பிசாசுக்கு இடங்கொடுக்காதீர்கள்
‘பிசாசுக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்.’—எபேசியர் 4:27, பையிங்டன்.
1. பிசாசு இருப்பதை ஏன் பலர் சந்தேகிக்கிறார்கள்?
சிவப்பு உடையில், தலையில் கொம்புடன், பிளவுபட்ட பாதத்துடன், கையில் ஒரு கவையை வைத்துக்கொண்டு கெட்டவர்களை எரிநரகத்தில் தள்ளும் ஒரு ஜீவிதான் பிசாசு என கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த பலர் நூற்றாண்டுகளாக கற்பனை செய்துவந்திருக்கிறார்கள். இந்தக் கருத்துகளை பைபிள் ஆதரிப்பதில்லை. ஆனால், இந்தத் தவறான கருத்துகளால் பிசாசு இருப்பதையே கோடானுகோடி பேர் சந்தேகிக்கிறார்கள் அல்லது பிசாசு என்பது வெறும் ஒரு தீய சக்திதான் என்று நினைக்கிறார்கள்.
2. பிசாசைப் பற்றி பைபிள் சொல்லும் உண்மைகள் சில யாவை?
2 பிசாசு இருக்கிறான் என்பதற்கு கண்கண்ட அத்தாட்சியையும் தெளிவான சான்றையும் பைபிள் தருகிறது. இயேசு கிறிஸ்து அவனைப் பரலோகத்தில் பார்த்திருக்கிறார், பூமியில் வாழ்ந்த சமயத்தில் அவனுடன் பேசியிருக்கிறார். (யோபு 1:6; மத்தேயு 4:4-11) இந்த ஆவி சிருஷ்டியின் உண்மையான பெயரை பைபிள் வெளிப்படுத்தவில்லை என்றாலும், கடவுளைப் பழிதூற்றியதால் அவனை பிசாசு (மூல கிரேக்க மொழியில் “பழிதூற்றுபவன்” என்று அர்த்தம்) என்று அழைக்கிறது. யெகோவாவை எதிர்த்ததால் சாத்தான் (மூல கிரேக்க மொழியில் “எதிர்ப்பவன்” என்று அர்த்தம்) என்றும் அழைக்கிறது. ஏவாளை ஏமாற்ற பிசாசாகிய சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தியதால், “பழைய பாம்பு” என்றும் குறிப்பிடப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9; 1 தீமோத்தேயு 2:14) அதோடு, ‘பொல்லாங்கன்’ என்றும் அழைக்கப்படுகிறான்.—1 யோவான் 5:19.a
3. என்ன கேள்வியை நாம் சிந்திப்போம்?
3 யெகோவாவின் ஊழியர்களான நாம் எவ்விதத்திலும் சாத்தானைப் போலிருக்க விரும்ப மாட்டோம்; அவன் ஒன்றான மெய் தேவனுடைய பிரதான சத்துருவாயிற்றே. ஆகவே, ‘பிசாசுக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் கூறிய அறிவுரைக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். (எபேசியர் 4:27, பையிங்டன்) அப்படியானால், நாம் பின்பற்றவே கூடாத சாத்தானுடைய சில குணங்கள் யாவை?
பழிதூற்றுவதில் வல்லவனைப் பின்பற்றாதீர்கள்
4. கடவுளை ‘அந்தப் பொல்லாங்கன்’ எப்படி பழிதூற்றினான்?
4 அந்தப் ‘பொல்லாங்கனை’ பிசாசு என்று அழைப்பது தகுதியானதே, ஏனென்றால் அவன் பழிதூற்றுபவனாக இருக்கிறான். பழிதூற்றுவது என்பது ஒருவரைப் பற்றி பொய்யான ஒன்றை சொல்வதாகும், கெட்ட எண்ணத்துடன் அவதூறாக பேசுவதாகும். ஆதாமிடம் கடவுள் இவ்வாறு கட்டளையிட்டார்: “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:17) இதைப் பற்றி ஏவாளுக்கும் சொல்லப்பட்டது, ஆனால் ஒரு பாம்பின் மூலம் அவளிடம் பிசாசு இவ்வாறு கூறினான்: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” (ஆதியாகமம் 3:4, 5) யெகோவா தேவன்மீது எப்பேர்ப்பட்ட பயங்கர அவதூறு!
5. பழிதூற்றியதற்காக தியோத்திரேப்பு ஏன் கணக்குக் கொடுக்க வேண்டியவனாக இருந்தான்?
