சோர்ந்துவிடாதிருங்கள்!
“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:9.
1, 2. (அ) ஒரு சிங்கம் என்ன வழிகளில் இரை தேடுகிறது? (ஆ) பிசாசானவன் யாரைத் தாக்கி இரையாக்குவதில் முக்கியமாய்க் கவனமுடையவனாக இருக்கிறான்?
ஒரு சிங்கம் பல்வேறு வழிகளில் இரை தேடுகிறது. சில சமயங்களில் அது, தண்ணீர்த் தேக்கங்களுக்கருகில் அல்லது நன்றாய்ப் பயன்படுத்தப்பட்ட பாதைகளின் ஓரமாகப் பதுங்கியிருந்து தன் இரையைத் தாக்கும். ஆனால் சில சமயங்களில், “வெறும் ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது—உதாரணமாக, தூங்குகிற வரிக்குதிரைக் குட்டியை எதிர்ப்படுகையில்,” என்று காட்டில் ஓவியங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது.
2 நம்முடைய “எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்,” என்று அப்போஸ்தலன் பேதுரு விளக்குகிறார். (1 பேதுரு 5:8) தனக்கு மீந்துள்ள காலம் குறுகியதென்று அறிந்திருப்பவனாக சாத்தான், யெகோவாவைச் சேவிப்பதிலிருந்து மனிதரைத் தடுத்து வைப்பதற்காக அவர்கள்மீது மேலும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் எதிர்ப்பழுத்தத்தை வைக்கிறான். எனினும், இந்தக் “கெர்ச்சிக்கிற சிங்கம்” யெகோவாவின் ஊழியரைத் தாக்கி இரையாக்குவதிலேயே முக்கியமாய்க் கவனமுடையவனாக இருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12, 17) அவனுடைய இரை தாக்கும் முறைகள், விலங்கின வகுப்பில் அவனுக்கொப்பான விலங்கினுடையதற்கு ஒப்பாயுள்ளன. எவ்வாறு?
3, 4. (அ) யெகோவாவின் ஊழியரைத் தாக்கி இரையாக்குவதில் என்ன வகைமுறைகளைச் சாத்தான் பயன்படுத்துகிறான்? (ஆ) இவை ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களாக’ இருப்பதால் என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
3 சில சமயங்களில் சாத்தான் பதுங்கித் தாக்கும் ஒரு முறையை—நாம் யெகோவாவைச் சேவிப்பதை நிறுத்திவிடும்படி நம்முடைய உத்தமத்தை முறிப்பதைத் தாக்கல் குறியாகக் கொண்ட துன்புறுத்தலையும் எதிர்ப்பையும் கொண்டுவர—முயற்சி செய்கிறான். (2 தீமோத்தேயு 3:12) ஆனால், சிங்கத்தைப்போல் மற்ற சமயங்களில், பிசாசானவன் ஒரு சந்தர்ப்ப நிலையை வெறுமனே பயன்படுத்திக்கொள்கிறான். நாம் சோர்வுறும் வரை அல்லது மனத்தளர்வுறும் வரையில் அவன் காத்திருந்து, நம்மைப் பின்வாங்கச் செய்யும்படி நம்முடைய ஊக்கம் குன்றிய மனநிலையைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறான். நாம் எளிதில் அவனுக்கு இரையாகிவிடக்கூடாது!
4 எனினும், மனித சரித்திரம் முழுவதிலுமே மிகக் கடினமான காலப்பகுதியில் நாம் வாழ்கிறோம். ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்,’ நம்மில் பலர் சோர்வுற்றோராய் அல்லது மனத்தளர்வுற்றோராய் எப்பொழுதாவது உணரலாம். (2 தீமோத்தேயு 3:1, NW) பிசாசானவனுக்கு எளிதாக இரையாகுமளவுக்குச் சோர்வடைவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்? ஆம், தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் பவுலின் அறிவுரைக்கு நாம் எவ்வாறு செவிகொடுக்கலாம்: “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்”?—கலாத்தியர் 6:9.
மற்றவர்கள் நம்மை மனம் முறிவுறச் செய்கையில்
5. எது தாவீதை மனத்தளர்வுறும்படி செய்தது, ஆனால் அவர் என்ன செய்யவில்லை?
5 பைபிள் காலங்களில், யெகோவாவுக்கு மிகவும் உண்மையுடன் இருந்த ஊழியரும்கூட மனத்தளர்வுற்றோராய்ச் சில சமயங்களில் உணர்ந்தனர். சங்கீதக்காரரான தாவீது இவ்வாறு எழுதினார்: “என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று.” தாவீது ஏன் அவ்வாறு உணர்ந்தார்? “என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும்,” என்று அவர் விளக்கினார். மனவருத்தம் உண்டுபண்ணின மற்றவர்களின் செயல்கள் தாவீதுக்கு அத்தகைய இருதய வேதனையை உண்டாக்கினதால் அவருடைய கண்ணீர்கள் அவ்வளவு அதிகமாகச் சொரிந்தன. இருப்பினும், உடன் மனிதர் தனக்குச் செய்தவற்றின் காரணமாக தாவீது யெகோவாவிடமிருந்து விலகிச் செல்லவில்லை.—சங்கீதம் 6:6-9.
