காத்திருக்கும் மனப்பான்மை வேண்டும்!
“நானோ என் இரட்சிப்பின் கடவுளுக்காகக் காத்திருக்கும் மனப்பான்மையைக் காட்டுவேன். என் கடவுள் எனக்குச் செவிகொடுப்பார்.”—மீகா 7:7, Nw.
1, 2. (அ) திருப்தியற்ற மனப்பான்மை எவ்வாறு வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்குத் தீங்கிழைத்தது? (ஆ) சரியான மனப்பான்மை வளர்க்காத கிறிஸ்தவனுக்கு என்ன நேரிடலாம்?
வாழ்க்கையில் பல விஷயங்கள் நமக்கு நம்பிக்கை அளிக்கலாம் அல்லது நம் நம்பிக்கையை அடியோடு அழிக்கலாம்; அவை அனைத்துக்கும் நம் மனநிலைதான் காரணம். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் மன்னாவை அற்புத உணவாக பெற்றனர். அவர்கள் இருந்த பொட்டல் காட்டில் இப்படிப்பட்ட உணவை யெகோவா கொடுத்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கலாம். அதுவே நல்ல மனப்பான்மைக்கு அழகாக இருந்திருக்கும். ஆனால் அவர்களோ எகிப்தில் தாங்கள் புசித்த விதவிதமான உணவை நினைத்து, மன்னாவை குறைகூற ஆரம்பித்தனர். என்னே தவறான மனப்பான்மை!—எண்ணாகமம் 11:4-6.
2 அதுபோலவே இன்றும் சந்தோஷத்திற்கும் சரி சோர்வுக்கும் சரி ஒருவரின் மனப்பான்மைதான் காரணம். சரியான மனப்பான்மை இல்லாவிட்டால், ஒரு கிறிஸ்தவன் எளிதில் தன் சந்தோஷத்தை இழக்கலாம். அது படுமோசமான நிலைமைக்கு வழிநடத்தும், ஏனெனில் நெகேமியா சொன்னபடி, ‘யெகோவாவினால் வரும் மகிழ்ச்சியே நம் பலம்.’ (நெகேமியா 8:10, தி.மொ.) நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளிக்கும் மனப்பான்மை, நம்மை பலப்படுத்துவதோடு சபையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் முன்னேற்றுவிக்கிறது.—ரோமர் 15:13; பிலிப்பியர் 1:25.
3. கஷ்டமான காலங்களில் எரேமியாவின் நம்பிக்கையான மனநிலை அவருக்கு எவ்வாறு உதவியது?
3 கஷ்டமான காலங்களில் வாழ்ந்தபோதிலும் எரேமியா நம்பிக்கையான மனநிலையுடன் இருந்தார். பொ.ச.மு. 607-ல் எருசலேமின் வீழ்ச்சியின் போது நடந்த பயங்கரமான சம்பவங்களைப் பார்த்த போதும் நம்பிக்கையோடு இருந்தார். இஸ்ரவேலை யெகோவா மறக்கமாட்டார், அந்த ஜனம் பிழைக்கும் என நம்பினார். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது” என புலம்பல் புத்தகத்தில் எரேமியா எழுதினார். (புலம்பல் 3:22, 23) சரித்திரம் முழுவதிலுமே, மிக கஷ்டமான சூழ்நிலைகளிலும் கடவுளின் ஊழியர்கள் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரும் மனப்பான்மையுடனேயே இருந்திருக்கின்றனர்.—2 கொரிந்தியர் 7:4; 1 தெசலோனிக்கேயர் 1:6; யாக்கோபு 1:2.
4. இயேசுவிடம் என்ன மனப்பான்மை இருந்தது, அது அவருக்கு எவ்வாறு உதவியது?
