பரலோகம்
சொற்பொருள் விளக்கம்: யெகோவா தேவனும் உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகளும் வாழும் இடம்; மனிதக் கண்களுக்குக் காணப்படாத மண்டலம். “பரலோகங்(கள்)” என்ற பதத்தை பைபிள் பல்வேறு மற்ற கருத்துக்களிலும் பயன்படுத்துகிறது; உதாரணமாக: கடவுளை, அவருடைய உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகளாலாகிய அமைப்பை, தெய்வீக தயவுக்குரிய நிலையை, பூமிக்குப் புறம்பான இயற்கை சர்வலோகத்தை, கிரக பூமியைச் சுற்றியுள்ள ஆகாயவிரிவை, சாத்தானின் ஆதிக்கத்தின் கீழுள்ள மனித அரசாங்கங்களை, மற்றும் இயேசு கிறிஸ்து தம்முடைய உடன் சுதந்தரவாளிகளோடுகூட ஆளும்படி யெகோவா தேவன் அதிகாரமளித்துள்ள நீதியுள்ள அந்தப் புதிய பரலோக அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு பைபிள் பயன்படுத்துகிறது.
மனிதராகப் பிறப்பதற்கு முன் நாம் எல்லாரும் அந்த ஆவி மண்டலத்தில் இருந்தோமா?
யோவான் 8:23: “[இயேசு கிறிஸ்து சொன்னதாவது:] நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள், நான் மேலேயிருந்து வந்தவர்; நீங்கள் இந்த உலகத்திற்குரியவர்கள், நான் இந்த உலகத்திற்குரியவரல்ல.” (இயேசு உண்மையாகவே ஆவிக்குரிய மண்டலத்திலிருந்து வந்தார். ஆனால், இயேசு சொன்னபடி, மற்ற மனிதர் அங்கிருந்து வரவில்லை.)
ரோமர் 9:10-12: “ரெபேக்காள் கர்ப்பவதியானபோது, [இரட்டைப்] பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.” (நிச்சயமாகவே, இரட்டைப் பிள்ளைகளான யாக்கோபும் ஏசாவும் ஆவிக்குரிய ஒரு மண்டலத்தில் முன்னால் வாழ்ந்திருந்தால் அவர்கள் அங்கே தங்கள் நடத்தையில் அடிப்படைக்கொண்ட ஒரு பதிவை நிச்சயமாய் உண்டுபண்ணியிருப்பார்கள் அல்லவா? ஆனால் மனிதராக அவர்கள் பிறந்ததற்குப் பின்னான வரையிலும் அத்தகைய பதிவு எதுவும் அவர்களுக்கு இல்லை.)
நல்ல ஆட்கள் எல்லாரும் பரலோகத்துக்குச் செல்கிறார்களா?
அப். 2:34: “[‘யெகோவாவின் இருதயத்துக்கு உகந்தவன்’ என்று பைபிள் குறிப்பிடுகிற] தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லை.”
மத். 11:11: “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவன்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை, ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.” (ஆகையால் யோவன் மரித்தபோது பரலோகத்துக்குச் செல்லவில்லை.)
சங். 37:9, 11, 29: “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் [யெகோவாவுக்குக், தி.மொ.] காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். . . . நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”
ஆதாம் பாவஞ்செய்திராவிடில் அவன் முடிவில் பரலோகத்துக்குச் சென்றிருப்பானா?
ஆதி. 1:26: “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.” (ஆதாம் பூமியையும் அங்குள்ள மிருக ஜீவன்களையும் கண்காணிப்பவனாக இருக்கவேண்டுமென்பதே ஆதாமுக்காகக் கடவுள் கொண்டிருந்த நோக்கம். அவன் பரலோகத்துக்குச் செல்வதைப்பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை.)