6. (அ) மற்றவர்களின் சொற்களாலும் செயல்களாலும் நாம் எவ்வாறு பாதிக்கப்படலாம்? (ஆ) எவ்வாறு சிலர் தங்களைப் பிசாசானவனுக்கு எளிதாக இரையாக்கிக் கொள்கிறார்கள்?
6 அவ்வாறே, மற்றவர்களின் சொற்கள் அல்லது செயல்கள் நம்மை மிகுந்த இருதய வேதனையுடன் மனம் தளர்ந்து போகும்படி செய்யலாம். “யோசனையின்றிப் பேசிப் பட்டயம்போற் குத்துவோருண்டு,” என்று நீதிமொழிகள் 12:18 (தி.மொ.) சொல்கிறது. யோசனையின்றி பேசுபவர் கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரியாக இருக்கையில், அந்தப் ‘பட்டயக் குத்து’ ஆழமாக இறங்கக்கூடும். மனித இயல்பானது தீங்கு செய்வதாக, ஒருவேளை கோபதாபத்தை மனதில் வைத்துவருவதாக இருக்கலாம். அன்பற்ற அல்லது நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோமென்று நாம் உணர்ந்தால் இது முக்கியமாய் உண்மையாயிருக்கும். வருத்தமுண்டாக்கினவரிடம் பேசுவதை நாம் கடினமாகக் காணலாம்; அவரை நாம் வேண்டுமென்றே தவிர்க்கவும் கூடும். கோபதாபத்தால் அழுத்தப்பட்டு, சிலர் சோர்வுற்று கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருவதையும் நிறுத்திவிட்டிருக்கின்றனர். அவ்வாறு செய்வதால், விசனமுண்டாகச் சிலர், பிசாசானவன் தங்களை எளிதாக இரையாக்கிக்கொள்ளும்படி ‘பிசாசுக்கு இடங்கொடுத்திருக்கிறார்கள்.’—எபேசியர் 4:27.
7. (அ) மற்றவர்கள் நம்மை மனம் முறிவுற அல்லது மனவேதனையடைய செய்கையில், பிசாசானவனின் திட்டத்துக்கு இரையாவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்? (ஆ) நாம் ஏன் கோபதாபத்தை ஒழிக்க வேண்டும்?
7 மற்றவர்கள் நம்மை மனம் முறிவுற அல்லது மனவேதனையடைய செய்கையில், பிசாசானவனின் திட்டத்துக்கு நாம் இரையாவதை எவ்வாறு தவிர்க்கலாம்? கோபதாபத்தை உள்ளத்தில் பேணிவைக்காமல் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். மாறாக, கூடிய சீக்கிரத்தில் சமாதானம் செய்துகொள்ள அல்லது காரியங்களைச் சரிசெய்துகொள்ள முன்முயற்சி எடுங்கள். (எபேசியர் 4:26) கொலோசெயர் 3:13 (NW) இவ்வாறு நமக்கு வற்புறுத்திக் கூறுகிறது: “ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் தொடர்ந்து மன்னியுங்கள்.” வருத்தமுண்டாக்கினவர் தன் தவறை ஒப்புக்கொண்டு உண்மையில் மனம் வருந்தும்போது, மன்னிப்பு முக்கியமாய்த் தகுந்ததாயுள்ளது. (சங்கீதம் 32:3-5 மற்றும் நீதிமொழிகள் 28:13-ஐ ஒப்பிடுக.) எனினும், மன்னிப்பதானது, மற்றவர்கள் செய்த தவறுகளைக் கவனியாமல் மழுப்பிவிடுதலையோ வினைமையைக் குறைத்துக் காட்டுவதையோ குறிக்கிறதில்லை என்பதை நாம் மனதில் வைப்பது நமக்கு உதவியாயிருக்கும். மன்னிப்பது கோபதாபத்தை ஒழிப்பதை உட்படுத்துகிறது. கோபதாபத்தை மனதில் வைத்திருப்பது கனத்த சுமையாயுள்ளது. அது நம்முடைய சிந்தனைகளை நிரப்பி, நம்மை மகிழ்ச்சியற்றவர்களாக்கும். அது நம் சுகநலத்தையும்கூட பாதிக்கலாம். எதிர்மாறாக, தகுதியாக இருக்கையில் மன்னிப்பது, நம்முடைய சொந்த நன்மைக்கேதுவாகச் செயல்படுகிறது! மற்ற மனிதர் நமக்கு சொன்ன அல்லது செய்தவற்றின் காரணமாக ஒருபோதும் சோர்ந்துபோகாமலும் யெகோவாவைவிட்டு விலகாமலும், தாவீதைப்போல் நாம் இருப்போமாக!
