முன்பைவிட அதிகமாய் விழித்திருங்கள்!
“மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.”—1 தெசலோனிக்கேயர் 5:6.
1, 2. (அ) பாம்ப்பே, ஹெர்குலேனியம் ஆகிய இரண்டும் எப்படிப்பட்ட நகரங்கள்? (ஆ) இவ்விரண்டு நகரங்களிலிருந்த அநேகர் எந்த எச்சரிக்கையை அசட்டை செய்தனர், அதன் விளைவு என்ன?
பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில், பாம்ப்பே, ஹெர்குலேனியம் ஆகிய இரு நகரங்களும் செல்வ செழிப்போடு திகழ்ந்தன. ரோம நகரங்களாகிய அவை வெசுவியஸ் மலையருகில் வீற்றிருந்தன. ரோமின் செல்வச் சீமான்கள் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடங்களாக அவை விளங்கின. ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அமருவதற்கு ஏற்ற அரங்குகள் அங்கே இருந்தன. கிட்டத்தட்ட முழு பட்டணத்தாரும் அமரும் அளவுக்கு பிரமாண்டமான ஓர் அரங்கம் பாம்ப்பேயில் இருந்தது. பாம்ப்பேயில் மது அருந்தும் விடுதிகள் 118 இருந்ததாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அவற்றில் சில சூதாட்ட களங்களாக அல்லது விலைமாதர் இல்லங்களாக செயல்பட்டன. ஒழுக்கயீனமும் பொருளாசையும் தலைவிரித்தாடின, இதற்கு சுவர் ஓவியங்களும் கலைப் பொருட்களும் அத்தாட்சி அளிக்கின்றன.
2 பொ.ச. 79, ஆகஸ்ட் 24-ல் வெசுவியஸ் என்ற எரிமலை வாய்பிளக்க ஆரம்பித்தது. முதல் வெடிப்பில் அந்த இரண்டு பட்டணங்களின் மீதும் லாவாவையும் சாம்பலையும் கக்கியது. ஆகவே அந்த சமயத்தில் மக்கள் ஒருவேளை தப்பிச் செல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள் என எரிமலை ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். சொல்லப்போனால், அநேகர் அப்படி தப்பிச் சென்றார்கள் என தெரிகிறது. ஆனால் ஆபத்தை குறைவாக மதிப்பிட்டவர்கள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகளை அசட்டை செய்தவர்கள் அங்கேயே இருப்பதற்கு தீர்மானித்தனர். பிறகு நடுராத்திரியில், பயங்கர அனல் பறக்கும் வாயுவும் லாவாவும் பாறையும் திடீரென ஹெர்குலேனியத்தில் குபுகுபுவென்று சீறிக்கொண்டு வந்தன. இதனால் நகர வாசிகள் அனைவருக்கும் மூச்சுத் திணறியது. அடுத்த நாள் அதிகாலையில் மறுபடியும் எரிமலை வெடிக்கவே, பாம்ப்பேயிலிருந்த எல்லாரும் மீளா துயிலடைந்தனர். எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காததால் எவ்வளவு பரிதாபகரமான விளைவு!
யூத ஒழுங்குமுறையின் முடிவு
3. எருசலேமிற்கு ஏற்பட்ட அழிவுக்கும் பாம்ப்பே மற்றும் ஹெர்குலேனியத்திற்கு ஏற்பட்ட அழிவுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?
3 பாம்ப்பே மற்றும் ஹெர்குலேனியத்திற்கு ஏற்பட்ட அழிவைவிட, அதற்கு ஒன்பது வருடங்களுக்கு முன்பு எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவுதான் இன்னும் பயங்கரமாக இருந்தது. அது மனிதனால் உண்டான பேரழிவு என்றாலும் படுபயங்கரமாக இருந்தது. இது, “வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமான முற்றுகைகளில் ஒன்று” என வர்ணிக்கப்படுகிறது, இதனால் பத்து லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் மரணமடைந்தனர். என்றபோதிலும், பாம்ப்பே மற்றும் ஹெர்குலேனியத்திற்கு எவ்வாறு எச்சரிப்பு தரப்பட்டதோ, அப்படித்தான் எருசலேமிற்கும் அழிவைப் பற்றிய எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டன.
