கடவுள்மீது அன்புகூருவது என்பதன் அர்த்தம் என்ன?
சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன், முதல் மனிதக்குழந்தைப் பிறந்தது. அவன் பிறந்தப்பின், அவனது அம்மா, ஏவாள் கூறியதாவது: “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்.” (ஆதியாகமம் 4:1) ஏவாளுக்கும் அவளது கணவனாகிய ஆதாமுக்கும், அவர்களுடைய கலகத்தனத்திற்காக ஏற்கெனவே மரணத்திற்குத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தபோதிலும், யெகோவாவினுடைய தேவத்துவத்தை இன்னும் அறிந்தவர்களாக இருந்தார்கள் என்பதை அவளது கூற்று வெளிப்படுத்துகிறது. பிற்பாடு அவர்கள் இரண்டாவது மகனைப் பிறப்பித்தார்கள். பையன்கள் காயீன் என்றும் ஆபேல் என்றும் பெயரிடப்பட்டனர்.
மகன்கள்வளருகையில்,சந்தேகத்திற்கிடமின்றி,யெகோவாவினுடைய சிருஷ்டிப்பை வெறுமனே கூர்ந்தாராய்வதன் மூலம் அவரது அன்பைப்பற்றி அதிகத்தைக் கற்றார்கள். இயற்கையின் அழகான வண்ணங்களையும் விதவிதமான மிருகங்களையும் செடிகளையும் கண்டுகளித்தனர். கடவுள் அவர்களுக்கு உயிரை மாத்திரம் தரவில்லை, ஆனால் உயிர்வாழ்வதில் இன்பத்தைக் கண்டடையக்கூடிய திறமையையும் தந்தார்.
அவர்களுடைய பெற்றோர் பரிபூரணமாக படைக்கப்பட்டனர் என்பதையும், மனிதர்கள் என்றென்றும் வாழவேண்டும் என்பதே யெகோவாவின் ஆதி நோக்கம் என்பதையும் அவர்கள் கற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அந்த அழகிய ஏதேன் தோட்டத்தைப்பற்றி ஆதாமும் ஏவாளும் விவரித்தார்கள்; அத்தகைய ஒரு பரதீஸான வீட்டிலிருந்து ஏன் அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதை எப்படியோ ஒருவழியாக விளக்கியிருக்கலாம். ஆதியாகமம் 3:15-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தெய்வீக தீர்க்கதரிசனத்தைக் குறித்து காயீனும் ஆபேலும்கூட அறிந்திருந்திருக்கலாம். அவரில் அன்புகூரும், அவர்பால் உண்மைப்பற்றுறுதியை நிரூபிக்கும் ஆட்களின் நன்மைக்காக ஏற்றக்காலத்திலே காரியங்களைச் சீராக்கவிருக்கும் தமது நோக்கத்தை அந்தத் தீர்க்கதரிசனத்தின் மூலம் யெகோவா தெரிவித்தார்.
யெகோவாவைப்பற்றியும் அவரது குணங்களைப்பற்றியும் கற்பதானது காயீனுக்குள்ளும் ஆபேலுக்குள்ளும் கடவுளின் தயவுக்கான ஆவலைத் தோற்றுவித்திருக்கவேண்டும். ஆகவே, யெகோவாவுக்குக் காணிக்கைகளை அளிப்பதன் மூலம் அவர்கள் அவரை அணுகினார்கள். பைபிள் பதிவு சொல்வதாவது: “சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான்.”—ஆதியாகமம் 4:3, 4.
கடவுளின் தயவுக்கான அவர்களுடைய ஆவல், அவருடன் ஓர் உறவுக்கான அஸ்திபாரத்தை அமைத்தது. கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்பவனாக தன்னைக் கொண்டுபோய் நிறுத்தினான் காயீன், ஆபேலோவென்றால் கடவுள் பேரிலான களங்கமற்ற அன்பால் தொடர்ந்து உந்துவிக்கப்பட்டார். முதலாவதாக, யெகோவாவினுடைய ஆளுமையையும் நோக்கங்களையும் பற்றிய அறிவை ஆபேல் பெற்றிராவிடின், கடவுளுடன் அத்தகைய ஓர் உறவை ஒருபோதும் வளர்த்திருக்க முடியாது.
