தெய்வீக அரசுரிமைக்கு கிறிஸ்தவ சாட்சிகள்
“உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி . . . இருக்கிறீர்கள்.”—1 பேதுரு 2:9.
1. கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் யெகோவாவைப் பற்றி எத்தகைய திறம்பட்ட சாட்சி கொடுக்கப்பட்டது?
கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில், வரிசையாக அநேக சாட்சிகள் ஒரே உண்மையான கடவுள் யெகோவாவே என தைரியமாக சாட்சிகொடுத்தனர். (எபிரெயர் 11:4–12:1) உறுதியான விசுவாசம் கொண்டிருந்த அவர்கள் பயமின்றி யெகோவாவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இணங்கிப் போக மறுத்தனர். யெகோவாவின் சர்வலோக உன்னத அரசுரிமைக்கு அவர்கள் வலிமைமிக்க சாட்சி கொடுத்தனர்.—சங்கீதம் 18:21-23; 47:1, 2.
2. (அ) யெகோவாவின் மிகப்பெரிய சாட்சி யார்? (ஆ) யெகோவாவின் சாட்சியாக இருந்த இஸ்ரவேல் தேசத்தை மாற்றீடு செய்தது யார்? நமக்கு எப்படி தெரியும்?
2 கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த சாட்சிகளில் கடைசியானவரும் மிகப் பெரியவருமானவர் முழுக்காட்டுபவராகிய யோவான் ஆவார். (மத்தேயு 11:11) தெரிந்தெடுக்கப்பட்டவரின் வருகையை அறிவிக்கும் சிலாக்கியத்தை அவர் பெற்றிருந்து, இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக அறிமுகம் செய்தார். (யோவான் 1:29-34) இயேசுவே யெகோவாவுக்கு மிகப்பெரிய சாட்சி, “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி. (வெளிப்படுத்துதல் 3:14) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் இயேசுவை நிராகரித்ததால் யெகோவா அவர்களை நிராகரித்து, ஒரு புதிய ஜனத்தை, தேவனுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலரை தன்னுடைய சாட்சியாக நியமித்தார். (ஏசாயா 42:8-12; யோவான் 1:11, 12; கலாத்தியர் 6:16) பேதுரு ஒரு தீர்க்கதரிசனத்தை மேற்கோளாக குறிப்பிட்டு பின்வருமாறு சொல்வதன் மூலம் அது “தேவனுடைய இஸ்ரவேலருக்கு,” கிறிஸ்தவ சபைக்கு பொருந்துகிறது என்பதைக் காட்டினார்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”—1 பேதுரு 2:9; யாத்திராகமம் 19:5, 6; ஏசாயா 43:21; 60:2.
3. தேவனுடைய இஸ்ரவேலருக்கும் ‘திரள் கூட்டத்தினருக்கும்’ உள்ள பிரதான உத்தரவாதம் என்ன?
3 யெகோவாவின் மகிமையைக்குறித்து யாவரறிய சாட்சி கொடுப்பதே தேவனுடைய இஸ்ரவேலின் பிரதான உத்தரவாதம் என்று பேதுருவின் வார்த்தைகள் காட்டுகின்றன. இந்த ஆவிக்குரிய ஜனத்துடன், நம் நாளில், யாவரறிய தேவனை மகிமைப்படுத்தும் “திரளான கூட்டமாகிய” சாட்சிகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அனைவரும் கேட்கும்விதத்தில் அவர்கள் உரத்த குரலில், “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” என்று ஆர்ப்பரிக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 10; ஏசாயா 60:8-10) தேவனுடைய இஸ்ரவேலும் அவர்களுடைய கூட்டாளிகளும் சாட்சி கொடுப்பதை எப்படி செய்து முடிக்கமுடியும்? தங்கள் விசுவாசத்தின் மூலமும் கீழ்ப்படிதலின் மூலமுமே.
