மாற்கு ‘ஊழியத்தில் உதவியாக இருந்தவர்’
அந்தியோகியாவிலிருந்த சபையில் எழுந்த சில பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை வித்தியாசமாக இருந்தது. அது என்ன? அப்போஸ்தலர்களான பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே; அவ்விருவரும் மிஷனரிப் பயணம் செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள்; தங்களோடு யாரைக் கூட்டிக்கொண்டு போவதெனத் தீர்மானிக்கும்போது அவர்களுக்கு இடையே “கடுங்கோபம் மூண்டது.” (அப். 15:39) அதன்பின், அவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து, வெவ்வேறு திசைகளில் போனார்கள். மிஷனரிப் பயணத்தில் முன்பு அவர்களோடுகூடச் சென்றிருந்த மாற்குவைப் பற்றித்தான் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாற்கு என்பவர் யார்? அந்த இரண்டு அப்போஸ்தலர்களும் அவரைப் பற்றி ஏன் வாக்குவாதம் செய்தார்கள்? அவர்களுக்கு இடையே ஏன் வித்தியாசமான கருத்துகள் இருந்தன? அந்தக் கருத்துகளில் பின்பு மாற்றம் ஏற்பட்டதா? மாற்குவின் வாழ்க்கையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
சொந்த ஊரான எருசலேமில்
மாற்கு ஒரு யூதர். எருசலேமில் வளர்ந்தவர். அவர் ஒருவேளை பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம். ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் சரித்திரத்தைப் பற்றி வாசிக்கும்போது இவரைப் பற்றி முதன்முதலாகத் தெரிந்துகொள்கிறோம். கி.பி. 44-ஆம் ஆண்டு வாக்கில், முதலாம் ஏரோது அகிரிப்பாவின் கட்டளைப்படி அப்போஸ்தலன் பேதுரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்; அவர் யெகோவாவின் தூதரால் அற்புதமாக விடுவிக்கப்பட்ட பின்பு, “மாற்கு என்றழைக்கப்பட்ட யோவானின் தாயாகிய மரியாளின் வீட்டிற்குப் போனார்; அங்கே பலர் ஒன்றுகூடி ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள்.”—அப். 12:1-12.a
அப்படியானால், எருசலேம் சபையினர் மாற்குவின் தாயாகிய மரியாளின் வீட்டைத்தான் கூட்டங்களுக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அங்கே “பலர்” ஒன்றுகூடியிருந்தார்கள் என்று அந்த வசனம் சொல்வதால், அந்த வீடு பெரியதாக இருந்திருக்க வேண்டும். மரியாளுக்கு ரோதை என்ற வேலைக்காரப் பெண்ணும் இருந்தாள். (பேதுரு அந்த வீட்டு “வாசல் கதவைத் தட்டியபோது” யாரெனப் பார்க்கச் சென்றவள் இவள்தான்.) மரியாள் ஓரளவு வசதிபடைத்தவளாக இருந்திருக்க வேண்டும் என்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன. அந்த வீடு மரியாளின் கணவனுடைய வீடு எனக் குறிப்பிடப்படாமல், மரியாளின் வீடு என்றே குறிப்பிடப்படுவதால், அவள் ஒருவேளை விதவையாக இருந்திருக்கலாம்; மாற்கு அப்போது சிறுவனாக இருந்திருக்கலாம்.—அப். 12:13.
ஜெபம் செய்வதற்காக அங்கு கூடியிருந்தவர்களில் மாற்குவும் இருந்திருப்பார். இயேசுவின் சீடர்களோடும், அவருடைய ஊழியத்தைக் கண்ணாரக் கண்ட மற்றவர்களோடும் மாற்கு நன்கு பரிச்சயமாகியிருப்பார். சொல்லப்போனால், இயேசு கைதுசெய்யப்பட்டபோது அவருக்குப் பின்னால் போக முயன்றவரும், அவரைப் பிடிக்க வந்தபோது, உள்ளாடையோடு ஓடிப்போனவருமான இளம் மனிதர் அவராக இருந்திருக்கலாம்.—மாற். 14:51, 52.
