ்தலர் 13:15-43; 17:22-34; 26:1-28, NW) அப்படியிருந்தும், கொரிந்துவிலிருந்த அந்த மகா பிரதான அப்போஸ்தலர்கள் அவர் அற்பமாய் பேசுகிறார் அல்லது அவருக்கு பேச்சுத் திறமையில்லை என குறைகூறினர்! அவர்களுடைய மனப்பான்மையை யெகோவா எவ்வாறு கருதினார்? எபேசு சபை மூப்பர்களுக்கு இயேசு அனுப்பிய செய்தியில், ‘தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லிக்கொண்டபோதிலும் உண்மையில் அவ்வாறு இல்லாத’ ஆட்களைப் பற்றி குறிப்பிட்டார்; அப்படிப்பட்ட ‘அப்போஸ்தலரிடமிருந்து’ அந்த மூப்பர்கள் விலகியிருந்ததற்காக அவர்களை பாராட்டினார்.—வெளிப்படுத்துதல் 2:2, NW.
அபூரணருக்கும் மரியாதை
8. யெகோவா சவுலுக்கு கொடுத்திருந்த அதிகாரத்தை தாவீது எவ்வாறு மதித்தார்?
8 அதிகாரத்திலுள்ளவர்கள் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியபோதிலும், அவர்களை கனம்பண்ணினவர்களைப் பற்றிய அநேக பதிவுகள் பைபிளில் காணப்படுகின்றன. அவர்களில் ஒருவர் தாவீது. அவர் சவுல் ராஜாவுக்கு பணிபுரிந்து வந்தபோது, தாவீதுடைய சாதனைகளையும் திறமைகளையும் கண்ட சவுல் அவர்மேல் பொறாமை கொண்டு கொலை செய்ய திட்டம் தீட்டினார். (1 சாமுவேல் 18:8-12; 19:9-11; 23:26) ஆனால் சவுலை சுலபமாக கொன்றுவிட தாவீதுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தபோது, அவர் சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள்: “யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு எதிராக கை ஓங்குவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது!” (1 சாமுவேல் 24:3-6; 26:7-13 NW) சவுல் தவறு செய்கிறார், அவருடைய அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்கிறார் என்பதை தாவீது நன்றாகவே அறிந்திருந்தார், இருப்பினும், அவரை நியாயந்தீர்க்கும் வேலையை யெகோவாவிடம் விட்டுவிட்டார். (1 சாமுவேல் 24:12, 15; 26:22-24) சவுலிடமோ அல்லது அவரைப் பற்றி மற்றவர்களிடமோ தாவீது தவறாக பேசவில்லை.
9. (அ) சவுல் தன்னை மோசமாக நடத்தியபோது தாவீது எவ்வாறு உணர்ந்தார்? (ஆ) சவுலுக்கு தாவீது உண்மையான மதிப்பை செலுத்தினார் என்று நாம் எவ்வாறு சொல்லலாம்?
9 தாவீது தவறாக நடத்தப்பட்டபோது மனவேதனைப்பட்டாரா? அந்த சமயத்தில் “கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்,” என அவர் யெகோவாவிடம் புலம்பினார். (சங்கீதம் 54:3) அவர் தன் மனதிலிருந்த பாரத்தையெல்லாம் யெகோவாவிடம் கொட்டினார். “என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும் . . . கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும் பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள். என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்” என்றார். (சங்கீதம் 59:1-4) இதேபோன்று, அதிகாரத்திலுள்ள ஒருவருக்கு நீங்கள் எந்த தீங்கும் செய்யாதபோதிலும், அவர் உங்களை கசக்கிப் பிழிவதாக உணர்ந்திருக்கிறீர்களா? தாவீது சவுலை ஒருபோதும் அவமதிக்கவில்லை. சவுல் மரித்தபோதுகூட அதைக் குறித்து சந்தோஷப்படாமல், தாவீது ஒப்பாரி வைத்தார்: “உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள் . . . கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள். இஸ்ரவேலின் குமாரத்திகளே, . . . சவுலுக்காக அழுது புலம்புங்கள்.” (2 சாமுவேல் 1:23, 24) தாவீது சவுலால் மோசமாக நடத்தப்பட்டபோதிலும், யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு உண்மையான மதிப்பை காட்டிய இந்த சம்பவம், நமக்கு சிறந்த முன்மாதிரி.
10. ஆளும் குழுவிற்கு கடவுள் கொடுத்திருக்கும் அதிகாரத்தை கனம் பண்ணும் விஷயத்தில் பவுல் எவ்வாறு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார், அதனால் முடிவில் நடந்தது என்ன?
