படிப்பு 27
மனதிலிருந்து பேசுதல்
உங்களுடைய பேச்சை தயாரிக்க நீங்கள் கடினமாக உழைத்திருக்கலாம். தகவல் நிறைந்த பேச்சாக தயாரித்திருக்கலாம். நன்கு தர்க்க ரீதியில் அமைத்திருக்கலாம். அதை உங்களால் சரளமாகவும் பேச முடியலாம். ஆனால் சபையார் முழு கவனம் செலுத்தவில்லை என்றால்—மனம் அலைபாய்வதால் நீங்கள் சொல்வதை அவ்வப்போது மட்டுமே கேட்கிறார்கள் என்றால்—உங்களுடைய பேச்சு திறம்பட்டதென சொல்ல முடியுமா? பேச்சின் மீது மனதை ஒருமுகப்படுத்துவது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தால், அவர்களுடைய இருதயத்தை உங்களால் எட்ட முடியுமா?
இப்படிப்பட்ட பிரச்சினைக்கு ஆணிவேர் எது? பல்வேறு காரணிகள் பங்களிக்கலாம். பெரும்பாலும், மனதிலிருந்து பேசத் தவறுவதே காரணம். வேறு வார்த்தைகளில் சொன்னால், பேச்சாளர் அடிக்கடி குறிப்புத்தாளையே பார்த்துக் கொண்டிருப்பது அல்லது மிகவும் சம்பிரதாயமாக பேசுவது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் பேச்சு தயாரிக்கப்படும் முறையோடு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன.
முதலில் பேச்சை முழுமையாக எழுதிக்கொண்டு பின்பு அதை குறிப்புத்தாளாக மாற்றினால், அந்தப் பேச்சை மனதிலிருந்து கொடுப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும். ஏன்? ஏனென்றால் நீங்கள் பயன்படுத்தப் போகும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள். பேச்சை கொடுப்பதற்கு நீங்கள் குறிப்புத்தாளை பயன்படுத்தினாலும்கூட, முதன்முதலில் தாளில் எழுதிய வார்த்தைகளையே ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சி செய்வீர்கள். பேச்சை எழுதி வைக்கும்போது மொழிநடை மிகவும் சம்பிரதாயமாக இருக்கும், வாக்கிய அமைப்பும் அன்றாட பேச்சு நடையில் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கும். ஆகவே அந்தப் பேச்சைக் கொடுக்கும்போதும் அதே சிக்கல்கள் இருக்கும்.
பேச்சை விலாவாரியாக எழுதிக் கொள்வதற்குப் பதிலாக, பின்வரும் முறையை முயன்று பாருங்கள்: (1) ஒரு மையப்பொருளையும் அதை விரிவாக்குவதற்கு பயன்படுத்தப்போகும் முக்கிய குறிப்புகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சிறிய பேச்சிற்கு இரண்டு முக்கிய குறிப்புகள் போதும். நீண்ட பேச்சிற்கு நான்கு அல்லது ஐந்து குறிப்புகளை வைத்துக்கொள்ளலாம். (2) ஒவ்வொரு முக்கிய குறிப்பிற்கும் கீழ், அதை விரிவாக்குவதற்கு நீங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ள முக்கிய வசனங்களை குறித்துக் கொள்ளுங்கள்; அதோடு உதாரணங்களையும் முக்கிய விவாதங்களையும் குறித்துக் கொள்ளுங்கள். (3) அந்தப் பேச்சை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அதற்காக ஓரிரு வாக்கியங்களை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளலாம். மேலும், உங்களுடைய முடிவுரையையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
பேச்சிற்கு தயாரிப்பு மிக முக்கியம். ஆனால் பேச்சை மனப்பாடம் செய்யும் நோக்கத்தோடு வார்த்தைக்கு வார்த்தை மறுபார்வை செய்யாதீர்கள். மனதிலிருந்து பேச்சு கொடுப்பதற்கு தயாரிக்கையில், வார்த்தைகளுக்கு அல்ல, ஆனால் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கருத்துக்கள் அடுத்தடுத்து கோர்வையாக உங்களுடைய மனதில் நன்கு பதியும்வரை தயாரிக்க வேண்டும். உங்களுடைய பேச்சு தர்க்க ரீதியில் நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தால், இது கஷ்டமாக இருக்காது; மேலும், பேச்சு கொடுக்கையில் கருத்துக்கள் இயல்பாகவும் சுலபமாகவும் வரும்.
