யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
யோவான் மற்றும் யூதா எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
கடவுளால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட பைபிளிலுள்ள கடைசிப் புத்தகங்களில், அப்போஸ்தலன் யோவானின் மூன்று கடிதங்களும் அடங்கும். இவை, பொ.ச. 98-ல் எழுதப்பட்டிருக்கலாம். ஒளியில் நடக்கும்படியும் விசுவாசதுரோகத்திற்கு எதிராகப் போராடும்படியும் முதல் இரண்டு கடிதங்களில் யோவான் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துகிறார். மூன்றாம் கடிதத்தில், கிறிஸ்தவர்கள் சத்தியத்தில் நடப்பதன் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிடுவதோடு, ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கும்படியும் ஊக்கப்படுத்துகிறார்.
இயேசுவின் தம்பியாகிய யூதா தன்னுடைய கடிதத்தை பாலஸ்தீனாவில், ஒருவேளை பொ.ச. 65-ல், எழுதியிருக்கலாம். கள்ளத்தனமாய் சபைக்குள் நுழைந்திருக்கிற பொல்லாதவர்களைக் குறித்து சக கிறிஸ்தவர்களை அவர் எச்சரிக்கிறார். அப்படிப்பட்டவர்களுடைய தீய செல்வாக்குகளை எதிர்த்து நிற்பதற்கு ஆலோசனையும் கொடுக்கிறார். யோவானின் மூன்று கடிதங்களிலும் யூதாவின் கடிதத்திலும் உள்ள தகவல்களுக்குக் கவனம் செலுத்துவது, இடையூறுகளின் மத்தியிலும் விசுவாசத்தில் உறுதியாயிருக்க நமக்கு உதவும்.—எபி. 4:12.
ஒளியிலும் அன்பிலும் விசுவாசத்திலும் தொடர்ந்து நடவுங்கள்
யோவான் தன்னுடைய முதல் கடிதத்தை கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருக்கிற முழு சபைக்கும் எழுதுகிறார். அதில், விசுவாசதுரோகத்தை எதிர்ப்பதற்கும், சத்தியத்திலும் நீதியிலும் உறுதியாய் நிலைத்திருப்பதற்கும் கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த ஆலோசனை வழங்குகிறார். ஒளியிலும் அன்பிலும் விசுவாசத்திலும் தொடர்ந்து நடப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.
கடவுள் “ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” என யோவான் எழுதுகிறார். கடவுள் அன்பின் பிறப்பிடமாய் இருப்பதால், “ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்” என அவர் கூறுகிறார். ‘கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்ள,’ அவர் மீதுள்ள அன்பு நம்மைத் தூண்டுகிறது; அதே சமயத்தில், யெகோவா தேவன்மீதும், அவருடைய வார்த்தைமீதும், அவருடைய மகன்மீதும் உள்ள ‘விசுவாசத்தினாலேயே’ நம்மால் இந்த உலகத்தை ஜெயிக்க முடிகிறது.—1 யோ. 1:7; 4:7; 5:3, 4.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:2; 4:10—இயேசு எவ்வாறு ‘நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாக’ இருக்கிறார்? நிவிர்த்தி செய்தல் என்பது சமாதானப்படுத்துவதை, அதாவது சுமுகமாக்குவதைக் குறிக்கிறது. இயேசு தம்முடைய உயிரை அளித்ததன் மூலம், பரிபூரண நீதி எதைத் தேவைப்படுத்தியதோ அதைக் கொடுத்துச் சமாதானத்தை ஏற்படுத்தினார்; இவ்விதத்தில் அவர் நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக இருக்கிறார். இந்தப் பலியின் அடிப்படையில்தான், கடவுளால் நமக்கு இரக்கங்காட்ட முடிகிறது, இயேசுவின்மீது விசுவாசம் வைப்பவர்களுடைய பாவங்களை மன்னிக்கவும் முடிகிறது.—யோவா. 3:16; ரோ. 6:23.
