தம்பதியருக்கு ஞானமான அறிவுரை
“மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல், உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்.”—எபேசியர் 5:22, 25.
1. திருமணத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டம் என்ன?
ஆணும் பெண்ணும் ‘ஒரே மாம்சமாக’ இருக்கும்படி கடவுளால் ஒன்றாக இணைக்கப்படும் ஏற்பாடே திருமணம் என இயேசு கூறினார். (மத்தேயு 19:5, 6) இந்த ஏற்பாட்டில், மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட இரு நபர்கள் ஒரேவிதமான விருப்பங்களை வளர்த்துக்கொண்டு, ஒரேவிதமான இலக்குகளை நோக்கி உழைக்க கற்றுக்கொள்கிறார்கள். திருமணம் என்பது வாழ்நாள் பூராவும் நீடிக்கும் ஓர் ஏற்பாடு, மிக எளிதாக கைவிடப்படும் தற்காலிக ஒப்பந்தமல்ல. பல நாடுகளில், விவாகரத்து வாங்குவது ஒன்றும் கஷ்டமல்ல, ஆனால் ஒரு கிறிஸ்தவருடைய பார்வையில் திருமண பந்தம் புனிதமானது. மிக முக்கியமான ஒரு காரணத்தின் நிமித்தம் மட்டுமே இந்தப் பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.—மத்தேயு 19:9.
2. (அ) தம்பதியருக்கு என்ன உதவி கிடைக்கிறது? (ஆ) திருமணம் வெற்றிபெற கடினமாக உழைப்பது ஏன் முக்கியம்?
2 திருமண ஆலோசகர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் மாற்றங்களை நன்கு அனுசரித்துப் போவதுதான் நல்ல திருமணத்திற்கு அடையாளம்; புதிய சூழ்நிலைகளைச் சமாளிப்பது, பிரச்சினைகளைத் தீர்ப்பது, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கிடைக்கிற வள ஆதாரங்களைப் பயன்படுத்துவது ஆகியவையெல்லாம் அதில் உட்படும்.” கிறிஸ்தவ துணைவர்களைப் பொறுத்தவரை, பைபிள் தரும் ஞானமான அறிவுரை, சக கிறிஸ்தவர்கள் தரும் ஆதரவு, ஜெபத்தின் மூலம் யெகோவாவுடன் நெருங்கிய உறவு ஆகியவையே அந்த வள ஆதாரங்களாகும். வெற்றிகரமான திருமணம் கஷ்டங்கள் மத்தியிலும் நிலைத்திருக்கிறது, காலங்கள் செல்லச் செல்ல கணவனுக்கும் மனைவிக்கும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது. மிக முக்கியமாக, திருமணத்தை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவனுக்கு மகிமை சேர்க்கிறது.—ஆதியாகமம் 2:18, 21-24; 1 கொரிந்தியர் 10:31; எபேசியர் 3:14; 1 தெசலோனிக்கேயர் 5:17.
இயேசுவையும் அவருடைய சபையையும் பின்பற்றுங்கள்
3. (அ) தம்பதியருக்கு பவுல் தரும் அறிவுரையைச் சுருக்கி உரைக்கவும். (ஆ) இயேசு வைத்துள்ள சிறந்த முன்மாதிரி என்ன?
3 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ தம்பதியருக்கு அப்போஸ்தலன் பவுல் ஞானமான அறிவுரை வழங்கினார். “சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்று எழுதினார். (எபேசியர் 5:24, 25, 27) எவ்வளவு அருமையான ஒப்புமை! புருஷருக்கு தாழ்மையுடன் கீழ்ப்படிகிற கிறிஸ்தவ மனைவிமார் தலைமைத்துவ நியமத்தை ஏற்று அதை கைக்கொள்வதில் சபையின் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். தங்களுடைய மனைவிமார்களிடம் எப்போதும் அன்பு செலுத்துகிற கிறிஸ்தவ கணவன்மார்கள், இன்ப காலங்களிலும் துன்ப காலங்களிலும் சபையை நேசித்து அதை கவனித்துக்கொள்ளும் கிறிஸ்துவின் மாதிரியை நெருக்கமாக பின்பற்றுகிறார்கள்.
