‘தேவ பயத்தோடே பரிசுத்தமாயிருக்க’ முயலுங்கள்
யெகோவா தேவனை “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று பைபிள் அழைக்கிறது; பரிசுத்தத்தில் யெகோவாவுக்கு நிகர் அவரே என்பதை இது தெரிவிக்கிறது. (ஏசா. 6:3; வெளி. 4:8) ‘பரிசுத்தம்’ என்பதற்கான எபிரெய, கிரேக்க வார்த்தைகள் தூய்மையாய் இருப்பதை அல்லது ஆன்மீக ரீதியில் சுத்தமாய் இருப்பதை அர்த்தப்படுத்துகின்றன; இது, அசுத்தமான காரியங்களிலிருந்து முற்றிலும் விலகியிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. கடவுள் பரிசுத்தராய் இருப்பது, அவர் ஒழுக்க நெறிகளை முற்றும் முழுமையாய்க் கடைப்பிடிக்கிறார் என்பதையும் அவற்றை அவர் முக்கியமானதாய்க் கருதுகிறார் என்பதையும் குறிக்கிறது.
பரிசுத்தரான யெகோவா, தம்மை வணங்குவோரும் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென விரும்புகிறார். எனவே, சரீரத்திலும் ஒழுக்கத்திலும் தம்மோடுள்ள பந்தத்திலும் சுத்தமாயிருக்க வேண்டுமென அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது நியாயம்தானே? தம்முடைய மக்கள் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்பதை பைபிள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்று 1 பேதுரு 1:16-ல் நாம் வாசிக்கிறோம். ஆனால், அபூரண மனிதர் உண்மையிலேயே யெகோவாவைப்போல் பரிசுத்தமாய் இருக்க முடியுமா? இருக்க முடியும், முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பரிசுத்தமாய் இருக்க முடியும். பொய் மதத்தைவிட்டு முற்றிலும் விலகியவர்களாக கடவுளை வழிபட்டு, அவரோடு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொண்டால், அவர் நம்மைப் பரிசுத்தமாய்க் கருதுவார்.
அப்படியானால், ஒழுக்க ரீதியில் சீர்கெட்டிருக்கும் இந்த உலகில் நம்மை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? என்னென்ன பழக்கவழக்கங்களை நாம் விட்டொழிக்க வேண்டும்? நம்முடைய பேச்சிலும் நடத்தையிலும் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்? பொ.ச.மு. 537-ல் பாபிலோனிலிருந்து தாயகம் திரும்பிய யூதர்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென கடவுள் எதிர்பார்த்தார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போமா?
‘அங்கே பரிசுத்த வழி இருக்கும்’
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த தம் மக்கள் தாயகம் திரும்புவார்கள் என யெகோவா முன்னறிவித்தார். “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்” என்றும் அந்தத் தீர்க்கதரிசனத்தில் அவர் வாக்குறுதி அளித்தார். (ஏசா. 35:8, முற்பகுதி) யூதர்கள் தாயகம் திரும்புவதற்கு யெகோவா வழி திறந்து வைத்ததோடு, அவர்களுடைய பயணம் முழுவதிலும் பாதுகாப்பு தருவதாகவும் உறுதி அளித்ததை இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்றுள்ள தம்முடைய ஊழியர்கள் பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோனிலிருந்து வெளியே வருவதற்கு ‘பரிசுத்த வழியை’ யெகோவா திறந்து வைத்திருக்கிறார். 1919-ல் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை பொய் மதத்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர் விடுவித்தார்; அதன் பிறகு, அவர்கள் பொய் மதத்தின் எல்லா போதனைகளிலிருந்தும் தங்களைப் படிப்படியாக விலக்கிக் கொண்டார்கள். யெகோவாவை வழிபடும் நாம் இன்று ஆன்மீக ரீதியில் சுத்தமான, சாந்தமான சூழலை அனுபவித்து மகிழ்கிறோம்; இத்தகைய சூழலில் நாம் யெகோவாவை வழிபடுவதோடு, அவரோடும் சக மனிதரோடும் சமாதானமான உறவை வைத்துக்கொள்ளவும் முடிகிறது.
‘சிறு மந்தையை’ சேர்ந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த பெருகிவரும் ‘திரள் கூட்டத்தாரும்’ இந்தப் பரிசுத்த வழியில் நடப்பதற்குத் தீர்மானித்திருக்கிறார்கள்; தங்களோடு சேர்ந்து நடப்பதற்கு மற்றவர்களையும் அழைக்கிறார்கள். (லூக். 12:32; வெளி. 7:9; யோவா. 10:16) தங்களுடைய ‘சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க’ மனமுள்ள எல்லாருக்குமே இந்தப் ‘பரிசுத்த வழி’ திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.—ரோ. 12:1.