பொய் சாட்சிகள்
4. இயேசுவின் நாட்களில் இருந்த யூதர்கள் ஏன் பொய் சாட்சிகளாய் இருந்தனர்?
4 தெய்வீக நியமங்களுக்கு இணங்க வாழ்வது விசுவாசத்திலும் கீழ்ப்படிதலிலும் உட்பட்டிருக்கிறது. இயேசு தன் நாட்களிலிருந்த மதத் தலைவர்களைப்பற்றி கூறியவற்றில் இதன் முக்கியத்துவம் காணப்படுகிறது. நியாயப்பிரமாணத்தை போதிப்பவர்களாக அவர்கள் “மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்தி”ருந்தார்கள். அவிசுவாசிகளை மதமாற்றும்படி மிஷனரிகளைக்கூட அவர்கள் அனுப்பினார்கள். ஆயினும், இயேசு அவர்களிடம் சொன்னார்: “ஒருவனை உங்கள் மார்க்கத்தானுக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் [“கெஹன்னாவின்,” NW] மகனாக்குகிறீர்கள்.” அந்த மதவாதிகள் பொய் சாட்சிகளாக—அகந்தையுள்ள, மாய்மாலமுள்ள, அன்பற்ற ஆட்களாக—இருந்தனர். (மத்தேயு 23:1-12, 15) ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு சில யூதர்களிடம் சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்.” கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தின் அங்கத்தினர்களுக்கு இத்தகைய ஒரு காரியத்தை அவர் ஏன் சொன்னார்? யெகோவாவின் மிகப்பெரிய சாட்சியின் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்காத காரணத்தால் சொன்னார்.—யோவான் 8:41, 44, 47.
5. கிறிஸ்தவமண்டலம் கடவுளைப் பற்றி பொய் சாட்சி கொடுத்திருக்கிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?
5 இதைப்போன்றே, இயேசுவின் காலத்தைப் பின்தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் கிறிஸ்தவமண்டலத்திலுள்ள கோடிக்கணக்கானோர் தாங்கள் அவருடைய சீஷர்களென உரிமைபாராட்டியுள்ளனர். ஆயினும், அவர்கள் கடவுளுடைய சித்தத்தை செய்யவில்லை, எனவே இயேசுவினால் அங்கீகரிக்கப்படுவதில்லை. (மத்தேயு 7:21-23; 1 கொரிந்தியர் 13:1-3) கிறிஸ்தவமண்டலம் மிஷனரிகளை வெளியே அனுப்பியிருக்கிறது, சந்தேகமின்றி அவர்களில் அநேகர் உண்மைமனதுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால், பாவிகளை நரக அக்கினியில் எரிக்கும் ஒரு திரித்துவக் கடவுளை வணங்க அவர்கள் மக்களுக்கு கற்றுக்கொடுத்தனர், அவர்களால் மதமாற்றப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாய் இருப்பதற்கு எந்த அத்தாட்சியையும் காட்டுவதில்லை. உதாரணமாக, ஆப்பிரிக்க தேசமான ருவாண்டா ரோமன் கத்தோலிக்க மிஷனரிகளுக்கு நல்ல வளமான நிலமாக இருந்திருக்கிறது. இருப்பினும், சமீபத்தில் அத்தேசத்தில் நடைபெற்ற இனச் சண்டைகளில் ருவாண்டாவின் கத்தோலிக்கர்கள் முழு இருதயத்துடன் சேர்ந்துகொண்டனர். மிஷனரிகள் வேலைசெய்த அந்த இடத்தின் கனிகள், உண்மையான கிறிஸ்தவ சாட்சியை அது கிறிஸ்தவமண்டலத்திலிருந்து பெறவில்லை என்று காட்டுகின்றன.—மத்தேயு 7:15-20.
தெய்வீக நியமங்களுக்கு இணங்க வாழுதல்
6. சரியான நடத்தை எவ்வழிகளில் சாட்சி கொடுப்பதன் அத்தியாவசிய பாகமாய் இருக்கிறது?