நாம் தவறும்போது
8. (அ) முக்கியமாய்ச் சில சமயங்களில் சிலர் ஏன் குற்ற உணர்ச்சியடைகிறார்கள்? (ஆ) நம்மீது நம்பிக்கை இழக்குமளவுக்குக் குற்ற உணர்ச்சியால் அவ்வளவாய் ஆழ்த்தப்பட்டிருப்பதில் என்ன ஆபத்து உள்ளது?
8 “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்,” என்று யாக்கோபு 3:2-ல் சொல்லியிருக்கிறது. நாம் தவறும்போது, குற்ற உணர்ச்சியடைவது இயல்பானதே. (சங்கீதம் 38:3-8) முக்கியமாய், மாம்ச பலவீனம் ஒன்றோடு நாம் போராடிக்கொண்டு திரும்பத்திரும்ப அந்தத் தவறுக்குள் வீழ்வதை அனுபவித்துக்கொண்டிருந்தால், இந்தக் குற்ற உணர்ச்சிகள் கடுமையாயிருக்கலாம்.a இத்தகைய போராட்டத்தை எதிர்ப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பெண் இவ்வாறு விவரித்தாள்: “மன்னிக்கமுடியாத பாவத்தை நான் செய்துவிட்டேனோ இல்லையோ என்று அறியாதவளாய், நான் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க விரும்பவில்லை. ஒருவேளை இதற்குமேல் மீளமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லாததால், யெகோவாவின் சேவையில் என்னை ஈடுபடுத்தாதிருப்பதே மேலானதென உணர்ந்தேன்.” குற்ற உணர்ச்சியால் நாம் அவ்வளவாக ஆழ்த்தப்பட்டு இருக்கும்போது, நம்மீது நம்பிக்கை இழந்துவிடுகிறோம், பிசாசானவனுக்கு வாய்ப்பளிக்கிறோம்—அவன் விரைவில் அதைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும்! (2 கொரிந்தியர் 2:5-7, 11) குற்ற உணர்ச்சியைப்பற்றிய மேலும் சமநிலையான நோக்கே தேவைப்படுவதாக இருக்கலாம்.
9. நாம் ஏன் கடவுளுடைய இரக்கத்தில் நம்பிக்கையுடையோராக இருக்க வேண்டும்?
9 நாம் பாவம் செய்துவிட்டால் ஓரளவு குற்ற உணர்ச்சியை உணருவது சரியானதே. எனினும் சிலசமயங்களில், கிறிஸ்தவர் ஒருவர், கடவுளுடைய இரக்கத்திற்குத் தான் ஒருபோதும் தகுதியுள்ளவராக இருக்க முடியாதென்று உணருவதால் குற்ற உணர்ச்சிகள் விடாது தொடருகின்றன. எனினும், பைபிள் அன்புடன் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “நமது பாவங்களை அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநீதமும் நீங்க நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவர்.” (1 யோவான் 1:9, தி.மொ.) நம்முடைய காரியத்தில் கடவுள் இதைச் செய்யமாட்டாரென்று நம்புவதற்கு நேர்மையான காரணம் ஏதாவது உண்டா? தாம் “மன்னிக்கச் சித்தமாயிருக்கிறவர்,” என்று தம்முடைய வார்த்தையில் யெகோவா சொல்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். (சங்கீதம் 86:5, தி.மொ.; 130:3, 4) மனஸ்தாபப்பட்டுத் திரும்பும் இருதயத்துடன் நாம் அவரிடம் வந்தால், அவர் பொய்ச்சொல்லக் கூடாதவராகையால், தம்முடைய வார்த்தை வாக்களிப்பதைப்போலவே செய்வார்.—தீத்து 1:3.
10. மாம்ச பலவீனம் ஒன்றை எதிர்த்துப் போராடுவதைப் பற்றியதில் முன்வந்த காவற்கோபுரம் ஒன்று, இருதயத்திற்குக் கனிவூட்டும் என்ன உறுதியளிப்பைப் பிரசுரித்தது?
