வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் 2 பேதுரு 3:13-ல் “புதிய வானங்களும் [பன்மையில்] புதிய பூமியும்” என்றும், வெளிப்படுத்துதல் 21:1-ல் “புதிய வானத்தையும் [ஒருமையில்] புதிய பூமியையும்” என்றும் சொல்லப்பட்டிருப்பது ஏன்?
மூல மொழிகளின் இலக்கணமே இதற்கு அடிப்படைக் காரணம். இதன் அர்த்தத்தைப் பொருத்தவரை, இதற்கு எந்த விசேஷ முக்கியத்துவமும் இருப்பதாக தெரியவில்லை.
முதலில் எபிரெய வேதாகமத்தை எடுத்துக் கொள்ளலாம். “வானம்(கள்)” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை ஷாமாயிம் (sha·maʹyim) எப்போதுமே பன்மையில் காணப்படுகிறது. இது உயர்மேன்மைக்குரிய பன்மையைக் குறிப்பதில்லை, ஆனால், “பரந்து விரிந்திருப்பதை,” அல்லது “எண்ணற்ற தனித்தனி பகுதிகள் அல்லது இடங்கள் மொத்தமாய் ஒன்று சேர்ந்திருப்பதை” குறிப்பிடவே பன்மையில் காணப்படுகிறது. கோடாகோடி நட்சத்திரங்கள் உட்பட பூமிக்கு அப்பால் எல்லா திசைகளிலும் வானம் பரந்து விரிந்து காணப்படுவது யாவரும் அறிந்த விஷயம். ஷாமாயிம் என்ற வார்த்தை சுட்டிடை சொல்லுடன் வந்தால் (“the heavens”)—ஏசாயா 66:22-ல் காணப்படுவதுபோல்—பெரும்பாலும் “வானங்கள்” (“heavens”) என்றே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் மொழிபெயர்க்கிறது. ஷாமாயிம் என்ற வார்த்தையில் சுட்டிடை சொல் இல்லையென்றால், ஒருமையில் அல்லது பன்மையில் மொழிபெயர்க்கப்படலாம். (ஆதியாகமம் 1:8; 14:19, 22; சங்கீதம் 69:34 போன்ற வசனங்களில் ‘வானம்’ என ஒருமையிலும், ஆதியாகமம் 49:25; நியாயாதிபதிகள் 5:4; யோபு 9:8; ஏசாயா 65:17 போன்ற வசனங்களில் “வானங்கள்” என பன்மையிலும் மொழிபெயர்க்கப்படலாம்).
ஏசாயா 65:17 மற்றும் 66:22-ல், வானங்கள் என்ற எபிரெய பதம் பன்மையில் காணப்படுகிறது, அதனால் “புதிய வானங்களும் புதிய பூமியும்” என சீராக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கிரேக்க வார்த்தையான உரானோஸ் (ou·ra·nosʹ) என்பதன் அர்த்தம் “வானம்”; பன்மையில், உரானோய் (ou·ra·noiʹ) என்ற வார்த்தையின் அர்த்தம் ‘வானங்கள்.’ கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பாளர்கள் ஏசாயா 65:17 மற்றும் 66:22-ல் அதை ஒருமையில் மொழிபெயர்த்திருப்பது அக்கறைக்குரிய விஷயம்.
அப்படியானால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இரண்டு இடங்களில் “புதிய வானமும் [அல்லது வானங்களும்] புதிய பூமியும்” என்ற சொற்றொடர் ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன?
2 பேதுரு 3:13-ல் அப்போஸ்தலன் பேதுரு இந்த வார்த்தைக்கு கிரேக்க மொழியின் பன்மை வடிவை பயன்படுத்தினார். இதற்கு முந்தின வசனங்களில் (7, 10, 12 வசனங்களில்) தற்போதைய துன்மார்க்க ‘வானங்களைப்’ பற்றி அவர் பேசுகையில் பன்மை வடிவை பயன்படுத்தினார். அத்துடன் ஒத்திருப்பதற்காகவே 13-ம் வசனத்திலும் அவர் பன்மையில் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, அவர் 2 பேதுரு 2:22-ஐ எபிரெய வசனமாகிய நீதிமொழிகள் 26:11-லிருந்து மேற்கோள் காட்டினதுபோலவே, இங்கேயும் ஏசாயா 65:17-ன் மூலவார்த்தையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பதுபோல் தெரிகிறது; எபிரெயுவில் அந்த வார்த்தை பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் [பன்மையில்] புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” என பேதுரு குறிப்பிட்டார்.
ஆனால் வெளிப்படுத்துதல் 21:1-ல் அப்போஸ்தலன் யோவான் சிறிது வித்தியாசமாக ஏசாயா 65:17-ன் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை பயன்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது. அங்கு ‘வானம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை ஒருமையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவேதான், “நான் புதிய வானத்தையும் [ஒருமையில்] புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின” என யோவான் எழுதினார்.
இவை யாவும் மொழிபெயர்ப்போடு சம்பந்தப்பட்ட இலக்கண விவரங்கள். இந்த வார்த்தை அடிக்கடி வருவதால் ஒருவர் அதை ‘புதிய வானங்கள்’ என்றோ அல்லது ‘புதிய வானம்’ என்றோ வாசிக்கும்போது அல்லது சொல்லும்போது அதன் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடுவதில்லை. இரண்டு வார்த்தைகளின் அர்த்தமும் ஒன்றே.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
நட்சத்திரங்கள்: Frank Zullo