5 ‘உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லி [அதாவது, பழிதூற்றி] திரியாயாக’ என இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. (லேவியராகமம் 19:16) அப்போஸ்தலன் யோவான் தன்னுடைய நாளில் வாழ்ந்த பழிதூற்றுபவன் ஒருவனைப் பற்றி இவ்வாறு கூறினார்: “நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன்.” (3 யோவான் 9, 10) யோவானைப் பற்றி தியோத்திரேப்பு பழிதூற்றி வந்தான், அதனால் அதற்கு அவன் கணக்குக் கொடுக்க வேண்டியவனாக இருந்தான். அவனைப் போல, பழிதூற்றுவதில் வல்லவனான சாத்தானைப் பின்பற்ற உண்மை கிறிஸ்தவர் எவர்தான் விரும்புவார்?
6, 7. எவர்மீதும் பழிதூற்றுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?
6 பழிதூற்றும் வார்த்தைகளும் பொய்க் குற்றச்சாட்டுகளும் யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிராக அடிக்கடி அள்ளிவீசப்படுகின்றன. இயேசுவின் மீது ‘பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக் கொண்டே நின்றார்கள்.’ (லூக்கா 23:10) பவுல்மீதுகூட பிரதான ஆசாரியனான அனனியாவும் மற்றவர்களும் பொய்க் குற்றம் சாட்டினார்கள். (அப்போஸ்தலர் 24:1-8) மேலும், சாத்தானைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும் பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:10) இந்தக் கடைசி நாட்களில் பூமியில் வாழும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களே இவ்வாறு பொய்க் குற்றம் சாட்டப்படும் சகோதரர்கள்.
7 எந்தவொரு கிறிஸ்தவரும் எவர்மீதும் பழிதூற்றவோ பொய்க் குற்றம் சாட்டவோ கூடாது. என்றாலும், ஒருவருக்கு விரோதமாக சாட்சி சொல்வதற்கு முன்பு எல்லா உண்மைகளும் நமக்குத் தெரிந்திராவிட்டால் அப்படி நடக்கக்கூடும். மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி, வேண்டுமென்றே பொய் சாட்சி சொல்பவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருந்தது. (யாத்திராகமம் 20:16; உபாகமம் 19:15-19) அதோடு, “அபத்தம் பேசும் பொய்ச் சாட்சி”யும் யெகோவா அருவருக்கும் காரியங்களில் ஒன்று. (நீதிமொழிகள் 6:16-19) அப்படியானால், பிரதான பழிதூற்றுபவனும் பொய்க் குற்றம் சாட்டுகிறவனுமான பிசாசை கண்டிப்பாக நாம் பின்பற்றக் கூடாது.
ஆதி மனுஷ-கொலைபாதகனை பின்பற்றாதீர்கள்
8. எந்த விதத்தில் பிசாசு “ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்”?
8 பிசாசு “ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்” என்று இயேசு கூறினார். (யோவான் 8:44) ஆதாம் ஏவாளை கடவுளிடமிருந்து விலக்கிய முதல் செயலிலிருந்து சாத்தான் மனுஷ-கொலைபாதகனாக இருக்கிறான். முதல் மனித தம்பதியர் மீதும் அவர்களுடைய சந்ததியார் மீதும் அவன் மரணத்தைக் கொண்டுவந்தான். (ரோமர் 5:12) ஒரு நபர்தான் இப்படிப்பட்ட செயலை செய்ததாக சொல்ல முடியும், வெறும் ஒரு தீய சக்தி அப்படி செய்ததாக சொல்ல முடியாது என்பதைக் கவனியுங்கள்.
9. ஒன்று யோவான் 3:15-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, நாம் எப்படி மனுஷ கொலைபாதகராய் ஆகமுடியும்?
9 இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட பத்துக் கற்பனைகளில் ஒன்று, “கொலை செய்யாதிருப்பாயாக” என குறிப்பிடுகிறது. (உபாகமம் 5:17) ‘உங்களில் ஒருவனும் கொலைபாதகனாய் பாடுபடுகிறவனாயிருக்கக் கூடாது’ என்று கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 4:15) ஆகவே, யெகோவாவின் ஊழியர்களான நாம் யாரையும் கொலை செய்ய மாட்டோம். என்றாலும், சக கிறிஸ்தவர் ஒருவரை நாம் பகைத்தால், அவர் சாகும்படி விரும்பினால், கடவுளுக்கு முன்பு குற்றவாளிகளாக இருக்கிறோம். “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 3:15) “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக” என்று இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. (லேவியராகமம் 19:17) மனுஷ கொலைபாதகனாகிய சாத்தான் நம்முடைய கிறிஸ்தவ ஒற்றுமையைக் குலைக்காதபடிக்கு, நமக்கும் சக விசுவாசிக்கும் இடையே எழுகிற எந்தப் பிரச்சினையையும் உடனடியாக சரிசெய்துகொள்வோமாக.—லூக்கா 17:3, 4.