4. ஓர் ஒழுங்குமுறையின் முடிவு அருகிலிருந்தது என்பதை எச்சரிக்க இயேசு தமது சீஷர்களுக்கு கொடுத்த தீர்க்கதரிசன அடையாளம் என்ன, அது எவ்வாறு முதல் நூற்றாண்டில் சிறிய அளவில் நிறைவேறியது?
4 இந்நகரத்தின் அழிவைப் பற்றி இயேசு முன்னறிவித்தார், அந்த அழிவு வருவதற்கு முன் நடைபெறும் சம்பவங்களையும் முன்னறிவித்தார், அதாவது போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், அக்கிரமம் போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படும் என கூறினார். பொய் தீர்க்கதரிசிகள் மும்முரமாக செயல்படுவார்கள், அதேசமயம் ராஜ்ய நற்செய்தி உலகெங்கிலும் பிரசங்கிக்கப்படும் என்றும் கூறினார். (மத்தேயு 24:4-7, 11-14) இயேசுவின் வார்த்தைகள் இன்று பெரிய அளவில் நிறைவேறுகிற போதிலும், அன்று அவை சிறிய அளவில் நிறைவேறின. யூதேயாவில் கொடிய பஞ்சம் நிலவியதாக வரலாற்று ஏடுகள் காட்டுகின்றன. (அப்போஸ்தலர் 11:28) எருசலேம் அழிவதற்கு சிலகாலத்திற்கு முன்பு அங்கே பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் அறிவிக்கிறார். எருசலேமின் அழிவு அண்டி வந்தபோது, அடிக்கடி கலகங்கள் வெடித்தன; யூத அரசியல் கட்சிகளுக்கு இடையே சதா உட்பூசல் ஏற்பட்டது; யூதர்களும் புறஜாதியாரும் சேர்ந்து வாழ்ந்த அநேக நகரங்களில் கொலைக்கு மேல் கொலை விழுந்தது. இருந்தாலும், “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” ராஜ்ய நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வந்தது.—கொலோசெயர் 1:23.
5, 6. (அ) பொ.ச. 66-ல் நிறைவேறிய இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் யாவை? (ஆ) பொ.ச. 70-ல் எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏன் அவ்வளவு பேர் மரிக்க நேரிட்டது?
5 கடைசியில், பொ.ச. 66-ல், ரோமருக்கு எதிராக யூதர்கள் கலகம் செய்தனர். எருசலேமை முற்றுகையிட செஸ்டியஸ் காலஸ் படையோடு சென்றபோது, இயேசு சொன்னதை அவரது சீஷர்கள் நினைத்துப் பார்த்தார்கள்; “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்” என்று அவர் சொல்லியிருந்தார். (லூக்கா 21:20, 21) எருசலேமைவிட்டு வெளியேறுவதற்குரிய காலம் வந்தது—ஆனால் எப்படி? எதிர்பாராத விதமாக, காலஸ் தனது படையாட்களை அழைத்துக்கொண்டு பின்வாங்கிச் சென்றுவிட்டார்; இது எருசலேம் மற்றும் யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து மலைகளுக்கு ஓடிப்போக வழியைத் திறந்தது.—மத்தேயு 24:15, 16.
6 நான்கு வருடங்களுக்குப்பின், ஏறக்குறைய பஸ்கா பண்டிகையின் சமயத்தில், தளபதி டைட்டஸின் தலைமையில் ரோம படைகள் மீண்டும் வந்தன. யூத கலகத்திற்கு ஒரு முடிவுகட்ட டைட்டஸ் உறுதிபூண்டிருந்தார். அவருடைய படையினர் எருசலேமை சூழ்ந்துகொண்டு, எவ்வழியிலும் மக்களை தப்பவிடாதபடி “கூர்மையான கம்புகளால் மதில்” போட்டனர். (லூக்கா 19:43, 44, NW) போர் மூளும் அபாயம் இருந்தபோதிலும், பஸ்கா பண்டிகைக்காக ரோம மாகாணம் முழுவதிலுமிருந்து யூதர்கள் எருசலேமிற்கு திரண்டு வந்திருந்தனர். இப்பொழுது அவர்கள் வசமாக சிக்கிக்கொண்டனர். துரதிர்ஷ்டவசமாக இங்கு வந்தவர்களில் பெரும்பாலோர் ரோமருடைய முற்றுகையால் மடிந்துபோயினர் என ஜொஸிஃபஸ் கூறுகிறார்.a இறுதியில் எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது, ரோம மாகாணத்திலிருந்த யூதர்களில் சுமார் ஏழில் ஒரு பாகத்தினர் அழிந்தனர். எருசலேமிற்கும் அதன் ஆலயத்திற்கும் ஏற்பட்ட அழிவு, யூத அரசுக்கும் நியாயப்பிரமாண சட்டத்தின் அடிப்படையிலான அதன் மத முறைமைக்கும் முடிவாக அமைந்தது.b—மாற்கு 13:1, 2.