சபையில் பொறுப்புகள்
ஆன்மீக முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களோடு சகவாசம் வைத்திருந்த மாற்கு ஆன்மீக முதிர்ச்சியுள்ளவரானார், பொறுப்பிலிருந்த சகோதரர்களுடைய கவனத்தைக் கவர்ந்தார். கி.பி. 46-ஆம் ஆண்டு வாக்கில் பஞ்ச ‘நிவாரண உதவிகளை’ அந்தியோகியாவிலிருந்து பெற்றுக்கொண்டு பவுலும் பர்னபாவும் எருசலேமுக்கு வந்தபோது மாற்குமீது தனிக்கவனம் செலுத்தினார்கள். அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பியபோது, மாற்குவையும் தங்களோடு அழைத்துச் சென்றார்கள்.—அப். 11:27-30; 12:25.
இந்தப் பதிவை மேலோட்டமாக மட்டுமே வாசித்தால், பவுலும் பர்னபாவும் மாற்குவும் வெறுமனே ஆன்மீகச் சகோதரர்கள்தான் என்றும், அவர்களுக்கு இடையே வேறெந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் நாம் நினைக்கலாம்; அதோடு, மாற்குவின் தனித்திறமைகளை மனதில் வைத்துத்தான் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் நினைக்கலாம். ஆனால், பவுல் தன்னுடைய ஒரு கடிதத்தில், மாற்குவை பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் என்று குறிப்பிடுகிறார். (கொலோ. 4:10) இந்தக் குறிப்பு, மாற்குவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவலாம்.
ஏறக்குறைய ஒரு வருடம் கழிந்தது; பவுலும் பர்னபாவும் மிஷனரிப் பயணத்தைத் தொடங்கும்படி கடவுளுடைய சக்தி தெரிவித்தது. அதனால் அவர்கள் அந்தியோகியாவிலிருந்து சீப்புருவுக்குப் புறப்பட்டார்கள். “அவர்களுக்கு உதவியாக” யோவான் என்றழைக்கப்பட்ட மாற்குவும் சென்றார். (அப். 13:2-5) பவுலும் பர்னபாவும் மிஷனரி ஊழியத்தில் முழு கவனம் செலுத்துவதற்கு உதவியாக, மாற்கு ஒருவேளை அவர்களுக்குத் தேவையான மற்ற வேலைகளைச் செய்துகொடுத்திருக்கலாம்.
பவுலும் பர்னபாவும் மாற்குவும் சீப்புரு முழுவதிலும் பயணம் செய்து, போகிற வழியெல்லாம் பிரசங்கித்துக்கொண்டே போனார்கள்; பின்பு, அங்கிருந்து ஆசியா மைனருக்குச் சென்றார்கள். அங்கே மாற்கு எடுத்த முடிவு பவுலுக்கு ஏமாற்றமாய் இருந்தது. அவர்கள் மூவரும் பெர்கேவுக்கு வந்தபோது “யோவான் அவர்களைவிட்டுப் பிரிந்து எருசலேமுக்குத் திரும்பினார்” என்று அந்தப் பதிவு சொல்கிறது. (அப். 13:13) அவர் ஏன் திரும்பிப்போனார் என்று அந்தப் பதிவு சொல்வதில்லை.
இரண்டு வருடங்கள் கழித்து, பவுலும் பர்னபாவும் மாற்குவும் அந்தியோகியாவுக்கு மீண்டும் வந்தார்கள். பவுலும் பர்னபாவும் தங்களுடைய முதல் மிஷனரிப் பயணத்தில் சந்தித்திருந்த சபைகளைப் பலப்படுத்துவதற்காக இரண்டாவது மிஷனரிப் பயணத்தைத் துவங்குவது பற்றி அப்போது பேசினார்கள். தன் ஒன்றுவிட்ட சகோதரரான மாற்குவை அழைத்துச்செல்ல பர்னபா விரும்பினார், பவுலுக்கோ அதில் துளிகூட விருப்பம் இருக்கவில்லை; முன்பு மாற்கு அவர்களைவிட்டுப் பிரிந்து சென்றதே அதற்குக் காரணம். இதனால்தான், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டபடி அவர்களுக்கு இடையே கடுங்கோபம் மூண்டது. மாற்குவை அழைத்துக்கொண்டு பர்னபா தன் சொந்த ஊரான சீப்புருவுக்குப் போனார், பவுலோ சீரியாவுக்குப் போனார். (அப். 15:36-41) ஆம், மாற்குவின் செயலை பவுல் ஒரு கோணத்தில் பார்த்தார், பர்னபா வேறொரு கோணத்தில் பார்த்தார்.