10 நீங்கள் ஒரு பலவீனத்தை மேற்கொள்ள போராடிக்கொண்டிருந்து அதை மீண்டும் செய்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? சோர்ந்துவிடாதிருங்கள்! மீண்டும் தவறு செய்துவிடுவது, நீங்கள் ஏற்கெனவே செய்திருக்கிற முன்னேற்றத்தை நீக்கிவிடவேண்டியதில்லை. இந்தப் பத்திரிகையின் பிப்ரவரி 15, 1954-ன் வெளியீட்டில் இருதயத்திற்குக் கனிவூட்டும் இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது: “நாம் உணர்ந்திருந்ததற்கு மேலாக, நம்முடைய முந்தின வாழ்க்கைப் போக்கினுள் ஆழமாய் ஊன்றி பதிந்துவிட்டிருக்கிற ஏதோ கெட்ட பழக்கத்திற்குள் திரும்பத்திரும்பப் பலதடவைகள் இடறிவிழுவோராக நாம் [ஒருவேளை] நம்மைக் காணலாம். . . . வருந்தி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். மன்னிக்கமுடியாத பாவத்தை நீங்கள் செய்துவிட்டதாக முடிவுக்கு வராதீர்கள். அவ்வாறே நீங்கள் சிந்திக்கும்படி சாத்தான் விரும்புகிறான். உங்கள்பேரில் நீங்கள் மனம் வருந்தி வெறுப்புணர்ச்சியடையும் இந்த உண்மைதானேயும் நீங்கள் மீறிய அளவுக்குச் சென்றுவிடவில்லை என்பதற்கு நிரூபணமாயுள்ளது. மனத்தாழ்மையுடனும் உள்ளப்பூர்வத்துடனும் கடவுளிடம் திரும்பி, அவருடைய மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் உதவியையும் தேடுவதில் ஒருபோதும் சோர்வுறாதீர்கள். அதே பலவீனத்தின்பேரில் எத்தனை தடவைகளானாலும் சரி, இக்கட்டில் இருக்கும்போது சிறு பிள்ளை தன் தகப்பனிடம் செல்வதுபோல் அவரிடம் செல்லுங்கள். யெகோவா, தம்முடைய தகுதியற்ற தயவின் காரணமாக உங்களுக்கு உதவியளிப்பார். மேலும், நீங்கள் உள்ளப்பூர்வமாய் அவ்வாறு செய்தால், சுத்தமாக்கப்பட்ட மனச்சாட்சியை உணரும்படி உங்களுக்குத் தந்தருளுவார்.”
நாம் போதிய அளவு செய்கிறதில்லை என்று உணரும்போது
11. (அ) இராஜ்ய-பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்வதைப் பற்றியதில் நாம் எவ்வாறு உணரவேண்டும்? (ஆ) ஊழியத்தில் பங்குகொள்வதைப் பற்றியதில் என்ன உணர்ச்சிகளோடு கிறிஸ்தவர்களில் சிலர் போராடுகின்றனர்?
11 கிறிஸ்தவர் ஒருவரின் வாழ்க்கையில் ராஜ்ய பிரசங்க ஊழியம் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கிறது. அதில் பங்குகொள்வது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. (சங்கீதம் 40:8) எனினும் கிறிஸ்தவர்கள் சிலர், இந்த ஊழியத்தில் தாங்கள் மேலும் அதிகம் செய்ய முடியாதவர்களாக இருப்பதைப்பற்றி மிகுந்த குற்ற உணர்வுடையோராக இருக்கின்றனர். நாம் போதியளவு ஒருபோதும் செய்கிறதில்லையென்று யெகோவா உணருவதைப்போல் கற்பனைசெய்து, இத்தகைய குற்ற உணர்வு நம்முடைய மகிழ்ச்சியைப் படிப்படியாக அரித்து சோர்ந்துபோகும்படியும் நம்மைச் செய்விக்கக்கூடும். சிலர் போராடிக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளைக் கவனியுங்கள்.
தன் கணவரோடுகூட மூன்று பிள்ளைகளை வளர்த்துக்கொண்டிருக்கிற கிறிஸ்தவ சகோதரி ஒருவர் இவ்வாறு எழுதினார்கள்: “வறுமை எவ்வளவு நேரத்தை எடுத்துக்கொள்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எங்கெல்லாம் கூடுமோ அங்கெல்லாம் பொருளை வீணாகாதபடி நான் பாதுகாத்து வைக்க வேண்டும். இது, இரண்டாந்தர பொருட்கள் விற்கும் கடைகளில், சரக்குகளை காலி செய்யுமுன் செய்யும் விற்பனையின் அடுக்குகளில் தேடியலைவதில், அல்லது துணிகள் தைப்பதிலும்கூட நேரத்தைச் செலவிடுவதைக் குறிக்கிறது. [தள்ளுபடி உணவு விற்பனை] சலுகைச் சீட்டுகளை வெட்டி, சேர்த்துவைத்து, அவற்றை விற்பதிலும் நான் ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் செலவிடுகிறேன். இந்த நேரத்தை நான் வெளி ஊழியத்தில் செலவிட்டுக்கொண்டிருக்க வேண்டுமென்று சில சமயங்களில் நினைத்து, இந்தக் காரியங்களைச் செய்வதில் மிகுந்த குற்றமுள்ளவளாக உணருகிறேன்.”