10 கிறிஸ்தவ சகாப்தத்திலும், அதிகாரத்திலுள்ளவர்களை கனம்பண்ணினவர்களைப் பற்றிய அநேக உதாரணங்களை பார்க்கிறோம். உதாரணத்திற்கு, பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் ஆளும் குழு எடுத்த முடிவுகளுக்கு அவர் மதிப்பு கொடுத்தார். பவுல் கடைசி தடவையாக எருசலேமிற்கு சென்றிருந்தபோது, மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தை தான் எந்தவிதத்திலும் வெறுக்கவில்லை என்பதை மற்றவர்களுக்கு காட்ட சடங்காச்சார முறைப்படி தன்னை சுத்தப்படுத்த வேண்டும் என்று ஆளும் குழுவினர் அவரிடம் சொன்னார்கள். அதற்கு பவுல், ‘முன்பு என் உயிர் ஆபத்திலிருந்தபோது இந்த சகோதரர்கள்தான் என்னை எருசலேமை விட்டு சென்றுவிடும்படியாக சொன்னார்கள். இப்போது, நான் மோசேயின் நியாயப்பிரமாண சட்டங்களை மதிக்கிறேன் என்பதை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்று இவர்களே சொல்கிறார்கள். நியாயப்பிரமாண சட்டங்களை கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று நான் ஏற்கெனவே கலாத்தியர்களுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டேன். இந்த சமயத்தில் நான் ஆலயத்திற்கு சென்றால், விருத்தசேதனம் செய்பவர்களுடன் இணங்கி செல்கிறேன் என்று மற்றவர்கள் என்னை தவறாக நினைக்கக்கூடும்’ என வாதாடியிருக்கலாம். இருப்பினும் பவுல் நிச்சயமாகவே அவ்வாறு பேசவில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்தவ தராதரமோ நியமமோ உட்படாததால், முதல் நூற்றாண்டு ஆளும் குழு சொன்ன வார்த்தையை பவுல் மதித்து அதற்குத் தலைவணங்கினார். உடனடியாகவே ஒரு யூத கும்பல் அவரை தாக்கவந்ததும் அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்ததும் உண்மைதான். ஆனால் இது கடவுளுடைய சித்தம் நிறைவேற வழிவகுத்தது எனலாம். எப்படியெனில் செசரியாவிலிருந்த உயர் அதிகாரிகளிடம் பவுல் சாட்சி கொடுத்தார், மேலும் அரசாங்க செலவிலேயே ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சீஸரிடம் சாட்சிகொடுத்தார்.—அப்போஸ்தலர் 9:26-30; 21:20-26; 23:11; 24:27; கலாத்தியர் 2:12; 4:9, 10.
நீங்கள் மதிக்கிறீர்களா?
11. இவ்வுலக அதிகாரிகளுக்கு நாம் எவ்வாறு மதிப்பு காட்டலாம்?
11 அதிகாரத்திலிருப்போரை நீங்கள் மதிக்கிறீர்களா? “யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள், . . . எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்” என கிறிஸ்தவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. “அதிகாரமுள்ளவர்களுக்கு” கீழ்ப்படிவது என்பது ஒழுங்காக வரி கட்டிவிடுவதை மட்டும் உட்படுத்தவில்லை, மாறாக அவர்களை நம் நடத்தையிலும் பேச்சிலும் கனம்பண்ணுவதை உட்படுத்துகிறது. (ரோமர் 13:1-7) கடுமையாக நடத்தும் அரசாங்க அதிகாரிகளை சந்திக்கும்போது நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம்? மெக்ஸிகோவைச் சேர்ந்த சியாபாஸ் மாகாணத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில், 57 யெகோவாவின் சாட்சி குடும்பங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை அதிகாரிகள் அபகரித்தனர். அதற்கு காரணம், சில மத சம்பந்தப்பட்ட பண்டிகைகளில் இந்த கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளாததே. இந்த பிரச்சினையை பேசி தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டங்களில், சாட்சிகள் கண்ணியமாக உடையணிந்துகொண்டு, எப்போதும் மதிப்பு மரியாதையுடனும் பேசினார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு, சாட்சிகளுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது. சாட்சிகளின் நடத்தையை கவனித்த மற்றவர்கள் அசந்துபோயினர். அவர்களில் சிலர், தாங்களும் யெகோவாவின் சாட்சிகளாக ஆகவேண்டும் என்று விரும்பும் அளவிற்கு அது அவர்களை கவர்ந்தது.