4 எரேமியாவிற்குப் பின்பு அறுநூறு ஆண்டுகள் கழித்து இயேசு வாழ்ந்தார். இயேசுவுக்கும் நம்பிக்கையான மனப்பான்மையே சகித்திருக்க உதவியது. “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் [“வாதனையின் கழுமரத்தை,” NW] சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” என்று வாசிக்கிறோம். (எபிரெயர் 12:2) கழுமரத்தின் கடும் வேதனையையும் பெரும் எதிர்ப்பையும் துன்புறுத்துதலையும் இயேசு சகிக்க வேண்டியிருந்தது; எனினும், ‘தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தில்’ தம்முடைய மனதை முழுக்க முழுக்க ஒருமுகப்படுத்தினார். அந்த சந்தோஷம்: யெகோவாவின் அரசதிகாரத்தை நியாய நிரூபணம் செய்து, அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும் சிலாக்கியமே. கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு எதிர்காலத்தில் பெரும் ஆசீர்வாதங்களை அளிக்கும் எதிர்பார்ப்பும் அந்த சந்தோஷத்தில் அடங்கும்.
காத்திருக்கும் மனப்பான்மையை வளர்ப்பது
5. காத்திருக்கும் மனப்பான்மை இருந்தால் காரியங்களைச் சரியான முறையில் புரிந்துகொள்ள முடியும் என்பதை எப்படிப்பட்ட சூழ்நிலையில் புரிந்துகொள்ளலாம்?
5 இயேசுவின் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்கையில், காரியங்கள் எப்போதும் நாம் எதிர்பார்த்தபடி, எதிர்பார்த்த நேரத்தில் நடக்காவிட்டாலும் யெகோவா தரும் சந்தோஷத்தை இழக்க மாட்டோம். “நானோ யெகோவாவை நோக்கிய வண்ணமாய் என் ரட்சிப்பின் கடவுளுக்குக் காத்திருப்பேன்” என்று தீர்க்கதரிசியாகிய மீகா சொன்னார். (மீகா 7:7, தி.மொ.; புலம்பல் 3:21, NW) காத்திருக்கும் மனப்பான்மையை நாமும் காட்டலாம். எவ்வாறு? எத்தனையோ வழிகளில். உதாரணமாக, பொறுப்புகள் வகிக்கும் சகோதரர் ஒருவர் தவறு செய்துவிட்டார், உடனடியாக அவர் கண்டிக்கப்பட வேண்டும் என நாம் நினைக்கலாம். காத்திருக்கும் மனப்பான்மை நமக்கிருந்தால் நாம் இப்படி யோசிப்போம்: ‘உண்மையில் அவர் செய்தது தவறா அல்லது நான்தான் தவறுதலாக எண்ணிவிட்டேனா? ஒருவேளை அவர் தவறு செய்திருந்தாலும், போக போக சரியாகிவிடுவார், கடுமையான கண்டிப்பு அவசியமில்லை என்பதாக யெகோவா நினைத்து இதனை அனுமதிக்கிறாரா?’
6. ஏதோவொரு பிரச்சினையால் கஷ்டப்படுகையில் காத்திருக்கும் மனப்பான்மை ஒருவருக்கு எவ்வாறு உதவும்?
6 ஏதோவொரு பிரச்சினையால் நாம் கஷ்டப்படுகையில் அல்லது பலவீனத்தை சமாளிக்க போராடுகையில் காத்திருக்கும் மனப்பான்மை தேவைப்படலாம். உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்த போதிலும் அந்தப் பிரச்சினை தொடர்ந்து நமக்கு வருத்தத்தை அளிக்கலாம். அப்போது என்ன செய்வது? அந்தப் பிரச்சினையைத் தீர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்; பின்னர், “தொடர்ந்து கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தொடர்ந்து தேடுங்கள், கண்டடைவீர்கள்; தொடர்ந்து தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்” என்ற இயேசுவின் வார்த்தைகளில் விசுவாசம் வைக்க வேண்டும். (லூக்கா 11:9, NW) தொடர்ந்து ஜெபியுங்கள், பொறுமையுடன் யெகோவாவுக்கு காத்திருங்கள். தக்க சமயத்தில், தமக்குரிய வழியில் யெகோவா உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார்.—1 தெசலோனிக்கேயர் 5:17, NW.