நீங்களும்கூட யெகோவாவை அறிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, கடவுள் உண்மையிலேயே ஓர் ஆள் என்றும், வெறுமனே தற்செயலாகப் பொருட்களைப் படைத்துக்கொண்டே போகும் உயிரற்ற ஒரு சக்தி அல்ல என்றும் பைபிளிலிருந்து நீங்கள் கற்கமுடியும். (ஒப்பிடுக: யோவான் 7:28; எபிரெயர் 9:24; வெளிப்படுத்துதல் 4:11.) யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்றும் பைபிள் போதிக்கிறது.—யாத்திராகமம் 34:6.
“பலியினும் உத்தமம் கீழ்ப்படிதலே”
காயீனுடைய மற்றும் ஆபேலினுடைய விவரப்பதிவு எடுத்துக்காட்டிய பிரகாரம் கடவுளைப்பற்றிய அறிவையும், அவருடன் ஒரு நெருக்கமான உறவை வைத்திருப்பதற்கான ஆவலையும் மாத்திரம் கொண்டிருந்தால் போதாது. உண்மைதான், இரு சகோதரர்களும் காணிக்கைகளோடு கடவுளை அணுகினார்கள். இருப்பினும், “ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, முகநாடி வேறுபட்டது.”—ஆதியாகமம் 4:3-5.
காயீனுடைய காணிக்கையை யெகோவா ஏன் நிராகரித்தார்? அவன் அளித்த காணிக்கையின் தரத்தில் ஏதேனும் குறைபாடு இருந்ததா? ஒரு மிருக காணிக்கைக்கு மாறாக “நிலத்தின் கனிகளை” காயீன் அளித்ததன் காரணமாக யெகோவா புண்படுத்தப்பட்டாரா? அதுவொன்றும் காரணமாக இருந்திருக்காது. பிற்பாடு கடவுள், தமது வணக்கத்தார் பலரிடமிருந்து தானியத்தையும் நிலத்தின் மற்ற கனிகளையும் காணிக்கைகளாக சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். (லேவியராகமம் 2:1-16) அப்படியென்றால், இருக்கின்ற ஆதாரங்களின்படி பார்த்தால், காயீனுடைய இருதயத்தின் எண்ணம்தான் திருப்திகரமாக இல்லை. யெகோவாவால் காயீனுடைய இருதயத்தை அறிய முடிந்ததால், அவனை எச்சரித்தார்: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும்.”—ஆதியாகமம் 4:6, 7.
கடவுள்மீதான களங்கமற்ற அன்பு என்பது வெறுமனே பலிகளைச் செலுத்துவதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. அதனால்தான் காயீனை ‘நன்மை செய்யும்படி’ யெகோவா உற்சாகப்படுத்தினார். கடவுள் கீழ்ப்படிதலை விரும்பினார். கடவுளுக்குக் கீழ்ப்படியும் அத்தகையக் கீழ்ப்படிதல் சிருஷ்டிகருடன் அன்பான ஓர் உறவுக்கான நல்ல அஸ்திபாரத்தை அமைத்திட காயீனுக்கு உதவியிருக்கும். கீழ்ப்படிதலின் மதிப்பை பின்வரும் வார்த்தைகளால் பைபிள் வலியுறுத்துகிறது: “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.”—1 சாமுவேல் 15:22.
கீழ்ப்படிதலின் முக்கியத்துவம் 1 யோவான் 5:3-லுள்ள வார்த்தைகளால் பிற்பாடு நன்கு நிலைநாட்டப்பட்டது: “நாம் தேவனுடைய கற்பனைகளைக்கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” யெகோவாவின்மீது நமக்கிருக்கும் அன்பைக் காட்டுவதற்கு இருக்கும் சிறந்த வழி அவருடைய அதிகாரத்திற்கு நம்மை கீழ்ப்படுத்துவதைக் காட்டிலும் வேறில்லை. இதன் அர்த்தம் பைபிளின் ஒழுக்க நெறிகளுக்குக் கீழ்ப்படிவதாகும். (1 கொரிந்தியர் 6:9, 10) நன்மை எதுவோ அதனை விரும்புவதையும் தீமை எதுவோ அதனை வெறுப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.—சங்கீதம் 97:10; 101:3; நீதிமொழிகள் 8:13.