12. சத்தியத்திலில்லாத கணவனுக்கு மனைவி ஏன் “ஆழ்ந்த மதிப்பை” காட்டுவது அவசியம்?
12 உங்கள் குடும்பத்தில் கடவுள் கொடுத்திருக்கும் அதிகாரத்தை நீங்கள் எவ்வாறு மதிக்கலாம்? இயேசு துன்பத்தை அனுபவித்ததை விளக்கியபின் அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு சொன்னார்: “அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 3:1, 2; எபேசியர் 5:22-24) சில கணவன்மார்கள் தங்கள் மனைவி மதிக்கும் அளவிற்கு நடந்துகொள்வதில்லை; இருந்தாலும், அந்த மனைவி தன் கணவனிடம் “பயபக்தியோடுகூடிய” கீழ்ப்படிதலுடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை பேதுரு இந்த வசனத்தில் வலியுறுத்துகிறார். அந்த மனைவி கண்ணியமான நடத்தையினால் விசுவாசத்தில் இல்லாத கணவனையும் ஆதாயப்படுத்திக்கொள்வார்.
13. மனைவி கணவனை எவ்வாறு கனம் பண்ணலாம்?
13 இவ்வாறு சொல்லிய பிறகு, பேதுரு சாராளை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார். சாராளின் கணவன் ஆபிரகாம் விசுவாசத்திற்கு ஒரு மிகச் சிறந்த முன்மாதிரி. (ரோமர் 4:16, 17; கலாத்தியர் 3:6-9; 1 பேதுரு 3:6) சத்தியத்திலில்லாத கணவனுக்கே மனைவி அவ்வளவு மரியாதை காட்ட வேண்டியிருந்தால், சத்தியத்திலுள்ள கணவனுக்கு எவ்வளவு மரியாதை காட்ட வேண்டும்! சில விஷயங்களில் கணவனுடன் உங்களால் ஒத்துப்போக முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? இதைக் குறித்து எல்லோருக்கும் பொருந்தும் பொதுவான ஒரு அறிவுரையை இயேசு கொடுத்தார்: “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.” (மத்தேயு 5:41) உங்கள் கணவனுடைய விருப்பப்படி நடந்து அவரை நீங்கள் கனம் பண்ணுகிறீர்களா? அவ்வாறு செய்வது ஒருவேளை உங்களுக்கு கடினமாக இருந்தால், அதைப் பற்றி அவரிடம் பேசுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது உங்கள் கணவருக்குத் தெரியும் என நீங்களாகவே ஊகித்துக்கொள்ளாதீர்கள். அதேசமயத்தில், உங்கள் விருப்பத்தை குறித்து அவருடன் பேசும்போது மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள். பைபிள் நமக்கு இவ்வாறு புத்திமதி அளிக்கிறது: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”—கொலோசெயர் 4:6.
14. பெற்றோருக்கு கனம் செலுத்துவது எதையெல்லாம் உட்படுத்துகிறது?
14 பிள்ளைகளே உங்களைப் பற்றி என்ன? கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். . . . உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனையாயிருக்கிறது.” (எபேசியர் 6:1-3) ‘உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணு’ என்பதை வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியுங்கள். “கனம்” என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “பரிசு கொடு” அல்லது “மதிப்பு நிர்ணயி” என்பதாகும். ஆகவே, நியாயமற்றதாக உங்களுக்கு தோன்றும் பெற்றோரின் சில சட்டதிட்டங்களை முணுமுணுத்துக்கொண்டு கடைப்பிடிப்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. பெற்றோரை நீங்கள் உயர்வாய் மதிக்க வேண்டும் என்றும் அவர்களுடைய வழிநடத்துதலை அசட்டை செய்யக்கூடாது என்றும் கடவுள் உங்களிடம் சொல்கிறார்.—நீதிமொழிகள் 15:5.
15. பெற்றோர் தவறு செய்திருப்பதாக தோன்றினாலும் பிள்ளைகள் எவ்வாறு தொடர்ந்து மதிப்பை காட்டலாம்?