பயன்களை சிந்தித்துப் பாருங்கள். மனதிலிருந்து பேச்சு கொடுப்பதன் முக்கிய பயன் என்னவென்றால், நீங்கள் மிகவும் இயல்பாக பேசுவீர்கள்; இது கேட்போரின் மனதை உடனடியாக எட்டும். மேலும் உங்களுடைய பேச்சு அதிக உயிரூட்டமுள்ளதாக, ஆர்வமூட்டுவதாக இருக்கும்.
இப்படி மனதிலிருந்து பேசுவது, சபையாரை பார்த்துப் பேசுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பளிக்கிறது; அவர்களுடன் பேச்சுத் தொடர்பு கொள்வதை முன்னேற்றுவிக்கிறது. ஒவ்வொரு வாக்கியத்திலுள்ள வார்த்தைகளுக்கும் நீங்கள் குறிப்புத்தாளையே சார்ந்திராததால், உங்களுடைய பொருளை நன்றாக அறிந்திருக்கிறீர்கள் என்றும், நீங்கள் சொல்வதை மனப்பூர்வமாக நம்புகிறீர்கள் என்றும் சபையார் அறிந்துகொள்வார்கள். ஆகவே, இந்த முறையில் பேச்சு கொடுப்பது கனிவாகவும் உரையாடல் முறையிலும் இருதயப்பூர்வமாகவும் பேச துணைபுரிகிறது; இவ்வாறு கேட்போரின் இருதயத்தைத் தொட உதவுகிறது.
மனதிலிருந்து பேசுவது தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கவும் இடமளிக்கிறது. தகவல்களை மாற்றாமல் எழுதி வைத்தபடியே பேச வேண்டும் என்ற அவசியம் இராது. ஒருவேளை நீங்கள் பேச்சு கொடுக்க வேண்டிய நாளின் காலையில் உங்களுடைய பொருளோடு நேரடியாக தொடர்புடைய முக்கியமான ஒரு செய்தி பத்திரிகையில் வரலாம். அதை உங்களுடைய பேச்சில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் அல்லவா? அல்லது நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, சபையார் மத்தியில் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் அநேகர் அமர்ந்திருப்பதை காண்கிறீர்கள். நீங்கள் பேசும் விஷயம் எவ்வாறு அவர்களுடைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள உதவும் விதமாக உங்களுடைய உதாரணங்களையும் பொருத்தத்தையும் சற்று மாற்றியமைப்பது எவ்வளவு நன்றாக இருக்கும்!
மனதிலிருந்து பேசுவதால், உங்களுடைய மனதிற்கே தூண்டுதல் கிடைப்பது மற்றொரு பயனாகும். போற்றுதலோடு நன்கு பிரதிபலிக்கிற சபையார் இருக்கும்போது, நீங்களே அதிக ஆர்வமடைந்து கருத்துக்களை விரிவாக்குவீர்கள் அல்லது சில குறிப்புகளை மீண்டும் சொல்லி வலியுறுத்துவீர்கள். சபையாருடைய ஆர்வம் தணிவதை நீங்கள் பார்க்கையில், கவனம் செலுத்தாத அவர்களிடம் வீணாக பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக அந்தப் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
படுகுழிகளைத் தவிருங்கள். மனதிலிருந்து பேசும் முறையில் உள்ள படுகுழிகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதில் ஒன்று, உரிய நேரத்திற்கும் அதிகமாக எடுத்துக்கொள்வது. பேச்சின்போது அதிகமான விஷயங்களை நுழைத்தால் நேரத்திற்குள் முடிப்பது பிரச்சினையாக இருக்கலாம். பேச்சின் ஒவ்வொரு பகுதிக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை குறிப்புத்தாளில் குறித்துவைத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்கலாம். பின்பு அதை அப்படியே பின்பற்றுங்கள்.
