சீலா—உற்சாகத்தின் ஊற்று
கிறிஸ்தவ சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே உண்மையுள்ள பயணக் கண்காணிகளின் சேவை இரண்டு விதங்களில் முக்கியமானதாக இருந்தது. அவை கடவுளுடைய சபையிலுள்ள ஜனங்களை உற்சாகப்படுத்துவதும் பூமியின் கடைசி பரியந்தம் நற்செய்தியை பிரசங்கிப்பதும் ஆகும். ஆரம்ப கால கண்காணிகளில் சீலாவும் ஒருவர். அவர் தீர்க்கதரிசியாகவும் எருசலேமின் சபையில் முக்கிய நபராகவும் இருந்தார். பிரசங்க வேலையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு; ஐரோப்பிய பிராந்தியத்தில் முதன்முதலில் பிரசங்கிப்பதற்கு கால் பதித்த மிஷனரிகளில் அவரும் ஒருவர். இந்த எல்லாவற்றையும் செய்வதற்கு சீலாவை அதிக தகுதியுள்ளவராக எது ஆக்கியது? அவருடைய குணங்களில் எதை நாம் மிக முக்கியமாய் பின்பற்ற வேண்டும்?
விருத்தசேதனம் பற்றிய விவாதம்
சுமார் பொ.ச. 49-ல், விருத்தசேதனம் பற்றிய விவாதம் எழுந்தது; இப்பிரச்சினை பிரிவினைக்கும்கூட வழிவகுத்திருக்கலாம். இந்த விவாதத்திற்குத் தீர்வு காணும் வகையில், கிறிஸ்தவர்களுக்கிடையே சரியான வழிநடத்துதலை அளிக்க வேண்டிய தேவை எருசலேமிலிருந்த ஆளும் குழுவுக்கு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், சில்வானு என்னும் மறுபெயர் உடைய சீலாவைப் பற்றி பைபிள் பதிவுகள் குறிப்பிடுகின்றன. தீர்மானிப்பவர்களுள் இவரும் இருந்திருக்கலாம்; ‘அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும்’ தெரிந்தெடுத்து அனுப்பப்பட்டவராக அவர்களுடைய தீர்மானத்தை ‘அந்தியோகியாவிற்கும் சீரியாவிற்கும் சிலிசியாவிற்கும்’ கொண்டு சென்றார். சீலாவும் யூதாவும் (பர்சபாவும்) பர்னபாவோடும் பவுலோடும் சேர்ந்துகொண்டு தாங்கள் கொண்டுவந்த கடிதத்தை அந்தியோகியாவிலே கொடுத்தனர்; எருசலேமில் நடந்த கூட்டத்தைப் பற்றியும், தீர்மானம் எடுக்கப்பட்டதைப் பற்றியும் கடிதத்தில் அடங்கியவற்றைப் பற்றியும் நேரடியாக அவர்கள் விவரித்திருப்பார்கள். அவர்கள், ‘அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தவும் [“உற்சாகப்படுத்தவும்,” NW]’ செய்தார்கள். அதற்குக் கிடைத்த பலன், அந்தியோகியாவிலே இருந்த கிறிஸ்தவர்கள் “சந்தோஷப்பட்டார்கள்.”—அப்போஸ்தலர் 15:1-32.
இந்தப் பெரும் விவாதத்தை தீர்த்துவைப்பதில் சீலா முக்கிய பங்கு வகித்தார். ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு சாதாரணமான ஒன்றல்ல. எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அந்தியோகியா சபையில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிவதற்கு எந்தவொரு வழியுமில்லாதிருந்தது. எனவே, “அப்போஸ்தலர்கள் தங்கள் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்கு அதிக ஞானமும் விவேகமும் உள்ள ஒருவர் தேவைப்பட்டார்” என ஒரு கருத்துரையாளர் குறிப்பிடுகிறார். திறமையைத் தேவைப்படுத்திய இந்தப் பொறுப்பை சரிவர செய்ய தகுதியானவர் என சீலா தெரிவு செய்யப்பட்டார்; இது, அவர் எப்படிப்பட்ட நபர் என்பதைப் பற்றி நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. ஆளும் குழுவினரை பிரதிநிதித்துவம் செய்து, அவர்களுடைய வழிநடத்துதலை உண்மையாக செயல்படுத்துவார் என்பதில் அவர்களுக்கு அவர்மேல் நம்பிக்கை இருந்தது. சபையில் கருத்துவேறுபாடு ஏற்படுகையில், தன்னுடைய சமரசப்படுத்தும் தன்மையால் அவர்களைச் சுண்டியிழுக்கும் ஞானமுள்ள கண்காணியாகவும் அவர் இருந்திருக்க வேண்டும்.