7. உண்மையுடன் இருந்த கிறிஸ்தவர்கள் ஏன் எருசலேமின் அழிவை தப்பிப்பிழைத்தனர்?
7 பொ.ச. 70-ல் யூத கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படுவதற்கு அல்லது எருசலேமிலிருந்த மற்றவர்களைப் போலவே அடிமையாக்கப்படுவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர்களோ 37 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிசாய்த்திருந்தனர். அவர்கள் அந்நகரத்தைவிட்டு சென்றுவிட்டிருந்தனர், மீண்டும் திரும்பிச் செல்லவே இல்லை. இதற்கு வரலாறும் சான்று பகருகிறது.
அப்போஸ்தலரிடமிருந்து வந்த காலத்திற்கேற்ற எச்சரிக்கைகள்
8. என்ன அவசியத்தை பேதுரு பகுத்துணர்ந்தார், இயேசுவின் எந்த வார்த்தைகளை அவர் மனதில் கொண்டிருந்திருக்கலாம்?
8 இன்று அதைவிட பயங்கரமான ஓர் அழிவு, இந்த முழு ஒழுங்கு முறையையே பூண்டோடு தகர்க்கும் ஓர் அழிவு காத்துக்கொண்டிருக்கிறது. எருசலேமின் அழிவுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், விழித்திருங்கள் என்ற காலத்திற்கேற்ற ஓர் அவசர அறிவுரையை அப்போஸ்தலன் பேதுரு கொடுத்தார், அது முக்கியமாக நம்முடைய நாளில் வாழும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறது. கிறிஸ்தவர்கள் ‘கர்த்தராகிய’ இயேசு கிறிஸ்துவின் ‘கட்டளையை’ அசட்டை செய்யாதபடிக்கு, ‘தெளிவாக சிந்திக்கும் [தங்கள்] திறன்களை’ வளர்ப்பது அவசியம் என்பதை பேதுரு கண்டார். (2 பேதுரு 3:1, 2, NW) விழிப்புடனிருக்கும்படி கிறிஸ்தவர்களை பேதுரு தூண்டியபோது, இயேசு தமது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கூறியதை மனதில் கொண்டிருந்திருக்கலாம்; “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள்” என்று அப்போஸ்தலர்களிடம் இயேசு சொல்லியிருந்தார்.—மாற்கு 13:33.
9. (அ) என்ன ஆபத்தான மனநிலையை சிலர் வளர்ப்பர்? (ஆ) சந்தேக மனப்பான்மை ஏன் முக்கியமாக ஆபத்தானது?
9 “அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே?” என இன்று சிலர் ஏளனமாக கேட்கின்றனர். (2 பேதுரு 3:3, 4) ஒன்றும் மாறிவிடவில்லை, உலகம் உண்டானது முதல் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது என அவர்கள் நினைக்கின்றனர். இத்தகைய சந்தேக மனப்பான்மை ஆபத்தானது. சந்தேகங்கள் நம்முடைய அவசரவுணர்வை மந்தப்படுத்தி, நம்மை கொஞ்சம் கொஞ்சமாக வழி விலகச் செய்து, நம்முடைய ஆசைகளை திருப்தி செய்வதிலேயே நாட்டம் கொள்ளும்படி செய்யலாம். (லூக்கா 21:34) அதோடு ஏளனம் செய்வோர், பேதுரு சுட்டிக்காட்டுகிறபடி, ஏற்கெனவே ஒரு அழிவு வந்ததை மறந்துவிடுகின்றனர்; அதாவது நோவாவின் நாளில் ஜலப்பிரளயம் வந்து ஓர் உலக ஒழுங்கு முறையை அடியோடு அழித்ததை மறந்துவிடுகின்றனர். அந்தச் சமயத்தில், எச்சரிக்கப்பட்டபடியே உலக நிலைமைகள் திடீரென தலைகீழாயின!—ஆதியாகமம் 6:13, 17; 2 பேதுரு 3:5, 6.