அயலகத்தார்மீது நமக்கிருக்கும் அன்பே கடவுள்மீது நமக்கிருக்கும் அன்பின் ஒரு முக்கிய வெளிப்பாடாக இருக்கிறது. பைபிள் நமக்குச் சொல்வதாவது: “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?”—1 யோவான் 4:20.
கடவுளுடன் நெருக்கமாய் இருப்பது சாத்தியமே
சிலர் சொல்லலாம், ‘நான் யெகோவாவை வழிபடுகிறேன். அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறேன். என்னுடைய உடன்மனிதர்களைப் பாரபட்சமின்றி நடத்துகிறேன். அவை அனைத்தையும் நான் செய்கிறேன். இருந்தும், கடவுளுடன் நெருங்கி இருப்பதாக உண்மையில் நான் உணருவதில்லை. அவர்மீது உறுதியான அன்பு வைத்திருப்பதாக நான் உணருவதில்லை, அது என்னைக் குற்றமுள்ளவனாக உணரச்செய்கிறது.’ யெகோவாவுடன் அத்தகைய ஒரு நெருக்கமான உறவை அடைவதற்குத் தாங்கள் தகுதியற்றவர்கள் என்பதாக சிலர் நினைக்கலாம்.
யெகோவாவுக்கு, ஒப்புக்கொடுக்கப்பட்ட சேவையைக் கிட்டத்தட்ட 37 வருடங்களுக்குச் செய்தபின், ஒரு கிறிஸ்தவர் எழுதியதாவது: “யெகோவாவுக்குரிய எனது சேவை ஒருவித கடமைக்காகச் செய்யப்பட்டதாக என் வாழ்க்கையில் பலமுறை நான் உணர்ந்தேன், ஒருவேளை என் இருதயத்தை அதில் ஈடுபடுத்தியிருக்கமாட்டேன்போல் தெரிகிறது. ஆனால், யெகோவாவை சேவிப்பது சரியான ஒரு செயல் என்பதை நான் அறிந்திருந்தேன், அதை நிறுத்திவிட என்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இருப்பினும், அவனின் அல்லது அவளின் ‘இருதயம் யெகோவாமீதுள்ள அன்பால் நிறைந்திருந்தது’ என்று எவராவது சொல்வதை நான் ஒவ்வொரு தடவையும் வாசிக்கும்போது, ‘நான் ஒருபோதும் அவ்வாறு உணர்ந்ததில்லையே, என்னிடத்தில் என்ன கோளாறு இருக்கிறது?’ என்று வியப்படைவேன்.” கடவுளுடன் நெருக்கத்தை நாம் எவ்வாறு கண்டடைய முடியும்?
நீங்கள் ஒருவரிடம் உண்மையில் அன்புகூர்ந்தால், அந்த நபரை அடிக்கடி நினைப்பீர்கள். அவர்மீது அக்கறை இருப்பதனால், அவருடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற தீவிரமான ஆசையை நீங்கள் கொண்டிருப்பீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அவரைப் பார்க்கிறீர்களோ, அவரிடம் பேசுகிறீர்களோ, அவரைப்பற்றி நினைக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்மீது உங்களுக்கிருக்கும் அன்பும் வளருகிறது. இதே நியமம்தான் கடவுளுடன் உங்கள் அன்பை வளர்ப்பதிலும் பொருந்துகிறது.
சங்கீதம் 77:12-ல் ஏவப்பட்ட எழுத்தாளர் கூறுகிறார்: “உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.” கடவுள்மீது அன்பை வளர்ப்பதில் தியானம் இன்றியமையாதது. அவர் புலப்படாதவர் என்பதைக் கருத்தில் கொள்கையில் விசேஷமாக இது உண்மையாக உள்ளது. ஆனால், எவ்வளவு அதிகம் அவரைப்பற்றி நீங்கள் நினைக்கிறீர்களோ அவ்வளவு அதிகம் உங்களுக்கு நிஜமான ஒருவராக அவரும் ஆவார். உங்களுக்கு நிஜமானவராக அவர் இருப்பதனால், தியானிப்பதன்மூலமே அவரோடு இருதயப்பூர்வமான மற்றும் நேசமான உறவை உங்களால் வளர்க்கமுடியும்.