6 கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டும் ஆட்கள் ஈடுபடும் தவறான நடத்தை “சத்தியமார்க்க”த்தின் மீது அவதூறு கொண்டுவருகிறது. (2 பேதுரு 2:2) உண்மையான கிறிஸ்தவர் தெய்வீக நியமங்களுக்கு ஏற்ப வாழ்கிறார். அவர் திருடுவதில்லை, பொய் சொல்வதில்லை, ஏமாற்றுவதில்லை, அல்லது ஒழுக்கக்கேடானவற்றை செய்வதில்லை. (ரோமர் 2:22) அவர் நிச்சயமாக தன் அயலானை கொலை செய்யமாட்டார். கிறிஸ்தவக் கணவர்கள் தங்கள் குடும்பங்களை அன்பான மேற்பார்வையின்கீழ் வைத்திருக்கின்றனர். மனைவிகள் மரியாதையுடன் அந்த மேற்பார்வையை ஆதரிக்கின்றனர். பிள்ளைகள் பெற்றோரால் பழக்குவிக்கப்படுவதால் பொறுப்புள்ள கிறிஸ்தவர்களாக ஆகும்படி உருவாக்கப்படுகின்றனர். (எபேசியர் 5:21–6:4) உண்மைதான் நாம் அனைவரும் அபூரணர்களாக இருக்கிறோம், தவறுகள் செய்கிறோம். ஆனால் ஒரு மெய்க் கிறிஸ்தவர் பைபிள் தராதரங்களை மதித்து அவற்றை கடைப்பிடிக்க உண்மையான முயற்சி எடுக்கிறார். இது பிறரால் கவனிக்கப்படுகிறது, ஒரு சிறந்த சாட்சியைக் கொடுக்கிறது. முன்பு சத்தியத்தை எதிர்த்தவர்கள் ஒரு கிறிஸ்தவரின் நல்ல நடத்தையைக் கவனித்து சில சமயங்களில் சத்தியத்தினிடம் கவரப்பட்டிருக்கின்றனர்.—1 பேதுரு 2:12, 15; 3:1.
7. கிறிஸ்தவர்கள் ஒருவரிலொருவர் அன்புகூருவது எவ்வளவு முக்கியமானது?
7 “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்,” என்று இயேசு சொன்னபோது அவர் கிறிஸ்தவ நடத்தையின் ஒரு முக்கிய அம்சத்தை எடுத்துக் காட்டினார். (யோவான் 13:35) சாத்தானின் உலகம், “அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்” இருப்பவர்களின் தன்மைகளைப் பெற்றிருக்கிறது. (ரோமர் 1:29, 30) இத்தகைய சூழ்நிலைமையில், அன்பினால் அறியப்படும் ஓர் உலகளாவிய அமைப்பு பரிசுத்த ஆவியின் செயற்படுமுறைக்கு வலிமைமிக்க அத்தாட்சியாக—திறம்பட்ட சாட்சியாக—இருக்கும். அத்தகைய ஒரு அமைப்பாகவே யெகோவாவின் சாட்சிகள் இருக்கின்றனர்.—1 பேதுரு 2:17.
சாட்சிகள் பைபிள் மாணாக்கர்களாக இருக்கின்றனர்
8, 9. (அ) கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை படித்து அதன்பேரில் தியானித்ததன் மூலம் சங்கீதக்காரன் எப்படி பலப்படுத்தப்பட்டார்? (ஆ) தொடர்ந்து சாட்சி கொடுத்துக்கொண்டிருக்கும்படி பைபிள் படிப்பும் தியானமும் எவ்வழிகளில் நம்மை பலப்படுத்துகின்றன?
