அதிகாரம் 11
தப்பிப்பிழைப்போர் ‘உலகத்தின் பாகமாக’ இருக்கக்கூடாது
இயேசு, தம்மைப் பின்பற்றுவோர் “உலகத்தில் இருக்கிறார்கள்” என்றும், எனினும் அவர்கள் “உலகத்தின் பாகமல்ல” என்ற வகையில் இருக்க வேண்டுமெனவும் சொன்னபோது அவர் கருதினதென்ன? (யோவான் 17:11, 14, NW) கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழ்வதற்குத் தப்பிப்பிழைப்போரில் நாமிருக்க இதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
2 முதலாவது, “உலகத்தின் பாகமல்ல” என்ற முறையில் இருப்பது எதைக் குறிக்கிறதில்லை என்பதைக் கவனியுங்கள். இது, துறவிகளைப்போல் நம்மைத் தனியே ஒரு குகையில் ஒதுக்கி வைத்துக்கொள்வதையோ, மடத்துக்குள் அல்லது மற்ற ஒதுக்கான இடத்துக்குள் நாம் மறைவாயிருப்பதையோ குறிக்கிறதில்லை. இதற்கு நேர்மாறாக, தம்முடைய மரணத்துக்கு முந்தின இரவில், இயேசு தம் சீஷர்களுக்காகத் தம்முடைய பரம தகப்பனிடம் பின்வருமாறு சொல்லி ஜெபித்தார்: “அவர்களை உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்றல்ல, பொல்லாங்கனின் காரணமாக அவர்களைக் கவனித்துக்கொள்ளும்படியே நான் உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தின் பாகமல்லாததுபோல் அவர்களும் உலகத்தின் பாகமல்லர்.”—யோவான் 17:15, 16, NW.
3 இயேசுவின் சீஷர்கள் ஜனங்களை விட்டு மறைத்து வைக்கப்படாமல், சத்தியத்தை அறிவிக்கும்படி ‘உலகத்துக்குள் அனுப்பப்பட்டனர்.’ (யோவான் 17:18, NW) இவ்வாறு செய்வதில், கடவுளுடைய சத்தியம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை நன்மையுண்டாகப் பாதிக்கிறதென்பதை மனிதர் காணக்கூடும்படி சத்தியத்தின் ஒளியைப் பிரகாசிக்கவிட்டு அவர்கள் “உலகத்துக்கு வெளிச்சமாய்” சேவித்தார்கள்.—மத்தேயு 5:14-16.
4 கிறிஸ்தவர்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்கு வேலை செய்துவருகையிலும் மனிதவர்க்கத்துக்குக் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைக் கொண்டுசெல்கையிலும் பல ஆட்களுடன் தொடர்புகொள்கிறார்கள். ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் காட்டுகிற பிரகாரம், அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட முறையில் “உலகத்தைவிட்டு நீங்கிப்போகும்”படி எதிர்பார்க்கப்படுகிறதில்லை. உலகத்தின் ஜனங்களோடு ‘கலந்திருப்பதை’ அவர்கள் முற்றிலும் விட்டு நீங்க முடியாது. ஆனால் மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் பழக்கமாய் ஈடுபடும் தவறான செயல்களிலிருந்து அவர்கள் தங்களைத் தூரமாய் விலக்கி வைத்துக்கொள்ள முடியும் அவ்வாறு செய்யவும் வேண்டும்.—1 கொரிந்தியர் 5:9-11.
5 இந்நிலைமை நோவாவின் நாளில் இருந்ததற்கு ஒப்பாயிருக்கிறது, அப்பொழுது ‘பூமியில் எல்லா மனிதரும் சீரழிந்த வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்ததை” யெகோவா கவனித்தார். (ஆதியாகமம் 6:12, NEB) ஆனால் நோவாவும் அவனுடைய குடும்பமும் வேறுபட்ட முறையில் வாழ்ந்தனர். தங்களைச் சுற்றியிருந்த சீரழிந்த நடத்தையில் சேர்ந்துகொள்ள மறுத்ததாலும் நீதியைப் பிரசங்கித்ததாலும், நோவா “உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்”தான். அது மன்னிக்க முடியாதவண்ணம் கடவுளுடைய சித்தத்துக்கு முரணாயிருந்ததெனக் காட்டினான். (எபிரெயர் 11:7; 2 பேதுரு 2:5) இதனால், அந்தப் பூகோள ஜலப்பிரளயம் தெய்வபக்தியற்ற மனிதவர்க்கத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தபோது, அவனும் அவனுடைய குடும்பமும் தப்பிப்பிழைத்தனர். அவர்கள் “உலகத்தில்” இருந்தார்கள் எனினும் அதே சமயத்தில் “உலகத்தின் பாகமல்ல” என்றவகையில் இருந்தார்கள்.—ஆதியாகமம் 6:9-13; 7:1; மத்தேயு 24:38, 39.
உலகத்தின் ஜனங்களுக்குக் காட்டவேண்டிய சரியான அன்பு என்ன?
