படிப்புக் கட்டுரை 8
“தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்!”
“தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்!”—1 பே. 5:8.
பாட்டு 144 கண் முன் பரிசை வைப்போம்!
இந்தக் கட்டுரையில்...a
1. எப்போது முடிவு வரும் என்பதைப் பற்றி இயேசு தன் சீஷர்களிடம் என்ன சொன்னார், அவர்களுக்கு என்ன எச்சரிப்பைக் கொடுத்தார்?
இயேசு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவருடைய சீஷர்களில் நான்கு பேர் அவரிடம், ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கு அடையாளம் என்ன?’ என்று கேட்டார்கள். (மத். 24:3) ஒருவேளை, எருசலேமும் அதன் ஆலயமும் எப்போது அழியும் என்று தெரிந்துகொள்வதற்காக அவர்கள் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம். ஆனால், இயேசு அவர்களுக்குப் பதில் சொல்லும்போது எருசலேமின் முடிவைப் பற்றி மட்டுமல்ல, நாம் வாழும் “இந்தச் சகாப்தத்தின்” முடிவைப் பற்றியும் சொன்னார். ஆனால், முடிவு வரப்போகும் “அந்த நாளோ அந்த நேரமோ பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது” என்று சொன்னார். அதன்பின், தன்னுடைய சீஷர்கள் எல்லாரிடமும், “விழிப்புடன் இருங்கள்” என்ற எச்சரிக்கையைக் கொடுத்தார்.—மாற். 13:32-37.
2. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் ஏன் விழிப்போடு இருக்க வேண்டியிருந்தது?
2 முதல் நூற்றாண்டில் இருந்த யூத கிறிஸ்தவர்கள் விழிப்போடு இருக்க வேண்டியிருந்தது. இல்லையென்றால், அவர்களுடைய உயிரே போவதற்கு வாய்ப்பு இருந்தது. எருசலேமும் அதன் ஆலயமும் எப்போது அழியும் என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்காக இயேசு ஒரு அடையாளத்தைச் சொன்னார். “எருசலேமைப் படைகள் சுற்றிவளைத்திருப்பதை நீங்கள் பார்க்கும்போது அதற்கு அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள்” என்று அவர் சொன்னார். அந்தச் சம்பவம் நடக்கும்போது, இயேசு கொடுத்த எச்சரிப்பைக் கேட்டு அவர்கள் எல்லாரும் “மலைகளுக்குத் தப்பியோட” வேண்டியிருந்தது. (லூக். 21:20, 21) விசுவாசம் வைத்த எல்லாரும் இந்த எச்சரிப்பைக் கேட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள். அதனால், ரோமர்கள் எருசலேமை அழித்தபோது அவர்கள் உயிர் தப்பினார்கள்.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?
3 இன்று நாம் இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால், நாமும் தெளிந்த புத்தியோடும் விழிப்போடும் இருக்க வேண்டும். உலக சம்பவங்களைக் கவனிக்கும் விஷயத்தில் நாம் எப்படி சமநிலையோடு இருக்கலாம்? நம்மைக் குறித்தே நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம்? நம் நேரத்தை எப்படி மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
உலக சம்பவங்களைக் கவனிக்கும் விஷயத்தில் சமநிலையோடு இருங்கள்
4. உலக சம்பவங்கள் எப்படி பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகின்றன என்று தெரிந்துகொள்வதில் நாம் ஏன் ஆர்வமாக இருக்க வேண்டும்?
4 இன்று உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் பைபிள் தீர்க்கதரிசனங்களை எப்படி நிறைவேற்றுகின்றன என்பதைப் பார்க்க நாம் ஆர்வமாக இருக்கிறோம். அதற்கு நல்ல காரணங்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சாத்தானுடைய இந்த உலகம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை நாம் தெரிந்துகொள்வதற்காக இயேசு சில சம்பவங்களை அடையாளமாகச் சொல்லியிருக்கிறார். (மத். 24:3-14) தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறுகின்றன என்பதைக் கவனமாகப் பார்க்கும்படி அப்போஸ்தலன் பேதுருவும் சொல்லியிருக்கிறார். ஏனென்றால், அப்போதுதான் நம் விசுவாசம் பலமாகும். (2 பே. 1:19-21) பைபிளுடைய கடைசி புத்தகம் இப்படிச் சொல்லி ஆரம்பிக்கிறது: “சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களைக் கடவுள் தன்னுடைய அடிமைகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக இயேசு கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்தினார்.” (வெளி. 1:1) அதனால், இந்த உலகத்தில் என்னென்ன சம்பவங்கள் நடக்கின்றன... அவை எப்படி பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகின்றன... என்பதையெல்லாம் பார்ப்பதில் நாம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம். அதைப் பற்றியெல்லாம் சகோதர சகோதரிகளிடம் பேசவும் நாம் ஆசைப்படலாம்.