ஆதி. 2:16, 17, தி.மொ.: “கடவுளாகிய யெகோவா மனுஷனிடம்: தோட்டத்திலுள்ள எந்த விருக்ஷத்தின் கனியையும் நீ தடையின்றிப் புசிக்கலாம். நன்மை தீமை அறிவதற்கேதுவான விருக்ஷத்தின் கனியையோ புசிக்கக்கூடது. அதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாயென்று கட்டளையிட்டார்.” (மனிதன் ஏதோவொரு நாளில் சாகவேண்டுமென்பது யெகோவாவின் முதல் நோக்கமல்ல. இங்கே எடுத்துக் குறிப்பிட்ட கடவுளுடைய கட்டளை மரணத்துக்கு வழிநடத்தும் போக்குக்கு எதிராக அவர் எச்சரித்தார் என்று காட்டுகிறது. மரணம் கீழ்ப்படியாமைக்குத் தண்டனையே, பரலோகத்தில் மேம்பட்ட வாழ்க்கைக்குச் செல்லும் வாசல் அல்ல. கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருந்த பரதீஸில் தொடர்ந்த வாழ்க்கை, நித்திய வாழ்க்கையே கீழ்ப்படிதலுக்குப் பலனாக அளிக்கப்பட்டிருக்கும். ஏசாயா 45:18-ஐயும் பாருங்கள்.)
உண்மையில் மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருக்க ஒருவன் பரலோகத்துக்குச் செல்லவேண்டுமா?
சங். 37:11: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”
வெளி. 21:1-4: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன், . . . மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”
மீகா 4:3, 4: “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும் தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளின் யெகோவாவினுடைய வாய் இதைச் சொல்லிற்று.”
இயேசு தம்முடைய சொந்த மரணத்துக்குமுன் மரித்தவர்களுக்காகப் பரலோகத்துக்குச் செல்லும் வழியைத் திறந்துவைத்தாரா?
1 பேதுரு 3:19, 20 குறிப்பதென்ன? “அந்த ஆவியிலே [தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப்பின் அவர் ஆவியாயிருந்த நிலையில்] அவர் [இயேசு] போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் [“ஆத்துமாக்கள்,” NW] மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.” (அந்தக் “காவலிலுள்ள ஆவிகள்” ஜலப்பிரளயத்துக்கு முன் நோவாவின் பிரசங்கத்துக்குச் செவிகொடுக்க மறுத்த அந்த மனிதரின் ஆத்துமாக்களா? மேலும் பரலோகத்துக்குச் செல்ல அவர்களுக்கே இப்பொழுது வழி திறக்கப்பட்டதா? 2 பேதுரு 2:4-ஐயும் யூதா 6-ஐயும் ஆதியாகமம் 6:2-4-உடன் ஒத்துப் பார்ப்பது, அந்த ஆவிகள் நோவாவின் நாளில் மாம்ச உருவெடுத்து மணம்செய்துகொண்டவர்களான கடவுளுடைய குமாரராகிய தூதர்கள் என்று காட்டுகிறது. 1 பேதுரு 3:19, 20-ல் “ஆவிகள்” என்பதற்கு கிரேக்கச் சொல் நூமா-சின் என்பதாகும், “ஆத்துமாக்கள்” என்று மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொல் ஸைக்காய் என்பதாகும். அந்த “ஆவிகள்” ஆவியுருவை உடலினின்று அகற்றிய ஆத்துமாக்கள் அல்லர், அவர்கள் கீழ்ப்படியாத தூதர்கள்; இங்கே குறிப்பிடப்பட்டுள்ள “ஆத்துமாக்கள்” உயிருள்ள ஆட்கள், மனிதர்கள், நோவாவும் அவனுடைய வீட்டாருமே. ஆகையால், “காவலிலுள்ள ஆவிகளுக்குப்” பிரசங்கித்தது நியாயத்தீர்ப்புச் செய்தியாகவே இருக்கவேண்டும்.)
1 பேதுரு 4:6-ன் பொருளென்ன? “இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.” (இந்த “மரித்தோர்” கிறிஸ்துவின் மரணத்துக்கு முன்னால் மரித்த ஆட்களா? ஏற்கெனவே காட்டினபடி இந்த மரித்தோர் “காவலிலுள்ள ஆவிகள்” அல்லர். அந்த ஆவிகள் கீழ்ப்படியாத தூதர்கள். இயற்கையாய் மரித்த மனிதருக்குப் பிரசங்கிப்பது எந்த நன்மையும் பயக்காது, பிரசங்கி 9:5 சொல்லுகிறபிரகாரம், அவர்கள் “ஒன்றும் அறியார்கள்,” மேலும் மரணத்தில் ஒருவரின் “யோசனைகள் அழிந்துபோம்,” என்று சங்கீதம் 146:4-ல் சொல்லியிருக்கிறது. ஆனால் எபேசியர் 2:1-7, 17 ஆவிக்குரியபிரகாரமாய் மரித்திருந்து நற்செய்தியை ஏற்றதன் பலனாக ஆவிக்குரியபிரகாரமாய் உயிரடைந்த ஆட்களையே குறிப்பிடுகிறது.)