8 சிறப்பான சாட்சியைக் கொடுப்பதில் வெற்றி பெற, ஒரு கிறிஸ்தவன் யெகோவாவின் நீதியான நியமங்களை அறிந்திருக்கவும் நேசிக்கவும் வேண்டும், உலகத்தின் ஒழுக்கக்கேட்டை உண்மையாகவே வெறுக்கவும் வேண்டும். (சங்கீதம் 97:10) இவ்வுலகம் தன் எண்ணங்களை சரியென தோன்றச்செய்து முன்னேற்றுவிக்கும் தன்மையுடையதாய் இருக்கிறது, அதன் ஆவியை எதிர்த்து நிற்பது கடினமாக இருக்கக்கூடும். (எபேசியர் 2:1-3; 1 யோவான் 2:15, 16) சரியான மனநிலையைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவக்கூடும்? ஒழுங்கான, அர்த்தமுள்ள பைபிள் படிப்பு. சங்கீதம் 119-ன் எழுத்தாளர் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தின்மீது தனக்கிருந்த அன்பை பலமுறை குறிப்பிட்டார். அவர் அதை வாசித்து எப்போதும், “நாள் முழுவதும்” அதன்மீது தியானமாய் இருந்தார். (சங்கீதம் 119:92, 93, 97-105) இதன் காரணமாக, “பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்,” என்று அவரால் எழுதமுடிந்தது. மேலும், அவருடைய ஆழ்ந்த அன்பு அவரை செயல்படும்படி தூண்டியது. அவர் சொல்கிறார்: “உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒரு நாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.”—சங்கீதம் 119:163, 164.
9 இதற்கொப்பாக, கடவுளுடைய வார்த்தையை நாம் ஒழுங்காக படிப்பதும் அதன்பேரில் தியானிப்பதும் நம் இருதயங்களைத் தொட்டு, அவரை அடிக்கடி, “ஒருநாளில் ஏழுதரம்”கூட ‘துதிக்கும்படி’—யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுக்கும்படி—நம்மைத் தூண்டும். (ரோமர் 10:10) இதற்கு இணக்கமாக, யெகோவாவின் வார்த்தைகளை ஒழுங்காக தியானிப்பவர், “நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்,” என்று முதல் சங்கீதத்தின் எழுத்தாளர் கூறுகிறார். (சங்கீதம் 1:3) அப்போஸ்தலனாகிய பவுலும் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை எடுத்துக்காட்டி எழுதுகிறார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
10. இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவின் மக்களைப்பற்றி எது தெளிவாகத் தெரிகிறது?
10 இந்த 20-ஆம் நூற்றாண்டில் மெய் வணக்கத்தாரின் வேகமான வளர்ச்சி யெகோவாவின் ஆசீர்வாதத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறது. தெய்வீக உன்னத அரசுரிமையின் நவீன கால சாட்சிகளாகிய இவர்கள், ஒரு தொகுதியாக, தங்கள் இருதயங்களில் யெகோவாவின் கட்டளைகளின்மீது அன்பை வளர்த்திருக்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சங்கீதக்காரனைப் போல், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் யெகோவாவின் மகிமையைக் குறித்து “இரவும் பகலும்” உண்மைத்தன்மையோடு சாட்சிகொடுக்கவும் அவர்கள் தூண்டப்படுகின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:15.
யெகோவாவின் பலத்த செயல்கள்
11, 12. இயேசுவும் அவரைப் பின்பற்றியவர்களும் செய்த அற்புதங்களால் எது சாதிக்கப்பட்டது?
11 முதல் நூற்றாண்டில், விசுவாசமுள்ள கிறிஸ்தவ சாட்சிகள் அற்புதங்களைச் செய்ய பரிசுத்த ஆவி பலமளித்தது, இவை அவர்கள் கொடுத்த சாட்சி உண்மை என்பதற்கு உறுதியாக சான்றளித்தன. முழுக்காட்டுபவராகிய யோவான் சிறையில் இருக்கையில் தன் சீஷர்களை அனுப்பி இயேசுவிடம் கேட்டார்: “வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” இயேசு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிப்பதற்கு மாறாக சொன்னதாவது: “நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்.” (மத்தேயு 11:3-6) “வருகிறவர்” நிச்சயமாக இயேசுவே என்று இந்த வலிமைமிக்கச் செயல்கள் யோவானுக்கு ஒரு சாட்சியாக உதவின.—அப்போஸ்தலர் 2:22.