10. பொறுமையிழப்போரை பேதுரு எப்படி உற்சாகப்படுத்துகிறார்?
10 பெரும்பாலான சமயங்களில் கடவுள் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை நினைவூட்டுவதன் மூலம் பொறுமையை வளர்த்துக்கொள்ளும்படி பேதுரு தனது வாசகருக்கு உதவுகிறார். முதலில், பேதுரு இவ்வாறு கூறுகிறார்: ‘கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறது.’ (2 பேதுரு 3:8) யெகோவா என்றென்றும் ஜீவிப்பவராதலால் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த காலத்தை அவரால் தேர்ந்தெடுக்க முடியும். பிறகு, எங்குமுள்ள ஜனங்கள் மனந்திரும்ப வேண்டுமென்று யெகோவா விரும்புவதை பேதுரு சுட்டிக்காட்டுகிறார். கடவுள் பொறுமையாக இருப்பதால், இரட்சிப்பை பெறும் வாய்ப்பு அநேகருக்கு கிடைக்கிறது. அவர் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தால் அவர்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள். (1 தீமோத்தேயு 2:3, 4; 2 பேதுரு 3:9) இருந்தாலும், யெகோவா பொறுமையாக இருக்கிறார் என்பதற்காக ஒருபோதும் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று அர்த்தமாகாது. ‘கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்’ என பேதுரு கூறுகிறார்.—2 பேதுரு 3:10.
11. ஆவிக்குரிய விதத்தில் விழித்திருக்க நமக்கு எது உதவும், ஒரு கருத்தில், இது எவ்வாறு யெகோவாவின் நாளை ‘வேகமாக்கும்?’
11 பேதுருவின் ஒப்புமை குறிப்பிடத்தக்கது. திருடர்களை எளிதில் பிடிக்க முடியாது, அதுவும் அவ்வப்பொழுது தூங்கி விழுகிற காவற்காரனுக்கு அது ரொம்ப கஷ்டம். ஆனால் இரா முழுக்க விழிப்புடனிருக்கும் காவற்காரனால் சட்டென்று திருடனை கண்டுகொள்ள முடியும். காவற்காரன் எவ்வாறு விழிப்புடனிருக்க முடியும்? இரா முழுக்க உட்கார்ந்திருப்பதைவிட நடந்து கொண்டிருப்பது விழிப்புடனிருக்க அதிக உதவியாக இருக்கும். இது போலவே, கிறிஸ்தவர்களாகிய நாம் விழித்திருப்பதற்கு ஆவிக்குரிய விதத்தில் சுறுசுறுப்பாக இருப்பது உதவும். ஆகவே, “பரிசுத்த நடத்தைக்கும் தேவ பக்திக்கும் ஏற்ற செயல்களில்” சுறுசுறுப்பாக ஈடுபடும்படி பேதுரு நம்மை உந்துவிக்கிறார். (2 பேதுரு 3:11, NW) ‘யெகோவாவின் நாளை தொடர்ந்து மனதில் நெருங்க வைத்திருப்பதற்கு’ இத்தகைய நடவடிக்கை நமக்கு உதவும். ‘மனதில் நெருங்க வைத்திருப்பது’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம் “வேகமாக்குதல்” என்பதாகும். (2 பேதுரு 3:12, NW அடிக்குறிப்பு) உண்மைதான், யெகோவாவின் கால அட்டவணையை நாம் மாற்ற முடியாது. அவருடைய நாள் அவர் நியமித்த நேரத்தில் வரும். ஆனால் அவருடைய சேவையில் சுறுசுறுப்பாக இருந்தால் இப்பொழுது முதல் அந்த நாள் வரை இருக்கும் இடைப்பட்ட காலம் மிக வேகமாக பறந்துவிடுவது போல தோன்றும்.—1 கொரிந்தியர் 15:58.