பவுலுடன் பயணங்கள்
அந்த வேலையை செய்து முடித்தப் பின்பு சீலா எருசலேமிற்குத் திரும்பி வந்தாரா இல்லையா என்பது தெளிவாக இல்லை. இருந்தபோதிலும், மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய விஷயத்தில் பர்னபாவுக்கும் பவுலுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பவுல், அப்போது அந்தியோகியாவிலே இருந்த சீலாவைக் கூட்டிக் கொண்டு தன் புதிய பயணத்தைத் தொடர்ந்தார். பவுல் தன்னுடைய முதல் மிஷனரி பயணத்தில் பிரசங்கித்த பட்டணங்களைத் திரும்பவும் சென்று சந்திப்பதே இந்தப் புதிய பயணத்தின் நோக்கம்.—அப்போஸ்தலர் 15:36-41.
பிற இனத்தவரிடம் ஊழியம் செய்ய மனமுள்ளவராகவும், அதிகாரம் பெற்ற தீர்க்கதரிசியாகவும், ஆளும் குழுவின் பிரதிநிதியாகவும் சீலா இருந்ததே அவர்களுடைய தீர்மானத்தை சீரியாவிலும் சிலிசியாவிலும் இருந்த விசுவாசிகளுக்கு கொண்டு செல்ல அவரைத் தெரிந்தெடுக்கும்படி அவர்களைத் தூண்டியிருக்கலாம். பலனோ அபாரம். அப்போஸ்தல நடபடிகள் விவரிக்கிறது: “அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள். அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.”—அப்போஸ்தலர் 16:4, 5.
இந்த மிஷனரிகள் தங்கள் பயணத்தைத் தொடருகையில், அவர்கள் செல்லவிருந்த வழியில் செல்லாமல் இருமுறை வேறு வழியாக செல்லும்படி பரிசுத்த ஆவி வழிநடத்தியது. (அப்போஸ்தலர் 16:6, 7) தீமோத்தேயுவைப் பற்றி தெளிவாக குறிப்பிடப்படாத ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைக்கப்பட்ட பிறகு, லீஸ்திராவில் அவர்களுடன் பயணத்தில் சேர்ந்துகொண்டார் அவர். (1 தீமோத்தேயு 1:18; 4:14) தீர்க்கதரிசன வரம் பெற்ற பவுலுக்குக் காட்டப்பட்ட ஒரு தரிசனத்தில், ஐரோப்பாவிலுள்ள மக்கெதோனியாவுக்கு செல்லும்படி இந்தப் பயணக் கூட்டாளிகள் வழிநடத்தப்பட்டனர்.—அப்போஸ்தலர் 16:9, 10.
அடியும் சிறையும்
“மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையான” பட்டணமாகிய பிலிப்பியில் கடும் வேதனையை அனுபவித்தார் சீலா; அது அவருக்கு மறக்கமுடியாத ஓர் அனுபவம். குறிசொல்ல ஏவுகிற ஆவி பிடித்திருந்த ஓர் அடிமைப் பெண்ணிடமிருந்து அந்த ஆவியை பவுல் விரட்டியதை அவளுடைய எஜமானர்கள் கண்டனர்; தங்களுடைய வருவாய்க்கு வந்த நஷ்டத்தைக் கண்ட அவர்கள் சீலாவையும் பவுலையும் சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடம் இழுத்துச் சென்றனர். விளைவு? குற்றவாளிகளைப் போல் பொது மக்களின் முன் இவர்கள் இருவரும் மதிப்பற்ற நிலையில் நிறுத்தப்பட்டனர்; அவர்களுடைய உடைகள் தாறுமாறாக கிழிக்கப்பட்டு, தடிகளால் சந்தைவெளியில் அடிக்கப்பட்டனர்.—அப்போஸ்தலர் 16:12, 16-22.