12 இதைப்போன்றே, இயேசுவைப் பின்பற்றியவர்களில் சிலர் நோயுற்றோரை குணப்படுத்தினர், இறந்தோரையும் உயிருடன் எழுப்பினர். (அப்போஸ்தலர் 5:15, 16; 20:9-12) இந்த அற்புதங்கள் அவர்கள் சார்பாக கடவுளிடமிருந்தே வந்த சாட்சியைப் போல் இருந்தன. (எபிரெயர் 2:4) அத்தகைய செயல்கள் யெகோவாவின் சர்வவல்லமையை நடப்பித்துக் காட்டின. உதாரணமாக, “இந்த உலகத்தின் அதிபதி”யான சாத்தானால் மரணத்தை விளைவிக்க முடியும் என்பது உண்மையே. (யோவான் 14:30; எபிரெயர் 2:14) ஆனால் விசுவாசமிகுந்த பெண்ணான தொற்காளை மரணத்திலிருந்து பேதுரு எழுப்பியபோது அவர் அதை யெகோவாவின் வல்லமையுடன் மட்டுமே செய்திருக்கமுடியும், ஏனெனில் யெகோவா மட்டுமே உயிரளிக்க முடியும்.—சங்கீதம் 16:10; 36:9; அப்போஸ்தலர் 2:25-27; 9:36-43.
13. (அ) பைபிளிலுள்ள அற்புதங்கள் இப்போதும் யெகோவாவின் வல்லமைக்கு எவ்வழியில் சாட்சி பகருகின்றன? (ஆ) தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் யெகோவாவின் தேவத்துவத்தை நிரூபிப்பதில் எப்படி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது?
13 அந்த அற்புதகரமான செயல்கள் இப்போது நடைபெறுவதில்லை. அவற்றின் நோக்கம் நிறைவேறிவிட்டது. (1 கொரிந்தியர் 13:8) ஆயினும், கண்கூடாகக் கண்ட அநேகர் சான்றளித்த அச்செயல்களைப் பற்றிய பதிவு இன்னும் நமக்கு பைபிளில் இருக்கிறது. இச்சரித்திரப்பூர்வ சம்பவங்களுக்கு இன்று கிறிஸ்தவர்கள் கவனத்தைத் திருப்புகையில், அச்செயல்கள் யெகோவாவின் வல்லமைக்கு இன்னும் ஒரு திறம்பட்ட சாட்சி கொடுத்துக்கொண்டிருக்கின்றன. (1 கொரிந்தியர் 15:3-6) அத்தோடு, அன்று ஏசாயாவின் நாளில், தம்முடைய திருத்தமான தீர்க்கதரிசனம் தாம் உண்மையான கடவுள் என்பதற்கு ஒரு தலைசிறந்த நிரூபணம் என்று யெகோவா குறிப்பிட்டுக்காட்டினார். (ஏசாயா 46:8-11) கடவுளால் ஏவப்பட்ட அநேக தீர்க்கதரிசனங்கள் இன்று நிறைவேறி வருகின்றன—கிறிஸ்தவ சபையில் அவற்றில் பல நிறைவேற்றமடைகின்றன. (ஏசாயா 60:8-10; தானியேல் 12:6-12; மல்கியா 3:17, 18; மத்தேயு 24:9; வெளிப்படுத்துதல் 11:1-13) இத்தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் நாம் “கடைசிநாட்களில்” வாழ்ந்துவருகிறோம் என சுட்டிக்காட்டுவது மட்டுமன்றி, ஒரே உண்மையான கடவுள் யெகோவாவே என்பதை நியாயநிருபணம் செய்கிறது.—2 தீமோத்தேயு 3:1.