5. நாம் என்ன செய்யக் கூடாது, ஆனால் என்ன செய்ய வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)
5 ஆனால், பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றிப் பேசும்போது, நாமே எதையாவது ஊகித்துப் பேசிவிடக் கூடாது. ஏன்? அப்படிப் பேசினால் சபையில் பிரிவினைகள் வருவதற்கு நாம் காரணமாகிவிடலாம். உதாரணத்துக்கு, ஒரு பிரச்சினையை எப்படிச் சரிசெய்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரலாம் என்று உலகத் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கலாம். நாம் அதைக் கேட்டுவிட்டு, 1 தெசலோனிக்கேயர் 5:3-ன் நிறைவேற்றம்தான் அதுவென்று ஊகித்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, யெகோவாவின் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டிருக்கும் விளக்கங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். நம் அமைப்பின் பிரசுரங்களில் இருக்கும் விஷயங்களைப் பற்றியே பேச வேண்டும். அப்போதுதான், சபை ஒற்றுமையோடும் “ஒரே யோசனையோடும்” இருப்பதற்கு நம்மால் உதவி செய்ய முடியும்.—1 கொ. 1:10; 4:6.
6. இரண்டு பேதுரு 3:11-13-லிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
6 2 பேதுரு 3:11-13-ஐ வாசியுங்கள். பைபிள் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறுகின்றன என்பதைப் பார்க்கும் விஷயத்தில் நாம் சமநிலையோடு இருப்பதற்கு அப்போஸ்தலன் பேதுரு உதவி செய்கிறார். ‘யெகோவாவின் நாளை எப்போதும் மனதில் வைக்க’ வேண்டும் என்று அவர் சொல்கிறார். எதற்காக? யெகோவா அர்மகெதோனைக் கொண்டுவரப்போகும் ‘அந்த நாளையும் அந்த நேரத்தையும்’ கணக்குப்போடுவதற்காக அல்ல. ஆனால், “பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் கடவுள்பக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும்” இருக்க மீதமுள்ள நேரத்தைப் பயன்படுத்துவதற்காகத்தான்! (மத். 24:36; லூக். 12:40) வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும். அதோடு, யெகோவாவுக்காக எதைச் செய்தாலும் அவர்மேல் இருக்கும் ஆழமான அன்பினால் செய்ய வேண்டும். அதற்கு, நம்மைக் குறித்தே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நம்மைக் குறித்தே நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம்?
7. நம்மைக் குறித்தே நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (லூக். 21:34)
7 “எச்சரிக்கையாக இருங்கள்” என்று லூக்கா 21:34-ல் இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (வாசியுங்கள்.) அப்படியென்றால், உலக சம்பவங்களுக்கு நாம் கவனம் செலுத்துவதோடு, நம்மைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன்னைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும் ஒருவர் என்ன செய்வார்? யெகோவாவுக்கும் அவருக்கும் இருக்கிற நட்புக்கு எதுவெல்லாம் ஆபத்தாக இருக்கலாம் என்று அவர் பார்த்துக்கொண்டே இருப்பார், அதையெல்லாம் உடனடியாகத் தவிர்த்துவிடுவார். இப்படி, எப்போதுமே கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பார்.—நீதி. 22:3; யூ. 20, 21.
8. கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் என்ன சொல்லியிருக்கிறார்?
8 கிறிஸ்தவர்கள் தங்கள்மீதே கவனம் செலுத்த வேண்டுமென்று அப்போஸ்தலன் பவுலும் சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு, “நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள்” என்று எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் சொன்னார். (எபே. 5:15, 16) யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பை முறிப்பதற்கு சாத்தான் எப்போதும் முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கிறான். அதனால், “யெகோவாவின் விருப்பம் என்னவென்று புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருங்கள்” என்று பைபிள் நமக்கு ஆலோசனை சொல்கிறது. (எபே. 5:17) அப்படிச் செய்தால்தான் சாத்தானுடைய எல்லா விதமான தாக்குதல்களிலிருந்தும் நம்மால் தப்பிக்க முடியும்.
9. “யெகோவாவின் விருப்பம்” என்னவென்று நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம்?