மற்றொரு பிரச்சினை மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையாகும்; முக்கியமாக அனுபவமிக்க பேச்சாளர்களுக்கு இது ஒரு படுகுழி. பொதுப் பேச்சு கொடுப்பதில் அனுபவம் பெற்றவர்களாக ஏதாவது சில கருத்துக்களை சேகரித்து ஒதுக்கப்பட்ட நேரத்தை ஓட்டுவதில் சிலருக்கு எந்தக் கஷ்டமும் இராது. ஆனால் மனத்தாழ்மையும் யெகோவா தாமே மகத்தான போதகராக இருக்கும் ஒரு கல்வித் திட்டத்தில் பங்குகொள்கிறோம் என்ற மதித்துணர்வும் ஒவ்வொரு நியமிப்பையும் ஜெப சிந்தையோடு நன்கு தயாரிப்பதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும்.—ஏசா. 30:20, NW; ரோ. 12:6-8.
மனதிலிருந்து பேச்சு கொடுத்து பழக்கப்பட்டிராத பெரும்பாலோருக்கு இருக்கும் பயமெல்லாம், தாங்கள் சொல்ல விரும்புவதை மறந்துவிடுவார்களோ என்பதுதான். நீங்கள் திறம்பட்ட விதத்தில் பேசுவதற்கு அடியெடுத்து வைத்திருக்கிற பாதையில் இந்தப் பயம் உங்களுக்கு ஒரு தடைக்கல்லாக இருக்க அனுமதிக்காதீர்கள். நன்கு தயாரியுங்கள், யெகோவாவுடைய ஆவியின் உதவிக்காக அவரை நோக்கியிருங்கள்.—யோவா. 14:26.
வேறு சிலரோ வார்த்தைகளுக்கு மிதமிஞ்சி முக்கியத்துவம் கொடுப்பதால் மனதிலிருந்து பேச தயங்குகிறார்கள். உண்மைதான், மனதிலிருந்து பேசுகையில் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளோ இலக்கண ரீதியில் துல்லியமோ இல்லாமல் போகலாம், ஆனால் மனதைக் கவரும் உரையாடல் நடை அவற்றை ஈடுகட்டி விடுகிறது. எளிய வார்த்தைகளிலும் சிக்கல் இல்லாத வாக்கியங்களிலும் கருத்துக்களை சொல்லும்போதுதான் மக்கள் பொதுவாக சட்டென்று பிரதிபலிக்கிறார்கள். நீங்கள் நன்றாக தயாரித்தால், பொருத்தமான சொற்றொடர்களை இயல்பாக பயன்படுத்துவீர்கள்; சொற்றொடர்களை மனப்பாடம் செய்திருப்பதால் அல்ல, ஆனால் கருத்துக்களை மனதில் நன்கு பதித்திருப்பதால் இயல்பாக பேசுவீர்கள். அன்றாட உரையாடலில் நீங்கள் நன்கு பேசினால், மேடையில் பேசும்போதும் அது இயல்பாக வரும்.
எப்படிப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்துவது. காலம் செல்லச் செல்லவும், நீங்கள் பழகப் பழகவும், பேச்சில் வரும் ஒவ்வொரு குறிப்பையும் சில வார்த்தைகளில் சுருக்கமாக எழுத கற்றுக்கொள்வீர்கள். இவற்றையும் நீங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ள வேதவசனங்களையும் சுலபமாக எடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக ஒரு கார்டில் அல்லது தாளில் எழுதிவைத்துக் கொள்ளலாம். வெளி ஊழியத்திற்காக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எளிமையான குறிப்புகளை மனப்பாடம் செய்துகொள்வீர்கள். மறுசந்திப்புக்காக ஒரு பொருளில் நீங்கள் ஆராய்ச்சி செய்திருந்தால், ஒரு துண்டுத்தாளில் குறிப்புகளை சுருக்கமாக எழுதி உங்களுடைய பைபிளில் வைத்துக்கொள்ளலாம். அல்லது, “கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள்” என்பதில் உள்ள குறிப்புகளையோ வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் காணப்படும் தகவலையோ பயன்படுத்திப் பேசலாம்.