2:7, 8—யோவான் பேசுகிற “பழைய” கட்டளையும் “புதிய” கட்டளையும் என்ன? சகோதரர்களிடம் சுயதியாக அன்பைக் காட்டுவது சம்பந்தமான கட்டளையைப் பற்றியே யோவான் இங்கு பேசுகிறார். (யோவா. 13:34) இயேசு அந்தக் கட்டளையைக் கொடுத்து 60-க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு யோவான் இந்த முதல் கடிதத்தை எழுதியதால், இக்கட்டளையை “பழைய” கட்டளை என அவர் குறிப்பிடுகிறார். அன்றைய விசுவாசிகள், “ஆதிமுதல்,” அதாவது அவர்கள் கிறிஸ்தவர்களானதுமுதல், இந்தக் கட்டளையைப் பெற்றிருந்தார்கள். ஒருவர் ‘தன்னில் அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவது’ மட்டுமல்லாமல் சுயதியாக அன்பையும் காட்ட வேண்டியிருப்பதால் இது ஒரு “புதிய” கட்டளையாகவும் இருக்கிறது.—லேவி. 19:18; யோவா. 15:12, 13.
3:2—பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கு எது ‘வெளிப்படுத்தப்படவில்லை,’ யாரை “இருக்கிற வண்ணமாகவே” அவர்கள் தரிசிப்பார்கள்? அவர்கள் பரலோகத்திற்குரிய உடலில் உயிர்த்தெழும்போது எப்படியிருப்பார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. (பிலி. 3:20, 21) என்றாலும், ‘[கடவுள்] வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே [அதாவது, “காணமுடியாத உடலில்”] அவரைத் தரிசிப்பதனால் அவருக்கு ஒப்பாயிருப்பார்களென்று’ அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—2 கொ. 3:17, 18, NW.
5:5-8—ஜலம், இரத்தம், ஆவி ஆகிய இம்மூன்றும் எவ்வாறு “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று” சாட்சி கொடுத்தன? ஜலம் சாட்சி கொடுத்தது எப்படியெனில், இயேசு தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றபோது யெகோவாதாமே அவரைத் தம்முடைய குமாரனென்று கூறி தன் அங்கீகாரத்தைத் தெரிவித்தார். (மத். 3:17) ‘எல்லாரையும் மீட்கும்பொருளாக’ இயேசுவின் இரத்தம், அதாவது உயிர், கொடுக்கப்பட்டதும்கூட அவர் கடவுளுடைய குமாரன் என்பதைக் காட்டியது. (1 தீ. 2:5, 6) மேலும், இயேசு ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில் பரிசுத்த ஆவி அவர்மீது இறங்கியபோது அவர் கடவுளுடைய குமாரனென்று அது சாட்சி கொடுத்தது; ‘அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரியவும்’ அது அவருக்கு உதவியது.—யோவா. 1:29–34; அப். 10:38.
நமக்குப் பாடம்:
2:9-11; 3:15. சகோதரர்மீது தனக்குள்ள அன்பைக் குலைத்துப்போட யாருக்காவது அல்லது எவற்றுக்காவது ஒருவர் இடங்கொடுத்தால் அவர் ஆன்மீக இருளில் நடக்கிறார் என்று அர்த்தம். தான் எங்கு செல்கிறார் என்றே அவருக்குத் தெரியாது.
தொடர்ந்து ‘சத்தியத்திலே நடவுங்கள்’
‘தெரிந்துகொள்ளப்பட்ட அம்மாளுக்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது’ என்ற வார்த்தைகளுடன் யோவான் தனது இரண்டாம் கடிதத்தை ஆரம்பிக்கிறார். ‘அவளுடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை’ கண்டு மிகவும் சந்தோஷப்படுவதாகக் கூறுகிறார்.—2 யோ. 2, 4.
அன்பெனும் குணத்தை வளர்க்கும்படி உற்சாகப்படுத்திய பிறகு, “நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு” என அவர் எழுதுகிறார். ‘வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாய் இருக்கிறவனை’ குறித்தும் அவர் எச்சரிக்கிறார்.—2 யோ. 5–7.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2, 13—‘தெரிந்துகொள்ளப்பட்ட அம்மாள்’ யார்? ‘அம்மாள்’ என்பதைக் குறிக்கும் கீர்யா என்ற கிரேக்க வார்த்தையை யோவான் பயன்படுத்தியிருப்பதால், யாரோ ஒரு பெண்ணை அவர் இங்கு குறிப்பிட்டிருக்கலாம். அல்லது துன்புறுத்துவோரைக் குழப்புவதற்காக ஒரு குறிப்பிட்ட சபையை உருவக நடையில் அவ்வாறு அழைத்திருக்கலாம். ஒரு சபையையே அவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்றால், ‘அவளுடைய பிள்ளைகள்’ அச்சபையின் அங்கத்தினர்களைக் குறிக்கலாம்; ‘அவளுடைய சகோதரியின் பிள்ளைகள்’ மற்றொரு சபையின் அங்கத்தினர்களைக் குறிக்கலாம்.