பரலோக வாழ்க்கை எல்லாக் கிறிஸ்தவர்களுக்குமுரிய நம்பிக்கையென “புதிய ஏற்பாட்டில்” குறிப்பிட்டிருக்கிறதா?
யோவான் 14:2, 3: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” (இயேசு, தாம் பேசிக்கொண்டிருந்த தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்கள், ஏற்ற காலத்தில் தம்முடன் பரலோகத்தில் தம்முடைய பிதாவின் “வீட்டில்,” இருப்பார்கள் என்று இங்கே காட்டுகிறார். ஆனால் இன்னும் மற்ற எத்தனை ஆட்கள் பரலோகத்துக்குப் போவர்களென இங்கே அவர் சொல்கிறதில்லை.)
யோவான் 1:12, 13: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களய் அவரை [இயேசுவை] ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.” (11-ம் வசனத்திலுள்ள சூழமைவு, இயேசுவின் “சொந்த ஜனங்களான” யூதரைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். முதல் நூற்றாண்டில் அவர் அவர்களிடம் வந்தபோது அவரை ஏற்றுக்கொண்ட அனைவரும், பரலோக வாழ்க்கையின் எதிர்பார்ப்புடன், கடவுளுடைய பிள்ளைகளானார்கள். இந்த வசனத்திலுள்ள வினைச்சொற்கள் இறந்த காலத்தில் இருக்கின்றன, ஆகையால் இந்தப் பகுதி அதுமுதற்கொண்டு கிறிஸ்தவர்களாகியுள்ள எல்லா ஆட்களையுங்குறித்துப் பேசுகிறதில்லை.)
ரோமர் 8:14, 16, 17: “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே [ஆவிதானே, NW] நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார் [கொடுக்கிறது, NW]. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” (கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்பட்ட எல்லாரும் கடவுளுடைய பிள்ளைகளாயிருந்தார்கள் என்பதும் கிறிஸ்துவுடன் தாங்கள் மகிமைப்படுத்தப்படுவது அவர்களுடைய நம்பிக்கை என்பதும் இது எழுதப்பட்ட சமயத்தில் உண்மையாயிருந்தது. ஆனால் இது எப்பொழுதுமே அவ்வாறிருக்கவில்லை. லூக்கா 1:15-ல் முழுக்காட்டுபவனான யோவன் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பானென சொல்லியிருக்கிறது, ஆனால் மத்தேயு 11:11-ல் அவன் பரலோக ராஜ்ய மகிமையில் பங்குகொள்ளமாட்டானென தெளிவாக்கியிருக்கிறது. அவ்வாறே, பரலோக ராஜ்ய சுதந்தரவாளிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டபின், கடவுளுடைய குமாரனைப் பின்பற்றுவோராயும் எனினும் பரலோக மகிமையில் பங்குகொள்ளாமலும் கடவுளைச் சேவிக்கும் மற்றவர்கள் இருப்பார்கள்.)
கிறிஸ்தவர்கள் பூமியில் நித்திய ஜீவனின் பரிசளிக்கப்படுவதற்கான ஏற்பாட்டைக் குறித்து “புதிய ஏற்பாட்டில்” என்ன திட்டமான வசனக் குறிப்புகள் இருக்கின்றன?
மத். 5:5: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”
மத். 6:9, 10: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (பூமியைக் குறித்த கடவுளுடைய சித்தம் என்ன? ஆதியாகமம் 1:28-ம் ஏசாயா 45:18-ம் என்ன காட்டுகின்றன?)