இப்படி அடிப்பது, ஒருவருடைய சகிப்புத் தன்மையை சோதிக்கும் அளவுக்கு கொடுக்கப்படும் பயங்கரமான தண்டனை மட்டுமல்ல; பவுல், சீலாவின் விஷயத்தில் இந்தத் தண்டனை சட்டவிரோதமானதும்கூட. ஏன்? எந்த ஒரு ரோம பிரஜையையும் அடிக்கக்கூடாதென்பது ரோமர்களின் சட்டம். பவுலோ ரோம பிரஜா உரிமை பெற்றவர்; ஒருவேளை சீலாவும் அந்த உரிமை பெற்றவராய் இருக்கலாம். “அநேக அடி” அடித்த பின்பு, தங்கள் கால்கள் மரச்சட்டத்திற்குள் [தொழுமரத்தில்] மாட்டி வைக்கப்பட்டவர்களாக பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டனர். “இது கொடூரமான கருவி; இந்த மரச்சட்டத்திற்குள் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கைதிகளின் கால்கள் அகட்டி வைக்கப்படும். இது துளிகூட அவர்களை கண் அயர விடாது” என இவற்றை குஸ்டவ் ஷ்டாலின் விளக்குகிறார். இருந்தபோதிலும், ரணமாகியிருந்த அவர்களுடைய முதுகு முழுவதும் வலி தாங்கமுடியாதளவுக்கு இருந்த அந்த நடுராத்திரி வேளையில், “பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்.”—அப்போஸ்தலர் 16:23-25.
இது ஓரளவுக்கு சீலாவின் குணநலன்களை படம்பிடித்துக் காட்டுகிறது. கிறிஸ்துவின் பெயருக்காக துன்பம் அனுபவித்தது அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. (மத்தேயு 5:11, 12; 24:9) சீலாவும் அவருடைய தோழர்களும் முன்பு அந்தியோகியாவுக்கு சென்றபோது சபையை உற்சாகப்படுத்தவும், பலப்படுத்தவும் உதவியதும் உடன் கிறிஸ்தவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த உதவியதும் இதே குணம்தான். பூமி அதிர்ச்சியால் ஆச்சரியமான விதத்தில் சிறைச் சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாலும், தற்கொலை செய்துகொள்ளவிருந்த சிறைச்சாலைக்காரனும் அவனுடைய குடும்பத்தாரும் கடவுளின்மீது நம்பிக்கை வைக்க உதவியதாலும் பவுலுக்கும் சீலாவுக்கும் இருந்த சந்தோஷம் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.—அப்போஸ்தலர் 16:26-34.
பவுலோ சீலாவோ அடிகளுக்கும் சிறைவாசத்திற்கும் பயந்தவர்கள் அல்ல. அவர்களை விடுதலை செய்யும்படி கட்டளை பறந்து வந்தது; ஆனால் அவர்களோ, அதிகாரிகள் விரும்பியது போல் பிலிப்பியிலிருந்து இரகசியமாய் வெளியேற மறுத்தார்கள். அவர்கள் துணிந்து நின்றார்கள். மேலும், செருக்குமிக்க, கொடூரமான அதிகாரிகளுக்கு எதிராகவே வழக்கைத் திருப்பிவிட்டார்கள். “ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பி விடட்டும்” என்றார் பவுல். என்ன நடக்குமோ என்று பயந்த அதிகாரிகள், அவர்கள் இருவரையும் பட்டணத்தை விட்டு போகும்படி தயவாக கேட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என உணர்ந்தார்கள்.—அப்போஸ்தலர் 16:35-39.