பிரதான பொய்யனை உறுதியுடன் எதிர்த்து நில்லுங்கள்
10, 11. பிரதான பொய்யனாகிய சாத்தானை உறுதியுடன் எதிர்த்து நிற்க நாம் என்ன செய்ய வேண்டும்?
10 பிசாசு ஒரு பொய்யன். “அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” என இயேசு கூறினார். (யோவான் 8:44) ஏவாளிடம் சாத்தான் பொய் சொன்னான், ஆனால் இயேசு சத்தியத்திற்கு சாட்சி கொடுக்க பூமிக்கு வந்தார். (யோவான் 18:37) கிறிஸ்துவின் சீஷர்களாக நாம் பிசாசை உறுதியுடன் எதிர்த்து நிற்க வேண்டுமாகில், பொய்யும் வஞ்சகமும் நம் வாயில் வரவே கூடாது. நாம் ‘உண்மையையே பேச’ வேண்டும். (சகரியா 8:16; எபேசியர் 4:25) ‘சத்தியபரராகிய யெகோவா தேவன்’ தமது உண்மையுள்ள சாட்சிகளையே ஆசீர்வதிக்கிறார். அவரைப் பிரதிநிதித்துவம் செய்ய பொல்லாதவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.—சங்கீதம் 31:5; 50:16; ஏசாயா 43:10.
11 சாத்தானிய பொய்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் ஆன்மீக சுதந்திரத்தை நாம் நெஞ்சார நேசித்தால், ‘சத்திய மார்க்கமான’ கிறிஸ்தவத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம். (2 பேதுரு 2:2; யோவான் 8:32) கிறிஸ்தவ போதனைகள் அனைத்தும் ‘நற்செய்தியின் சத்தியமாகும்.’ (கலாத்தியர் 2:5, 14, NW) நம்முடைய இரட்சிப்பு ‘சத்தியத்தில் நடப்பதன்’ மீதே, அதாவது சத்தியத்தைப் பின்பற்றி ‘பொய்க்குப் பிதாவை’ உறுதியாக எதிர்த்து நிற்பதன் மீதே, சார்ந்திருக்கிறது.—3 யோவான் 3, 4, 8.
பிரதான விசுவாசதுரோகியை எதிர்த்து நில்லுங்கள்
12, 13. விசுவாசதுரோகிகளை நாம் எப்படி நடத்த வேண்டும்?
12 பிசாசாக மாறிய இந்த ஆவி சிருஷ்டி ஒரு காலத்தில் சத்தியத்தில் இருந்தான். ஆனால் “அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை,” ஏனென்றால் ‘சத்தியம் அவனிடத்தில் இல்லை’ என இயேசு கூறினார். (யோவான் 8:44) இந்தப் பிரதான விசுவாசதுரோகி ‘சத்தியபரரான தேவனை’ தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறான். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலர் ‘பிசாசின் கண்ணியில்’ விழுந்தார்கள், தவறாக வழிநடத்தப்பட்டு சத்தியத்திலிருந்து வழிவிலகிப் போனதால் அவனுக்கு இரையானார்கள். ஆகவே, ஆன்மீக ரீதியில் அவர்களை குணப்படுத்தி சாத்தானுடைய கண்ணியிலிருந்து விடுதலை செய்ய அவர்களுக்கு சாந்தமாய் அறிவுரை கொடுக்கும்படி சக ஊழியரான தீமோத்தேயுவுக்கு பவுல் அறிவுறுத்தினார். (2 தீமோத்தேயு 2:23-26) ஆனால், ஆரம்பத்திலேயே சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு விசுவாசதுரோக கருத்துகள் எனும் கண்ணியில் விழுந்துவிடாமல் இருப்பதுதான் மிகவும் நல்லது.