4. இயேசுவின் முன்மாதிரியை எப்படி கணவன்மார்கள் பின்பற்றலாம்?
4 கிறிஸ்தவ கணவன்மார்களே குடும்பத்திற்கு தலைவர்களாக இருக்கிறார்கள், அதேசமயத்தில் அவர்களுக்கும் தலைவர் இருக்கிறார், அவரே இயேசு. (1 கொரிந்தியர் 11:3) ஆகவே, இயேசு தமது சபையைக் கவனித்துக் காப்பது போல, கணவன்மார்களும் தங்களுடைய குடும்பத்தை ஆன்மீக ரீதியிலும் மற்றபடியும் அன்புடன் கவனித்துக் காக்கிறார்கள், அதற்காக தங்களுடைய பாகத்தில் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மேலாக குடும்பத்தின் நலனையே முதலாவதாக வைக்கிறார்கள். இயேசு இவ்வாறு கூறினார்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) இந்த நியமம் மணவாழ்க்கையில் மிக முக்கியமாக பொருந்துகிறது. இதைத்தான் பவுல் இவ்வாறு தெரியப்படுத்தினார்: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; . . . தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; . . . ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” (எபேசியர் 5:28, 29) ஒருவர் தன்னை போஷித்துக் காப்பாற்ற எவ்வளவு ஊக்கமாக முயலுகிறாரோ அவ்வளவு ஊக்கமாக மனைவியையும் போஷித்துக் காப்பாற்ற முயல வேண்டும்.
5. மனைவிமார்கள் எப்படி கிறிஸ்தவ சபையை பின்பற்றலாம்?
5 தேவபக்தியுள்ள மனைவிமார்கள் கிறிஸ்தவ சபையைப் பார்த்துப் பின்பற்றுகிறார்கள். இயேசு பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் தங்களுடைய தொழில்களை மனப்பூர்வமாக விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அவருடைய மரணத்திற்குப்பின், தொடர்ந்து அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்; கடந்த சுமார் 2,000 வருடங்களாக, உண்மையான கிறிஸ்தவ சபை தொடர்ந்து இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து, எல்லா காரியங்களிலும் அவருடைய தலைமை ஸ்தானத்துக்கு கட்டுப்பட்டு வந்திருக்கிறது. இது போலவே கிறிஸ்தவ மனைவிமார்களும் தங்களுடைய கணவன்மார்களை ஏளனமாக கருதுவதுமில்லை, அவர்களுடைய வேதப்பூர்வ தலைமைத்துவத்தை மதிப்புக்குறைவாக நினைப்பதும் இல்லை. மாறாக, தங்களுடைய கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள், அவர்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து உற்சாகப்படுத்துகிறார்கள். கணவனும் மனைவியும் இப்படி அன்பான முறையில் நடந்து கொள்ளும்போது, அவர்களுடைய மணவாழ்க்கை நிச்சயம் வெற்றியடையும், அவர்கள் இருவருமே இந்த உறவில் மகிழ்ச்சி காண்பார்கள்.
தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்
6. கணவன்மார்களுக்கு பேதுரு கொடுத்த அறிவுரை என்ன, அது ஏன் முக்கியம்?
6 அப்போஸ்தலன் பேதுருவும்கூட தம்பதியருக்கு அறிவுரை கொடுத்தார், முக்கியமாக கணவன்மார்களுக்கு நேரடியான அறிவுரை கொடுத்தார். “புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்” என அவர் எழுதினார். (1 பேதுரு 3:7) பேதுருவின் அறிவுரை எவ்வளவு முக்கியம் என்பதை அந்த வசனத்தின் மத்தியிலுள்ள வார்த்தைகள் காட்டுகின்றன. கணவன் தனது மனைவியைக் கனப்படுத்தத் தவறினால், யெகோவாவுடன் உள்ள அவருடைய உறவு பாதிக்கப்படும். அவருடைய ஜெபங்களுக்குத் தடை ஏற்படும்.