சமரசம்
பவுல் தன்னை அழைத்துச் செல்லாததால் மாற்கு நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்; ஆனாலும், அவர் உண்மையோடு தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். பவுலோடு இந்தக் கசப்பான அனுபவம் ஏற்பட்டு சுமார் 11, 12 வருடங்களுக்குப் பின், ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் சரித்திரத்தில் மாற்கு மீண்டும் காணப்படுகிறார். யாரோடு? நாம் நினைத்தே பார்க்காத ஒருவரோடு! ஆம், பவுலோடு!
கி.பி. 60-61-ல், பவுல் ரோமாபுரியில் கைதியாக இருந்தார்; அப்போது அவர் எழுதிய கடிதங்கள் இப்போது பரிசுத்த வேதாகமத்தின் பாகமாக உள்ளன. அவற்றில் கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தில், “என்னுடைய சக கைதியான அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்; பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரராகிய மாற்குவும் வாழ்த்துத் தெரிவிக்கிறார் (இவர் உங்களிடம் வந்தால் ஏற்றுக்கொள்ளுமாறு கட்டளை பெற்றிருக்கிறீர்கள்); . . . இவர்கள் மட்டுமே கடவுளுடைய அரசாங்கத்திற்காக உழைக்கிற என் சக வேலையாட்களாக இருக்கிறார்கள்; எனக்குப் பக்கபலமாகவும் இருக்கிறார்கள்.”—கொலோ. 4:10, 11.
பவுலின் கடுங்கோபத்துக்கு ஆளாகியிருந்த மாற்கு, அவரின் மதிப்பிற்குரிய சக வேலையாளாக ஆகியிருந்தார். எப்படியொரு தலைகீழ் மாற்றம்! கொலோசெ சபையினரைச் சந்திக்க மாற்கு வரலாமென்று பவுல் ஏற்கெனவே அவர்களுக்குத் தெரிவித்திருந்தார். அப்படிச் சந்தித்திருந்தாரென்றால், அவர் பவுலின் பிரதிநிதியாகச் செயல்பட்டிருப்பார்.
அப்படியென்றால் முன்பு பவுல் மாற்குவின் விஷயத்தில் ரொம்பவே குறைகாண்கிறவராக இருந்தாரா? பவுல் கொடுத்த கண்டிப்பிலிருந்து மாற்கு பயனடைந்தாரா? அல்லது இந்த இரண்டுமே உண்மையாக இருந்ததா? எதுவாய் இருந்தாலும் சரி, பவுலும் மாற்குவும் சமரசமானது அவர்கள் இருவரும் ஆன்மீக முதிர்ச்சியுள்ளவர்கள் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது. நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு, அவர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்து ஊழியம் செய்தார்கள். சக கிறிஸ்தவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதற்கு இது எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி!
பயணியாக மாற்கு
மாற்கு மேற்கொண்ட பயணங்களைப் பற்றி நீங்கள் வாசிக்கையில், அவர் ஏராளமான இடங்களுக்குச் சென்றிருந்ததைப் புரிந்துகொள்வீர்கள். அவர் எருசலேமிலிருந்து வந்தார், அந்தியோகியாவுக்குப் போனார். அங்கிருந்து சீப்புருவுக்கும் பெர்கேவுக்கும் பயணித்தார். அங்கிருந்து ரோமாபுரிக்குச் சென்றார். பின்பு அங்கிருந்து கொலோசெ நகரத்திற்கு அவரை அனுப்பிவைக்க பவுல் விரும்பினார். அதுமட்டுமல்ல, இன்னும் பல இடங்களுக்குச் சென்றார்.