15 உங்கள் பெற்றோர்மேல் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு, மரியாதை குறையும் அளவிற்கு அவர்கள் ஏதாவது செய்தால் அப்போது என்ன? காரியங்களை அவர்களுடைய நோக்குநிலையிலிருந்து பார்க்க முயலுங்கள். அவர்கள் உங்களைப் ‘பெற்று’ வளர்த்தவர்கள் அல்லவா? (நீதிமொழிகள் 23:22) அவர்களுக்கு உங்கள்மேல் அன்பு இருக்கிறதல்லவா? (எபிரேயர் 12:7-11) எனவே, உங்கள் பெற்றோரிடம் மரியாதையுடன் பேசுங்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சாந்தமாக விளக்குங்கள். அதற்கும், நீங்கள் விரும்பாத விதத்திலேயே அவர்கள் பிரதிபலித்தால், அப்போதும் அவமரியாதையாக பேசாதீர்கள். (நீதிமொழிகள் 24:29) சவுல் ராஜா கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படியாதபோதிலும், தாவீது அவருக்கு எவ்வளவு மரியாதை காட்டினார் என்பதை நினைவில் வையுங்கள். உங்களுடைய விருப்புவெறுப்புகளை சமாளிப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். தாவீது இவ்வாறு சொன்னார்: “அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.”—சங்கீதம் 62:8; புலம்பல் 3:25-27.
முன்னின்று நடத்துபவர்களை கனம்பண்ணுங்கள்
16. பொய் போதகர்கள் மற்றும் தேவதூதர்களின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
16 சபை மூப்பர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுகின்றனர், இருப்பினும் அவர்களும் அபூரணர்களே, அவர்களும் தவறு செய்யக்கூடும். (சங்கீதம் 130:3; பிரசங்கி 7:20; அப்போஸ்தலர் 20:28; யாக்கோபு 3:2) அதன் விளைவாக, சபையிலுள்ள மற்றவர்கள் மூப்பர்களைப் பற்றி அதிருப்தி அடையலாம். சபையில் ஒரு காரியம் சரியாக கையாளப்படவில்லை என நீங்கள் நினைத்தால் என்ன செய்வீர்கள்? முதல் நூற்றாண்டு பொய் போதகர்களுக்கும் தேவதூதர்களுக்குமிடையே இருந்த வித்தியாசங்களைக் குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: “இவர்கள் [பொய் போதகர்கள்] துணிச்சலுள்ளவர்கள், அகந்தையுள்ளவர்கள்; மேன்மை பொருந்தியவர்களைப் பழித்துரைக்க அஞ்சாதவர்கள். இவர்களைவிட மிகுதியான ஆற்றலும் வல்லமையும் கொண்டுள்ள வானதூதர்கள்கூட அவர்களை ஆண்டவர் முன்னிலையில் பழித்துரைத்துக் கண்டனம் செய்வதில்லை.” (2 பேதுரு 2:10-13, பொ.மொ.) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின்மேல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த மூப்பர்களான ‘மேன்மை பொருந்தினவர்களை’ குறித்து அந்த பொய் போதகர்கள் தூஷணமாய் பேசினர், ஆனால் அவ்வாறு சகோதரர்களிடையே பிரிவினைகளை உண்டுபண்ணிக் கொண்டிருந்த அந்த பொய் போதகர்களைக் குறித்துக்கூட தேவதூதர்கள் எதுவுமே தூஷணமாக பேசவில்லை. மனிதரைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்களும், அவர்களைவிட அதிகமாய் நீதி நியாயம் தெரிந்திருந்தவர்களுமான தேவதூதர்கள், கிறிஸ்தவ சபையில் என்ன நடக்கிறது என்பதை நன்றாகவே அறிந்திருந்தனர். இருப்பினும், ‘யெகோவாமீது அவர்கள் வைத்திருந்த மரியாதையினால்’ அவரிடமே தீர்ப்பை விட்டுவிட்டனர்.—எபிரேயர் 2:6, 7; யூதா 9.
17. ஏதாவது ஒரு பிரச்சினையில் மூப்பர்களிடம் தவறு இருப்பதாக தோன்றும்போது எவ்வாறு விசுவாசத்தைக் காட்டலாம்?
17 ஒரு காரியம் சரியாக செய்யப்படாதிருக்கையில், கிறிஸ்தவ சபையின் ஜீவனுள்ள தலைவராகிய இயேசு கிறிஸ்து அதை பார்த்துக்கொள்வார் என அவரில் நாம் விசுவாசம் வைக்க வேண்டாமா? அவருக்கு சொந்தமான இந்த உலகளாவிய சபையில் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியாதா? ஒரு விஷயத்தை அவர் நடத்தும் விதத்தை நாம் மதிக்க வேண்டாமா, காரியங்களை கட்டுப்படுத்த அவருக்கு இருக்கும் திறமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாமா? ஆகவே, ‘மற்றவர்களை நியாந்தீர்ப்பதற்கு நாம் யார்?’ (யாக்கோபு 4:12; 1 கொரிந்தியர் 11:3; கொலோசெயர் 1:18) நீங்கள் நினைப்பவற்றை அல்லது உங்கள் மனதிலுள்ளவற்றை ஏன் ஜெபத்தில் யெகோவாவிடம் கொட்டிவிடக்கூடாது?