6 ‘உலகத்தின் பாகமல்லாதவராவது’ மனிதவர்க்கத்தைப் பகைப்பவராவதையும் குறிக்குமா? அப்படிச் செய்வது ஒருவனை யெகோவா தேவனுக்கு முரண்படும் நிலையில் வைக்கும், அவர், “தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் [அழிக்கப்படாமல், NW] நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் [மனிதவர்க்க] உலகத்தில் அன்புகூர்ந்தார்,” என்று அவருடைய குமாரன் இயேசு சொன்னார். எல்லா வகையான ஆட்களிடமும் கடவுள் தயவையும் இரக்கத்தையும் காட்டுவது நாம் பின்பற்றுவதற்கு முன்மாதிரியை வைக்கிறது.—யோவான் 3:16; மத்தேயு 5:44-48.
7 ஆனால், “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை,” என்று அப்போஸ்தலன் யோவான் நமக்குச் சொல்லுகிறான் அல்லவா? கடவுள்தாமே உலகத்தை நேசித்தால் அப்போஸ்தலன் ஏன் இவ்வாறு சொன்னான்?—1 யோவான் 2:15.
8 அபூரணத்திலும், மரிக்கும் நிலையிலும், உதவி மிக அவசரமாய்த் தேவைப்படும் நிலையிலும் இருக்கிற மனிதர் என்ற அளவில் கடவுள் மனிதவர்க்க உலகத்தை நேசிக்கிறாரென பைபிள் காட்டுகிறது. மறுபட்சத்தில், சாத்தான் மனிதவர்க்கத்தில் பெரும்பான்மையரை கடவுளுக்கு எதிர்ப்பிலிருக்க அமைத்திருக்கிறான். இந்த ‘உலகத்திலிருந்தே’—அதாவது, கடவுளிடமிருந்து தொடர்பறுக்கப்பட்டு சாத்தானின் ஆதிக்கத்தின் கீழிருக்கிற மனித சமுதாயத்திலிருந்தே—உண்மையான கிறிஸ்தவர்கள் விலகியிருக்க வேண்டும். (யாக்கோபு 1:27) இந்த உலகத்தின் தவறான ஆசைகளையும் செயல்களையும் நேசிப்பதற்கு எதிராகவே கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு எச்சரிக்கிறது: “ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள், உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:15-17.
9 ஆம், மாம்சத்தின் மற்றும் கண்களின் ஆசைகளும் தன்னைத்தான் உயர்த்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும் நிச்சயமாகவே ‘உலகத்தினாலுண்டானவைகள்.’ இவையே மனிதவர்க்கத்தின் முதல் பெற்றோரில் தோன்றி வளர்ந்து, தங்கள் தன்னல அக்கறைகளைப் பின்பற்றுவதற்காகக் கடவுளை விட்டு விலகி சுதந்தரமாயிருப்பதை நாட அவர்களை வழிநடத்தின. உலகப்பிரகாரமான இந்தத் தன்னல ஆசைகளைப் பின்தொடர்ந்தது கடவுளுடைய சட்டங்களை மீறுவதற்கு வழிநடத்தினது.—ஆதியாகமம் 3:1-6, 17.
10 உங்களைச் சுற்றி நீங்கள் காண்பவற்றைச் சிந்தித்துப் பாருங்கள். மக்களில் பெரும்பான்மையர் தங்கள் வாழ்க்கையை மாம்சத்தின் இச்சைகளையும், கண்களின் இச்சைகளையும் “ஜீவனத்தின் பெருமையையும் [ஒருவனுடைய வாழ்க்கை பணவளத்தைப் பகட்டுபண்ணிக் காட்டிக்கொள்ளுதலையும், NW]” சுற்றிக் கட்டிவருகிறார்கள் அல்லவா? இவையே அவர்கள் நம்பிக்கைகளையும் அக்கறைகளையும் உருப்படுத்தி, அவர்கள் நடக்கும் விதத்தையும், ஒருவருக்கொருவர் கொள்ளும் நடைமுறைத் தொடர்புகளையும் ஆட்கொள்ளுகின்றனவல்லவா? இதனால், மனித சரித்திரம் ஒற்றுமையில்லாமையும் போரும், ஒழுக்கக்கேடும் அக்கிரமமும், வியாபாரப் பேராசையும் ஒடுக்குதலும், மேன்மையடைய நாடும் பெருமையான பேராவலும், புகழையும் அதிகாரத்தையும் அடைய நாடி முயலுதலும் ஆனவற்றைக் கொண்ட ஒரே நீண்ட பதிவாயிருக்கிறது.
11 அப்படியானால், கடவுள் செய்வதுபோல் உலகத்தை நேசிப்பது, அவர் கண்டனஞ்செய்கிற, அதன் தவறான ஆசைகளையும் பழக்கச் செயல்களையும் நேசிப்பதிலிருந்து வெகுவாய் வேறுபடுவதை நாம் காண முடிகிறது. மனிதவர்க்க உலகத்தின்மீதுள்ள கடவுளுடைய அன்பு அந்தப் பாவ ஆசைகளிலிருந்தும், மரணம் உட்பட, அவற்றின் கெட்ட விளைவுகளிலிருந்தும் விடுதலையாவதற்கான வழியைத் திறந்தது. மனிதவர்க்கத்தை மீட்பதற்குத் தம்முடைய சொந்தக் குமாரனைக் கொடுப்பதனால் அவர் இந்த அன்பை வெளிப்படுத்தினார். ஆனால் எவனாவது இந்தப் பலியை வேண்டாமெனத் தள்ளி, கீழ்ப்படியாமையில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தால், “தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்,” என்று பைபிள் சொல்லுகிறது.—யோவான் 3:16, 36; ரோமர் 5:6-8.