7. பைபிளை படிப்படியாக தெளிவாக புரிந்துகொள்வதைப் பற்றிய நம் நோக்குநிலைக்கு காத்திருக்கும் மனப்பான்மை எவ்வாறு உதவும்?
7 பைபிள் தீர்க்கதரிசனங்கள் மெல்ல மெல்ல நிறைவேறுகையில் வேதவசனங்களை நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் சில சமயங்களில், குறிப்பிட்ட ஒரு வசனம் இன்னும் ஏன் தெளிவாக விளக்கப்படவில்லை என்று அங்கலாய்க்கலாம். நாம் எதிர்பார்க்கும் சமயத்தில் அது விளக்கப்படவில்லை என்றால் அதற்காக நாம் காத்திருப்போமா? யெகோவா தேவன், சுமார் 4,000 ஆண்டுகளில் ‘கிறிஸ்துவின் இரகசியத்தைக் குறித்து’ கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெளிப்படுத்தினார் என்பதை நினைவில் வையுங்கள். (எபேசியர் 3:3-6) அப்படியானால், நாம் ஏன் பொறுமை இழக்க வேண்டும்? யெகோவாவின் ஜனங்களுக்கு, ‘ஏற்றவேளையிலே . . . போஜனங்கொடுக்க’ “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” நியமிக்கப்பட்டிருப்பதை நாம் சந்தேகிக்கிறோமா? (மத்தேயு 24:45) அப்படியென்றால், எல்லாவற்றையும் நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக கடவுள் அருளும் சந்தோஷத்தை ஏன் இழக்க வேண்டும்? ‘தமது இரகசியங்களை’ எப்போது, எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை யெகோவாதான் தீர்மானிக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.—ஆமோஸ் 3:7.
8. யெகோவாவின் பொறுமை எவ்வாறு பலருக்கு நன்மை செய்திருக்கிறது?
8 பல ஆண்டுகள் உண்மையுடன் சேவித்த பின்பு, ‘யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளை’ ஒருவேளை காண முடியாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தால் சிலர் மனச்சோர்வடையலாம். (யோவேல் 2:30, 31, தி.மொ.) இருப்பினும், நம்பிக்கை அளிக்கும் விஷயங்களுக்கு மனதை செலுத்தினாலே அந்த மனச்சோர்வை சமாளிக்கலாம். கவனம் செலுத்துகையில் அவர்கள் ஊக்குவிக்கப்படலாம். “நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்” என பேதுரு அறிவுரை கூறினார். (2 பேதுரு 3:15) நேர்மை இருதயமுள்ள லட்சக்கணக்கானோர் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள யெகோவாவின் பொறுமை இன்னமும் வாய்ப்பளிக்கிறது. இது சந்தோஷமான விஷயமல்லவா? மேலும், யெகோவா இன்னும் எவ்வளவு காலம் பொறுமையைக் காட்டுகிறாரோ அவ்வளவு காலம், ‘அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட’ நமக்கும் நேரம் இருக்கிறது.—பிலிப்பியர் 2:12; 2 பேதுரு 3:11, 12.
9. யெகோவாவுக்கு பெருமளவு சேவை செய்ய முடியாமல் போகையில், காத்திருக்கும் மனப்பான்மை எவ்வாறு அந்த சூழ்நிலையை சகிக்க நமக்கு உதவும்?
9 ராஜ்ய சேவையில் நமக்கு இடையூறாக எதிர்ப்பு, நோய், முதுமை அல்லது வேறு பிரச்சினைகள் வந்தாலும் காத்திருக்கும் மனப்பான்மை சோர்வடையாதிருக்க நமக்கு உதவும். முழு இருதயத்தோடு நாம் சேவிக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார். (ரோமர் 12:1) எனினும், ‘பலவீனனுக்கும் எளியவனுக்கும் இரங்கும்’ மனம்படைத்த கடவுளுடைய குமாரனும் சரி கடவுளும் சரி, நம்மால் முடியாததை செய்தாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. (சங்கீதம் 72:13) இவ்வாறாக, தற்போதோ எதிர்காலத்திலோ சூழ்நிலைமைகள் மாறும் வரையில் பொறுமையுடன் காத்திருந்து நம்மால் முடிந்ததைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறோம். “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என்பதை மனதில் வையுங்கள்.—எபிரெயர் 6:10.