மத். 25:31-33, 40, 46: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தியவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள், மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். . . . அதற்கு ராஜா பிரதியுத்தரமாக [செம்மறியாடுகளிடம்]: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். . . . அந்தப்படி, இவர்கள் [வெள்ளாடுகள்] நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ [செம்மறியாடுகள்] நித்திய ஜீவனை அடையவும் போவர்கள்.” (இந்தச் “செம்மறியாடுகளும்,” “பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய” அரசரின் சகோதரரும் ஒரே வகுப்பார் அல்லரென்பதைக் கவனியுங்கள். [எபி. 2:10–3:1] ஆனால் இந்தச் செம்மறியாடுகளைப் போன்றவர்கள் கிறிஸ்து தம்முடைய சிங்காசனத்தில் இருக்கையிலும் அவருடைய சகோதரரில் சிலர் பூமியில் இன்னும் பாடனுபவித்துக்கொண்டு இருக்கையிலும் உயிரோடிருப்பர்.)
யோவான் 10:16: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் [மற்றச் செம்மறியாடுகள், NW] எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” (இந்த “மற்றச் செம்மறியாடுகள்” யார்? இவர்கள் நல்ல மேய்ப்பனான, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள், ஆனால் இவர்கள் பரலோக வாழ்க்கையை அடையும் நம்பிக்கையுடன் “புதிய உடன்படிக்கை” செம்மறியாட்டுத் தொழுவத்தில் இல்லை. எனினும் இந்தச் செம்மறியாட்டுத் தொழுவத்திலுள்ளவர்களுடன் நெருங்கிய கூட்டுறவுக்குள் வருகிறார்கள்.)
2 பேதுரு 3:13: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (மேலும் வெளிப்படுத்துதல் 21:1-4)
வெளி. 7:9, 10: “இவைகளுக்குப்பின்பு, [பரலோக சீயோன் மலையில் கிறிஸ்துவுடன் இருக்கும்படி “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்களான” “முத்திரைபோடப்பட்டவர்களின்” முழு எண்ணிக்கையை அப்போஸ்தலன் யோவன் கண்டபின்பு; வெளிப்படுத்துதல் 7:3, 4; 14:1-3-ஐ பாருங்கள்] நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்குமுன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.”
பரலோக வாழ்க்கையின் நம்பிக்கை பைபிளில் எத்தனை ஆட்களுக்கு அளிக்கப்படுகிறது?
லூக்கா 12:32: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.”
வெளி. 14:1-3: “பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் [பரலோகத்தில்; எபிரெயர் 12:22-24-ஐ பாருங்கள்] ஆட்டுக்குட்டியானவரையும் [இயேசு கிறிஸ்துவையும்], அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். . . . அவர்கள் . . . புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.”
இந்த 1,44,000 பேர் மாம்சத்தின்படியான யூதர் மாத்திரமா?
வெளி. 7:4-8: “முத்திரைபோடப்பட்டவர்களின் தொகயைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர். . . . யூதா . . . ரூபன் . . . காத் . . . ஆசேர் . . . நப்தலி . . . மனாசே . . . சிமியோன் . . . லேவி . . . இசக்கார் . . . செபுலோன் . . . யோசப்பு . . . பென்யமீன்.” (இவை மாம்சத்தின்படியான இஸ்ரவேலின் கோத்திரங்களாயிருக்க முடியாது ஏனெனில் யோசப்பின் கோத்திரம் ஒருபோதும் இருக்கவில்லை, எப்பிராயீம் மற்றும் தாணின் கோத்திரங்கள் இங்கே இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை, லேவியர்கள் ஆலயத்தோடு சம்பந்தப்பட்ட சேவைக்கு ஒதுக்கிவைக்கப்பட்டார்கள், 12 கோத்திரங்களில் ஒருவராக எண்ணப்படவில்லை. எண்ணாகமம் 1:4-16-ஐ பாருங்கள்.)
ரோமர் 2:28, 29: “புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.”
கலா. 3:26-29: “நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. . . . யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை, நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும் வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.”
1,44,000 ஆன இந்த எண்ணிக்கை வெறும் அடையாளக் குறிப்பானதா?