அப்போஸ்தலன் பேதுரு தன் முதல் கடிதத்தை கி.பி. 62-64 வாக்கில் எழுதினார். ‘பாபிலோனில் இருப்பவளும் . . . உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறாள்; அப்படியே என் மகன் மாற்குவும் வாழ்த்துத் தெரிவிக்கிறான்’ என்று பேதுரு எழுதினார். (1 பே. 5:13) அப்போஸ்தலன் பேதுரு மாற்குவுடைய தாயின் வீட்டில் நடந்த கிறிஸ்தவக் கூட்டங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு கலந்துகொண்டார்; ஆகவே, அவருக்கு உதவியாக மாற்கு பாபிலோனுக்குப் பயணித்திருந்தார் என்பது அந்த வசனத்திலிருந்து தெரிகிறது.
கி.பி. 65 வாக்கில் பவுல் இரண்டாவது தடவை ரோமாபுரியில் கைதியாக இருந்தபோது, எபேசுவிலிருந்து தீமோத்தேயுவை வரச்சொல்லிக் கடிதம் எழுதினார். ‘மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டு வா’ என்று அதில் எழுதியிருந்தார். (2 தீ. 4:11) அப்படியானால் மாற்கு அந்தச் சமயத்தில் எபேசுவில் இருந்திருக்க வேண்டும். பவுல் சொன்னபடியே தீமோத்தேயுவோடு மாற்கு ரோமாபுரிக்கு நிச்சயம் சென்றிருப்பார்; இதில் சந்தேகமே கிடையாது. அந்தக் காலத்தில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை; என்றாலும், அப்படிப்பட்ட பயணங்களை மாற்கு மனப்பூர்வமாக மேற்கொண்டார்.
இன்னொரு விசேஷப் பொறுப்பு
மாற்கு இன்னொரு விசேஷப் பொறுப்பைப் பெற்றார்; யெகோவாவின் சக்தியினால் தூண்டப்பட்டு சுவிசேஷப் புத்தகங்களில் ஒன்றை எழுதினார். இதை எழுதியது யாரென்று இந்தச் சுவிசேஷப் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மாற்குதான் இதை எழுதியிருக்க வேண்டுமென்று பூர்வ காலத்திலிருந்தே நம்பப்பட்டு வருகிறது; பேதுருவிடமிருந்து தகவல்களைப் பெற்று இதை அவர் எழுதினார் என்றும் நம்பப்பட்டு வருகிறது. உண்மையில், மாற்கு பதிவுசெய்த கிட்டத்தட்ட எல்லா விஷயங்களும் பேதுரு கண்கூடாகப் பார்த்தவைதான்.
மாற்கு சுவிசேஷத்தைப் புறதேசத்தாருக்காகவே மாற்கு எழுதினார் என்று அதன் ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்; யூதர்களுடைய வழக்கங்களைப் பற்றிக் கூடுதலான விளக்கங்களை அவர் அளித்தார். (மாற். 7:3; 14:12; 15:42) அரமேயிக் மொழிச் சொற்களை வெறுமனே குறிப்பிடாமல் அவற்றை மொழிபெயர்த்தும் எழுதினார்; இல்லையென்றால், அந்தச் சொற்கள் புறதேசத்தாருக்குப் புரிந்திருக்காது. (மாற். 3:17; 5:41; 7:11, 34; 15:22, 34) அவர் நிறைய லத்தீன் சொற்களையும் பயன்படுத்தினார்; அதுமட்டுமல்ல, புழக்கத்திலிருந்த கிரேக்க வார்த்தைகளைக்கூட லத்தீன் வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கினார். இவையெல்லாம், மாற்கு இந்தச் சுவிசேஷப் புத்தகத்தை ரோமாபுரியிலிருந்தபோது எழுதினார் என்று காலங்காலமாக நம்பப்பட்டுவந்த உண்மைக்கு இசைவாகவே இருக்கின்றன.