10. காத்திருக்கும் மனம் படைத்தவர் கடவுளுக்குப் பிரியமற்ற என்ன குணத்தை தவிர்க்கலாம்? விளக்கவும்.
10 காத்திருக்கும் மனப்பான்மை, துணிச்சலுடன் நடந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் நமக்கு உதவும். காத்திருக்க மனமற்ற சிலர் விசுவாச துரோகிகளாக மாறினர். அவர்கள் ஒருவேளை, பைபிளைப் புரிந்துகொள்ளும் விஷயத்தில் அல்லது அமைப்பை நடத்தும் முறையில் சரிப்படுத்துதல்கள் தேவையென நினைத்திருக்கலாம். எனினும், தக்க சமயமென நாம் நினைக்கும் போதல்ல ஆனால் யெகோவா நினைக்கும் போதே சரிப்படுத்துதல்கள் செய்யும்படி உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார வகுப்பாரை அவருடைய ஆவி தூண்டுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள தவறினர். மேலும் எந்தச் சரிப்படுத்துதல்களும் யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக இருக்குமே தவிர நம்முடைய கருத்துக்களுக்கு ஏற்ப இருக்காது. அகம்பாவத்தால் சிந்தை தடுமாறி இடறி விழுகின்றனர் விசுவாச துரோகிகள். கிறிஸ்துவின் மனப்பான்மையை அவர்கள் வளர்த்திருந்தால், சந்தோஷத்தை இழக்காமல் தொடர்ந்து யெகோவாவின் ஜனங்களோடு இருந்திருக்கலாம்.—பிலிப்பியர் 2:5-8.
11. காத்திருக்கும் சமயத்தை நாம் எவ்வாறு பயனுள்ள விதத்தில் பயன்படுத்தலாம், இதில் யார் யாருடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
11 காத்திருப்பது என்பது சோம்பேறித்தனமாக அல்லது வெட்டியாக பொழுதுபோக்குவதைக் குறிக்காது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன. உதாரணமாக, தனிப்பட்ட விதத்தில் பைபிள் படிப்பது அவசியம்; இதன் மூலம் ஆவிக்குரிய காரியங்களுக்கு உண்மையுள்ள தீர்க்கதரிசிகளும் ஏன், தேவதூதர்களும் காட்டிய அதே ஆர்வத்தை நாமும் காட்டுவோம். இத்தகைய ஆர்வத்தைக் குறித்து பேதுரு சொல்கிறதாவது: “தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்; . . . இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.” (1 பேதுரு 1:10-12) தனிப்பட்ட படிப்பு மட்டுமல்ல, தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வதும், ஜெபிப்பதும்கூட முக்கியம். (யாக்கோபு 4:8) தவறாமல் ஆவிக்குரிய உணவை உட்கொண்டு, உடன் கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவுகொள்வதன் மூலம் ஆவிக்குரிய தேவைகளுக்குக் கவனம் செலுத்தலாம்; இப்படி செய்பவர்கள் கிறிஸ்துவின் மனப்பான்மை தங்களில் இருப்பதை செயலில் காட்டுகின்றனர்.—மத்தேயு 5:3, NW.
எதார்த்தமான நோக்குநிலை வேண்டும்
12. (அ) எந்த விதமான சுதந்திரத்தை ஆதாமும் ஏவாளும் விரும்பினர்? (ஆ) ஆதாம் ஏவாளை மனிதகுலம் பின்பற்றியதால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது?