7. கணவன் தனது மனைவியை எப்படி கனப்படுத்த வேண்டும்?
7 அப்படியானால், கணவன்மார்கள் எவ்வாறு தங்களுடைய மனைவிமார்களைக் கனப்படுத்தலாம்? மனைவியைக் கனப்படுத்துவது என்பது அவளை அன்புடனும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதாகும். மனைவியை இப்படி அன்புடன் நடத்துவது அன்று அநேகருக்கு வினோதமாக தோன்றியிருக்கலாம். கிரேக்க அறிஞர் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “ரோம சட்டத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. சட்டத்தின் பார்வையில் அவள் ஒரு சிறுபிள்ளைதான். . . . அவள் தனது கணவனுக்கு முழுமையாக கீழ்ப்பட்டு, அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.” இதற்கும் கிறிஸ்தவ போதனைகளுக்கும் எவ்வளவு வேறுபாடு! கிறிஸ்தவ கணவன் தனது மனைவியை கனப்படுத்தினார். அவளை கிறிஸ்தவ நியமங்களின்படி நடத்தினார், தன் சொந்த விருப்பத்தின்படி அல்ல. அதோடு, அவள் பெலவீன பாண்டமென்று அறிந்து “விவேகத்தோடு” நடத்தினார்.
‘பெலவீன பாண்டம்’—என்ன கருத்தில்?
8, 9. பெண்கள் எந்த விதங்களில் ஆண்களுக்குச் சமமாக இருக்கிறார்கள்?
8 பெண் ‘பெலவீன பாண்டம்’ என்று சொன்னபோது, அறிவு ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை பேதுரு அர்த்தப்படுத்தவில்லை. சபையில் பெண்களால் பெற முடியாத ஊழிய சிலாக்கியங்களை கிறிஸ்தவ ஆண்கள் பலர் பெற்றிருப்பது உண்மைதான்; குடும்பத்தில் கணவன்மார்களுக்குப் பெண்கள் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதும் உண்மைதான். (1 கொரிந்தியர் 14:35; 1 தீமோத்தேயு 2:12) என்றாலும், விசுவாசமும் சகிப்புத்தன்மையும் உயர்ந்த ஒழுக்க தராதரங்களும் ஆண்கள் பெண்கள் ஆகிய இரு பாலாரிடமுமே ஒரேபோல் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், பேதுரு கூறியபடி, கணவன் மனைவி ஆகிய இருவருமே ‘நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களாக’ இருக்கிறார்கள். இரட்சிப்பைப் பொறுத்தவரை, யெகோவா தேவனுக்கு முன்பு அவர்கள் இருவரும் சமமாகத்தான் இருக்கிறார்கள். (கலாத்தியர் 3:28) முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்குப் பேதுரு எழுதிய வார்த்தைகள், ‘கிறிஸ்துவோடு உடன் சுதந்திரர்களாக’ தாங்களும் தங்கள் மனைவிமாரும் ஒரே பரலோக நம்பிக்கையைப் பெற்றிருந்ததை கிறிஸ்தவ கணவன்மார்களுக்கு நினைப்பூட்டின. (ரோமர் 8:17) ஒருநாள் அவர்கள் இருவரும் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் ஆசாரியர்களாகவும் ராஜாக்களாகவும் சேவை செய்வார்களே!—வெளிப்படுத்துதல் 5:10.
