இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
கிறிஸ்துவின் ராஜ்ய மகிமைக்கு ஒரு முன் காட்சி
இயேசு பிலிப்புச் செசரியாவுக்குச் செல்லும் வழியில் நின்று, தம்முடைய அப்போஸ்தலருடன்கூட ஒரு மக்கள் கூட்டத்திற்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு இந்த ஆச்சரியமூட்டும் அறிவிப்பைச் செய்கிறார்: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
‘இயேசு எதை அர்த்தப்படுத்தக்கூடும்?’ என்று சீஷர்கள் யோசிக்க வேண்டும். ஏறக்குறைய ஒரு வாரம் கழிந்து, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களை இயேசு தம்முடன் அழைத்துச்செல்கிறார். அவர்கள் ஓர் உயர்ந்த மலையில் ஏறுகிறார்கள். அநேகமாக இரவு வேளையாக இருந்திருக்கக்கூடும், ஏனென்றால் சீஷர்கள் தூக்கமயக்கத்தில் இருக்கிறார்கள். இயேசு ஜெபித்துக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு முன்பாக அவர் மறுரூபமாகிறார். அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசிக்கிறது, அவருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாகிறது.
பின்பு, இரண்டு உருவங்கள், “மோசேயும் எலியாவும்” என்று அடையாளங்காணப்பட்ட உருவங்கள், ‘எருசலேமில் சம்பவிக்கப்போகிற இயேசுவின் பிரிவைக்’ குறித்து அவரிடம் பேச ஆரம்பிக்கின்றன. அந்தப் பிரிவு தெளிவாகவே இயேசுவின் மரணத்தையும் அதைத் தொடரும் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. இப்படியாக, அவரைத் தாழ்த்திடும் வகையில் அமையும் மரணம், பேதுரு விரும்பியது போன்று தவிர்க்கக்கூடிய ஒன்று அல்ல என்பதை இந்தச் சம்பாஷணை நிரூபிக்கிறது.
முழுமையாக விழித்த நிலையில், அந்தச் சீஷர்கள் ஆச்சரியத்தோடு பார்க்கவும் கவனிக்கவும் செய்கிறார்கள். இது ஒரு தரிசனமாக இருப்பினும், பேதுரு “நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக மூன்று கூடாரங்களைப் போடுவோம்,” என்று சொல்லி காட்சியில் கலந்துகொள்ளும் அளவுக்கு அது மெய்யானதாய்த் தோன்றுகிறது.
பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு கரிய மேகம் அவர்களை மூடிக்கொள்கிறது, மேகத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகிறது: “இவர் நான் அங்கீகரித்திருக்கும் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்.” (NW) சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுகிறார்கள். ஆனால் இயேசு, “எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள்,” என்கிறார். அப்படிச் செய்யும் போது, அவர்கள் இயேசுவைத் தவிர வேறொருவரையும் பார்க்கவில்லை.
மறு நாள், மலையிலிருந்து இறங்கி வருகையில், “மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம்,” என்று இயேசு கட்டளையிடுகிறார். இந்தத் தரிசனத்தில் எலியா காணப்படுவது சீஷர்களின் மனதில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. “எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி? என்று கேட்கிறார்கள்.”
“எலியா வந்தாயிற்று,” என்கிறார் இயேசு, “அவனை அறிந்துகொள்ளவில்லை.” என்றபோதிலும் எலியாவுக்கு ஒப்பான ஒரு பாகத்தை நிறைவேற்றிய முழுக்காட்டுபவனாகிய யோவானைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருக்கிறார். எலியா எலிசாவுக்குச் செய்ததுபோல, யோவான் கிறிஸ்துவின் வருகைக்காக வழியை ஆயத்தப்படுத்தினான்.
இந்தத் தரிசனம் இயேசுவுக்கும் அந்தச் சீஷர்களுக்கும் எவ்வளவு பலப்படுத்துகிறதாய் இருக்கிறது! இந்தத் தரிசனம், கிறிஸ்துவின் ராஜ்ய மகிமையின் ஒரு முன் காட்சியாக இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு வாக்களித்ததுபோலவே, “மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவது” போன்றதை சீஷர்கள் கண்டார்கள். இயேசுவின் மரணத்துக்குப் பின்னர், பேதுரு, ‘அவரோடேகூட தாங்கள் பரிசுத்த பர்வதத்திலிருக்கையில் அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டது’ குறித்து எழுதினான்.
இயேசு கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ராஜா என்று வேத எழுத்துக்களில் வாக்களிக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்க பரிசேயர் அவரிடம் ஓர் அடையாளம் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு அவ்விதமான எந்த ஓர் அடையாளமும் கொடுக்கப்படவில்லை. மறுபட்சத்தில், ராஜ்ய தீர்க்கதரிசனங்களை உறுதிப்படுத்தும் வகையில் இயேசு மறுரூபமாகுதலைக் காண அவருடைய மிக நெருங்கிய சீஷர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படியாக, பேதுரு பின்வருமாறு எழுதினான்: “இப்படியாக அதிக உறுதியாக்கப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வசனத்தைக் கொண்டிருக்கிறோம்.” மத்தேயு 16:28–17:13; மாற்கு 9:1–13; லூக்கா 9:27–37; 2 பேதுரு 1:16–19.
◆ தாங்கள் மரிப்பதற்கு முன்னால் கிறிஸ்து அவருடைய ராஜ்யத்தில் வருவதைச் சிலர் எவ்விதம் பார்த்தார்கள்?
◆ தரிசனத்தில் மோசேயும் எலியாவும் எதைப் பற்றி இயேசுவிடம் பேசினார்கள்?
◆ இந்தத் தரிசனம் ஏன் சீஷர்களுக்கு அவ்வளவாய்ப் பலப்படுத்த உதவும் ஒன்றாய் இருந்தது? (w88 1/1)