“இந்த உலகத்தின் அதிபதி”யின் ஆதிக்கத்துக்கு உட்படாதபடி விடுதலையைக் காத்து வைத்துக்கொள்வது
12 அப்படியானால், நம்மைப் பற்றியதென்ன? உலகத்தின் ஆட்கள் கடவுளுடைய தயவில் உயிரடைவதற்குப் போகும் வழியைக் கண்டடைய உதவி செய்வதற்கு நாம் உள்ளப்பூர்வமாய் விரும்பும் கருத்தில் அவர்களை நாம் நேசிக்கிறோமா? அல்லது கடவுளுடைய ஊழியர்களாவதிலிருந்து அவர்களைத் தடுத்துவைக்கும் அந்தக் காரியங்களை—அவர்களுடைய சுதந்தர ஆவியை, அவர்களுடைய பணவள பகட்டு பண்ணுதலை, தங்கள் சொந்த முக்கியத்துவத்திலும் புகழிலும் அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதை—நாம் நேசிக்கிறோமா? இத்தகைய தன்மைகளினிமித்தம் நாம் ஆட்களோடிருக்க ஆசைகொண்டால், அப்பொழுது நாம் அப்போஸ்தலன் கண்டனஞ்செய்த முறையில் ‘உலகத்தில் அன்புகூருகிறோம்.’
13 இயேசுவின் நாளில் பல ஆட்கள் உலகத்தின் வழிகளை நேசித்தார்கள். ஆகவே இயேசுவின் சீஷராகத் தைரியமான நிலைநிற்கை எடுப்பதைத் தவிர்த்தார்கள். தங்களுடைய சமூக மற்றும் மத வட்டாரங்களிலிருந்த மக்களுக்குள் தங்கள் மதிப்பையும் ஸ்தானத்தையும் இழக்க அவர்கள் விரும்பவில்லை. கடவுளின் அங்கீகாரத்தைப் பார்க்கிலும் மனிதரால் புகழப்படுவதையே அவர்கள் நேசித்தார்கள். (யோவான் 12:42, 43) உண்மைதான், சிலர் தானதர்ம வேலைகளை நடப்பித்தனர், மதபக்திக்குரிய மற்றச் செயல்களையும் செய்தனர். ஆனால் முக்கியமாக, தாங்கள் மற்றவரால் மேன்மையாக நோக்கப்படவேண்டுமென்று விரும்பினதன் காரணமாகவே அவற்றைச் செய்தனர். (மத்தேயு 6:1-6; 23:5-7; மாற்கு 12:38-40) இன்று மக்கள் உலகத்தின் தவறான போக்குக்கு இதே அன்பைக் காட்டுவதை நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா? எனினும் இந்த வகையான “அன்பு” அழிவுக்கே வழிநடத்துமென்று பைபிள் காட்டுகிறது.
14 கடவுளுடைய சொந்தக் குமாரன்தாமே இதே வழிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மக்களைக் கவர்ச்சிசெய்ய பகட்டுபண்ணும் ஒரு காட்சியை நடப்பித்து—உலகத்தைப்போலாகச் செய்ய—தன்னல ஆசையை அவரில் தூண்டிவிட முயற்சி செய்யப்பட்டது. உலகத்தின் எல்லா ராஜ்யங்களும் அவற்றின் மகிமையுமானவற்றின்மேல் ஆட்சி அதிகாரமுங்கூட அவருக்கு முன்வந்து அளிக்கப்பட்டது. தன்னல ஆசைகளைக் கவரும் இந்த அழைப்புகளை அவர் உடனடியாக மறுத்துவிட்டார். யெகோவா தேவனின் ஈடற்ற அரசாட்சியை முதன்முதல் எதிர்த்த பிசாசாகிய சாத்தானிடமிருந்தே அவை வந்தன.—லூக்கா 4:5-12.
15 சாத்தான் இயேசுவுக்கு அரசாட்சியை அளிக்க முன்வந்ததைப் பற்றி அறிவது, நாம் “உலகத்தின் பாகமாக” ஏன் இருக்கக்கூடாதென்பதை விளங்கிக்கொள்ள இன்றியமையாதது. பொதுவில் மனிதவர்க்க உலகம், அதன் ஆட்சிகளும் உட்பட, கடவுளுடைய எதிரியை அதன் காணக்கூடாத அரசனாகக் கொண்டிருக்கிறதென்று இது காட்டுகிறது. இயேசுதாமே சாத்தானைக் குறித்து “இந்த உலகத்தின் அதிபதி”யென பேசினார். (யோவான் 12:31; 14:30; 2 கொரிந்தியர் 4:4) அப்போஸ்தலனாகிய பவுலும், “பொல்லாத ஆவிகளின் சேனைகள்” ஆகிய சாத்தானின் அதிகாரத்தின்கீழிருக்கும் பேய்கள், “இவ்வந்தகாரத்தின் லோகாதிபதிகள்” எனக் குறிப்பிட்டான். இந்த “லோகாதிபதிகளின்” தாக்குதலுக்கு எதிராகப் போராட ஆவிக்குரிய போராயுதம் தேவைப்படுவதைக் குறித்து பவுல் கிறிஸ்தவர்களை எச்சரித்தான்.—எபேசியர் 6:10-13, தி.மொ.