9 அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ மனைவிமார்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ கணவன்மார்களுக்கு எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை. நியமத்தின்படி பார்த்தால், பூமிக்குரிய நம்பிக்கையுடையவர்களின் விஷயத்திலும் இதுவே உண்மை. ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்த ஆண்கள் பெண்கள் இருவருமே தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுக்கிறார்கள். ‘இரவும் பகலும்’ யெகோவாவை ஆர்ப்பரித்துத் துதிப்பதில் உலகெங்கிலும் ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருமே பங்குகொள்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14, 15) ‘தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப்’ பெற்று, ‘மெய் வாழ்க்கையில்’ களிகூரும் வாய்ப்பை ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருமே எதிர்நோக்கியிருக்கிறார்கள். (ரோமர் 8:20; 1 தீமோத்தேயு 6:19; NW) அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருந்தாலும்சரி வேறே ஆடுகளாக இருந்தாலும்சரி, எல்லா கிறிஸ்தவர்களும் ‘ஒரே மேய்ப்பனின்கீழ்’ ‘ஒரே மந்தையாக’ யெகோவாவுக்கு ஒன்றுசேர்ந்து சேவை செய்கிறார்கள். (யோவான் 10:16) கிறிஸ்தவ கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தகுந்த கனத்தை செலுத்துவதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த காரணம்!
10. என்ன கருத்தில் பெண்கள் ‘பெலவீன பாண்டமாக’ இருக்கிறார்கள்?
10 அப்படியானால், பெண்கள் எந்த விதத்தில் ‘பெலவீன பாண்டமாக’ இருக்கிறார்கள்? பொதுவாக, ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் சிறிய உடற்கட்டுடன், உடல் பலம் குறைந்தவர்களாக இருப்பதால் ஒருவேளை பேதுரு இதை குறிப்பிட்டிருக்கலாம். அதோடு, அபூரணத்தின் காரணமாக, குழந்தை பிறப்பிக்கும் அற்புதமான பாக்கியம் பெண்களை உடல் ரீதியில் பாதிக்கிறது. குழந்தை பெற்றெடுக்கும் வயதுடைய பெண்களுக்கு உடல் ரீதியில் அடிக்கடி அசௌகரியங்கள் ஏற்படலாம். இத்தகைய அசௌகரியங்களை அனுபவிக்கையில் அல்லது கர்ப்ப காலத்திலும் பிள்ளை பெற்றெடுக்கும் சமயத்திலும் அனுபவிக்கும் வேதனைகளைத் தாங்கிக்கொள்கையில் அவர்களுக்கு நிச்சயமாகவே விசேஷ கவனமும் கரிசனையும் தேவை. மனைவிக்குத் தேவைப்படும் மானசீக ஆதரவை உணர்ந்து அவளை கனப்படுத்துகிற கணவன், மணவாழ்க்கையின் வெற்றிக்கு பெரிதும் பங்களிப்பார்.
மத ரீதியில் பிளவுபட்ட குடும்பத்தில்
11. கணவனும் மனைவியும் மாறுபட்ட மதத்தவராக இருந்தாலும்கூட திருமணம் என்ன கருத்தில் வெற்றிபெற முடியும்?
11 தம்பதியர் வேறுபட்ட மதத்தினராக இருந்தால் என்ன செய்வது? அதாவது, கல்யாணம் செய்துகொண்ட பிறகு ஒருவர் மட்டுமே கிறிஸ்தவ சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் என்ன செய்வது? இத்தகைய திருமணம் வெற்றிபெற முடியுமா? வெற்றிபெற முடியும் என்பதை அநேகருடைய அனுபவங்கள் காட்டுகின்றன. மாறுபட்ட மத நம்பிக்கைகளைக் கொண்ட கணவன் மனைவியும்கூட வெற்றிகரமான மணவாழ்க்கையை அனுபவிக்க முடியும்; அதாவது நீடித்த மணவாழ்க்கையை, இருவருக்கும் மகிழ்ச்சி தருகிற மணவாழ்க்கையை அனுபவிக்க முடியும். அதுமட்டுமல்ல, அந்தத் திருமணம் யெகோவாவின் பார்வையில் இன்னும் மதிப்புள்ளதாகவே இருக்கிறது; அவர்கள் இன்னும் ‘ஒரே மாம்சமாகவே’ இருக்கிறார்கள். ஆகவே, ‘அவிசுவாசியான துணைவர் உங்களுடன் வாழ விரும்பினால் அவருடன் சேர்ந்து வாழுங்கள்’ என்றே கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது. பிள்ளைகள் இருந்தால், விசுவாசத்திலுள்ள பெற்றோருடைய உண்மைத் தன்மையிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள்.—1 கொரிந்தியர் 7:12-14.