நான்கு பிள்ளைகளையும் அவிசுவாசியான கணவனையும் உடைய சகோதரி ஒருவர் இவ்வாறு விளக்கினார்கள்: “நான் யெகோவாவை போதியளவு உண்மையில் நேசிக்கவில்லையென்று நினைத்தேன். ஆகவே யெகோவாவைச் சேவிப்பதில் போராடினேன். நான் உண்மையில் கடும் முயற்சி செய்தேன், ஆனால் அது போதுமென்று நான் ஒருபோதும் உணரவில்லை. பாருங்கள், சுயமதிப்பிற்குரிய எந்த உணர்ச்சியும் எனக்கு இருக்கவில்லை, ஆகவே யெகோவாவுக்குச் செய்யும் என் சேவையை அவர் எவ்வாறுதான் ஏற்கக்கூடுமென்று என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.”
முழுநேர ஊழியத்தை விட்டுவிடுவது அவசியமாயிருப்பதாகக் கண்ட ஒரு கிறிஸ்தவப் பெண் சொன்னதாவது: “யெகோவாவை முழு நேரமாகச் சேவிக்கும்படியான என் ஒப்படைப்பில் நான் தவறினேன் என்ற எண்ணத்தை என்னால் சகிக்க முடியவில்லை. நான் எவ்வளவு மனக்கசப்புற்றேனென உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது! இப்போதும் நினைத்து அழுகிறேன்.”
12. ஏன் கிறிஸ்தவர்கள் சிலர், ஊழியத்தில் அதிகம் செய்ய முடியாமலிருப்பதைப்பற்றி மிகுந்த குற்ற உணர்ச்சியடைகின்றனர்?
12 யெகோவாவை எவ்வளவு முழுமையாகச் சேவிக்கக்கூடுமோ அவ்வளவாகச் சேவிக்க விரும்புவது இயல்பே. (சங்கீதம் 86:12) எனினும், சிலர் ஏன், மேலும் அதிகமாகச் செய்ய முடியாததைப்பற்றி குற்ற உணர்ச்சி அடைகிறார்கள்? சிலருக்கு இது, தகுதியற்ற பொது உணர்ச்சியோடு சம்பந்தப்பட்டதாகத் தோன்றுகிறது, ஒருவேளை வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சியற்ற அனுபவங்களின் விளைவாக இருக்கலாம். மற்றவர்களின் காரியங்களில், யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதைப் பற்றியதில் உண்மையாயிராத ஒரு கருத்தின் விளைவாகப் பொருத்தமற்ற குற்ற உணர்வு உண்டாகலாம். “இனிமேலும் முடியாத அளவை எட்டும் வரையில் செய்யாவிடில், போதியளவு செய்யாததாக உணர்ந்தேன்,” என்று ஒரு கிறிஸ்தவப் பெண் சொன்னாள். இதன் விளைவாக, அவள் மட்டுமீறி உயர்ந்த தராதரங்களைத் தனக்கு வைத்தாள்—பின்பு அவற்றை அவள் எட்ட முடியாதபோது இன்னும் அதிக குற்ற உணர்ச்சியடைந்தாள்.
13. யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
13 யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், தம்மை முழு ஆத்துமாவோடும் சேவித்து, நம்முடைய சூழ்நிலைகள் அனுமதிப்பதைச் செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். (கொலோசெயர் 3:24) எனினும், நாம் செய்ய விரும்புவதற்கும் செய்ய உண்மையில் கூடியதற்கும் இடையே பெரும் வேறுபாடு இருக்கலாம். வயது, உடல்நலம், உடல் பலம், அல்லது குடும்ப பொறுப்புகள் போன்ற காரணங்களால் நாம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். இருப்பினும், நம்மால் கூடியதையெல்லாம் செய்கையில், யெகோவாவுக்குச் செய்யும் நம்முடைய சேவை முழு ஆத்துமாவோடும்—முழுநேர ஊழியத்தில் இருக்கும்படி உடல்நலமும் சூழ்நிலைகளும் அனுமதிக்கும் ஒருவருடைய முழு ஆத்துமாவுடன்கூடிய சேவையைப் பார்க்கிலும் அதிகமாகவோ குறைவாகவோ இராமல்—இருக்கிறதென்று உறுதிப்படுத்தப்பட்டவர்களாய் உணரலாம்.—மத்தேயு 13:18-23.
14. உங்களைக் குறித்ததில் நீங்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைத் தீர்மானிப்பதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் என்ன செய்யலாம்?