12 முதல் தம்பதியினரைக் கடவுள் படைத்தபோது, எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்கும் உரிமையை அவர் தம்மிடமே வைத்துக் கொண்டார். (ஆதியாகமம் 2:16, 17) ஆனால் ஆதாமும் ஏவாளும், கடவுளின் வழிநடத்துதல் இல்லாமல் சுதந்திரமாக வாழ விரும்பினர். அதன் பலன்தான் இன்று நாம் எங்கும் காணும் மோசமான உலக நிலைமை. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) ஆதாமின் காலம் முதற்கொண்டு ஆறாயிரம் வருடங்கள் ஓடிவிட்டன. இவ்வருடங்களின் சரித்திரம், எரேமியாவின் இந்த வார்த்தைகள் எந்தளவு உண்மை என்பதை நிரூபித்திருக்கின்றன: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லையென்றும் தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லையென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23, தி.மொ.) எரேமியாவின் வார்த்தைகளை உண்மை என்று ஒப்புக்கொள்வதால் நாம் எப்போதும் தோல்வியைத் தழுவுகிறவர்கள் என நம்மைக் குறித்து நினைக்க வேண்டியதில்லை.அவை எதார்த்தமான வார்த்தைகளே. மனிதன் கடவுள்மீது சார்ந்திராமல், தன் விருப்பப்படி ஆட்சி செய்ததன் காரணமாக ‘தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்ட’ சரித்திரத்தைத்தான் இது விளக்குகிறது.—பிரசங்கி 8:9.
13. மனிதர்கள் சாதிக்க முடிந்தவற்றைக் குறித்ததில் என்ன சரியான நோக்குநிலை யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கிறது?
13 மனிதகுலத்தின் நிலைமையைக் காண்கையில், இன்றைய உலகில் சாதிக்க முடிந்தவற்றில் வரம்புகள் இருப்பதை யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கின்றனர். நம்பிக்கையான மனநிலை சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள நமக்கு உதவும், ஆனால் அதுவே எல்லாவற்றிற்கும் பரிகாரம் அல்ல. 1950-ன் ஆரம்ப காலத்தில், அமெரிக்க பாதிரி ஒருவர் நம்பிக்கையான சிந்தனையின் பலம் என்ற ஆங்கில புத்தகத்தைப் பிரசுரித்தார். விற்பனையில் முதலிடம் வகித்த அந்த புத்தகம், பெரும்பாலான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு நம்பிக்கையான மனப்பான்மை இருந்தால் போதுமானது என்பதாக தெரிவித்தது. நம்பிக்கை மனப்பான்மையுடன் இருப்பது உண்மையிலேயே விரும்பத்தக்க குணம். ஆனால், தனிப்பட்ட முறையில் அறிவு, திறமை, பொருளாதார வளங்கள் போன்ற அநேக விஷயங்களில் குறைவுபடுவதால் நாம் அதிகத்தை சாதிக்க முடிவதில்லை என்பதை அனுபவத்தில் கண்டறிந்திருக்கிறோம். மேலும், உலகளாவிய பிரச்சினைகளைப் பொறுத்ததில் மனிதர்களுக்கு எந்தளவு நம்பிக்கையான மனப்பான்மை இருந்தாலும், அவற்றை வெற்றிகரமாய்த் தீர்க்க அவர்களால் முடியவே முடியாது!
14. யெகோவாவின் சாட்சிகள் நம்பிக்கையற்றவர்களா? விளக்குங்கள்.
14 இதை அறிந்தவர்களாக யெகோவாவின் சாட்சிகள் சரியான நோக்குநிலையுடன் செயல்படுகின்றனர்; இதனால்தான் சிலசமயங்களில் இவர்கள் நம்பிக்கையற்றவர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர். ஆனால், மனிதகுலத்தின் நிலைமைகளை ஒரே ஒருவரால் மட்டுமே நிரந்தரமாக சரிசெய்ய முடியும்; அவரைப் பற்றி ஜனங்களிடம் பேச அவர்கள் ஆவலாயிருக்கின்றனர். இதிலும் அவர்கள், கிறிஸ்துவின் மனப்பான்மையை வெளிக்காட்டுகின்றனர். (ரோமர் 15:2) மேலும், கடவுளுடன் நல்ல உறவை அனுபவிப்பதற்கு ஜனங்களுக்கு உதவுவதில் அவர்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர். முடிவில் இது பெருமளவு நன்மைசெய்யும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—மத்தேயு 28:19, 20; 1 தீமோத்தேயு 4:16.