12, 13. பேதுருவின் அறிவுரையைப் பின்பற்றி, அவிசுவாசியான கணவன்மாருக்கு கிறிஸ்தவ மனைவிமார் எப்படி உதவலாம்?
12 மத ரீதியில் பிளவுபட்ட குடும்பத்தில் வாழ்க்கை நடத்தும் கிறிஸ்தவ பெண்களுக்கு பேதுரு அன்பான அறிவுரை கொடுக்கிறார். அவருடைய அறிவுரையிலுள்ள நியமத்தை, அதே சூழ்நிலையில் இருக்கும் கிறிஸ்தவ கணவன்மார்களுக்கும் பொருத்தலாம். பேதுரு இவ்வாறு எழுதுகிறார்: “மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்.”—1 பேதுரு 3:1, 2.
13 மனைவி தனது மதத்தைப் பற்றி கணவனுக்கு சாதுரியமாக விளக்கினால் நல்லது. ஆனால் செவிகொடுக்க அவருக்கு விருப்பமில்லையென்றால் என்ன செய்வது? அது அவருடைய இஷ்டம். என்றாலும், நம்பிக்கை இழந்துவிட வேண்டியதில்லை, ஏனென்றால் கிறிஸ்தவ நடத்தையும்கூட வலிமைமிக்க சாட்சி கொடுக்கிறது. முதலில் தங்களுடைய மனைவிமார்களின் மதத்தில் ஆர்வமில்லாதிருந்த அல்லது அதை எதிர்த்த கணவன்மார்களில் பலர் பிற்பாடு மனைவியின் சிறந்த நடத்தையைப் பார்த்து ‘நித்திய ஜீவனுக்குரிய பாதையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.’ (அப்போஸ்தலர் 13:48) கிறிஸ்தவ சத்தியத்தைக் கணவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்கூட, தனது மனைவியின் நடத்தையைப் பார்த்து மனம் கவரப்படலாம், அது திருமண பந்தத்தைப் பலப்படுத்தலாம். ஒரு யெகோவாவின் சாட்சியுடைய கணவர், யெகோவாவின் சாட்சிகளுடைய உயர்ந்த தராதரங்களுக்கு இசைவாக தன்னால் ஒருபோதும் வாழ முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டார். இருந்தாலும், செய்தித்தாளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘நல்ல மனைவியை பெற்ற பாக்கியசாலி’ என தன்னை அழைத்துக்கொண்டார், தனது மனைவியையும் மற்ற யெகோவாவின் சாட்சிகளையும் உள்ளப்பூர்வமாக பாராட்டவும் செய்தார்.
14. அவிசுவாசியான மனைவிமார்களுக்கு எப்படி கணவன்மார்கள் உதவலாம்?
14 பேதுருவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள நியமங்களைப் பின்பற்றிய கிறிஸ்தவ கணவன்மார்களும் இதேபோல தங்களுடைய நடத்தையினாலே மனைவியை ஆதாயப்படுத்தியிருக்கிறார்கள். தங்களுடைய கணவன்மார்கள் பொறுப்புள்ளவர்களாக மாறியிருப்பதை அவிசுவாசியான மனைவிமார் கவனித்திருக்கிறார்கள்; அதோடு, புகைப்பிடித்தல், குடித்தல், சூதாடுதல் போன்றவற்றில் காசை வீணாக்குவதை நிறுத்தியிருப்பதையும் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்காததையும்கூட கவனித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் கிறிஸ்தவ சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்களை சந்தித்திருக்கிறார்கள். அதனால், அன்பான கிறிஸ்தவ சகோதரத்துவத்தைக் கண்டு கவரப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் கண்டவை யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கும் உதவி செய்திருக்கின்றன.—யோவான் 13:34, 35.
“இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே”
15, 16. கிறிஸ்தவ மனைவியின் எத்தகைய நடத்தை அவிசுவாசியான கணவருடைய நன்மதிப்பைப் பெற்றுத்தரும்?