‘அசுத்தமானவன் அதிலே நடந்துவருவதில்லை’
பொ.ச.மு. 537-ல் தாயகம் திரும்பிய யூதர்கள், ‘பரிசுத்த வழியில்’ நடப்பதற்கு ஒரு முக்கியமான தகுதியைப் பெற வேண்டியிருந்தது. அதைக் குறித்து ஏசாயா 35:8-ன் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது: “தீட்டுள்ளவன் [அதாவது, அசுத்தமானவன்] அதிலே நடந்துவருவதில்லை.” யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்ததன் நோக்கமே தூய வழிபாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்காகத்தான். அப்படியிருக்க, அங்கே சுயநலக்காரர்களுக்கோ, பரிசுத்த காரியங்களை அவமதிப்பவர்களுக்கோ, அசுத்தமான காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கோ இடமிருக்காது. தாயகம் திரும்பிய இந்த யூதர்கள், யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க நெறிகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. இன்றும்கூட கடவுளுடைய தயவைப் பெற விரும்புகிறவர்கள், அந்த ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். இவர்கள் ‘தேவபயத்தோடே பரிசுத்தமாயிருப்பதற்கு’ முயற்சி செய்ய வேண்டும். (2 கொ. 7:1) அப்படியானால், எத்தகைய அசுத்தமான பழக்கவழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும்?
“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கலா. 5:19) விபசாரம் என்பது, பிறப்புறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி மணத்துணை அல்லாதவரோடு வைத்துக்கொள்ளும் எல்லாவித பாலின உறவுகளையும் குறிக்கிறது. காமவிகாரம் என்பது “இழிவான காமம், காமவெறி, வெட்கங்கெட்ட நடத்தை, கீழ்த்தரமான நடத்தை” ஆகியவற்றைக் குறிக்கிறது. விபசாரமும் சரி காமவிகாரமும் சரி, யெகோவாவின் பரிசுத்தத்தன்மைக்கு முற்றிலும் எதிரான செயல்களாகும். ஆகவே, இத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வருகிறவர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினராய் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், அல்லது அவர்கள் சபைநீக்கம் செய்யப்படுவார்கள். அசுத்தமான காரியங்களிலேயே ஊறிப்போயிருக்கிறவர்களுக்கும், அதாவது ‘சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கிறவர்களுக்கும்’ இதே நிலைமைதான்.—எபே. 4:19.
“அசுத்தம்” என்ற வார்த்தை பலதரப்பட்ட பாவச் செயல்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குரிய கிரேக்க வார்த்தை, எல்லாவித அருவருப்பான காரியத்தையும் குறிக்கிறது; அதாவது, வெறுக்கத்தக்க நடத்தை, அசிங்கமான பேச்சு, சத்தியத்தில் இல்லாதவர்களுடன் சேர்ந்து வழிபாட்டு காரியங்களில் ஈடுபடுவது ஆகியவற்றைக் குறிக்கிறது. சில விதமான பழக்கங்களுக்கு நீதிவிசாரணைக்குரிய நடவடிக்கை தேவைப்படாவிட்டாலும் அவை அசுத்தமானவையாகவே இருக்கின்றன.a இப்படிப்பட்ட அசுத்தமான காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், பரிசுத்தமாயிருக்க முயலுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?
ஒரு கிறிஸ்தவர், ஆபாசக் காட்சிகளை யாருக்கும் தெரியாமல் பார்க்க ஆரம்பிக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அசுத்தமான ஆசைகள் அவருக்குள் மெல்ல மெல்ல தலைதூக்குகின்றன; இவை, யெகோவாவுக்கு முன்பாக எப்போதும் சுத்தமாய் இருப்பதற்கு அவர் எடுத்த தீர்மானத்தைக் குலைத்துப்போடுகின்றன. அவர் அசுத்தமான காரியங்களிலேயே ஊறிப்போனவராய் இராவிட்டாலும், ‘கற்பும், நற்கீர்த்தியும், புண்ணியமும், புகழும்’ நிறைந்தவற்றைக் குறித்து மட்டுமே சிந்திப்பதை நிறுத்திவிட்டிருக்கிறார். (பிலி. 4:8) ஆபாசம் அசுத்தமானது; அது யெகோவாவுடன் உள்ள பந்தத்தை முறித்துப்போடுவது உறுதி. அசுத்தமான எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் நாம் பேசவே கூடாது.—எபே. 5:3.
மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு கிறிஸ்தவர் தற்புணர்ச்சியில் ஈடுபடுகிறார், அதாவது, தன் பாலியல் ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதற்கு வேண்டுமென்றே தன் பிறப்புறுப்புகளைக் கிளர்ச்சியடைய செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் ஆபாசக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு அல்லது பார்க்காமல்கூட அத்தகைய காரியத்தில் ஈடுபடலாம். “தற்புணர்ச்சி” என்ற வார்த்தை பைபிளில் காணப்படாவிட்டாலும், அது உள்ளத்தையும் உணர்ச்சியையும் கெடுத்துப்போடும் ஒரு பழக்கம் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா, என்ன? இப்படி ஒருவர் தன்னைத் தானே கெடுத்துக்கொண்டே இருந்தால், யெகோவாவுடன் அவர் வைத்திருக்கும் பந்தம் பாழாகி, கடவுளுடைய பார்வையில் அசுத்தமானவராக ஆகிவிடுவார், அல்லவா? எனவே, ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளவும்,’ ‘விபசாரம், அசுத்தம், மோகம், துர் இச்சை, . . . பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற நம் அவயவங்களை அழித்துப்போடவும்’ வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் சொல்லும் அறிவுரைக்குக் கவனம் செலுத்துவோமாக.—2 கொ. 7:1; கொலோ. 3:5.