என்றபோதிலும், சில வாரங்களுக்குள் கூட்டங்களில் பேசுவதற்கு உங்களுக்கு பல நியமிப்புகள் இருந்தால், ஒருவேளை பொதுப் பேச்சுக்களும் இருந்தால், அதிக விரிவாக எழுதப்பட்ட குறிப்புத்தாள் தேவைப்படலாம். ஏன்? அந்த ஒவ்வொரு நியமிப்பையும் கையாளுவதற்கு முன்பு உங்களுடைய மனதிற்கு நினைப்பூட்ட அது உதவியாக இருக்கும். இருந்தாலும், பேச்சு கொடுக்கும்போது வார்த்தைகளுக்காக முழுக்க முழுக்க குறிப்புத்தாளையே நம்பிக்கொண்டிருந்தால்—வரிக்கு வரி அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தால்—மனதிலிருந்து பேசுவதால் வரும் பயன்களை இழந்துவிடுவீர்கள். விரிவான குறிப்புத்தாளைப் பயன்படுத்தினால், முக்கியமான சில வார்த்தைகளையும் வேதவசனங்களையும் பார்ப்பதற்கு வசதியாக அவற்றை மட்டுமே குறித்துக் கொள்ளுங்கள்.
அனுபவமிக்க பேச்சாளரால் கொடுக்கப்படும் ஒரு பேச்சு பொதுவாக முழுக்க முழுக்க மனதிலிருந்தே பேசும் பேச்சாக இருக்க வேண்டும் என்றாலும், நடுநடுவே மற்ற விதங்களில் பேசுவதும் பயனளிக்கலாம். உதாரணத்திற்கு, முன்னுரையிலும் முடிவுரையிலும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வலிமையான வார்த்தைகளால் சபையாருடன் நல்ல தொடர்புகொள்ள வேண்டியதும் அவசியம் என்பதால், சில வாக்கியங்களை மனப்பாடம் செய்து சொல்வது பலன் தரலாம். உண்மை சம்பவங்களை, எண்ணிக்கைகளை, மேற்கோள்களை அல்லது வேதவசனங்களை பயன்படுத்துகையில் வாசிப்பதே பொருத்தமானது, அவற்றை மிகவும் திறம்பட்ட முறையிலும் வாசிக்கலாம்.
பிறர் விளக்கம் கேட்கும்போது. சிலசமயங்களில் நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி விளக்கம் கொடுக்கும்படி திடீரென கேட்கப்படுகிறோம்; அப்போது தயாரிப்பதற்கு வாய்ப்பே இருக்காது. வெளி ஊழியத்தில் நாம் சந்திக்கிற ஆட்கள் ஏதாவது ஆட்சேபணையை எழுப்பும்போது இது சம்பவிக்கலாம். உறவினர்களுடன் இருக்கும்போதோ வேலை செய்யுமிடத்திலோ பள்ளியிலோ இதுபோன்ற சூழ்நிலைகள் எழும்பலாம். அல்லது, நம்முடைய நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறையையும் பற்றி அரசாங்க அதிகாரிகள் விளக்கம் கேட்கலாம். பைபிள் இவ்வாறு நம்மை ஊக்குவிக்கிறது: “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.”—1 பே. 3:15.