14. யெகோவா உன்னத பேரரசர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகளின் நவீனகால சரித்திரம் எவ்வழிகளில் ஒரு வலிமைமிக்க சாட்சியாய் இருக்கிறது?
14 இறுதியாக, யெகோவா தம் மக்களுக்கு மாபெரும் காரியங்களை, வியப்பூட்டும் காரியங்களை இன்னும் செய்துவருகிறார். பைபிள் சத்தியத்தின்மீது அதிகரித்துவரும் ஒளி யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்படுகிறது. (சங்கீதம் 86:10; வெளிப்படுத்துதல் 4:5, 6) உலக முழுவதும் அறிக்கை செய்யப்படும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் யெகோவா ‘ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பித்து’ கொண்டிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாய் இருக்கின்றன. (ஏசாயா 60:22) இந்தக் கடைசி காலம் முழுவதும் கடும் துன்புறுத்தல் ஒரு தேசத்தின் பின் மற்றொரு தேசத்தில் எழும்பியிருக்க, யெகோவாவின் மக்கள் தைரியமுள்ள சகிப்புத்தன்மையைக் காட்டியிருப்பது பரிசுத்த ஆவியின் பலமளிக்கும் ஆதரவின் காரணமாகவே. (சங்கீதம் 18:1, 2, 17, 18; 2 கொரிந்தியர் 1:8-10) ஆம், யெகோவாவே உன்னத பேரரசர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகளின் நவீனகால சரித்திரம்தானே ஒரு வலிமைமிக்க சாட்சியாக இருக்கிறது.—சகரியா 4:6.
நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்
15. எத்தகைய விரிவான சாட்சியை கிறிஸ்தவ சபை கொடுக்கவேண்டியிருந்தது?
15 யெகோவா இஸ்ரவேலை மற்ற தேசங்களுக்கு தம்முடைய சாட்சியாக நியமித்தார். (ஏசாயா 43:10) ஆயினும், இஸ்ரவேலரல்லாதவர்களிடம் சென்று பிரசங்கிக்கும்படி ஒருசில இஸ்ரவேலரே கடவுளால் கட்டளையைப் பெற்றனர், அதுவும் பொதுவாக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கவே அனுப்பப்பட்டனர். (எரேமியா 1:5; யோனா 1:1, 2) ஆயினும், ஒருநாள் தேசங்களின்மீது யெகோவா விரிவான அளவில் தன் கவனத்தைத் திருப்புவார் என எபிரெய வேதாகமங்களில் உள்ள தீர்க்கதரிசனங்கள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன, இதை அவர் தேவனுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலர் மூலம் செய்திருக்கிறார். (ஏசாயா 2:2-4; 62:2) இயேசு பரலோகத்துக்கு எழுந்தருளி போவதற்குமுன் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் கட்டளையிட்டார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்”குங்கள். (மத்தேயு 28:19) இயேசு தன் கவனத்தை “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டா[ர்]” மீது ஒருமுகப்படுத்தியிருந்தார், ஆனால் அவரைப் பின்பற்றியவர்களோ ‘சகல தேசங்களுக்கும்,’ “பூமியின் கடைசிபரியந்தமும்” அனுப்பப்பட்டனர். (மத்தேயு 15:24; அப்போஸ்தலர் 1:8) மனிதகுலம் முழுவதும் கிறிஸ்தவர்களின் சாட்சியைக் கேட்கவேண்டியிருந்தது.
16. எந்தக் கட்டளையை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை நிறைவேற்றியது, எந்த அளவுக்கு?