9 யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்புக்கு ஆபத்தாக இருக்கும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பைபிள் சொல்வதில்லை. பைபிளில் நேரடியாகச் சொல்லப்படாத விஷயங்கள் சம்பந்தமாக நாம் அடிக்கடி முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் நாம் ஞானமான முடிவுகளை எடுக்க, “யெகோவாவின் விருப்பம்” என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, பைபிளைத் தவறாமல் படிக்க வேண்டும், படித்ததைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். நாம் எந்தளவுக்கு யெகோவாவின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்கிறோமோ அந்தளவுக்கு ‘ஞானமுள்ளவர்களாக நடப்போம்.’ (1 கொ. 2:14-16) பைபிளில் நேரடியான சட்டதிட்டங்கள் இல்லாத சமயத்திலும் நாம் அப்படி நடப்போம். சில விஷயங்கள் ஆபத்து என்பது பளிச்சென்று தெரிந்துவிடும், ஆனால் மற்ற விஷயங்களில் ஆபத்து மறைந்திருக்கும்.
10. நாம் தவிர்க்க வேண்டிய சில ஆபத்துகள் என்ன?
10 நாம் தவிர்க்க வேண்டிய சில ஆபத்துகள் இவைதான்: விளையாட்டுக்காகக் காதலிப்பது, அளவுக்குமீறி குடிப்பது, அளவுக்குமீறி சாப்பிடுவது, குத்தலாகப் பேசுவது, வன்முறையான பொழுதுபோக்கையோ ஆபாசத்தையோ அதுபோன்ற மற்ற விஷயங்களையோ பார்ப்பது. (சங். 101:3) நம் எதிரியான பிசாசு, யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கும் நட்பைக் கெடுக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டே இருக்கிறான். (1 பே. 5:8) நாம் விழிப்பாக இல்லையென்றால், வயிற்றெரிச்சல், பொய் பித்தலாட்டம், பேராசை, பகை, பெருமை, மனக்கசப்பு போன்ற கெட்ட விஷயங்களை சாத்தான் நமக்குள் விதைத்துவிடுவான். (கலா. 5:19-21) ஆரம்பத்தில், இதெல்லாம் ஆபத்தான விஷயங்களாகவே நமக்குத் தெரியாது. ஆனால், அவற்றை வேரோடு பிடுங்கியெறிய நாம் உடனடியாக முயற்சி எடுக்காவிட்டால், அவை நம் நெஞ்சில் நஞ்சாகப் பரவி நம் உயிருக்கே உலை வைத்துவிடலாம்.—யாக். 1:14, 15.
11. நம்மால் சட்டென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு ஆபத்து என்ன, அதை ஏன் நாம் தவிர்க்க வேண்டும்?
11 சில ஆபத்துகளை நம்மால் சட்டென்று கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு ஆபத்துதான் கெட்ட சகவாசம். உதாரணத்துக்கு, யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவரோடு நீங்கள் வேலை பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். சாட்சிகள்மேல் அவருக்கு நல்ல அபிப்பிராயம் வர வேண்டும் என்பதற்காக அவரிடம் நல்ல விதமாக நடந்துகொள்கிறீர்கள், அவருக்கு நிறைய உதவிகளும் செய்கிறீர்கள். அதுமட்டுமல்ல, அவ்வப்போது அவரோடு சேர்ந்து மத்தியான சாப்பாடு சாப்பிடுகிறீர்கள். கொஞ்ச நாளிலேயே, அடிக்கடி அப்படிச் செய்ய ஆரம்பித்துவிடுகிறீர்கள். சிலசமயம், அவர் ஒழுக்கக்கேடான விஷயங்களைப் பேச ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் உங்களுக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் போகப் போக, அது உங்களுக்குப் பழகிப்போய்விடுகிறது, அதனால் அது ஒரு தப்பாகவே தெரிவதில்லை. ஒருநாள் வேலை முடிந்த பிறகு, ‘இன்னைக்கு கொஞ்சம் தண்ணி அடிக்கலாமா?’ என்று கேட்கிறார், நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள். அவரோடு பழகப் பழக அவரை மாதிரியே யோசிக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். இப்போது ஒரு கேள்வி: அவரை மாதிரியே நீங்கள் நடந்துகொள்ள எவ்வளவு நாள் ஆகும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயம் ரொம்ப நாள் ஆகாது. மற்றவர்களிடம் நாம் அன்போடும் மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நாம் யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறோமோ அவர்களைப் போலவே ஆகிவிடுவோம் என்பதை மறந்துவிடக் கூடாது. (1 கொ. 15:33) இயேசு சொன்னது போலவே நாம் எச்சரிக்கையாக இருந்தால், யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழாதவர்களோடு அநாவசியமாகப் பழக மாட்டோம். (2 கொ. 6:15) அதில் மறைந்திருக்கும் ஆபத்தைப் புரிந்துகொண்டு அதை அடியோடு தவிர்த்துவிடுவோம்.
உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்துங்கள்
12. எருசலேமின் முடிவுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் என்ன வேலையைச் செய்ய வேண்டியிருந்தது?
