பாடம் 11
பைபிளை ரசியுங்கள், ருசியுங்கள்!
ஒரு பெரிய வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பு, ‘இத எப்படித்தான் செஞ்சு முடிக்கப்போறேனோ!’ என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த வேலையைச் சுலபமாகச் செய்வதற்கு நீங்கள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துச் செய்திருக்கலாம். பைபிளை வாசிப்பதும்கூட உங்களுக்கு ஒரு பெரிய வேலையாகத் தெரியலாம். ‘எங்க ஆரம்பிக்கிறது? எப்படி ஆரம்பிக்கிறது?’ என்று நீங்கள் யோசிக்கலாம். பைபிளை நாம் ரசித்து ருசிப்பதற்கு சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும். அதையெல்லாம் இந்தப் பாடத்தில் பார்க்கலாம்.
1. பைபிளை நாம் ஏன் தவறாமல் படிக்க வேண்டும்?
பைபிளை, அதாவது “யெகோவாவின் சட்டத்தை,” நாம் தவறாமல் படித்தால் வாழ்க்கையில் சந்தோஷமும் வெற்றியும் கிடைக்கும். (சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்.) அதனால், தினமும் ஒருசில நிமிடங்களாவது பைபிளைப் படியுங்கள். போகப்போக, அதை ரசித்துப் படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
2. பைபிளை வாசிப்பது பிரயோஜனமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
படிக்கும் விஷயங்களைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படியென்றால், நாம் பைபிளை வாசித்தால் மட்டும் போதாது, அதைப் பற்றி ‘தியானிக்கவும்’ வேண்டும். (யோசுவா 1:8, அடிக்குறிப்பு) அதை வாசிக்கும்போதே, ‘யெகோவாவை பத்தி இந்த வசனங்கள் என்ன சொல்லுது? இதை நான் எப்படி என்னோட வாழ்க்கைல கடைப்பிடிக்கலாம்? மத்தவங்களுக்கு உதவி செய்றதுக்கு நான் எப்படி இந்த வசனங்கள பயன்படுத்தலாம்?’ என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள்.
3. பைபிளை வாசிப்பதற்கு நீங்கள் எப்படி நேரம் ஒதுக்கலாம்?
பைபிளை வாசிப்பதற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்குவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? நிறைய பேருக்கு அது கஷ்டம்தான். ஆனால், “உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:16) அதனால், சிலர் காலையில் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து பைபிளைப் படிக்கிறார்கள். வேறு சிலர், மதிய இடைவேளை நேரத்திலோ சாயங்காலத்திலோ படிக்கிறார்கள். சிலர் ராத்திரி தூங்குவதற்கு முன்பு படிக்கிறார்கள். இதுபோல், பைபிளை வாசிப்பதற்குத் தினமும் கொஞ்ச நேரத்தை நீங்கள் ஒதுக்கி வைக்கலாம். எந்த நேரம் உங்களுக்கு வசதியாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
ஆராய்ந்து பார்க்கலாம்!
பைபிளை நீங்கள் எப்படி இன்னும் ரசித்துப் படிக்கலாம்? பைபிள் படிப்பு பிரயோஜனமாக இருப்பதற்கு நீங்கள் எப்படி முன்னதாகவே தயாரிக்கலாம்? பார்க்கலாம்.
4. பைபிளை ரசித்துப் படிக்க பழகுங்கள்
புதிதாக எதையாவது சாப்பிடும்போது அது ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், சாப்பிடச் சாப்பிட அது உங்களுக்குப் பிடித்துப்போய்விடும். அதேபோல், பைபிளைப் படிப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், படிக்கப் படிக்க அது உங்களுக்கு ரொம்பப் பிடித்துப்போய்விடும். பைபிள்மேல் உங்களால் ஒரு ‘ஏக்கத்தை வளர்த்துக்கொள்ள’ முடியும். 1 பேதுரு 2:2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நீங்கள் பைபிளைத் தினமும் வாசித்தால் அதை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
சிலர் எப்படி பைபிளை ரசித்துப் படிக்க ஆரம்பித்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்கு வீடியோவைப் பாருங்கள். பிறகு, கீழே இருக்கிற கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
வீடியோவில் நாம் பார்த்த இளைஞர்கள் தங்களுக்கு இருந்த சவால்களை எப்படிச் சமாளித்தார்கள்?