18, 19. ஒரு மூப்பர் தவறு செய்துவிட்டார் என நினைத்தால் அப்போது நீங்கள் என்ன செய்யலாம்?
18 மனித அபூரணத்தின் காரணமாக, பிரச்சினைகள் அல்லது கஷ்டங்கள் வரலாம். ஒருவேளை ஒரு மூப்பர் செய்த தவறு வேறொருவரை இடறலடையவும் செய்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் அவசரப்பட்டு செயல்பட்டால், அது அந்த நிலைமையை எந்த விதத்திலும் மாற்றப்போவதில்லை. அது ஒருவேளை அந்தப் பிரச்சினையை பெரிதாக்கிவிடலாம். ஆனால் ஆவிக்குரிய பகுத்துணர்வுடையோர், யெகோவா காரியங்களை சரிசெய்வதற்கும், ஏற்ற வேளையில் ஏற்ற வழியில் அந்த நபரை சிட்சிக்கவும் அவருக்காக காத்திருப்பர்.—2 தீமோத்தேயு 3:16; எபிரேயர் 12:7-11.
19 ஏதாவதொரு விஷயத்தில் நீங்கள் மனம் உடைந்திருந்தால் அப்போது என்ன செய்வது? அந்த விஷயத்தைக் குறித்து சபையிலுள்ள மற்றவர்களுடன் பேசுவதற்கு மாறாக, ஏன் நீங்கள் மூப்பர்களை அணுகி மரியாதையுடன் பேசக்கூடாது? அப்போது அவர்களை குற்றப்படுத்தி காரசாரமாக பேசாமல், நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை விளக்குங்கள். அவர்களிடம் ‘பரிவுடன்’ நடந்துகொள்ளுங்கள்; உங்கள் பிரச்சினையை மனம்விட்டு அவர்களிடம் சொல்லும்போது மரியாதை காட்டுங்கள். (1 பேதுரு 3:8) அவர்களுடன் பேசும்போது புண்படுத்தும் விதத்தில் பேசாமல், அவர்களுடைய கிறிஸ்தவ முதிர்ச்சியில் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் அன்பாய் அளிக்கும் எந்த வேதப்பூர்வ உற்சாகத்தையும் போற்றுதலோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோன்றினால், மூப்பர்கள் சரியானதை செய்வதற்கு யெகோவா வழிநடத்துவார் என நம்பிக்கையாயிருங்கள்.—கலாத்தியர் 6:10; 2 தெசலோனிக்கேயர் 3:13.
20. நாம் அடுத்த கட்டுரையில் எதை சிந்திக்கப் போகிறோம்?
20 இருப்பினும், அதிகாரத்திலுள்ளவர்களுக்கு கனம் செலுத்துவது, மதிப்பு காட்டுவது என்ற இந்த விஷயத்தை குறித்து நாம் சிந்திக்க வேண்டிய மற்ற அம்சங்களும் இருக்கின்றன. அதிகாரமுடைய ஸ்தானத்தில் இருப்போர், தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டாமா? இதை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• அதிகாரத்திலுள்ளவர்களை நாம் ஏன் கனம்பண்ண வேண்டும்?
• கடவுளால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மதிக்காதவர்களை யெகோவாவும் இயேசுவும் எவ்வாறு கருதுகிறார்கள்?
• அதிகாரத்திலுள்ளவர்களை கனம்பண்ணினவர்களைப் பற்றிய என்ன நல்ல உதாரணங்கள் இருக்கின்றன?
• நம்மேல் அதிகாரமுடைய ஒருவர் தவறு செய்துவிட்டதாக தோன்றினால் அப்போது நாம் என்ன செய்யலாம்?
[கேள்விகள்]
[பக்கம் 12-ன் படம்]
சாராள் ஆபிரகாமின் அதிகாரத்திற்கு ஆழ்ந்த மரியாதையை காட்டினார், அதனால் சந்தோஷமாயிருந்தார்
[பக்கம் 13-ன் படம்]
மீகாள் தன் கணவன் தாவீதை, குடும்பத் தலைவனாகவும் அரசனாகவும் கனம் பண்ணத் தவறினாள்
[பக்கம் 15-ன் படம்]
‘யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு எதிராக கை ஓங்குவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது!’
[பக்கம் 16-ன் படம்]
உங்கள் மனதிலுள்ளவற்றை ஏன் ஜெபத்தில் யெகோவாவிடம் கொட்டிவிடக்கூடாது?