12 எருசலேமின் முடிவுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் சீஷர்கள் ஒரு முக்கியமான வேலையைச் செய்ய வேண்டும் என்று இயேசு சொல்லியிருந்தார். “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும்” நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டுமென்று அவர் கட்டளை கொடுத்திருந்தார். (அப். 1:6-8) இது எவ்வளவு பெரிய பொறுப்பு! சீஷர்கள் அந்தப் பொறுப்பை முழுமூச்சோடு செய்தார்கள். இப்படி, தங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
13. நம் நேரத்தை நாம் ஏன் மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்? (கொலோசெயர் 4:5)
13 கொலோசெயர் 4:5-ஐ வாசியுங்கள். நம்மைக் குறித்தே நாம் எச்சரிக்கையாக இருப்பதற்கு, நம் நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், “எதிர்பாராத சம்பவங்கள்” நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். (பிர. 9:11) திடீரென்று நம் உயிர்கூடப் போய்விடலாம்.
14-15. நம் நேரத்தை நாம் எப்படி மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்? (எபிரெயர் 6:11, 12) (படத்தையும் பாருங்கள்.)
14 நம் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்வதற்கு, நாம் யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய வேண்டும், அவரோடு இருக்கும் நட்பைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். (யோவா. 14:21) அதோடு, “உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும் எந்நேரமும் நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாகவும்” இருக்க வேண்டும். (1 கொ. 15:58) அப்படிச் செய்யும்போது, நம் வாழ்நாளுக்கு முடிவு வந்தாலும் சரி, இந்த உலகத்துக்கு முடிவு வந்தாலும் சரி, நாம் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வருத்தப்படவே மாட்டோம்.—மத். 24:13; ரோ. 14:8.
15 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கிக்க இயேசு தன் சீஷர்களுக்கு இன்றும் உதவி செய்துவருகிறார். அவருடைய பங்கில் செய்ய வேண்டியதை அவர் சரியாகச் செய்துவருகிறார். யெகோவாவின் அமைப்பின் மூலமாக, பிரசங்கிப்பதற்கு அவர் நமக்குப் பயிற்சி கொடுக்கிறார், அதற்குத் தேவையான கருவிகளையும் கொடுக்கிறார். (மத். 28:18-20) நம் பங்கில் நாம் என்ன செய்ய வேண்டும்? பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும். இந்த உலகத்துக்கு யெகோவா முடிவைக் கொண்டுவரும்வரை நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எபிரெயர் 6:11, 12 சொல்லும் ஆலோசனையின்படியும் நாம் நடக்க வேண்டும். அப்போதுதான், நம் நம்பிக்கை நிறைவேறும் என்பதில் “கடைசிவரை” உறுதியாக இருப்போம்.—வாசியுங்கள்.
16. என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?
16 சாத்தானுடைய உலகத்துக்கு முடிவைக் கொண்டுவர யெகோவா ஒரு நாளை ஏற்கெனவே குறித்துவிட்டார். அந்த நாள் வரும்போது, பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எல்லா தீர்க்கதரிசனங்களையும் அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார். ஒருவேளை, முடிவு வருவதற்குக் கொஞ்சம் தாமதமாவதுபோல் நமக்குத் தோன்றலாம். ஆனால், யெகோவாவின் நாள் “கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” (ஆப. 2:3) அதனால், ‘யெகோவாவுக்காக எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கவும் . . . [நம்மை] மீட்கும் கடவுளுக்காகப் பொறுமையோடு காத்திருக்கவும்’ நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.—மீ. 7:7.
பாட்டு 139 பூஞ்சோலையில் வாழ்க்கை
a உலகத்தில் நடக்கும் சம்பவங்களைப் பொறுத்தவரை நாம் விழிப்பாக இருக்க வேண்டும். அதேசமயத்தில், சமநிலையோடும் இருக்க வேண்டும். எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, நம்மைக் குறித்தே நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும், நம் நேரத்தை எப்படி மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.
b பட விளக்கம்: (மேலே) ஒரு தம்பதி டிவியில் செய்தியைப் பார்க்கிறார்கள். அதன்பின், அந்தச் செய்தியைப் பற்றிய தங்களுடைய சொந்த கருத்துகளை சபைக் கூட்டத்துக்குப் பிறகு எல்லார் மீதும் திணிக்கிறார்கள். (கீழே) ஒரு தம்பதி ஆளும் குழுவின் அறிக்கையைப் பார்த்து, பைபிள் தீர்க்கதரிசனத்தின் புதிய விளக்கத்தைத் தெரிந்துகொள்கிறார்கள். உண்மையுள்ள அடிமை கொடுக்கும் பிரசுரங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.