16 இந்தக் காணக்கூடாத அதிபதியாலும் அவனுடைய சேனைகளாலும் அடக்கியாளப்படுவதற்கு உட்படாமல் தங்களைக் காத்துவைத்துக் கொண்டவர்கள் எக்காலத்திலும் ஒரு சிறுபான்மையரேயாவர். இவ்வாறு இந்த “உலகம்,” அதாவது, கடவுளிடமிருந்து நட்பு பிரிக்கப்பட்ட மனிதவர்க்கத்தின் பெருந்தொகுதி “பொல்லாங்கனின் அதிகாரத்துக்குள் கிடக்கிறது.” (NW) பேய்த்தன செல்வாக்கின் மூலம் அவன், இந்தப் பூமிக்குரிய அரசர்கள் உட்பட ‘குடியிருக்கப்பட்ட பூமியனைத்தையும் மோசம்போக்கி’ கடவுளுக்கும் அவருடைய ராஜ்யத்துக்கும் எதிராக அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறான்.—1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9; 16:13, 14; 19:11-18.
17 இது நம்புவதற்குக் கடினமாய்த் தொனிக்கலாம். எனினும், இவ்வுலகத்தின் மக்கள் பெரும்பான்மையர் கடவுளுடைய எதிரியின் மனப்பான்மையையும் செயல்களையும் தெளிவாய் வெளிப்படுத்திக் காட்டுகின்றனர் அல்லவா? ‘பிசாசினால் உண்டாயிருந்து’ அவனைத் தங்கள் ஆவிக்குரிய “பிதா”வாகக் கொண்டிருப்பவர்களை அடையாளங்காட்டுகிற பொய்ச் சொல்லுதல், பகை, வன்னடத்தை, கொலை ஆகியவற்றை நாம் உலகமெங்கும் காண்கிறோம். (1 யோவான் 3:8-12; யோவான் 8:44; எபேசியர் 2:2, 3) நிச்சயமாகவே இந்த ஆவி அன்புள்ள சிருஷ்டிகரிடத்திலிருந்து வருகிறதில்லை.
18 மேலும், சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கு, மக்களில் மிகப் பெரும்பான்மையர், மனிதத் திட்டங்களில் நம்பிக்கை வைக்கிறார்களல்லவா? மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் உண்மையில் நோக்கியிருக்கிற எத்தனை ஆட்கள் உங்களுக்குத் தெரியும்? எனினும், இயேசு: “என் ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமானதல்ல,” என்று சொல்லியிருப்பதனால், மனித அரசியல் ஒழுங்குமுறைகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது தவறான இடத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய ராஜ்யம் அதன் “மூல ஆரம்பத்தை” இந்த உலகத்தில் கொண்டில்லை, ஏனென்றால் மனிதர் அதை ஏற்படுத்தி வைப்பதுமில்லை, அதை அதிகாரத்தில் காத்து வைப்பதுமில்லை. அது கடவுளுடைய சொந்த ஏற்பாடு. (யோவான் 18:36; ஏசாயா 9:6, 7) ஆகவே, இந்த ராஜ்யம் அதன் எல்லா எதிரிகளுக்கும் விரோதமாக வருகையில் தப்பிப்பிழைத்திருக்க நம்பிக்கை கொண்டிருப்போருக்குள் நாம் இருக்க, இந்த உலகத்தையும் அதன் ஒழுங்கு முறைகளையும் சாத்தான் அடக்கியாளுகிறான் என்ற இந்த மறுக்க மடியாத உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதில், ஐக்கிய நாட்டு சங்கம் போன்ற அதன் அரசியல் ஏற்பாடுகளும் உள்ளடங்கியிருக்கின்றன. கிறிஸ்து இயேசு ஆட்சி செய்யும் யெகோவாவின் நீதியுள்ள அரசாங்கத்தின் சார்பாக நாம் உறுதியான நிலைநிற்கை கொள்வதன்மூலம் இந்த எல்லாவற்றிலிருந்தும் நம்மை விலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.—மத்தேயு 6:10, 24, 31-33.