சாத்தானுடைய ஆதிக்கத்திலிருக்கிற இந்த உலகம் அசுத்தமான நடத்தையைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதோடு, அதை ஊக்குவிக்கவும் செய்கிறது. அசுத்தமான காரியங்களில் ஈடுபடும்படியான தூண்டுதலைத் தடுத்து நிறுத்துவது பெரும் சவாலாக இருக்கலாம். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம், ‘புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறது போல . . . நடக்க’ கூடாது. (எபே. 4:17) தனிமையிலோ மற்ற சமயங்களிலோ அசுத்தமான காரியங்களில் ஈடுபடாமல் இருந்தால் மட்டுமே ‘பரிசுத்த வழியில்’ தொடர்ந்து நடக்க யெகோவா நம்மை அனுமதிப்பார்.
“அங்கே சிங்கம் இருப்பதில்லை”
பரிசுத்தரான யெகோவா தேவனுடைய தயவைப் பெறுவதற்கு, சிலர் தங்களுடைய பேச்சிலும் நடத்தையிலும் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். இத்தகைய மாற்றங்களைக் குறித்து சொல்கையில், “அங்கே [அதாவது, ‘பரிசுத்த வழியில்’] சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை” என்று ஏசாயா 35:9 குறிப்பிடுகிறது. தங்களுடைய பேச்சிலும் செயலிலும் மூர்க்கத்தனமாகவும் வெறித்தனமாகவும் நடந்துகொள்பவர்கள் அடையாள அர்த்தத்தில் துஷ்ட மிருகங்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நீதி குடியிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் நிச்சயம் இடமிருக்காது. (ஏசா. 11:6; 65:25) ஆகவே, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறவர்கள் அத்தகைய மிருக குணங்களை விட்டுவிட்டு பரிசுத்தமாயிருக்க முயலுவது அவசியம்.
“சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது” என்று பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. (எபே. 4:31) “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்” என்று கொலோசெயர் 3:8-ல் நாம் வாசிக்கிறோம். இந்த இரண்டு வசனங்களிலும் காணப்படுகிற ‘தூஷணம்’ என்ற வார்த்தை புண்படுத்துகிற, கீழ்த்தரமான, அவமதிக்கிற விதத்தில் பேசுவதைக் குறிக்கிறது.
இன்று, குடும்பங்களிலும்கூட புண்படுத்தும் விதமாகவும் தரக்குறைவாகவும் பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. கணவனும் மனைவியும் தங்களுக்கு இடையே மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் சொல் அம்பால் தாக்குவதை, இரக்கமின்றி வசைபாடுவதை, மட்டந்தட்டி பேசுவதைக் காண முடிகிறது. இத்தகைய பேச்சு, கிறிஸ்தவ குடும்பங்களில் கேட்கப்படக் கூடாது.—1 கொ. 5:11.
‘தேவ பயத்தோடே பரிசுத்தமாயிருக்க’ முயலுவது—ஆசீர்வாதம்
பரிசுத்தரான யெகோவா தேவனைச் சேவிப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (யோசு. 24:19) அவர் நம்மை ஆன்மீக பரதீஸுக்குள் கொண்டு வந்திருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். ஆகவே, யெகோவாவின் பார்வையில் நாம் பரிசுத்தமாக வாழ்வதைவிடவும் சிறந்ததொரு வாழ்க்கை வேறேதும் இருக்க முடியாது.
பூமியை பரதீஸாக மாற்றப் போவதைப்பற்றி கடவுள் கொடுத்துள்ள வாக்குறுதி சீக்கிரத்தில் நிறைவேறும். (ஏசா. 35:1, 2, 5-7) அந்த நாளைக் காண ஏங்குகிறவர்களும் கடவுளுடைய வழியில் தொடர்ந்து நடப்பவர்களும் அந்தப் பரதீஸில் வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். (ஏசா. 65:17, 21) அப்படியானால், பொய் மதத்தைவிட்டு முற்றிலும் விலகியவர்களாக, கடவுளை வழிபட்டு, அவரோடு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்வோமாக.
[அடிக்குறிப்பு]
a ‘அசுத்தத்திற்கும்,’ ‘ஆவலோடே நடப்பிக்கிற அசுத்தத்திற்கும்’ இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள காவற்கோபுரம், ஜூலை 15, 2006 பக்கங்கள் 29-31-ஐக் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
6யூதர்கள் ‘பரிசுத்த வழியில்’ நடப்பதற்கு என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது?
[பக்கம் 27-ன் படம்]
யெகோவாவோடு ஒருவர் வைத்திருக்கும் பந்தத்தை ஆபாசம் அறுத்துப்போடுகிறது
[பக்கம் 28-ன் படம்]
“சகலவிதமான . . . கூக்குரலும், தூஷணமும், . . . உங்களைவிட்டு நீங்கக்கடவது”