ரோமர்களாக தங்களுக்கிருக்கும் உரிமையை அதிகாரிகளுக்கு தெள்ளத் தெளிவாக்கினார்கள்; அதன்மூலம் தங்களுக்கிருக்கும் உரிமையை பவுலும் சீலாவும் நிரூபித்த பின்னரே அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார்கள். செல்வதற்கு முன்பு தவறாமல் தங்கள் நண்பர்களைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து விடை பெற்றனர். அந்த முழு பிரசங்க பயணத்தின் முக்கிய நோக்கம் அங்கிருந்த சகோதரர்களை ‘உற்சாகப்படுத்துவது.’ அதற்கிசைவாக மீண்டும் அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்திய பின்னரே சீலாவும் அவருடைய உடன் தோழனும் அவ்விடம் விட்டு புறப்பட்டனர்.—அப்போஸ்தலர் 16:40, NW.
மக்கெதோனியாவிலிருந்து பாபிலோனுக்கு
இந்த மோசமான அனுபவத்தால் சோர்வடைந்துவிடாமல் பவுலும் சீலாவும் அவர்களுடைய உடன் தோழர்களும் புதிய மிஷனரி பிராந்தியங்களுக்கு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தெசலோனிக்கேயில் அவர்கள் மீண்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். மூன்று ஓய்வுநாட்கள் அடங்கிய ஒரு காலப் பகுதிக்குள்ளாக பவுல் தன் ஊழியத்தில் பெரும் வெற்றி கண்டிருந்தார்; இதைப் பார்த்து மனம் வெதும்பிய எதிரிகள், ஒரு கும்பலை அவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டனர். அந்த இராத்திரியே மிஷனரிகள் அந்தப் பட்டணத்தைவிட்டு வெளியேறுவதை அது உசிதமாக்கியது. அப்போது அவர்கள் பெரோயாவுக்குச் சென்றனர். அந்தப் பட்டணத்தில் பவுலும் அவருடைய கூட்டாளிகளும் படைத்த சாதனைகளை கேட்டறிந்த எதிரிகள் பொறுக்க முடியாமல் தெசலோனிக்கேயிலிருந்து புறப்பட்டு வந்தனர். பெரோயாவிலேயே இருந்து புதிதாக அக்கறை காட்டிய தொகுதியினரை கவனித்துக் கொள்ளும்படி பொறுப்பை சீலாவிடமும் தீமோத்தேயுவிடமும் ஒப்படைத்துவிட்டு பவுல் தனிமையில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். (அப்போஸ்தலர் 17:1-15) தீமோத்தேயுவும் சீலாவும் கொரிந்துவில் பின்னர் பவுலுடன் சேர்ந்துகொள்ள வந்தனர்; அவ்வாறு வருகையில் பவுலுக்கு சந்தோஷமான செய்திகளையும் மக்கெதோனியாவிலிருந்த உண்மையுள்ள நண்பர்கள் ஒருவேளை கொடுத்தனுப்பியதாக கருதப்படும் பரிசையும் கொண்டு வந்தனர். அவர்கள் வரும் வரை பவுல் தன் பிழைப்புக்காக வேலை செய்து வந்தார். அவர்கள் கொண்டு வந்து கொடுத்தது பவுல் அப்போஸ்தலனின் தேவைக்கு போதுமானதாக இருந்திருக்கலாம். எனவே தொழில் செய்வதை விட்டுவிட்டு இப்போதோ முழுநேர ஊழியத்தில் முழு மூச்சோடு இறங்கினார். (அப்போஸ்தலர் 18:1-5; 2 கொரிந்தியர் 11:9) கொரிந்துவில் சீலாவையும் தீமோத்தேயுவையும் பிரசங்கிகள், பவுலின் தோழர்கள் என்றே அடையாளம் கண்டுகொண்டனர். எனவே அந்தப் பட்டணத்திலும் அவர்கள் தங்கள் ஊழிய நடவடிக்கையால் ஒரு கலக்கு கலக்கியிருந்தனர் என்பது வெகு தெளிவாகிறது.—2 கொரிந்தியர் 1:19.