அப்போஸ்தலர் 4:19, 20-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யூத நியாய சங்கத்திற்கு முன்பு பேதுருவும் யோவானும் எப்படி பதில் சொன்னார்கள் என்பதை கவனியுங்கள். அவர்கள் இரண்டே வரிகளில் தங்களுடைய நிலைநிற்கையை தெளிவாக குறிப்பிட்டார்கள். அதுவும் அந்தக் கூட்டத்தாருக்கு ஏற்ற முறையில் பதிலளித்தார்கள்—அப்போஸ்தலர்கள் எதிர்ப்பட்ட பிரச்சினையை அந்த நியாய சங்கமும் எதிர்ப்பட்டதாக சுட்டிக்காட்டினார்கள். பிற்பாடு, ஸ்தேவானுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதே நியாய சங்கத்திற்கு முன்பு அவரும் கொண்டு செல்லப்பட்டார். முன்தயாரிப்பின்றி அவர் அளித்த வலிமைமிக்க பதிலை அப்போஸ்தலர் 7:2-53-ல் வாசித்துப் பாருங்கள். அவர் எவ்வாறு தன் கருத்துக்களை கோர்வையாக எடுத்துச் சொன்னார்? அவர் வரலாற்று வரிசைக் கிரமப்படி சம்பவங்களை தொகுத்தளித்தார். பொருத்தமான சந்தர்ப்பத்தில், இஸ்ரவேல் தேசத்தார் காண்பித்த கலகத்தனமான மனப்பான்மையை வலியுறுத்திக் காட்டினார். முடிவுரையில், கடவுளுடைய குமாரனாகிய இயேசுவை கொலை செய்வதன் மூலம் நியாய சங்கமும் அதே மனப்பான்மையை வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டினார்.
உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி தயாரிப்பின்றி விளக்கும்படி திடீரென யாராவது உங்களிடம் கேட்கும்போது, திறம்பட பதிலளிப்பதற்கு எது உங்களுக்கு உதவும்? ராஜாவாகிய அர்தசஷ்டா கேட்ட கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு மௌனமாக ஜெபம் செய்த நெகேமியாவைப் பின்பற்றுங்கள். (நெ. 2:4) அடுத்து, என்னென்ன சொல்ல வேண்டுமென மனதில் விரைவாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். எடுக்க வேண்டிய அடிப்படை படிகளை இவ்வாறு பட்டியலிடலாம்: (1) விவரிப்பில் சேர்க்க வேண்டிய ஓரிரண்டு குறிப்புகளைத் தேர்ந்தெடுங்கள் (வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலுள்ள குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம்). (2) அந்தக் குறிப்புகளுக்கு ஆதரவாக எந்தெந்த வேதவசனங்களைப் பயன்படுத்தலாம் என்பதை தீர்மானியுங்கள். (3) கேள்வி கேட்பவர் செவிகொடுத்துக் கேட்கும் விதத்தில் எப்படி சாதுரியமாக விளக்க ஆரம்பிக்கலாம் என்பதை திட்டமிடுங்கள். பின்பு பேச ஆரம்பியுங்கள்.
அழுத்தத்தின்கீழ் இருக்கும்போது, என்ன சொல்ல வேண்டும் என்பது ஞாபகத்திற்கு வருமா? இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.” (மத். 10:19, 20) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல ‘ஞானமாக பேசும்’ திறமை உங்களுக்கு அற்புதமாக கிடைக்கும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. (1 கொ. 12:8) கிறிஸ்தவ சபையில் யெகோவா தமது ஊழியர்களுக்கு வழங்கும் கல்வியை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால், தேவைப்படும் சமயத்தில் தேவையான தகவல்களை பரிசுத்த ஆவி மீண்டும் உங்களுடைய மனதிற்கு கொண்டுவரும்.—ஏசா. 50:4.
மனதிலிருந்து பேச்சு கொடுப்பது மிகவும் பலன்தரும் என்பதில் சந்தேகமில்லை. எப்போதும் சபையில் இவ்வாறு பேச்சுக்களைக் கொடுத்தால், தேவையான சந்தர்ப்பத்தில் முன்தயாரிப்பின்றி பதில் சொல்வதும் கஷ்டமாக இருக்காது; ஏனென்றால் குறிப்புத்தாளை தயாரிப்பதற்கு பயன்படுத்துகிற முறைகளே இதற்கும் பொருந்துகின்றன. தயங்காதீர்கள். மனதிலிருந்து பேச்சு கொடுக்க கற்றுக்கொள்வது வெளி ஊழியத்தை அதிக திறம்பட செய்வதற்கு உதவும். மேலும், சபையில் பேச்சு கொடுக்கும் சிலாக்கியம் உங்களுக்கு இருந்தால், சபையாருடைய கவனத்தை ஈர்த்து அவர்களுடைய இருதயத்தையும் தொடுவீர்கள்.