15. யெகோவாவின் சாட்சிகளின் ஊழியம் எவ்வாறு தனிப்பட்டவர்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது?
15 யெகோவாவின் சாட்சிகள் சமூக பிரச்சினைகளையும் புறக்கணிப்பதில்லை. முக்கியமாக வேதவசனங்கள் தடைசெய்யும் அசுத்த பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட உதவுகின்றனர். ஒருவர் யெகோவாவின் சாட்சி ஆவதற்கு முன்பு கடவுளுக்குப் பிரியமில்லாத கெட்ட பழக்கங்களை விட்டொழித்து பல மாற்றங்களை செய்ய வேண்டும். (1 கொரிந்தியர் 6:9-11) ஆகவே குடிவெறி, போதைப்பொருள் அடிமைத்தனம், பாலுறவு ஒழுக்கக்கேடு, சூதாட்டம் ஆகியவற்றை விட்டொழிக்க மற்றவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவியிருக்கின்றனர். அப்படி திருந்தியவர்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு பொறுப்பாகவும், நேர்மையாகவும் சம்பாதிக்க கற்றுக்கொண்டிருக்கின்றனர். (1 தீமோத்தேயு 5:8) தனிப்பட்டவர்களும் குடும்பங்களும் இப்படிப்பட்ட உதவியைப் பெறுகையில், குடும்ப வன்முறையும் போதைப்பொருள் அடிமைத்தனமும் இன்னும் பல சமூக பிரச்சினைகளும் குறைகின்றன. இவ்வாறு யெகோவாவின் சாட்சிகள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, நல்ல வாழ்க்கை வாழ மற்றவர்களுக்கும் உதவிசெய்து, சமூக நல அமைப்புகளின் சுமையைக் குறைத்திருக்கின்றனர்.
16. யெகோவாவின் சாட்சிகள் ஏன் எந்த சீர்திருத்த இயக்கங்களிலும் ஈடுபடுவதில்லை?
16 அப்படியென்றால், உலகின் ஒழுக்க சூழ்நிலையை யெகோவாவின் சாட்சிகள் மாற்றிவிட்டனரா? கடந்த பத்தாண்டுகளில், 38,00,000-க்குச் சற்று குறைவாக இருந்த சாட்சிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 60,00,000 ஆக உயர்ந்திருக்கிறது. புதிதாக சேர்ந்த ஏறக்குறைய 22,00,000 பேரில் பலர், மோசமான பழக்கவழக்கங்களை விட்டொழித்து வந்தவர்கள். எத்தனை பேருடைய வாழ்க்கையில் முன்னேற்றம்! இருப்பினும், அதே காலப் பகுதியில் அதிகரித்த உலக ஜனத்தொகை எண்ணிக்கை 87,50,00,000; இந்த எண்ணிக்கையுடன் புதிய சாட்சிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது மிகக் குறைவே! ஒருசிலரே ஜீவனுக்குப்போகும் வழியில் செல்வர் என்பதை யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிற போதிலும் செவிசாய்ப்போருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். (மத்தேயு 7:13, 14) சாட்சிகள் எந்த சீர்திருத்த இயக்கங்களிலும் ஈடுபடுவதில்லை; இவை பெரும்பாலும் நல்லெண்ணத்துடன் தொடங்கப்பட்டாலும் இறுதியில் ஏமாற்றத்திலும், ஏன், வன்முறையிலும்தான் போய் முடிவடைகின்றன. எனவே கடவுள் மாத்திரமே நல்ல நிலைமையை பூமியில் ஏற்படுத்த முடியும் என்பதை அறிந்து சாட்சிகள் அதற்காக காத்திருக்கின்றனர்.—2 பேதுரு 3:13.