14 அவ்வாறெனில், உங்களைக் குறித்ததில் நீங்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கலாம்? முதிர்ச்சியடைந்த, நம்பிக்கையுள்ள கிறிஸ்தவ நண்பர் ஒருவரோடு இந்தக் காரியத்தைக் கலந்துபேச நீங்கள் விரும்பலாம். உங்கள் திறமைகளையும், உங்கள் மட்டுப்பாடுகளையும், உங்கள் குடும்பப் பொறுப்புகளையும் அறிந்திருக்கும் ஒரு மூப்பராக அல்லது அனுபவமுள்ள சகோதரியாக அத்தகையவர் ஒருவேளை இருக்கலாம். (நீதிமொழிகள் 15:22) கடவுளுடைய கண்களில் ஓர் ஆளாக உங்கள் மதிப்பு, நீங்கள் வெளி ஊழியத்தில் எவ்வளவு செய்கிறீர்கள் என்பதால் மதிப்பிடப்படுகிறதில்லை என்பதை நினைவில் வையுங்கள். யெகோவாவின் ஊழியர்கள் எல்லாரும் அவருக்கு அருமையானவர்கள். (ஆகாய் 2:7; மல்கியா 3:16, 17) பிரசங்க ஊழியத்தில் நீங்கள் செய்வது மற்றவர்கள் செய்வதைப் பார்க்கிலும் அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் மிகச் சிறந்ததைக் குறித்துக் காட்டும் வரையில், யெகோவா சந்தோஷப்படுகிறார், நீங்கள் குற்ற உணர்ச்சியடைய வேண்டியதில்லை.—கலாத்தியர் 6:4.
நம்மிடம் அதிகம் கேட்கப்படும்போது
15. என்ன வகைகளில் சபை மூப்பர்களிடம் அதிகம் கேட்கப்படுகிறது?
15 “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்,” என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:48) சபை மூப்பர்களாகச் சேவிப்போரிடம் நிச்சயமாகவே ‘அதிகம் கேட்கப்படுகிறது.’ பவுலைப்போல் சபைக்காக அவர்கள் தங்களைச் செலவிடுகின்றனர். (2 கொரிந்தியர் 12:15) அவர்கள் பேச்சுகள் தயாரிக்க வேண்டியிருக்கிறது, மேய்ப்பு சந்திப்புகள் செய்யவேண்டியிருக்கிறது. நியாய விசாரணைக் காரியங்களைக் கையாள வேண்டியிருக்கிறது—இவற்றையெல்லாம் தங்கள் சொந்த குடும்பங்களைக் கவனிப்பதில் தவறிவிடாமல் செய்ய வேண்டும். (1 தீமோத்தேயு 3:4, 5) மூப்பர்கள் சிலர், ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு உதவிசெய்வதிலும், மருத்துவமனை லேய்சன் குழுக்களில் சேவிப்பதிலும், அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் முன்வந்து சேவிப்பதிலும் வேலைமிகுந்தவர்களாக இருக்கின்றனர். கடினமாய் உழைத்து முழுமையாக ஈடுபட்டுள்ள இந்த மனிதர், அத்தகைய பொறுப்புகளின் பாரத்தின்கீழ் சோர்வடைவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
16. (அ) நடைமுறையான என்ன ஆலோசனையை எத்திரோ மோசேக்கு அளித்தார்? (ஆ) பொருத்தமான பொறுப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு என்ன பண்பு மூப்பருக்கு உதவிசெய்யும்?
16 சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ளவராக இருந்த மோசே, மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தன்னைப் பேரளவாய்ச் செலவிட்டுக்கொண்டிருந்தபோது, அவருடைய மாமன் எத்திரோ, பின்வரும் நடைமுறையான ஒரு ஆலோசனையை அளித்தார்: தகுதிபெற்ற மற்ற ஆட்களோடுகூட பொறுப்பில் சிறிதைப் பகிர்ந்துகொள்ளும். (யாத்திராகமம் 18:17-26; எண்ணாகமம் 12:3) “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு,” என்று நீதிமொழிகள் 11:2 சொல்கிறது. தாழ்ந்த சிந்தையுடனிருப்பது, உங்கள் மட்டுப்பாடுகளை உணர்ந்து ஏற்பதைக் குறிக்கிறது. தாழ்ந்த சிந்தையுள்ள ஒருவர், மற்றவர்களுக்கு அதிகாரமளிப்பதற்குத் தயங்கமாட்டார், தகுதிபெற்ற மற்றவர்களுடன் பொருத்தமான பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதால் எவ்வாறோ அதிகாரக் கட்டுப்பாட்டை இழப்பதாகப் பயப்படவும் மாட்டார்.b (எண்ணாகமம் 11:16, 17, 26-29) மாறாக, அவர்கள் முன்னேறுவதற்கு உதவிசெய்ய ஆவலுள்ளவராயிருப்பார்.—1 தீமோத்தேயு 4:15.
17. (அ) எவ்வாறு சபை உறுப்பினர்கள் மூப்பர்களின் சுமையை இலகுவாக்கலாம்? (ஆ) மூப்பர்களின் மனைவிமார் என்ன தியாகங்கள் செய்கின்றனர், இவற்றை நாம் மதித்துணராதவர்களாக இல்லை என்பதை அவர்களுக்கு எவ்வாறு காட்டலாம்?