13 பிசாசுக்குச் செவிகொடுத்ததாலும் அவன் சொன்ன பொய்களைப் புறக்கணிக்காததாலும் முதல் மானிட தம்பதியர் விசுவாசதுரோகிகளாக மாறினார்கள். அப்படியானால், விசுவாசதுரோகிகளுக்கு நாம் செவிசாய்க்கவோ அவர்களுடைய பிரசுரங்களை வாசிக்கவோ அவர்களுடைய இன்டர்நெட் வெப்சைட்களை ஆராய்ந்து பார்க்கவோ வேண்டுமா? கடவுளையும் சத்தியத்தையும் நேசித்தால், நாம் அப்படிச் செய்ய மாட்டோம். அதோடு, விசுவாசதுரோகிகளை நம் வீடுகளுக்குள் அனுமதிக்கவும், அவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லவும் மாட்டோம், ஏனென்றால் இப்படிப்பட்ட செயல்கள் ‘அவர்களுடைய துர்க்கிரியைகளுக்கு நம்மைப் பங்குள்ளவர்களாக்கும்.’ (2 யோவான் 9-11) கிறிஸ்தவத்தின் ‘சத்திய பாதையை’ விட்டுவிட்டு பொய் போதகர்களைப் பின்பற்றுவதன் மூலம் நாம் பிசாசின் தந்திரங்களுக்கு ஒருபோதும் இணங்கிவிடாதிருப்போமாக; அந்தப் போதகர்கள் ‘அழிவுக்குரிய கருத்துகளை அறிமுகப்படுத்தி,’ ‘புரட்டலான சொற்களால் நம்மை சுரண்டிப் பிழைக்க’ முயலுகிறார்கள்.—2 பேதுரு 2:1-3, பையிங்டன்.
14, 15. எபேசுவைச் சேர்ந்த மூப்பர்களுக்கும் சக ஊழியரான தீமோத்தேயுவுக்கும் பவுல் கொடுத்த எச்சரிக்கை என்ன?
14 எபேசுவைச் சேர்ந்த கிறிஸ்தவ மூப்பர்களுக்கு பவுல் இவ்வாறு கூறினார்: “உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே [“சொந்த குமாரனுடைய ரத்தத்தினாலே,” NW] சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 20:28-30) சொல்லியிருந்தபடியே காலப்போக்கில், இத்தகைய விசுவாசதுரோகிகள் எழும்பி, ‘மாறுபாடானவைகளைப் போதித்தார்கள்.’
15 சுமார் பொ.ச. 65-ல், ‘சத்திய வார்த்தையை சரியாக கையாளும்படி’ (NW) தீமோத்தேயுவுக்குப் பவுல் அறிவுறுத்தினார். ஆனால், ‘சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் அவர்கள் (கள்ளப்போதகர்கள்) அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப் போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் சத்தியத்தை விட்டுவிலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்’ என்று பவுல் எழுதினார். ஆம், விசுவாசதுரோகம் ஆரம்பித்திருந்தது! “ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது” என்றும் பவுல் எழுதினார்.—2 தீமோத்தேயு 2:15-19.
16. மிகப் பெரிய விசுவாசதுரோகியின் தந்திரங்கள் மத்தியிலும், கடவுளுக்கும் அவருடைய வார்த்தைக்கும் ஏன் உண்மைப் பற்றுறுதியை நாம் காண்பித்திருக்கிறோம்?
16 மெய் வணக்கத்தைக் கறைபடுத்த விசுவாசதுரோகத்தை சாத்தான் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறான்—ஆனால் அவனுடைய முயற்சி வெற்றிபெறவில்லை. 1868 வாக்கில், கிறிஸ்தவமண்டல சர்ச்கள் வெகு காலமாக ஏற்றுக்கொண்டு வந்திருந்த கோட்பாடுகளை சார்ல்ஸ் டேஸ் ரஸல் கவனமாக ஆராய ஆரம்பித்தார், அப்பொழுது வேதவசனங்கள் திரித்துக் கூறப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். அ.ஐ.மா., பென்ஸில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்கில், ரஸலும் சத்தியத்தைத் தேடிய வேறுசிலரும் ஒரு பைபிள் படிப்பு வகுப்பை ஏற்படுத்தினார்கள். அதுமுதல் சுமார் 140 வருடங்களில், யெகோவாவின் ஊழியர்கள் அறிவிலும் கடவுள் மீதும் அவருடைய வார்த்தை மீதும் வைத்திருக்கும் அன்பிலும் வளர்ந்திருக்கிறார்கள். உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பினருடைய ஆவிக்குரிய விழிப்புணர்வு உண்மை கிறிஸ்தவர்களான இவர்களுக்கு உதவி செய்திருக்கிறது; மிகப் பெரிய விசுவாசதுரோகியின் தந்திரங்கள் மத்தியிலும், யெகோவாவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் தொடர்ந்து உண்மைப் பற்றுறுதியைக் காண்பிப்பதற்கு உதவி செய்திருக்கிறது.—மத்தேயு 24:45, NW.