17. தம்மைச் சுற்றியிருந்தவர்களுக்கு உதவ இயேசு என்ன செய்தார், ஆனால் அவர் என்ன செய்யவில்லை?
17 இவ்வாறு, இயேசு பூமியில் இருந்தபோது யெகோவாவின்மீது காட்டிய அதே திடநம்பிக்கையை சாட்சிகளும் காட்டுகின்றனர். முதல் நூற்றாண்டில் இயேசு அற்புதங்கள் செய்து மக்களை குணப்படுத்தினார். (லூக்கா 6:17-19) இறந்தவர்களையும் உயிரோடே எழுப்பினார். (லூக்கா 7:11-15; 8:49-56) ஆனால், அவர் வியாதியை முற்றிலும் நீக்கிவிடவில்லை, சத்துருவாகிய மரணத்தையும் வெல்லவில்லை. ஏனெனில் அவற்றை செய்வதற்கு கடவுள் குறித்திருந்த காலம் இன்னும் வரவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். பரிபூரணருக்குரிய மேம்பட்ட திறமைகள் இயேசுவுக்கு இருந்தன; அவர் நினைத்திருந்தால் அரசியலிலும் சமுதாயத்திலும் நிலவியிருந்த பெரும் பிரச்சினைகளை சரிசெய்திருக்கலாம். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர், அவ்வாறு அவர் அதிகாரப் பொறுப்பேற்று செயல்பட வேண்டுமென விரும்பியதாக தோன்றுகிறது; ஆனால் இயேசு மறுத்துவிட்டார். “இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்” என்று நாம் வாசிக்கிறோம்.—யோவான் 6:14, 15.
18. (அ) இயேசு எவ்வாறு காத்திருக்கும் மனப்பான்மையை எப்போதும் காட்டியிருக்கிறார்? (ஆ) 1914 முதற்கொண்டு இயேசு செயல்படும் விதம் எவ்வாறு மாறியிருக்கிறது?
18 அரசியலிலோ சமூக சேவையிலோ ஈடுபட இயேசு மறுத்துவிட்டார்; ஏனெனில், அரசதிகாரத்தை ஏற்கவும் யாவரையும் சுகப்படுத்தவும் தமக்குரிய காலம் இன்னும் வரவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். சாவாமையுடைய ஆவி ஆளாக பரலோகங்களில் வாழ்வதற்கு சென்ற பின்பும், நடவடிக்கை எடுப்பதற்கு யெகோவா குறித்திருந்த காலம் வரை காத்திருக்க அவர் மனமுள்ளவராகவும் இருந்தார். (சங்கீதம் 110:1; அப்போஸ்தலர் 2:34, 35) எனினும், 1914-ல் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக அவர் ஆனதிலிருந்து, ‘வெற்றி பெறுகிறவராக, முற்றிலும் வெற்றி சிறக்க’ முன்னேறுகிறார். (வெளிப்படுத்துதல் 6:2, NW; 12:10) ராஜ்யத்தைப் பற்றிய பைபிள் போதனையை அறிய விரும்பாத பெயர் கிறிஸ்தவர்களோடு ஒப்பிட, அவருடைய அரசாட்சிக்கு கீழ்ப்பட்டிருப்பதில் நாம் எவ்வளவு சந்தோஷம் காண்கிறோம்!
காத்திருத்தல்—கவலைக்குரியதா மகிழ்ச்சிக்குரியதா?
19. காத்திருத்தல் எப்போது ‘இருதயத்தை இளைக்கப்பண்ணும்,’ எப்போது அது சுகம் தரும்?