19 ஆதிக் கிறிஸ்தவர்கள், சட்டத்துக்கு அடங்கி நடந்த மரியாதையுள்ள குடிமக்களாக இருந்தார்களென சரித்திரம் காட்டுகிறது. ஆனால் அவர்கள் ‘உலகத்தின் பாகமாயிராதபடி’ தங்களைக் காத்துக்கொள்ள தீர்மானித்திருந்தனர், இது அவர்கள்பேரில் துன்புறுத்தலைக் கொண்டுவந்தபோதிலும் அசையா உறுதியுடனிருந்தனர். பின்வருபவற்றைப் போன்ற கூற்றுகளை நாம் வாசிக்கிறோம்:
“ஆதிக் கிறிஸ்தவம், புறமத உலகத்தை ஆண்டவர்களால் சிறிதளவும் விளங்கிக்கொள்ளப்படவில்லை, தயவுடன் கருதப்படவுமில்லை. . . . கிறிஸ்தவர்கள் ரோம குடிமக்களுக்குரிய சில கடமைகளில் பங்குகொள்ள மறுத்தனர். . . . அவர்கள் அரசியல் உத்தியோகங்களை வகிக்கமாட்டார்கள்.”—On the Road to Civilization, A World History.57
“பேரரசின் சமுதாய நிர்வாகத்திலோ இராணுவ பாதுகாப்பிலோ எவ்வித சுறுசுறுப்பான பங்கும் எடுக்க அவர்கள் மறுத்தனர். . . . மிக அதிக பரிசுத்த சேவையைத் தள்ளிவிடாமல், போர்ச்சேவகர், மாஜிஸ்ட்ரேட்டுகள், அல்லது அதிபதிகள் ஆகியோரின் உத்தியோகப் பதவியை வகிப்பது கிறிஸ்தவர்களுக்கு முடியாதிருந்தது.”—History of Christianity.58
“[நம்முடைய பொது சகாப்தத்தின் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த] ஆரிஜன் . . . ‘கிறிஸ்தவ சர்ச் எந்தத் தேசத்துக்கு எதிராகவும் போரில் ஈடுபட முடியாது. தாங்கள் சமாதான பிள்ளைகளென்று தங்கள் தலைவரிடத்திலிருந்து அவர்கள் கற்றிருக்கின்றனர்,’ என்று குறிப்பிடுகிறான். அந்தக் காலப் பகுதியில் இராணுவ சேவையை மறுத்ததற்காகக் கிறிஸ்தவர்கள் பலர் இரத்தச் சாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.”—Treasury of the Christian World.59
20 இவ்வுலக விவகாரங்களில் உட்படாமல் தங்களை விலக்கி வைத்துக் கொள்வதன்மூலம், யெகோவாவின் ஊழியர்கள் அதன் பிரிவினையுண்டாக்கும் தேசீயக் கோட்பாடு, அதன் ஜாதிபேத மனப்பான்மை, அல்லது அதன் சமுதாய சண்டைகள் ஆகியவற்றில் பங்குகொள்வதில்லை. கடவுளால் வழிநடத்தப்படுகிற அவர்கள் மனப்பான்மை எல்லா வகையான ஆட்களுக்குள்ளும் சமாதானமும் பாதுகாப்பும் உண்டாவதற்கேதுவாக உதவியளிக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) வரவிருக்கிற “மிகுந்த உபத்திரவத்”தைத் தப்பிப்பிழைப்போர், உண்மையில், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வெளி வருவார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
உலகத்தின் சிநேகிதரா அல்லது கடவுளின் சிநேகிதரா?
21 இயேசு தம்முடைய சீஷருக்குப் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் உலகத்தாராயிருந்தால் [உலகத்தின் பாகமாக, NW] உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. . . . அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:19, 20) தெளிவான உண்மை என்னவென்றால், இவ்வுலகத்தின் சிநேகிதத்தைக் கொண்டிருப்பதற்கு ஒரே வழி, அதைப் போலாவதே—அதன் ஆசைகள், மேன்மையடைவதற்கான பேராசைகள், தப்பெண்ணங்கள், ஆகியவற்றில் பங்குகொண்டு, அதன் சிந்தனைகளையும் தத்துவங்களையும் வியந்து பாராட்டி, அதன் பழக்க வழக்கங்களையும் வழிகளையும் நாடி மேற்கொள்வதேயாகும். ஆனால் இவ்வுலகத்தின் ஆதரவாளர் தங்களுடைய தவறுகள் வெளிப்படுத்திக் காட்டப்படுவதை அல்லது அவர்களுடைய போக்கு கொண்டுசெல்கிற அபாயங்களைக் குறித்து எச்சரிக்கப்படுவதை விரும்பாமல் ஆத்திரமடைகின்றனர். இதனால், ஒருவன் நடத்தையிலும் வாழ்க்கை முறையிலும் பைபிளின் போதகங்களைப் பின்பற்றி நடந்து, அதற்கு ஆதரவாய்ப் பேசினால், உலகத்தின் பகையை அவன் நிச்சயமாகவே தப்பிக்கொள்ள முடியாது.—யோவான் 17:14; 2 தீமோத்தேயு 3:12.
22 ஆகவே, தெரிவு செய்ய நமக்கு முன் தெளிவாயிருப்பதை பைபிள் காட்டுகிறது. யாக்கோபு 4:4-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” கடவுளுடன் சிநேகங்கொள்ள அவர் தம்முடைய தராதரங்களையும் வைத்திருக்கிறார். அவை இந்தப் பாவமுள்ள மனிதவர்க்க உலகத்தின் தராதரங்களுக்கு ஒத்தில்லை.—சங்கீதம் 15:1-5.
23 கடவுளுடைய சிநேகிதத்தை நாம் கொண்டிருப்பது, இவ்வுலக அமைப்புகளில் குறிப்பிட்ட ஒன்றை நாம் சேர்ந்திருப்பதையோ சேர்ந்திராததையோ பார்க்கிலும் மிக அதிகத்தின்பேரில் சார்ந்திருக்கிறது. உலகத்தின் ஆவியை நாம் வெளிப்படுத்தி, வாழ்க்கைக்குரிய அதன் நோக்குநிலையில் பங்குகொண்டால் அப்பொழுது நாம் நம்மைக் கடவுளுடைய சிநேகிதராக அல்ல, உலகத்தின் சிநேகிதராகவே அடையாளங்காட்டுகிறோம். இந்த உலகத்தின் ஆவி, “வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கப்பேதங்கள், பொறாமைகள், வெறிகள், களியாட்டுகள் முதலான”வற்றைப் போன்ற “மாம்சத்தின் கிரியைகளைப்” பிறப்பிக்கிறது. “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று” பைபிளில் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறது. இதற்கு மாறாக, நாம் கடவுளுடைய சிநேகிதராயிருந்தால் அவருடைய ஆவியை அதன் கனிகளாகிய “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவற்றோடுகூட கொண்டிருப்போம்.—கலாத்தியர் 5:19-23.