உலகத்தின் அதிபதி உங்களைக் கட்டுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்
17-19. பிசாசின் அதிகாரத்திற்குள் கிடக்கும் உலகம் எது, அதை ஏன் நாம் நேசிக்கக் கூடாது?
17 நம்மை கண்ணியில் சிக்க வைக்க சாத்தான் பயன்படுத்தும் மற்றொரு வழி இந்த உலகை நேசிப்பதற்கு, அதாவது கடவுளிடமிருந்து விலகியிருக்கும் அநீதியான மனித சமுதாயத்தை நேசிப்பதற்கு, தூண்டுவதாகும். “இந்த உலகத்தின் அதிபதி” என பிசாசை அழைத்து, “அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை” என்று இயேசு கூறினார். (யோவான் 14:30; பொது மொழிபெயர்ப்பு) சாத்தான் நம்மீது எந்த அதிகாரமும் செலுத்தாதிருப்பானாக! அதேசமயத்தில், “உலகமுழுவதும் [அந்தப்] பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்பதை” நாம் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 5:19) ஆகவேதான், ஒரேவொரு விசுவாசதுரோக செயலுக்காக இந்த “உலகத்தின் சகல ராஜ்யங்களையும்” இயேசுவுக்கு அளிக்க பிசாசு முன்வர முடிந்தது—அதை இயேசு உறுதியுடன் மறுத்துவிட்டார். (மத்தேயு 4:8-10) சாத்தானால் ஆளப்படும் இந்த உலகம் கிறிஸ்துவைப் பின்பற்றுவோரைப் பகைக்கிறது. (யோவான் 15:18-21) அப்படியானால், இந்த உலகை நேசிக்காதிருக்கும்படி அப்போஸ்தலன் யோவான் நம்மை எச்சரித்தது ஆச்சரியமல்லவே!
18 யோவான் இவ்வாறு எழுதினார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:15-17) நாம் இந்த உலகை நேசிக்கக் கூடாது, ஏனென்றால் இந்த உலகத்தின் வாழ்க்கை முறை பாவமுள்ள மாம்சத்திற்கு கவர்ச்சியூட்டுகிறது, அதோடு, யெகோவா தேவனுடைய தராதரங்களுக்கு முற்றிலும் எதிராகவும் இருக்கிறது.
19 இந்த உலகத்தின் நேசம் நமது நெஞ்சில் ஒட்டியிருந்தால் என்ன செய்வது? இந்த நேசத்தையும் அதோடு சம்பந்தப்பட்ட மாம்ச இச்சைகள் அனைத்தையும் விட்டொழிக்க கடவுளிடம் உதவிகேட்டு ஜெபம் செய்வோமாக. (கலாத்தியர் 5:16-21) ‘பொல்லாத ஆவி சேனைகள்தான்’ அநீதியான மனித சமுதாயத்தை ஆளும் ‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்’ என்பதை நாம் மனதில் வைத்தால், “உலகத்தால் கறைபடாதபடிக்கு” நம்மைக் காத்துக்கொள்ள கடினமாகப் போராடுவோம்.—யாக்கோபு 1:27; எபேசியர் 6:11, 12; 2 கொரிந்தியர் 4:4.
20. ‘நாம் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல’ என்று ஏன் சொல்லலாம்?
20 ‘நான் இந்த உலகத்தின் பாகமல்லாதது போல, அவர்களும் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல’ என்று தமது சீஷர்களைப் பற்றி இயேசு கூறினார். (யோவான் 17:16, NW) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொடுத்த அவர்களுடைய தோழர்களும் ஒழுக்க ரீதியில் மற்றும் ஆன்மீக ரீதியில் சுத்தமாக இருப்பதற்கும் இந்த உலகிலிருந்து பிரிந்திருப்பதற்கும் கடினமாகப் போராடுகிறார்கள். (யோவான் 15:19; 17:14; யாக்கோபு 4:4) அநீதியான இவ்வுலகிலிருந்து நாம் பிரிந்திருப்பதாலும், ‘நீதியைப் பிரசங்கிப்பதாலும்’ அது நம்மைப் பகைக்கிறது. (2 பேதுரு 2:5) உண்மைதான், நாம் வாழும் இந்த மனித சமுதாயத்தில் வேசித்தனக்காரர்களும் விபசாரக்காரர்களும் கொள்ளைக்காரரும் விக்கிரகாராதனைக்காரரும் திருடரும் பொய்யரும் குடிவெறியரும் இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 5:9-11; 6:9-11; வெளிப்படுத்துதல் 21:8) ஆனால் நாம் இந்த ‘உலகத்தின் ஆவியை’ சுவாசிப்பதில்லை, அதாவது பாவமுள்ள அந்த உந்துவிக்கும் சக்தியால் நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை.—1 கொரிந்தியர் 2:12.