19 காத்திருத்தல் கவலை தரும் என்பதை சாலொமோன் அறிந்திருந்தார். “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்” என எழுதினார். (நீதிமொழிகள் 13:12) ஒருவர் ஆதாரமில்லாமல் மனக்கோட்டை கட்டினால் எதிர்பார்ப்பது நிறைவேறாதபோது ஏமாற்றத்தில் நிச்சயமாகவே மனச்சோர்வடையலாம். எனினும், திருமணம், குழந்தை பிறப்பு அல்லது நேசத்திற்குரியவரை மீண்டும் சந்தித்தல் போன்ற சந்தோஷமான சம்பவங்களுக்காக காத்திருக்கலாம்; அந்த எதிர்பார்ப்பே இப்போது நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தலாம். வரவிருக்கும் அந்த நாளுக்காக எல்லாவற்றையும் ஆசை ஆசையாக இப்போதே செய்கையில் காத்திருப்பதிலும் அதிக சுகமுண்டு.
20. (அ) அதிசயமான என்ன சம்பவங்களை நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்? (ஆ) யெகோவாவின் நோக்கங்கள் நிறைவேற காத்திருக்கையில், நாம் எவ்வாறு சந்தோஷத்தைப் பெறலாம்?
20 நம்முடைய எதிர்பார்ப்புகள் எப்போது நிறைவேறும் என்பது தெரியாதபோதிலும் அவை நிச்சம் நிறைவேறும் என்ற முழு நம்பிக்கை காத்திருக்கும் காலத்தில் நம்முடைய ‘இருதயத்தை இளைக்கப்பண்ணாது.’ சீக்கிரத்தில் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி வரவிருப்பது கடவுளுடைய உண்மை வணக்கத்தாருக்குத் தெரியும். மரணமும் நோயும் ஒழிந்துபோவதைக் காண நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மரணமடைந்த தங்கள் அன்பானவர்களும் லட்சக்கணக்கான மற்றவர்களும் உயிரடைகையில் அவர்களை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 20:1-3, 6; 21:3, 4) சுற்றுச்சூழல் வெகுவாய் பாதிக்கப்படும் இந்தக் காலத்திலும் பூமியில் பரதீஸ் மீண்டும் ஸ்தாபிக்கப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. (ஏசாயா 351, 2, 7) அப்படியானால், காத்திருக்கும் காலத்தை ‘கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாக இருப்பதற்கு’ நன்கு பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமான காரியம் அல்லவா! (1 கொரிந்தியர் 15:58) ஆவிக்குரிய உணவை தவறாமல் உட்கொள்ளுங்கள். யெகோவாவிடம் அன்னியோன்யமான உறவை வளர்த்து வாருங்கள். யெகோவாவைச் சேவிக்க விரும்பும் ஆட்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். சகவிசுவாசிகளை ஊக்குவியுங்கள். யெகோவா இன்னும் காலத்தை அனுமதிக்கும் வரை அதை முழுமையாக பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது, யெகோவாவுக்காகக் காத்திருப்பது, ஒருபோதும் ‘இருதயத்தை இளைக்கப்பண்ணாது.’ மாறாக, அது உங்கள் இதயத்தை சந்தோஷத்தால் நிரப்பும்!
உங்களால் விளக்க முடியுமா?
• காத்திருக்கும் மனப்பான்மையை இயேசு எவ்வாறு காட்டினார்?
• என்ன சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவர்களுக்குக் காத்திருக்கும் மனப்பான்மை தேவை?
• யெகோவாவின் சாட்சிகள் ஏன் யெகோவாவின் நடவடிக்கைக்காக காத்திருக்க விரும்புகின்றனர்?
• யெகோவா நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் இக்காலத்தில் எவ்வாறு நாம் சந்தோஷமாய் இருக்கலாம்?
[பக்கம் 12-ன் படங்கள்]
தமக்கு முன் வைக்கப்பட்ட சந்தோஷம் சகலத்தையும் சகிக்க இயேசுவுக்கு உதவியது
[பக்கம் 13-ன் படம்]
பல ஆண்டு கால சேவைக்குப் பின்பும் நாம் சந்தோஷத்தை காத்துக்கொள்ளலாம்
[பக்கம் 15-ன் படங்கள்]
லட்சக்கணக்கானோர் யெகோவாவின் சாட்சிகளாகி வாழ்க்கையை சீரமைத்திருக்கின்றனர்