16 பவுல் இதை தான் நன்கு புரிந்துகொண்டதைக் காட்டினார். பொ.ச. 61-ஆம் ஆண்டிற்குள் அவர், “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது,” என்று சொன்னார். ஏதோ ஒரு தேசத்துக்கோ, அல்லது “தேவதூதர்களுக்கு . . . ஆராதனை” செய்த பிரிவினரைப்போன்ற ஏதோ ஒரு மதப்பிரிவினருக்கோ மட்டும் என்று இந்த நற்செய்தி மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக, அது வெளிப்படையாக ‘வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டது.’ (கொலோசெயர் 1:6, 23; 2:13, 14, 16-19) இவ்விதமாக, முதல் நூற்றாண்டிலிருந்த தேவனுடைய இஸ்ரவேலர் தங்களை “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்” தங்கள் பணியை நிறைவேற்றினர்.
17. மத்தேயு 24:14 எப்படி ஒரு பெரிய அளவில் தொடர்ந்து நிறைவேறி வருகிறது?
17 அப்படியிருந்தபோதும், அந்த முதல் நூற்றாண்டு பிரசங்கவேலை கடைசி நாட்களில் செய்யப்பட இருந்தவற்றிற்கு வெறும் ஒரு முன்சுவையாக மட்டுமே இருந்தது. நம் காலத்தை எதிர்நோக்கியவராய் இயேசு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14; மாற்கு 13:10) இத்தீர்க்கதரிசனம் நிறைவேறியிருக்கிறதா? நிச்சயமாக அது நிறைவேறியிருக்கிறது. நற்செய்தி பிரசங்கிப்பு 1919-ல் ஒரு சிறிய அளவில் ஆரம்பித்து, இப்போது 230-க்கு மேற்பட்ட தேசங்களுக்கு விரிவடைந்திருக்கிறது. பனி உறையும் வட ஆர்டிக் பிரதேசங்களிலிருந்து கொளுத்தும் வெப்ப மண்டல நாடுகள் வரை அந்த சாட்சி தொனிக்கிறது. பெரும் கண்டங்களும் சாட்சியைப் பெறுகின்றன, தீவுகளிலுள்ள குடிகளும் சாட்சியைப் பெற தொலைதூர தீவுகளும் எட்டப்படுகின்றன. பாஸ்னியாவிலும் ஹெர்ஸகோவினாவிலும் நடைபெற்ற சண்டைகளைப் போல் பெரும் எழுச்சிகள் மத்தியிலும் நற்செய்தி தொடர்ந்து பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. முதல் நூற்றாண்டில் இருந்ததைப்போல், இச்சாட்சி கொடுத்தல் “உலகமெங்கும்” பலன் தருகிறது. “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” நற்செய்தி வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. இதன் விளைவு? முதலாவதாக, தேவனுடைய இஸ்ரவேலரில் எஞ்சியிருப்போர் “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இரண்டாவதாக, ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்த இலட்சக்கணக்கானோர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” கொண்டுவரப்படலாயினர். (வெளிப்படுத்துதல் 5:9; 7:9) மத்தேயு 24:14 தொடர்ந்து ஒரு பெரிய அளவில் நிறைவேறிவருகிறது.
18. நற்செய்தி உலகமுழுவதும் பிரசங்கிக்கப்படுவதால் சாதிக்கப்படும் சில காரியங்கள் யாவை?
18 நற்செய்தி உலகமுழுவதும் பிரசங்கிக்கப்படுவது இயேசுவின் ராஜரீக பிரசன்னம் ஆரம்பித்துவிட்டது என்பதை நிரூபிக்க உதவுகிறது. (மத்தேயு 24:3) மேலும், ‘பூமியின் விளைவை அறுப்பதற்கு’ இது பிரதான வழியாக இருக்கிறது, ஏனெனில் மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கையான யெகோவாவின் ராஜ்யத்திற்கு இது மக்களை நடத்துகிறது. (வெளிப்படுத்துதல் 14:15, 16) உண்மைத்தன்மையுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமே நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் பங்கு கொள்வதால் இந்த முக்கியமான வேலை உண்மை கிறிஸ்தவர்களை பொய் கிறிஸ்தவர்களிடமிருந்து வேறுபடுத்தி கண்டறிய உதவுகிறது. (மல்கியா 3:18) இவ்வழியில், அது பிரசங்கிப்பவர்களுக்கும் அதற்கு சாதகமாக பிரதிபலிப்பவர்களுக்கும் இரட்சிப்பை விளைவிக்கிறது. (1 தீமோத்தேயு 4:16) அனைத்திலும் முக்கியமாக, நற்செய்தி பிரசங்கிக்கப்படுவது அவ்வேலையை கட்டளையிட்டவரும், அவ்வேலையை செய்வோரை ஆதரிப்பவரும், அது பலன் விளைவிக்கும்படி செய்கிறவருமான யெகோவா தேவனுக்கு துதியையும் கனத்தையும் கொண்டுவருகிறது.—2 கொரிந்தியர் 4:7.