17 மூப்பர்களின் பாரத்தை இலகுவாக்குவதற்குச் சபை உறுப்பினர் அதிகம் செய்யக்கூடும். மூப்பர்கள் தங்கள் சொந்த குடும்பங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறதென்பதைப் புரிந்துகொள்பவர்களாக மற்றவர்கள், மூப்பர்களின் நேரத்தையும் கவனத்தையும் நியாயமற்ற வகையில் கேட்கமாட்டார்கள். தங்கள் கணவர்கள் தங்களோடிருக்கக்கூடிய நேரத்தைச் சபையுடன் செலவிட மூப்பர்களின் மனைவிமார் தன்னலமற்றவர்களாய் மனமுவந்து பகிர்ந்துகொள்வதை சபையினர் மதித்துணராமல் இருக்கமாட்டார்கள். தன் கணவர் மூப்பராகச் சேவிக்கிற மூன்று பிள்ளைகளையுடைய ஒரு தாய் இவ்வாறு விளக்கிக் கூறினார்கள்: “நான் ஒருபோதும் குறைகூறாத ஒன்றானது, என் கணவர் மூப்பராகச் சேவிக்கக்கூடும்படி குடும்பத்தில் நான் மனமுவந்து சுமக்கிற மிகைப்படியான சுமையைப் பற்றியதாகும். அவர் சேவிப்பதனால் யெகோவாவின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்தின்பேரில் நிறைவாயுள்ளதென்று நான் அறிந்திருக்கிறேன். அவர் அவ்வாறு செலவிட்டு வருவதைக் குறித்து நான் மனக்கசப்படைவதில்லை. எனினும், என் கணவர் வேலையாயிருப்பதால், உண்மையில் நானே, அடிக்கடி வெளி முற்றத்தில் அதிக வேலைகள் செய்யவும் எங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் அதிகம் செய்யவும் வேண்டியிருக்கிறது.” விசனமுண்டாக, சிலர், இந்த சகோதரியின் மிகைப்படியான பாரத்தை மதித்துணருவதற்குப் பதிலாக, “நீங்கள் ஏன் பயனியர் செய்துகொண்டில்லை?” என்பதைப் போன்ற உணர்ச்சியற்ற கூற்றுகளைக் கூறினதை இந்தச் சகோதரி கண்டார். (நீதிமொழிகள் 12:18) மற்றவர்கள் செய்ய முடியாதவற்றிற்காக அவர்களைக் குறைகூறுவதற்குப் பதிலாக, அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றிற்காக அவர்களைப் போற்றுவது எவ்வளவு மேலானது!—நீதிமொழிகள் 16:24; 25:11.
முடிவு இன்னும் வராததனால்
18, 19. (அ) நித்திய ஜீவனைப் பெறுவதற்கான ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதை நிறுத்துவதற்கு ஏன் இது நேரமல்ல? (ஆ) எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு சமயத்துக்கேற்ற என்ன அறிவுரையை அப்போஸ்தலன் பவுல் அளித்தார்?
18 பந்தயத்தில் ஓடுபவன் நெடுந்தொலைவான ஓட்டத்தின் முடிவுக்கு அருகில் தான் வந்துவிட்டதாக அறிகையில் சோர்ந்து நின்றுவிடுகிறதில்லை. அவனுடைய உடல் தாங்கக்கூடிய அளவை மிஞ்சி—முழுச்சோர்வுற்று, மீறிய அனலுற்று, வியர்த்துப்போய்—இருக்கலாம். ஆனால் முடிவுக்கு அவ்வளவு அருகில் வந்துவிட்டதால் ஓடுவதை நிறுத்துவதற்கான நேரம் அதுவல்ல. அவ்வாறே, கிறிஸ்தவர்களாக நாம் ஜீவப் பரிசைப் பெறுவதற்கான ஒரு பந்தயத்தில் இருக்கிறோம், மேலும், முடிவு கோட்டை எட்டும் நிலையில் இருக்கிறோம். இது நாம் ஓடுவதை நிறுத்துவதற்கான நேரமல்ல!—ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 9:24; பிலிப்பியர் 2:14; 3:13, 14.