யெகோவாவின் வழிகளையும், செயல்தொடர்புகளையும் அடிக்கடி தியானிப்பதற்கான உங்களின் மனச்சாய்வானது, எவ்வளவு அடிக்கடி அவருக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கும். அவருடைய வார்த்தையாகிய பைபிளை ஒழுங்காக வாசிப்பதன் மூலமும் படிப்பதன் மூலமும் நீங்கள் செவிகொடுப்பீர்கள். “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற” மனுஷனை சந்தோஷமுள்ளவன் என்று சங்கீதக்காரன் சொல்கிறார்.—சங்கீதம் 1:1, 2.
மற்றொரு முக்கிய கூறாக இருப்பது ஜெபம். அதன் காரணமாகத்தான் ஜெபிக்கும்படி—“எந்தச் சமயத்திலும்” ஜெபம்பண்ணுங்கள், ‘ஜெபத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்,’ “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்,” “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று—பைபிள் மறுபடியும் மறுபடியும் நம்மை அறிவுறுத்துகிறது. (எபேசியர் 6:18; 1 கொரிந்தியர் 7:5, NW; ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17) யெகோவாவிடம் நாம் செய்யும் இடைவிடாத ஜெபம், அவருக்கு நம்மை அருமையானவர்களாக்கும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்ற உறுதி அவர்பால் நம்மை நெருங்க சேர்க்கும். பின்வருமாறு அறிவித்தபோது, இது சங்கீதக்காரனால் உறுதிசெய்யப்பட்டது: “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.”—சங்கீதம் 116:1, 2.
அன்பின் கடவுளைப் பின்பற்றுதல்
யெகோவா நமக்கு நன்மை செய்கிறவராகவே இருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகராக அவர் இருப்பதனால், மனதில் சிந்திப்பதற்கும் பேணிக் காப்பதற்கும் பல காரியங்களை உண்மையில் உடையவராய் இருக்கிறார். இருப்பினும், அவர் அந்த அளவுக்கு மேன்மையுள்ளவராக இருக்கிறபோதிலும், தமது மனித சிருஷ்டிப்பைப் பேணிக் காக்கிறார் என்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது. அவர் நம்மில் அன்புகூருகிறார். (1 பேதுரு 5:6, 7) சங்கீதக்காரன் தன்னுடைய வார்த்தைகளால் இதை உறுதிசெய்கிறார்: “எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்”?—சங்கீதம் 8:1, 3, 4.
எவ்வாறு அழியக்கூடிய மனிதனை மனதில்கொள்கிறவராக யெகோவா இருந்தார்? பைபிள் பதிலளிக்கிறது: “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.”—1 யோவான் 4:9, 10.
எவ்வாறு கடவுளுடைய அன்பிற்கு இந்தக் கிருபாதாரபலி மிகப் பெரிய சான்றாக இருக்கிறது? ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்று நாம் சிந்தித்துப்பார்க்கலாம். பரிபூரண வாழ்க்கையை என்றென்றும் வாழ்வதற்கான வாய்ப்புடன் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதா அல்லது மரணத்தைப் பின்விளைவாகப் பெற்றிட, யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்வதா என்ற தீர்மானத்தை ஆதாமும் ஏவாளும் எதிர்ப்பட்டனர். கலகம் செய்ய அவர்கள் தெரிவு செய்தார்கள். (ஆதியாகமம் 3:1-6) அவர்கள் அவ்வாறு செய்ததினால், முழு மனிதவர்க்கத்தையும் மரணத்திற்கு ஆளாக்கினார்கள். (ரோமர் 5:12) நாமாகவே தீர்மானம் எடுக்கக்கூடிய வாய்ப்பை நம்மிடமிருந்து அவர்கள், அதிகப்பிரசங்கித்தனத்தோடு அபகரித்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் நமக்கு வாய்ப்பின்றி போனது.
இருப்பினும், அழியக்கூடிய மனிதனுடைய இக்கட்டான நிலையை உணர்ந்தவராய், யெகோவா அவனை அன்பாக தன் நினைவில் வைத்தார். யெகோவா தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பலிக்குரிய மரணத்தின் மூலம், ஜீவனா மரணமா, கீழ்ப்படிதலா கலகத்தனமா என்று சுயமாகத் தெரிவுசெய்ய நம் ஒவ்வொருவருக்கும் சட்டப்பூர்வமான அடிப்படைகளை வழங்கியுள்ளார். (யோவான் 3:16) நாம் செய்யும் தெரிவின்படி தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பை யெகோவா அளித்திருப்பதைப்போல் இருக்கிறது, அடையாள அர்த்தத்தில் சொல்வோமானால், பழையபடி ஏதேனுக்குச் சென்று, நமது சொந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதைப்போல் இருக்கிறது. இதுவரை காட்டிய அன்பின் வெளிக்காட்டில், இதுதான் மிகப் பெரிய வெளிக்காட்டாக இருக்கிறது.