இந்தத் திட்ட எண்ணிக்கையான 1,44,000-த்தைக் குறிப்பிட்டபின், “ஒருவனும் எண்ணமுடியாத திரள் கூட்டத்தை” வெளிப்படுத்துதல் 7:9 (தி.மொ.) குறிப்பிடுகிறதில் இதற்கு விடை குறித்துக் காட்டப்படுகிறது. 1,44,000 நேர்ப்பொருளுடையதல்லவென்றால், “திரள் கூட்டத்துக்கு” வேறுபடும் கருத்தில் அது பொருளற்றதாயிருக்கும். நேர்ப்பொருளுடையதாய் இந்த எண்ணிக்கையைக் கருதுவது மத்தேயு 22:14-லுள்ள இயேசுவின் பின்வரும் கூற்றுடன் ஒத்திருக்கச் செய்கிறது: “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்.”
வெளிப்படுத்துதல் 7:9, 10-ல் குறிப்பிட்டுள்ள இந்தத் “திரள் கூட்டத்தாரும்” பரலோகத்துக்குச் செல்கிறார்களா?
பரலோக சீயோன் மலையின்மேல் கிறிஸ்துவுடன் இருக்கும்படி “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட”வர்களென 1,44,000 பேரைக் குறித்துச் சொல்வதுபோல் வெளிப்படுத்துதல் இவர்களைக் குறித்துச் சொல்வதில்லை.—வெளி. 14:1-3.
இவர்கள் “சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதாக” விவரித்திருப்பது, ஓர் இடத்தையல்ல, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலையையே குறித்துக் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 6:17; லூக்கா 21:36-ஐ ஒத்துப்பாருங்கள்.) “சிங்காசனத்திற்கு முன்பாக” என்ற இந்தச் சொற்றொடர் (கிரேக்கில், e-no’pi-on tou thro’nou; நேர்ப்பொருள், “சிங்காசனத்தைப் பார்க்கக்கூடிய நிலையில்”) அவர்கள் பரலோகத்தில் இருக்கவேண்டுமெனத் தேவைப்படுத்துகிறதில்லை. அவர்கள் வெறுமென கடவுள் “பார்க்கக்கூடிய” நிலையில் இருக்கிறார்கள், அவர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைப் பார்க்கிறார் என்று நமக்குச் சொல்கிறார்.—சங். 11:4; ஒத்துப்பாருங்கள்: மத்தேயு 25:31-33; லூக்கா 1:74, 75; அப்போஸ்தலர் 10:33.
“பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம்,” என்று வெளிப்படுத்துதல் 19:1, 6-ல் குறிப்பிட்டுள்ளதும் வெளிப்படுத்துதல் 7:9-ல் குறிப்பிட்டுள்ள “திரளான கூட்டம்” என்பதும் ஒன்றல்ல. பரலோகத்திலுள்ளவர்கள் “சகல ஜாதிகளிலுமிருந்து” வந்திருப்பதாகவும் இரட்சிப்புக்குக் காரணர் ஆட்டுக்குட்டியானவரென குறிப்பிடுவதாகவும் விவரிக்கப்படவில்லை; அவர்கள் தேவ தூதர்கள். “திரள் கூட்டம்” (தி.மொ.) என்ற இந்தச் சொற்றொடர் பைபிளில் பற்பல சூழமைவுகளில் பயன்படுத்தப்படுகிறது.—மாற்கு 5:24; 6:34; 12:37.
பரலோகத்துக்குச் செல்கிறவர்கள் அங்கே என்ன செய்வார்கள்?
வெளி. 20:6: “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.” (மேலும் தானியேல் 7:27)
1 கொரி. 6:2: “பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?”
வெளி. 5:10: “அவர்களை நமது கடவுளுக்கு ஒரு ராஜ்யமாக்கி ஆசாரியருமாக்கினீர்.” அவர்கள் பூமியின்மீது [“மேல்,” RS, KJ, Dy; “மீது,” AT, Da, Kx, CC] அரசாளுவார்கள்.” (தி.மொ.) (இதே கிரேக்கச் சொல்லும் இலக்கண அமைப்பும் வெளிப்படுத்துதல் 11:6-ல் காணப்படுகிறது. அங்கே RS, KJ, Dy, முதலியவை யாவும் “மீது” என்று மொழிபெயர்க்கின்றன.)
பரலோகத்துக்குச் செல்வோரை யார் தேர்ந்தெடுக்கிறார்?
2 தெச. 2:13, 14: “கர்த்தருக்குப் [யெகோவாவுக்குப், NW] பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக் குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தாத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.”
ரோமர் 9:6, 16: “இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.” . . . விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.”