19 முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இதைப் போன்ற ஒரு நிலைமையை எதிர்ப்பட்டார்கள். ஏறக்குறைய பொ.ச. 61-ல், அப்போஸ்தலன் பவுல் எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். காலம் முடியப்போவதாக இருந்தது—அந்தப் பொல்லாத ‘சந்ததியாகிய,’ விசுவாசதுரோக யூதக் காரிய ஒழுங்குமுறை ‘ஒழிந்துபோகும்’ சமயத்தில் இருந்தது. முக்கியமாய், எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் விழிப்புள்ளோராயும் உண்மையுள்ளோராயும் இருக்க வேண்டியிருந்தது; அந்த நகரம் சேனைகளால் சூழப்பட்டதை அவர்கள் கண்டபோது அதை விட்டு தப்பியோட வேண்டியிருந்தது. (லூக்கா 21:20-24, 32) அவ்வாறெனில், தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலனின் இந்த அறிவுரை சமயத்திற்கேற்றதாக இருந்தது: ‘நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதிருங்கள்.’ (எபிரெயர் 12:3) அப்போஸ்தலன் பவுல் இங்கே முனைப்பான இரண்டு வினைச்சொற்களைப் பயன்படுத்தினார்: ‘இளைப்புற்று’ (காம்னோ) மற்றும் ‘சோர்ந்து போ’ (எக்லீயோமாய்). பைபிள் கல்விமான் ஒருவரின்படி, இந்த கிரேக்க சொற்கள் “முடிவு கோட்டைத் தாங்கள் கடந்த பின்பு தளர்ந்து விழும் ஓட்டக்காரர்களைக் குறித்து அரிஸ்டாட்டில் பயன்படுத்தியவை. [பவுலின் கடிதத்தை] வாசித்தவர்கள் இந்த ஓட்டப் பந்தயத்தில் இன்னும் இருந்தனர். அவர்கள் உரிய காலத்துக்கு முன்பே நின்றுவிடக் கூடாது. தாங்கள் சோர்வினால் தளர்வுற்று விழுவதற்கு இடமளிக்கக்கூடாது. இக்கட்டை எதிர்ப்படுகையில் விடாமுயற்சியுடன் செயல்படுவதை இது மறுபடியும் கேட்பதாயிருக்கிறது.”
20. ஏன் அப்போஸ்தலன் பவுலின் அறிவுரை இன்று நமக்குச் சமயத்துக்கு ஏற்றவாறு உள்ளது?
20 பவுலின் அறிவுரை நமக்கு இன்று எவ்வளவாய்ச் சமயத்துக்கு ஏற்றவாறு உள்ளது! பெருகிக்கொண்டே இருக்கும் துன்ப நெருக்கடிகளின் மத்தியில், சோர்வுற்று தளர்ந்து, கால்கள் பலனற்று விழும் நிலையிலிருக்கும் ஓட்டக்காரனைப்போல் நாம் உணரும் சமயங்கள் இருக்கலாம். ஆனால் முடிவு கோட்டுக்கு அவ்வளவு அருகில் இருப்போராக, நாம் சோர்ந்துவிடக்கூடாது! (2 நாளாகமம் 29:11) நாம் சோர்ந்துபோகும்படியே ‘கெர்ச்சிக்கிற சிங்கமான’ நம் எதிராளி விரும்புகிறான். ‘சோர்ந்துபோகிறவனுக்கு பலம்’ கொடுப்பதற்கான ஏற்பாடுகளை யெகோவா செய்திருக்கிறார், அதற்காக நன்றிசெலுத்துகிறோம். (ஏசாயா 40:29, தி.மொ.) இவை யாவை, இவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பவை அடுத்த கட்டுரையில் ஆலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a உதாரணமாக, கோபத்தன்மை போன்ற ஆழமாய்ப் பதிந்துள்ள ஆளுமைக்குரிய தன்மை ஒன்றை அடக்கியாளுவதற்கு, அல்லது தற்புணர்ச்சிப் பழக்கத்தை அடக்கி மேற்கொள்வதற்குச் சிலர் போராடிக்கொண்டிருக்கலாம்.—உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட, ஆங்கில விழித்தெழு!, மே 22, 1988, பக்கங்கள் 19-21; நவம்பர் 8, 1981, பக்கங்கள் 16-20; மற்றும் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், பக்கங்கள் 198-211-ஐக் காண்க.
b காவற்கோபுரம், ஜனவரி 15, 1993-ன் வெளியீட்டில் “மூப்பர்களே—பொறுப்புகளை ஒப்படையுங்கள்!” என்ற கட்டுரை, பக்கங்கள் 20-3-ஐக் காண்க.
உங்கள் விடை என்ன?
◻ மற்றவர்கள் நம்மை மனம் முறிவுற அல்லது மனவேதனையடைய செய்கையில், சோர்ந்துவிடுவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
◻ குற்ற உணர்ச்சியைப் பற்றிய என்ன சமநிலையான கருத்து நாம் சோர்ந்துவிடாதிருக்கும்படி செய்யும்?
◻ யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
◻ எவ்வாறு மனத்தாழ்மை சபை மூப்பர்கள் சோர்வுறுவதைத் தவிர்க்க உதவிசெய்யலாம்?
◻ ஏன் எபிரெயர் 12:3-ல் உள்ள பவுலின் அறிவுரை இன்று நமக்குச் சமயத்திற்கேற்றதாக உள்ளது?