தமது முதற்பேறான குமாரன், அவமதிக்கப்படுவதை, இம்சிக்கப்படுவதை, ஒரு குற்றவாளியைப்போல் கழுமரத்தில் ஏற்றப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, யெகோவா சகித்திருந்த வேதனையைக் கற்பனைசெய்து பாருங்கள். கடவுள் நமக்காக அதைச் சகித்தார். முதலாவதாக நம்மில் அன்புகூருவதற்காக யெகோவா எடுத்த முதற்படியை நாம் உணர்ந்திருத்தலானது, அவரில் அன்புகூர நம்மை தூண்டவேண்டும், அவரைத் தேட ஊக்குவிக்கவேண்டும். (யாக்கோபு 1:17; 1 யோவான் 4:19) பின்வருமாறு செய்ய பைபிள் நம்மை அழைக்கிறது, “யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் திருச்சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதச் செயல்களையும் அவர் வாயின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.”—சங்கீதம் 105:4, 6, தி.மொ.
கடவுளுடன் தனிப்பட்டவிதத்தில் ஒரு பிணைப்பையும், அன்பான உறவையும் வைத்திருப்பதும், அவருக்கு ஒரு நண்பனாக இருப்பதும் கூடாத காரியம் அல்ல. அது அடையக்கூடிய ஒன்றே. உண்மைதான், கடவுள்மீதுள்ள நம் அன்பை மனித உறவுகளுடன் சரிசமமாக்க முடியாது. நம் துணைவருக்கு, பெற்றோருக்கு, உடன்பிறந்தோருக்கு, பிள்ளைகளுக்கு அல்லது நண்பர்களுக்கு நாம் உணரும் அன்பு, கடவுள்மீது நமக்கிருக்கும் அன்பிலிருந்து வித்தியாசமானது. (மத்தேயு 10:37; 19:29) யெகோவாவிடம் அன்புகூருவதில், அவருக்கான நம் பக்தியும், வழிபாடும், நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தலும் உள்ளடங்கியிருக்கின்றன. (உபாகமம் 4:24, NW) மற்ற எந்த ஓர் உறவும் அத்தகைய காரியங்களை உட்படுத்துவதில்லை. இருப்பினும், யெகோவாவுக்காக பலமான, ஆழமான உணர்வுகளைப் பயபக்தியான விதத்திலும், பணிவோடுகூடிய அச்சத்தோடும் நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்.—சங்கீதம் 89:7.
காயீன், ஆபேல் போன்று நீங்கள் அபூரணராக இருந்தபோதிலும், உங்கள் சிருஷ்டிகரில் அன்புகூருவதற்கானத் திறனை உடையவராய் இருக்கிறீர்கள். காயீன் தன்னுடைய தெரிவை செய்தான், சாத்தானுடன் சேர்ந்துகொண்டான், முதல் மனித கொலைகாரனானான். (1 யோவான் 3:12) இதற்கு மாறாக, யெகோவாவால் விசுவாசமும் நீதியும் உள்ள ஒரு நபராக ஆபேல் நினைவுகூரப்படுவார், வரவிருக்கும் பரதீஸில் ஜீவனைப் பரிசாக பெறுவார்.—எபிரெயர் 11:4.
நீங்களும்கூட ஒரு தெரிவை கொண்டிருக்கிறீர்கள். கடவுளுடைய ஆவியின் மற்றும் அவருடைய வார்த்தையின் உதவியைக்கொண்டு, உங்களால் கடவுளிடத்தில் ‘உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், உங்கள் முழுப் பலத்தோடும்’ உண்மையில் அன்புகூர முடியும். (உபாகமம் 6:5) இதற்கு பதிலாக, யெகோவாவும் உங்கள்மீது தொடர்ந்து அன்புகூருவார், ஏனெனில் அவர் ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவராய் இருக்கிறார்.’—எபிரெயர் 11:6.
[பக்கம் 7-ன் படம்]
ஆபேலின் பலி கடவுள் ஏற்கத்தக்கதாய் இருந்தது