நமக்குப் பாடம்:
1, 4. நாம் ‘சத்தியத்தை,’ அதாவது பைபிளின் ஒட்டுமொத்த கிறிஸ்தவ போதனையை, அறிந்துகொள்வதும் அதன்படி நடப்பதும் இரட்சிப்புக்கு அத்தியாவசியம்.—3 யோ. 3, 4.
8-11. ‘பிதாவாகிய தேவனாலும் இயேசு கிறிஸ்துவினாலும்’ நமக்குக் கிடைக்கிற, ‘கிருபை, இரக்கம், சமாதானம்’ ஆகியவற்றோடுகூட சக கிறிஸ்தவர்களின் அன்பான கூட்டுறவையும் இழக்காதிருக்க நாம் ஆன்மீக ரீதியில் ‘எச்சரிக்கையாய்’ இருக்க வேண்டும்; ‘கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவர்களை’ விட்டுவிலக வேண்டும்.—2 யோ. 3.
‘சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாய் ஆகுங்கள்’
யோவான் மூன்றாவது கடிதத்தை தனது பிரியமான நண்பனாகிய காயுவுக்கு எழுதுகிறார். “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை” என அவர் எழுதுகிறார்.—3 யோ. 4.
சபைகளைச் சந்திக்கிற சகோதரர்களுக்கு காயு ‘உண்மையாய்ச் செய்கிற’ உதவிகளை யோவான் பாராட்டுகிறார். “நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்” என்று அப்போஸ்தலன் யோவான் கூறுகிறார்.—3 யோ. 5–8.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
11—சிலர் ஏன் தீய காரியங்களில் ஈடுபடுகிறார்கள்? சிலர் சத்தியத்தில் உறுதியாக இல்லாததால், தங்களுடைய மனக்கண்களால் கடவுளைக் காண்பதில்லை. கடவுளைத் தங்களுடைய நிஜக் கண்களால் காண முடியாததால், அவர் தங்களைப் பார்ப்பதில்லை என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.—எசே. 9:9.
14—இங்கு “சிநேகிதர்” எனக் குறிப்பிடப்படுபவர்கள் யார்? இங்கு “சிநேகிதர்” என யோவான் குறிப்பிடும் வார்த்தை, ஒருவருக்கொருவர் நெருங்கிய பந்தத்தை வைத்திருப்பவர்களை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. சக விசுவாசிகளையே பொதுவாக அர்த்தப்படுத்துகிறது.
நமக்குப் பாடம்:
4. சபையிலுள்ள இளைஞர்கள் ‘சத்தியத்திலே நடப்பதை’ பார்த்து ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். அதுபோலவே தங்களுடைய பிள்ளைகள் ஆன்மீக சிந்தை உள்ளவர்களாய் வளருவதற்கு உதவும்போது கிடைக்கிற பலனைக் குறித்து பெற்றோர் அடைகிற சந்தோஷமும் ஈடிணையற்றது!
5-8. பயணக் கண்காணிகள், மிஷனரிகள், பெத்தேல் வீடுகளில் அல்லது கிளை அலுவலகங்களில் சேவை செய்பவர்கள், பயனியர் ஊழியம் செய்பவர்கள் என இவர்கள் எல்லாருமே தங்கள் சகோதரர்களுக்காகக் கடினமாய் உழைக்கிறார்கள்; சகோதரர்கள்மீதும் யெகோவாமீதும் உள்ள அன்பின் காரணமாக அப்படி உழைக்கிறார்கள். அவர்களுடைய விசுவாசம் நாம் அனைவரும் பின்பற்றத்தக்கது; நம் அன்பான ஆதரவைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியானவர்கள்.
