அன்பின் வழியே “சிறந்த வழி” —உங்கள் வழியும் அதுதானா?
“கடவுள் அன்பாகவே இருக்கிறார்.” அப்போஸ்தலன் யோவான் சொன்ன இந்த வார்த்தைகள், அன்பே கடவுளுடைய மிக முக்கியமான பண்பு என்பதைக் காட்டுகின்றன. (1 யோ. 4:8) அவர் நம்மீது அன்பைப் பொழிவதால்தான் நம்மால் அவரிடம் நெருங்கிவர முடிகிறது, அவரோடு ஓர் இனிய உறவை அனுபவிக்க முடிகிறது. “நாம் எதை நேசிக்கிறோமோ அதுவே நம்மை வடிவமைக்கும்” என்பது பழமொழி. என்றாலும், இந்தப் பழமொழியைச் சற்று மாற்றியமைத்து, ‘நாம் யாரை நேசிக்கிறோமோ, யார் நம்மை நேசிக்கிறார்களோ அவர்களால் நாம் வடிவமைக்கப்படுவோம்’ என்றுகூடச் சொல்லலாம். நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நம்மாலும் அவரைப் போலவே அன்பு காட்ட முடிகிறது. (ஆதி. 1:27) ‘கடவுள் முதலில் நம்மீது அன்பு காட்டியதால்தான் நாமும் [அவர்மீது] அன்பு காட்டுகிறோம்’ என அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—1 யோ. 4:19.
அன்பை விவரிக்க நான்கு வார்த்தைகள்
அன்பின் வழியை “சிறந்த வழி” என்று அப்போஸ்தலன் பவுல் விவரித்தார். (1 கொ. 12:31) அவர் ஏன் அவ்வாறு விவரித்தார்? எந்த அன்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்? இதை அறிய, “அன்பு” என்ற வார்த்தையைச் சற்று ஆழ்ந்து ஆராய்வோம்.
பண்டைய கிரேக்கர்கள் அன்பை விவரிக்க நான்கு வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். அவை: ஸ்டார்கே, ஈராஸ், ஃபீலியா, அகாப்பே. அவற்றை வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்தினார்கள். அவற்றில் அகாப்பே என்ற வார்த்தை, ‘அன்பாகவே இருக்கிற’ கடவுளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.a நியு டெஸ்டமன்ட் வர்ட்ஸ் என்ற தனது புத்தகத்தில் பேராசிரியர் வில்லியம் பார்க்லே இந்த அன்பைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: “அகாப்பே என்ற வார்த்தை சிந்தனையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது; அது, நம் இதயத்தில் எழுகிற ஓர் உணர்ச்சி மட்டுமே அல்ல, நாம் வாழ்வதற்கு அடிப்படையான ஒரு நியமம் ஆகும். மிக முக்கியமாக, அகாப்பே என்ற வார்த்தை தீர்மானமாய் இருப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.” இங்கே நாம் கலந்தாராயும் அகாப்பே அன்பு, நியமத்தின் அடிப்படையில் காட்டப்படுகிற அன்பாகும்; ஆனால், உள்ளத்திலிருந்து எழுகிற ஆழ்ந்த உணர்ச்சிகள் பெரும்பாலும் அதில் உட்பட்டுள்ளன. நல்ல நியமங்கள் இருப்பதைப் போலவே கெட்ட நியமங்களும் இருப்பதால், கிறிஸ்தவர்கள் நல்ல நியமங்களாலேயே வழிநடத்தப்பட வேண்டும். இந்த நல்ல நியமங்களை பைபிளில் யெகோவா தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள அகாப்பே அன்பையும், அன்பை விளக்குகிற மற்ற வார்த்தைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் காட்ட வேண்டிய அகாப்பே அன்பைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வோம்.
குடும்பத்தில் அன்பு
பாசத்தில் பின்னிப் பிணைந்துள்ள ஒரு குடும்பத்தின் பாகமாக இருப்பது எப்பேர்ப்பட்ட சந்தோஷம்! ஸ்டார்கே என்ற கிரேக்க வார்த்தை, குடும்ப அங்கத்தினரிடையே உள்ள பந்தபாசத்தைக் குறிக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தாரிடம் அன்பு காட்டுவதற்குப் பெரிதும் முயற்சி செய்கிறார்கள். கடைசி நாட்களில், “பந்தபாசம் இல்லாத” ஆட்களே எங்கு பார்த்தாலும் இருப்பார்கள் என பவுல் முன்னுரைத்தார்.b—2 தீ. 3:1, 3.