24 அப்படியானால், யாருடைய ஆவியை நாம் பிரதிபலிக்கிறோம்? இது நாம் உண்மையில் யாருடைய சிநேகிதர் என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவிசெய்யும். தற்போதைய இந்தப் பொல்லாத உலகத்தின் செல்வாக்குகளுக்குக் கீழ்ப்பட்டு நாம் வாழ்ந்துகொண்டிருப்பதனால், கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய தேவைப்படுவதைக் காண்கையில் ஆச்சரியப்படவேண்டியதில்லை. உதாரணமாக, மேன்மையடைய வேண்டுமென்ற பேராசைத் தூண்டுதல் பெரும்செல்வத்தையோ, அதிகாரத்தையோ, புகழையோ அடையும்படி வழிநடத்தியிருக்கும் ஆட்களின்மீது உலக மக்கள், கனத்தையும் மகிமையையும் குவிக்கின்றனர். இத்தகைய உலகப் பிரகாரமான வீரர்களையும் தெய்வங்களாகப் போற்றப்படுகிறவர்களையும் மக்கள் பேச்சிலும், நடத்தையிலும், தோற்றத்திலும், உடையிலும் பின்பற்றி, அவர்களுடைய மாதிரிக்கு ஒப்பத் தங்களை உருப்படுத்தி அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய ஆட்களைப் பாராட்டும் ரசிகர் ஒருவராக நீங்கள் அடையாளங் காட்டப்பட விரும்புகிறீர்களா? வாழ்க்கையில் நம்முடைய குறிக்கோளாக்கிக் கொள்ளும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துபவற்றிற்கு நேர்மாறாக அவர்களுடைய சாதனைகள் இருக்கின்றன. ஆவிக்குரிய செல்வத்தையும் பலத்தையும் பூமியில் கடவுளுடைய பிரதிநிதிகளாகவும் பிரதிநிதிப் பேச்சாளராகவும் சேவிக்கும் கனத்தையும் கொண்டிருக்கவே பைபிள் நம்மை வழிநடத்துகிறது. (1 தீமோத்தேயு 6:17-19; 2 தீமோத்தேயு 1:7, 8; எரேமியா 9:23, 24) உலகத்தின் வியாபார விளம்பரம் மக்களைப் பொருள்கொள்கைக்குத் திருப்புகிறது, பொருள் உடைமைகளிலேயே தங்கள் மகிழ்ச்சி சார்ந்திருக்கிறதென நம்ப வைக்கிறது. ஆகவே அவர்கள் ஆவிக்குரிய மதிப்புடைய காரியங்களைப் பார்க்கிலும் இவற்றிற்கே மிக அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர். ஆம், உலகத்தின் போக்கைப் பின்பற்றுவது உலகத்தின் சிநேகிதத்தை உங்களுக்குச் சம்பாதித்துக் கொடுக்கும், ஆனால் கடவுளுடைய சிநேகிதத்திலிருந்து உங்களைத் துண்டித்துப் போடும். எது உங்களுக்கு மிக மேம்பட்டதாயிருக்கிறது? எது உங்களை மிகப் பெரிதான மற்றும் மிக நிலைத்த மகிழ்ச்சிக்கு வழிநடத்தும்?