12. யெகோவாவின் பொறுமையை நாம் தனிப்பட்டவர்களாய் எவ்வாறு அனுகூலப்படுத்திக் கொள்ளலாம்?
12 யெகோவாவின் நாள் தாமதிப்பதாக நினைக்கிற எவரும் அவருடைய நியமிக்கப்பட்ட காலம் வரும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்ற பேதுருவின் அறிவுரைக்கு செவிசாய்க்கும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். சொல்லப்போனால், கடவுள் பொறுமையாக இருப்பதால் கிடைக்கும் அந்தக் கூடுதலான சமயத்தை நாம் ஞானமாக பயன்படுத்தலாம். உதாரணமாக, இன்றியமையா கிறிஸ்தவ பண்புகளை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளலாம், முன்பு சாட்சி கொடுக்க முடியாமல் போயிருக்கும் அநேகருக்கு இப்போது நற்செய்தியை அறிவிக்கலாம். நாம் விழிப்புடனிருந்தால், இந்த ஒழுங்குமுறையின் முடிவில் யெகோவாவுக்குமுன் “கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே” காணப்படுவோம். (2 பேதுரு 3:14, 15) அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருக்கும்!
13. தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்ன என்ன விஷயம் குறிப்பாக இன்று நமக்கு பொருத்தமாக இருக்கிறது?
13 தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், விழித்திருப்பதன் அவசியத்தைப் பற்றி பவுலும் குறிப்பிடுகிறார். “மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்” என அறிவுரை கூறுகிறார். (1 தெசலோனிக்கேயர் 5:2, 6) இன்று, இந்த முழு ஒழுங்குமுறையின் அழிவும் நெருங்கி வருவதால், இது எவ்வளவு அவசியமாயிருக்கிறது! ஆன்மீக காரியங்களில் துளிகூட ஆர்வமில்லாத ஓர் உலகில் யெகோவாவின் ஜனங்கள் வாழ்கிறார்கள், அந்த மனப்பான்மை அவர்களையும் பாதிக்கலாம். ஆகவே, “நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம்” என பவுல் அறிவுரை கூறுகிறார். (1 தெசலோனிக்கேயர் 5:8) கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படிப்பதும் கூட்டங்களில் நம்முடைய சகோதரர்களுடன் தவறாமல் கூட்டுறவு கொள்வதும் பவுலின் அறிவுரையைப் பின்பற்றவும் அவசரவுணர்வை காத்துக்கொள்ளவும் நமக்கு உதவும்.—மத்தேயு 16:1-3.
லட்சோப லட்சம் பேர் விழிப்புடன் இருக்கிறார்கள்
14. விழித்திருக்கும்படி பேதுரு கொடுத்த அறிவுரையை இன்று அநேகர் பின்பற்றுவது புள்ளிவிவரங்களில் எப்படித் தெரிகிறது?
14 விழிப்புடன் இருக்கும்படி கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் கொடுக்கப்பட்ட உற்சாகமூட்டுதலுக்கு செவிசாய்ப்போர் இன்றைக்கு அநேகர் இருக்கிறார்களா? ஆம், இருக்கிறார்கள். 2002-ம் ஊழிய ஆண்டில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 63,04,645 என்ற உச்சநிலையை எட்டியது; இது 2001-ம் ஆண்டைவிட 3.1 சதவீத அதிகரிப்பாகும். இவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு 120,23,81,302 மணிநேரங்களை செலவழித்ததன் மூலம் ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடன் இருப்பதற்கு அத்தாட்சி அளித்தார்கள். இந்த வேலையை ஏனோ தானோவென்று செய்யவில்லை. இது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மைய அம்சமாக இருந்தது. அவர்களுடைய மனப்பான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டை இப்போது பார்க்கலாம்; எல் சால்வடாரிலுள்ள எட்வார்டோ, நோயமி என்பவர்களின் உதாரணம்தான் அது.
15. அநேகர் ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடன் இருப்பதை எல் சால்வடாரிலுள்ள என்ன அனுபவம் காட்டுகிறது?