15 எத்தகைய நடத்தை கணவனுடைய நன்மதிப்பை பெற்றுத்தரும்? கிறிஸ்தவ பெண்கள் வளர்த்துக்கொள்ளும் நடத்தையே கணவருடைய நன்மதிப்பைப் பெற்றுத்தரும். பேதுரு கூறுகிறார்: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.”—1 பேதுரு 3:3-6.
16 வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதபடி கிறிஸ்தவ பெண்ணுக்கு பேதுரு அறிவுரை கூறுகிறார். அதற்கு மாறாக, பைபிள் போதனைகள் அவளுடைய உள்ளார்ந்த இயல்பை செதுக்கிச் சீரமைத்திருப்பதை அவளுடைய கணவர் பகுத்துணர வேண்டும். அவளுடைய புதிய ஆளுமையை அவர் கண்ணார காண வேண்டும். அப்போது அவளுடைய பழைய ஆளுமையையும் புதிய ஆளுமையையும் அவர் வேறுபடுத்திப் பார்ப்பார். (எபேசியர் 4:22-24) அவளுடைய “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி” அவருக்கு நிச்சயம் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் மனங்கவரத்தக்கதாகவும் இருக்கும். இத்தகைய ஆவி கணவனுக்குப் பிரியமாக இருப்பது மட்டுமல்லாமல், ‘தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றதாகவும்’ இருக்கும்.—கொலோசெயர் 3:12.
17. கிறிஸ்தவ மனைவிமாருக்கு சாராள் எப்படி சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறாள்?
17 சாராள் சிறந்த முன்மாதிரியாக குறிப்பிடப்படுகிறாள்; கணவன்மார்கள் விசுவாசிகளாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, கிறிஸ்தவ மனைவிமார் பின்பற்றுவதற்குச் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறாள். ஆபிரகாமை தனது தலைவராக சாராள் கருதினாள் என்பதில் சந்தேகமில்லை. அவள் தனது இருதயத்திலும்கூட, அவரை “ஆண்டவன்” என அழைத்தாள். (ஆதியாகமம் 18:12) அது அவளுடைய கண்ணியத்தைக் குறைத்துவிடவில்லை. உறுதியான விசுவாசத்துடன் ஆன்மீக ரீதியில் அவள் பலமிக்க பெண்மணியாக விளங்கினாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால், ‘மேகம் போன்ற திரளான சாட்சிகளில்’ அவளும் ஒருத்தியாக இருக்கிறாள்; விசுவாசத்தில் அந்த சாட்சிகள் வைத்திருக்கும் சிறந்த முன்மாதிரி ‘நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுவதற்கு’ நம்மை உந்துவிக்க வேண்டும். (எபிரெயர் 11:11; 12:1) ஆகவே, ஒரு கிறிஸ்தவ மனைவி சாராளைப் போல இருப்பது எவ்விதத்திலும் மதிப்புக் குறைவானதல்ல.
18. மத ரீதியில் பிளவுபட்ட குடும்பத்தில் என்ன நியமங்களை மனதிற்கொள்ள வேண்டும்?
18 திருமணத் துணைவர்கள் வேறுபட்ட மதத்தினராக இருந்தாலும் கணவரே தலைவராக இருக்கிறார். அவர் விசுவாசியாக இருந்தால், தனது மதத்தை விட்டுக்கொடுத்து விடாமல் அதேசமயத்தில் தனது மனைவியின் மத நம்பிக்கைகளை மதித்து நடப்பார். மனைவி விசுவாசியாக இருந்தால், அவளும் தனது மத நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்துவிட மாட்டாள். (அப்போஸ்தலர் 5:29) அதேசமயத்தில் தனது கணவருடைய தலைமை ஸ்தானத்தை எதிர்த்து செயல்பட மாட்டாள். அவருடைய ஸ்தானத்தை மதித்து, ‘புருஷனைப் பற்றிய பிரமாணத்திற்கு’ கீழ்ப்பட்டிருப்பாள்.—ரோமர் 7:2.