25 உலகத்தின் மாதிரிக்கு இணங்கிப்போவது சுலபம். நீங்கள் தனிப்பட்ட ஒரு போக்கை மேற்கொண்டால், இவ்வுலகத்தின் ஆதரவாளர், அதன் கெட்ட ஆவியைக் கொண்டிருப்பதனால் கடுங்கோபமடைவர். (1 பேதுரு 4:3, 4) உங்களை இணங்கவைத்து, உலகப்பிரகாரமான மனித சமுதாயம் அதன் சாயலில் உங்களை உருப்படுத்தி அமைப்பதற்கு நீங்கள் இடங்கொடுக்கச் செய்ய உங்கள்மீது நெருக்கடிகளைக் கொண்டுவருவர். உங்கள் சிந்தனையை அடக்கியாள முயற்சி செய்து, உலக ஞானத்தையும், வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டுவருவது எது என்பதைக் குறித்த அதன் தத்துவங்களையும் பயன்படுத்துவர். ஆகவே, காரியங்களைக் கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து காணவும், ‘இவ்வுலகத்தின் ஞானம் ஏன் அவருடைய பார்வையில் பைத்தியமாயிருக்கிறதென்பதைப்’ புரிந்துகொள்ளவும் ‘உங்கள் மனதை மாற்றுவதற்கு’ மெய்யான பிரயாசமும் விசுவாசமும் தேவைப்படுகிறது. (ரோமர் 12:2; 1 கொரிந்தியர் 1:18-20; 2:14-16; 3:18-20) பிரயாசமெடுத்து ஊக்கத்துடன் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன்மூலம் இவ்வுலகத்தின் பொய் ஞானத்தை நாம் ஊடுருவக் காணமுடியும். இத்தகைய “ஞானத்திலிருந்து” ஏற்கெனவே விளையும் தீங்கையும், அது கட்டாயமாக வழிநடத்தும் நாசகரமான முடிவையும் நாம் காணமுடியும். அப்பொழுது நாம் கடவுளுடைய வழியின் ஞானத்தையும் அது உறுதியளிக்கும் நிச்சய ஆசீர்வாதங்களையும் முழுமையாய் மதித்துணரவும் முடியும்
ஒழிந்துபோகும் உலகத்துக்கு உயிரையும் திறமைகளையும் கொடுப்பது வீண்
26 ‘ஆனால் உலகத்தின் அமைப்புகள் பல நன்மைசெய்து, மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, சுதந்திரம் ஆகியவற்றிற்காக உழைக்கின்றனவல்லவா?’ என்று சிலர் ஒருவேளை மறுத்துக் கூறலாம். மெய்யே, சில அமைப்புகள், மக்களின் துன்பங்களில் ஒருசிலவற்றிலிருந்து தற்காலிகமான ஓரளவு விடுதலையை நிச்சயமாகவே கொடுக்கின்றன. எனினும், அவை யாவும் கடவுளிடமிருந்து நட்பு பிரிந்த உலகத்தின் பாகமாகவே இருக்கின்றன. மேலும் தற்போதைய காரிய ஒழுங்கு முறையைத் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வதை நோக்கியே இவை மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. இவற்றில் ஒன்றும், பூமிக்குக் கடவுளுடைய அரசாங்கத்தை, அவருடைய குமாரன் ஆளும் கடவுளுடைய ராஜ்யத்தைச் சிபாரிசு செய்கிறதில்லை. சில கடுங் குற்றவாளிகளுங்கூட குடும்பங்களைப் பிறப்பித்து, அவற்றைப் பராமரித்து, சமுதாயத்துக்கும் தர்ம செயல்களைச் செய்யலாம். ஆனால் இந்தக் காரியங்கள், குற்ற இயல்புள்ள அமைப்புகளுக்கு எவ்வகையிலாவது நம்முடைய ஆதரவளிப்பதைச் சரியென தீர்த்துவிடுமா?—2 கொரிந்தியர் 6:14-16-ஐ ஒத்துப் பாருங்கள்.
27 உலகத்தின் திட்டங்கள் எவற்றினுடனாவது நம்மை இணைத்துக்கொண்டு, நேரத்தையும் சக்தியையும் அவற்றிற்குச் செலவிடுவதனால் நாம் உண்மையில் மனிதவர்க்கத்துக்கு மெய்யன்பைக் காட்ட முடியுமா? நோய்ப்பட்ட ஒருவருக்கு நீங்கள் உதவிசெய்ய விரும்பினால், அதே நோய் உங்களைத் தொற்றிக்கொள்ளும் அளவுக்கு மிக நெருங்கியிருந்து அதைச் செய்வீர்களா? அல்லது அதைப் பார்க்கிலும் நீங்கள்தாமே சுகத்துடனிருந்து, சுகமாவதற்கான வழியைக் கண்டடையும்படி அவருக்கு உதவி செய்ய முயன்றால் மிகப் பெரிய உதவியாயிருப்பீர்களல்லவா? தற்போதைய மனித சமுதாயம் ஆவிக்குரிய பிரகாரமாய் நோயுற்று சீரழிந்திருக்கிறது. நம்மில் ஒருவரும் அதைக் காப்பாற்ற முடியாது, ஏனெனில் அதன் நோய் அதன் மரணத்துக்கு வழி நடத்துகிறதென்று கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. (ஏசாயா 1:4-9-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆனால் ஆவிக்குரிய சுகத்துக்கும் கடவுளுடைய புதிய ஒழுங்குக்குள் தப்பிப்பிழைப்பதற்குமுரிய வழியைக் கண்டடைய உலகத்திலுள்ள தனியாட்களுக்கு நாம் உதவிசெய்யலாம்—ஆனால் நாம்தாமே உலகத்திலிருந்து பிரிந்துள்ள தன்மையைக் காத்துவரும் நிலையில் அவ்வாறு செய்யலாம். (2 கொரிந்தியர் 6:17) அப்படியானால், ஞானமாய், உலகத்தின் திட்டங்களில் உட்படுவதை அறவே தவிர்த்திருங்கள். மேலும் உலகத்தின் ஆவி தொற்றிக் கொள்ளுகிறவர்களாகி, அதன் அநீதியான வழிகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்க உங்களைக் கடுமுயற்சியில் ஈடுபடுத்துங்கள். “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்,” என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.—1 யோவான் 2:17.
[கேள்விகள்]
1, 2. (எ) உலகத்தினிடம் தம்முடைய சீஷரின் உறவைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? (பி) அது எதைக் குறிக்கிறதில்லை? ஏன்?
3, 4. (எ) எந்த வேலைகளில் கிறிஸ்தவர்கள் உலகத்தின் ஜனங்களோடு தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது? (பி) ஆனால் அவர்கள் எதைத் தவிர்க்கவேண்டும்?