குடும்ப அங்கத்தினரிடையே இயல்பாய் இருக்க வேண்டிய அன்பு இன்றைய உலகில் இல்லாதிருப்பது வருத்தத்திற்குரியது. கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் ஏன் கருச்சிதைவு செய்கிறார்கள்? அநேக குடும்பத்தார் வயதான பெற்றோர்மீது ஏன் கரிசனை காட்டுவதில்லை? விவாகரத்து விகிதம் ஏன் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது? இதற்கெல்லாம் உண்மையான காரணம், பந்தபாசம் இல்லாததே.
“இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது” என்று பைபிள் சொல்கிறது. (எரே. 17:9, பொது மொழிபெயர்ப்பு) குடும்பத்தில் காட்டப்படுகிற அன்பு நம் இதயத்தோடும் உணர்ச்சிகளோடும் சம்பந்தப்பட்டுள்ளது. என்றாலும், ஒரு கணவன் தன் மனைவியிடம் காட்ட வேண்டிய அன்பைப் பற்றி விளக்கும்போது பவுல் அகாப்பே என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இந்த அன்பை, சபையின் மீது கிறிஸ்து காட்டுகிற அன்போடு அவர் ஒப்பிட்டுப் பேசினார். (எபே. 5:28, 29) இந்த அன்பு, குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவாவினால் வகுக்கப்பட்ட நியமங்களின் அடிப்படையில் காட்டப்படுகிறது.
குடும்ப அங்கத்தினர் மீதுள்ள உண்மையான அன்பு, வயதான பெற்றோர்மீது கரிசனை காட்ட நம்மைத் தூண்டுகிறது; பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவும் தூண்டுகிறது. பாசம் கண்களை மறைத்துவிட இடங்கொடுக்காமல், தேவைப்படும்போது பிள்ளைகளை அன்புடன் கண்டிக்கப் பெற்றோர்களை உந்துவிக்கிறது; அப்படிக் கண்டிக்காவிட்டால் பிள்ளைகள் தறிகெட்டுப்போவதை அவர்களால் தடுக்க முடியாமல் போய்விடும்.—எபே. 6:1-4.
காதல் அன்பும் பைபிள் நியமங்களும்
திருமணத்தில் இணைகிற ஓர் ஆணும் பெண்ணும் உடல் ரீதியில் காட்டுகிற அன்பு உண்மையிலேயே கடவுள் கொடுத்திருக்கும் பரிசு. (நீதி. 5:15-17) காதல் அன்பைக் குறிக்க ஈராஸ் என்ற வார்த்தை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், இது பைபிள் எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படவில்லை. ஏன்? சில வருடங்களுக்கு முன்பு, காவற்கோபுர பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “அன்று கிரேக்கர்கள் செய்த தவறை இன்று உலகமே செய்வதுபோல் தெரிகிறது. அன்று அவர்கள் ஈராஸை ஒரு கடவுளாக வழிபட்டார்கள், ஈராஸின் பலிபீடத்திற்குமுன் பணிந்து பலிசெலுத்தினார்கள். . . . ஆனால், பாலியல் அன்பை இவ்வாறு வழிபட்டதால் தரக்குறைவான, நெறிதவறிய, சீர்கெட்ட நிலைதான் உருவானது என்பதை வரலாறு காட்டுகிறது. பைபிள் எழுத்தாளர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தாததற்கு இது காரணமாக இருக்கலாம்.” உடல் ரீதியிலான கவர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட உறவுகளைத் தவிர்க்க வேண்டுமானால், பைபிள் நியமங்களைப் பயன்படுத்தி காதல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே, ‘என் காதல் உணர்ச்சிகளையும் உண்மையான அன்பையும் நான் சமநிலைப்படுத்திக் காட்டுகிறேனா?’ என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
பொதுவாக, ‘இளமை மலரும் பருவத்தில்,’ பாலியல் உணர்ச்சிகள் மேலோங்கி இருக்கும்; அந்தப் பருவத்தில் பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்து வருகிறவர்கள் ஒழுக்க ரீதியில் சுத்தமுள்ளவர்களாக இருப்பார்கள். (1 கொ. 7:36; கொலோ. 3:5) திருமணத்தை யெகோவா கொடுத்த பரிசாக நாம் கருதுகிறோம். தம்பதிகளைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்.” (மத். 19:6) எனவே, கிறிஸ்தவ தம்பதியர் தங்களுக்கிடையே உடல் ரீதியிலான கவர்ச்சி இருக்கும்வரை மட்டும் ஒன்றாக வாழ்ந்துவிட்டுப் பின்பு ஒருவரையொருவர் உதறிவிடாமல், திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிராகவே கருதுகிறார்கள். மண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, அவற்றைக் குறுக்கு வழியில் தீர்க்க நினைப்பதில்லை; மாறாக, தெய்வீக குணங்களை வெளிக்காட்ட அரும்பாடுபட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியை மலரச் செய்கிறார்கள். அவ்வாறு மலரும் மகிழ்ச்சி வாடிப்போகாமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.—எபே. 5:33; எபி. 13:4.
நண்பர்களுக்கிடையே அன்பு
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை! பைபிள் நீதிமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.” (நீதி. 18:24, பொது மொழிபெயர்ப்பு) உண்மையான அன்பு காட்டுகிற நண்பர்கள் நமக்கு இருக்க வேண்டும் என்றே யெகோவா விரும்புகிறார். தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பு யாவரும் அறிந்ததே. (1 சா. 18:1) அப்போஸ்தலன் யோவானை, இயேசுவின் ‘பாசத்திற்குரிய சீடர்’ என்று பைபிள் விவரிக்கிறது. (யோவா. 20:2) “பாசத்திற்கு” அல்லது “நட்பிற்கு” உரிய கிரேக்க வார்த்தை ஃபீலியா என்பதாகும். சபையில் நமக்கு நெருங்கிய நண்பர்கள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. என்றாலும், 2 பேதுரு 1:7-ல், “சகோதரப் பாசத்தோடு” அன்பை (அகாப்பே அன்பை) கூட்டி வழங்கும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். (சகோதரப் பாசம் என்பது கிரேக்கில் ஃபிலடெல்ஃபியா ஆகும். ஃபிலோஸ், அடெல்ஃபோஸ் ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகளின் இணைப்பே அது; ஃபிலோஸ் என்பது “நண்பனையும்,” அடெல்ஃபோஸ் என்பது “சகோதரனையும்” குறிக்கிறது) அழியா நட்பை அனுபவிக்க வேண்டுமானால், இந்தப் புத்திமதியை நாம் பின்பற்ற வேண்டும். ஆகவே, ‘நண்பர்களிடம் காட்டுகிற அன்பை பைபிள் நியமங்களோடு நான் சமநிலைப்படுத்திக் காட்டுகிறேனா?’ என நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது.
நண்பர்களுக்கிடையே நாம் பாரபட்சம் காட்டாதிருக்கக் கடவுளுடைய வார்த்தை உதவுகிறது. நெருங்கிய நண்பர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று இருப்பது சரியல்ல. அதோடு, ஒருவரை நண்பராய் ஆக்கிக்கொள்வதற்காக நாம் அவரை முகஸ்துதி செய்வதில்லை. எல்லாவற்றையும்விட முக்கியமாக, பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பது நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், ‘நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடுகிற கெட்ட சகவாசத்தை’ தவிர்ப்பதற்கும் தேவையான பகுத்துணர்வை அளிக்கிறது.—1 கொ. 15:33.
அன்பெனும் ஒப்பற்ற பிணைப்பு!
கிறிஸ்தவர்களைப் பிணைக்கிற பந்தம் உண்மையிலேயே ஒப்பற்றது! அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “உங்கள் அன்பு போலித்தனமான அன்பாக இருக்க வேண்டாம். . . . ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்.” (ரோ. 12:9, 10) உண்மையில், கிறிஸ்தவர்கள் ‘போலித்தனம் இல்லாத அன்பை’ (அகாப்பே அன்பை) வெளிக்காட்டுகிறார்கள். இந்த அன்பு நம் இதயத்தில் எழுகிற ஓர் உணர்ச்சி மட்டுமல்ல, பைபிள் நியமங்களின் அடிப்படையில் ஆழமாக வேர்கொண்டுள்ள பண்பாகும். என்றாலும், ‘சகோதரப் பாசத்தையும்’ (ஃபிலடெல்ஃபியா) ‘கனிவான பாசத்தையும்’ (ஃபிலோஸ்டார்கோஸ், அதாவது ஃபிலோஸ், ஸ்டார்கே ஆகிய வார்த்தைகளின் இணைப்பு) பற்றிக்கூட பவுல் குறிப்பிடுகிறார். ஓர் அறிஞர் சொல்கிறபடி, ‘சகோதரப் பாசம்’ என்பது, “பாசம் கலந்த அன்பை, கருணை காட்டுவதை, இரக்கம் காட்டுவதை, உதவி செய்வதை” குறிக்கிறது. அது அகாப்பே அன்போடு சேர்ந்து, யெகோவாவின் வணக்கத்தாரிடையே நெருங்கிய நட்பை வளர்க்கிறது. (1 தெ. 4:9, 10) ‘கனிவான பாசம்’ என மொழிபெயர்க்கப்படுகிற இன்னொரு வார்த்தை, பைபிளில் ஒரே ஒருமுறை மட்டும் வருகிறது, இது குடும்பத்தாரிடையே நிலவுகிற பாசம் கலந்த நெருக்கத்தைக் குறிக்கிறது.c
குடும்பத்தினர்மீது காட்டப்படுகிற அன்பு, உண்மையான நண்பர்கள்மீது காட்டப்படுகிற அன்பு, பைபிள் நியமங்களின் அடிப்படையில் எல்லார்மீதும் காட்டப்படுகிற அன்பு ஆகிய இந்த மூன்று வகை அன்பின் கலவைதான் உண்மைக் கிறிஸ்தவர்களைப் பிணைக்கிற பந்தமாகும். கிறிஸ்தவ சபை என்பது ஒரு சமூக சங்கமோ, உலகப்பிரகாரமான ஓர் அமைப்போ அல்ல; மாறாக, அன்பினால் பிணைக்கப்பட்டு, யெகோவாவின் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிற ஒரு குடும்பமாகும். அதனால்தான், சக வணக்கத்தாரைச் சகோதர சகோதரிகள் என நாம் அழைக்கிறோம், நமது ஆன்மீகக் குடும்பத்தின் பாகமாயிருக்கும் அவர்களைச் சகோதர சகோதரிகளாகக் கருதுகிறோம். அதோடு, அவர்களை நண்பர்களாகப் பாவித்து அவர்கள்மீது அன்பு காட்டுகிறோம். அவர்களிடம் பைபிள் நியமங்களுக்கு இசைவாகவே எப்போதும் நடந்துகொள்கிறோம். ஆக, உண்மையான கிறிஸ்தவ சபைக்கு அடையாளமாய் இருக்கிற இந்த அன்பை, கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களை ஒன்றிணைக்கிற இந்த அன்பை, நாம் அனைவருமே தொடர்ந்து காட்டுவோமாக!—யோவா. 13:35.
[அடிக்குறிப்புகள்]
a மூல பைபிளில், அகாப்பே என்ற வார்த்தை எதிர்மறையாகவும் பயன்படுத்தப்படுகிறது.—யோவா. 3:19; 12:43; 2 தீ. 4:10; 1 யோ. 2:15-17.
b “பந்தபாசம் இல்லாத” என்ற சொற்றொடர், அஸ்டார்கோய் என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும்; இந்த வார்த்தையின் முற்பகுதியான அ என்பதற்கு, “இல்லாத” என்று அர்த்தமாகும். ரோமர் 1:31-ஐயும் காண்க.
c புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில், பிற கிரேக்க வார்த்தைகளும் “கனிவான பாசம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், அந்த மொழிபெயர்ப்பில் ரோமர் 12:10-ல் மட்டுமல்ல, பிலிப்பியர் 1:8-லும் 1 தெசலோனிக்கேயர் 2:8-லும் காணப்படுகிறது.
[பக்கம் 12-ன் சிறுகுறிப்பு]
கிறிஸ்தவர்களான நம்மை ஒன்றிணைக்கிற அன்பை நீங்கள் எப்படிக் காட்டலாம்?