15 சில வருடங்களுக்கு முன்னர், “இவ்வுலகத்தின் காட்சி மாறிவருகிறது” என்ற பவுலின் வார்த்தைகளை எட்வார்டோவும் நோயமியும் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். (1 கொரிந்தியர் 7:31, NW) தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டு, முழு நேர பயனியர் ஊழியத்தில் அடியெடுத்து வைத்தார்கள். காலம் செல்லச் செல்ல, அவர்கள் அநேக விதங்களில் ஆசீர்வதிக்கப்பட்டார்கள், வட்டார மற்றும் மாவட்ட வேலையிலும்கூட பங்கு கொண்டார்கள். பெரும் பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோதிலும், முழுநேர சேவைக்காக தங்களுடைய சொகுசான வாழ்க்கையை தியாகம் செய்தார்கள். அது சரியான தீர்மானம் என்பதாகவே எட்வார்டோவும் நோயமியும் உறுதியாக நம்பினார்கள். 2,454 பயனியர்கள் உட்பட, எல் சால்வடாரிலுள்ள 29,269 பிரஸ்தாபிகளில் அநேகர் இதுபோன்ற சுயதியாக மனப்பான்மையை காண்பித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அந்நாட்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டதற்கு இது ஒரு காரணமாகும்.
16. கோட் டீ வ்வாரிலுள்ள இளம் சகோதரர் ஒருவர் எத்தகைய மனப்பான்மையை காண்பித்தார்?
16 கோட் டீ வ்வார் என்ற நாட்டில், ஓர் இளம் கிறிஸ்தவர் இதே போன்ற மனப்பான்மையை காண்பித்தார், அவர் கிளை அலுவலகத்திற்கு இவ்வாறு எழுதினார்: “நான் ஓர் உதவி ஊழியனாக சேவை செய்து வருகிறேன். நானே சிறந்த முன்மாதிரியாக இல்லாதபோது மற்ற சகோதரர்களை பயனியர் ஊழியம் செய்யும்படி என்னால் சொல்ல முடியாது. ஆகவே நல்ல வருமானம் கிடைத்த வேலையை விட்டுவிட்டு, இப்பொழுது சுயமாக தொழில் செய்து வருகிறேன், இதனால் ஊழியத்தில் நிறைய மணிநேரம் செலவழிக்க முடிகிறது.” கோட் டீ வ்வாரில் இருக்கும் 983 பயனியர்களில் இந்த இளம் கிறிஸ்தவரும் ஒருவர். கடந்த வருடம் அங்கு 6,701 பிரஸ்தாபிகள் இருப்பதாக அந்நாடு அறிக்கை செய்தது, இது 5 சதவீத அதிகரிப்பாகும்.
17. தப்பெண்ணத்தைக் கண்டு அஞ்சவில்லை என்பதை பெல்ஜியத்தில் ஓர் இளம் சாட்சி எவ்வாறு காண்பித்தாள்?
17 சகிப்பின்மை, தப்பெண்ணம், வேற்றுமை ஆகியவற்றால் பெல்ஜியத்திலுள்ள 24,961 ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு பல பிரச்சினைகள். இருந்தபோதிலும், அவர்கள் வைராக்கியத்தோடும் அஞ்சா நெஞ்சோடும் இருக்கிறார்கள். ஒரு பள்ளியில் நீதிநெறி பற்றி பாடம் நடத்தப்பட்டபோது யெகோவாவின் சாட்சிகள் ஒரு மதப் பிரிவு என சொல்லப்பட்டது. அங்கிருந்த 16 வயது சாட்சி, இந்த விஷயத்தின் மறு பக்கத்தையும் எடுத்துச் சொல்ல அனுமதி கேட்டாள். யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்கு பின்னுள்ள அமைப்பு என்ற வீடியோவையும் யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டையும் பயன்படுத்தி, யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் யார் என்பதை விளக்கினாள். எல்லாரும் நன்கு கேட்டு பாராட்டினார்கள். அடுத்த வாரம் மாணவர்களுக்கு ஒரு பரீட்சை வைக்கப்பட்டது, அதில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ மதத்தைப் பற்றியே கேள்விகள் கேட்கப்பட்டன.
