வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
1 பேதுரு 4:3-ல் (NW), கிறிஸ்தவர்கள் சிலர் “சட்ட விரோதமான விக்கிரகாராதனையில்” பங்குகொண்டார்கள் என வாசிக்கிறோம். எல்லா விக்கிரகாராதனையுமே சட்ட விரோதமானது, கடவுளால் கண்டனம் செய்யப்பட்டது, தடை செய்யப்பட்டது தானே?
ஆம், கடவுளுடைய நோக்குநிலையில், எல்லா விக்கிரகாராதனையும் சட்ட விரோதமானதே. அவருடைய தயவை நாடுவோர் விக்கிரகாராதனையில் ஈடுபட முடியாது.—1 கொரிந்தியர் 5:11; வெளிப்படுத்துதல் 21:8.
ஆனால் விக்கிரகாராதனையை அப்போஸ்தலன் பேதுரு மற்றொரு கருத்தில் குறிப்பிடுவதாக தெரிகிறது. ஒரு காரணம் என்னவென்றால், பூர்வ தேசத்தார் பலர் மத்தியில், விக்கிரகாராதனை சர்வ சாதாரணமானதாகவும் அரசு அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட எவ்வித சட்டப்பூர்வ தடையுமின்றியும் இருந்தது. அதாவது, அத்தேசத்தின் சட்டம் இப்படிப்பட்ட விக்கிரகாராதனையை தடை செய்யவில்லை. சில விக்கிரகாராதனை தேசிய அல்லது அரசாங்க கொள்கையின் அம்சமாகவும் இருந்தது. அந்தக் கருத்தில், கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு ‘சட்டப்பூர்வ தடையில்லாத விக்கிரகாராதனையில்’ சிலர் ஈடுபட்டார்கள். (புதிய உலக மொழிபெயர்ப்பு, 1950 பதிப்பு) உதாரணமாக, பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பொன்னாலான விக்கிரகத்தை உண்டாக்கி வைத்தார், ஆனால் யெகோவாவின் ஊழியர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அதை வணங்க மறுத்துவிட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது.—தானியேல் 3:1-12.
மற்றொரு கருத்தில், விக்கிரகாராதனைக்குரிய சடங்குகள் பல, எந்தவொரு இயற்கை விதிக்கும் அல்லது சுதந்தரிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையிலான தார்மீக நெறிமுறைக்கும் அப்பட்டமாகவே முரணாக இருந்தன. (ரோமர் 2:14, 15) ‘சுபாவத்துக்கு விரோதமானதாகவும்’ ‘அவலட்சணமானதாகவும்’ இருந்த கீழ்த்தரமான பழக்கங்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இவை பெரும்பாலும் மத சடங்குகளில் வேரூன்றி இருந்தன. (ரோமர் 1:26, 27) சட்ட விரோதமான விக்கிரகாராதனையில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் மனித சுபாவத்திற்குரிய சட்டப்பூர்வ கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை. கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் இப்படிப்பட்ட மோசமான பழக்கங்களை விட்டொழிப்பது சரியானதாக இருந்தது.
மேற்குறிப்பிடப்பட்ட விஷயங்களைத் தவிர, யூதரல்லாதவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக இருந்த இப்படிப்பட்ட விக்கிரகாராதனைகளை யெகோவா தேவன் கண்டனம் செய்தார். எனவே, அவை சட்ட விரோதமானவை.a—கொலோசெயர் 3:5-7.
[அடிக்குறிப்பு]
a ஒன்று பேதுரு 4:3, கிரேக்கில் சொல்லர்த்தமாக, “சட்டத்திற்குப் புறம்பான விக்கிரகாராதனை” என அர்த்தப்படுத்துகிறது. இந்தச் சொற்றொடர் ஆங்கில பைபிள்களில், “முறையற்ற விக்கிரகாராதனை,” “தடைசெய்யப்பட்ட விக்கிரக வணக்கம்,” “அத்துமீறிய விக்கிரகாராதனை” என பல்வேறு விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.