பைபிள் தரும் ஞானமான அறிவுரை
19. திருமண பந்தத்தைச் சீர்குலைக்கும் பிரச்சினைகள் சில யாவை, ஆனால் இத்தகைய பிரச்சினைகளை எப்படி தவிர்க்கலாம்?
19 இன்றைக்கு அநேக காரியங்கள் திருமண பந்தத்தை சீர்குலைக்கலாம். ஆண்கள் சிலர் தங்களுடைய பொறுப்புகளை ஏற்கத் தவறிவிடுகிறார்கள். பெண்கள் சிலர் தங்கள் கணவனின் தலைமை ஸ்தானத்தை ஏற்க மறுக்கிறார்கள். சில குடும்பங்களில், ஒருவர் மற்றொருவரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, பொருளாதார நெருக்கடி, அபூரணம், உலக மனப்பான்மை, அதன் ஒழுக்கயீனம் மற்றும் மாறுபட்ட நெறிமுறைகள் ஆகியவை உண்மைப் பற்றுறுதியைப் பரீட்சிக்கலாம். எனினும், பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிற கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும், தங்களுடைய சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும்சரி, யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். மணவாழ்வில் ஒருவர் மாத்திரமே பைபிள் நியமங்களைப் பின்பற்றினால்கூட இருவருமே பின்பற்றாத குடும்பத்தைவிட நிலைமை நன்றாக இருக்கும். அதோடு, கஷ்டமான சூழ்நிலைமைகளிலும்கூட தங்களுடைய திருமண உறுதிமொழியை உண்மையுடன் கடைப்பிடிக்கும் தமது ஊழியர்களை யெகோவா நேசிக்கிறார், ஆதரிக்கிறார். அவர்களுடைய உண்மைப் பற்றுறுதியை அவர் மறந்துவிடுவதில்லை.—சங்கீதம் 18:25, NW; எபிரெயர் 6:10; 1 பேதுரு 3:12.
20. அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பேதுரு தரும் அறிவுரை என்ன?
20 திருமணத் துணைவர்களுக்கு அறிவுரை கொடுத்த பிறகு, உற்சாகமூட்டும் கனிவான வார்த்தைகளுடன் அப்போஸ்தலன் பேதுரு முடிக்கிறார்: “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள்.” (1 பேதுரு 3:8, 9) அனைவருக்கும், முக்கியமாக தம்பதியருக்கு எப்பேர்ப்பட்ட ஞானமான அறிவுரை!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கிறிஸ்தவ கணவன்மார்கள் எப்படி இயேசுவை பின்பற்றுகிறார்கள்?
• கிறிஸ்தவ மனைவிமார்கள் எப்படி சபையை பின்பற்றுகிறார்கள்?
• கணவன்மார்கள் என்னென்ன வழிகளில் தங்களுடைய மனைவிமார்களை கனப்படுத்தலாம்?
• கணவன் அவிசுவாசியாக இருந்தால் கிறிஸ்தவ மனைவி எப்படி நடந்துகொள்வது சிறந்தது?
[பக்கம் 16-ன் படம்]
கிறிஸ்தவ கணவன் தனது மனைவி மீது அன்புகாட்டி, அக்கறையுடன் கவனிக்கிறார்
கிறிஸ்தவ மனைவி தனது கணவனுக்கு மதிப்பும் மரியாதையும் காட்டுகிறாள்
[பக்கம் 17-ன் படம்]
ரோம சட்டத்தைப் போலின்றி, மனைவியை கணவன் கனப்படுத்த வேண்டுமென பைபிள் கற்பிக்கிறது
[பக்கம் 18-ன் படம்]
‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்த ஆண்களும் பெண்களும் பரதீஸில் என்றென்றும் வாழ்வதை எதிர்நோக்கியிருக்கிறார்கள்
[பக்கம் 20-ன் படம்]
ஆபிரகாமை தனது ஆண்டவனாக சாராள் கருதினாள்