பிசாசுக்கு இடங்கொடுக்காதீர்கள்
21, 22. எபேசியர் 4:26, 27-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் அறிவுரையை நீங்கள் எப்படிப் பொருத்திப் பயன்படுத்தலாம்?
21 ‘இந்த உலகத்தின் ஆவியால்’ உந்துவிக்கப்படுவதற்குப் பதிலாக, நாம் கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறோம்; அதுவே அன்பு, இச்சையடக்கம் போன்ற பண்புகளை நம்மில் பிறப்பிக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) நம் விசுவாசத்தின் மீது பிசாசு கொண்டுவரும் தாக்குதல்களைத் தடுத்துநிறுத்த இவை நமக்கு உதவி செய்கின்றன. ‘பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சலையே’ அவன் நம்மில் உண்டாக்க விரும்புகிறான், ஆனால் ‘கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிட’ கடவுளுடைய ஆவி நமக்கு உதவுகிறது. (சங்கீதம் 37:8) உண்மைதான், கோபப்படுவதற்கு சிலசமயங்களில் நமக்கு காரணம் இருக்கலாம், ஆனால் “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார்.—எபேசியர் 4:26, 27.
22 நாம் கோபமாகவே இருந்தால் நமது கோபம் பாவத்தில் விளைவடையலாம். இது, சபையில் பூசலை உருவாக்க அல்லது தீய செயல்களில் நம்மை ஈடுபடுத்த சாத்தானுக்கு வாய்ப்பளிக்கலாம். எனவே, மற்றவர்களுடன் கருத்து வேற்றுமைகள் இருந்தால் அவற்றை உடனடியாக கடவுளுடைய வழியில் சரிசெய்துகொள்ள வேண்டும். (லேவியராகமம் 19:17, 18; மத்தேயு 5:23, 24; 18:15, 16) நாம் எப்பொழுதும் கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுவோமாக, தன்னடக்கத்தைப் பிரயோகிப்போமாக, நியாயமான கோபமும்கூட மனக்கசப்பு, தீயநோக்கம், பகைமை போன்ற மோசமான குணங்களாக உருவெடுக்க ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக.
23. அடுத்த கட்டுரையில் என்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?
23 நாம் பின்பற்றக் கூடாத பிசாசின் குணங்கள் சிலவற்றை சிந்தித்தோம். ஆனால் சிலர் இவ்வாறு யோசிக்கலாம்: சாத்தானுக்கு நாம் அஞ்சி நடுங்க வேண்டுமா? அவன் ஏன் கிறிஸ்தவர்கள்மீது துன்புறுத்தலை தூண்டிவிடுகிறான்? பிசாசு நம்மை மோசம்போக்காதபடி எப்படி பார்த்துக்கொள்ளலாம்?
[அடிக்குறிப்பு]
a நவம்பர் 15, 2005 காவற்கோபுரம் இதழில், “பிசாசு—நிஜமான ஓர் ஆளா?” என்ற முகப்புக் கட்டுரையைக் காண்க.
உங்கள் பதில் என்ன?
• ஏன் ஒருபோதும் எவரையும் பழிதூற்றக் கூடாது?
• 1 யோவான் 3:15-க்கு இசைய, மனுஷ கொலைபாதகர்களாய் ஆவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
• விசுவாசதுரோகிகளை நாம் எப்படிக் கருத வேண்டும், ஏன்?
• நாம் ஏன் இவ்வுலகை நேசிக்கக் கூடாது?
[பக்கம் 23-ன் படம்]
நம் கிறிஸ்தவ ஒற்றுமையை குலைக்க பிசாசுக்கு ஒருபோதும் இடங்கொடுக்க மாட்டோம்
[பக்கம் 24-ன் படங்கள்]
இவ்வுலகை நேசிக்காதிருக்க யோவான் நம்மை ஏன் தூண்டினார்?