இந்தச் சமயத்தில் கொரிந்துவிலிருந்து தெசலோனிக்கேயர்களுக்கு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன. கடிதங்களில், ‘நாங்கள்’ என்ற சுட்டுப்பெயர் எங்கும் காணப்படுகிறது. சீலாவும் தீமோத்தேயுவும் கடிதத்தை எழுதியிருப்பர் என இது தோன்றச் செய்கிறது. சீலாவும் கடிதம் எழுதுவதில் பங்குகொண்டார் என்பது தன் கடிதங்கள் ஒன்றில் பேதுரு குறிப்பிட்டிருப்பதிலிருந்து முக்கியமாய் தெரிய வருகிறது. “உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின்” மூலம் தன் முதல் கடிதத்தை எழுதியதாக பேதுரு சொல்கிறார். (1 பேதுரு 5:12) சில்வானு வெறுமனே கடிதத்தைக் கொண்டு சென்ற ‘அஞ்சல்காரராக’ இருந்திருக்கலாம் என்றாலும் பேதுருவின் இரண்டு கடிதங்களுக்கும் இடையே உள்ள மொழி நடையில் காணப்படும் வித்தியாசம் தன் முதல் கடிதத்தை எழுத சீலாவை அவர் உபயோகித்திருக்கலாம் என தெரிகிறது; இரண்டாவது கடிதத்தையோ பேதுருவே எழுதினார். இவ்வாறு சீலாவிற்கு எத்தனை எத்தனையோ திறமைகள் இருந்தன, அவருக்குத் தேவராஜ்ய சிலாக்கியங்களும் கிடைத்தன; ஒருவேளை அவற்றில் ஒன்றுதான், அவர் செயலராக பணியாற்றியதும்.
பின்பற்றுவதற்கு உகந்த ஒரு முன்மாதிரி
சீலாவின் சாதனைகளை வைத்து அவரை சற்று எடைபோட்டால் அப்பப்பா, நாம் அறிந்தவை நம் நெஞ்சை நெகிழ வைக்கின்றன. தற்கால மிஷனரிகளுக்கும் பயணக் கண்காணிகளுக்கும் அவர் பின்பற்றுவதற்கு வெகு சிறந்த முன்மாதிரி. தனக்கு பெரும் பணச் செலவை ஏற்படுத்தும் நீண்ட பயணங்களை தன்னலம் கருதாமல் செய்திருந்தார்; பொருளுக்காகவோ பெருமைக்காகவோ அல்ல மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணமே உயர்ந்திருந்தது. ஞானமான சாதுரியமான புத்திமதியாலும், நன்கு தயாரிக்கப்பட்ட இதமான சொற்பொழிவுகளாலும், ஊழியத்தில் தன்னுடைய வைராக்கியத்தாலும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென்பதே அவருடைய குறிக்கோளாக இருந்தது. நீங்கள் எல்லாவற்றையும் சரியான மனநிலையோடு ஏற்றுக்கொள்பவரா? அப்படியென்றால், யெகோவாவின் ஒழுங்கமைக்கப்பட்ட மக்களுக்குள் நீங்கள் செய்யும் சேவை எதுவாக இருந்தாலும், துன்பங்களின் மத்தியிலும் நீங்களும்கூட உங்கள் உடன் விசுவாசிகளுக்கு உற்சாகத்தின் ஊற்றாக இருப்பீர்கள்.
[பக்கம் 29-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பவுலுடைய இரண்டாம் மிஷனரி பயணம்
மத்தியதரைக் கடல்
தெர்பை
அந்தியோகியா
லீஸ்திரா
இக்கோனியா
துரோவா
பிலிப்பி
அம்பிபோலி
தெசலோனிக்கே
பெரோயா
அத்தேனே
கொரிந்து
எபேசு
எருசலேம்
செசரியா
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.