5. உலகத்திலிருந்து பிரிந்திருக்க வேண்டியது நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் நடந்துகொண்ட முறையில் எவ்வாறு விளக்கிக் காட்டப்பட்டது?
6. உலக ஜனங்களிடம் ஏதாவது அன்பு காட்டுவது சரியா?
7, 8. (எ) உலகத்தை நேசிப்பதைப் பற்றி பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது? (பி) நாம் பிரிந்திருக்க வேண்டிய அந்த உலகம் எது? (சி) நாம் ஏன் உலகத்தையும் அதன் ஆசைகளையும் விட்டுவிலகியிருக்க வேண்டும்?
9, 10. (எ) இந்த ஆசைகள் ‘உலகத்தினாலுண்டானவைகள்’ என்று எப்படிச் சொல்லலாம்? (பி) இந்த ஆசைகள் மனிதவர்க்கத்தை எவ்வாறு பாதித்திருக்கின்றன?
11. அப்படியானால், கடவுள் உலகத்தில் அன்புகூர்ந்தது அவருடைய வார்த்தை கண்டனஞ்செய்வதற்கு முரணாக ஏன் இல்லை?
12. உலக ஆட்களின்மீது நாம் கொண்டுள்ள அன்பு கடவுளுக்குப் பிரியமானதா இல்லையா என்பதை நாம் எவ்வாறு பகுத்தறியலாம்?
13. உலக ஆசை எவ்வாறு கடவுளைச் சேவிப்பதிலிருந்து ஒருவனைத் தடுத்து வைக்கலாம்?
14. இயேசு பூமியில் இருக்கையில் அவரைச் சோதனைக்கு உட்படுத்தினவன் யார்? அதன் விளைவு என்ன?
15. “இந்த உலகத்தின் அதிபதி” யார் என்பதை உங்கள் பைபிளிலிருந்து காட்டுங்கள்?
16. உலகத்தின் எவ்வளவு பாகம் சாத்தானால் மோசம்போக்கப்பட்டு அவனுடைய அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கிறது?
17. (எ) உலகம் வெளிப்படுத்தும் மனப்பான்மை மனிதவர்க்கத்தை வழிநடத்துகிறவனைப் பற்றி என்ன சாட்சி பகருகிறது? (பி) இத்தகைய ஆவியை நாம் காட்டினால் அது சிருஷ்டிகருக்குப் பிரியமாயிருக்குமா?
18. அரசாட்சியைக் குறித்த நம் மனப்பான்மை நாம் “இந்த உலகத்தின் அதிபதி”யின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையாயிருக்கிறோமா இல்லையா என்பதை எவ்வாறு காட்டுகிறது?
19. சரித்திரம் சாட்சி பகருகிறபடி, ஆதிக் கிறிஸ்தவர்கள், தாங்கள் “உலகத்தின் பாகமல்ல” என்பதை எந்த வழிகளில் காட்டினர்?
20. “இந்த உலகத்தின் அதிபதி”யால் அடக்கி ஆளப்படுவதிலிருந்து விடுதலையைக் காத்து வைத்துக்கொள்ள, உலகத்தின் பிரிவினைக்கடுத்த எந்தச் செயல்களில் உட்படாதபடி யெகோவாவின் ஊழியர்கள் தங்களைத் தவிர்த்து வைத்துக்கொள்கின்றனர்?
21. பைபிளைப் பின்பற்றும் ஒருவன் உலகத்தாலும் நேசிக்கப்பட ஏன் எதிர்பார்க்க முடியாது?
22. சிநேகத்தைக் குறித்த எந்தத் தெரிவை நாம் ஒவ்வொருவரும் எதிர்ப்படுகிறோம்?
23. (எ) ஒருவன் உலகத்தின் சிநேகிதனாயிருப்பதை எது காட்டும்? (பி) நாம் கடவுளுடைய சிநேகிதரென எவ்வாறு காட்டலாம்?
24. (எ) உலகம் மதிப்புதரும் ஆட்களின் மாதிரியைப் பின்பற்றுவது ஏன் ஞானமற்றது? (பி) யாருடைய சிநேகத்தை நாம் உண்மையில் தேடுகிறோமென்பதைப் பொருள் உடைமைகளைக் குறித்த நம் மனப்பான்மை எவ்வாறு காட்டும்?
25. (எ) உலகத்தின் வழிகளை நாம் விட்டு விலகுகையில் உலகத்திலிருந்து எதை எதிர்பார்க்க வேண்டும்? (பி) கடவுள் நோக்குகிற பிரகாரம் காரியங்களை நோக்க உண்மையில் ‘நம் மனதை மாற்றுவதற்கு’ எது நமக்கு உதவிசெய்யும்?
26. நிலைமைகளை முன்னேற்றுவிக்கும் நோக்கத்துடன் நாம், மனித நலனுக்காக உழைக்கும் உலக அமைப்புகளின் வேலையில் உட்படுவது ஞானமாகுமா?
27. கடவுளுடைய புதிய ஒழுங்கினுள் தப்பிப்பிழைப்போருடன் இருக்கும்படி இவ்வுலகத்திலிருக்கும் ஜனங்களுக்கு நாம் உதவிசெய்ய கூடிய ஒரே வழி என்ன?