விடாமல் பைபிளை வாசிக்க அவர்களுக்கு எது உதவியது?
பைபிளை ரசித்துப் படிக்க அவர்கள் என்ன செய்தார்கள்?
பைபிளை வாசிக்க ஆரம்பிக்க...
நம்பகமான, நவீன மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுங்கள். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்குப் பிடித்த பகுதிகளை முதலில் வாசியுங்கள். ஐடியாவுக்கு, “பைபிளைப் படிக்க ஆரம்பியுங்கள்” என்ற அட்டவணையைப் பாருங்கள்.
வாசித்த பகுதிகளைக் குறித்துக்கொள்ளுங்கள். அதற்கு, ‘பைபிள் வாசிப்பு அட்டவணையை’ பயன்படுத்துங்கள்.
JW லைப்ரரியை பயன்படுத்துங்கள். எலெக்ட்ரானிக் சாதனங்களில் பைபிளைப் படிக்கவும், அதன் ஆடியோவைக் கேட்கவும் இது உதவும்.
புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கும் இணைப்புகளை பயன்படுத்துங்கள். அவற்றிலுள்ள வரைபடங்கள், அட்டவணைகள், சொல் பட்டியல் போன்றவற்றைப் பயன்படுத்தினால் உங்களுடைய பைபிள் வாசிப்பு ரொம்ப சுவாரஸ்யமாகிவிடும்.
5. பைபிள் படிப்புக்காகத் தயாரியுங்கள்
சங்கீதம் 119:34-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பைபிளை வாசிப்பதற்கு முன்பு அல்லது பைபிள் படிப்புக்காகத் தயாரிப்பதற்கு முன்பு ஜெபம் செய்வது ஏன் நல்லதென்று நினைக்கிறீர்கள்?
பைபிள் படிப்பு உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு பாடத்தைத் தயாரிப்பதற்கு முன்பும் மூன்று விஷயங்களைச் செய்து பாருங்கள்:
பாடத்தின் ஆரம்பத்தில் இருக்கும் பாராக்களை வாசியுங்கள்.
வசனங்களை பைபிளில் படியுங்கள். அவற்றுக்கும் படிக்கிற விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசியுங்கள்.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலைக் கண்டுபிடித்து, முக்கியமான வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பைபிளைச் சொல்லித்தருபவரோடு கலந்துபேச இது உதவும்.
உங்களுக்குத் தெரியுமா?
யெகோவாவின் சாட்சிகள் நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைத்தான் முக்கியமாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஏனென்றால், அது பிழையில்லாமலும் தெளிவாகப் புரியும்படியும் இருக்கிறது. அதில் கடவுளுடைய பெயரும் இருக்கிறது.—“யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கென்று ஒரு பைபிள் வைத்திருக்கிறார்களா?” என்ற ஆன்லைன் கட்டுரையைப் பாருங்கள்.
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “பைபிளை படிக்கிற அளவுக்கு எனக்கு பொறுமையும் இல்ல, நேரமும் இல்ல.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சுருக்கம்
பைபிள் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்க அதை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள், வாசிக்கும் விஷயத்தைப் புரிந்துகொள்ள ஜெபம் பண்ணுங்கள், பைபிள் படிப்புக்காகத் தயார் செய்யுங்கள்.
ஞாபகம் வருகிறதா?
பைபிளை வாசிப்பது பிரயோஜனமாக இருக்க எது உதவும்?
பைபிளை வாசிக்கவும் ஆராய்ந்து படிக்கவும் நீங்கள் எந்த நேரத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
பைபிள் படிப்புக்காகத் தயாரிப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி வீண்போகாது என்று ஏன் சொல்லலாம்?
அலசிப் பாருங்கள்
பைபிளை வாசிப்பது உங்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று பாருங்கள்.
“பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?” (காவற்கோபுரம் எண் 1 2017)
பைபிளைப் படிப்பதற்கான மூன்று வழிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
பைபிளை எப்படி ரசித்துப் படிக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ரொம்பக் காலமாக பைபிளைப் படிக்கிறவர்கள் சொல்கிற சில ஆலோசனைகளைப் பாருங்கள்.