‘ஊழியத்தில் உதவியாக இருந்தவர்’
இந்தச் சுவிசேஷத்தை எழுதியது மட்டுமே மாற்கு ரோமாபுரியிலிருந்தபோது செய்த வேலை அல்ல. தீமோத்தேயுவிடம் பவுல் என்ன சொன்னாரென்று நினைவுபடுத்திப் பாருங்கள். “மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டு வா” என்று சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்? “ஏனென்றால், ஊழியத்தில் அவர் எனக்கு உதவியாக இருப்பார்.”—2 தீ. 4:11.
மாற்குவைப் பற்றி பைபிளில் கடைசியாக இந்த வசனத்தில்தான் வாசிக்கிறோம். அவரைப் பற்றி அநேக விஷயங்களை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். மாற்குவின் ஊழியத்தைப் பற்றிச் சொல்லும்போது, அவர் ஓர் அப்போஸ்தலர் என்றோ, ஒரு தலைவர் என்றோ ஒரு தீர்க்கதரிசி என்றோ பைபிள் எங்கும் குறிப்பிடுவதில்லை. அவர் ஓர் உதவியாளராக இருந்தார், அதாவது மற்றவர்களுக்குத் தேவைப்படுகிற உதவிகளைச் செய்பவராக இருந்தார். பவுலின் மரணத்திற்குச் சற்றுமுன்பு மாற்கு அவரோடிருந்து நிச்சயம் பல உதவிகளைச் செய்திருப்பார்.
மாற்குவைப் பற்றிய இத்தனை விஷயங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, உலகின் பல்வேறு பாகங்களில் அவர் பக்திவைராக்கியமாக நற்செய்தியை அறிவித்தார் என்றும், மற்றவர்களுக்கு மனமுவந்து பல உதவிகளைச் செய்தார் என்றும் புரிந்துகொள்கிறோம். ஊழியத்தை விட்டுவிடாமல் இருந்ததால் மாற்கு எப்பேர்ப்பட்ட விசேஷப் பொறுப்புகளைப் பெற்றார்!
இன்று கடவுளுடைய ஊழியர்களாகிய நாம், மாற்குவைப் போலவே, நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானமாய் இருக்கிறோம். மாற்குவைப் போலவே, நம்மில் சிலர் வேறு இடங்களுக்குச் சென்று, ஏன் வெளிநாடுகளுக்குக்கூடச் சென்று, நற்செய்தியை அறிவிக்கிறோம். ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு அப்படிச் செல்ல முடிவதில்லை; என்றாலும், வேறொரு விதத்தில் நாம் எல்லாருமே மாற்குவைப் போல நடந்துகொள்ளலாம். மாற்கு, பிரத்தியேக முயற்சி எடுத்துத் தன் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவி செய்ததைப் போலவே, நாமும் நமது சகோதரர்களுக்கு நடைமுறையான பல வழிகளில் மனமுவந்து உதவிகள் செய்கிறோம். அப்படிச் செய்துவரும்போது, யெகோவாவிடமிருந்து அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டே இருப்போம்; இது நிச்சயம்!—நீதி. 3:27; 10:22; கலா. 6:2.
[அடிக்குறிப்பு]
a மாற்குவின் காலத்தில் வாழ்ந்தவர்கள், எபிரெய மொழியிலோ வேறு மொழியிலோ மறுபெயர் வைத்துக்கொண்டார்கள் அல்லது அதை ஏற்றுக்கொண்டார்கள். மாற்குவின் யூதப் பெயர் யோஹனான்; தமிழில் யோவான். அவருடைய லத்தீன் பெயர் மாற்கஸ், தமிழில் மாற்கு.—அப். 12:25.
[பக்கம் 8-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மாற்கு பயணித்த சில நகரங்கள்
ரோமாபுரி
எபேசு
கொலோசெ
பெர்கே
அந்தியோகியா (சீரியா)
சீப்புரு
மத்தியதரைக் கடல்
எருசலேம்
பாபிலோன்