19. புதிய ஊழிய ஆண்டுக்குள் நுழைகையில் எல்லா கிறிஸ்தவர்களும் எந்த உறுதியான தீர்மானத்துடன் இருக்க உற்சாகப்படுத்தப்படுகின்றனர்?
19 அப்போஸ்தலனாகிய பவுல் “சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ,” என்று சொல்லும்படி தூண்டப்பட்டதில் வியப்பேதுமில்லை! (1 கொரிந்தியர் 9:16) இன்று கிறிஸ்தவர்கள் இவ்விதமே உணருகின்றனர். இந்த இருண்ட உலகில் சத்தியத்தின் ஒளியை வீசி, ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருப்பது’ ஒரு மகத்தான சிலாக்கியமும் பெரும் உத்தரவாதமுமாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 3:9; ஏசாயா 60:2, 3) 1919-ல் ஒரு சிறிய ஆரம்பத்தைக் கொண்டிருந்த இந்த வேலை இப்போது திகைப்பூட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஏறக்குறைய 50 லட்சம் கிறிஸ்தவர்கள் பிறருக்கு இரட்சிப்பின் செய்தியைக் கொண்டு செல்ல ஆண்டுக்கு நூறுகோடிக்கும் அதிகமான மணிநேரத்தை செலவழித்து தெய்வீக அரசுரிமைக்கு சாட்சிபகர்ந்து வருகின்றனர். யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்தும் இந்த வேலையில் ஒரு பங்கை கொண்டிருப்பது எத்தகைய மகிழ்ச்சியாய் இருக்கிறது! 1996 ஊழிய ஆண்டிற்குள் நுழைகையில், நாம் மந்தமாகிவிடாமல் இருக்க உறுதியான தீர்மானத்துடன் இருப்போமாக. அதற்கு மாறாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “ஜாக்கிரதையாய் [“அவசர உணர்வுடன்,” NW] திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு,” என்று சொன்ன வார்த்தைகளுக்கு எப்போது இருந்ததையும்விட அதிகமாக கீழ்ப்படிவோம். (2 தீமோத்தேயு 4:2) அவ்விதம் செய்கையில், யெகோவா நம் முயற்சிகளை தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று முழு இருதயத்துடன் நாம் ஜெபிக்கிறோம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பிற தேசங்களுக்கு யெகோவாவின் “சாட்சியாக” இருந்த இஸ்ரவேல் தேசத்தை மாற்றீடு செய்தது யார்?
◻ கிறிஸ்தவ நடத்தை சாட்சி கொடுப்பதில் எவ்விதம் உதவுகிறது?
◻ பைபிளை படிப்பதும் அதை தியானிப்பதும் கிறிஸ்தவ சாட்சிக்கு ஏன் அத்தியாவசியமானது?
◻ யெகோவா உண்மையான கடவுள் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகளின் நவீனகால சரித்திரம் எவ்வழியில் ஒரு அத்தாட்சியாய் இருக்கிறது?
◻ நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதால் சாதிக்கப்படுவது என்ன?
[பக்கம் 15-ன் படங்கள்]
கட்டுப்படுத்தப்படுவதற்கு மாறாக, நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” அறிவிக்கப்பட்டு வருகிறது