9-12. உண்மையுள்ளவரான தேமேத்திரியுவின் முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும்; பொல்லாத வார்த்தைகளை அலப்பிக்கொண்டும் பழிதூற்றிக்கொண்டும் இருந்த தியோத்திரேப்புவைப் பின்பற்றக்கூடாது.
‘தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்’
(யூ. 1-25)
சபைக்குள் பக்கவழியாய் நுழைந்திருப்பவர்களை, ‘முறுமுறுக்கிறவர்கள், முறையிடுகிறவர்கள், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்கள்’ என யூதா விவரிக்கிறார். அவர்கள் ‘இறுமாப்பானவைகளைப் பேசி முகஸ்துதி செய்கிறார்கள்.’—யூ. 4, 16.
தீய செல்வாக்குகளைக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு எதிர்க்க முடியும்? “பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்” என யூதா எழுதுகிறார். ‘தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்’ என்றும் அவர் எழுதுகிறார்.—யூ. 17–21.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
3, 4—‘விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராடும்படி’ ஏன் கிறிஸ்தவர்களை யூதா அறிவுறுத்தினார்? ஏனென்றால், ‘பக்தியற்ற சிலர் பக்கவழியாய் சபைக்குள் நுழைந்திருந்தார்கள்.’ அவர்கள் ‘தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டினார்கள்.’
20, 21—‘தேவனுடைய அன்பிலே நம்மை எவ்வாறு காத்துக்கொள்ள’ முடியும்? மூன்று வழிகளில் இதை நாம் செய்ய முடியும்: (1) கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் படிப்பதன் மூலமும், பிரசங்க வேலையில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபடுவதன் மூலமும் நம்முடைய ‘மகா பரிசுத்தமான விசுவாசத்தில்’ மேன்மேலும் வளருவது; (2) “பரிசுத்த ஆவிக்குள்,” அதாவது அதன் வழிநடத்துதலுக்கு இசைய ஜெபம்செய்வது; (3) நித்திய ஜீவனுக்கு வழிவகுத்திருக்கிற இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பது.—யோவா. 3:16, 36.
நமக்குப் பாடம்:
5-7. பொல்லாதவர்கள் யெகோவாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்ப முடியுமா? யூதா குறிப்பிடும் மூன்று உதாரணங்களின்படி, அதாவது எச்சரிப்பூட்டும் உதாரணங்களின்படி, அது முடியாத விஷயம்.
8-10. நாம் பிரதான தூதனாகிய மிகாவேலின் முன்மாதிரியைப் பின்பற்றி, கடவுளால் நியமிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை காட்டுவது அவசியம்.
12. தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கும் பாறைகள் கப்பல்களுக்கும் நீந்துபவர்களுக்கும் ஆபத்தானவையாக இருப்பதுபோலவே, அன்புள்ளவர்கள்போல் நடிக்கிற விசுவாசதுரோகிகளும் நம்முடைய விசுவாசத்துக்கு ஆபத்தானவர்கள். கள்ளப் போதகர்கள் பார்ப்பதற்குத் தாராள குணமுள்ளவர்கள்போல் தெரியலாம்; ஆனால், தண்ணீரற்ற மேகங்களாக, அதாவது ஆன்மீக ரீதியில் வெறுமையாக இருக்கிறார்கள். அவர்கள், இலையுதிர்காலத்தின் இறுதியில் செத்துப்போய்க் கனிதர முடியாமல்போகும் மரங்களைப்போல் இருக்கிறார்கள். வேரோடு பிடுங்கப்படும் மரங்களைப்போல் அவர்கள் அழிவைச் சந்திப்பார்கள். ஆகவே, விசுவாசதுரோகிகளை நாம் ஒதுக்கித்தள்ளுவது ஞானமானது.
22, 23. உண்மைக் கிறிஸ்தவர்கள் தீமையை வெறுக்கிறார்கள். ‘சந்தேகிக்கிற சிலரை’ (NW) நித்திய அழிவின் அக்கினியிலிருந்து காப்பாற்றுவதற்காக, சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள், முக்கியமாகக் கண்காணிகள், அவர்களுக்கு ஆன்மீக உதவியை அளிக்கிறார்கள்.
[பக்கம் 28-ன் படம்]
ஜலம், ஆவி, இரத்தம் ஆகியவை “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று” சாட்சி கொடுத்தன