18. அர்ஜன்டினா மற்றும் மொசாம்பிக்கிலுள்ள பிரஸ்தாபிகள் யெகோவாவை சேவிப்பதை பொருளாதார பிரச்சினைகள் திசை திருப்பி விடவில்லை என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
18 இந்தக் கடைசி நாட்களில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பயங்கர பிரச்சினைகளை எதிர்ப்பட வேண்டியுள்ளது. என்றாலும், அவற்றிலேயே மூழ்கிவிடாதிருக்க முயற்சி செய்கிறார்கள். அர்ஜன்டினாவில் பொருளாதார பிரச்சினைகள் இருப்பது எல்லாரும் அறிந்ததே. இருந்தாலும், கடந்த வருடத்தில் அங்கு சாட்சிகளின் எண்ணிக்கை 1,26,709 என்ற புதிய உச்சநிலையை எட்டியது. மொஸாம்பிக்கில் இன்னும் வறுமை தாண்டவமாடுகிறது. இருந்தாலும், சாட்சி கொடுக்கும் வேலையில் 37,563 பேர் பங்கு கொண்டதாக அது அறிக்கை செய்தது, இது 4 சதவீத அதிகரிப்பாகும். அல்பேனியாவில் அநேகருக்கு வாழ்க்கை பெரும் பாரமாக இருக்கிறது, என்றபோதிலும் அந்த நாட்டில் 12 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிக்கை வந்திருக்கிறது. அங்கு பிரஸ்தாபிகள் 2,708 என்ற உச்சநிலை எண்ணிக்கையை எட்டினர். யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ராஜ்ய வேலைகளுக்கு முதலிடம் கொடுக்கும்போது அவருடைய ஆவியின் ஆசீர்வாதம் கண்டிப்பாக இருக்கும், எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையும் அதற்கு தடையாக இருக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.—மத்தேயு 6:33.
19. (அ) செம்மறியாடு போன்ற அநேகர் பைபிள் சத்தியத்திற்காக தாகத்துடன் இருக்கிறார்கள் என்பதற்கு எது அத்தாட்சி அளிக்கிறது? (ஆ) யெகோவாவின் ஊழியர்கள் ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை வருடாந்திர அறிக்கையிலுள்ள மற்ற எந்த விவரங்கள் காட்டுகின்றன? (பக்கங்கள் 12-15-ல் உள்ள அட்டவணையைக் காண்க.)
19 கடந்த ஆண்டில் உலகமுழுவதிலும் நடத்தப்பட்ட பைபிள் படிப்புகளின் மாதாந்தர சராசரி எண்ணிக்கை 53,09,289. பைபிள் சத்தியத்தின் மீது தாகமாயிருக்கிற செம்மறியாடு போன்றோர் இன்னும் அநேகர் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. நினைவு ஆசரிப்பு தினத்திற்கு வந்திருந்தவர்களுடைய புதிய உச்சநிலை 1,55,97,746; இவர்களில் பெரும்பாலோர் யெகோவாவை இன்னும் சேவிக்க ஆரம்பிக்காதவர்கள். அவர்கள் யெகோவாவையும் அவரது மக்களையும் பற்றி இன்னுமதிகமாக கற்றுக்கொள்வார்களாக, அவர்கள் மீதுள்ள அன்பிலும் மேன்மேலும் பெருகுவார்களாக. ‘வேறே ஆடுகளாகிய’ ‘திரள் கூட்டத்தார்’ ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட தங்கள் சகோதரர்களுடன் சேர்ந்து சிருஷ்டிகரை “இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே” சேவித்து தொடர்ந்து கனி கொடுப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 15; யோவான் 10:16.
லோத்துவிடமிருந்து ஒரு பாடம்
20. லோத்து மற்றும் அவருடைய மனைவியின் உதாரணத்திலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?
20 கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களும்கூட அவசரவுணர்வை சிலசமயங்களில் இழந்துவிடக்கூடும். ஆபிரகாமின் சகோதரன் மகன் லோத்துவை சிந்தித்துப் பாருங்கள். சோதோம் கொமோராவை கடவுள் அழிக்கவிருந்ததை அவர் தெரிந்துகொண்டார்; இரண்டு தேவதூதர்கள் அவரை சந்தித்து அதைச் சொல்லியிருந்தனர். அந்த செய்தி லோத்துவுக்கு ஆச்சரியமாக இருந்திருக்காது, ஏனென்றால் அவர் “கட்டுப்பாடற்றுக் காம வெறியில் உழன்றோரைக் கண்டு மனம் வருந்தி”னார். (2 பேதுரு 2:7, பொது மொழிபெயர்ப்பு) இருந்தாலும், சோதோமிலிருந்து வெளியே கொண்டு போவதற்கு இரண்டு தேவதூதர்கள் வந்தபோது, அவர் ‘தாமதித்துக் கொண்டிருந்தார்.’ அந்தத் தேவதூதர்கள் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் அந்தப் பட்டணத்திலிருந்து கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு வர வேண்டியதாயிற்று. பிறகு, பின்னிட்டுப் பார்க்கக்கூடாது என்று தேவதூதர்கள் கொடுத்த எச்சரிக்கையை லோத்துவின் மனைவி அசட்டை செய்தாள். அலட்சிய மனப்பான்மை அவளுடைய உயிரையே பறித்துவிட்டது. (ஆதியாகமம் 19:14-17, 26) “லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” என இயேசு எச்சரிப்பூட்டினார்.—லூக்கா 17:32.
21. முன்பைவிட இப்பொழுது அதிக விழிப்புடன் இருப்பது ஏன் முக்கியம்?
21 பாம்ப்பே மற்றும் ஹெர்குலேனியத்தில் ஏற்பட்ட அழிவு, எருசலேமின் அழிவோடு தொடர்புடைய சம்பவங்கள், நோவாவின் நாளில் உண்டான ஜலப்பிரளயம், லோத்துவின் உதாரணம் ஆகிய அனைத்தும் எச்சரிப்புகளுக்கு செவிசாய்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் இந்த முடிவு காலத்தின் அடையாளத்தை உணர்ந்திருக்கிறோம். (மத்தேயு 24:3) நாம் பொய் மதத்திலிருந்து நம்மை தனியே பிரித்து வைத்திருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 18:4) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, ‘யெகோவாவின் நாளை மனதில் நெருக்கமாக வைத்திருப்பது’ அவசியம். (2 பேதுரு 3:12, NW) ஆம், முன்பைவிட இப்பொழுது அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்! என்ன நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம், விழித்திருப்பதற்கு என்ன பண்புகளை வளர்த்துக் கொள்ளலாம்? இந்த விஷயங்களைப் பின்வரும் கட்டுரை கலந்தாராயும்.
[அடிக்குறிப்புகள்]
a முதல் நூற்றாண்டில் எருசலேமில் 1,20,000 பேருக்கும் அதிகமாக இருந்திருக்க மாட்டார்கள். பொ.ச. 70-ல் பஸ்கா பண்டிகைக்காக யூதேயா மாகாணத்திலிருந்த 3,00,000 பேர் எருசலேமுக்கு வந்ததாக யூஸிபியஸ் கணக்கிடுகிறார். மீதமுள்ளவர்கள் அந்தப் பேரரசின் வேறு பாகங்களிலிருந்து வந்திருக்க வேண்டும்.
b யெகோவாவின் நோக்குநிலையில், பொ.ச. 33-ல் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குப் பதிலாக புதிய உடன்படிக்கை அமலுக்கு வந்தது.—எபேசியர் 2:15.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• எருசலேமின் அழிவை தப்பிப்பிழைக்க எந்த சம்பவம் யூத கிறிஸ்தவர்களுக்கு உதவியது?
• அப்போஸ்தலர்கள் பேதுரு மற்றும் பவுலின் எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை விழித்திருக்க நமக்கு எவ்வாறு உதவுகிறது?
• நன்கு விழித்திருப்பதற்கு இன்று யார் அத்தாட்சி அளிக்கின்றனர்?
• லோத்து மற்றும் அவருடைய மனைவியைப் பற்றிய பதிவிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக் கொள்கிறோம்?
[பக்கம் 9-ன் படம்]
பொ.ச. 66-ல், எருசலேமிலிருந்த கிறிஸ்தவ சமுதாயம் இயேசுவின் எச்சரிப்புக்கு செவிசாய்த்தது
[பக்கம் 10-ன் படங்கள்]
சுறுசுறுப்பாக இருப்பது விழித்திருக்க கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது